![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
7. புதிய பூமி அழகியநம்பியின் கப்பல் பயணம் இன்பகரமாக இருந்தது. எடுத்த எடுப்பில் பிரமநாயகம் என்ற மனிதர் அவனைப் பொறுத்தவரையில் முழு ஏமாற்றமாக இருந்தார். இருந்தும் அவரை நம்பிக் கப்பலிலும் ஏறியாயிற்று. கடலைக் கடக்கவும் ஆரம்பித்தாயிற்று. கப்பலில் கவலையும், சிந்தனையுமாகக் கழிந்த அவன் நேரத்தையும் நினைவுகளையும் மாற்றி மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தனர் லில்லியும் மேரியும். நிழலுக்காக மரத்தடியில் சோர்ந்து உட்கார்ந்தவனுக்கு அன்றலர்ந்த சண்பகப் பூக்கள் இரண்டும் மரத்திலிருந்து காலடியில் உதிர்ந்தது போல மேரியும், லில்லியும் அந்தக் கப்பற் பிரயாணத்தில் அவனுக்குப் பழக்கமாயினர். கப்பல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தபோது அழகியநம்பியிடம் அவர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். அவனை விட்டுப் பிரிந்து செல்வதற்கே அவர்களுக்கு மனதில்லை. லில்லி ஏக்கம் நிறைந்த விழிகளால் அவனைப் பார்த்துக் கொண்டே பையைத் திறந்து முகவரி அச்சிடப்பெற்ற அட்டை ஒன்றை அவனிடம் நீட்டினாள். 'ஜே.ஸி.வோட் ஹவுஸ், வெள்ளவத்தை, அலெக்சாண்ட்ரியா வீதி' - என்று அவர்களுடைய தந்தையின் பெயரும், முகவரியும் அதில் இருந்தன. "மறந்துவிடாதீர்கள். கப்பல் பழக்கம் கப்பலோடு போயிற்று என்று நினைக்கக்கூடாது. நாம் அடிக்கடி சந்தித்துப் பழகவேண்டும். அளவளாவ வேண்டும்" - இந்தச் சொற்கள் லில்லியின் வாயிலிருந்து வெளிவந்த போது உணர்ச்சித்துடிப்பு - உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொற்கள் வெளிவரும் போது இருக்குமே; அந்தத் துடிப்பு இருந்தது. மேரி அன்போடு அவனருகே வந்து அவனுடைய இரண்டு கைகளையும் தன் பட்டுக் கரங்களால் பற்றிக் கொண்டாள். "மறந்து விட மாட்டீர்களே!" - அதற்குமேல் அவளுக்குச் சொற்களே வாயில் வரவில்லை. ரோஜா மொட்டுக்களைப் போன்ற அந்த யுவதியின் செவ்விதழ்கள் துடித்தன. நான்கு விழிகள் அவனுடைய இதய அந்தரங்கத்தையே துழாவுவது போல் அவன் முகத்தை ஊடுருவிப் பார்த்தன. "அதுசரி! உங்கள் விலாசத்தை எங்களுக்குத் தரவில்லையே; சொல்லுங்கள். எழுதிக்கொள்கிறேன்" - என்று பையைத் திறந்து டைரியையும் பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டாள் மேரி. "இப்போது நான் போய் இறங்கப் போகும் விலாசத்தை நானே இனிமேல்தான் தெரிந்து கொள்ளவேண்டும். நான் மறுமுறை உங்களைச் சந்திக்கும்போது என் விலாசத்தை உங்களுக்குச் சொல்கிறேன்" - என்றான் அழகியநம்பி. அவர்கள் இருவரும் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். அழகியநம்பி சிறிது நேரம் அவர்கள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றான். "நன்றாயிருக்கிறதே தம்பீ! யாரோ கப்பலில் வந்தவர்களோடு இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தால் உருப்பட்டாற்போலத்தான்" - குரலின் கடுமை தாங்கமுடியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தான். பிரமநாயகம் உலகத்திலுள்ள ஆத்திரம், கோபம், அத்தனையையும் தம் முகத்தில் தேக்கிக் கொண்டு நின்றார். "ஒன்றுமில்லை! என்றாவது ஓய்வு இருக்கிறபோது ஒருநாள் அவர்களுடைய வீட்டுக்கு வரவேண்டும் என்றார்கள். 'சரி' என்று சொல்லி அனுப்பினேன்." "சரி! சரி! உனக்கும் வேறு வேலையில்லை. சாமான்களை எடுத்துக் கொண்டு கப்பலிலிருந்து இறங்குவோம்; வா! சுங்கச் சோதனையை முடித்துக் கொண்டு போவதற்குள் நேரமாகி விடும்" - என்று அதட்டினார் பிரமநாயகம். "இதோ... சாமான்களை எடுத்துக் கொள்கிறேன். சுங்கச் சோதனைக்குப் போவோம்" - என்று சாமான்களை எடுத்துக் கொண்டு அவரைப் பின்பற்றிக் கப்பலிலிருந்து கீழே இறங்கினான் அழகியநம்பி. புதிய வாழ்க்கை, புதிய அனுபவம், நம்பிக்கை நிறைந்த புதிய எதிர்காலம் எல்லாம் ஒன்றுபட்ட புதிய பூமியில் தான் இறங்கிவிட்டது போன்ற உணர்ச்சி அழகியநம்பிக்கு ஏற்பட்டது. சுமைகள் அவனுடைய இரண்டு கைகளிலும் தோள்களிலும் மாத்திரம் இருக்கவில்லை. நெஞ்சிலும் இருந்தன. தோள்சுமை, கைச்சுமை இவைகளோடும், இவைகளைவிடக் கனமான நெஞ்சச் சுமைகளோடும் அந்தப் புதிய மண்ணில் - கடல் கடந்த இலங்கை மண்ணில் காலை வைத்தான் அவன். "அப்பா தம்பீ; அழகு! காந்திமதி அம்மனையும் நெல்லையப்பரையும் மனத்திலே தியானித்துக் கொண்டு வலதுபாதத்தை முன்னால் கீழே வைத்து இறங்கு..." என்று முன்னால் போய்த் தொலைவில் நின்று கொண்டு கத்தினார் பிரமநாயகம். அழகியநம்பி அவர் கூறியதைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டான். மண்ணில் மிதித்து நடப்பதற்காகத்தான் இரண்டு கால்களையும் இரண்டு பாதங்களையும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான். வலது, இடது என்று மனிதர்கள் தாங்களாகக் கற்பித்துக் கொண்ட பேதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்! சுங்கச் சாவடியில் சோதனை முடிந்தது. சாமான்களுடன் இருவரும் துறைமுகத்திற்கு வெளியே வந்தனர். துறைமுக வாசலில் நின்றுகொண்டு கண்களின் பார்வைக்கு எட்டிய வரை அந்தப் பெரிய நகரத்தின் தோற்றத்தைப் பார்த்தான் அழகியநம்பி. உயர்ந்த கட்டிடங்கள், பசுமையான மரங்கள், போக்குவரவு மிகுந்த பெரிய வீதிகள், வியாபாரச் செழிப்பும் கூட்டமும் நிறைந்து காணப்படும் கடைகள், மழைக்காலத்து நீர்போல மூலைக்கு மூலை பணம் புழங்கும் செல்வ வளப்பம்; அத்தனையும் அடங்கிய ஒரு பெரிய நகரம் அவன் கண்களுக்குத் தெரிந்தது. கார்களும், டிராம் வண்டியும், மக்கள் கூட்டமும் நிறைந்த ஒரு அகன்ற வீதியை எதிரே கண்டான். பிரமநாயகம் இரண்டு கூலிக்காரர்களைக் கூப்பிட்டுக் கூலி பேசிச் சாமான்களைத் தூக்கிவிட்டார். "தம்பீ! இங்கேயிருந்து நம்முடைய கடை இருக்கிற வீதி இரண்டு பர்லாங்குக்குள்ளே தான் இருக்கும். காலார நடந்தே போய்விடலாம்" என்றார். "சரி! நடந்தே போய்விடலாம்" - என்று தலையசைத்தான் அழகியநம்பி. அப்போது இடுப்பில் கைலியும் கலர்ச் சட்டையும் தலைப்பாகையும் அணிந்த ஒருவர் பிரமநாயகத்துக்கு முன்னால் வந்து வணங்கினார். அவன் அதுவரை கேட்டிராத மொழியில் பிரமநாயகத்திடம் சிரித்துக்கொண்டே ஏதோ கூறினார். உடனே பிரமநாயகமும் பதில் வணக்கம் செலுத்திவிட்டு அவர் விசாரித்த அதே மொழியில் அவருக்குப் பதில் சொன்னார். அந்தப் புதிய மனிதரிடம் விடைபெற்றுக் கொண்டு சிறிது தூரம் நடந்ததும், "இவர் நமது கடைக்குப் பக்கத்துக் கடைக்காரர். சிங்களவர், மிகவும் வேண்டியவர். நீ இன்னும் இரண்டொரு மாதங்களில் சரளமாகச் சிங்களம் பேசவும், புரிந்து கொள்ளவும் பழகிவிட வேண்டும். இங்கே வியாபாரத் துறையிலிருப்பவர்களுக்கு அது மிகவும் அவசியமானதாகும்" - என்று பிரமநாயகம் தாமாகவே கூறினார். அழகியநம்பி "ஆகட்டும்" - என்று தலையை ஆட்டினான். மக்கள் நடமாட்டமும், கார், சைகிள், மோட்டார் சைகிள், லாரி போக்குவரவுகளும் அதிகமான வீதிகளின் வழியே அவர்கள் நடந்து சென்றனர். ஆடம்பரமும் ஆரவாரமும் நிறைந்த அந்த வீதிகளில் அவன் பலரைச் சந்தித்தான். நீலமும், பச்சையுமாகக் குறுக்கே கட்டம் போட்ட கைலிகளை அணிந்த சிங்களவர்கள், நாலு முழம் வேட்டியும் அரைக்கைச் சட்டையும் அங்கவஸ்திரமும் அணிந்த தமிழர்கள், ஆங்கிலேயர்கள், சிங்கள யுவதிகள், ஆங்கில யுவதிகள், அத்தனை வகையினரையும், கலகலப்பும் கூட்டமும் நிறைந்த அந்த வீதிகளில் சந்தித்தான் அழகியநம்பி. வியாபார நிலவரங்கள் பற்றியும், கடைவீதிகளைப் பற்றியும், தம்முடைய கடையைப் பற்றியும் அங்கே அவன் பழக வேண்டிய நடைமுறைகளைப் பற்றியும் சுவையற்ற விதத்தில் சளசளவென்று ஏதோ சொல்லிக்கொண்டே வந்தார் பிரமநாயகம். "ஊரையும், கடைவீதிகளையும் பார்த்துக் கொண்டே நடந்து செல்ல முடியாதபடி தொணதொணக்கிறாரே," - என்று நினைத்துக் கொண்டே அவர் கூறுவனவற்றைக் கேட்பதுபோல நடந்தான் அழகியநம்பி. வீதி முடிந்து வேறோர் திருப்பத்தில் திரும்பும் போது அவர்கள் இறங்கிவந்த துறைமுகத்தின் மேற்பகுதிக் காட்சி தூரத்து ஓவியம் போல் தொலைவில் தெரிந்தது. அப்பப்பா! எத்தனை பெரிய பெரிய கப்பல்கள் கரும்புகையைக் கக்கிக் கொண்டு நிற்கின்றன? கப்பல்களின் கூம்புகளில் அசைந்தாடிப் பறக்கும் கொடிகளில் தான் எத்தனை விதம்? எத்தனை நிறம்? சிறிதும் பெரிதுமாக வானத்தை நோக்கித் துருத்திக் கொண்டிருக்கும் ஏணிகளைப் போல் எத்தனை 'கிரேன்கள்' (கப்பலில் சாமான்களை ஏற்ற, இறக்க, உதவும் கருவிகள்) காட்சியளிக்கின்றன? "பராக்குப் பார்த்துக் கொண்டே நடக்காதே; வேகமாக வா! நேரமிருக்கும் போது ஓய்வாக இன்னொருநாள் ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம்." - பிரமநாயகம் குரல் கொடுக்கவே தன்னுடைய ஆர்வம் நிறைந்த பார்வையைத் துறைமுகத்தின் பக்கமிருந்து மீட்டுக்கொண்டு அவர் பின்னால் நடந்தான் அழகியநம்பி. உடன் வருபவர்களைத் துட்டுச் செலவில்லாமல் நடத்தியே கூட்டிக் கொண்டு போய்விடுவதற்காகப் போகுமிடத்தின் தொலைவைச் சரிபாதியாகக் குறைத்துச் சொல்லிவிடுகிற சாமர்த்தியமான வழக்கம் சிலரிடம் உண்டு. பிரமநாயகம் அதே வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார் என்று அழகியநம்பிக்கு விளங்கிவிட்டது. நாலு பர்லாங்குக்கு மேல் நடந்தும் அவருடைய கடை வந்தபாடில்லை. அவர்களிருவரும் அப்போது நடந்து போய்க்கொண்டிருந்த வீதியின் கலகலப்பையும், நெடிக்கடியையும் பார்த்த போது அழகியநம்பிக்குத் தலை சுற்றியது. இருட்டறையிலேயே நெடுநாட்களாக அடைபட்டுக் கிடந்தவன் மின்சார விளக்கொளிக்கு வந்தால் கண்கள் கூசுமே அதுபோல, நீல நிற மலைச் சிகரங்களுக்கு நடுவே பள்ளத்தாக்கில் பசுமை ஓவியம் போல் விளங்கும் அமைதி நிறைந்த அவனுடைய குறிஞ்சியூர்க் கிராமத்தை நினைத்துப் பார்த்தான். பலநிற மனிதரும், பலவித மொழிக் குரல்களும், பலவிதக் கடைகளும், ஒன்று சேர்ந்து விளங்கும் அந்தப் புதிய நகரத்தையும் நினைத்துப் பார்த்தான். இரண்டு நினைவுகளும் ஒன்றோடொன்று ஒட்ட மறுப்பதுபோல் தோன்றின. பிறந்த மண்ணின் நினைவு ஒரு புறமும், புதிய மண்ணின் நினைவு ஒருபுறமும் தனித்தே நின்றன. அப்பப்பா! வியாபாரம் என்றால் இப்படியுமா ஒரு வியாபாரம்? தெரு ஓரங்களிலும், நடைபாதைகளிலும் கூட விலையுயர்ந்த பொருள்களை விற்கும் கடைகள். விலையுயர்ந்த துணிமணிகளை எல்லாம் நடைபாதையில் குவித்துக் கொண்டு கூவிக் கூவி விற்றார்கள். அந்த நெடிக்கடியில் தெருவில் நடந்து செல்வது காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்துவது போல் கடினமாக இருந்தது. பழக்கப்பட்ட பிரமநாயகம் வேகமாக நடந்தார். அழகியநம்பியால் முடியவில்லை. சோர்வும் தயக்கமும் நிறைந்த குரலில் "இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும்?" - என்று முன்னால் நடந்து கொண்டிருந்த பிரமநாயகத்திடம் கேட்டான். "இதோ வந்துவிட்டதே; இந்த வீதியின் கோடியில் வலது புறமாகத் திரும்பினால் தென்சிறகில் முதல் கட்டிடம் நம்முடைய கடைதான்" - என்றார் அவர். அழகியநம்பி அவர் சுட்டிக் காட்டிய திசையில் கண்பார்வை செல்லுந் தொலைவு வரை பார்த்தான். அந்த வீதியின் திருப்பத்தை அடைவதற்கே குறைந்த பட்சம் இன்னும் அரைமைல் தொலைவு நடந்தாக வேண்டும் போலிருந்தது. சிறிதைப் பெரிதாகவும், பெரிதைச் சிறிதாகவும், சமயத்துக்கு ஏற்றாற் போலச் சொல்லிச் சாதிக்கும் திறன் வியாபாரிக்கு வேண்டும். பிரமநாயகத்திடம் அந்த அம்சம் போதுமானவரை இருப்பதை அழகியநம்பி உணர்ந்தான். தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே எதிரே சந்தித்த ஒவ்வொரு மனிதரிடமும் விலைவாசிகள் வியாபார நிலவரம் ஆகியவற்றைப் பொறுமையாக நின்று விசாரித்துக் கொண்டு தான் மேலே நடந்தார் அவர். வழியில் அவரைச் சந்தித்த ஒவ்வொரு தெரிந்த மனிதரும் அவரைப் போலவே வியாபார மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பதை அவரவர்கள் பேச்சிலிருந்து அழகியநம்பி அனுமானித்தான். 'உலகத்தில் எங்கும் ஒவ்வொரு மனிதனும், சொல், உணர்வு, சிந்தனை, செயல் ஆகிய யாவற்றாலும் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறான். வியாபார உலகிலிருப்பவர்களுக்கு வியாபாரம் தான் வாழ்க்கை. அரசியல் உலகிலிருப்பவர்களுக்கு அரசியல்தான் வாழ்க்கை. இலக்கிய உலகிலிருப்பவர்களுக்கு இலக்கியம்தான் வாழ்க்கை. வட்டக் கோட்டில் சுற்றி வருகிறவர்களுக்கு திருப்பமோ, மாறுதலோ ஏது?' விலையுயர்ந்த ஸ்நோ, வாசனைத் தைலம் ஆகியவற்றின் மணம் நாசித்துளைகளில் புகுந்து கிறக்கியது. எங்கோ பார்த்துக் கொண்டே சிந்தனையோடு பிரமநாயகத்துக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தவன் போதையூட்டும் அந்த மணத்தால் கவரப்பட்டு பார்வையை நேர் எதிரே திருப்பினான். மெல்லிய நீலநிற வாயில் புடைவையும், பாப் செய்த கூந்தலும், தலைக்கு மேல் சிங்காரப் பட்டுக் குடையும், செம்மை நிறம் மினுக்கும் உதட்டுச் சாயம் பூசிய உதடுகளுமாக ஒரு சிங்களப்பெண் அவன் மேல் இடித்து விடாத குறையாக நடந்து வந்து கொண்டிருந்தாள். வாசனை ஆளை மயக்கியது. அழகியநம்பி தடுமாறினான். திடுக்கிட்டுப் பின்னுக்கு நகர்ந்து கொண்டான். தனக்கு வழிவிட்டு நகர்ந்து கொள்வதற்காக அவன் அடைந்த பரபரப்பையும், பதற்றத்தையும் பார்த்து அந்தப் பெண் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே மேலே நடந்து சென்றாள். அவனுக்கு வியப்பாக இருந்தது. அப்போது அவன் தெருக்கோடிக்கு வந்திருந்தான். "தம்பீ! இதுதான் நம்முடைய கடை. உள்ளே வா" - என்று கூறிக்கொண்டே ஒரு பெரிய கடைக்குள் நுழைந்தார் பிரமநாயகம். |