23. மண்ணைப் பொன்னாக்கும் கைகள்

     கண்களின் பார்வை சென்ற இடமெல்லாம் சுற்றிலும் மலைச்சிகரங்கள்; பசுமைக் காட்சிகள், முகில் தவழும் நீலவானம், - எல்லாம் கைகளால் எட்டிப் பிடிக்கிற தொலைவில் மிக அருகில் இருப்பது போல் தோன்றின. வளைவு, நெளிவுகளும், ஏற்ற இறக்கங்களும் உள்ள மலை ரோடுகளில் கார் சென்று கொண்டிருந்தது.

     அழகியநம்பி ஜன்னலுக்கு வெளியே நீட்டிய தலையை உட்புறம் திருப்பவே இல்லை. மேரியும், லில்லியும், மாற்றி மாற்றி, இருபுறத்துக் காட்சிகளையும் விளக்கிச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். பத்து நிமிஷ நேரம் அவன் சேர்ந்தாற் போல் லில்லியின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தால் மேரிக்கு முகம் வாடிவிடும். மேரியின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தால் லில்லிக்குக் கோபமே வந்துவிடும்! ஒரே சமயத்தில் இரண்டு பெண் உள்ளங்களைத் திருப்தி செய்ய வேண்டியவனாக இருந்தான் அவன்.

     சாலையின் இருபுறமும் வளம் நிறைந்த அந்த மலைப்பிரதேசத்து மண்ணில் அவன் யாரை கண்டான்? எதைக் கண்டான்? அவன் உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்கள், சிறந்த நம்பிக்கைகள், நல்ல உணர்ச்சிகள், - ஏன் அப்படி மேலே மேலே பொங்குகின்றன?

     உழைக்கும் கைகள்! ஆம்! ஓய்வு ஒழிவில்லாமல் உழைத்து உழைத்து மண்ணைப் பொன்னாக்கும் கைகளை அவன் கண்டான். உயரமாக நெடிது வளர்ந்து வரிசை வரிசையாக ஒரே அளவில் நூல்பிடித்து நிறுத்தி வைத்தாற் போன்ற வெண்ணிறத்து இரப்பர் மரங்கள். கரும் பசுமை நிறத்துத் தளிர்கள் மின்ன மலைமேல் விரித்த மரகதப் பாய்களைப் போல் தேயிலைத் தோட்டங்கள். அங்கெல்லாம் பாடுபட்டு உழைக்கும் ஆயிரமாயிரம் ஏழைக் கைகளை அவன் பார்த்தான்.

     அவனுடைய புறச்செவிகள் தான் மேரியும், லில்லியும், டிரைவரும் கூறிக் கொண்டு வந்தவற்றைக் கேட்டுக் கொண்டு வந்தன.

     சிந்தனையுணர்ச்சி மிக்க அவனுடைய உள்மனம், கண்முன் தெரிவனவற்றை ஆழ்ந்து, கூர்ந்து பார்க்கும் அவனுடைய பார்வை - யாவும் எதில் எதை நோக்கி இலயித்திருந்தன?

     அழகியநம்பி சிந்தித்தான். தான் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பூமியாகிய குறிஞ்சியூரிலுள்ள மலைகள் அவனுக்கு நினைவு வந்தன. அங்கும் மலைகளுக்குக் குறைவில்லை! இதே போல் உயர்ந்த மலைகள், வளமான மலைகள், அருவிகளும், சுனைகளும், அடர்ந்த மரக் கூட்டங்களும் உள்ள செழிப்பான மலைகள் தான்.

     'இலங்கையின் இந்த மலைகளை இப்படிப் பொன் கொழிக்கச் செய்த உழைப்பு அங்கிருந்து - நான் பிறந்த தமிழ் மண்ணிலிருந்து வந்த கூலிகளின் உழைப்புத்தானே? இந்த உழைப்பும், இந்த வலிமையும், - அவர்களுடைய சொந்த மண்ணுக்குப் பயன் பட்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்?'

     இடைவழியில் தங்களுக்குத் தெரிந்த வெள்ளைக்கார முதலாளி ஒருவருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டமொன்றிற்கு மேரியும், லில்லியும், அழகியநம்பியை அழைத்துக் கொண்டு போனார்கள்.

     ஆண்களும், பெண்களுமாக நூற்றுக்கணக்கான தமிழ் நாட்டுக் கூலிகளின் துயரந்தோய்ந்த முகங்களை அழகியநம்பி அங்கே கண்டான். இடுப்பில் கைக்குழந்தையும், முதுகில் நீண்ட பெரிய தேயிலைக் கூடையும் சுமந்து மேடும் பள்ளமுமான தேயிலைக் காடுகளில் அவதியுறுகிற தமிழ்ப் பெண்மணிகளைப் பார்த்தபோது யாரோ தன் நெஞ்சை இறுக்கிப் பிழிவது போலிருந்தது அவனுக்கு. கோழிக் கூடுகள் போன்று சுகாதார வசதி இல்லாமல் கட்டிவிடப் பட்டிருந்த கூலிகளின் வீடுகளைக் கண்ட போது அவன் வருத்தம் பெருகியது. அவன் துயரப் பெருமூச்சு விட்டான். 'மண்ணைப் பொன்னாக்கிய கைகள் மறுபடியும், மறுபடியும் மண்ணில் தான் புரண்டு கொண்டிருக்கின்றன.' - என்று தன் மனத்திற்குள்ளேயே சொல்லிக் கொண்டான். லில்லி - மேரி - டிரைவர் - எல்லோரோடும் தான் அவன் இருந்தான். ஆனால், மனத்தின் உலகத்தில், சிந்தனையின் வழியில் அவன் மட்டும் தனிப்பட்ட எண்ணங்களோடு தனிப்பட்ட உணர்ச்சிகளைத் தாங்கிச் சென்று கொண்டிருந்தான்.

     சாதாரணமான தேயிலைக் கொழுந்துகளை உலர்த்தி அரைத்து, வறுத்துத் தேயிலைப் பொடியாக மாற்றுகிறவரை உள்ள எல்லாத் தொழில்களும் நடைபெறுகிற தேயிலைத் தொழிற்சாலைக்குள் அழகியநம்பியை அழைத்துக் கொண்டு போய்ச் சுற்றிக் காண்பித்தார்கள். பெரிய இராணுவ அதிகாரியின் பெண்களோடு அல்லவா அவன் சென்றிருக்கிறான்? தோட்டத்தின் சொந்தக்காரரான முதலாளி அவர்களை மலையுச்சியில் ஒரு அருவிக்கரையில் இயற்கை சூழ்ந்த இடத்தில் அமைந்திருந்த தம் பங்களாவிற்குக் கூட்டிச் சென்று விருந்துபசாரம் செய்தார்.

     "அருகில் ஏதாவது இரப்பர்த் தோட்டம் இருந்தால் அதையும் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்." - என்று அவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான் அவன். உடனே அவர்களை அழைத்துச் சென்று ஒரு இரப்பர்த் தோட்டத்தையும் தொழிற்சாலையையும் சுற்றிக் காண்பித்தார். மரங்களில் கோடு கீறிவிட்டு இரப்பர் பால் வடித்துக் கொண்டிருக்கும் கூலிப் பெண்களைப் பார்த்த போதும் அவன் மனத்தில் இரக்கம் தான் சுரந்தது.

     மண்ணில் இரத்தம், வியர்வை, அனைத்தையும் சிந்தி உழைக்கும் உழைப்பையும், சூழ்ச்சியிலும், வஞ்சகத்திலுமே, உழைக்காமல் இருந்த இடத்திலிருந்து கொண்டு இலட்சக் கணக்கில் பணம் திரட்டிவிடும் வியாபாரத்தையும் நினைத்துத் தனக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான் அழகியநம்பி. பிரமநாயகம், ஒவ்வொரு நாளிலும் ஆயிரக்கணக்கில் வியாபாரம் நடக்கும் அவருடைய கடை, வருமான வரிக்கும் விற்பனை வரிக்கும், பொய்க்கணக்குக் காண்பிக்கும் சாமர்த்தியம் வாய்ந்த பூர்ணா - எல்லாவற்றையுமே சிந்தனையின் தொடர்பாக அப்போது நினைத்தான் அவன். இந்த உலகத்தில் உழைக்காமல், பாடுபடாமல் பணம் திரட்டும் சகலமானவர்கள் மேலும் திடீரென்று அடக்கவோ, தவிர்க்கவோ, இயலாததொரு அருவருப்பு - குமுறிக் கொந்தளித்து எழுந்தது அவனுடைய மனத்தில். தனக்கு ஏன் அப்படிப்பட்ட மனக் கொதிப்பு அப்போது உண்டாகிறதென்று அவனுக்கு விளங்கவில்லை. அதை அவனால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவர்களுடைய பிரயாணம் மேலும் தொடர்ந்தது.

     உள்ளத்தை இன்பமயமான நினைவுகளில் ஆழச் செய்யும் இலங்கையின் அந்த மலைப்பகுதிகளில் அளவிட்டுரைக்க முடியாத பல அருவிகள் இருந்தன; மனித இலட்சியத்தின் உயர்வுக்கு நிதரிசனமான உதாரணம்போல் விண்ணைத் தொடும் சிகரங்கள் இருந்தன. பலநிறங்களில் பலவிதங்களில் அது வரை அவன் தன் வாழ்நாளில் பார்த்திராத பூஞ்செடிகள், கொடிகள், - இருந்தன. சிரிக்கச் சிரிக்கப் பேசி அவன் மேல் அன்பை அள்ளிச் சொரியும் இரண்டு யுவதிகள் அந்த இயற்கையழகை வானளாவப் புகழ்ந்து வருணித்துக் கொண்டு வருகிறார்கள்.

     ஆனால், அவன் உள்ளம் அவற்றைப் பார்த்து மகிழாது அவற்றினிடையே உள்ள துன்பத்தைப் பார்த்துப் புழுங்கியது. ஏனோ குறிஞ்சியூரின் நினைவுதான் அடிக்கடி அவனுக்கு உண்டாயிற்று. அந்த வளமான வயல்கள், செழிப்பான ஆறுகள், செல்வங் கொழிக்கும் மலைகள், கோவில், குளம், தன் வீடு, தன் தாய், தன் தங்கை, தனக்கு வேண்டியவர்கள், - எல்லாரையும், எல்லாவற்றையும் எண்ணி ஏங்கினான் அவன். பிறநாட்டு மண்ணின் வளமான இடத்தில் உடலும் பிறந்த மண்ணில் நினைவுமாக நின்றான் அவன். அத்தனை நாட்களாக அவன் மனத்தில் தலை நீட்டாத ஒரு பயம், ஒரு தனிமையுணர்வு, ஒரு பெரிய ஏக்கம் - அப்போது அந்த இடத்தில் சிறிது சிறிதாக உண்டாயிற்று. பிரமநாயகத்தின் சிறுமைகளை உணர்ந்த போதும், பூர்ணாவின் சூழ்ச்சிகளை நினைத்துப் பயந்த போதும், அந்தச் சூழ்ச்சிகளில் ஒன்றிற்கு ஆளான போதும் கூட இந்த மாதிரி உணர்ச்சியோ, ஏக்கமோ, அவனுக்கு ஏற்பட்டதில்லை. அப்போதெல்லாம் 'ஊருக்கே திரும்பி விடலாம்?' - என்கிற மாதிரி ஒருவிதப் பயமும், வந்து புகுந்த இடத்தின் மேல் வெறுப்பும் உண்டாயினவே ஒழியப் பிறந்த மண்ணை நினைத்து ஏங்கவில்லை அவன்.

     "என்ன? ஒருமாதிரிக் காணப்படுகிறீர்கள்? பிரயாணம் உங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? அல்லது இந்த மலைக்காற்றும், குளிர்ந்த சூழ்நிலையும், பிடிக்கவில்லையா?" - என்று அனுதாபத்தோடு கேட்டாள் மேரி.

     "ஆமாம்! நானும் அப்போதிருந்து கவனித்துக் கொண்டு வருகிறேன். ஐயா ஒரு மாதிரித்தான் இருக்கிறார்."

     -இவ்வாறு டிரைவரும் ஒத்துப் பாடினான்.

     "ஏன்? உங்களுக்கு உடம்பிற்கு என்ன?" - என்று பதறிப் போய்க் கேட்டாள் லில்லி.

     "ஒன்றுமில்லை! சும்மா இப்படி ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தேன்." - என்று மொத்தமாக அவர்களுக்குப் பதில் கூறி மழுப்பினான் அவன். ஆனால், இழக்கமுடியாத, இழக்கக் கூடாத - தனக்குச் சொந்தமான ஒன்றை வலுவில் இழந்து விட்டு வெகுதூரம் வந்து விட்டாற் போன்று அவன் மனத்தில் உண்டாகிய தாழ்மையுணர்வை அவனால் எவ்வளவு முயன்றாலும் அடக்க முடியவில்லை. தன்னைச் சுற்றிலும் பொன் கொழிக்கும் பிறநாட்டு மண்ணைக் கண்டு துள்ளிய அவன் மனத்தில் அப்படியே குறிஞ்சியூருக்கு ஓடிப் போய்த் தான் பிறந்த மண்ணை இப்படி மாற்றிவிட வேண்டும் போல ஒரு துடிப்பும், வேகமும் உண்டாயின.

     அன்றுமட்டுமன்று; அந்தத் தேயிலைத் தோட்டத்தையும் இரப்பர் தோட்டத்தையும், அதில் உழைப்பவர்களையும் பார்த்த சில நாழிகைகளில் மட்டும் அல்ல; - அதன்பின் தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் அவர்கள் செய்த பிரயாணத்தின் போதும் அந்தத் துடிப்பும் வேகமும், அழகியநம்பியின் மனத்தில் அடங்கவே இல்லை.

     இரத்தினபுரத்தின் சதுப்பு நிலங்களிலே மண்ணைக் குடைந்து விலையுயர்ந்த வைரம், இரத்தினம், ஆகிய கற்களைத் தேடி எடுப்பதை அவனுக்குக் காட்டினார்கள். இரத்தின வயல்களிலே முழங்காலளவு ஆடையுடன், மண்ணும், புழுதியும், சேறும் படிந்த கைகளால், விலைமதிப்பற்ற இரத்தினக் கற்களைத் தேடி எடுப்பதற்காக மண்ணைக் குடைந்து தோண்டும் உழைப்பாளிகளை அவன் பார்த்தான்.

     'மண்! மண்! மண்! - அந்த மண்னை உழைத்து உழைத்துப் பொன்னாக மாற்றலாம். தைரியமும், தன்னம்பிக்கையும், பேராசையற்ற மனமும் மனிதனுக்கு இருந்தால் போதும் உலகத்திலேயே சூது, வாது, சூழ்ச்சி, வஞ்சனை, ஏமாற்று - இவைகளெல்லாம் இல்லாத ஒரே தொழில் மண்ணை நம்பி உழைக்கும் தொழில்தான்.'

     தானாக ஊறும் ஊற்றுக் கண்களைப் போல் அவன் உள்ளத்தில் சிந்தனை ஊறிப் பெருகியது. புதிய எண்ணங்கள் புதிய இடங்களைப் பார்த்ததும் வளர்ந்து கொண்டே போயின.

     வளம் நிறைந்த இலங்கையின் மலைகளில் ஒவ்வோர் அணுவிலும் உழைப்பின் ஆற்றலை, மண்ணைப் பொன்னாக்கும் கைகளை - அங்கும் இங்கும், எங்கும் கண்டான் அவன். அந்த ஆறு நாட்களில் ஒரு புதிய உலகத்தையே பார்த்து முடித்து விட்டது போலிருந்தது.

     அசோகவனம் - நுவாராஎலியாவின் மலை வளம், பேராதனையிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற பூந்தோட்டம், கண்டியில் புத்தருடைய புனிதமான பல் வைக்கப்பட்டிருக்கும் கோயில் தம்புளை, சிகிரியா, குகை ஓவியங்கள், பொலந்நறுவையின் சரித்திரச் சின்னங்கள், - ஒவ்வோர் இடத்தையும், ஒவ்வோர் புதுமைகளையும் பார்க்கப் பார்க்கத் தாயை விட்டு வெகு தொலைவு வந்துவிட்ட சிறு குழந்தையின் மனத்தில் ஏற்படுவது போல் பிறந்த மண்ணைப்பற்றிய ஏக்கம் அவன் மனத்தில் உண்டாயிற்று.

     "நீங்கள் வேண்டுமென்றே எங்களிடம் மறைக்கப் பார்க்கிறீர்கள். கொழும்பிலிருந்து புறப்பட்டபின் நீங்கள் ஏதோ போல் இருக்கிறீர்கள். கலகலப்பாகப் பேசக்காணோம், உங்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை. சிரிப்பு இல்லை. இவ்வளவு அழகான புதிய இடங்களைப் பார்க்க வேண்டியபோது இருக்கும் எழுச்சி இல்லை. நீங்கள் எதையோ நினைத்து ஏங்குகிறீர்கள்." - என்று மேரியும், லில்லியும் வெளிப்படையாகவே அவனைக் கடிந்து கொண்டார்கள்.

     ஆனால், யார் எப்படிக் கடிந்துகொண்டுதான் என்ன பயன்? அதன்பின் அழகியநம்பி என்ற அந்த இளைஞன் சிரிக்கவே இல்லை. வேடிக்கைப் பேச்சுக்கள் அவன் வாயிலிருந்து வெளிவரவில்லை. அவன் பூரணமாக மாறிவிட்டவன் போல் அல்லது மாற்றப்பட்டு விட்டவன் போல் மனம் குமைந்து கொண்டிருந்தான். பிரமநாயகம் - பூர்ணா, கடையில் வேலை பார்த்துப் பணம் சேர்த்துக் கொண்டு பணக்காரனாகத் தாய் நாடு திரும்பும் நோக்கம், லில்லி - மேரி ஆகியோரின் அன்பு, சபாரத்தினத்தின் உண்மை நட்பு, இலங்கை மலைகளின் இயற்கை வளம் - இவர்களில் - இவைகளில் யாரையும் - எவற்றையும் பற்றி அவன் மனம் சிந்திக்கவே இல்லை.

     நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தெற்குக் கோடியில் எங்கோ ஒரு மூலையில் மலைகளுக்குள் பள்ளத்தாக்கில் மறைந்து கிடக்கும் நாடறியாத தன் சின்னஞ்சிறு கிராமத்தைப் பற்றித்தான் அவன் சிந்தித்தான். 'அங்கே உழைக்க மண்ணில்லையா? அங்கே உள்ளவர்கள் உயிர் வாழவில்லையா? கடல் கடந்து வந்து எத்தனையாயிரம் கூலித் தமிழர்கள் தங்கள் இரத்தத்தைத் தங்களுக்குக் கொஞ்சமும் உரிமையில்லாத இந்த மண்ணில் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்? நான் மட்டும் என்னவாம்? இவர்கள் போலத்தானே ஒரு பஞ்சைப் பயலாக - பரதைப் பயலாக எவனோ ஒருவனைப் பின்பற்றிப் பிழைக்க வந்திருக்கிறேன். இப்படித் தமிழ்நாட்டு உழைப்பும், தமிழ்நாட்டு அறிவும் - தமிழ்நாட்டில் பிழைக்க வழியில்லாமல் கடலைக் கடந்து, வானைக் கடந்து இஷ்டப்படி வந்து கொண்டே இருந்தால் முடிவு எப்படி ஆகும்?' - என்னென்னவோ புரட்சிகரமான சிந்தனைகள் அழகியநம்பியின் மனத்தில் உண்டாயின.

     பிரயாணத்தின் கடைசி நாள் அது. அவர்கள் அநுராதபுரத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பழம்பெருமை வாய்ந்த அந்தச் சரித்திர நகரத்தைப் பார்த்த போது தஞ்சாவூர், மதுரை போன்ற தமிழ்நாட்டின் தெய்வீக நகரங்கள் அவன் நினைவிற்கு வந்தன. இசுரமுனியாவின் கோயில், அபயகிரியின் சிதைந்த சரித்திரச் சின்னங்கள், - இவற்றையெல்லாம் பார்த்து விட்டுப் பொதுவாக நகரைச் சுற்றிப் பார்த்தார்கள். அனுராதபுரத்தில் தமிழர்களும் நிறைய வசிக்கிறார்கள் என்ற செய்தியை டிரைவர் அவனுக்குக் கூறினான்.

     நகரின் கடைத்தெருவில் கார் சென்று கொண்டிருந்த போது தமிழ்ப் பத்திரிகைகள் விற்கும் கடை ஒன்றைப் பார்த்தான்.

     காரை நிறுத்தச் சொல்லிப் பத்திரிகைகள் வாங்கிக் கொண்டு வருமாறு டிரைவரை அனுப்பினான் அழகியநம்பி. டிரைவர் இறங்கிப் போய்க் கொழும்பிலிருந்து பிரசுரமாகும் இரண்டு தமிழ்த் தினசரிகளை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். கார் புறப்பட்டது.

     ஒரு பத்திரிகையை எடுத்துப் பிரித்தான். முதல் பக்கத்தில் பிரசுரமாயிருந்த செய்தியைப் படித்தவுடன் அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. காருக்குள் எல்லோருக்கும் கேட்கும் குரலில் 'ஐயோ' என்று அலறிவிட்டான் அவன். "என்ன? என்ன?" என்று மேரி, லில்லி, டிரைவர், - எல்லோரும் கலவரமடைந்து அவனையும், அவன் கையிலிருந்த பத்திரிகையையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அவன் அவர்களுக்குப் பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்த செய்தியைப் படிக்கத் தொடங்கினான். நிலைகுத்தி அகன்று மிரண்ட அழகியநம்பியின் கண்கள் அப்போது பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்தன. முகம் வெளிறியிருந்தது. உடல் மெல்ல நடுங்கியது. "பிரபல வியாபாரியின் மோசடிகள் அம்பலமாயின - கடையில் வேலை பார்த்து வந்த பெண் கொலை செய்யப்பட்டாள் - கொழும்பு நகரத்தில் சம்பவம்" - என்று தடித்த எழுத்துக்களில் கட்டம் கட்டிப் பிரசுரித்திருந்தனர்.