3. பிரமநாயகத்தின் கோபம்

     சொல்லிக்கொள்ள வேண்டியவர்களைப் பார்த்துச் சொல்லிக் கொண்டபின் பஸ் போக்குவரவு நிலவரங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்வதற்காக அழகியநம்பி பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்.

     மணி எட்டரை - ஒன்பது இருக்கலாம். வெயில் சுள்ளென்று உறைத்தது. குளக்கரையிலிருந்து, ஈர ஆடைகளை மாற்றிக் கொள்வதற்காகத் திரும்பவும் வீட்டுக்கு ஒருமுறை போயிருந்தான் அழகிய நம்பி. வீட்டில் போய் ஆடைமாற்றிக் கொண்டு, சட்டைப் பையில் நனைந்து போயிருந்த மணிபர்ஸின் ரூபாய் நோட்டுகளை வெயிலில் காயவைத்து எடுக்கும் வேலையைத் தங்கை வள்ளியம்மையிடம் ஒப்படைத்துவிட்டு அதன் பின்பே மற்றவர்களிடம் விடைபெற்றுக் கொள்வதற்குக் கிளம்பியிருந்தான். இதனால் நேரம் அதிகமாகியிருந்தது.

     முக்கியமானவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டு அவன் தெருக்கோடியை அடைந்த போது மணி ஏழேமுக்கால். வாசற்படியின் இரண்டு பக்கமும் வீடே தெரியாமல் அடர்ந்து வளர்ந்திருந்த பூவரச மரங்களுக்கிடையே தாழ்வான ஓட்டடுக்கு வீடு ஒன்று தெருக் கோடியில் இருந்தது. பூவரச மரத்தடியில் பளபளவென்று எண்ணெய்ப்பசை மின்னும் எச்சில் இலைகள் சிதறிக் கிடந்தன. சில காக்கைகள், சில நாய்கள் அந்த இலைகளில் முற்றுகை நடத்தின. வாயிற்படிகளின் மேல் உள்ளே நுழைய வழியின்றிச் சில ஆட்கள் உட்கார்ந்து ஊர்வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். உட்புறமிருந்து பெரிய ஆட்டு உரலில் சட்டினி அரைபடும் விகாரமான ஓசை வந்து கொண்டிருந்தது.

     அதுதான் காந்திமதி ஆச்சியின் இட்டிலிக்கடை. அழகியநம்பி உள்ளே செல்வதற்காகப் படியேறினபோது,

     "தம்பீ! கொழும்புக்கு எப்போது பயணம்?"

     "அக்கரைச் சீமைக்கா?"

     "நல்லபடியாகப் போய்விட்டுக் கையில் நாலு காசு மிச்சம் பிடித்துக் கொண்டு வரவேண்டும்" - என்று இப்படியாகப் படியில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களிடமிருந்து அன்பும், அனுதாபமும், ஆசியும், விசாரணையுமாக எழுந்த பல கேள்விகளுக்குச் சிரித்துக் கொண்டே பதில்களைச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான் அவன்.

     சிறுமி கோமு திக்கித் திணறி ஆட்டுக்கல்லில் சட்டினி அரைத்துக் கொண்டிருந்தாள். பெரிய பெண் பகவதி அடுப்பிற்கருகில் இட்டிலித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துக் கொண்டிருந்தாள். எழுந்து நடமாட முடியாத காந்திமதி ஆட்சி நார்க்கட்டிலில் உட்கார்ந்தபடி, 'இதை இப்படிச் செய்! அதை அப்படிச் செய்!' என்று விபரம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

     அழகியநம்பி உள்ளே நுழைந்ததை முதலில் பார்த்தவள் தட்டில் மா ஊற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்தான். குழியில் மா ஊற்றுவதற்காக எழுந்த வளைக்கரம் அவனைக் கண்டதும் தயங்கியது. முகத்தில் ஆவலும் மலர்ச்சியும் போட்டி போட்டுக் கொண்டு பரவின.

     "ஆச்சி! இதோ அவர் வந்திருக்கிறார்." அந்தப் பெண் இனிய குரலில் ஆச்சிக்கு அவன் வரவை அறிவித்தாள். சின்னப் பெண்ணுக்குச் சட்டினி அரைக்கும் விதத்தில் ஏதோ யோசனை கூறிக் கண்டித்துக் கொண்டிருந்த ஆச்சி திரும்பிப் பார்த்தாள்.

     "என்ன ஆச்சி? சௌக்கியமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டுக் கொண்டே சிரித்த முகத்தோடு கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து நின்றான் அழகியநம்பி.

     "அடேடே! வா அப்பா. இப்படி உட்கார். எல்லாம் கோமுவும் பகவதியும் வந்து சொன்னார்கள். தண்ணீரில் செத்து மிதந்திருக்க வேண்டியது. என்னவோ தெய்வக் கிருபையால் நீ அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்திருக்கிறாய்" - ஆச்சியின் குரல் தழுதழுத்தது.

     "ஊர் இருக்கிற நிலையில் இந்த மாதிரி அதிகாலையில் ஒன்றுமறியாத சிறு பெண்களை ஒரு குடம் தண்ணீருக்காகப் பெருகிக் கிடக்கிற குளத்துக்கு யாராவது தனியே அனுப்புவார்களா?" என்று ஆச்சியைக் கடிந்து கொள்வது போன்ற குரலில் கேட்டான் அழகியநம்பி.

     "எனக்குக் கையும் காலும் இருக்கிறபடி இருந்தால் இப்படிச் செய்வேனா தம்பி? உனக்குத் தெரியாததில்லை. என்ன பாவத்தைச் செய்தேனோ; என்னை இப்படி முடக்கிப் போட்டிருக்கிறானே?" - ஆச்சி அலுத்துக் கொண்டாள்.

     "இன்றைக்கு நடந்ததைப் பற்றி மறந்து விடுங்கள். இனிமேலாவது கிணறு, குளம், என்று தண்ணீருக்குப் போகும் போது கவனமாக இருக்க வேண்டும்" - அழகிய நம்பி இதைக் கூறிவிட்டு காந்திமதி ஆச்சியிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்திருக்கத் தயாரானான்.

     "இந்தா பகவதீ! தம்பிக்கு நாலு இட்டிலி கொண்டு வந்து வை."

     "இல்லை ஆச்சி! நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் வருகிறேன். நான் வந்த காரியத்தை மறந்து விட்டேனே? இன்றைக்குத் தூத்துக்குடிக்குப் புறப்பட்டுப் போய் நாளைக்கோ, நாளைக் கழித்து மறுநாளோ, கொழும்புக்குக் கப்பலேறுகிறேன். அம்மாவும், தங்கை வள்ளியம்மையும் இங்கே ஊரில்தான் இருக்கப் போகிறார்கள். இரண்டு வருஷமோ, ஏழு வருஷமோ எவ்வளவு காலத்துக்குப் பிறகு திரும்புவேனென்று எனக்கே தெரியாது. வீட்டையும், அம்மா, தங்கையையும் கவனித்துக் கொள்ளுங்கள்." அவன் இதைச் சொன்னதும் ஆட்டு உரல் ஓசை நின்றது. கரண்டியால் மாவூற்றும் ஓசை நின்றது. மூன்று திசைகளிலிருந்து ஆறு வேறு கண்கள் வியப்புடன் அவனை நோக்கின. பகவதி கோமு, ஆச்சி மூன்று பேரும் அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுப்பு எரியும் ஒலி, உலைநீர் கொதிக்கும் ஓசை, வாசலில் அரட்டைக் குரல்கள், இவைதவிர ஒரு கணம் பேச்சரவமற்ற அமைதி அங்கே நிலவியது.

     "இன்றைக்கே இங்கிருந்து புறப்படுகிறாயா தம்பி?" - அமைதியைக் கலைத்துக் கொண்டு ஆச்சி கேட்டாள். அதற்குப் பதில் சொல்வதற்காக அவன் வாய்திறந்த அதே சமயத்தில் ஒரு இலையில் சூடாக ஆவிபறக்கும் இட்டிலிகளை அவனுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தாள் பகவதி.

     "கோமு! இந்த மாமாவுக்குக் கெட்டிச் சட்டினியாகக் கொஞ்சம் கொண்டு வந்து போடு." - ஆச்சி கோமுவை ஏவினாள். பகவதி தண்ணீரையும் செம்பையும் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தாள்.

     "இதெல்லாம் எதற்கு ஆச்சி? வீணாகச் சிரமப்படுத்திக் கொள்கிறீர்களே?"

     "பரவாயில்லை! உட்கார்ந்து சாப்பிடு! சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்."

     அழகியநம்பி கட்டிலிலிருந்து இறங்கி இலைக்கு முன்னால் உட்கார்ந்தான். கோமு முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிச் சொருகிய பாவாடை நடையைத் தடுக்க, ஒரு கையில் எண்ணெய்க் கிண்ணமும், இன்னொரு கையில் சட்டினியுமாக அவனை நோக்கி வந்தாள். அவள் பாவாடையைத் தூக்கிச் சொருகிக் கொண்டிருந்த விதமும், தயங்கித் தயங்கி நடந்து வந்த நடையும் அழகியநம்பிக்குச் சிரிப்பு மூட்டின.

     உடனே அவன், "ஆச்சி! ஒரு காலத்தில் நான் கொழும்பிலிருந்து நிறையச் சம்பாதித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினால் ஆண்டவன் புண்ணியத்தில் உங்கள் கோமுவைத்தான் கட்டிக் கொள்ளலாமென்றிருக்கிறேன்." - என்று கேலியாகச் சொன்னான். கோமுவுக்கு வந்த வெட்கத்தைப் பார்க்க வேண்டுமே! கெட்டிச் சட்டினியையும் எண்ணெய்க் கிண்ணத்தையும் அப்படியே அவனுடைய இலைக்கு முன்னால் வைத்துவிட்டு முகத்தை இரண்டு உள்ளங் கைகளாலும் பொத்திக் கொண்டு ஓடிவிட்டாள். இந்த வேடிக்கையான நிகழ்ச்சியைக் கண்டு காந்திமதி ஆச்சி, பகவதி, அழகியநம்பி, மூன்று பேரும் கிளப்பிய சிரிப்பின் ஒலி அலைகள் அடங்குவதற்குச் சில விநாடிகள் ஆயின.

     அழகியநம்பி காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடையிலிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியேறியபோது நேரம் சற்று அதிகமாகவே ஆகிவிட்டது. கூடத்து நிலைக்கதவைக் கடந்து வெளிவாசலுக்கு வருவதற்குள் உட்புறமிருந்து இரண்டு ஜோடிக் கண்கள் தன்னையே பார்த்துக் கொண்டு செயல் மறந்து நிற்பதை அழகியநம்பி உணர்ந்தான். வெளிவாசலில் இறங்கு முன் மனத்தில் ஒரு சிறிய சபலம் எழுந்தது. பின்புறம் திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் பகவதியும் அவள் தங்கை கோமுவும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்களுடைய அந்தப் பார்வையில், அன்பா, ஏக்கமா, அல்லது அனுதாபமா, எது அதிகமிருந்தது என்பதைக் கண்டுபிடிப்பது அரிதாயிருந்தது. இருவர் பார்வைக்குள்ளும் வேறுபாடு இருந்தது. வளைக்குள்ளிருந்து மிரண்ட பார்வையோடு தலை நீட்டிப் பார்க்கும் முயல் குட்டி போற் பார்த்தாள் கோமு. பகவதியின் பார்வைக்கு என்ன பொருள் கற்பித்துக் கொள்ளலாமென்று ஆனமட்டும் முயன்று பார்த்தான் அழகியநம்பி. கெண்டை மீனைப்போலப் பிறழும் அந்த அழகிய நீள் விழிகளில் மிதக்கும் உணர்ச்சி என்னவென்று அவனால் புரிந்து கொள்ள முடியவே இல்லை.

     காந்திமதி ஆச்சியின் கடையிலிருந்து வெளியேறிய பின்பு தான் அவன் ஆரம்பத்தில் கூறியவாறு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அவன் பஸ் ஸ்டாண்டு வாசலில் கால் வைத்த நேரத்தில் எதிரே கையில் பையோடும் தலையில் குளிருக்காகக் காது மறைய மப்ளரைக் கட்டிக் கொண்ட தோற்றத்தோடும் பிரமநாயகமே வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை எதிரே பார்த்ததும் மேலே நடக்கத் தோன்றாமல் அப்படியே நின்றுவிட்டான் அழகியநம்பி. திடீரென்று அவரை எதிரே பார்த்துவிட்ட அதிர்ச்சியில் என்ன பேசுவதென்றே அவனுக்குத் தோன்றவில்லை.

     அவர் அருகில் வந்ததும் மரியாதைக்குக் கைகூப்பினான். பிரமநாயகம் அவனை ஏற இறங்கப் பார்த்தார். முகத்தைச் சுளித்தார். அவனுடைய வணக்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகப் பதில் வணக்கமோ, புன்முறுவலோ, அவர் செய்யவில்லை. அவர் மனத்தில் வெறுப்போ, கோபமோ, ஏற்பட்டிருக்கிறதென்று தீர்மானித்துக் கொள்ள அழகியநம்பிக்கு அதிக நேரமாகவில்லை.

     "துரை மகனுக்குச் சொன்னால் சொன்ன தேதிக்கு ஒழுங்காகக் கப்பலேறுவதற்கு வந்து சேர முடியவில்லையோ?" - குத்தலாகக் கேட்டார் பிரமநாயகம்.

     "இங்கே ஒரு வாரமாக ஊரெல்லாம் ஒரே வெள்ளக்காடு. ஊரிலிருந்து நகர முடியவில்லை" - அழகியநம்பி அவருடைய இடிக்குரலுக்கு முன்னால் இரைந்து பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான்.

     அதற்கு மேல் பஸ் ஸ்டாண்டு போன்ற ஒரு பொது இடத்தில் நின்று கொண்டு அவனைத் திட்டவோ இரைந்து கொள்ளவோ முடியாதென்ற காரணத்தினால் பேசாமல் முன்னால் நடந்தார் அவர். ஏதோ பெரிய குற்றத்தைச் செய்துவிட்டுப் பின்னால் தலை குனிந்துகொண்டு போகிறவனைப் போலச் சென்றான் அழகியநம்பி.

     வீட்டில் அம்மாவுக்கு முன்னால் வைத்துக்கொண்டு தன்னை எப்படிக் கோபித்துக் கொள்வார், எப்படித் திட்டுவார் - என்பதை நடந்து கொண்டே கற்பனை செய்ய முயன்றான் அவன். பிரமநாயகம் முன்கோப சுபாவமுடையவர் என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அவன் கற்பனை வீண் போகவில்லை. வீட்டிற்குள் நுழைந்ததும் தம்முடைய கோபத்தின் முழு உருவத்தையும் வெளிக்காட்டிச் சண்டையிடத் தொடங்கிவிட்டார். சண்டையென்றால் அடிபிடி சண்டையல்ல, வாய்ச் சண்டைதான்.

     "ஏண்டா, மனிதனுக்குச் சொன்னபடி நடந்து காட்டத் தெரிய வேண்டாமா? வாக்கிலே நாணயமில்லா விட்டால் அவன் என்னடா மனிதன்?" - என்று அவனைப் பதில் சொல்ல விடாமல் பொரிந்து தள்ளினார்.

     "நீங்கள் அவனைக் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. ஊரிலிருந்து பத்து நாட்களாக யாரும் வெளியேற முடியாமல் செய்துவிட்டது வெள்ளம். உங்களிடம் புறப்பட்டு வருவதாகச் சொல்லியிருந்த தேதியில் பிரயாணத்துக்குத் தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்துதான் வைத்திருந்தான் அவன்" - அழகியநம்பியின் தாயார் அவரைச் சமாதானப்படுத்துவதற்கு முயன்றாள்.

     "எனக்கு வந்த ஆத்திரத்தில் நான் மட்டும் தனியாகக் கப்பலேறிப் போயிருப்பேன். கோபமும் கொதிப்பும் ஒருபுறம் இருந்தாலும் மனம் கேட்கவில்லை. வருகிறானா? இல்லையா? என்று நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொண்டு போய்விடலாமென்று தான் புறப்பட்டு வந்தேன்."

     "நீங்கள் வராவிட்டாலும் நான் இன்றைக்குப் புறப்பட்டு வந்திருப்பேன். இதோ பாருங்கள்; பெட்டி, படுக்கை மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டி வைத்திருக்கிறேன். பஸ் போக்குவரவு பற்றிய விவரங்களை விசாரிப்பதற்காகத்தான் உங்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்தேன்" - என்று சிறிது துணிவை வரவழைத்துக் கொண்டு அவருக்குப் பதில் கூறினான் அழகியநம்பி.

     "சரிதான்! உன்னைக் கோபித்துக் கொண்டு என்ன பயன்? ஊரில் வெள்ளம் வந்தால் அதற்கு நீ என்ன செய்வாய்? போனால் போகிறது. இன்றைக்குப் பகல் பன்னிரண்டு மணி பஸ்ஸிற்கு நாமிருவரும் புறப்பட வேண்டும். ஐந்தேகால் மணிக்குத் தூத்துக்குடியில் கப்பலேறி விடலாம்..."

     திடீரென்று கோபம் மாறி அனுதாபத்தோடு அவர் பேசியதைக் கேட்ட போது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. இந்த ஒரு சிறிய நிகழ்ச்சியிலிருந்து அழகியநம்பி பிரமநாயகத்தைப் பற்றி ஒருவாறு புரிந்து கொண்டான். 'பிரமநாயகம்' குறுகிய காலத்தில் உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. கோபம், தாபம், அன்பு, ஆத்திரம், அனுதாபம் யாவும் வேகமாக உடனுக்குடன் மாறி மாறி இடம் பெறக்கூடிய மனம் அவருடையதென்று தெரிந்து கொண்டான். அத்தகைய மனிதரோடு ஒவ்வொரு விநாடியும் நெருங்கிப் பழக வேண்டிய வாழ்க்கையை நோக்கித் தான் சென்று கொண்டிருப்பதை நினைத்த போது அவனுக்குப் பயமாகத்தான் இருந்தது.

     அம்மா பதினோரு மணிக்குள் அவசர அவசரமாகச் சமையல் செய்திருந்தாள். அழகியநம்பியும், பிரமநாயகமும் சாப்பிட்டு முடிக்கும் போது மணி பதினொன்றரை. சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு இருவரும் பஸ்ஸுக்குப் புறப்பட்டார்கள். விடைகொடுக்கும் போது அவன் தாய்க்கு அழுகையே வந்துவிட்டது. அவர்கள் இருவருடைய உருவமும் தெருக்கோடியில் திரும்புகின்றவரை அம்மாவும், வள்ளியம்மையும், கலங்கிய கண்களோடு வீட்டு வாயிலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

     பிரமநாயகத்தோடு நடந்து கொண்டிருந்த அழகியநம்பி தெருக்கோடியில் காந்திமதி ஆச்சியின் இட்டிலிக்கடை வந்ததும் அதன் வாயிற் பக்கமாகத் திரும்பிப் பார்த்தான். யாரோ சொல்லிவைத்து ஏற்பாடு செய்தது போல அங்கே அந்தக் கண்கள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. பகவதி நின்று கொண்டிருந்தாள், கோமுவின் தலையும் தெரிந்தது. அந்த நான்கு விழிகளைச் சந்தித்த அவனுடைய இரண்டு விழிகள் அவற்றில் ஏக்கத்தைக் கண்டன.