![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
8. கடிதங்கள் அழகியநம்பி வியப்படைந்தான். அத்தனை ஆட்களை வைத்து வேலை வாங்கும் அவ்வளவு பெரிய கடைக்குப் பிரமநாயகம் சொந்தக்காரர் என்றறிந்தபோது அவனுக்கு வியப்பாகத்தான் இருந்தது. வாழை இலையிலிருந்து வானொலிப்பெட்டி வரை எல்லாப் பொருள்களும் கிடைக்கும்படியான ‘புரொவிஷன்' ஸ்டோராக அதை நடத்தி வந்தார் பிரமநாயகம். ‘பிரமநாயகம் புரொவிஷன் ஸ்டோர்ஸ்' - என்று அவருடைய பெயரைத் தாங்கி நின்ற அந்தக் கடை ஒரு நாளைக்கு இருபத்தையாயிரம் ரூபாய்களுக்குக் குறையாமல் வியாபாரம் செய்தது. இளைஞர்களும், வயதானவர்களுமாக நாற்பது பேருக்குக் குறையாமல் அந்தக் கடையில் வேலை பார்த்தனர். பிரமநாயகத்தையும், அவர் பேச்சையும், பிரசித்தி பெற்ற அவருடைய கஞ்சத்தனத்தையும் பார்த்தவர்கள் அந்தப் பெரிய விற்பனை நிலையத்துக்கு அவர் தான் ஏகபோக உரிமையாளர் என்பதை நம்ப முடியாதுதான். அந்தக் கடைக்குள்ளே அழகியநம்பி பின் தொடர அவர் நுழைந்ததும் அங்கிருந்த அத்தனை வேலையாட்களும் அவரவர்கள் இருப்பிடத்திலிருந்து எழுந்து அடக்க ஒடுக்கமாக வணக்கம் செலுத்திய காட்சி மறக்க முடியாதது. "ஐயா ஊரிலிருந்து வந்துவிட்டார்கள்" - என்று பயபக்தியோடு கூடிய ஒடுங்கிய குரல் அந்தப் பெரிய கட்டிடத்தில் மூலைக்கு மூலை எழுந்து பரவி அடங்கியதை அழகியநம்பி கவனித்தான். மரியாதை, பயம், அடக்க ஒடுக்கம், இவற்றை எல்லாம் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பவன் எவ்வளவு சுலபமாக அனுபவிக்க முடியும் என்று அவன் அங்கே கண்டான். பிரமநாயகம் ஒற்றைக்கட்டை. தூத்துக்குடியில் வியாபாரம் முறிந்த அதே வருடம் அவருடைய மனைவியும் ஒரு மாதம் நோயோடு போராடி விட்டுப் போய்ச் சேர்ந்தாள். கடைகள் ஏலத்தில் போய் வியாபாரம் முறிந்த ஏக்கத்தில், மனைவி இறந்த துக்கத்திலும் விரக்தியடைந்திருந்த போது தான் நாலைந்து வருடங்களுக்கு முன் அக்கரைச் சீமையும் அதன் வியாபாரமும் அவரை ஆசைகாட்டி அழைத்தன. குழந்தை குட்டிகள், வீடு, வாசல், என்று ஏதாவது பந்த பாசங்கள் இருந்தால் விடாப்பிடியாக உள்ளூரில் ஒட்டிக் கொண்டு கிடக்க வேண்டியதுதான். ஆனால், அவர் அன்று தனி ஆள். 'இலாபமோ, நஷ்டமோ, நம்முடைய அதிர்ஷ்டத்தை இன்னொரு தேசத்தில் போய்ப் பரிசோதித்துப் பார்க்கலாம்' - என்று துணிவாக நாலைந்து வருடங்களுக்கு முன் கப்பலேறியவர் இன்று இலட்சாதிபதியாக விளங்குகிறார். அவருக்குச் சொந்தமான கடைக்குள் நுழைந்தபோது பிரமநாயகத்துக்கு இந்தப் பழைய செய்திகளெல்லாம் நினைவுக்கு வந்தனவோ இல்லையோ; அழகியநம்பியின் நினைவுக்கு வந்தன. அவருடைய பழைய - புதிய நிலைகளை ஒப்பிட்டுப் பார்த்தான் அவன். ஒரே ஒரு சிறிய வேறுபாட்டைத் தவிர வேறு எதுவும் அவனுக்குத் தோன்றவில்லை. பிரமநாயகம் என்ற மனிதர் பேச்சில், எண்ணத்தில், செய்கையில், மனப்பான்மையில், எதிலும் நாலைந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது மாறிவிடவில்லை. புதியது எதுவும் அவரிடம் சேர்ந்துவிடவில்லை. பழையது எதுவும் அவரிடமிருந்து போய்விடவில்லை. அவருக்காக அவருடைய இரும்புப் பெட்டியிலும் அவருடைய பெயரில் பாங்குகளிலும் சில இலட்சம் ரூபாய்கள் சேர்ந்து கிடந்தன. இந்த ஒரே ஒரு சிறிய மாறுதல் தான் பழைய தூத்துக்குடிப் பிரமநாயகத்திற்கும், புதிய கொழும்புப் பிரமநாயகத்துக்கும் நடுவில் இருந்தது. பணம் என்ற அந்த மூன்றெழுத்துப் பொருளுக்கு உலகம் செய்கிற மரியாதைதான், கைகட்டல், வாய் பொத்துதல், கும்பிடு, பயபக்தி - எல்லாம். அந்த மூன்றெழுத்துப் பொருள், குட்டிச் சுவருக்குப் பக்கத்திலே நிற்கும் வெட்டிக் கழுதையிடம் இருந்தால் கூட உலகம் இதையெல்லாம் செய்யும். இப்படி இன்னும் பலப்பல ஆத்திரம் மிக்க சிந்தனைகள் அழகியநம்பியின் மனத்தில் அந்தக் கடைக்குள் நுழைந்து சுற்றிலும் பார்த்தபோது உண்டாயின. கடையின் பின்பகுதி விசாலமான வீடு போல அமைந்திருந்தது. பிரமநாயகம் அங்கேதான் குடியிருப்பு வைத்துக் கொண்டிருந்தார். சமையல்காரர், வேலையாள் - எல்லாம் நியமித்துக் கொண்டிருந்தார். குளிக்கக் குழாய், படுக்கை அறைகள், பூஜை செய்யவேண்டிய படங்களும் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்த பூஜை அறை, ஒரே சமயத்தில் நாற்பது பேருக்கு உட்கார்ந்து சாப்பிடப் போதுமான கூடமும் சமையலறையும் எல்லாம் கடையின் பின்பகுதியிலேயே இருந்தன. கூலி ஆட்கள் சாமான்களை எல்லாம் அந்தப் பகுதிக்குள் கொண்டு வந்து வைத்தனர். அவர்களுக்குக் கூலி கொடுக்கக் கால் மணி நேரம் செலவழித்தார் பிரமநாயகம். சிங்களவர்களான அந்த முரட்டுக் கூலிகள் தங்கள் மொழியிலும், கொச்சைத் தமிழிலுமாகக் கூலி போதாதென்று கூச்சலிட்டனர். பிரமநாயகமும் பதிலுக்குக் கூச்சல் போட்டார். ஓரணா, இரண்டணா ஒட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக வீண் கூச்சலை வளர்த்தார். கூலிகளும் விடாக்கண்டர்களாக இருந்தனர். கடைசியில் கால்மணிநேரத் தகராறுக்குப் பின் அவர்கள் கேட்ட கூலியைக் கொடுத்தனுப்பினார். சமையல்காரன் இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து கொடுத்தான். அதைப் பருகிக்கொண்டே அந்தக் பகுதியை ஒரு கண்ணோட்டம் விட்டான் அழகியநம்பி. "கடைக்குப்பின்னால் இது நம் வீடு மாதிரி. இங்கே எல்லா வசதிகளும் இருக்கின்றன. உனக்கு ஒரு அறை ஒழித்துத்தரச் சொல்கிறேன்" - என்றார் பிரமநாயகம். அப்போது அவருடைய முகபாவத்தை ஊன்றிக் கவனித்தான் அவன். "வா! உனக்கு எல்லாவற்றையும் சுற்றிக் காட்டுகிறேன். நாளைமுதல் நீயும் இங்கு ஒரு முக்கியமான ஆளாகப் பழகவேண்டும் அல்லவா?" என்று அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினார் அவர். "ஏ அப்பா சோமு! வந்திருக்கிறது யார் தெரியுமா? இந்தப் பிள்ளையாண்டான் எனக்குத் தூரத்து உறவு முறை. நன்றாகப் படித்திருக்கிறான். 'நம் கடைக் கணக்கு வழக்குகளை எல்லாம் கவனித்துக் கொள்ளட்டும்' என்று கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். வயிற்றுப் பாட்டுக்குக் குறைவில்லாமல் தம்பியைக் கவனித்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு" என்று முதன் முதலில் சமையற்காரச் சோமுவுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தார். இதேவிதமான அறிமுகம் பிரமநாயகம் புரொவிஷன் ஸ்டோர்ஸில் உள்ள ஒவ்வொரு ஆளிடமும் தொடர்ந்தது. சலிப்போ, அலுப்போ இல்லாமல் கடையின் ஒவ்வொரு மூலையையும் அவனைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டினார். ஒவ்வொரு சிறிய விவரத்தையும் அவனுக்குக் கூறினார். விலகி நின்று பார்ப்பவர்கள், 'பிரமநாயகம் இந்தக் கடையை இந்தப் பையனிடம் ஒப்புவித்துவிட்டு எங்கேயாவது புறப்பட்டுப் போகப்போகிறாரோ?' என்று நினைத்துக் கொள்ளத்தக்க விதத்தில் அவனை நடத்தினார். அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டும் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டும், அவசியம் நேர்ந்தபோது ஓரிரு வார்த்தைகள் பதில் சொல்லிக்கொண்டும் அவரைப் பின் தொடர்ந்து நடந்தான் அவன். கடைசியாகக் கடையின் முன்புறத்தில் இருந்த ஒரு சிறிய அறை வாசலுக்கு அவனை அழைத்துக் கொண்டு வந்தார் பிரமநாயகம். அறையின் முகப்பு ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மெல்லிய மஞ்சள்நிற வாயில் திரைச் சீலைகள் நிலையிலும், சன்னல்களிலும் தொங்கின. திரைச்சீலைக்கு முன்புறம் கையால் உட்புறம் தள்ளிக்கொண்டு நுழைவதற்கேற்ற இரண்டு சிறிய 'ஸ்பிரிங்' கதவுகள் இருந்தன. அது பகல் நேரமாயிருந்தும் உட்புறம் மின்சார டியூப் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் ஒளி தெரிந்தது. மின்சார விசிறி வேகமாகச் சுழலும் ஒளியும் வெளியே கேட்டது. அறைக்குள்ளே உயர்ந்த ரக ஊதுபத்திகளை நிறையக் கொளுத்தி வைத்திருந்தார்கள் போலிருக்கிறது. 'கமகம' வென்று நறுமணம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. பிரமநாயகம் அவனை அழைத்துக் கொண்டு அந்த அறையை நோக்கி நடந்த போது, கடைக்குள்ளிருந்த அத்தனை வேலையாட்களின் கண் பார்வையும் அந்தப் பக்கமாகத் திரும்பிச் சில விநாடிகள் நிலைத்ததை அழகியநம்பி கவனித்துக் கொண்டான். வெறும் தற்செயலான பார்வையாக மட்டும் அது அவனுக்குத் தோன்றவில்லை. அந்தப் பார்வைக்கு ஒரு பொருள் - மறை பொருள் இருக்க வேண்டும். அந்தப் பொருள் என்னவென்று அப்போதே அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. தன் சுற்றுப்புறத்தை, தன்னைச் சுற்றி இருப்பவர்களை, ஒவ்வோர் அசைவிலும் உற்றுக் கவனிக்கும் பழக்கம் அழகியநம்பிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உண்டு. அந்தப் பழக்கத்தால் எவ்வளவோ சிறிய பெரிய நன்மைகளை அவன் அடைந்திருக்கிறான். பிரமநாயகம் தன்னை அந்த முன்புறத்து அறைக்கு அழைத்துச் சென்றபோது அவருடைய நடையிலேயே ஒரு வகைத் தயக்கம் அல்லது பதற்றம் இருந்தது, அவனுடைய பார்வைக்குத் தப்பவில்லை. அது மட்டுமல்லாமல் ஓரிரு கணம் தயங்கி நின்றார் அந்த அறை வாசலில், அப்போது அவர் முகச் சாயலையும் அதில் விரவிய சலனத்தையும் கூட அழகியநம்பியால் கவனித்துக் கொள்ள முடிந்தது. அறையின் கதவருகே கடைகளின் செயலாளர் என்ற பொருளைத் தரும் ‘ஸ்டோர்ஸ் செகரெட்டரி' என்ற ஆங்கில எழுத்துக்கள் கண்ணாடியில் பிரேம் செய்து படம்போல மாட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழே சிறிய சிங்கள எழுத்துக்களில் ஒரு பெயரும் எழுதியிருந்தது. சிங்களம் தெரியாத அவனுக்கு அந்தப் பெயர் என்னவென்றும் விளங்கவில்லை. தயங்கி நின்ற பிரமநாயகம் கதவருகே இருந்த மின்சார மணிக்குரிய பொத்தானை அமுக்கினார். அறையின் உட்புறம் மின்சாரமணி ஒலிக்கும் ஓசை கேட்டது. மணி ஒலி அடங்குவதற்குள், அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மேலே சுவரில் தொங்கிய சிறிய சிவப்பு மின்சார பல்பு எரிந்து அணைந்தது. அதைப் பார்த்தவுடன், "சரி! வா உள்ளே போகலாம்" என்று ஸ்பிரிங் கதவை உட்புறமாகத் தள்ளிக்கொண்டு நுழைந்தார் பிரமநாயகம். உள்ளே இருப்பவர் வெளியே இருப்பவரை வரச் சொல்வதற்கு அனுமதி அந்தச் சிவப்பு விளக்கு எரிவது என்று அழகியநம்பி புரிந்துகொண்டான். அவற்றையெல்லாம் கண்டபோதும், அந்த அறைக்குள் நுழைந்தபோதும் மர்மம் நிறைந்த ஏதோ சில உண்மைகளைப் பார்ப்பதற்குப் போய்க் கொண்டிருப்பது போல் ஓருணர்வு அவனுக்கு ஏற்பட்டது. 'கேவலம், தனக்குக் கீழே தன்னிடம் மாதச்சம்பளம் வாங்கும் ஒரு 'ஸ்டோர்' செகரட்டரியிடம் பிரமநாயகம் இவ்வளவு தயக்கமும் பதற்றமும் அடைவானேன்?' என்று சிந்தித்தான் அழகியநம்பி. உள்ளே நுழைந்து பார்த்ததுமே அந்தச் சிந்தனைக்கு விடைகிடைத்துவிட்டது. உள்ளே நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான். மெர்க்குரி விளக்கொளி, டைப்புரைட்டர், பைல் கட்டுகள், ஒரு அலுவலகத்திற்கு வேண்டிய பொருள்கள் பரப்பிய பெரிய மேஜை. இவற்றிற்கு நடுநாயகமாகக் கந்தர்வலோகத்து மோகினி போல் ஒரு சிங்களப் பெண் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் மேஜைமேல் அன்றையத் தபாலில் வந்த கடிதங்கள், விரித்து வைத்திருந்த செக் புத்தகம், ஊதுபத்தி ஸ்டாண்டு எல்லாம் இருந்தன. அழகியநம்பி அருகில் சென்றதும் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டான். அவள் வேறு யாருமில்லை தெருக்கோடியில் அவன் மேல் மோதிக்கொள்ளாத குறையாக இடித்துக்கொண்டு வந்தவள் தான். அப்போது கண்கள் மறையும்படியாகக் கருப்பு நிறக் குளிர்ச்சிக் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தாள். இப்போது அதைக் கழற்றி மேஜை மேல் வைத்திருந்ததால் அழகியநம்பிக்கு அவளை அடையாளம் கண்டுகொள்ள ஓரிரு விநாடிகள் பிடித்தன. கோடு கீறினாற் போன்ற கரும் புருவங்கள் உயர்ந்து நிமிர, விழிகளை மலர்த்தி அவனைப் பார்த்தாள். 'ஓ'... குயில் அகவுவதுபோல் இந்த ஓசையுடன் சாயம் பூசிய செவ்விதழ்கள் திறந்து மூடின. தற்செயலாகத் தெருக்கோடியில் நேர்ந்த அந்தச் சந்திப்பை அவள் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. பிரமநாயகம் அறைக்குள் நுழைந்ததும் அவள் மரியாதைக்காகவாவது எழுந்திருந்து நிற்பாள் என்று அழகியநம்பி நினைத்தது வீணாயிற்று. சிரித்துக்கொண்டே மேஜைக்கு முன்னால் இருந்த இரண்டு நாற்காலிகளைச் சுட்டிக் காட்டினாள். அதிகாரம் செய்யவேண்டியவர் ஏன் அப்படி அடங்கி ஒடுங்கி அவளிடம் நடந்து கொள்கிறார் என்று அழகியநம்பிக்குப் புரியவில்லை. பிரமநாயகம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். அவனை இன்னொரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். அவனும் உட்கார்ந்து கொண்டான். கையில் பிரித்துப் படித்துக் கொண்டிருந்த கடிதத்தை மேஜை மேல் மடித்து வைத்துவிட்டு, நிமிர்ந்து உட்கார்ந்து, அவர்கள் இருவரையும் பார்த்தாள் அவள். அவளுடைய அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர் போல் பிரமநாயகம் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவனைச் சுட்டிக்காட்டிச் சிங்கள மொழியில் அவளிடம் ஏதோ கூறினார். சிரித்துக் கொண்டே சிங்களத்தில் பதிலுக்கு அவரிடம் ஏதோ கேட்டாள் அவள். அப்படிக் கேட்கும்போது தன் பக்கமாகக் கையைச் சுட்டிக்காட்டிக் கேட்டதனால் அந்தக் கேள்வி தன்னைப் பற்றியதாக இருக்கவேண்டும் என்று அழகியநம்பி நினைத்துக் கொண்டான். பிரமநாயகம் பதில் கூறினார். அதற்குப்பின் அவள் அவனிடமே நேரடியாக ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினாள். "உங்கள் வரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்கள் அன்பையும், ஒத்துழைப்பையும், நான் எப்போதும் விரும்புகிறேன். உங்கள் பெயர்?" "அழகியநம்பி" என்று பதிலைச் சுருக்கமாகக் கூறினான் அவன். "நல்லது! நாம் பின்பு சந்திப்போம். இப்போது எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது" - பேசிக்கொண்டே கடிதங்களைப் புரட்டத் தொடங்கினாள் அவள். அழகியநம்பி திகைத்தான். பேசத் தொடங்கிய விதமும், பேச்சை உடனடியாகக் கத்தரித்து முடித்துக்கொண்ட விதமும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததுபோல் பட்டது. அவன் நாற்காலியிலிருந்து எழுந்திருந்து விட்டான். பிரமநாயகமும் எழுந்துவிட்டார். எழுந்து நின்றுகொண்டு சிங்களத்தில் அவளிடம் ஏதோ கேட்டார் அவர். 'அவருடைய அந்தக் குரல் அறைக்குள் வந்ததிலிருந்து ஏன் அப்படி அடங்கி ஒடுங்கி ஒலிக்க வேண்டும்?' என்பதை நீண்ட நேரமாகச் சிந்தித்துக் குழம்பினான் அவன். ஒருவேளை தன்னைப் பற்றிய பேச்சைத் தான் தெரிந்து கொள்ளக் கூடாதென்று அவர்கள் தனக்குத் தெரியாத மொழியில் பேசிக் கொள்கிறார்களோ என்று அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அழகியநம்பி நடப்பது ஒவ்வொன்றையும் உற்றுக் கவனித்துக் கொண்டே வந்தான். நாற்காலியிலிருந்து எழுந்திருந்து பிரமநாயகம் கேட்ட கேள்விகளுக்கு அவள் கூறிய பதில் அவனுக்குப் புரியவில்லையானாலும், அது ஒலித்த விதத்தில் கோபத்தின் சாயை, கடுமையின் குறிப்பு, - இருந்ததுபோல் தோன்றியது அவனுக்கு. அந்தப் பதிலைக் கேட்டு விட்டுப் பிரமநாயகம் சிறிது நேரம் விழித்துக் கொண்டு நின்றார். பின்பு அவனைப் பார்த்து, "வா, நாம் போகலாம்" - என்று கூறி அழைத்துக்கொண்டு அறைக்கு வெளியே வந்தார். அறைவாயிலுக்குத் திரும்பி வந்ததும் அந்தப்பெண்ணின் பெயரென்னவென்று அவரிடம் கேட்க நினைத்தான் அழகியநம்பி. ஆனால், அவருடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தபோது அப்போது, அவரிடம் எதையும் கேட்காமலிருப்பதே நல்லதென்று ஆவலை அடக்கிக் கொண்டான். "குளித்து, சாப்பாட்டை முடித்துக்கொண்டு மற்றக் காரியங்களை அப்புறம் கவனிக்கலாம்" - என்று கடையின் பின்புறத்தை நோக்கி நடந்தார் அவர். பதில் சொல்லாமல் பின்னால் சென்றான் அழகியநம்பி. அந்தச் சமயத்தில் அந்தப் புது இடத்தில், புது மனிதர்களுக்கு நடுவே அதிகம் பேசுவதை விட அதிகம் சிந்திப்பது அவசியமாயிருந்தது அவனுக்கு. மனிதர்களையும், அவர்களுடைய மனங்களையும், அறிந்து கொள்வதற்கு, சூழ்நிலைகளைச் சரியானபடி புரிந்து கொள்வதற்குச் சிந்தனை பயன்படுவதுபோலப் பேச்சுப் பயன்படுவதில்லை என்பது அவன் கருத்து. குளித்துச் சாப்பிட்டதும் பிரயாண அலுப்புத்தீரப் படுத்துத் தூங்கச் சென்றுவிட்டார் பிரமநாயகம். அழகியநம்பி ஊருக்குக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்துவிட நினைத்தான். 'யார் யாருக்குக் கடிதம் எழுதலாம்? யாருக்கு அவசரமாக எழுதியாக வேண்டும்?' - என்று தயங்கினான். 'அம்மாவுக்கும் தங்கைக்கும் முதலில் ஒரு கடிதம் அவசரமாக எழுதிப் போட வேண்டும். வந்து சேர்ந்தேனோ, இல்லையோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். காந்திமதி ஆச்சிக்கு இப்போது அவசரமாக எழுதவேண்டிய சமாசாரம் ஒன்றுமில்லை. ஆனாலும் 'வந்து சேர்ந்தேன்' - என்று ஒரு வரி எழுதிப் போட்டு வைக்கலாம். நண்பர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இங்கே புறப்பட்டு வந்திருப்பது தெரியுமோ, தெரியாதோ? குறிஞ்சியூரிலிருந்தால் தெரியும். எல்லோரும் வெளியூர் நண்பர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நெருங்கிப் பழகியவர்கள். படிப்பை நிறுத்தியதும் சிலருடைய பழக்கமும் தொடர்பும் அடியோடு நின்று போயிற்று. முக்கியமான சில நண்பர்கள் மட்டும் பழக்கம் விட்டுப்போகாமல் அவ்வப்போது குறிஞ்சியூருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். 'அவர்கள் இனிமேலும் குறிஞ்சியூறுக்குக் கடிதம் எழுதி ஏமாற்றமடையாது தான் கொழும்புக்கு வந்திருப்பதை அவர்களுக்குத் தெரிவித்து எழுதிவிட வேண்டியதுதான்' - என்று எண்ணியது அவன் மனம். பிரமநாயகம் தனக்கு ஒழித்துவிட்டிருந்த அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டு, யார் யாருக்கு எந்த முறையில் எழுதலாம் என்று சிந்தனை செய்து கொண்டிருந்தான். கடிதம் எழுதவேண்டுமென்ற ஆசை, என்ன எழுதுவதென்ற மலைப்பு? - இப்படி ஒரு இரண்டுங்கெட்ட நிலையில் சிறிது நேரம் அவனுடைய மனம் தவித்தது. அடுத்த அறையில் பிரமநாயகத்தின் குறட்டை ஒலி ஏற்ற இறக்கமான சுருதிலயங்களோடு ஒலித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம்தான் மலைத்துப்போய் அப்படியே உட்கார்ந்திருப்பது? மனத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அம்மாவுக்குக் கடிதம் எழுதலானான். 'அம்மாவுக்கு அழகியநம்பி அநேக வணக்கங்கள். இங்கு எல்லோரும் சுகம். அங்கு நீயும் வள்ளியம்மையும் சுகமாக இருக்கிறீர்களா; என்பதற்குப் பதில் எதிர்பார்க்கிறேன். நானும் பிரமநாயகம் அவர்களும் சுகமாக இங்கு வந்து சேர்ந்தோம். கடையில் இன்று முதல் வேலை பார்க்கப் போகிறேன். மற்றவர்கள் எப்படிப் பழகுகிறார்கள்? என்பதைப்பற்றி இன்னும் இரண்டொரு நாட்கள் இங்கே ஊடாடிப் பழகின பின்பு தான் தெரிந்துகொள்ள முடியும். இந்தக் கொழும்பு நகரத்தைப் பார்த்தால் உங்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். அப்பப்பா! எவ்வளவு பெரிய நகரம். எத்தனை கப்பல்கள் துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கின்றன! எவ்வளவு பெரிய கடைவீதிகள்! - சிறு வயதில் நாமெல்லோரும் சென்னையைப் பார்த்தது உங்களுக்கு நினைவிலிருக்குமென்று எண்ணுகிறேன். பணப் புழக்கத்தாலும் ஆரவார ஆடம்பரங்களாலும் சென்னையைவிட எவ்வளவோ பெரிய நகரமாகத் தோன்றுகிறது இது. 'அடிக்கடி இங்குள்ள நிலவரத்தைக் கடிதமூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். வந்தவுடன் பணம் கேட்பது நன்றாக இருக்காது. இந்த மாத முடிவில் பிரமநாயகத்திடம் கேட்டுக் கொஞ்சம் பணம் வாங்கி அனுப்புகிறேன். ஊரில் கைச் செலவுக்குக்கூட ஒன்றுமில்லாமல் உங்களை வெறும் வீட்டோடு வைத்துவிட்டு வந்திருப்பதை நினைத்தால் எனக்கு மன வருத்தம் உண்டாகிறது. நீங்களோ வள்ளியம்மையோ என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் கவலை கவலைதான்! கவனமாக வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள். காந்திமதி ஆச்சியிடமும் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். ஏங்கல், தாங்கலில், என்னவென்று விசாரித்து உதவி செய்வதற்கு உங்களுக்கு ஆட்கள் இல்லாமல் போய்விடவில்லை. பெருமாள் கோவில் மணியம் நாராயணபிள்ளை, புலவர் ஆறுமுகம், எல்லோரிடமும் அடிக்கடி விசாரித்துக் கவனித்து கொள்ளச் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நீங்கள் - தாயும் மகளும் என்னைப்பற்றி இல்லாததை எல்லாம் நினைத்துச் சஞ்சலம் அடையக்கூடாது. நிம்மதியாக இருக்க வேண்டும். அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருங்கள். மற்றவை பின்பு. பதில் எதிர்பார்க்கிறேன்.
உங்களன்புள்ள, அழகியநம்பி.' - இதை எழுதி முடித்ததும் காந்திமதி ஆச்சிக்கும் சுருக்கமாக ஒரு கடிதம் எழுதினான் அவன். தான் சௌக்கியமாக வந்து சேர்ந்ததைப் பற்றியும், கொழும்பு நகரத்தின் பெருமையைப் பற்றியும் குறிப்பிட்டுவிட்டுப் பகவதிக்கும், கோமுவுக்கும் தன் அன்பைக் கூறுமாறும், அவர்களுடைய சுகத்துக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்குமாறும், எழுதி அந்தக் கடிதத்தை முடித்திருந்தான். பெருமாள் கோவில் நாராயணப் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்திலேயே புலவர் ஆறுமுகம், மேலத்தெரு வாசகசாலைச் செயலாளர் கந்தப்பன், முன்சீப் புன்னைவனம் பிள்ளை - எல்லோருக்கும் தன் அன்பையும் வணக்கத்தையும் தெரிவிக்குமாறு மொத்தமாக வேண்டிக் கொண்டிருந்தான். நண்பர்களிலும் எல்லோருக்கும் அவன் தனித்தனியே கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கவில்லை. எல்லா நண்பர்களைக் காட்டிலும் அவனிடம் மனம்விட்டுப் பழகியவன் முருகேசன். அவனுக்கு ஊர் தென்காசி. தான் கொழும்புக்கு வந்திருப்பது பற்றி அவனுக்குத் தெரிவித்தால் அவனிடமிருந்தே மற்றவர்களுக்கும் அந்தச் செய்தி பரவிவிடும் என்பதை அழகியநம்பி அறிவான். முருகேசனுக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய புதிய இடத்தையும், தன் நிலைகளையும், எதிர்காலத்தையும் பற்றிச் சற்று விரிவாகவே எழுதியிருந்தான். கடிதங்களை எழுதி முடித்தபோது சமையற்காரச் சோமு அறைக்குள் நுழைந்தான். "என்ன வேண்டும் உனக்கு?" - என்று தான் எழுதி முடித்த கடிதங்களை அடுக்கிக்கொண்டே உள்ளே நுழைந்த சோமுவைக் கேட்டான் அழகியநம்பி. "எனக்கு எழுதத் தெரியாது தம்பீ! கடிதம் எழுத வேண்டும். என்ன எழுத வேண்டுமென்று சொல்கிறேன். இந்தக் கடிதத்தையும் சிரமம் பாராமல் எழுதிக் கொடுத்துவிடு. நானே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்த் தபாலில் சேர்த்து விடுகிறேன்," - என்று ஒரு காகிதத்தையும் கடித உறையையும் அவனிடம் நீட்டினான் சோமு. அதை வாங்கிக் கொண்டு அவனை உட்காரச் சொன்னான் அழகியநம்பி. சோமு தமிழ்நாட்டிலிருக்கிற தன் மனைவி, மக்கள், தாய், சகோதரி எல்லோரும் அடங்கிய குடும்பத்துக்கு எழுதுகிற கடிதம் அது. கடிதம் எழுதிக் கொடுக்கிற சாக்கில் படிப்பறிவில்லாத அந்தச் சமையற்காரனிடமிருந்து சில விவரங்களை விசாரித்து அறிந்து கொண்டான். அவன் விசாரிக்கத் தயங்கிய அல்லது விசாரிக்க விரும்பாத சில விவரங்களைச் சோமு தானாகவே கூறினான். பிரமநாயகத்தின் கை செழிப்பு வியாபாரம் ஓங்கி நடக்கத் தொடங்கிய நாளிலிருந்து அவன் அவரிடம் சமையற்காரனாக இருக்கிறான். அந்த நாளிலிருந்து இன்றுவரை அவனுடைய மாதச் சம்பளம் இருபது ரூபாய்க்கு மேல் வளரவில்லை. சாப்பாடு தவிர இருபது ரூபாயும், வருடத்திற்கு இரண்டு கோடி வேஷ்டி துண்டுகளும் கொடுத்து வந்தார் பிரமநாயகம். சோமு சரியான பொறுமைசாலி. இல்லையானால் வளர்ச்சியடையாத குறைந்த சம்பளத் தொகையையும் பெற்றுக் கொண்டு பிரமநாயகத்தைப் போன்ற முன்கோபியிடம் தொடர்ந்து வேலை பார்த்து வர முடியுமா? "என்னவோ வயிற்றுச் செலவு போக இருபது ரூபாயாவது கிடைக்கிறது பாருங்கள். நம்ம ஊரில் இருந்தால் அதற்கும் வழி இல்லையே; ஏதோ காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறேன்." - என்று சோமுவே அழகியநம்பியிடம் கூறினான். அவனைப் போன்ற நிலையிலுள்ள ஒரு சராசரி மனிதன் வாழ அந்தப் பொறுமை அவசியமென்றுதான் அழகியநம்பிக்குத் தோன்றியது. கடிதங்களை தபாலில் சேர்த்துவிட்டு வருவதாக அவனிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான் சோமு. |