1. புது வெள்ளம்

     அழகியநம்பி மாடியின் உட்பகுதியிலிருந்து மொட்டை மாடிக்குச் செல்லும் மரப்படிகளில் வேகமாக ஏறினான். தடதடவென்று எழுந்த மரப்படிகளின் ஓசை மாடியெங்கும் அதிர்ந்தது.

     அழகிய நம்பி மொட்டை மாடியின் திறந்த வெளியில் நின்று கொண்டு சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான். தண்ணீர், தண்ணீர்; ஒரே தண்ணீர் மயம்; நாலா பக்கங்களிலும் செந்நிறப் புதுநீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வயல்கள், வரப்புகள், சாலை, தோப்பு, துரவு, - ஒரு இடம் மீதமில்லை! எங்கும் வெள்ளம்.

     நான்கு புறமும் மலைத் தொடர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கில் அமைந்த சிற்றூர் அது. தாமரை இதழ்களுக்கு நடுவே இருக்கும் பொகுட்டைப் போல் மலைச் சிகரங்கள் ஊரை அரவணைத்துக் கொண்டிருந்தன.

     சுற்றுப்புறத்து மலைத் தொடர்களிலும் பள்ளத்தாக்கிலும் ஒரு வாரமாக இடைவிடாத மழை. வானத்து மேகங்களுக்குத் திடீரென்று கொடைவெறி பிடித்துவிட்டதோ என்று சொல்லத்தக்க விதத்தில் மழை அளவற்றுப் பெய்திருந்தது. அதன் விளைவுதான் ஊரையே திக்குமுக்காடச் செய்த இந்தப் புது வெள்ளம். சாதாரண நாட்களிலேயே குளிருக்குக் கேட்க வேண்டாம். ஒரு வாரமாகச் சூரியன் முகத்தையே காண முடியாத நிலையில் கூண்டில் அடைப்பட்ட புறாக்களைப் போல மனிதர்கள் வீடுகளில் அடைப்பட்டுக் கிடந்தார்கள். அவ்வளவு குளிர். பக்கத்து நகரங்களிலிருந்து அந்தப் பள்ளத்தாக்கிற்கு வரும் போக்குவரத்து சாதனங்கள் நின்றுபோய்ப் பத்து நாட்களுக்கு மேலாயிற்று. சாலைகளெல்லாம் உடைப்பிற்கும் அரிப்பிற்கும் இலக்காகியிருந்ததால் போக்கு வரவு எப்படி நடக்க முடியும்? சகல விதத்திலும் அந்தச் சின்னஞ்சிறிய கிராமம் உலகத்தின் பிற பகுதிகளோடு தொடர்பு பெற முடியாத தீவைப் போலத் துண்டிக்கப்பட்டிருந்தது. ஊருக்கு வரவேண்டிய தபால்கள் வரவில்லை. ஊரிலிருந்து வெளியிடங்களுக்குப் போகவேண்டிய தபால்கள் போகவில்லை.

     மழை பெய்தவுடன் பருவகாலத்தில் வழக்கமாக நடைபெற வேண்டிய விவசாய வேலைகளும் தடைப்பட்டு நின்று போயிருந்தன. உள்ளங்காலைப் பதிப்பதற்குக்கூட இடமில்லாமல் எல்லா இடங்களிலும் இடுப்புத் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது என்ன தான் செய்ய முடியும்? நாற்றங்கால்களில் நடுகைக்காகப் பயிரிட்டு வளர்த்திருந்த நாற்று, தண்ணீர்ப் பெருக்கினுள் அழுகிக் கொண்டிருந்தது.

     அவ்வளவு தண்ணீரும் வற்றித் தரை கண்ணுக்குத் தெரிந்தாலும், பத்து நாள் வெயிலில் காய்ந்தாலன்றி உழவுக்கு ஏர் பூட்ட முடியாது.

     மண்ணில் புடைத்தெழுந்த கருநீலப் பசும்பந்துகளைப் போல ஊரைச் சுற்றிலும் தென்பட்ட மலைச் சிகரங்களையும் அவற்றில் பால் வழிவதுபோல் படர்ந்திருக்கும் மேகச் சிதறல்களையும் பார்த்த போது, அவன் இதயத்தில் ஏதோ ஒரு பெரும்பாரம் தோன்றி அழுத்துவது போல் தோன்றியது. விநாடிக்கு விநாடி அந்த உணர்வு பெரிதாக விசுவரூபமெடுத்தது. மனம் கனத்தது. உணர்வுகள் சுமையாயின.

     கீழே ஈரமும் பச்சைப் பாசியும் படிந்திருப்பதைக்கூடக் கவனிக்காமல் அப்படியே மொட்டை மாடியின் தளத்தில் உட்கார்ந்து கொண்டான். காலமும், கோடையும், தவறாமல் நீரைப் பொழிந்து ஊரின் கழுத்தில் பக்கத்துக்கு இரட்டை வடமாக மல்லிகை மாலையிட்டதுபோல இரண்டு பெரிய ஜீவ நதிகளை அளிக்கும் அந்த மலை; வருடத்துக்கு மூன்று போகத்துக்குக் குறையாமல் போட்டதைப் பொன்னாக்கிக் கொடுக்கும் அந்தப் பூமி, எப்பொழுதும் கோடைக்கானல், உதக மண்டலம் போலக் குளிர்ச்சியாயிருக்கும் அந்த ஊர், மழைக்காக இருண்டு சூல் கொண்டிருக்கும் வானம், - இவையாவும் அப்போது அந்த விநாடியில் அவனைப் பார்த்துத் தங்களுக்குள் மர்மமாக - மௌனமாகக் கேலி செய்வதுபோல் அவனுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று.

     அவனுடைய அப்பன், பாட்டன், முப்பாட்டன், - எல்லாரும் வாழ்ந்து குப்பை கொட்டிக் கடைசியில் எந்த மண்ணில் கலந்தார்களோ, - அந்த மண்ணிலிருந்து அவன் போகப் போகிறான். ஆம்! வெகு தூரத்திற்குப் போகிறான். கண்காணாத சீமைக்குப் போகிறான். மழை பெய்து ஊரை இப்படி வெள்ளக்காடு ஆக்கியிரா விட்டால் நான்கு நாட்களுக்கு முன்னேயே அவன் தூத்துக்குடிக்குப் போய்க் கப்பலேறியிருப்பான். மழையும், வெள்ளமும், ஊரைவிட்டு வெளியேற முடியாதபடி பிரயாணத்தைத் தடைசெய்து விட்டன.

     "இன்னும் இரண்டு நாட்களிலேயேயாவது வெள்ளம் வடிந்தால்தானே ஊரைவிட்டுப் புறப்படலாம்! பிரமநாயகம் தூத்துக்குடியில் எனக்காகக் காத்துக்கொண்டிருப்பாரே. என்ன காரணத்தால் நான் வரவில்லை என்று தெரியாமல் என்னைத் திட்டிக் கொண்டிருக்கப் போகிறார். மனிதர் முன் கோபக்காரர் ஆயிற்றே. 'வெள்ளம் வடிந்ததும் புறப்பட்டு வந்துவிடுகிறேன் கோபித்துக் கொள்ளாதீர்கள்.' - என்று ஒரு தபால் எழுதக் கூட வழியில்லாமலிருக்கிறது. வெள்ளத்தால் தபால் போக்குவரவே நின்றுவிட்டதே! 'வெட்டிப்பயல்! இவன் எங்கே நம்மோடு அக்கரைச் சீமைக்கு வரப்போகிறான். சும்மா வார்த்தைக்குச் சரி என்று சொல்லியிருக்கிறான். வீட்டிலே அம்மாவும் தங்கையும் ஏதாவது சொல்லிப் பயமுறுத்தித் தடுத்திருப்பார்கள்.' - என்று நினைத்துப் பிரமநாயகம் கப்பலேறிப் போயிருந்தால் என்ன செய்வது?" - இந்தச் சந்தேகம் ஏற்பட்டதோ இல்லையோ, அழகியநம்பியின் சிந்தனை தடைப்பட்டது. 'பிரமநாயகம் கப்பலேறிப் போயிருந்தால்...?' என்று நினைக்கும் போதே தன் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி பயங்கரமாகப் பெரிதாக உருவெடுத்து நின்றது.

     பிரமநாயகம் அவனுக்குத் தூரத்து உறவினர். பெரிய வியாபாரி. தூத்துக்குடியில் இரண்டு மளிகைக் கடைகள் இருந்தன. நாலைந்து வருடங்களுக்கு முன் வியாபாரம் நொடித்துக் கையைச் சுட்டுவிட்டது. இரண்டு கடைகளும் ஏலத்தில் போயின. அதன் பிறகும் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து விடாத அவர் அரையில் உடுத்த துணியும், மேல் வேட்டியுமாகக் கொழும்புக்குக் கப்பலேறினார். விடா முயற்சியும், திட நம்பிக்கையும் உள்ள பிரமநாயகம், நாலே வருடங்களில் கொழும்பில் ஒரு கடைக்கு முதலாளியாகிவிட்டார்.

     திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் அழகியநம்பி முதல் வருடப் படிப்பைப் படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய தகப்பனார் காலமாகிவிட்டார். கலியாணமாகாத ஒரு தங்கையையும், தாயரையும், சொத்தின் மதிப்பிற்கு மேல் ஏராளமாகச் சுமந்திருந்த கடன் சுமையையும் இளைஞனான அழகியநம்பி தாங்க வேண்டியதாயிற்று. அவனுடைய கல்லூரிப் படிப்பிற்கும் அன்றோடு முற்றுப்புள்ளி விழுந்தது. வீடு ஒன்றைத் தவிர நிலங் கரைகள் எல்லாவற்றையும் விற்றும் தகப்பனார் வைத்துவிட்டுப் போயிருந்த எல்லாக் கடன்களையும் அடைக்க முடியவில்லை. கடன் பத்திரம் எழுதிக் கொடுத்தான். அவன் வயசுக்கு அவனால் தாங்க முடியாத வாழ்க்கைத் தொல்லைகள் குருவி தலையில் பனங்காயை வைத்த மாதிரி அவன் தலையில் சுமந்திருந்தன.

     படிப்பை நிறுத்திவிட்டு ஊரோடு வந்தபின் விளையாட்டுப் போல ஒருமாதம் கழிந்துவிட்டது. நிலம் நீச்சு - ஏதாவது இருந்தால் அந்த வேலைகளையாவது கவனிக்கலாம். ஒரு வேலையுமில்லாமல் வீட்டுக்குள் அடைந்து கிடப்பது எவ்வளவு நாளைக்கு முடியும்? பத்திரிக்கைகளில் வருகிற தேவை விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பங்கள் அனுப்பினான்.

     கிராமம் என்பது பெரிய உலகத்தின் ஒரு சிறிய அணு. அங்கே மனித உணர்ச்சிகளைக் காட்டிலும் அவனைச் சுற்றியிருக்கும் இன்ப துன்பங்களைத்தான் அதிகமாகக் கவனிப்பார்கள். அவற்றைப் பற்றித்தான் விசாரிப்பதும் வழக்கம். அழகியநம்பி வீட்டை விட்டு வெளியே வருவதே குறைவு. எப்போதாவது மாலை நேரங்களில் காலார மலையடிவாரத்துப் பக்கம் உலாவிவிட்டு வரலாமென்று அத்திப்பூத்தாற்போலக் கிளம்புவான். "ஏண்டா அழகு! தங்கை கலியாணத்திற்கு என்ன ஏற்பாடு செய்யப்போகிறாய்?" - என்று விசாரிப்பார் ஒருவர்.

     "படிப்பை நிறுத்திவிட்டாயாமே?" - என்று ஆதங்கப்பட்டுக் கொள்வார் இன்னொருவர்.

     "உனக்கென்ன வயது கொஞ்சமா தம்பீ? தலைக்குமேல் கடன் இருக்கிறது. வீட்டிலே கட்டிக் கொடுக்கவேண்டிய பெண் வேறு இருக்கிறாள். சும்மா இருந்தால் நடக்குமா? ஏதாவது வேலை வெட்டிக்கு முயற்சி செய்யவேண்டும்" - என்று உரிமையோடு கடிந்துகொள்வார் ஒருவர்.

     இந்த விசாரணைத் தொல்லைகளுக்குப் பயந்துதான் அழகியநம்பி வெளியில் வருவதையே குறைத்துக் கொண்டிருந்தான். உதவி செய்ய முடியுமோ, முடியாதோ, எதற்கும், யாரிடமும் அனுதாபம் செலுத்தத் தயங்காத, வார்த்தைகளைச் செலவிடுவதற்குக் கூசாத மனப்பண்பு கிராமங்களில் உண்டு. ஆனால், அந்த அனுதாபம் தான் அவனுக்கு வேண்டாததாக - வேதனை தருவதாக இருந்தது. 'அடுத்த வீட்டில் பிணம் விழுந்தாலும் கவலைப்படாமல் ரேடியோ சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருக்கும் 'உள்வீட்டு நாகரிக மனப்பான்மை' கிராமங்களிலும் வரவில்லையே!'

     தன்னுடைய நிலை தான் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு, - எல்லாம் அவனுடைய உணர்வில் உறைக்காமலில்லை. ஆனால், அதை மற்றவர்கள் கூறக் கேட்கும்போது இனம் புரியாத பயமும் தாழ்வு மனப்பான்மையும் உண்டாயின. கிராமத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போலக் கழிந்து கொண்டிருந்தது.

     இந்தச் சமயத்தில்தான் பிரமநாயகம் அவனுக்குக் கை கொடுத்து உதவ முன் வந்தார். கொழும்பிலிருந்து ஏதோ சொந்தக் காரியமாகத் தாய் நாட்டுக்குத் திரும்பி வந்திருந்த பிரமநாயகம் உறவு முறையை விட்டுக் கொடுக்காமல் அவனுடைய தகப்பனார் மரணத்திற்குத் துக்கம் கேட்பதற்காகக் கிராமத்திற்கு வந்தார். அப்போது பேச்சுப் போக்கில் அழகியநம்பி தன் நிலையை அவரிடம் கூற நேர்ந்தது. "உனக்குச் சம்மதமானால் என்னோடு கொழும்புக்குப் புறப்பட்டுவா. எனக்குக்கூட வியாபார சம்பந்தமான அலுவல்களைக் கவனிக்க உன்னைப் போல ஒரு படித்த பையன் வேண்டும். நாலைந்து வருஷம் கஷ்டப்பட்டு உழைத்தாயானால் அப்புறம் ஏதோ ஒரு பெருந் தொகையைச் சேர்த்துக்கொண்டு ஊர் திரும்பலாம். கடன்களும் அடைபடும். தங்கையின் கலியாணத்தையும் நடத்திவிடலாம்" - என்று அவர் கூறினார்.

     அழகியநம்பி தன் தாயார் சம்மதிப்பாளோ, மாட்டாளோ என்று தயங்கினான். ஆனால், அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, "ஐயா சொல்றபடியே செய் அழகு. அவர்களைத் தவிர நமக்கு யோசனை சொல்ல நெருக்கமானவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? தூரம் தொலைவாயிற்றே என்று தயங்கினால் முடியாது. ஒரு நாலைந்து வருஷம் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிட்டுத்தான் வரவேண்டும்" - என்று அவனையும் முந்திக்கொண்டு தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் அவன் அன்னை.

     அழகியநம்பி பிரமநாயகத்திடம் அவருடன் கொழும்புக்கு வர இணங்கினான். தாம் புறப்படுவதற்கு இன்னும் பதினைந்து இருபது நாட்களுக்கு மேலாகும் என்று கூறிய அவர், புறப்படுகிற தேதி, நேரம் முதலியவற்றை விபரமாகச் சொல்லித் தூத்துக்குடிக்கு வந்து தம்மோடு சேர்ந்து கொள்ளுமாறு அவனுக்குக் கூறிவிட்டுப் போயிருந்தார்.

     குறிப்பிட்ட தினத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே பிரயாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டான் அழகியநம்பி. அவர்கள் கிராமம் எந்த மலைப்பகுதிகளின் நடுவே இருந்ததோ அங்கே அப்போது மழைப் பருவம். ஒரு வாரத்திற்கு முன் பிடித்த மழை நிற்காமல் பெய்த கோரத்தினால் ஊரே தீவு மாதிரியாகிவிட்டது. மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்த அழகியநம்பி பெருமூச்சு விட்டான். பிரமநாயகத்துக்குக் கொடுத்திருந்த வாக்கின்படி அன்று காலை 10 மணிக்கு அவன் தூத்துக்குடித் துறைமுகத்தில் போய் நின்றிருக்க வேண்டும்!

     'நினைத்து என்ன பயன்? சொல்லியபடி போய்ச் சேர முடியவில்லை. அவர் இன்றைக்கே கப்பலேறியிருந்தாலும் ஏறியிருப்பார்.' - சிந்தனையைத் தேக்கிக்கொண்டு கீழே போவதற்காக அவன் எழுந்திருந்தான்.

     மாடிக்கு வரும் மரப்படிகளில் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. திரும்பினான். "அண்ணா! அம்மா சாப்பிடக் கூட்டிக்கொண்டு வரச்சொன்னாள். இட்டிலி ஆறிப்போகிறதாம்" - என்று சொல்லிக் கொண்டே அவன் தங்கை வள்ளியம்மை வந்து நின்றாள்.

     "இதோ வந்து விட்டேன். நீ போ!" - என்று பதில் சொல்லிக்கொண்டே அவளைப் பின்பற்றி மாடிப்படியில் இறங்கினான் அழகியநம்பி.

     "என்னடா அழகு! இந்தப் பாழாய்ப்போன வெள்ளம் வந்து கெடுத்துவிட்டதே? இன்றைக்குப் பத்து மணிக்குத் தானே பிரமநாயகம் உன்னைத் தூத்துக்குடிக்குப் புறப்பட்டு வரச் சொல்லியிருந்தார்?" - இலையில் இட்லியைப் பரிமாறிக் கொண்டே கேட்டாள் அவனுடைய தாயார்.

     "ஆமாம்! இன்றைக்கேதான். நான் என்னம்மா செய்கிறது? இப்படி மழை கொட்டி ஊரெல்லாம் சமுத்திரத்தில் மிதக்கும் தீவாந்திரமாகப் போகிறதென்று எனக்கு முன்னாலேயே தெரியுமா?"

     "பிரமநாயகம் நீ ஏமாற்றிவிட்டதாக நினைத்துக் கொள்ளாமலிருக்க வேண்டும்?"

     "ஒருவர் நினைத்துக் கொள்வதையும் நினைத்துக் கொள்ளாததையும் பற்றி நாம் கவலைப்பட்டு முடியுமா அம்மா? எதற்கும் வெள்ளம் வடிந்து வெளியூருக்குப் போகலாம் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் தூத்துக்குடிக்குப் போய்விட்டு வரலாம் என்றுதான் எண்ணியிருக்கிறேன்."

     "எதுக்கும் போய்ப் பார்த்துவிட்டு வருவதுதான் நல்லது. இந்தப் பக்கத்து வெள்ள நிலவரம் தூத்துக்குடிவரை எட்டாமலா இருக்கும்? ஒருவேளை பிரமநாயகத்துக்கும் தெரிந்திருக்கலாம். நீ வாரததற்கு வெள்ளம்தான் காரணம் என்று எண்ணிக்கொண்டு உனக்காக இன்னும் சில நாள் தாமதித்தாலும் தாமதிப்பாரோ என்னவோ?"

     "எதைப்பற்றி நினைத்தாலும் நாம் நினைக்கும்போது நமக்குச் சாதகமாகத்தான் நினைப்போம் அம்மா!" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் அழகியநம்பி. அந்தச் சிரிப்பில் நம்பிக்கையின் வறட்சிதான் இருந்தது.

     "முன்கோபியானாலும் பிரமநாயகத்துக்கு ஈவு இரக்கம் உண்டு. எனக்கென்னவோ இன்றைக்கு நீ போகாவிட்டாலும் உனக்காக அவர் இரண்டொருநாள் தாமதிப்பாரென்றே தோன்றுகிறது."

     "அதையும்தான் பார்க்கலாமே."

     "வெள்ளம் நாளன்றைக்குள் நிச்சயமாக வடிந்துவிடும். நேற்றுக் களத்து மேடெல்லாம் மூடியிருந்தது. இன்றைக்குக் காலையில் களத்துமேடு தெரிந்துவிட்டதேடா" - என்றாள் அவன் தாய்.

     இலையில் போட்ட இட்டிலிகளைச் சாப்பிட்டுவிட்டு அடுத்த ஏடு எடுப்பதற்காகக் காத்து உட்கார்ந்து கொண்டிருந்தான் அவன். காலியான வாழை இலையைப் பார்த்துக் கொண்டே அடுத்தடுத்துப் பல எண்ணங்களைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தது அவன் மனம். தாயாருக்குப் பதில் கூறவும் தோன்றவில்லை அவனுக்கு.