21. பிரமநாயகம் பணிகிறார்

     பிரமநாயகம் சிரித்துக் கொண்டே அறைக்குள் வந்தார். அழகியநம்பிக்கு ஏற்பட்ட வியப்புக்கு ஒரு அளவே இல்லை. 'விக்கிரமாதித்தன் சிம்மாசனம் மாதிரி இந்த அறையில் ஆட்களின் சுபாவத்தை மாற்றும் மந்திர சக்தி ஏதாவது இருக்கிறதா? அலுவலக அறையில் பூர்ணாவிற்கு முன்னால் என்னைக் கண்டபடி பேசி அதட்டி முழித்துப் பார்த்தவர் இப்போது மலர்ந்த முகத்தோடு சிரித்துக் கொண்டே வருகிறாரே" - என்று திகைத்தான் அழகியநம்பி. அவன் இப்படித் திகைத்துக் கொண்டிருந்தபோது இன்னொரு ஆச்சரியமும் நடந்தது. "சோமு! இரண்டு கப் தேநீர் கொண்டுவா அப்பா" - என்று அறை வாசற்படியில் நின்று கொண்டே சமையற்காரச் சோமுவுக்குக் குரல் கொடுத்துவிட்டு நுழைந்தவர் செல்லமாகக் குழந்தையைக் கொஞ்சுகிறவர் போல அழகியநம்பியின் அருகே வந்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.

     "பயந்து விட்டாயா தம்பீ! உண்மையில் நடந்ததெல்லாம் எனக்கு தெரியும். சும்மா அவளுக்காக எல்லாம் நம்பினது போல் நடித்தேன். உன்னைக் கண்டித்து, அதட்டினது - எல்லாம் கூட நடிப்புத்தான். நீ அதைப் புரிந்து கொள்ளாமல் அவளுக்கு முன்னால் என்னையே எதிர்த்துப் பேசத் தொடங்கிவிட்டாய்."

     "ஒருவரை - ஒருவிதமாகப் புரிந்து கொள்ளத்தான் எனக்குத் தெரியும்; நாலுவிதமாகப் புரிந்து கொள்ளத் தெரியாது. இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும்." - அழகியநம்பி பிரமநாயகத்தின் கையைத் தன் தோள் பட்டையிலிருந்து ஒதுக்கித் தள்ளினான். அந்தச் சமயத்தில் சோமு தேநீர் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான்.

     "அடேயப்பா! தம்பிக்கு என் மேல் எவ்வளவு கோபம்? சூடாகத் தேநீர் குடித்த பின்பாவது தணிகிறதா; இல்லையா? பார்ப்போம்!" - சோமுவின் கையிலிருந்து தேநீரை வாங்கி அவனிடம் நீட்டினார் பிரமநாயகம்.

     "நீங்கள் குடியுங்கள். மீதமிருந்தால் பூர்ணாவுக்குக் கொடுத்தனுப்புங்கள். எனக்குத் தேவை இல்லை." - அழகியநம்பி முகத்தைத் திருப்பி எங்கோ பார்த்துக் கொண்டு அவர் கொடுத்த தேநீரை மறுத்தான். "அநாவசியமாகக் கோபப்படாதே தம்பீ! என் நிலையை விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டால் நீ என்மேல் கோபப்பட மாட்டாய். மறுக்காதே. தேநீரை வாங்கிக் கொள்." - அவர் கெஞ்சினார், குழைந்தார். வாங்கிக் கொள்ளாவிட்டால் மனிதர் அழுது விடுவார் போலிருந்தது.

     அவர் நிலை பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஆத்திரமடைந்து முறுக்கிப் போயிருந்த அழகியநம்பியின் மனம் பிரமநாயகத்தின் முகத்தைப் பார்த்தபோது நெகிழ்ந்தது.

     தேநீரைக் கையில் வாங்கிக் கொண்டான். சிறிது நேரம் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். பின்பு தேநீரைப் பருகினான்.

     அவன் உடலும், உள்ளமும், புதிய சுறுசுறுப்பை அடைந்திருந்தன. பிரமநாயகம் நாற்காலியில் உட்கார்ந்தார். அவனையும் எதிரே இருந்த மற்றோர் நாற்காலியில் உட்காரச் செய்தார். ஏதோ விரிவாகச் சொல்லப்போகிறாரென்று அவருடைய முகக் குறிப்பிலிருந்து தெரிந்தது.

     அவர் வாயைத் திறந்து சொல்லத் தொடங்குவதற்கு முன் அழகியநம்பி முந்திக் கொண்டான். தன் மனத்திலிருந்ததைத் தெளிவாக அவரிடம் சொல்லத் தொடங்கிவிட்டான். "இதோ பாருங்கள்! நான் ஏழையாயிருக்கலாம். என் குடும்பத்தில் தாயும், தங்கையும், சோறு துணியின்றி ஊரில் திண்டாடலாம். நான் கடன்பட்டிருப்பவர்கள் என்னைக் காறித்துப்பலாம். அதையெல்லாம் நான் சகித்துக் கொள்வேன். உங்களோடு பிழைப்பைத் தேடித்தான் இங்கே வந்தேனே ஒழிய உங்களுக்கு அடிமையாகி விடுவதற்கு நான் வரவில்லை. இன்றைக்கு கால் காசுக்கு வக்கில்லாத குடும்பமாக இருக்கலாம். ஆனால், மானம் மரியாதையுள்ள - நியாயத்துக்குப் பயப்படுகிற குடும்பத்தில் பிறந்தவன் நான். பிறந்த மண்ணைத்தான் கடந்து உங்களோடு வந்திருக்கிறேன்; பிறவிக் குணங்களையும் கடலுக்கு அப்பால் கழற்றி வைத்துவிட்டு வரவில்லை. நினைவு வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்காக நீங்கள் யார் யாருக்கோ பயப்பட வேண்டியிருக்கலாம்; எப்படியெப்படியோ நடிக்க வேண்டியிருக்கலாம்! அதற்கெல்லாம் என்னைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். நான் இருதலைக் கொள்ளி எறும்பாகத் திண்டாடுகிற நிலையை ஏற்படுத்தாதீர்கள். நான் உங்களிடம் திட்டுக் கேட்கத் தயார். உங்களுக்குக் கீழ்ப்படியத் தயார். நீங்கள் எனக்குச் சம்பளம் கொடுக்கிறவர்; தூரத்து உறவினர்; எனக்கு நம்பிக்கையூட்டி என்னை இங்கே அழைத்துக் கொண்டு வந்தவர். ஆனால், யார் யாரிடமோ நான் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது."

     "எதிர்பார்த்தால் நான் அடுத்த கப்பலில் ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்!"

     பிரமநாயகம் மூக்கில் விரலை வைத்தார். கண்கள் வியப்பால் விரிந்தன. அவன் பேசியவிதம், தீர்க்கமான குரல், உறுதி, எல்லாம் சேர்ந்து அவர் அவனுக்கு உபதேசம் செய்ய வேண்டுமென்று நினைத்து வைத்திருந்தவற்றை முற்றிலும் மறக்கச் செய்து விட்டன. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அயர்ந்து போய்க் கல்லாய்ச் சிலையாய் மலைத்த நிலையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் அவர்.

     "தம்பீ! வந்து ஒரு வாரமாகவில்லை. அதற்குள் நீ ஏன் இப்படி வேறுபடுத்திப் பேசுகிறாய்? உனக்கு நான் என்ன கெடுதல் செய்து விட்டேன்? உன்னைப் போல ஒரு நல்ல பிள்ளை வேண்டுமென்பதற்காகத் தானே பிரியப்பட்டுக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்? இன்றைக்கு என்னிடம் நீ இப்படிப் பேசுவதைக் கேட்டால் யாரோ உன்னிடம் என்னைப் பற்றித் தவறாக ஏதோ சொல்லி உன் மனத்தைக் கலைத்திருக்கிறார்களோ - என்று சந்தேகப்படுகிறேன்." பிரமநாயகம் ஒவ்வொரு வார்த்தையாக இழுத்து நிறுத்திப் பேசினார்.

     "நான் பச்சைக் குழந்தை இல்லை; இன்னொருவர் சொல்லிக் கலைப்பதற்கு. 'நான் என்ன கெடுதல் செய்தேன்?' - என்று என்னைப் பார்த்துக் கேட்கிறீர்களே! இன்றைக்கு நடந்த நிகழ்ச்சி போதாதா? இன்னும் வேறென்ன வேண்டும்? இதைவிடப் பெரிதாக நடந்தாலும் நான் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டுமென்பது உங்கள் எண்ணம் போலிருக்கிறது."

     அழகியநம்பியின் ஒவ்வொரு கேள்வியும், ஒவ்வொரு சொல்லும், - பிரமநாயகத்தின் மனத்தில் கூர்மையாகப் பாய்ந்தன. ஊரில் புறப்பட்ட நேரத்திலிருந்து வாயில்லாப் பூச்சி போல் தன்னிடம் அதிகம் பேசாமல் உம்மணா மூஞ்சியாக இருந்த பையன் இப்படி நிறுத்து அளந்து 'பாயிண்டு' பாயிண்டாகப் பேசுகிறானே என்று திகைத்தார் அவர்.

     "பொறுத்துக்கொள் தம்பீ! அவள் இப்படிச் செய்வது இது முதல் தரமில்லை. கூடிய விரைவில் அவளுடைய கொட்டத்தை அடக்கி விடுகிறேன். நீ புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு அதற்கு உதவி செய்வாய் என்று எதிர்பார்த்தேன். நேற்றுக் காலையில் உன்னைத் தனியே கூப்பிட்டு எச்சரித்தது கூட உன் நன்மைக்காகத்தான்."

     "என் நன்மையைக் கருதுகிறவராக இருந்தால் நீங்கள் அவளுக்கு முன்னால் அந்தப் பியூனையும் வைத்துக் கொண்டு திருட்டுப் பட்டம் கட்டியிருக்க மாட்டீர்களே?"

     "தம்பீ! நீ மறுபடியும் அதையே சொல்கிறாயே. நான் உன்னிடம் இரகசியத்தை உடைத்துச் சொன்னாலொழிய என்னை நீ சும்மா விடமாட்டாய் போலிருக்கிறது. அந்தப் பாவிப் பெண்ணை இப்போதுள்ள நிலையில் நான் வெளிப்படையாகப் பகைத்துக் கொண்டால் இந்தக் கடை, இந்த வியாபாரம், 'இந்தப் பிரமநாயகத்தின்' அந்தஸ்து எல்லாமே கவிழ்ந்து விடும்."

     "எவ்வளவு நாள் தான் இப்படிப் பயந்து கொண்டிருக்க முடியும்? நீங்கள் பயப்பட வேண்டியது தான். ஆனால் நான் இப்படிச் சீரழிய முடியாது."

     "அதிகநாள் தேவை இல்லை! அதுதான் சொன்னேனே; சீக்கிரமாக இந்த விஷயத்திற்குச் சரியான ஒரு முடிவு கட்டி விடுகிறேன் என்று."

     "என்னமோ போங்கள், எனக்கு உங்களுடன் இங்கே புறப்பட்டு வரும்போது இருந்த நிம்மதி வந்த பின்பு இல்லை. சரியாக இராத் தூக்கம் கூடக் கிடையாது. இப்போது இரண்டொரு நாட்களாக எந்த விநாடியில் என் உயிருக்கு ஆபத்து வருமோ என்று கூடப் பயம் உண்டாகியிருக்கிறது."

     "அசட்டுப்பிள்ளை! அந்தப் பயம் மட்டும் உனக்கு வேண்டவே வேண்டாம். எதற்கும் பயப்படாதே. தைரியமாக இரு. வீண் பயமுறுத்தல்களுக்கு மனத்தில் இடங்கொடுத்து உன்னை நீயே அதைரியப்படுத்திக் கொள்ளாதே."

     "நீங்கள் சொல்கிறீர்கள்! என் மனம் கேட்க மாட்டேனென்கிறதே? 'காசைத் தேடிக் கொண்டு கடல் கடந்து வந்த இடத்தில் உயிரையும் கொடுத்துவிட்டுப் போய்விட நேருமோ?' - என்று சூழ்நிலை ஏற்பட்டால் பயமாகத் தானே இருக்கிறது."

     "நீ வேண்டுமானால் நாளை முதல் ஆபீஸ் அறைக்குள் அவளோடு உட்கார்ந்திருக்க வேண்டாம். தனியாக வேறிடத்திலிருந்து கண்காணிக்க வேண்டியதை மட்டும் கண்காணித்துக் கொண்டால் போதுமே."

     "நாளை முதல் ஒரு வாரத்திற்கு நான் இந்த நகர எல்லைக்குள்ளேயே இருக்கப் போவதில்லை."

     "ஏன்? எங்கே போகப் போகிறாய்?" - பிரமநாயகம் அவன் கூறியதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போய் வினவினார்.

     "இந்த நாட்டிலுள்ள அழகிய மலைப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன். எனக்கு மன நிம்மதி தேவை. ஓய்வு தேவை. துன்பங்களிலும், சூழ்ச்சிகளிலும், சதிகளிலும், இருந்து தற்காலிகமாக விடுதலை தேவை. இந்தக் கடைக்குள்ளேயே சேர்ந்தாற்போல இன்னும் இரண்டு மூன்று நாட்கள் அடைந்து கிடந்தேனானால் எனக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும்."

     பிரமநாயகத்துக்கு அவனைத் தடுக்கவோ, மறுத்துச் சொல்லவோ தெம்பில்லை.

     "அதற்கென்ன? போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வாயேன். உன்னை யார் வேண்டாமென்று தடுக்கிறார்கள்? நீ இந்தப் பக்கங்களுக்குப் புதியவனாயிற்றே! தனியாகப் போகப் போகிறாயே? யாராவது கூட வருகிறார்களோ?" - என்று அவனிடம் கேட்டார் அவர்.

     "விவரம் தெரிந்தவர்களோடுதான் போகிறேன்."

     "யார்? இந்த யாழ்ப்பாணத்துப் பிள்ளையாண்டான் கூட வருகிறானோ."

     "இல்லை! வேறு தெரிந்த மனிதர்களோடு போகிறேன்."

     அதற்கு மேல் 'யார்? என்ன? எதற்காக?' - என்று தூண்டித் துருவிக் கேட்பதற்குத் தயங்கினார் அவர். 'பையன் கண்டபடி இரைந்து பேசிவிடுவானோ?' - என்ற பயமும் உள்ளூற இருந்தது. ஆகவே பேசாமல் இருந்துவிட்டார்.

     "கைச் செலவுக்குப் பணம் ஏதாவது வேண்டுமா?"

     அழகியநம்பிக்குத் தன் செவிகளை நம்பவே முடியவில்லை. பிரமநாயகத்தின் வாயிலிருந்தா இந்தச் சொற்கள் வருகின்றன? தூத்துக்குடித் துறைமுகத்தில் உடன் வந்தவனை வயிறெரிய விட்டுச் சொல்லாமல் காப்பி சாப்பிடச் சென்றவர்; சாமான் தூக்கி வந்த கூலிகளுக்குச் சுமைக்கூலி கொடுப்பதில் கருமித்தனத்தைக் காட்டியவர்; - அவரா இப்போது இப்படித் தாராளமாகக் கேட்கிறார்? - அழகியநம்பி பதில் சொல்லாமல் அவர் முகத்தைப் பார்த்தான். உண்மையாகத் தான் சொல்கிறாரா; என்று அவருடைய முகத்திலிருந்து அனுமானிக்க முயன்றான்.

     "என்ன தம்பீ; அப்படிப் பார்க்கிறாய் என்னை? உனக்கு எவ்வளவு வேண்டுமோ கூசாமல் கேளேன்."

     "இல்லை! எனக்குப் பணம் எதுவும் தேவையில்லை." - அவனுடைய பதில் உறுதியாக வெளிவந்தது. அப்போதுள்ள சூழ்நிலையில் பிரமநாயகத்திடம் பணம் வாங்குவது அவரோடு தன்னை மேலும் இறுக்கிப் பிணித்துக் கொள்வதற்குக் காரணமாகும் என்று அவன் மனதில் பட்டது. 'எதுவாயிருந்தாலும் அப்போது அவரிடம் கைநீட்டி வாங்குவது முறையில்லை' - என்று அவன் உள் மனத்திலிருந்து கண்டிப்பான - கட்டாயமான ஒரு கட்டளை பிறந்தது. அவன் வேண்டாமென்று சொல்லிய பின் அவரும் அதிகமாக வற்புறுத்திக் கொண்டிருக்காமல் அந்தப் பேச்சையே விட்டுவிட்டார்.

     "எப்போது புறப்படப் போகிறாய்? எப்போது திரும்புவாய்?"

     "இன்று மாலை அவர்கள் வீட்டுக்குப் போய் அவர்களோடு இருந்துவிட்டு நாளைக் காலையில் அங்கிருந்தே புறப்படுகிறேன். சுற்றிப் பார்த்து முடிந்ததும் திரும்புவேன்."

     "போய்விட்டுப் பத்திரமாகத் திரும்பி வந்து சேர்! அதற்குள் இங்கே உனக்கிருக்கும் தொல்லைகளைக் குறைத்து நீ நிம்மதியாக வேலை செய்வதற்கேற்ற சில வசதிகளை நான் செய்து வைக்கிறேன்."

     "என்ன செய்வீர்களோ? செய்யமாட்டீர்களோ? உங்களிடம் நான் வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான்! நான் இங்கே வேலை பார்ப்பதற்காக நீங்கள் வசதிகளைச் செய்து கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. தொல்லைகளைப் பெருக்காதீர்கள். சூழ்ச்சிகளுக்கும், சோதனைகளுக்கும், என்னை ஆளாக்காதீர்கள். அதைத்தான் நான் விரும்புகிறேன்."

     - அவர் பதில் சொல்லவில்லை. அழகியநம்பி புறப்படுவதற்குத் தயாரானான். பிரயாணத்துக்கு வேண்டிய துணிமணிகளையும் மற்றவற்றையும் சூட்கேஸில் எடுத்து வைத்துக் கொண்டான்.

     "சாப்பிட்டுவிட்டுப் போகலாம் தம்பீ! மாலையில் தானே அவர்கள் வீட்டில் இருக்க வேண்டுமென்று கூறினாய்? இப்போது இரண்டு மணி தானே ஆகிறது! நானும் இதுவரை சாப்பிடவில்லை. வா! இரண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடுவோம்."

     அழகியநம்பிக்கு அப்போது அவர் நடந்து கொள்கிற விதம் புதுமையாக - விந்தையாக - இருந்தது. திடீரென்று அவர் ஏன் அப்படி அன்பே உருவான மனிதராக மாறி நெகிழ்ந்து தணிந்து பேசுகிறாரென்று வியந்தான் அவன். 'சூதுவாதில்லாத ஒரு நல்லவனுக்கு அறிந்தோ, அறியாமலோ - துன்பம் செய்து விட்டவர்கள் - தாங்கள் செய்த துன்பத்தை அவனே எடுத்து உணர்த்தும் போது மனத்திலுள்ள சகலவிதமான ஆணவங்களும் அழிந்து நிற்கிறார்கள்' - என்று மனவியல் நூலில் எப்போதோ கல்லூரி நாட்களில் படித்திருந்த ஒரு சிறு உண்மை அழகியநம்பிக்கு நினைவு வந்தது.

     பிரமநாயகம் அந்த நிலையை அடைந்து விட்டாரா? அவரைப் பார்க்கும் போது உண்மையில் அவனுக்கு அப்போது மிகவும் பரிதாபமாக இருந்தது. எதையோ நினைத்து நினைத்து ஏங்குவது போலிருந்தது அவருடைய முகச்சாயை.

     அழகியநம்பியின் மனத்தில் அப்போது தோன்றியது இது: 'அடடா, பணத்தை இலட்சக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பவன் உல்லாசத்தில் மிதப்பதாக நானும் என்னைப் போன்ற பஞ்சைகளும் சில சமயங்களில் எண்ணுகிறோமே, இந்த பிரமநாயகம் இலட்சக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டும் நிம்மதியாக வாழ முடியவில்லையே. முப்பது வயதுக்குட்பட்ட ஒரு பெண்பிள்ளை இவரையும் இவருடைய வியாபாரத்தையும் இந்த ஆட்டு ஆட்டிவைக்கிறாளே!'

     அவன் அவருடைய விருப்பத்தை மறுக்கவில்லை. அவரோடு சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தான். இருவருக்கும் பக்கத்தில் பக்கத்தில் இலை போட்டிருந்தான் சோமு. வழக்கமாக ஒவ்வொரு நாளும் சமையல் ஆனவுடன் முதலிலேயே இலை போட்டு அவருக்குத் தனியாகச் சாப்பாடு போட வேண்டும். இன்று முதலாளியே சேர்த்து இலைபோட்டுப் பரிமாறச் சொல்லியது சோமுவுக்கே ஆச்சரியமாக இருந்தது.

     சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. பணச்செருக்குள்ளவர்களுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஒருவகைக் கம்பீரம், அலட்சிய சுபாவம், எடுத்தெறிந்து பேசுகிற தன்மை, இதெல்லாம் பிரமநாயகத்திடம் வழக்கத்திற்கு மாறாக அன்று இல்லாமலிருந்ததை அழகியநம்பி கூர்ந்து கவனித்தான்.

     எதை நினைத்தோ - எதற்காகவோ உள்ளுக்குள்ளேயே அவர் ஏங்கிக் குமைகிறார் என்று அவன் நினைத்தான். தான் பிரிவது அப்போது அவருக்கு ஏன் அவ்வளவு அதிக வருத்தத்தைத் தருகிறதென்பதும் அவனுக்குப் புரியாததாகவே இருந்தது.

     ஆறேழு தடவை - "பத்திரமாகப் போய்விட்டுத் திரும்பி வா." - என்று சொல்லிக் கொண்டே கடை வாயிற்படி வரை அவனைக் கொண்டு வந்து விட்டுப் போனார் பிரமநாயகம். சபாரத்தினம் அவனோடு கூடவே வெளியேறியிருந்தார். பிரமநாயகத்திடம் அவர் கொடுக்க வந்த பணத்தைத் தேவையில்லை என்று மறுத்துவிட்ட அழகியநம்பி, இப்போது சபாரத்தினத்திடம் வலுவில் கேட்டுச் செலவுக்குக் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டான்.

     பிரமநாயகத்துக்கும், தனக்கும் அறைக்குள் நடந்த நீண்ட உரையாடலையும் அவருடைய திடீர் மாறுதலையும் அழகியநம்பி சபாரத்தினத்திடம் தெரிவித்தான்.

     "நான் அப்போதே சொல்லவில்லையா?" - என்று சிரித்துக் கொண்டே கூறினார் சபாரத்தினம். இருவரும் பேசிக் கொண்டே பஸ் நிற்குமிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

     "முதலில் எங்கள் வீட்டிற்குப் போவோம். அங்கே சிற்றுண்டி காப்பி அருந்திவிட்டு - வெள்ளவத்தையில் அந்த வெள்ளைக்காரப் பெண்களின் வீட்டில் நானே உங்களைக் கொண்டுபோய் விடுவதற்கு உடன் வருகிறேன்." - என்றார் சபாரத்தினம்.

     "நான் மாலையில் அவர்கள் வீட்டிற்கு வந்துவிடுவதாக ஆள் மூலம் சொல்லி அனுப்பி விட்டேனே."

     "பரவாயில்லை! எங்கள் வீட்டிற்குப் போய்விட்டுப் பின்பு போவோம். நான் உங்களை அதிகநேரம் தாமதப்படுத்த மாட்டேன்."

     சபாரத்தினத்தின் அன்பான வேண்டுகோளை அவனால் மறுக்க முடியவில்லை. அவரோடு அவர் வீட்டிற்கு வர இணங்கினான் அவன். பம்பலப்பிட்டியா - பகுதியில் ஏதோ ஒரு சிறு சந்தில் குடியிருப்பதாகக் கூறினார் அவர்.