![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
20. சூழ்ச்சியின் வியூகம் சனிக்கிழமை காலை, மேரி - லில்லி - இருவரும் ஒரு ஆள் மூலம் அழகியநம்பிக்குச் செய்தி அனுப்பியிருந்தனர். "ஞாயிற்றுக்கிழமை காலை - விடிவதற்கு முன்பே ஐந்து மணி சுமாருக்கு நாம் பிரயாணத்தைத் தொடங்கவேண்டும். நீங்கள் க்டை வேலையை முடித்துக் கொண்டு இன்றிரவே இங்கு வந்துவிடுங்கள். இரவு உணவு இங்கேயே வைத்துக் கொள்ளலாம். படுத்துக் கொண்டிருந்து விட்டுக் காலையில் இங்கிருந்தே புறப்பட்டு விடலாம். கட்டாயம் வந்துவிடுங்கள்" - என்று வந்த ஆள் கடிதம் கொண்டு வந்திருந்தான். கீழே லில்லியின் கையெழுத்து இருந்தது. அவள் தான் எழுதியிருப்பாள் போலிருக்கிறது. வந்த ஆளிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவது? இரவிலேயே அவர்கள் வீட்டிற்குப் போய்த் தங்குவதென்பது முடியுமா? பிரமநாயகத்திடம் என்ன சொல்லி விடைபெற்றுக் கொள்வது? எப்படிச் சொல்லி விடைபெற்றுக் கொள்வது? சம்மதிப்பாரோ? மாட்டாரோ? பலவிதமாக எண்ணித் தயங்கினான் அவன். வந்த ஆள் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அழகியநம்பி கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து. இன்னும் கால்மணி நேரத்திற்குள் பூர்ணா வந்துவிடுவாள். 'அவள் வந்து விடுவதற்குள் அவனைப் பதில் சொல்லி அங்கிருந்து அனுப்பி விட வேண்டும். தயங்கித் தயங்கி யோசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை' - என்று ஒரு திடமான முடிவுக்கு வந்தான் அவன். "நான் எப்படியும் இன்றிரவு அங்கு வருகிறேன் என்று சொல்லிவிடுங்கள்" - என்று சுருக்கமாகப் பதில் சொல்லி அந்த ஆளை அனுப்பினான். அவன் வெளியே போய் இரண்டு மூன்று நிமிஷங்கள் கூட ஆகியிருக்காது. அலுவலக அறைக்குள் பூர்ணா கதவைத் திறந்து கொண்டு வேகமாக நுழைந்தாள். தன் இடத்தில் போய் உட்கார்ந்து சிறிது நேரம் மேஜை மேல் வைத்திருந்த கடிதங்களையும், பைல்களையும் புரட்டி எதையோ தேடுகிறவளைப் போலத் தேடினாள். பின்பு திடீரென்று அவன் பக்கமாகத் திரும்பி, "மிஸ்டர் அழகியநம்பி! உங்களைத்தானே? கொஞ்சம் இப்படி வாருங்கள்." - என்று அதிகாரத்தின் முழு அழுத்தமும் நிறைந்த குரலில் அவனைக் கூப்பிட்டாள். அழகியநம்பி எழுந்திருந்து அவள் மேஜைக்கு முன்னால் போய் நின்றான். "இந்த மேஜையின் மேல் இரண்டாயிரம் ரூபாய்க்கு 'செக் - ஒன்று வைத்திருந்தேனே? 'செக்'கையும் காணவில்லை, அதோடு டைப் செய்து வைத்திருந்த கடிதத்தையும் காணவில்லை." "அப்படி எதுவும் மேஜை மேல் நான் பார்க்கவில்லையே? நீங்கள் வேறெங்காவது கைத்தவறுதலாக வைத்திருப்பீர்கள். நன்றாகத் தேடிப் பாருங்கள்." அழகியநம்பி பவ்வியமாகத்தான் பதில் சொன்னான். பூர்ணாவின் குரலில் சூடு ஏறியது. சாதாரணமாகக் கூப்பிட்டுக் கேட்டவள், குத்தலாகப் பேச்சைத் தொடங்கினாள். "உங்களுக்குத் தெரியாமல் வேறு எங்கே போகமுடியும்? நீங்கள் தானே இப்போது இந்த ஆபீஸில் என்னை விடப் பெரிய அதிகாரி? என்னுடைய பைல்கள், கடிதப் போக்குவரவுகளை யெல்லாம் கூடத் தினந்தோறும் நீங்கள் தானே மேற்பார்வை செய்கிறீர்களாம்?" -அழகியநம்பி பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றான். "உங்களுக்கு யோசனைகள் சொல்லிக் கொடுப்பதற்கு - வழி காட்டுவதற்குப் புதிய நண்பர்களெல்லாம் ஏற்பட்டுருக்கிறார்கள். இனிமேல் பூர்ணாவையே இந்த ஆபீஸிலிருந்து வெளியேறச் செய்துவிடுவீர்கள் நீங்கள். அப்படித்தானே?" அதற்கு மேலும் தான் சும்மா நின்று கொண்டிருந்தால் 'அவள் சொல்லுகிற குற்றங்களை ஒப்புக் கொண்டது போலாகும்' - என்று அழகியநம்பி வாய் திறந்தான். "நீங்கள் ஏதேதோ வீண் பேச்சுப் பேசுகிறீர்கள்! என்னைக் கூப்பிட்ட காரியம் ஏதாவது உண்டானால் சொல்லுங்கள்." "மூடுங்கள் வாயை! நானா வீண் பேச்சுப் பேசுகிறேன்! இதோ 'செக்' புத்தகம் கையில் இருக்கிறது. இன்னொரு 'செக்' எழுதுவது எனக்குப் பெரிய காரியமில்லை. ஆனால், உங்களை நான் சும்மா விடமாட்டேன். இன்னும் பத்து நிமிஷத்தில் அந்தக் கடிதமும் செக்கும் என் கைக்கு வந்தாக வேண்டும்." அப்பப்பா! ஒரு இளம் பெண்ணின் குரலா அது? பிசாசு கத்துவது போல இருந்தது. உண்மையிலேயே அந்த அரட்டலில் பயந்துவிட்டான் அவன். "எனக்கு ஒன்றும் தெரியாது. 'செக்' எதுவும் உங்கள் மேஜையில் நான் பார்க்கவில்லை" - அழகியநம்பியின் பேச்சு அழமாட்டாக் குறையாக வெளிவந்தது. "நீங்கள் செய்திருப்பதெல்லாம் எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்லி ஒப்புக் கொள்ளாவிட்டால் நான் போலீசுக்குப் போன் செய்து விடுவேன்." வேண்டுமென்றே தன்னை மாட்டிவைப்பதற்கு அவள் ஏதோ சூழ்ச்சி செய்கிறாளென்று அவனுக்குத் தோன்றியது. அவளிடம் எப்படிப் பேசி வெற்றி காண்பதென்று தெரியாமல் திகைத்தான் அவன். மேஜை மேலிருந்த மணியை அழுத்தித் தட்டினாள் பூர்ணா. கடையில் வேலை பார்க்கும் பியூன் ஒருவன் உள்ளே வந்து அவள் முன்னால் வணங்கி நின்றான். "முதலாளி உள்ளே - பின் கட்டில் இருப்பார். நீ போய் அவரை நான் கூப்பிட்டேனென்று இங்கே கூப்பிட்டுக் கொண்டு வா." - அவள் வந்தவனுக்குக் கட்டளையிட்டாள். வந்தவன் அவள் சொன்னதைச் செய்வதற்காக வெளியே போனான். அழகியநம்பி இன்னும் நின்ற இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தான். 'நடக்கிறதெல்லாம் நடக்கட்டும். பிழைப்புத் தேடி வந்த இடத்தில் எத்தனை சூழ்ச்சிகளுக்கும் தொல்லைகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டுமோ? பொறுத்திருந்து பார்ப்போம். நமக்கு வெற்றி கிடைக்க வேண்டாம். நம்முடைய பொறுமைக்காவது வெற்றி கிடைக்கிறதா? இல்லையா; என்று பார்த்துவிடுவோம்' - இப்படி நினைத்து விரக்தியடைந்து போய் நின்றான் அவன். கதவைத் திறந்து கொண்டு பிரமநாயகமும் அவரைக் கூட்டி வரச் சென்ற பியூனும் உள்ளே நுழைந்தனர். அழகியநம்பியின் மனத்தில் சிறிது ஆறுதல் பிறந்தது. பிரமநாயகம் தன் கட்சியில் ஆதரவாகப் பேசுவாரென்று அவன் நம்பினான். "இந்த மாதிரி நாணயக்குறைவான ஆட்களையெல்லாம் வைத்து என்னால் வேலை வாங்க முடியாது. வேலைக்கு வந்து முழுமையாக ஒரு வாரம் கூட முடியவில்லை. அதற்குள் இரண்டாயிரம், மூவாயிரம், என்று கையாடல் செய்ய முயன்றால் கடையும், வியாபாரமும் உருப்பட்டாற் போலத்தான்" - அவள் பிரமநாயகத்தை நோக்கிக் கூப்பாடு போட்டாள். அதைக் கேட்டுக் கொண்டு நின்ற அழகியநம்பிக்குப் பகீரென்றது. உதடுகள் துடிக்க, கண்கள் சிவக்க, நிமிர்ந்து பூர்ணாவை நெருப்பெழப் பார்த்தான். பிரமநாயகம் அவளுக்கு முன்னால் பெட்டிப் பாம்பாக நின்றார். "என்ன நடந்தது?" - அவளைப் பார்த்துக் கேட்டார் அவர். "இரண்டாயிரம் ரூபாய்க்குச் செக் எழுதி அதை மாற்றிக் கொண்டு வருவதற்காக இந்தப் பியூன் பெயருக்கு 'எண்டார்ஸ்' செய்து வைத்திருந்தேன். அதை எனக்குத் தெரியாமல் நேற்று சாயங்காலமே இவர் எடுத்து இந்தப் பியூனிடம் கொடுத்திருக்கிறார். 'யாருக்கும் தெரிய வேண்டாம். நீ நாளைக்காலையில் செக்கை மாற்றிக் கொண்டு வா. பணத்தை என்னிடம் கொடுத்துவிடு. உனக்கு இருநூறு ரூபாய் தருகிறேன்.' - என்று சொல்லி இவனை ஏமாற்றிப் பணத்தை மாற்றி வரச் செய்து ஊருக்குக் கப்பலேறி விடலாமென்று திட்டம் போட்டிருக்கிறார், நீங்கள் கூப்பிட்டுக் கொண்டு வந்த இந்த அருமையான மனிதர். நல்ல வேளை, 'பியூன்' இன்று காலையில் என்னிடம் வந்து உண்மையைச் சொல்லிவிட்டான். இல்லாவிட்டால் பணத்தைச் சுருட்டிக் கொண்டு இன்று மாலை கப்பலேறி இருப்பார்." பூர்ணா மிகத் தெளிவாக - சர்வசாதாரணமாக நடந்த விஷயத்தைச் சொல்லுகிறவளைப் போல அந்த முழுப் பெரும் அபாண்டப் பழியை அழகியநம்பியின் தலையில் சுமத்தினாள். பொறி கலங்கிப் போகும்படியாக உச்சி மண்டையில் யாரோ ஓங்கி அடித்த மாதிரி இருந்தது அழகியநம்பிக்கு. "உங்களுக்கு இவ்வளவு சூழ்ச்சிதான் செய்யத் தெரியுமா? இதற்கு மேலும் தெரியுமா?" - இரண்டு கைகளையும் சாபம் கொடுக்கிறவனைப் போல நீட்டிக் கொண்டே கண்களில் நெருப்புப் பொறி பறக்க அவளை நோக்கிக் கூச்சலிட்டான் அவன். "சும்மா இரு தம்பி! கத்தாதே" - பிரமநாயகம் அவனைக் கையமர்த்தித் தடுத்தார். "என்னப்பா? இவர் உன்னிடம் அப்படிச் சொல்லிச் செக்கைக் கொடுத்தது வாஸ்தவம் தானா?" - ஆண்மையில்லாத குரலில் அவளுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே பியூனைக் கேட்டார் அவர். "மெய்தான் முதலாளி! இதோ அந்தச் 'செக்' கூட என்னிடம் இருக்கிறது." - என்று சட்டைப் பைக்குள் கையை விட்டு எடுத்து அவரிடம் நீட்டினான் பியூன். அவர் அதை வாங்கிப் பார்த்தார். "ஏன் அப்பா? உனக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? இப்படி முழுப் பொய்யை உண்மை போல் சொல்கிறாயே?" - என்று அழகியநம்பி பரிதாபகரமான குரலில் அவனிடம் முறையிடுவது போலக் கேட்டான். "செய்வதையும் செய்துவிட்டு ஏன் ஐயா நடிக்கிறாய்?" - அந்தப் பியூன் எதிர்த்துக் கேட்டான். அதைக் கேட்டதும் அழகியநம்பிக்கு அடக்க முடியாத ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. "அயோக்கியப் பயலே! யாரைப் பார்த்தடா இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்? நடிப்பது நீயா? நானா?" - என்று இரைந்து கூப்பாடு போட்டுக் கொண்டே கீழே கிடந்த நாற்காலியை இரண்டு கைகளாலும் தூக்கித் தலைக்கு மேல் சுழற்றி ஓங்கி அவனை அடிக்கப் போனான் அழகியநம்பி. ஒரு கணம் பசி கொண்ட புலியாக - சினம் மிக்க புலியாக மாறிவிட்டான் அவன். பிரமநாயகம் மட்டும் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்கவில்லையானால் அந்தப் பியூனுக்குக் கையாவது, காலாவது முறிந்து போயிருக்கும். "சீ! சீ! இதென்ன கோபம் தம்பி, உனக்கு? நான் தான் நிதானமாக விசாரித்துக் கொண்டிருக்கிறேனே. அதற்குள் ஏன் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறாய்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேறா வேண்டும்? இதோ 'செக்கையே' எடுத்துக் காண்பித்துவிட்டானே அவன்? நீ என்ன சொல்ல இருக்கிறது இனிமேல்?" திடீரென்று அவன் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாகப் பிரமநாயகமே அவனை மடக்கிக் கொண்டு இரையத் தொடங்கினார். அந்த இளம் பருவத்து உள்ளம் பொறுமையின் எல்லையை மீறிக் குமுறியது. 'பூர்ணாவும், பியூனும் தாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அனுசரணையாக ஒத்துழைத்து அவனுக்கெதிராகச் சூழ்ச்சி செய்கிறார்கள்! பிரமநாயகம் கூடவா அதை நம்புகிறார்?' - அழகியநம்பி திகைத்தான். அவரே தன்னைச் சந்தேகித்துக் கேட்டதும் அவனுக்கு மறுபடியும் ஆத்திரம் பொங்கியது. "இவர்கள் பேசி வைத்துக் கொண்டு முன்னேற்பாட்டோடு செய்த இந்த சூழ்ச்சியை நீங்கள் கூடவா நம்புகிறீர்கள்? நேற்று இந்த மேஜையில் இப்படி ஒரு செக்கை நான் பார்க்கவுமில்லை; எடுக்கவுமில்லை. வேண்டுமென்றே இப்படி ஒரு செக்கை எழுதி இவனிடம் கொடுத்து இப்படிச் சொல்லச் செய்வதற்கு எவ்வளவு நாழியாகும்?" - அழகியநம்பி அவரிடம் தன் கட்சியை எடுத்துக் கூறினான். "சீ! அதிகப்பிரசங்கி! எதிர்த்துப் பேசாதே." - பூர்ணாவிடம் இரைந்து ஒரு வார்த்தை சொல்வதற்குப் பயப்பட்ட பிரமநாயகம் அவனிடம் பேசும்போது மட்டும் அதிகாரம், ஆணவம், மிரட்டல், அரட்டல் எல்லாவற்றையும் காட்டினார். இளம் இரத்தம் கொதித்தது. அவருக்கு சுடச் சுடப் பதில் சொல்ல வேண்டுமென்று துடித்தது நாக்கு. "உங்களை நம்பி கடலைக் கடந்து இவ்வளவு தூரம் வந்துவிட்டேன் பாருங்கள் அதற்காக நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்." - வெடுக்கென்று வாயில் வந்த சொற்களைக் கூசாமல் சொல்லிவிட்டான். அதைக் கேட்டுவிட்டுப் பிரமநாயகம் கோபத்தோடு அவனை எரித்துவிடுவது போலப் பார்த்தார். "நீ உள்ளே போய் இரு! நான் அப்புறம் வந்து உன்னிடம் பேசிக் கொள்கிறேன்." அழகியநம்பி ஒன்றும் சொல்லவுமில்லை; நின்ற இடத்தை விட்டு நகரவுமில்லை. பேசாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். "உன்னைத்தான் சொல்கிறேன். உள்ளே போய் இரு." "வெளியே போகத் துணிந்துவிட்டவனை உள்ளே இருக்கச் சொல்கிறீர்கள். மண்குதிரைகளை நம்பி இனி மேலும் நான் ஆற்றில் இறங்கத் தயாரில்லை." "அசட்டுத் தனமாக உளறாதே. போ... சொல்வதைக் கேள். நீ உள்ளே உன்னுடைய அறையிலே போய் இரு." - நயத்திலும் பயத்திலுமாக அவனை மிரட்டினார் அவர். அழகியநம்பி ஸ்பிரிங் கதவைப் படீரென்று இழுத்து விட்டுக் கொண்டு வெளியேறினான். சபாரத்தினம் எங்கிருக்கிறாரென்று தேடித் துழாவின அவன் கண்கள். என்ன ஆச்சரியம்? சபாரத்தினம் அறை வாசலிலே அவனை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பவர் போல் நின்றார். அந்தச் சமயத்திலும் அவருடைய முகத்தில் நகையைக் கண்டான். "இனி ஒரு நிமிஷம் கூட என்னால் இந்தச் சதிகாரர்களிடம் வேலை பார்க்க முடியாது; என்னோடு அறைக்கு வாருங்கள். எல்லா விவரமும் சொல்லுகின்றேன்." என்று சபாரத்தினத்தின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு பின் கட்டுக்குச் சென்றான் அழகியநம்பி. "சபாரத்தினம்! உங்கள் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும். பிரமநாயகம் முதுகெலும்பில்லாதவர் என்பதை இன்று நிரூபித்துக் காட்டிவிட்டார். அந்தச் சூழ்ச்சிக்காரி பூர்ணா என்னைக் குற்றவாளியாக்குவதற்காகப் பியூனைக் கைக்குள் போட்டுக் கொண்டு ஏதோ பொய் நாடகம் நடித்துக் காட்டினால் அதை இந்த மனிதர் உண்மையென்று நம்பி அவள் முன்னாலேயே என்னைக் கண்டிக்கிறாரே." - ஆத்திரத்தில் மடமடவென்று மூச்சுவிடாமல் பேசிக் கொண்டே போனான் அவன். "அழகியநம்பி! நீங்கள் உணர்ச்சியின் உலகத்தில் மட்டும் உலவுகிறீர்கள். உண்மை உலகத்தை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பிரமநாயகம் காரியவாதி. ஆடிக் கறக்கிற மாட்டினிடம் ஆடிக் கறக்கவும், பாடிக் கறக்கிற மாட்டினிடம் பாடிக் கறக்கவும், அடித்துக் கறக்கிற மாட்டினிடம் அடித்துக் கறக்கவும் - வகையாகத் தெரிந்தவர்." "அதனால் தான் மனிதனையே மாடாக மதித்துப் பேசுகிறார் போலிருக்கிறது." "என்ன நடந்தது? ஆத்திரப்படாமல் சொல்லுங்கள்." காலையில் பூர்ணா ஆபீஸிற்கு வந்தது முதல் நடந்த விவரங்களை அழகியநம்பி சபாரத்தினத்திற்குக் கூறினான். கூறிவிட்டுச் சபாரத்தினத்தின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். "சூழ்ச்சி, வஞ்சகம், சிலவற்றைத் தெரிந்து கொண்டும், தெரியாததைப் போல நடித்தல்; இன்னும் சிலவற்றைத் தெரிந்து கொள்ளாமலே தெரிந்து கொண்டது போல நடித்தல், - இதெல்லாம் பழகிப் பழகி மரத்துப் போனவர்கள் தாம் வியாபாரத் துறையில் வெற்றி பெற முடியும்." "நான் வியாபாரி இல்லையே! வெற்றியையும், தோல்வியையும் தேடிக் கொண்டிருப்பதற்குச் சொந்த வியாபாரமா பாழ் போகிறது?" - அழகியநம்பி குறுக்கிட்டான். "வியாபாரிகளுக்கு மட்டுந்தானா! வியாபாரிகளை அண்டுகிறவர்களுக்கும் அவையெல்லாம் இருக்கத்தான் வேண்டும். இன்றைய நிலையில் பூர்ணாவும், பிரமநாயகமும், அந்தரங்கத்தில், எலியும், பூனையும் போல வாழ்கிறார்கள். ஆனால், வெளியே எப்படி விட்டுக் கொடுக்காமல் பழகுகிறார்கள் பார்த்தீர்களா? பூர்ணாவை ஒரு வார்த்தை பிரமநாயகம் எதிர்த்துப் பேசினால் நாளைக்கே இத்தனை ஆண்டுகளாக வருமான வரி, விற்பனை வரி - துறைகளில் ஏமாற்றியுள்ள அத்தனை பொய்க் கணக்குகளையும் அவள் அம்பலமாக்கி விடுவாள். நீங்கள் செக்கைத் திருடிவிட்டதாக அவளும், பியூனும், கூட்டுச் சேர்ந்து பொய் நாடகம் நடிக்கிறார்கள் என்பது பிரமநாயகத்திற்கு நன்றாகத் தெரியும். அதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு அவர் முட்டாளல்ல. அவருக்கு இருக்கும் அறிவைக்கொண்டு இந்த இலங்கையைப் போல ஒன்பது இலங்கையை ஆளலாம்." "அதனால் தான் அந்தப் பெண்பிள்ளைக்கு முன்னால் இரைந்து பேசுவதற்கே பயப்படுகிறாரோ?" "அல்ல. அது வியாபாரத் தந்திரம். சந்தர்ப்பம் வாய்த்தால் அவளை அவரோ, அவரை அவளோ, குத்திக் கொலை செய்யக் கூடத் தயங்க மாட்டார்கள். அப்படி நடந்தால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆனால், அந்தச் சந்தர்ப்பம் வருகிறவரை அவர்கள் இருவரும் பழகுகிற விதத்தை யாரும் வித்தியாசமாகப் புரிந்து கொள்ள முடியாது." சில நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். "பிரமநாயகம் வருகிற நேரமாயிற்று. அவர் வரும்போது நான் இங்கே உங்களோடு இருந்தால் வித்தியாசமாக நினைக்க நேரிடும். நான் கடைக்குள் போகிறேன். ஆத்திரப்படாமல் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்." - என்று எச்சரித்து விட்டுச் சென்றார் சபாரத்தினம். |