![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
13. பூர்ணாவின் அதிகாரம் மறுநாள் காலை முதல் அழகியநம்பியின் உத்தியோக வாழ்க்கை அந்தக் கடைக்குள் ஆரம்பமாகியது. பிரமநாயகம் பஞ்சாங்கத்தைப் புரட்டி நல்ல வேளை பார்த்து அவனை அழைத்துக் கொண்டு போய்ப் பூர்ணாவின் அறைக்குள் உட்கார்த்தினார். அவனுக்கென்று தனி மேஜை, தனி நாற்காலி, எல்லாம் அங்கே தயாராகப் போட்டு வைக்கப்பட்டிருந்தன. அன்று வரை அந்தப் பெண்ணின் தனியுரிமையாக இருந்த அந்த அறையில் உரிமையின் முதல் தடையாக அழகியநம்பி நுழைந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். வழக்கமாகப் பத்து மணிக்குள் கடைக்குள் வந்துவிடும் பூர்ணா அன்று மணி பத்தேகால் ஆகியும் வரவில்லை. புதிதாகக் கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டிருந்த அழகியநம்பி தனியாகக் கணக்கு வழக்குகளைப் புரட்டிக் கொண்டிருந்தான். அந்த இடத்தில் இருப்புக் கொள்ளாது போலிருந்தது அவனுக்கு. ஒவ்வொரு விநாடியும் அவள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அவன். வெளியே ஒரு சிறிய ஓசை கேட்டாலும் அவள் தான் வந்துவிட்டாளோ, என்று கணக்குப் புத்தகங்களை மூடி வைத்து விட்டு நிமிர்ந்து சரியாக உட்கார்ந்து கொள்வான். படிப்பு, சிந்தனையுணர்ச்சி, தைரியம், நேர்மைக்கு மாறான எந்தச் செயல்களுக்கும் அஞ்சாமை - இவ்வளவு பண்புகளும் அழகியநம்பி என்ற அந்த இளைஞனிடத்தில் அமைந்திருந்தன. ஆனால், இப்போது அவன் ஒரு இளம் பெண் தன் அறைக்குள் நுழைந்து வரப்போகிற நேரத்தை எதிர்பார்த்து நடுங்கிக் கூசி உட்கார்ந்திருந்தான். 'அப்படித்தான் அந்தப் 'பூர்ணா' என்ன புலியா? சிங்கமா? அவளுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும்? அவள் என்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள்?' - அவன் தானாகவே தன்னை தைரியப்படுத்திக் கொள்வதற்கு முயன்றான். அறைக்குள் எல்லாப் பவிஷுகளும் இருந்தன. ஒன்றுக்கும் குறைவில்லை. மின்சார விசிறி சுழன்று கொண்டு தான் இருந்தது. விளக்கொளி பிரகாசித்துக் கொண்டுதான் இருந்தது. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஊதுவத்திப் புகையின் நறுமணம் பரவியதாலோ, என்னவோ, அந்த அறையில் எப்போதும் நாசிக்கினிய ஒருவகை மணம் நிறைந்திருந்தது. மேஜை மேல் விரித்துக் கிடந்த பைல்களையும், தடிமன், தடிமனான பேரேட்டுக் கணக்குப் புத்தகங்களையும் அப்படியே போட்டு விட்டு அந்த நிமிடம் வரை தனக்கு ஏற்படாத ஒரு வகைத் துணிச்சலை வலுவில் வரவழைத்துக் கொண்டான் அவன். எழுந்திருந்து அந்த அறைமுழுவதும் ஒவ்வொரு மூலை முடுக்குக்களையும் ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தான். பிரமநாயகம் அவனை அந்த அறைக்குள் முதன் முதலாகக் கொண்டுவந்து விட்டுச் சென்றவுடனேயே அவன் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கலாம். அவன் அப்படிச் செய்யாமல் பிரமநாயகம் உட்கார்த்திவிட்டுப் போன நாற்காலியிலேயே உட்கார்ந்து வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிட்டான். பூர்ணா அப்போது அந்த அறையில் இல்லாவிட்டாலும் அவளுடைய, அல்லது அவளைச் சேர்ந்த ஏதோ ஒரு விசேட சக்தி அந்த அறையைக் கண்காணித்துக் கொண்டிருப்பது போன்ற மனப்பிரமையும், கலவரத்தோடு கூடிய பயமும், அவனுக்கு இருந்தன. அதனால்தான் அறையில் வேறுயாருமில்லா விட்டாலும் யாருக்கோ அடங்கி உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிற மாதிரி உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமல் - அந்த அறையில் சூழ்நிலை எப்படி அமைந்திருக்கிறது என்பதைக்கூடப் பார்த்துக் கொள்ளாமல் காரியத்தில் கண்ணாயிருந்தான். அவன் பார்த்தமட்டில், கேள்விப்பட்ட மட்டில் பூர்ணா என்ற பெண்ணின் குணசித்திரம் அவன் மனத்தில் எந்த அளவு உருவாகியிருந்ததோ, அதன் விளைவுதான் அவன் பயம்! கல்லூரியில் படித்த தமிழ்ப் பாடப்பகுதிகளிலிருந்து ஒரு செய்யுள் வரி அவனுக்கு நினைவு வந்தது.
"உறங்குமாயினும் மன்னவன் தன்னொளி கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்." 'அரசன் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவனுடைய ஆற்றலின் ஒளி அவனால் ஆளப்படுகின்ற பிரதேசம் முழுவதும் தீங்கோ, தவறோ, நேர்ந்து விடாமல் காத்துக் கொண்டிருக்கும்' என்பது இதனுடைய கருத்து. இது போலவே பூர்ணாவின் சாகச ஒளியின் ஆற்றல் அந்த அறை முழுவதும் நிரம்பியிருப்பது போல் ஒரு மனப் பிராந்தி ஏற்பட்டிருந்தது அவனுக்கு. அந்த மனப்பிராந்தி நீங்குவதற்கு அரைமணி நேரம் பிடித்தது. அதன் பின்பே எழுந்திருந்து அறையைச் சுற்றிப் பார்க்கும் துணிவு அவனுக்கு உண்டாயிற்று. பூர்ணா சுபாவத்தில் நல்லவளா, கெட்டவளா, சூழ்ச்சிக்காரியா, நேர்மையானவளா? இவற்றையெல்லாம் பற்றி அவன் தன்னைப் பொறுத்தவரையில் இனிமேல் தான் பழகித் தெரிந்து கொள்ள வேண்டும்! ஆனால், அவளுடைய அலுவலக அறையை அவள் நன்றாக வைத்துக் கொண்டிருந்தாள். சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தாள். காகிதங்கள், ரசீதுப் புத்தகங்கள், பைல்கட்டுக்கள், கடிதங்கள் - எதுவும், எவையும் தாறுமாறாக மூலைக்கு மூலை சிதறி வைக்கப்பட்டிருக்கவில்லை. அவையவை உரிய இடங்களில் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தனியாக - ஒருத்தி இவ்வளவு வேலைகளையும் ஒழுங்காகச் செய்து கொண்டு, - அதே சமயத்தில் அங்குள்ள மற்றவர்களை ஆட்டிவைத்து அதிகாரம் செய்யவும் எப்படி முடிந்தது என்று அவன் வியந்தான். அவள் வழக்கமாக உட்காரும் நாற்காலிக்குப் பின்புறமிருந்த அலமாரி ஒன்று பூட்டியிருந்தது. அதற்குள் ஏதாவது முக்கியமான பொருள்கள் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் அவன். மேஜை டிராயர்களும் அதே போல் பூட்டப்பட்டிருந்தன. மேஜை மேல் டைப்ரைட்டர் அதற்குரிய தகரக் கூட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. சில கடிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் வேறு சில கடிதங்கள் அனுப்புவதற்காக டைப் செய்து மடித்து வைக்கப் பட்டிருந்தன. பத்தே நிமிஷங்களில் அந்த அறையின் ஒவ்வொரு பகுதியையும் தன் பார்வையால் அளந்து கொண்டு தனக்குரிய இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான் அழகியநம்பி. அவன் உட்கார்ந்து சில விநாடிகளே கழிந்திருக்கும். ஸ்பிரிங் கதவு திறக்கும் ஓசை கேட்டது. குனிந்து 'பைலைப்' புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவன் யார் என்று பார்ப்பதற்காகத் தலைநிமிர்ந்தான். அந்த ஒரு கணத்திற்குள் அவன் நெஞ்சு அடித்துக் கொண்ட வேகம் சொல்லி முடியாது. பூர்ணா தான் வந்தாள். ஒரு கையில் அலங்காரப் பை, இன்னொரு கையில் அழகிய சிறிய ஜப்பான் குடை. அவன் உட்கார்ந்து கொண்டிருப்பதை அவள் பார்த்து விட்டாள். ஆனால், அதற்குரிய வியப்போ, மாறுதலோ, சினமோ - ஏதாவது ஒரு உணர்ச்சி சிறிதாவது அவள் முகத்தில் உண்டாக வேண்டுமே! இல்லவே இல்லை. அழகியநம்பி தான் தன்னையறியாமலே தான் என்ன செய்கிறோம் என்ற நினைவே இல்லாமல் எழுந்து நின்று கொண்டிருந்தான். அவள் உள்ளே நுழையும்போது தான் எதற்காக எழுந்து நின்றோம்; என்று பின்னால் நிதானமாக நினைத்துப் பார்த்த போது அவனுக்கே ஏனென்று விளங்கவில்லை! ஒன்றும் புதிதாக நடக்காதது போல் அவன் அங்கே உட்கார்ந்திருப்பதையே கவனிக்காமல் தன் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள் அந்தப் பெண் புலி. அவள் வேண்டுமென்றே தன்னை அலட்சியம் செய்வதைப் போல் தோன்றியது அவனுக்கு. ஒரே கணம் அவனுடைய மனம் கொதித்தது. ஆண் பிள்ளையின் இயல்புகளான தன்மானமும் ரோஷமும் அவன் மனத்தை முறுக்கேற்றின. ஆனால், அவை நிலைக்கவில்லை. தன்னடக்கமாக உணர்வுகளை அமுக்கிக் கொண்டான். வாழ்க்கையில் அந்த இளம் வயதிற்குள்ளேயே துன்பங்களை ஏராளமாக அனுபவித்துப் பண்பட்டிருந்த அவன் மனம் அவனுடைய கண நேரத்து ஆத்திரத்தைத் தணித்து அவனைப் புத்திசாலியாக்கியது. சுளித்த முகம் மலர்ந்தது. இறுகிய உதடுகள் நெகிழ்ந்தன. "மிஸ் பூர்ணா! குட்மார்னிங்" - என்று அவளை வரவேற்றான் அவன். நாற்காலியில் உட்கார்ந்து டிராயரைத் திறந்து கொண்டிருந்தவள் அவனுடைய குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்து அப்போது தான் அவனைப் பார்க்கிறவளைப் போலப் பார்த்தாள். ஆழமான, தீர்க்கமான - சூடு நிறைந்த பார்வை அது! சிரித்துக் கொண்டே அந்தப் பார்வையைத் தாங்கி அதிலிருந்த வெப்பத்தை மாற்ற முயன்றான் அவன். பூர்ணாவின் பார்வை அவனுடைய சிரித்த முகத்தைக் கண்டு முற்றிலும் மாறிவிடவில்லை யென்றாலும் அதிலிருந்த கடுமை சிறிது குறைந்தது. வேண்டா வெறுப்பாக, "குட்மார்னிங்" - என்று பதிலுக்கு முணுமுணுத்தாள். 'விரட்டியோ, மிரட்டியோ அவளை வழிக்குக் கொண்டு வருவதென்பது இயலாத காரியம். விட்டுக் கொடுத்துப் பணிவது போல் நடந்து தான் அவளைப் பணிய வைக்க முடியுமென்பது' அவனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் அவளிடம் தன்னை மறைத்துக் கொண்டு நடிக்க முயன்றான். விநயமாக அடக்கவொடுக்கத்தோடு அவள் மேஜைக்கு முன்னால் போய் நின்று கொண்டான். குனிந்து கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தவள் மேஜை மேல் அவன் நிழல் விழுந்ததும் நிமிர்ந்து பார்த்தாள். பார்வை வெட்டுவது போலிருந்தது. அவனுடைய குரலில் நளினமும் நைச்சியமும், ஒன்றுபட்டுக் குழைந்தன. "மிஸ் பூர்ணா! நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் உங்களுக்குப் போட்டியாகவோ, எதிரியாகவோ, இங்கே கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டிருக்கவில்லை. நீங்கள் சொல்வதைச் செய்வதற்காக, உங்களுக்கு உதவியாகவே நான் வந்திருக்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் எந்த விதத்திலும் சிறிது கூடத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. என்னிடம் நீங்கள் கலகலப்பாகவோ, அன்பாகவோ, பழகாமல் புறக்கணித்தால் எனக்குப் பெருந்துயரம் ஏற்படும். உங்கள் அன்பையும், நட்பையும், பெறமுடியாததை என் துர்பாக்கியமாகக் கருதுவேன். நான் உங்களைப் பற்றி எவ்வளவோ பெருமையாக நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள்! என்னைக் கைவிட்டு விடாதீர்கள்!" - அழகியநம்பி அருமையாக, தத்ரூபமாக நடித்துவிட்டான். பூர்ணாவின் கண்கள் அகல விரிந்தன. அவன் முகத்தை இமைக்காமல் சில விநாடிகள் உற்றுப் பார்த்தாள் அவள். அவனுடைய பேச்சில் அவளுக்கு நம்பிக்கை உண்டாகவில்லையோ என்னவோ? "நீங்கள் என்னை நம்பலாம். நான் உங்களுடையவன், உங்களுக்கு அந்தரங்க நண்பனாக இருக்க விரும்புகின்றவன். என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து உட்கார்த்தியிருப்பவர் யாரோ அவரை விட உங்களுக்குத்தான் நான் அதிகம் பயன்படுகிறவனாக இருப்பேன்." மறுபடியும் கெஞ்சுகிற பாவனையில் மெல்லிய குரலில் தன் நடிப்பைத் தொடர்ந்தான் அவன். அக்கறையோடு மேற்கொள்ளப்பட்ட அவனுடைய நடிப்பும், பேச்சும் வீணாகி விடவில்லை. பூர்ணாவின் முகம் மலர்ந்தது. அவள் மெல்லச் சிரித்தாள். அது தந்திரமான சிரிப்பாக இருந்தது. "மிஸ்டர் அழகியநம்பி நீங்கள் இடத்தில் போய் உட்கார்ந்து வேலையைக் கவனியுங்கள். நான் உங்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கு முன் நீங்களாகவே ஏன் பயப்படுகிறீர்கள்? என்னால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது. நீங்கள் என்னோடு ஒத்துழைக்கத் தயாராயிருக்கும்போது நான் மட்டும் உங்களுக்குத் துன்பம் செய்வேனா...? நாம் இன்று மாலை வெளியே ஓர் இடத்தில் தனியாகச் சந்தித்து நம் நிலைகள் பற்றிப் பேசிக் கொள்வோம். இங்கே வேண்டாம். நான் சொல்கிற வேலைகளை நீங்கள் மறுக்காமல் உடனுக்குடன் செய்து கொண்டு வாருங்கள்!" - என்றாள் பூர்ணா. அவன் தலையை ஆட்டினான். உள்ளூற அவன் மனம் கறுவிக் கொண்டது: 'இரு மகளே! இரு; உன்னை வழிக்குக் கொண்டு வருகிற விதமாகக் கொண்டு வருகிறேன்!' - என்று எண்ணிக் கொண்டான். அழகியநம்பியின் பணிவையும், அடக்கத்தையும் கொண்டு அவனைக் கையாலாகாதவன் என்றும் ஏழை என்றும் தவறாக அனுமானம் செய்து கொண்ட பூர்ணா அவனைத் தாராளமாக அதிகாரம் செய்தாள். அவளுடைய அனுமானமும் தவறல்லவே! பணத்தினால் அவன் ஏழைதான்! அறிவினால் கூடவா அவன் ஏழை? மறுபேச்சுப் பேசாமல் - சொன்ன வார்த்தைக்கு எதிர் வார்த்தை சொல்லாமல் சிரித்துக் கொண்டே அவள் எதைச் சொன்னாலும், எதற்கு ஏவினாலும், - கீழ்ப்படிந்து அவற்றைச் செய்து விடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான் அவன். பூர்ணா அழகியநம்பியிடம் நேரில், "நான் உங்களுக்கு ஒரு துன்பமும் செய்ய மாட்டேன்" - என்று முகத்துதிக்காகச் சொல்லியிருக்க வேண்டும். அன்று முழுதும் அவள் அவனிடம் நடந்து கொண்ட விதமென்னவோ, அதிகார மிடுக்கையும், மமதையையும் காட்டுவதாகவே இருந்தது. முதல் வேலையாக அவளுடைய மேசை நாற்காலிக்குப் பக்கத்தில் ஒட்டினால் போலச் சரிசமமாகப் போட்டிருந்த அவன் மேசை நாற்காலியை இடம் மாற்றிப் போடச் செய்தாள் அவள். அவள் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் அவனைக் கொண்டே அந்த வேலையைச் செய்வித்தாள். "உங்கள் மேசை நாற்காலியை அப்படிக் கதவோரமாக எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். அதுதான் நீங்கள் இருக்க வேண்டிய இடம். உங்கள் மேஜையிலிருக்கும் பைல்கள், லெட்ஜர்களை எல்லாம் இப்படி எடுத்துக் கொடுத்துவிடுங்கள். அவற்றை நீங்கள் இப்போது பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுக்குப் பழக்கமும் போதாது. இப்போதைக்கு, நான் சொல்லுகிற வேலைகளை மட்டும் நீங்கள் கேட்டால் போதும்." அந்த அதிகாரக் குரலின் வேகம் அவனைப் 'பியூனாக' நினைத்துக் கொண்டு பேசுவதைப் போல் இருந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டே தன் மேசை நாற்காலியை அவள் சொன்ன இடத்தில் எடுத்துப் போட்டான். அவள் விருப்பப்படி, தான் பார்ப்பதற்காக எடுத்து வைத்திருந்த 'பைல்' முதலியவற்றைப் பார்க்காமலேயே அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டான். "இதோ இந்த ஊதுபத்திகளைப் பொருத்தி ஸ்டாண்டில் வையுங்கள்." வாங்கிப் பொருத்தி வைத்தான். "இதோ இந்தக் கவர்களுக்கெல்லாம் 'ஸ்டாம்ப்' ஒட்டுங்கள்." வாங்கி ஸ்டாம்ப் ஒட்டினான். "குப்பைக் கூடையில் ஒரேயடியாகக் காகிதங்கள் சேர்ந்து விட்டன. மேலே போடுவதற்கு இடமே இல்லை. கொண்டு போய் வெளியில் கொட்டிவிட்டு வந்துவிடுங்கள்." எடுத்துக் கொண்டு போய்க் கொட்டிவிட்டு வந்தான். "அதோ அந்த அலமாரியில் 'கிளாஸ்' இருக்கிறது. எடுத்துக் குழாயடியில் போய்க் கழுவி விட்டு எதிர்த்த ஹோட்டலில் போய் ஒரு டீ வாங்கிக் கொண்டு வாருங்கள்." அப்படியே செய்தான். பூர்ணாவுக்கே ஆச்சரியத்தை உண்டாக்கியது அந்தப் படித்த ஆண்பிள்ளையின் பொறுமை. அவள் சொன்னபடியெல்லாம் நாயாக ஓடி உழைத்தான் அவன். மூன்று மணிக்கு அவள் வெளியேறும்போது அவனிடம் தன்னுடைய முகவரி அச்சிட்ட அட்டை ஒன்றைக் கொடுத்து, "ஆறு, ஆறரை மணிக்கு என்னை வந்து சந்தியுங்கள். சில அந்தரங்கமான செய்திகளைப் பேசலாம்." - என்று கூறிவிட்டுப் போனாள். அவன், "வருகிறேன்," - என்று சம்மதித்தான். |