![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
10. கடன் தொல்லைகள் "வள்ளியம்மை! உன்னைத்தானே? வாசலில் யாரோ வந்து கூப்பிடுகிறாற் போலிருக்கிறதே? போய் யாரென்று பார்த்துவிட்டு வா." - உள் வீட்டில் சமையற் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்த தாயார் மகளை வாசற்புறம் போய்ப் பார்த்துவிட்டு வரச்சொல்லி அனுப்பினாள். வாசலில் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்த வள்ளியம்மையின் முகத்தில் பதற்றமும், திகைப்பும் தெரிந்தன. "என்னடி பெண்ணே? வந்திருப்பது யார்?" "வட்டிக்கடைப் பன்னீர்ச்செல்வம் பிள்ளை வந்திருக்கிறார் அம்மா!" பெண் சொல்லிய பெயரைக் கேட்டதும் அந்த அம்மாளுக்கு மனத்தில் திக்கென்றது. நெற்றி சுருங்கிக் கவலையைக் காட்டும் மடிப்புக்கள் விழுந்தன. "அவரிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவது?" - தாயின் திகைப்பைப் புரிந்துகொள்ளாத பெண் அடுத்த கேள்வியைக் கேட்டாள். "நீ என்ன பதிலைப் போய்ச் சொல்லப் போகிறாய்? போ உள்ளே! அடுப்பைப் பார்த்துக்கொள். நான் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பிவிட்டு வருகிறேன்." பெண்ணை உள்ளே அனுப்பிவிட்டு வட்டிக்கடைக்காரருக்குப் பதில் சொல்லி அனுப்புவதற்காக வாசலுக்கு வந்தாள் அந்த அம்மாள். வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த மனிதர் பன்னீர்ச்செல்வத்திற்குத் தப்பித் தவறிக்கூட முகத்தில் சிரிப்போ, மலர்ச்சியோ, உண்டாகாது போலிருந்தது. முகத்தில் அசாதாரணமானதொரு கடுகடுப்பு, சாதாரணமாகவே எந்த நேரத்திலும் அமைந்திருந்தது. ஒருவேளை வட்டிக்கடைக்காரர்களெல்லாம் முகத்தை அப்படித்தான் வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று ஏதாவது இலக்கணம் இருக்கிறதோ, என்னவோ? இயற்கையாகவே, பிறவியிலேயே புலிமுகத்தைப் போலப் பயங்காட்டும் முகம் வாய்த்திருந்தது அவருக்கு. அதில் அரிவாள் நுனிபோல் வளைந்த மீசையும் சேர்ந்துகொண்டது. வட்டி வசூல் செய்யும் மிடுக்குடனே உள்ளேயிருந்து வந்த அந்த அம்மாளை நிமிர்ந்து பார்த்தார் பன்னீர்ச்செல்வம். தோள் புடவையை இழுத்துவிட்டுக் கொண்டே ஒடுங்கிப்போய்க் கதவோரமாக வந்துநின்ற அந்த அம்மாளுக்கு அவர் முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. "என்னம்மா? பிள்ளையைக் கொழும்புக்குக் கப்பலேற்றி அனுப்பியிருக்கிறீர்களாமே! போய்ப் பணம் ஏதாவது அனுப்பினானா? வட்டி தலைக்குமேல் ஏறிக்கொண்டே போகிறதே." - முகத்தின் கடுகடுப்புக்குச் சிறிதும் குறைவில்லாத குரல். பேசும்போதே யாரையோ அதட்டுவது போலிருந்தது. "அவன் போய்ச் சேர்ந்தே இன்னும் முழுமையாக ஒரு வாரம் கூட ஆகவில்லையே? அதற்குள் எப்படிப் பணம் அனுப்புவான்? 'சௌக்கியமாகப் போய்ச்சேர்ந்தேன்' என்று அவனிடமிருந்து ஒரு வரி கடுதாசி கூட வரவில்லையே?" பன்னீர்ச்செல்வத்தின் குரலில் எவ்வளவு மிடுக்கும், கடுமையும் இருந்தனவோ, அவ்வளவு தணிவும் பணிவும், அந்த அம்மாளுடைய குரலில் இருந்தன. எங்கும், எப்போதும் கையை உயர்த்தி ஒரு பொருளைக் கொடுத்தவர்கள் அதிகாரம் செய்யலாம்; அதட்டிப் பேசலாம், ஆட்சி செய்யலாம். எதையும் செய்ய முடியும் அவர்களுக்கு. ஆனால், கையேந்தி வாங்கினவர்களும் அப்படி இருக்க முடியுமா? "நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாயிற்று. இரண்டாயிரம் ரூபாய்க்கு நாலுவருட வட்டி ஐநூறு ரூபாய்க்குமேல் ஆகிறது. இந்த நாலு வருடத்தில் ஒருதரமாவது வட்டித் தொகையையும் கொடுக்கவில்லை. இனிமேல் உங்களிடம் கொடுப்பதற்குத்தான் என்ன இருக்கிறது? இடிந்த சுவரும், செங்கல் பெயர்ந்த தரையுமாக இந்த வீடு ஒன்று மீதமிருக்கிறது. இன்றைக்கெல்லாம் கூவிக்கூவி விற்றாலும் எழுநூறு ரூபாய்க்கு மேல் போகாது. பிள்ளையையும் அக்கரைச் சீமைக்கு அனுப்பிவிட்டீர்கள். வட்டியும் முதலுமாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு நான் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு போக வேண்டும் போலிருக்கிறது." வட்டிக் கடைக்காரரின் பேச்சில் படிப்படியாக அந்தத் தொழிலுக்கே உரிய அழுத்தம் ஏறிக்கொண்டிருந்தது. "அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ஐயா! இனிமேல் மாதா மாதம் அவன் ஏதாவது அனுப்புவான். மொத்தமாக அடைத்துத் தீர்க்க முடியாவிட்டாலும் உங்கள் கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுகிறோம்." - அந்த அம்மாள் அவரைச் சமாதானப் படுத்திக் கெஞ்சுகிற பாவனையில் பேசினாள். "இதோ பாருங்கள்; நான் வட்டிக்கடைக்காரன். தயவு தாட்சணியம் காட்டி நாலுபேரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை. ஆரம்ப முதல் இந்தத் தொழிலில் கெட்ட பெயர்தான் வாங்கியிருக்கிறேன். குடிகெடுப்பவன்; 'கருமி' என்று எத்தனையோ விதமாக ஊரில் பேசிக் கொள்கிறார்களாம். இனிமேல் நல்ல பெயரெடுத்து எனக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. எனக்கு யாரும் வள்ளல் பட்டம் கட்ட வேண்டாம்..." சம்பந்தத்தோடும், சம்பந்தமின்றியும் தெருவில் போவோர் வருவோருக்குக் கூடக் கேட்கும் குரலில் இரைந்து கூப்பாடுபோடத் தொடங்கி விட்டார், அவர். "கோபித்துக் கொள்ளாதீர்கள். பார்த்துக் கொடுத்து விடுகிறோம். எங்கள் குடும்பநிலை உங்களுக்குத் தெரியாததில்லை. நீங்களே இப்படிக் கோபித்துக் கொண்டு சத்தம் போட்டால் நாங்கள் என்ன செய்வது?" ஒரு பெண் தன் சாமர்த்தியத்தாலும் வாழ்க்கை அனுபவங்களாலும் என்னென்ன பதில்களையும் சமாதானங்களையும் சொல்ல முடியுமோ, அவ்வளவையும் சொல்லிச் சமாளிக்க முயன்றாள் அந்த அம்மாள். குடும்ப வாழ்க்கையின் மேடு பள்ளங்களை நன்கு அறிந்து வாழ்க்கை அனுபவங்களில் தோய்ந்தவர்களால் மட்டுமே இந்த மாதிரி நிலைகளைச் சமாளிக்க முடியும். உடல் உழைப்பை அறியாத அந்த வளமான சரீரம், இரக்கம், பச்சாதாபம் போன்ற உணர்வுகளை எல்லாம் பணத்தைப் போலவே இரும்புப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிடுவதுண்டு. காலுக்குச் செருப்பு, தலைக்குக் குடை, கடன் தஸ்தாவேஜிகளும் பத்திரங்களும் அடங்கிய ஒரு துணிப்பை, மல்வேஷ்டி, மல் சட்டை, கையகலத்துக்குச் சரிகைக் கரைபோட்ட அங்கவஸ்திரம், பன்னீர்ச்செல்வம் தோற்றத்தில் கூடத் தாம் அசல் சீமான், பச்சைப் பணக்காரர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் காட்சியளித்தார். "உங்களுக்கு ஆயிரம் துன்பங்கள் இருக்கலாம். அதையெல்லாம் பற்றி நான் கவலைப்படமுடியாது. போனால் போகிறதென்று இன்னும் பதினைந்து நாள் தவணை கொடுக்கிறேன். அதற்குள் வட்டிப் பணம் ஐநூறு ரூபாயாவது கைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் நான் மிகவும் பொல்லாதவனாக இருப்பேன்." - கொடுத்த கடனை வசூலிப்பவர்களுக்கே உரிய விதத்தில் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேசினார் அவர். அந்தச் சமயத்தில் வள்ளியம்மை உள்ளேயிருந்து வந்து தாய்க்குப் பின்னால் நின்றாள். பன்னீர்ச்செல்வத்தின் பார்வை அந்தப் பக்கமாகத் திரும்பியது. "அது யாரு? உங்களுக்குப் பின்னாலே நிற்கிறது?" "என் பெண் வள்ளியம்மை. அழகியநம்பிக்கு இளளயவள்." பன்னீர்ச்செல்வம் 'பெரிய மனிதர்' அல்லவா? அதனால், யாரை இன்னார் என்று தெரிந்து கொண்டிருந்தாலும் தெரியாது போல் கேட்கிறவழக்கம் அவரிடம் உண்டு. "இந்தா, பெண்ணே! நாவரட்சியாய் இருக்கிறது, ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டுவா குடிக்கவேண்டும்." - என்று உரிமையோடு கட்டளையிட்டார் பன்னீர்ச்செல்வம். வள்ளியம்மை உள்ளே ஓடினாள். தலைப்பின்னல் கருநாகம் போல் அசைந்தாடத் தண்ணீர் கொண்டு வருவதற்காக அவள் ஓடிய காட்சியைப் பன்னீர்ச்செல்வம் ஆவலோடு நோக்கினார். "உங்களுக்கு இந்த வயதில் கல்யாணத்திற்கு ஒரு பெண் இருக்கிறதா? எனக்கு தெரியவே தெரியாதே; யாரோ பக்கத்து வீட்டுப் பெண் என்று அல்லவா நினைத்தேன்" - அவர் பேச்சில் வியப்பு நடித்தது. "தெரியாமல் என்ன? நீங்கள் சிறு குழந்தையில் இவளைப் பார்த்திருப்பீர்கள். இப்போது வயதாகிவிட்டதனால் மதமதவென்று வளர்ந்திருக்கிறாள். அதனால் அடையாளம் தெரியவில்லை." - அந்த அம்மாள் வேண்டா வெறுப்பாகப் பதில் கூறினாள். மனத்தில் சிறிது ஆத்திரமும் வருத்தமும் ஏற்பட்டிருந்தது. 'கடன் கேட்க வந்தால் கடனைக் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? இந்த விசாரணை எல்லாம் இவனுக்கென்ன வேண்டிக்கிடக்கிறது?' - அந்த அம்மாள் மனத்துக்குள் அவரைப் பற்றி வெறுப்பாக நினைத்துக் கொண்டாள். கடன் பட்டுவிட்டால் கடன் கொடுத்தவனுடைய எல்லா அசட்டுத்தனங்களளயும் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது. "நீ இப்படி கொடுத்துவிட்டுப் போ! நான் கொண்டு போய் அவரிடம் கொடுக்கிறேன்." - கதவுக்கு இந்தப்புறமே பெண்ணை வழிமறித்து நிறுத்திவிட்டுத் தண்ணீர்ச் செம்பையும், டம்ளரையும் தன் கையில் வாங்கிக் கொண்டாள் அந்த அம்மாள். வள்ளியம்மை தாயின் முகக் குறிப்பைப் புரிந்து கொண்டு உடனே வேகமாகச் சமையலறைப் பக்கம் திரும்பிச் சென்றுவிட்டாள். அந்த அம்மாள் கதவுக்கு அப்பால் கடந்து செல்லாமல் நிலைப்படிக்கும் உட்புறம் இருந்துகொண்டே கைகளை எட்டி நீட்டி வாசல் திண்ணைமேல் தண்ணீர்ச் செம்பையும் டம்ளரையும் வைத்தாள். "இதோ தண்ணீர் வைத்திருக்கிறேன், எடுத்துக் கொள்ளுங்கள்." - பன்னீர்ச்செல்வத்திற்கு அவளுடைய அந்தச் செய்கை முகத்தில் அடித்த மாதிரி என்னவோ போல் இருந்தது. செம்பைக் கையிலெடுத்துத் தண்ணீர் குடித்தார் அவர். "தண்ணீர் போதுமா? இன்னும் கொண்டுவரச் சொல்லட்டுமா?" - நிலைப்படி கடவாமலே அந்த அம்மாளின் கேள்வி தொடர்ந்தது. "போதும்" - அவர் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். 'ஆயிரம் கடன்பட்டிருக்கலாம்! ஏழ்மையின் ஆழத்திலேயே புதைந்திருக்கலாம். ஆனால், பணத்துக்குத்தானே கடன் பட்டிருக்கிறோம்; மானம், மரியாதைக்காக அல்லவே?' - அந்த அன்னை துணிவான சிந்தனையில் இறங்கியிருந்தாள். தமிழ் நாட்டுக் குடும்பப் பெண்ணின் பண்பை அந்தச் சிறிய சந்தர்ப்பத்தில் 'பெரிய மனிதரான' பன்னீர்ச்செல்வத்திற்கு முன்னால் உறுதியாகக் கடைப்பிடித்துக் காட்டிவிட்டாள் அழகியநம்பியின் தாய். "பெண்ணுக்குக் கலியாணம் எப்போது செய்யப்போகிறீர்களோ? வயது ஆகிவிட்டாற்போலத் தெரிகின்றதே?" - பன்னீர்ச்செல்வம் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்புகிற வழியாகக் காணோம். திண்ணையில் பதிவாக உட்கார்ந்து, கையோடு கொண்டு வந்திருந்த வெற்றிலைப் பெட்டியைத் திறந்தவாறே அந்த அம்மாளிடம் பேச்சுக் கொடுத்தார். 'இதேதடா சனியன்! சீக்கிரம் போய்த் தொலைய மாட்டார் போலிருக்கிறதே? இந்த மனிதர் இவற்றை எல்லாம் விசாரிக்கவில்லை யென்று யார் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடன் பணத்தைக் கேட்க வந்தவர் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே?' - அவளுக்கு எரிச்சலாக வந்தது. அந்த மனிதர் அங்கிருந்து எப்போது எழுந்து செல்வார்? என்று சலிப்பு ஏற்பட்டது. "கலியாணத்திற்கு என்ன அவசரம்? கடன் உடன்களை அடைத்துவிட்டு நிதானமாகப் பார்த்துச் செய்யவேண்டும்" - என்று சுவாரஸ்யமில்லாத குரலில் எங்கோ பார்த்துக் கொண்டு பதில் சொன்னாள். "பெண்ணுக்கு ஆவதற்கு முன்னால் உங்கள் பையன் அழகியநம்பிக்கு ஆகவேண்டாமா?" "உம்... எல்லாம் நடக்க நடக்கப் பார்க்கலாம். நான் உள்ளே போகிறேன். எனக்குச் சமையல் வேலை பாக்கி இருக்கிறது." - அதற்கு மேலும் பன்னீர்ச்செல்வத்தின் தொண தொணப்புக்கு ஆளாக விரும்பாமல் உட்புறம் நகர்ந்தாள் அந்த அம்மாள். "சரி! நானும் இப்படிப் போய்விட்டு வருகிறேன். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் சொன்னால் சொன்னதுதான். பதினைந்து நாளில் வட்டிப்பணம் கைக்கு வந்து சேரவேண்டும். உங்கள் பிள்ளைக்கும் எழுதிவிடுங்கள். சொன்ன தேதியில் பணம் கைக்கு வரவில்லையானால் நான் மிகவும் கெட்டவனாயிருப்பேன்" - பன்னீர்ச்செல்வமும் கிளம்பி விட்டார். அத்தனை குழைந்து, இரக்கம் காட்டுபவர்போல் வம்புப் பேச்செல்லாம் பேசி முடிந்த பின்பும் தொழில் முறைக்குச் செய்ய வேண்டிய எச்சரிக்கையைக் கொடுமையாகச் செய்துவிட்டுத் தான் போனார். திண்ணையிலிருந்த செம்பையும் டம்ளரையும் எடுத்துச் செல்வதற்காகத் திரும்பி வந்த அந்த அம்மாள் தபால்காரன் வருவதைக் கண்டு தயங்கி நின்றாள். 'அழகியநம்பி கடிதம் எழுதியிருந்தாலும் எழுதியிருப்பான். அவனைத் தவிர வேறு யாரிடமிருந்து இப்போது நமக்குக் கடிதம் வந்திருக்கப்போகிறது?' - நினைத்துக் கொண்டே ஆசையோடு நின்றாள். மனம் வேகமாக அடித்துக் கொண்டது. தபால்காரன் எதிர்ச் சிறகிலிருந்த வீட்டில் கடிதம் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தான். எதிர்பார்த்தது வீண்போகவில்லை. தபால்காரன் "முத்தம்மாள் அண்ணி" என்று பெயரை இரைந்து வாசித்தான். இரண்டு கடிதங்களைத் திண்ணையில் வீசி எறிந்துவிட்டுப் போனான். குடும்பப் பாங்கிலும் அடக்க ஒடுக்கப் பண்புகளிலும், பழமையான கட்டுப்பாடுகளிலும் தழும்பேறிப் போயிருந்த அந்த அம்மாளுக்குத் தபால்காரன் நட்ட நடுத்தெருவில் நின்றுகொண்டு தன் பெயரை அப்படி இரைந்து கூவிக் கடிதங்களை வீசி எறிந்தது என்னவோ போலிருந்தது. ஒரு கணம் சிறிய நுணுக்கமான கூச்சம் ஒன்று அந்த அம்மாளைப் பற்றிக் கொண்டது. ஒரு கையில் செம்பையும், டம்ளரையும் எடுத்துக் கொண்டு இன்னொரு கையில் கடிதங்களோடு உள்ளே வந்தாள். "ஏ வள்ளியம்மை! இந்தா, கடுதாசி வந்திருக்கிறது பார்! யார் எழுதியிருக்கிறார்களென்று படித்துச் சொல்லேன்." 'கடிதாசி' என்ற பெயரைக் கேட்டவுடனே அடுப்படியில் உட்கார்ந்திருந்த வள்ளியம்மை மிட்டாய்ப் பொட்டலத்தைப் பார்த்து ஓடிவரும் சிறு குழந்தையைப் போலத் துள்ளிக் குதித்து ஓடிவந்தாள். தாயின் கையிலிருந்து கடிதங்களைவாங்கிப் பார்த்தாள். "அம்மா! ஒரு கடிதாசி அண்ணன் கொழும்பிலிருந்து போட்டிருக்கிறது. இன்னொன்று தென்காசியிலிருந்து அண்ணனுடைய சிநேகிதர் ஒருத்தர் எழுதியிருக்கிறார். முருகேசன் என்று பெயர். அண்ணன் புறப்பட்டுக் கொழும்புக்குப் போனது தெரியாது போலிருக்கிறது. இங்கே இருப்பதாக நினைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார்." "இரண்டையுமே, படியேன், கேட்கலாம்." - தாயின் விருப்பப்படியே இரண்டு கடிதங்களையுமே படித்துக் காட்டத் தொடங்கினாள் மகள். |