30. இருபது நாட்களில்... எல்லோரும் பாடிய அதே பல்லவியை முன்சீப் புன்னைவனமும் பாடியானர். "தம்பீ! நிலம் கிடைப்பதில் தகராறு ஒன்றும் இருக்காது. இன்றைக்குத் தபாலில் நான் இதைச் சிபாரிசு செய்து அனுப்பி விட்டால் இரண்டே நாளில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வந்து பார்வையிட்டுத் தீர்வை நிர்ணயம் செய்து விசாரித்துக் கொண்டு போய் நிலத்தை உனக்கு ஜாரி செய்யச் சொல்லி உத்தரவு அனுப்பச் செய்துவிடுவார். அந்தப்படுகை மேட்டுக்கு முழுதும் தீர்வையே வருஷத்துக்கு முந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வரும். வருஷம் தவறாமல் தீர்வையைக் கட்டிவிட்டு அந்த நிலத்தில் நீ என்ன பயனடைய முடியும். நிலத்தை ஒருமுறை ஜாரி செய்து வாங்கிக் கொண்டால் பிறகு நீ தலைகிழாக நின்றாலும் பட்டாவை மாற்ற முடியாது. உனக்கு விளைகிறதோ, விளையவில்லையே, தீர்வையைக் கட்டியாக வேண்டும்! இதையெல்லாம் நன்றாக யோசித்துப் பார்த்துக் கொண்டு அப்புறம் மனுவை என்னிடம் கொடு." - என்று அவன் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்த காகிதத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்தார் முன்சீப். "பரவாயில்லை! நான் நன்றாக யோசித்து முடிவு செய்து கொண்டுதான் வந்திருக்கிறேன். சிபாரிசு செய்து இன்றைக்குத் தபாலிலேயே அனுப்பிவிடுங்கள்." - என்று திரும்பவும் காகிதத்தை அவரிடமே நீட்டினான், அழகியநம்பி. அவர் வாங்கிக் கொண்டார். அழகியநம்பியும், முருகேசனும் அவர் பக்கத்திலேயே இருந்து அவர் அதை அன்றையத் தபாலில் அனுப்புகிற வரை பார்த்து விட்டுத்தான் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். போகிற வழியில் தபாலாபீசிற்குப் போய் இரண்டு ஏர்மெயில் கடிதங்கள் வாங்கிச் சபாரத்தினத்திற்கும், வோட்ஹவுஸ் தம்பதிகளுக்கும் தான் சௌக்கியமாக வந்து சேர்ந்ததாக எழுதிப் போட்டான். வோட்ஹவுஸ் தம்பதிகளுக்கு எழுதிய கடிதத்திலேயே மேரிக்கும், லில்லிக்கும் தன் அன்பைத் தெரிவிக்குமாறு எழுதியிருந்தான். 'தான் குறிஞ்சியூரில் நண்பனோடு இருப்பதாகவும் ஊர் திரும்ப ஏழெட்டு நாட்கள் ஆகுமென்றும்' முருகேசன் தன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினான். இருவரும் பகல் உணவு நேரத்திற்கு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சாப்பிடும்போது வழக்கமாக அதிகம் பேசும் அவன் அன்னை, அன்று பேசவே இல்லை. "நீங்கள் வெளியில் போன சிறிது நேரத்துக்கெல்லாம் பன்னீர்ச்செல்வம் வந்து தேடிவிட்டுப் போனார் அண்ணா!" - என்று வள்ளியம்மை அவனிடம் கூறினாள். அவர் எதற்காக வந்திருப்பாரென்று அவனால் அனுமானிக்க முடிந்தது. சாப்பிட்டு விட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, "அந்த நிலத்தில் எடுத்த எடுப்பில் நெல்லோ, வேறு தானியமோ பயிரிட வேண்டாம். முரட்டு உழவாக இரண்டு உழவு உழுது தக்காளி, முட்டைக்கோஸ், சீமை வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், - என்று இப்படிக் காய்கறி வகைகளாகப் பயிர் செய்தால் பத்தே மாதங்களில் பணத்தைக் குவித்து விடலாம்" - என்று இருந்தாற் போலிருந்து சொன்னான் முருகேசன்.
"உன்னை நம்பிக் காரியத்தில் இறங்கிவிட்டேன். பணத்துக்கு வழி செய்ய வேண்டியது உன் பொறுப்பு. என்னைக் கைவிட்டுவிடாதே!" - என்றான் அழகியநம்பி.
அன்று மாலை மறுபடியும் அவர்கள் மலையடிவாரத்துக்குப் போய் அந்தப் படுகை மேட்டை நிதானமாகச் சுற்றிப் பார்த்தனர். நிலம் உரமுள்ளதாக - சத்து வாய்ந்ததாகவே தெரிந்தது. இடை இடையே இருந்த கற்களை அப்புறப்படுத்தி, மேடு பள்ளங்களைச் சரிசெய்து நிரவி உழுதுவிட்டால் தங்கமான நிலமாகிவிடும் என்று தோன்றியது. "படுகை ஆற்றுமட்டத்தைவிட, மேடாக இருப்பதால் தண்ணீர் ஆற்றிலிருந்து பாயாது. அருவி விழுகிற இடத்திலிருந்து ஒரு வாய்க்கால் வெட்டிக் கொண்டால் நிலத்துக்கு வேண்டிய தண்ணீர் பாயும்." - என்று முருகேசன் யோசித்துப் பார்த்துச் சொன்னான். இருவரும் அங்கேயே மரத்தடியில் உட்கார்ந்து காகிதத்தில் புள்ளி விவரக் கணக்கோடு ஒரு திட்டம் போட்டுப் பார்த்தார்கள். அந்த நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்ய ஆகும் செலவு, அதில் கிடைக்கலாமென்று தோன்றிய விளைவின் பணமதிப்பு - இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். அவர்கள் மிகவும் ஆச்சரியப்படுகிற அளவிற்கு இலாபம் கிடைக்கும் போலத் தெரிந்தது. அவர்கள் எதிர்பார்த்தபடி இரண்டே நாட்களில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார். அவர் நிலத்தைப் பார்வையிடும் போது அழகியநம்பி, முருகேசன், முன்சீப் புன்னைவனம் ஆகியோரும் உடன் இருந்தனர். ரெவின்யூ இன்ஸ்பெக்டர் நல்ல மனிதராக இருந்தார். பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். மற்றவர்களைப் போல் அவநம்பிக்கையூட்டுவாரோ என்று அழகியநம்பிக்கு ஒரு பயம் இருந்தது. "சபாஷ்! உன் திட்டத்தையும் முயற்சியையும் பாராட்டுகிறேன். நீ வெற்றி பெறுவாய்." - என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர். தன் நோக்கங்களை அவரிடம் விரிவாக எடுத்துக் கூறினான். "உன்னைப் போல் நம் நாட்டுப் படித்த இளைஞர்களில் நூற்றுக்குப் பத்துப் பேராவது முன் வந்திருந்தால் இந்த நாடு எப்போதோ உருப்பட்டு முன்னேறியிருக்குமே!" - என்று அவர் கூறியபோது அவனுக்குப் பெருமையாயிருந்தது. "நான் போய் உத்தரவு அனுப்பிவிடுகிறேன்!" - என்று சொல்லிவிட்டுப் போனார் அவர். மறுநாளே பணம் தயார் செய்வதற்காக அழகியநம்பியைக் கூட்டிக் கொண்டு முருகேசன் தென்காசிக்குப் புறப்பட்டான். தென்காசியில் அழகியநம்பி மூன்று, நான்கு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. முருகேசனும், அவன் தந்தையுமாக, அவனைக் கூட்டிக் கொண்டு பணம் படைத்தவர்களிடமெல்லாம் அலைந்தனர். கடைசியில் முக்கால் வட்டிக்குப் புரோநோட்டு எழுதிக் கொடுத்து மூவாயிர ரூபாய் கடன் வாங்கினர். கடன் கொடுத்த பணக்காரர் முருகேசனின் தகப்பனாருக்கு மிகவும் வேண்டியவர். அழகியநம்பிக்காகவோ, அவன் எழுதிக் கொடுத்த புரோநோட்டை நம்பியோ அவர் கடன் கொடுக்கவில்லை. முருகேசனின் தந்தையை நம்பியே கொடுத்திருந்தார். பணத்தைப் பெற்றுக் கொண்டு அவன் தென்காசியிலிருந்து புறப்படும்போது, "அடுத்த மாதம் நானும் நண்பர்களும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உல்லாசப் பிரயாணம் செய்யத் திட்டமிட்டிருப்பது பற்றி முன்பே உனக்குக் கடிதத்தில் எழுதியிருந்தேனே! நீயும் வரமுடியுமா?" - என்று கேட்டான் முருகேசன். "தெரிந்திருந்தும் கேட்கிறாயே? என்னுடைய உல்லாசப் பிரயாணமெல்லாம் இனிமேல் அந்த மலையடிவாரத்துப் படுகை நிலத்தின் மேல் தான். ஏற்கனவே நான் கடனாளி. இப்போது இன்னும் பெரிய கடனாளியாக மாறி 'மண்ணில்' பணத்தைப் போடுகிறேன். என் நம்பிக்கையை அந்த மண் காப்பாற்றுமோ? ஏமாற்றிவிடுமோ? எல்லாம் இனிமேல் தான் தெரியவேண்டும்." - என்று அவனுக்குப் பதில் சொன்னான் அழகியநம்பி. "கவலைப்படாமல் போய்க் காரியங்களைத் துணிவோடு செய். எல்லாம் வெற்றிகரமாக முடியும்." - என்று ஆறுதல் கூறினான் முருகேசன். "நீயும் உடன் வந்தால் நல்லது. எல்லா ஏற்பாடுகளையும் உன் யோசனைகளைக் கேட்டுக் கொண்டு செய்வேன். மறுபடியும் வந்து பத்து நாள் இருந்து விட்டுத் திரும்பலாமே?" - என்று அவனையும் உடனழைத்தான் அழகியநம்பி. "இப்போது எனக்குச் சௌகரியப்படாது! முடிந்தபோது பின்பொரு சமயம் வருகிறேன். அப்படி நான் வரும்போது உன்னுடைய ஆற்றுப் படுகையில் பசுமை குலுங்க வேண்டும்!" - என்று சிரித்துக் கொண்டே சொன்னான் முருகேசன். அழகியநம்பி விடை பெற்றுக் கொண்டு குறிஞ்சியூருக்குப் புறப்பட்டான். ஊரில் கிராம முன்சீப் அவன் வரவை எதிர்பார்த்துத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார். "தம்பீ! படுகை நிலத்தை உன் பெயருக்கு ஜாரி செய்து உத்தரவு வந்திருக்கிறது. தீர்வைப் பணத்தைக் கட்டிப் பட்டா வாங்கிக் கொள்." - என்று அவன் போய்ச் சேர்ந்ததும் அவனிடம் கூறினார் அவர். உடனே அவன் தீர்வையைக் கட்டித் தன் பெயருக்குப் பட்டா எழுதி வாங்கிக் கொண்டான். இடையே பன்னீர்ச்செல்வம் வந்து தம் கடனுக்கு வழி சொல்லுமாறு மிரட்டினார். "பொறுத்துக் கொள்ளுங்கள்! தவணை முடிவதற்குள் உங்கள் கடனை எப்படியும் தீர்த்து விடுகிறேன்." - என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பினான். காந்திமதி ஆச்சி கூப்பிட்டனுப்பினாள். போனான். "என்ன தம்பீ! நான் அன்றைக்குச் சொல்லிய விஷயத்தை அம்மாவோடு கலந்து ஆலோசனை செய்தாயா? உங்கள் முடிவு என்ன? தெரிந்து கொள்வதற்காகத்தான் உன்னைக் கூப்பிட்டனுப்பினேன் நான்..." என்று கேட்டாள் ஆச்சி. ஆச்சிக்கு என்ன பதில் சொல்வதென்று தயங்கினான் அவன். திடீரென்று அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டைப் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து ஐந்து பச்சை நோட்டுக்களை எண்ணி வைத்தான். "ஆச்சி! ஐநூறு ரூபாய் இருக்கிறது. நான் கொழும்பிலிருக்கும் போது நீங்கள் என் தாய்க்குக் கொடுத்த கடனை அடைத்துவிட்டேன். எடுத்து எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்." "அடே! அசட்டுப் பிள்ளை; ... அதை யார் கொடுக்கச் சொல்லி அவசரப்படுத்தினார்கள் உன்னை இப்போது? நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் ஏதோ ரோஷப்பட்டுக் கொண்டு பணத்தை எண்ணி வைக்கிறாயே?" காந்திமதி ஆச்சி அவன் எண்ணி வைத்த பணத்தை எடுக்காமல் அவனை வினாவினான். அழகியநம்பி ஆச்சியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னான். "இதோ பாருங்கள் ஆச்சி! உங்கள் பெண் பகவதியைத் தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. ஆனால், நீங்கள் இன்னும் ஒரு வருஷம் எனக்காகப் பொறுத்திருக்க வேண்டும். உங்களுக்குப் பொறுமை இருக்குமானால் அதுவரை காத்திருக்கலாம். இந்தப் பதிலைத் தான் இப்போது நான் உங்களுக்குச் சொல்ல முடியும்." "ஏன்? ஒரு வருஷம் என்ன செய்யப் போகிறாயாம்?" "அது உங்களுக்கே தெரியும்." "அந்தப் படுகை மேட்டு நிலத்தில் உழைப்பையும் பணத்தையும், வீணாக்கப் போகிறாயாக்கும்." "ஆச்சி! பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நான் வருகிறேன்." - அழகியநம்பி அவள் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் விடைபெற்றுக் கொண்டு கிளம்பி விட்டான். கதவிடுக்கிலிருந்து அவனை நோக்கும் அந்தக் கண்கள் அன்றும் அங்கிருந்து அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தன. ஆனால், அவன் அவற்றைப் பார்க்கவில்லை. "மாமா! மாமா! உங்களை... உங்களை அம்மா கூப்பிடுகிறாள்" - என்று தெருவாசற்படி வரை அவனைத் துரத்திக் கொண்டு வந்தாள் கோமு. அவன் காதில் கேட்காதது போல் தெருவில் இறங்கி வேகமாக நடந்தான். "அம்மா! நான் கூப்பிட்டேன். அவர் பேசாமல் போய்விட்டார்." - என்று ஏமாற்றத்தோடு திரும்பி வந்து ஆச்சியிடம் கூறினாள் கோமு. "போனால் போகட்டும் போ." - என்று கோமுவுக்குச் சொல்லிவிட்டு, "அசட்டுப் பிள்ளை! தான் பிடித்தால் முரண்டு தான்." - என்று தனக்குள் கூறிக்கொண்டாள் ஆச்சி. "கோபித்துக் கொண்டு போகிறாரா அம்மா?" - தாயின் மனநிலை தெரியாமல் மறுபடியும் பேச்சுக் கொடுத்தாள் கோமு. "எப்படிப் போனால் உனக்கென்னடி! பேசாமல் போ உள்ளே." - என்று சிறுமியின் மேல் ஆச்சி எரிந்து விழுந்தாள். உள்ளே நின்று கொண்டிருந்த பகவதிக்கோ அழுகையே வந்துவிடும் போலிருந்தது. அந்தப் படுகை நிலத்து முயற்சியில் இறங்கிய நாளிலிருந்து அழகியநம்பிக்கு ஒரு வகையில் அல்ல; பலவகையில் மன வேதனைகள் ஏற்பட்டன. காந்திமதி ஆச்சியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு இட்டிலிக் கடைப் பக்கம் போவதே நின்றுவிட்டது. வீட்டில் அம்மா அவனோடு பேசுவதையே நிறுத்திக் கொண்டு விட்டாள். இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்று இரண்டு வாரத்துக்கு மேலாகிவிட்டது. ஊரில் பெரியவர்கள், - வயது வந்தவர்கள் அவனைப் பைத்தியக்காரன் போல் ஒதுக்கி நடத்துவது போன்று ஒரு பிரமை - ஒரு தாழ்வு மனப்பான்மை அவனுக்கு ஏற்பட்டது. சிலர் நேரிலேயே அவனைக் கேலி செய்தார்கள். இன்னும் சிலர் அவன் இல்லாத இடத்தில் கேலியும் ஏளனமும் செய்தார்கள். தெருவில் அவன் நாலு பேர் கண்களில் படும்படி நடந்து சென்றாலே அவனை ஒரு விநோதப் பொருளாகச் சுட்டிக் காட்டிச் சிரித்துப் பேசுகிற வழக்கம் அந்த ஊரில் ஏற்பட்டுவிட்டது. ஆனால், இவற்றாலெல்லாம் அவன் தளர்ந்து விடவில்லை. அவனுடைய நம்பிக்கை வெறியை - உழைப்பு வெறியை இவை வளர்த்து விட்டிருந்தன. அவன் மற்றவர்களிலிருந்து விலகித் தனியே ஒதுங்கினான். ஊரின் தோற்றத்தில் தனியே உயர்ந்து தெரியும் கோபுரம் போல் அவன் தனக்குத் தானே உயர்ந்து விளங்கினான். மறுநாளே அவனுடைய அசுர உழைப்பு அந்தப் படுகை நிலத்தில் ஆரம்பமாயிற்று. பக்கத்து ஊர் மாட்டுச் சந்தைக்குப் போய் எண்ணூறு ரூபாய்க்கு அருமையான காளைமாடுகளாகப் பார்த்து ஒரு ஜோடி பிடித்துக் கொண்டு வந்தான். ஏர், கலப்பை, மண்வெட்டி, கட்டைவண்டி, இந்த மாதிரி வகையில் ஒரு ஐநூறு ரூபாய் செலவாயிற்று. கிராமத்தில் அவனை நம்பி வந்து உழைக்க எந்தக் கூலியாளும் தயாராயில்லை. அதையெண்ணி அவனும் வருந்தவில்லை. 'பத்துக் கூலிகள் உடன் வந்து உழைத்தால் பத்து நாளில் பயிர் செய்து தண்ணீர் பாய்ச்சி விடலாம். தனியாகவே உழைத்தால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்; ஆகட்டுமே! நான் தனியாகவே உழைக்கிறேன். பத்தே மாதத்தில் இந்த மண்ணிலிருந்து பத்தாயிரம் ரூபாய் எடுக்கவில்லையானால் என் பெயர் அழகியநம்பியில்லை. இன்றைக்கு இந்தத் தொழிலில் பழக்கம் விட்டுப் போயிருக்கலாம்! என் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகப் - பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்த அதே வேளாண்மைத் தொழிலை நானும் ஏன் செய்யக் கூடாது? ஏன் செய்ய முடியாது? அதே வேளாளன் இரத்தம் தானே என் உடலிலும் ஓடுகிறது? அந்த இரத்தத்தின் சக்தியை இந்த நிலத்தில் உழைத்துக் காட்டுகிறேன்.' - நிலத்தில் இறங்கி வேலை செய்யும் முன் அவன் தனக்குத்தானே இப்படி ஒரு பிரதிக்ஞை செய்து கொண்டான். அந்த நிலத்திலிருந்த கற்களை அப்புறப் படுத்தவே முழுமையாக ஐந்து பகல்கள் அவன் தனியனாய் உழைத்தான். காலையில் ஒரு வாய் கஞ்சி குடித்துவிட்டு ஐந்து மணிக்குக் கருக்கிருட்டோடு வீட்டை விட்டுப் புறப்படுவான். பகல் சாப்பாட்டை வள்ளியம்மை வயலுக்குக் கொண்டு வந்து விடுவாள். கிராமத்துக்கு வந்த இருபத்தொன்றாவது நாள் காலையில் முதல் முதலாக அந்த நிலத்தில் ஏர் பூட்டினான் அவன். |