5. ஐந்து உள்ளங்கள் அழகியநம்பி தூத்துக்குடியில் பிரமநாயகத்தோடு கப்பலேறிய அதேநாள் இரவில் அவனுடைய ஊரில் ஐந்து உள்ளங்கள் ஓயாமல் அவனைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருந்தன. ஐந்து பேருடைய சிந்தனைகளும், ஐந்து விதங்களில் ஐந்து வேறுபட்ட தனித்தனிக் கோணங்களிலே அமைந்திருந்தன. அழகியநம்பியின் வீட்டில் அவனைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் கோரைப்பாயில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். அவளுடைய மனத்தில்தான் எத்தனை எத்தனை விதமான எண்ணங்கள்; கனவுகள் முந்துகின்றன. குறிஞ்சியூர் - அதுதான் அந்த ஊரின் பெயர் - மண்ணில் காலை வைத்து அந்த அம்மாளின் வாழ்க்கை நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்களைக் கழித்துவிட்டது. பிறந்த வீடு திருநெல்வேலி. ஆனால், பிறந்தவீட்டு வகையில் உறவினர் என்று குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளும்படியாக அங்கே யாரும் இல்லை. கணவனுக்கு முந்திக்கொண்டு சுமங்கலியாகப் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று அவளுடைய மனத்தில் எண்ணியிருந்தாள். ஆனால், கணவன் அவளை முந்திக் கொண்டு போய்விட்டான். ஒரு வயது வந்த பெண், ஒரு வயது வந்த பிள்ளை - இருவரையும், குடும்பத்தின் சக்திக்கு மீறின கடனையும், அவள் பொறுப்பில் வைத்துவிட்டுப் போயிருந்தான் கணவன். 'அழகியநம்பியின் படிப்பு அரைகுறையாக நின்றுவிட்டது. ஒரு வேளையும் இல்லாமல் ஊரோடு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் முடியுமா? கலியாணத்திற்கு ஒரு பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். அடைக்க வேண்டிய கடன்களுக்கும் குறைவில்லை. நல்ல வேளையாகப் பிரமநாயகம் வந்து சேர்ந்தார் அவரோடு அக்கரைச் சீமைக்கு அனுப்பியாயிற்று. இன்னும் சில வருஷங்களுக்கு அவன் முகத்தைக்கூடப் பார்க்க முடியாது. நானும், இந்தப் பெண்ணும் எப்படித்தான் தனியாகக் காலந்தள்ளப் போகிறோமோ? சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தாலும், ஆண் பிள்ளை வீட்டுக்கு ஒரு அழகுதான். அவன் போய் அரைநாள் கூட இன்னும் முழுதாகக் கழியவில்லை. அதற்குள்ளேயே இங்கே வெறிச்சென்று ஆகிவிட்டதே! வீடு முழுவதும் நிறைந்திருந்த கலகலப்பான பொருள் ஒன்று திடீரென்று இல்லாமலோ, காணாமலோ, போய்விட்டாற் போன்ற உணர்ச்சி ஏன் ஏற்படுகிறது? இன்றைக்கே இப்படி இருக்கிறதே? இன்னும் எத்தனை நாட்கள்; எத்தனை மாதங்கள்; எத்தனை வருடங்கள் - அவன் முகத்தில் விழிக்காமல் கழிக்க வேண்டுமோ? அவன் சம்பாதித்து உருப்பட வேண்டிய குடும்பம் இது?' 'இந்தப் பெண் வள்ளியம்மையை ஏதாவது நல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடுக்க வேண்டும். வயதாகிவிட்டது. கன்னி கழியாமல் எத்தனை நாட்கள் தான் வீட்டில் வைத்துக் கொண்டிருப்பது? அவனுக்கும்தான் என்ன! வயதாகவில்லையா? ஏதோ நாலைந்து வருஷம் அக்கரைச் சீமையில் ஓடியாடி நாலு காசு சேர்த்துக் கொண்டு திரும்பினானானால், கடன்களைத் தீர்த்துவிட்டு இந்தக் கல்யாணங்களையும் முடிக்கலாம். அதற்கப்புறம் தான் இந்தக் குடும்பம் ஒரு வழிக்கு வரும். எனக்கு நிம்மதி ஏற்படும். எல்லாவற்றுக்கும் அழகியநம்பியை நம்பித்தான் இருக்கிறேன். அவனால் ஆளாக வேண்டிய குடும்பம் இது.' 'பிரமநாயகம் முன்கோபக்காரர். செட்டு, சிக்கனம் என்று கண்டிப்பாக இருக்கிறவர். இவன் அந்த மனிதரிடம் எப்படிப் பழகப் போகிறானோ? ஏதாவது மனமுறிவு ஏற்பட்டுக் கோபித்துக் கொண்டு ஓடி வந்து விடாமல் இருக்க வேண்டும். விவரம் தெரிந்த பிள்ளைதான். அப்படியெல்லாம் வம்புக்குப் போய்க் காரியத்தைக் கெடுத்துக் கொள்கிறவன் இல்லை. குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளை. அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு சிந்தாமல் சிதறாமல் முன்னுக்கு வந்து விடுவான். பார்க்கலாம். எல்லாம் போகப் போகத்தானே தெரிகிறது!' உடலில் இலேசாக உறுத்தும் கோரைப்பாயில் புரண்டு கொண்டே பெருமூச்சு விட்டாள் அழகியநம்பியின் அன்னை. உறக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப மகனைப் பற்றிய நினைவுகள் அவள் மனத்தில் வட்டமிடலாயின. 'பாவம்! பதினொரு மணிக்குச் சாப்பிட்டு விட்டுப் போனது. இரண்டாம் வேளைக்கு எங்கே சாப்பிட்டானோ? கப்பலில் சாப்பாடு கிடைக்குமோ, கிடைக்காதோ? இந்தப் பிரமநாயகம் திடுதிப்பென்று வந்து குதிக்கப் போகிறாரென்று நான் கண்டேனா? இல்லையானால் ஆர அமர ஏதாவது பலகாரம் செய்து கட்டிக் கொடுத்திருக்கலாம். இத்தனை நாழிகைக்குக் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். புதிதாகப் போகிறவர்களுக்குக் கப்பலின் ஆட்டம் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைக் குமட்டி வாந்தி எடுத்துக் கஷ்டப்படுகிறானோ என்னவோ? 'சௌக்கியமாக வந்து சேர்ந்தேன்' - என்று இவன் கைப்படக் கடிதம் வந்து சேர்ந்தாலொழிய எனக்கு நிம்மதி இல்லை' - அந்தத் தாயின் சிந்தனையும் பெருமூச்சும், இரவும் வளர்ந்து கொண்டே இருந்தன. அவற்றுக்கு முடிவுதான் ஏது? அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |