6. உணர்வின் அலைகள் கருப்பு விரிப்பில் கைதவறிச் சிந்திய மல்லிகைப் பூக்களைப் போல் வானப்பரப்பு முழுதும் நட்சத்திரமணிகள் இறைபட்டுக் கிடந்தன. யானைத் தந்தத்தின் நுனிபோல் சிறிய பிறைச் சந்திரன் கருநீல வானத்தின் நெற்றிச் சுட்டிபோல் அழகாக இருந்தது. அழகியநம்பி கப்பலின் மேல் தளத்தில் நின்று கடலையும், வானத்தையும், அலைகளையும், நட்சத்திரங்களையும் சேர்த்து ஒரு புதிய அழகை உருவாக்க முயன்று கொண்டிருந்தான். அலைகளின் ஓசை, கப்பல் செல்லும் பொழுது ஏற்பட்ட ஒலி, இந்த இரண்டும் அவன் மனத்தில் ஒருவகைக் கிளர்ச்சியை உண்டாக்கின. எந்த வேகமாகச் செல்லும் வாகனத்தில் சென்றாலும் அந்த வேகத்தில் அடுக்கடுக்கான உயரிய சிந்தனைகள் சிலருக்கு ஏற்படும். கற்பனை வெளியில் எங்கோ, எதையோ நோக்கி உணர்வுக்கும் எட்டாததொரு பெரு வெளியில் பறப்பது போன்று உணர்ச்சி, பஸ்ஸில், இரயிலில், விமானத்தில் பிரயாணம் செய்யும்போது சிலருக்கு ஏற்படும். இப்போது கப்பலில் செல்லும்போது அழகியநம்பிக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டது. அந்த ஆழ்கடலின் பேரலைகளைப் போல அவன் மனத்தில் எண்ணற்ற நினைவு அலைகள் மோதின. நடந்தவை, நடக்கின்றவை, நடக்கவேண்டுமென்று அவன் விரும்பியவை - எல்லாவற்றையும் வஞ்சகமின்றி நினைத்தது அவன் மனம். அந்தச் சிறிய கப்பல் சில பல பிரயாணிகளையும் ஏற்றுமதிச் சரக்குகளையும் மட்டும் கொண்டு செல்வதாக அவனுக்குத் தோன்றவில்லை. தனக்கே தெரியாத தன்னுடைய எதிர்காலத்தை நோக்கித் தன்னை இழுத்துக் கொண்டு போவது போல் தோன்றியது. பிரமநாயகம் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தான். கப்பலின் ஆட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் சோர்ந்துபோய்ப் படுத்திருந்தார் அவர். மேல் தளத்திலிருந்த பிரயாணிகளில் பெரும்பான்மையானவர்கள் அதே நிலையில்தான் இருந்தனர். அதே கப்பலில் அவனோடு பிரயாணம் செய்த இரு ஆங்கிலோ இந்திய யுவதிகள் மட்டும் அவனைப் போலவே மேல் தளத்தில் கிராதி அருகே நின்று கடற் காட்சிகளை இரசித்துக் கொண்டிருந்தனர். மேல் தளத்தில் மின்சார விளக்கொளியில் கீச்சுக் குரலில் ஆங்கிலப் பேச்சும், கிண்கிணிச் சிரிப்புமாக அவர்கள் நின்று கொண்டிருந்த நிலை ஏதோ ஒரு நல்ல ஓவியம் போல் காட்சியளித்தது. அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கும், அவன் நின்று கொண்டிருந்த இடத்திற்கும் நடுவே பத்துப் பன்னிரண்டு அடி இடைவெளி இருக்கலாம். பரங்கிப்பூ நிறம், சுருள் சுருளாக 'பாப்' செய்த கூந்தல், கையில் அலங்காரப் பை, முல்லை அரும்புகள் உதிர்வது போலச் சிரிப்பு. அழகிய நம்பியின் பார்வை இரண்டொரு விநாடிகள் அந்தப் பெண்களின் மேல் நிலைத்தது. அவர்களும் அவனைப் பார்த்தனர். கூச்சம், வேறுபாடறியாத அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே நடந்து அவனருகே வந்துவிட்டனர். கப்பல் செல்லும் போது நடந்தால் தள்ளாடுமே; அந்தப் பெண்கள் குதிகால் உயர்ந்த பாதரட்சையைத் தளத்தில் ஊன்றித் தடுமாறித் தடுமாறி நடந்தது வேடிக்கையாக இருந்தது. அழகியநம்பி அவர்களுடைய புன்னகையை ஏற்றுக் கொள்வதுபோல் பதிலுக்குப் புன்னகைத்தான். இடுப்புப்பட்டைகள் இறுகித் தைக்கப்பட்டிருந்த அந்த கவுன்களோடு அவர்களைப் பார்க்கும் போது, 'இல்லையோ உண்டோவெனச் சொல்லிய இடை' என்று எப்போதோ கேள்விப்பட்டிருந்த இலக்கிய வரிகள் அவன் நினைவில் எழுந்தன.
அந்த யுவதிகள் அவனருகே வந்து நின்றுகொண்டு சரமாரியாக ஆங்கிலத்தில் கேள்விகளைத் தொடுத்தனர். அழகியநம்பி சிரித்துக் கொண்டே அவர்களுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறலானான்.
"நீங்கள் இலங்கையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரப்போகிறீர்களா" - இது அவர்கள் அவனைக் கேட்ட முதல் கேள்வி. அழகியநம்பி ஒருகணம் தயங்கினான். அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவதென்று சிந்தித்தான். சொற்களையும் முந்திக் கொண்டு சிரிப்புத்தான் அவனுக்கு வந்தது. அவர்கள் முகங்களை ஏறிட்டுப் பார்த்ததுமே அவனுடைய இதழ்கள் நெகிழ்ந்து சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றன. "ஊர் சுற்றிப் பார்க்கப் போகவில்லை, பிழைப்புக்காக வேலை தேடிப் போகிறேன். சில ஆண்டுகள் தொடர்ந்து இலங்கையிலே இருக்க நேரிடும்," - என்று ஆங்கிலத்திலேயே அவர்களுக்கு மறுமொழி கூறினான். அதற்கு மேலும் அவர்களுடைய உரையாடல் தொடர்ந்தது. அவனைப்பற்றிய விவரங்களை அவர்கள் கேட்டார்கள். சிறுசிறு கேள்விகளுக்கு அழகியநம்பி கூறிய பதிலிலிருந்து அவனுடைய வாழ்க்கைச் சுருக்கத்தையே ஓரளவு தெரிந்து கொண்டார்கள் அவர்கள். அவனாவது அவர்கள் கேட்டுப் பதில் சொன்னான். அந்தப் பெண்களோ அவன் கேட்கவேண்டுமென்று காத்திராமல் தாங்களாகவே தங்களைப் பற்றிய விவரங்களைக் கூறத் தொடங்கி விட்டனர். யாரோ நெருங்கிய உறவுக்கார இளைஞனிடம் பேசிக் கொண்டு நிற்கிற மாதிரிக் கப்பலின் மேல் தளத்துக் கிராதியில் ஒய்யாரமாகச் சாய்ந்து அவனிடம் பேசிக்கொண்டு நின்றார்கள் அந்த அழகிகள். அவர்கள் கூறியவற்றிலிருந்து அவன் கீழ்க்கண்ட விவரங்களைத் தெரிந்து கொண்டான். 'அவர்கள் இருவரில் சற்று உயரமாகவும், ஓரிரு வயது அதிகமாகவும் தோன்றியவள் பெயர் லில்லி. இளையவள் பெயர் மேரி. இருவரும் உடன் பிறந்த சகோதரிகள். அவர்களுடைய தகப்பனார் 'வோட்ஹவுஸ்' இலங்கை அரசாங்க இராணுவ இலாகாவில் பெரிய பதவி வகிப்பவர். லில்லி கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள். மேரி இன்னும் படிப்பை முடிக்கவில்லை. இராயல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் அப்போது ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை' - இவைதான் அவர்கள் கூறியவற்றிலிருந்து அவன் அறிந்து கொண்டவை. அவனுடைய பெயர் லில்லிக்குச் சரியாகச் சொல்லவரவில்லை. 'மிஸ்டர் அலக்நம்பீ!' -என்று சொல்லிச் சொல்லித் திணறிய அவள், "உங்களை நான் முழுப்பெயரும் சொல்லிக் கூப்பிட முடியாது. எனக்குச் சொல்ல வரவில்லை, மன்னியுங்கள் நம்பி என்று மட்டுமே சொல்லிக் கூப்பிடுகிறேன்,"-என்றாள். "உங்களுக்கு எப்படிச் சொல்ல வருகிறதோ, அப்படிச் சொல்லிக் கூப்பிடலாம்," - என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அழகியநம்பி. இந்தச் சமயத்தில் சோர்ந்து படுத்துக் கொண்டிருந்த பிரமநாயகம் எழுந்து உட்கார்ந்தார். அவருடைய பார்வைக்கு முதன்முதலில் இலக்கானது கிராதியைப் பிடித்தவாறு நின்று பேசிக் கொண்டிருந்த அழகியநம்பியும், அந்தப் பெண்களும்தான். அழகியநம்பியோ, அல்லது அந்தப் பெண்களோ, பிரமநாயகம் விழித்துக் கொண்டதையும், தங்களைப் பார்ப்பதையும் கவனிக்கவில்லை. அவர்கள் பேச்சும் சிரிப்புமாகத் தங்களை மறந்திருந்தார்கள். இயல்பாகவே உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே நல்ல உச்சரிப்போடு இனிய குரலில் சரளமான ஆங்கிலம் பேசப் பழகியிருந்தான் அழகியநம்பி. கல்லூரி நாட்களில் அந்தப் பழக்கம் நன்றாகப் பண்பட்டிருந்தது. அழகியநம்பியின் உயர்ந்த வளமான கட்டுடலும், இனிய முகமும், கவர்ச்சிகரமான சிரிப்பும், சரளமான பேச்சும் அந்தப் பெண்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. எவற்றைப் பற்றிப் பேசுவது? எவ்வளவு நேரம் பேசுவது - என்று தோன்றலாம்! பேசவேண்டுமென்ற ஆசையும் பேசுவதற்குப் பிடித்தமான ஆளும் கிடைத்து விட்டால் விஷயமா இல்லாமற் போய்விடப் போகிறது? கப்பலின் ஆட்டம், நட்சத்திரங்களின் அழகு, கடலும் வானமும், - எதை எதை யெல்லாமோ பேசிச் சிரித்துக்கொண்டு நின்றார்கள் அந்த மூவரும். பிரமநாயகம் பிரமித்தார். 'ஏதேது பையன் பெரிய ஆளாக இருப்பான் போலிருக்கிறதே? இங்கிலீஷில் சரமாரியாகப் பொழிகிறானே? பலசரக்குக் கடையில் கணக்குப் பிள்ளையாக உட்கார்ந்து அடங்கி ஒடுங்கிக் காலம் தள்ளுவானா? அல்லது நம்மை மீறிப்போய் விடுவானா?' - தமிழில் சரியாகக் கையெழுத்துப் போடும் அளவிற்குக்கூட அறிவில்லாத ஒரு பணக்காரர் தம்மிடம் வேலைக்கு வரும் பையனின் அறிவை எண்ணி வியந்ததில் ஆச்சரியமில்லை. உணவு நேரம் வந்தது. "இன்றைக்கு இந்தக் கப்பலில் உங்களைச் சந்தித்ததை எங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம். நீங்கள் இப்போது எங்களுடன் சாப்பிடுவதற்கு வரவேண்டும்" - என்று லில்லியும் மேரியும் அவனிடம் மன்றாடினார்கள். திடீரென்று கிடைத்த உரிமையையும், அன்பையும் கண்டு அழகியநம்பி திக்குமுக்காடினான். பிரமநாயகம் ஏதாவது நினைத்துக் கொள்வாரே என்று தயங்கி அவர் பக்கமாகப் பார்த்தான். அவர் வெகுநேரமாகத் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுக்கு என்னவோபோல இருந்தது. சரி என்பதா, மாட்டேன் என்பதா; - என்ற தயக்கத்தோடு மேரியையும், லில்லியையும் ஏறிட்டுப் பார்த்தான் அவன். அல்லி இதழ்களில் கருநாவற் கனிகளைப் பதித்தாற் போன்ற அந்த நான்கு கண்கள் ஏக்கத்தோடு அவன் கூறப்போகும் பதிலையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. இளமையும், எழிலும், ஒன்றோடொன்று போட்டியிடும் அந்தச் சுந்தர முகங்கள் வாடும்படியான பதிலைச் சொல்ல அவன் விரும்பவில்லை. அதே சமயத்தில் தன்னை ஊர்தேடி வந்து அழைத்துச் செல்லும் பிரமநாயகம் வித்தியாசமாக நினைத்துக் கொள்ள இடங்கொடுக்கவும் அவன் தயாராக இல்லை. "நீங்கள் இருவரும் தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும். நான் அந்த மனிதரோடு புறப்பட்டு வந்திருக்கிறேன். அவரைத் தனியே விட்டுவிட்டு உங்களோடு சேர்ந்து சாப்பிட்டால் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளுவார்" - என்று ஆங்கிலத்தில் கூறினான் அழகியநம்பி. அதைக் கேட்டு அவர்கள் இருவரும் வெண் பல் வரிசை செவ்விதழ்களுக்கிடையே தெரியக் கலகலவென்று சிரித்தனர். 'பிரமநாயகத்தைச் சுட்டிக் காட்டி, நான் பேசியவுடனே இவர்கள் இப்படிச் சிரிக்கிறார்களே, அந்த மனிதர் நாங்கள் மூவருமாகச் சேர்ந்து அவரைக் கேலி செய்வதாக நினைத்துக் கொள்ளப் போகிறாரே!' - என்று உள்ளூற வருந்தி அஞ்சினான் அழகியநம்பி. "ஓ! இதற்குத்தானா இவ்வளவு நடுங்குகிறீர்கள்! அவரையும் நம்மோடு சாப்பிடுவதற்கு அழைத்துக் கொண்டுவிட்டால் போகிறது" - என்று சொல்லிக் கொண்டே மேரி பிரமநாயகத்தை அழைப்பதற்காக அவர் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி ஓடினாள். ஆடுகிற கப்பலில் சிவப்பு கவுன் அணிந்த அவள் தாவி ஓடும் காட்சி உள்ளத்தை அள்ளியது. பட்டுப் பூச்சி பறப்பதுபோல் என்பதா, அல்லது மான் குட்டி துள்ளுவதுபோல் என்பதா, - அதை எப்படிச் சொல்லுவதென்று அழகியநம்பின் கற்பனைக்கு எட்டவில்லை. "உங்கள் தங்கை மான் குட்டியாகப் பிறந்திருக்க வேண்டியவள்" - என்று புன்னகையோடு லில்லியைப் பார்த்துச் சொன்னான் அவன். "அவளுக்கு எப்போதுமே துறுதுறுப்பான சுபாவம்" - என்று சொல்லி நகைத்தாள் லில்லி. திடீரென்று அந்த வெள்ளைக்காரப் பெண் சிரித்துக் கொண்டே தன் அருகில் வந்து நின்றுகொண்டு இங்கிலீஷில் ஏதோ சொல்லவே பிரமநாயகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. பரக்கப் பரக்க விழித்தார். அர்த்தமில்லாமல் சிரித்தார். சிரிப்பில் அசடு வழிந்தது. அவள் தன்னிடம் என்ன சொல்லுகிறாள் என்பது மட்டும் அவருக்கு விளங்கவில்லை. தளத்தின் ஓரத்தில் லில்லியோடு நின்றுகொண்டிருந்த அழகியநம்பி அவருடைய நிலையை விளங்கிக்கொண்டு அருகில் வந்தான். 'மேரி என்ன சொல்லுகிறாள்?' என்பதை அவருக்குத் தமிழில் விளக்கினான். "உங்களையும் என்னையும் அவர்களோடு சேர்ந்து சாப்பிட வேண்டுமென்று சொல்லுகிறாள்" - என்றான். அவன் கூறியதைக் கேட்டுவிட்டு அவர் முகத்தை இலேசாகச் சுளித்தார். அழகியநம்பியின் பக்கமாக நிமிர்ந்து உற்றுப் பார்த்தார். நாகரிகத்தையும், அன்பையும் தெய்வமாக மதிக்கும் களங்கமற்ற குழந்தை உள்ளம் படைத்த மேரிக்கு முன்னால் பிரமநாயகம் தன்னை அவமானப்படும்படி செய்துவிடுவாரோ என்று பயந்தான் அழகியநம்பி. பிரமநாயகத்தைப் போன்ற ஒரு மனிதர் அந்த மாதிரி நிலையில் பண்பாக, நாகரிகமாக நடந்து கொள்வார் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. "தம்பீ! இந்த மாதிரிப் பழக்கவழக்கமெல்லாம் இப்போது வேண்டாம். வெள்ளைக்காரப் பெண் பிள்ளைகள் இப்படித்தான் சிரித்துச் சிரித்துப் பேசி ஆளை மயக்குவார்கள். கடைசியில் குடி கெட்டுப் போகும்" - நல்லவேளை! பிரமநாயகம் தமிழில் தான் இப்படிச் சொன்னார். மேரிக்கும் லில்லிக்கும் தான் தமிழ் தெரியாதே! "அதெல்லாம் ஒன்றுமில்லை. சும்மா, பொழுது போவதற்காக அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு மரியாதைக்காக நம்மையும் சேர்த்துச் சாப்பிடக் கூப்பிடுகிறார்கள். நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக் கூடாது" - என்று பணிவான குரலில் பிரமநாயகத்துக்குப் பதில் சொன்னான் அழகியநம்பி. "அவர்கள் வெள்ளைக்காரப் பெண்கள், மாமிச உணவு சாப்பிடுவார்கள். கூப்பிடுகிறார்களே, என்று மரியாதையைப் பார்த்தால் நாமும் மாமிசம் சாப்பிட முடியுமா?" - பிரமநாயகம் சிறிது கோபத்துடன் இரைந்த குரலில் கேட்டார். உடனே அழகியநம்பிக்கும் அவர்களுடைய உணவைப் பற்றிய அந்தச் சந்தேகம் உண்டாயிற்று. பக்கத்தில் நின்று கொண்டிருந்த மேரியை நோக்கி, "மேரி, எனக்கு ஒரு சிறு சந்தேகம். நாங்கள் மரக்கறி உணவு உண்பவர்கள். நாங்கள் உங்களோடு உண்ணுவதானால்...?" என்று சொல்ல வந்ததை அரைகுறையாகச் சொல்லிவிட்டுக் கேள்விக் குறிப்போடு அவள் முகத்தைப் பார்த்தான். "ஓ! அந்தச் சந்தேகமே உங்களுக்குத் தேவையில்லை. இப்போது நாங்கள் சாப்பிடப்போவதும் உங்களுக்கு அளிக்கப் போவதும் நீங்கள் உண்ண முடிந்த உணவே. ரொட்டி, பழங்கள், வெண்ணெய், தேநீர் இவற்றில் எதுவுமே நீங்கள் மறுக்ககூடியவை அல்லவே?" - என்றாள் மேரி. அவள் சிரித்த சிரிப்பு இதயத்தைக் கவ்வியது. கடுகடுப்பாக இருந்த பிரமநாயகமே அந்தச் சிரிப்பில் நெகிழ்ந்தார். அவள் உணவைப் பற்றிக் கூறியதை அழகியநம்பி தமிழில் மொழிபெயர்த்து அவருக்குச் சொன்னான். "பரவாயில்லை தம்பி! நீ வேண்டுமானால் போய்ச் சாப்பிடு! எனக்குச் சோறு சாப்பிட்டுப் பழக்கமாகிவிட்டது. இந்த நேரத்திற்கு ரொட்டி சாப்பிட்டு வயிறு நிறையாது. வற்புறுத்திக் கூப்பிடுகிறார்களே; மாட்டேனென்று சொல்ல வேண்டாம். நீ மட்டும் போய்விட்டு வா" என்றார் பிரமநாயகம். அதற்குமேல் அவரைக் கட்டாயப்படுத்திப் பயனில்லை என்று அழகியநம்பிக்குத் தெரியும். அவன் மேரியோடு தான் மட்டும் கிளம்பினான். 'அவர் வரவிரும்பவில்லை' என்று பிரமநாயகம் வராதது பற்றிச் சுருக்கமாக மேரிக்குச் சொன்னான். வலதுபுறம் லில்லி, இடதுபுறம் மேரி, நடுவில் அவன். இப்படி அவர்கள் உணவு அறைக்கு நடந்து சென்றபோது அந்தக் கப்பலில் விழித்துக் கொண்டிருந்த அத்தனை விழிகளும் அவர்களையே பார்த்தன. |