1. கனவுக் கன்னி

     அன்று சனிக்கிழமை. சனிக்கிழமை என்றால் சாதாரண சனிக்கிழமை அல்ல; அந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அது!

     இரண்டாவது சனிக்கிழமையில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? - ஒரு விசேஷமும் இல்லை, அரசாங்க அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அன்று விடுமுறை என்பதைத் தவிர!

     சனிக்கிழமையில் விசேஷம் ஒன்றும் இல்லா விட்டாலும், சனிக்கிழமை விடுமுறையில் மட்டும் ஒரு விசேஷம் இருக்கத்தான் இருந்தது - அதுதான் ஞாயிறு விடுமுறையும் அத்துடன் சேர்ந்து வருவது!

     இந்த விசேஷம் மாதத்துக்கு ஒரு முறை தான் என்றாலும், இரண்டு நாள் விடுமுறையைச் சேர்ந்தாற் போல் அனுபவிக்கும் மகிழ்ச்சி பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு அடுத்தாற் போல் அரசாங்க அலுவலர்களுக்குத் தானே கிட்டுகிறது?

     அத்தகைய மகிழ்ச்சியை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற அரசாங்க அலுவலர்களில் ஒருவனான மோகன், அந்த மாதத்திய இரண்டு நாள் விடுமுறையை எப்படிக் கழிப்பது என்பதைப் பற்றி அதற்கு முந்திய நாளே ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அதன்படி, காலை எழுந்தவுடன் காபி; காபிக்குப் பிறகு, ‘போகிற வழிக்குப் புண்ணியம் தேடித்தரும் ரேடியோ ஒலிபரப்பாளர்’களுக்கு ‘வந்தனம்’ தெரிவித்து விட்டுப் பத்திரிகைகளில் கவனம் செலுத்துவது; அதற்குப் பிறகு வழக்கம் போல் ஒன்பது மணிக்குச் சாப்பாடு; சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு ‘சின்னத் தூக்கம்’ - வழக்கத்துக்கு விரோதமாகத்தான்!

     ஒரு மணிக்கு ‘அலாரம்’ தன்னை எழுப்பாவிட்டாலும் ‘அம்மா’ எழுப்பி விடுவாள், ‘டிபன்’ சாப்பிட! அவள் ‘டிப’னுக்கும் அன்று மட்டும் ‘வந்தன’த்தைத் தெரிவித்துவிட்டு ஏதாவது ஒரு ‘நல்ல ஓட்டலு’க்குப் போய்விட வேண்டியது, ‘நல்ல டிபன்’ சாப்பிட! - அது முடிந்ததும் பகல் காட்சி, ஆங்கிலப் படம்; மாலைக் காட்சி, இந்திப்படம்; இரவுக் காட்சி, தமிழ்ப் படம் - அதாவது, ‘தூக்கம் வந்தாலும் பரவாயில்லை’ என்ற ‘தனிச்சலுகை’ தமிழ்ப் படத்துக்கு மட்டும்!

     ‘சனிக்கிழமை’க்கு மட்டும் தயாரித்து வைத்திருந்த இந்தத் ‘திட்ட’த்தை எந்த விதமான இடையூறும் இல்லாமல் நிறைவேற்றிவிட்டு இரவு ஒரு மணிக்கு அவன் வீடு திரும்பிய போது, பாழாய் போன ‘ஸ்கூட்டர்’ போட்ட சத்தம் அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது, அவன் அப்பா ஆபத்சகாயத்தினிடம். “ஏண்டா, மோகன்! இந்த நேரத்தில் நீ எங்கே போய்விட்டு வருகிறாய்?” என்றார் அவர், மாடியில் இருந்த தம்முடைய அறையின் ஜன்னல் வழியாக அவனை எட்டிப் பார்த்து.

     அப்பா சாதாரண அப்பாவாயிருந்தால், ‘சரிதான், போங்காணும்!’ என்று ‘தற்காலப் புத்திர சிகாமணி’களைப் பின்பற்றி அவனும் சொல்லிவிட்டிருப்பான். ஆனால் முன்னாள் போலீஸ் அதிகாரியான அவரோ எப்படி வருகிறது, எங்கிருந்து வருகிறது என்று வீட்டில் உள்ளவர்களுக்குக் கூடத் தெரியாமல் அப்போதும் ஆயிரம் இரண்டாயிரம் என்று சம்பாதித்துக் கொண்டே இருந்தார். ஆகவே தனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, “நான் வரவில்லை அப்பா, ரோட்டில் யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள்!” என்றான் அவன். அந்த மனிதர் அத்துடன் அவனை விட்டிருக்கக் கூடாதா? - அதுதான் இல்லை; “வருவதாவது, வண்டி நிற்கிறதேடா!” என்றார் அவர், அப்பொழுதும் அவனை விடாமல். “வண்டி நம்முடைய வீட்டில் நிற்கவில்லை; பக்கத்து வீட்டில் நிற்கிறது!” என்று அவனும் விடாமல் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். அவனுடைய போதாத வேளையின் காரணமாக, அந்த நேரத்தில் பரிட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்தாள், அவன் தங்கை அருணா. அவள் அவனைக் கண்டதும், “வண்டி பக்கத்து வீட்டில் நிற்கவில்லை அப்பா...!” என்று ஆரம்பித்தாளோ இல்லையோ, ‘சட்’டென்று தன் சட்டைப் பையிலிருந்த ‘சாக்லெட்’டில் ஒன்றை எடுத்து அவள் வாயில் போட்டு மூடினான் அவன். அதற்குள், “எங்கே நிற்கிறது?” என்று கேட்டார் அவர், “எதிர் வீட்டில்!” என்றாள் அவள்!

     அரசாங்க அலுவலகங்களில் மட்டுமின்றி, வீட்டிலும் வேலை செய்யும் ‘லஞ்ச’த்தின் ‘மகிமை’யைப் பற்றி எண்ணிக் கொண்டே மோகன் சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டுப் படுக்கப் போனான், தன் அறைக்கு.

     அப்போது படிக்கும் பெண்ணுக்கு துணையாக அங்கே படுத்துக் கொண்டிருந்த அவன் தாயார், “ஏண்டா, சாப்பிடவில்லையா?” என்று சைகையின் மூலம் கேட்டாள், அவன் காலைச் சீண்டி.

     அவளை நன்றியுணர்ச்சியுடன் ஒரு பார்வை பார்த்து விட்டு ‘வேண்டாம் அம்மா, நான் சாப்பிட்டு விட்டேன்!’ என்று தானும் பதிலுக்குச் சைகை காட்டிவிட்டுப் படுக்கையை எடுத்து விரித்தான் அவன்.

     மறுநாள் ‘ஞாயிற்றுக்கிழமை திட்ட’த்தின்படி அவன் தூங்கிக் கொண்டிருந்த போது - அதாவது காபி, பத்திரிகை, சாப்பாடு ஆகியவற்றையெல்லாம் அன்றைய ‘தூக்க’த்துக்காகத் ‘தியாகம்’ செய்துவிட்டு அவன் தூங்கிக் கொண்டிருந்த போது, ஓர் இனிய கனவு - அந்தக் கனவிலே அவனுடைய ‘லட்சிய மனைவி’ தோன்றி, அவனை மெல்லத் தொட்டு விட்டுச் சிரித்தாள்; அந்த ‘வெள்ளிமணிச் சிரிப்’பிலே கொள்ளை இன்பம் கண்ட அவன் துள்ளி எழுந்து உட்கார்ந்தான். தலையில் குதிரைவால் கொண்டை; அந்தக் கொண்டையைச் சுற்றிப் ‘பிளாஸ்டிக்’ பூ வளையம்; நெற்றியில் ‘ஆட்டோமாடிக் சிக்ன’லை நினைவூட்டும் மூவர்ணப் பொட்டு; கண்ணில் ‘நானோக்குங் காலை நிலம் நோக்காம’லிருப்பதற்காகக் கறுப்புக் கண்ணாடி; காதில், ரயிலில் நிற்கும் பிரியாணிகளின் கைப்பிடிகளைப் போன்ற இரண்டு வளையங்கள்; உதட்டில் ‘அபாய அறிவிப்பு நிற’த்தை ஒத்த ‘லிப்-ஸ்டிக்;’ கழுத்தில் ‘எது எடுத்தாலும் ஆறணா’ முத்து வடம்; அழகை அவலட்சணமாக எடுத்துக் காட்டும் ‘நைலான்’ சேலை - ‘ஆகா, லட்சிய மனைவி என்றால் இவள் அல்லவா என் லட்சிய மனைவி!’ என்ற வியப்புடன் அவன் அவளுடைய கைகளைப் பற்றிய போது, “தயவு செய்து என்னைத் தொடாதீர்கள்!” என்றாள் அவள் கொஞ்சம் விலகி நின்று.

     “ஏன் அன்பே, ஏன்?” என்றான் அவன், பதட்டத்துடன்.

     “பவுடர் கலைந்து போகும்!”

     “பவுடரா, கையிலா!”

     “இதில் என்ன ஆச்சரியம், என் உடம்பில் பவுடர் இல்லாத இடமே கிடையாதே!”

     “ஓ, ஐ, ஸீ!”

     “உங்களுக்குத் தெரியாதா, சினிமா நடிகைகள் எல்லாம் அப்படித்தான் பூசிக் கொள்வார்களாம்; பட்டுப்போல் மேனி பளபளக்கும் ‘அந்த ரகசிய’த்தை என் சிநேகிதி ஒருத்தி என்னிடம் சொன்னாள். அன்றிலிருந்து நானும்...”

     “ரொம்பச் சரி, ரொம்பச் சரி! நான் மட்டும் என்னவாம்? என்னுடைய ‘ஸிஸர் கிராப்’ கூட சினிமா நடிகர்களைப் பார்த்து வைத்துக் கொண்டதுதானே?”

     “ஆமாம், நீங்கள் ஏன் அரும்பு மீசைக்குப் பதிலாக அந்தப் ‘பஞ்சாப்வாலா தாடி’யை வைத்துக் கொள்ளவில்லை?”

     “நமைக்கும் போது சொரிந்த விட ஆள் இல்லாமல்தான்! இப்போதுதான் நீ வந்துவிட்டாயே, இனிமேல் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!”

     “ஐயோ வேண்டாம்! நான் சொரிய ஆரம்பித்தால் உங்களுக்கு அடிக்கடி நமைக்க ஆரம்பித்துவிடும்!” என்று மறுபடியும் தன் ‘வெள்ளி மணிச் சிரிப்’பைக் கலகலவென்று உதிர்த்தாள், அவள்!

     அந்தச் சிரிப்பிலே சொக்காமல் சொக்கி, “அதை ஏன் சொல்கிறாய், போ! ஒரு முறை நான் அந்தத் தாடியை வைத்துக் கொண்டு பட்ட பாடு - இரண்டு கைகள் போதவில்லை. அதைச் சொரிய!” என்றான் அவன்.

     “அதற்காக என்னுடைய கைகளையும் சேர்த்து நாலு கைகளாக வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் முடியாது; அடிக்கடிக் கடித்துத் துப்ப இரண்டு கைகளில் உள்ள நகங்கள் போதாமல் ஏற்கெனவே நான் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேனாக்கும்?” என்றாள் அவள்.

     “சரி வேண்டாம் அந்தத் தொல்லை பிடித்த தாடி! வெளியே போவோமா?” என்றான் அவன்.

     “நான் தயார்!” என்றாள் அவள்.

     “இதோ நானும் தயார்!” என்று இரண்டே நிமிஷத்தில் அவனும் தயாராக, இருவரும் ‘டக்டக், டக்டக்’ என்று ‘தாள லயம்’ தவறாமல் நடந்து வெளியே வந்தனர்.

     வாசலில் தயாராயிருந்த ‘ஸ்கூட்ட’ரை வழக்கம் போல் அவன் வந்து எடுத்தானோ இல்லையோ, “என்னைப் பின்னால் ஏறிக் கொள்ளச் சொல்லப் போகிறீர்களா, என்ன?” என்றாள் அவள், அவனை ஏறிட்டுப் பார்த்து.

     “ஏன் பயமாயிருக்கிறதா?” என்றான் அவனும் அவளை ஏறிட்டுப் பார்த்து.

     “பயமாவது! நீங்கள் பின்னால் ஏறிக்கொள்ளுங்கள்; நான் முன்னால் உட்கார்ந்து ஓட்டுகிறேன்!” என்றாள் அவள்!

     அவ்வளவு தான்! அவன் குதிகுதியென்று குதித்தபடி, “என் ஆசையும் அதுதான்! வா அன்பே, வா!” என்று மறுபடியும் அவள் கையைப் பிடிக்கப் போய், மறுபடியும் அவள் எச்சரிப்பதற்கு முன்னால் ‘மறந்து விட்டேன்’ என்று கொஞ்சம் பின் வாங்கி, ஸ்கூட்டரை அவளிடம் ஒப்படைத்து விட்டு அவளுக்குப் பின்னால் ஏறிப் போனான்!

     இப்படிப்பட்ட சமயத்தில், “ஏண்டாப்பா, மோகன்! மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டதேடா, எழுந்து சாப்பிடேன்!” என்று அவனை அவன் அம்மா வந்து எழுப்பினால் எப்படியிருக்கும், அவனுக்கு? - “போம்மா! நல்ல சமயம் பார்த்தாய், என்னை எழுப்ப!” என்றான் எரிச்சலுடன்.

     “ஏண்டா, அப்படி எரிந்து விழுகிறாய்? காலையில் காபி கூடச் சாப்பிடாமல் தூங்குகிறாயே என்று தானே எழுப்பினேன்?” என்றாள் அவள், ஒன்றும் புரியாமல்.

     “எனக்குக் காபியும் வேண்டாம், சாப்பாடும் வேண்டாம்; தூங்க விடு, போதும்!” என்று மறுபடியும் கவிழ்ந்து படுத்துக் கொண்டு தூங்க முயன்றான் அவன். ஒருவேளை அந்தக் கனவு மீண்டும் தொடர்ந்தாலும் தொடரலாம் என்ற நம்பிக்கையில்!

     ஆனால் அவன் எதிர்பார்த்தபடி தூக்கமும் தொடரவில்லை; கனவும் தொடரவில்லை - அவற்றுக்குப் பதிலாக அம்மாவைத் தொடர்ந்து அவனுடைய நண்பன் மணி வந்து, வழக்கம் போல் அவனுடைய முதுகில் ஒரு குத்துக் குத்தினான். அந்தக் குத்திலிருந்தே வந்திருப்பவன் மணி என்பதைத் தெரிந்து கொண்ட மோகன், “என்ன துரதிர்ஷ்டம், போடா!” என்று சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான், அடுத்த குத்துக்குத் தன் முதுகை அவனிடம் காட்ட விரும்பாமல்!

     ‘சரி, துரதிர்ஷ்டத்துக்குப் பின்னால் ஏதோ ஒரு கதை இருக்கிறது’ என்பதை ஊகித்துக் கொண்ட மணி, “கதையைச் சொல்லு?” என்றான், பேச்சை வளர்த்த விரும்பாமல்.

     “ஓர் இனிய கனவு!” என்று ஆரம்பித்தான், மோகன்.

     “பகலிலா?” என்று கேட்டான், மணி.

     “ஆமாம்.”

     “பலிக்காது!”

     “என்னடா, எடுக்கும்போதே இப்படிச் சொல்கிறாயே?”

     “இனிய கனவு என்றால் அதை இரவில் கண்டிருக்க வேண்டும்; பகலில் கண்டிருக்கிறாயே, நீ?”

     “போடா, போ! கனவைக் கூட விரும்பும் போது காண முடியுமா, என்ன?”

     “சரி, சொல்லு?”

     “என் ‘லட்சிய மனைவி’யைப் பற்றித்தான் ஏற்கெனவே நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேனே, அவள் இன்று என்னுடைய கனவில் வந்தாள்!”

     “வந்து...”

     “தன் வெள்ளிமணிச் சிரிப்பாலே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாள்!”

     “கொண்டு...”

     “‘ஸ்கூட்டருக்குப் பின்னால் நீங்கள் உட்காருங்கள்; நான் முன்னால் உட்கார்ந்து ஓட்டுகிறேன்’ என்றாள்!”

     “அடி சக்கை! எப்படி உட்கார்ந்தால் என்ன, ‘ஹீட்டர்’ ஹீட்டர்தானே என்று அவள் நினைத்து விட்டாள் போலிருக்கிறது.

     “அந்த ஹீட்டரின் ‘ஹீட்’டை எங்கே அனுபவிக்க விட்டாள் என் அம்மா, அதற்குள் வந்து எழுப்பிவிட்டாளே?” என்றான் மோகன், அழாக் குறையாக.

     இந்தச் சமயத்தில் அங்கே வந்த அவன் தாயார், “உனக்கு ஏண்டா, ஹீட்டர்? ஏதாவது ஆறிவிட்டால் தான் சுட வைத்துக் கொடுக்க நான் இருக்கிறேனே!” என்றாள் கரிசனையுடன்.

     ஆம், ‘அந்த ஹீட்ட’ரைத் தேடும் வயதை அவன் கடந்து விட்டான் என்பதைக் கூட அந்தத் தாயுள்ளம் அதுவரை அறியவில்லை!