உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
21. பெரிய இடத்து விவகாரம் டாக்சி; அதிலிருந்து ஒரு கை! - அப்படியே திடுக்கிட்டு நின்றுவிட்டாள் அருணா. “என்ன அருணா. பயந்துவிட்டாயா?” என்றார் அவளுடைய அப்பா ஆபத்சகாயம், வண்டிக்குள்ளிருந்து சிரித்தபடி. “போங்கப்பா, இப்படியா திடீரென்று என் கையைப் பிடிப்பார்கள்? பேசாமல் வண்டியை நிறுத்தி ஒரு குரல் கொடுத்திருந்தால் போதாதா?” “போதும்தான்! என்ன இருந்தாலும் போலீஸ் இலாகாவில் வேலை பார்த்தவன் பார், என்னுடைய புத்தி அப்படித்தான் போகும் - அது சரி நீ இப்போதுதான் மகாபலிபுரத்திலிருந்து வருகிறாயா?” “ஆமாம், பஸ் தவறிவிட்டது!” ஏதோ ஞாபகத்தில் இப்படிச் சொல்லிவிட்ட அருணா, அடுத்தக் கணமே தவற்றை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள். அதற்குள், “பஸ் தவறிவிட்டதா!” என்று வியப்பினால் வாயைப் பிளந்தார் ஆபத்சகாயம். “இல்லை அப்பா, பஸ் வர நேரமாகிவிட்டது என்றேன்!” என்றாள் அவள், அதற்குள் தன்னைச் சமாளித்துக் கொண்டு. “அதையா இவ்வளவு அழகாகச் சொல்கிறாய்? அரசாங்கக் காரியம் எதுதான் நேரத்தோடு நடக்கிறது, பஸ் நேரத்தோடு வர?” என்றார் அவர், தானும் ஒரு முன்னாள் அரசாங்க அதிகாரிதான் என்பதை அறவே மறந்து. அப்போது, “அதை ஏன் சொல்கிறீர்கள், போங்கள்! சுதந்திரம் கிடைத்தாலும் கிடைத்தது, மனிதனுக்கு எதிலும் சுதந்திரம் இல்லை இப்போது; எடுத்ததற்கெல்லாம் பெர்மிட், லைசென்ஸ், கோட்டா என்று உயிரை வாங்கி விடுகிறார்கள்!” என்று இன்னொரு குரல் அந்தக் காருக்கு உள்ளேயிருந்து வந்தது. “அது யார், அது?” என்று குனிந்து பார்த்தாள் அருணா. அதற்குள், “என்னம்மா அப்படிப் பார்க்கிறாய்? அவர் வேறு யாருமில்லை; என்னுடைய நண்பர் சுகானந்தம்தான்! வழியில் அவருடைய கார் படுத்துக் கொண்டு விட்டது; தவித்துக் கொண்டு இருந்தார். நான்தான் ‘போகிற போக்கில் உங்களையும் கொண்டுபோய் உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன், வாருங்கள்!’ என்று அவரை அழைத்துக் கொண்டு வருகிறேன். மனிதர் எதிலும் சுதந்திரமில்லை என்று சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்கிறாறே தவிர, இவரைப் பொறுத்தவரை எல்லாச் சுதந்திரங்களையும் எந்தவிதமான தடையுமின்றி அனுபவித்துக் கொண்டுதான் வருகிறார்! - என்ன சுவாமி, நான் சொல்வது சரிதானே?” என்றார் ஆபத்சகாயம், தன் கண்களில் ஒன்றை மட்டும் ஓர் அடி அடித்து. இம்மாதிரி ‘கண்ணடிக்கும் வழக்க’மெல்லாம் ‘சோதாப் பயல்க’ளிடம்தானே உண்டு! - ஆனால் ஒரு வித்தியாசம் - சோதாப் பயல்கள் அடித்தால் அது சோதாத்தனம்; பெரிய மனிதர்கள் அடித்தால் அது பெரிய மனிதத்தனம்! எனவே, அவர் தன்னைப் பார்த்துக் கண் அடித்ததைச் சிறுமையாக எடுத்துக் கொள்ளாமல் பெருமையாகவே எடுத்துக் கொண்டு, “அப்படியே அனுபவித்தாலும் அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தானே அனுபவிக்க வேண்டியிருக்கிறது?” என்றார் சுகானந்தம். “யாரிடம் இதைச் சொல்கிறீர்கள், என்னிடமா? நீங்கள் தான் யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிக் கொண்டு விடுவீர்களே, ஐயா! நீங்களாவது, அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பதாவது? - நீ ஏறம்மா, வண்டியில்!” என்றார் ஆபத்சகாயம். அப்போது அவரை முந்திக் கொண்டு சுகானந்தம் தான் உட்கார்ந்திருந்த ‘பின் ஸீட்’டின் கதவைத் திறந்து விட, “நீங்கள் வந்து இப்படி உட்கார்ந்து கொள்ளுங்களேன், அப்பா!” என்றாள் அருணா, டிரைவருக்குப் பக்கத்தில் ‘முன் ஸீட்’டில் உட்கார்ந்திருந்த ஆபத்சகாயத்தை நோக்கி. “சும்மா உட்கார் அம்மா, அவர் உனக்கு அப்பா மாதிரி!” என்றார் அவர். அருணா, தயக்கத்துடன் உட்கார்ந்து கதவைச் சாத்த, “நீ போப்பா!” என்றார் ஆபத்சகாயம், டிரைவரை நோக்கி. அதற்குமேல் ஆபத்சகாயத்திடம் பேச விரும்பாமல், “எப்படியிருந்தது மகாபலிபுரம்?” என்று அவருடைய பெண்ணுடன் பேச ஆரம்பித்துவிட்டார், சுகானந்தம்! அப்போது அவர் தன்னைப் பார்த்த பார்வை ‘அப்பா பார்க்கும் பார்வை’ மாதிரி இல்லாமல் இருக்கவே, “எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருந்தது!” என்றாள் அவள், நறுக்குத் தெறித்தாற்போல! “தேவலையே, ரத்தினச் சுருக்கமாகப் பேசுகிறாளே!” என்றார் அவர், அவளை மேலும் ஆழம் பார்க்கும் நோக்கத்துடன் அவள் முதுகை லேசாகத் தடவி. அருணா அதற்கு இடம் கொடாமல் நெளிந்து, “இதென்னப்பா இது! இன்னும் நான் குழந்தையா என்ன, இவர் என் முதுகில் தடவிக் கொடுக்க?” என்றாள் எரிச்சலுடன். “எனக்கு நீ குழந்தையென்றால் அவருக்கும் குழந்தைதான்!” என்றார் அந்த அசட்டு அப்பா. அவர் சொன்னது பிடிக்கவில்லை அவளுக்கு, “அது என்ன இழவோ!” என்று தனக்குள் முணுமுணுத்தவாறே கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தாள். “கல்லூரியில் படிக்கிற பெண்ணா, லட்சணமாயில்லையே? கலகலப்பாகப் பேசிப் பழகக்கூட தெரியவில்லையே, இவளுக்கு!” என்றார் சுகானந்தம், அவளைத் தன் கடைக்கண்ணால் கணித்துக் கொண்டே. “வித்தியாசமாக நினைக்காதீர்கள்! இவள் அம்மா கொஞ்சம் கர்நாடகம்; அதனால் இவளும் கொஞ்சம் கர்நாடகமாயிருக்கிறாள்!” என்று அவருக்குச் சமாதானம் சொன்னார் ஆபத்சகாயம். “ஓஹோ! இவளுக்கு எப்போதுக் கல்யாணம் செய்வதாக உத்தேசம்?” “இந்த வருடத்தில் செய்துவிடலாமென்று இருக்கிறேன்!” “மாப்பிள்ளை?” “இனிமேல்தான் தேடவேண்டும்!” சுகானந்தம் சிரித்தார்; சிரித்துக் கொண்டே கேட்டார்: “எனக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விடுகிறீரா இவளை?” ஆபத்சகாயம் திரும்பி, “இன்னும் எத்தனை கல்யாணங்கள்தான் செய்துகொள்ளப் போகிறீர்கள் ஐயா, நீங்கள்?” என்று கேட்டார், தானும் அவருடன் சேர்ந்து சிரித்துக் கொண்டே. “அதற்கும் தான் கட்டுப்பாடு விதித்து விட்டார்களே, நமது சுதந்திர சர்க்கார்!” என்றார் அவர். “அதனாலென்ன, அதற்காக நீங்கள் ஏகபத்தினி விரதம் இருப்பதாகத் தெரியவில்லையே, எனக்கு!” சுகானந்தம் மறுபடியும் சிரித்தார்; சிரித்துக் கொண்டே சொன்னார்: “ஏதோ என்னாலானத் தொண்டு; பெண்ணைப் பெற்றவர்களின் துயரை அந்த வகையிலாவதுத் துடைக்கிறேனே!” “பொல்லாத ஆளய்யா, நீங்கள்! அதையும் ஒருத் தொண்டாகவா எடுத்துக் கொண்டு விட்டீர்கள்?” என்றார், ஆபத்சகாயமும் அவருடன் சேர்ந்து மறுபடியும் சிரித்துக் கொண்டே. அந்தப் பெரிய மனிதர்களின் சிரிப்பையும், சிருங்காரரசத்தில் அவர்களுக்கு இருந்த லயிப்பையும் அருணாவால் தாங்க முடியவில்லை; “அப்பா! வண்டியைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லி என்னை இறக்கிக் கீழே விட்டுவிடுங்களேன்; நான் பேசாமல் பஸ்ஸிலேயே வீட்டுக்குப் போய்விடுகிறேன்!” என்றாள் அவசர அவசரமாக. அவள் எவ்வளக்கெவ்வளவு அவசரப்பட்டாளோ, அவ்வளவுக்கவ்வளவு அமைதியாக, “அவசரப்படாதே அம்மா, ஐயாவைக் கொண்டு போய் அவருடைய வீட்டில் விட்டுவிட்டுப் போனால் போச்சு!” என்றார் அவர். அப்போது, “ஐயாவின் வீடு எங்கே இருக்கிறது? அதைச் சொல்லவில்லையே, எனக்கு!” என்றான் டிரைவர். “அவருக்கு எத்தனையோ வீடுகள்! எந்த வீட்டுக்குப் போகிறாரோ, என்னமோ, ஏன் சுவாமி, எங்கே போக வேண்டும் நீங்கள்?” “கீழ்ப்பாக்கத்திலுள்ள கீதாவின் வீட்டுக்கு!” அவ்வளவுதான், கார் கீழ்ப்பாக்கத்தை நோக்கித் திரும்பியது. அங்கே... வந்தது காராக இல்லாமல் டாக்சியாயிருக்கவே, “கோன் ஹை?” என்றான் கூர்க்கா, அதை நிறுத்தி. “துமாரா ஸாப், அந்தர் தேக்கோ!” என்றார் ஆபத்சகாயம், தனக்குத் தெரிந்த இந்தியில். “மேரா ஸாப்!” என்று வியப்புடன் சொல்லிக் கொண்டே அவன் குனிந்துப் பார்த்துவிட்டு, “சலாம் ஸாப், அச்சா ஜாவ்!” என்றான் ‘கேட்’டைத் திறந்து. டாக்சி உள்ளே சென்றுப் ‘போர்டிகோ’வில் நின்றதுதான் தாமதம், உள் பக்கம் தாளிடப்பட்டிருந்த கதவை அவசர அவசரமாகத் திறந்து கொண்டு அரைக்கால் சட்டை, பனியனுடன் வெளியே வந்த ஒருப் பேர்வழி, “யார் அது?” என்றான், வியர்த்து விறுவிறுத்திருந்த நிலையிலே. அந்த நிலையிலும் அவனை இனம் கண்டுக்கொண்ட ஆபத்சகாயம், “என்னடா வேணு, என்னைத் தெரியவில்லையா உனக்கு?” என்றார் ஓர் அசட்டுச் சிரிப்புடன். அதற்குள், “வேணுவா! அவன் ஏன் வந்தான், இங்கே?” என்றுக் கேட்டுக் கொண்டேத் தனக்குப் பக்கமாக இருந்த கதவைத் திறந்து கொண்டுக் கீழே இறங்கினார் சுகானந்தம். அவரைப் பார்த்தானோ இல்லையோ, “ஐயோ முதலாளி!” என்று கத்திக் கொண்டே அவன் எடுத்தான் ஓட்டம்! ஆபத்சகாயம் ஒன்றும் புரியாமல் கீழே இறங்கி, “அவன் ஏன் உங்களைக் கண்டதும் ஓடுகிறான்?” என்றார் சுகானந்தத்தை நோக்கி. “அதுதானே எனக்கும் தெரியவில்லை?” என்றார் அவர்! “என்ன இப்படிச் சொல்கிறீர்கள், அவனும் உங்கள் டிரைவர்தானே?” “ஆமாம். ஆனால், இப்போது அவன் இங்கே வேலையில் இல்லை!” “நிறுத்திவிட்டீர்களா?” “வேறு வழி? வரவர நடையுடை பாவனைகளில் அவனுக்கும் எனக்கும் வித்தியாசமே தெரியாமற் போய்விட்டது. எங்கேயாவது டீ, டின்னர் என்று போனால் முதலில் அவனைத்தான் வரவேற்கிறார்கள்; ‘நான் இல்லை, இவர்தான் முதலாளி!’ என்று அவன் சொன்ன பிறகே என்னை வரவேற்கிறார்கள்!” “இந்தக் கேலிக்கூத்து பொதுவாக எல்லாப் பெரிய மனிதர் வீடுகளிலும் இருக்கிறது!” “எப்படி இல்லாமற் போகும்? அதே சாப்பாடு, அதேத் துணிமணி, அதேக் கார் சவாரி, அதே சுக சௌகரியங்கள்...” “இதற்குத்தான் வெள்ளைக்காரன் டிரைவர்களுக்கென்று தனி உடுப்பு தைத்துக் கொடுத்த் விடுகிறான்!” “நான் மட்டும் தைத்துக் கொடுக்காமலா இருக்கிறேன், தைத்துக் கொடுக்கத்தான் செய்கிறேன்! ஆனால் அவன் அதைப் போட்டால்தானே?” “போடாவிட்டால் நிறுத்திவிட வேண்டும்!” “அதைத்தான் செய்தேன் நான்; அவன் என்னடா என்றால்...” அவர் முடிக்கவில்லை; அதற்குள் கலைந்துபோன தன் ஆடை அணிகளைச் சரி செய்துகொண்டே அங்கே வந்த கீதா, “நன்றாயிருக்கிறது, நீங்களும் உங்கள் டாக்சியும்! எனக்குப் ‘போன்’ பண்ணியிருந்தால் கூட நான் உங்களுக்கு வண்டி அனுப்பியிருப்பேனே?” என்றாள் அவருடைய ‘அந்தஸ்’தை அவருக்கு ஞாபகப்படுத்தி அந்த அந்தஸ்தைக் கொண்டே தன் அயோக்கியத்தனத்தையும் மறைத்துக் கொள்வதற்காக! அவரோ அவள் எதிர்பார்த்ததற்கு நேர்விரோதமாக, “அது சரி, அந்த வேணு ஏன் இங்கே வந்தான் இப்போது?” என்றார் அவளை ஊடுருவிப் பார்த்தபடி. “வேலை வேண்டுமென்று வந்தான்! வேறு ஆள் வைத்தாய்விட்டது. நீ போய் வா என்றேன்; போய்விட்டான்!” “வேலை கேட்க வந்தவனா கதவை உள்ளே தாளிட்டுக் கொண்டு வந்துக் கேட்டான்?” “கதவை உள்ளேத் தாளிட்டுக் கொண்டு இருந்தானா! அதை நான் பார்க்கவேயில்லையே? அவன் வரும்போது நான் ‘டிரஸ்ஸிங் ரூ’மில் இருந்தேன்!” “டிரஸ்ஸிங் ரூமில் இருந்தாயா! எங்கே, அந்தப் புது டிரைவர்?” “வேலை ஒன்றுமில்லையே என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்!” “சமையற்காரன்?” “ஆஸ்பத்திரியில் இருக்கும் தன் மகளைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறான்!” “இப்போது நீ இந்த வீட்டில் தனியாகத்தான் இருக்கிறாயா?” “ஆமாம், அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?” “ஒன்றுமில்லை; என்னைக் கண்டதும் அவன் ஏன் ஓடவேண்டும்?” “கதவைத் தாளிட்டுக் கொண்டு அவன் ஏதாவது திருடிக் கொண்டு இருந்தானோ என்னமோ?” அவள் திரும்பினாள்; “அப்படியும் செய்வதுண்டு சில திருட்டுப்பயல்கள்! நீங்களும் உள்ளேப் போய்ப் பாருங்கள்!” என்றார் ஆபத்சகாயம். “நான் மட்டுமென்ன? நீரும் வாரும் ஐயா, உள்ளே!” என்றார் சுகானந்தம். “நீயும் வாம்மா!” என்று ஆபத்சகாயம் தன் மகள் அருணாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். “சரிதான்! நேற்று நீங்கள் என் செலவுக்காக ஐநூறு ரூபாய் கொடுக்கவில்லையா, அதை அடித்துக் கொண்டு போய்விட்டான் அவன்!” என்று சொல்லிக்கொண்டே, கீதா அவர்களுக்கு எதிர்த்தாற்போல் வந்து நின்றாள். “நான் நினைத்தது சரியாய்ப் போய்விட்டது; லேசில் விடக்கூடாது அவனை!” என்றார் ஆபத்சகாயம். “விடாமல் என்ன செய்வதாம்?” என்றாள் கீதா. “ஏன், போலீஸில் புகார் செய்வது!” “ஆமாம், போங்கள்! அந்த ஐநூறு ரூபாய்க்காகப் போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்குமாக யார் அலைவதாம்?” “அதற்குமேல் உங்கள் விருப்பம்; நான் வரட்டுமா?” திரும்பினார் ஆபத்சகாயம்; “உட்காருங்கள், காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்!” என்றார் சுகானந்தம், அவரை விட்டாலும் அவருடையப் பெண்ணை விட மனமில்லாமல்! அதற்குள், “சமையற்காரன் கூட இல்லையே, காபிப் போட?” என்றாள் கீதா, கையைப் பிசைந்துக் கொண்டே. “அவன் இல்லாவிட்டால் என்ன, கூர்க்காவை ஓட்டலுக்கு அனுப்பி வாங்கி வரச் சொல்லேன்?” என்றார் அவர். “சரி!” என்று அவள் வெளியேப் போனாள்; “எங்களால் உங்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம்?” என்றார் ஆபத்சகாயம். “நன்றாயிருக்கிறது, வீடு தேடி வந்தவர்களை சும்மாவா அனுப்பிவிடுவது? நீங்கள் இங்கேயே உட்கார்ந்திருங்கள்; நான் போய் உடை மாற்றிக் கொண்டு வந்துவிடுகிறேன்!” என்று சுகானந்தம் உள்ளே போனார். “அதுவரை டாக்சி நிற்பானேன்? போகும்போது வேறு டாக்சி பிடித்துக் கொண்டால் போகிறது!” என்று நினைத்த ஆபத்சகாயம், ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அருணாவிடம் நீட்டி, “அந்த டாக்சியை அனுப்பிவிட்டு வாம்மா!” என்றார். அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்த போது அவள் கண்ட ஒரு காட்சி அவளைத் திடுக்கிட வைக்கவே, “அப்பா, அப்பா! இங்கே பார்த்தீங்களா, அப்பா?” என்றாள் அவள். “என்னம்மா அது?” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தார் ஆபத்சகாயம். “அதோ பாருங்கள்!” அருணா காட்டிய திசையில் ஆபத்சகாயத்தின் பார்வை சென்றது - அங்கே மதிற்சுவருக்கு அப்பால் வேணு நின்று கொண்டிருந்தான்; அவசரத்தில் மறந்து வைத்துவிட்டுப் போன அவன் சட்டை வேட்டியை எடுத்து அவனிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் கீதா! “இப்படியும் நடப்பதுண்டா இங்கே?” என்றாள் அருணா வியப்புடன். “ஸ், பேசாதே! அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்!” என்று அவள் வாயைப் பொத்தினார் ஆபத்சகாயம்! காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|