4. “போலீஸ், போலீஸ்!”

     “அழகு காட்டினால் சரோஜா தேவி; காட்டாவிட்டால் தேவிகா - இந்த இரண்டு நட்சத்திரங்களும் சேர்ந்த ஒரே நட்சத்திரம் என் கனவுக் கன்னி!”

     தூங்கும் போது கூட இப்படி உளறுவது யாராயிருக்கும்? வேறு யாராயிருக்கப் போகிறார்கள், அண்ணாவாகத்தான் இருக்கும்!...

     இந்தத் தீர்மானத்துடன் அன்றும் பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்த அருணா மேலே படித்த போது, உளறல் தொடர்ந்தது.

     “நீ திட்டினால் உறைக்கவில்லை; அடித்தால் வலிக்கவில்லை - ‘ஏன்?’ என்று தெரியவில்லையே, எனக்கு!”

     அருணா சிரித்தாள்! - அவள் சிரிப்பொலியால் தூக்கம் கலைந்து எழுந்த அவளுடைய அம்மா, “இந்த நேரத்தில் உனக்கு என்னடி சிரிப்பு, படிப்பதை விட்டுவிட்டு!” என்றாள், ‘பிளாஸ்க்’கில் தேநீர் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே.

     “அண்ணா சொல்வதைக் கேட்டாயா, அம்மா? - யாரோ திட்டினால் அவனுக்கு உறைக்கவில்லையாம், அடித்தால் வலிக்கவில்லையாம்!”

     “அது யாராம், அது?”

     “அழகு காட்டினால் அவள் சரோஜாதேவி மாதிரி இருக்கிறாளாம்; காட்டாவிட்டால் தேவிகாமாதிரி இருக்கிறாளாம்!”

     “நாசமாய்ப் போச்சு! இதற்குத்தான் ‘தலையிலே கொஞ்சம் எண்ணெய் வைத்துக் குளிடா, தலையிலே கொஞ்சம் எண்ணெய் வைத்துக் குளிடா!’ என்று நான் ஒரு நாளைப் போல அடித்துக் கொள்கிறேன். கேட்கிறானா? வெறும் தண்ணீரைத் தலையிலே கொட்டிக் கொண்டு வெளியே வந்துவிடுகிறான்!”

     “எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட எலுமிச்சம் பழம் தேய்த்துக் குளித்தால் நல்லதென்று தோன்றுகிறது, எனக்கு!”

     “உனக்குத் தோன்றுதா, எல்லாம் தோன்றும் - போடி, போ!” என்றாள் தாயார், தன் மகனுக்காகப் பரிந்து.

     “எதையும் ஆரம்பத்திலேயே கவனித்தால் நல்லது என்பதற்காகச் சொன்னேன்; உனக்குப் பிடிக்காவிட்டால் விட்டுவிடு!” என்றாள் தங்கை!

     மறுநாள் காலை கன குஷியுடன் ஏதோ ஒரு சினிமாப்பாட்டைச் சீட்டியடித்துப் பாடிக் கொண்டே மோகன் தன் அறையை விட்டு வெளியே வந்த போது, குபீரென்று வந்த சிரிப்பை அருணாவால் அடக்க முடியவில்லை; சிரித்து விட்டாள்!

     மோகன் பாடுவதை நிறுத்திவிட்டு அவளை ஒரு தினுசாகப் பார்த்தான்; அவளும் அவனை ஒரு தினுசாகப் பார்த்து விட்டு, மறுபடியும் சிரித்தாள்!

     “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டான் அவன், ஒன்றும் புரியாமல்.

     பதில் இல்லை, சிரிப்பதைத் தவிர!

     “பைத்தியமா, உனக்கு?”

     அதற்கும் பதில் இல்லை, அவளிடமிருந்து - மறுபடியும் மறுபடியும் சிரிப்பதைத் தவிர!

     “அம்மா! அருணாவைப் பார் அம்மா! என்னைப் பார்த்ததும் ‘குபீர், குபீர்’ என்று சிரிக்கிறாள்!” என்று கத்தினான் அவன்.

     அவளோ அடுக்களையில் இருந்தபடியே, “அவளுக்கென்ன வேலை, நீ போய் உன் வேலையை பார்!” என்றாள், விஷயத்தைப் புரிந்து கொண்டு.

     “போம்மா! அவள் பாட்டுக்குச் சிரித்துக் கொண்டே இருப்பாள், நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக் கொண்டே இருப்பேனாக்கும்?” என்று சொல்லிவிட்டு, “ஏன் சிரிக்கிறாய், என்னைப் பார்த்து? சொல்; சொல்லப் போகிறாயா, இல்லையா?” என்று அவள் தலையில் குட்டப் போனான், அவன்.

     அவனுடைய குட்டிலிருந்து தப்புவதற்காக, “ஒன்றுமில்லை அண்ணா! நீ சீட்டி அடித்தால் சிவாஜி கணேசனைப் போல் இருக்கிறாய்; அடிக்காவிட்டால் ஜெமினி கணேசனைப் போல் இருக்கிறாய்!” என்றாள் அவள், கொஞ்சம் பின் வாங்கி நின்று.

     அவ்வளவுதான்; “நிஜமாகவா அருணா, நிஜமாகவா?” என்றான் அவன், உச்சி குளிர்ந்து.

     “நிஜமாகத்தான், அண்ணா! வேண்டுமானால் நீ அம்மாவைக் கேட்டுப் பாரேன்?” என்றாள் அவள், மெல்ல அவனிடமிருந்து நழுவிக் கொண்டே.

     ‘சினிமா என்றாலே ‘சிவசிவா!’ என்று காதைப் பொத்திக் கொள்ளும் அம்மாவுக்கு இந்த மாதிரி விஷயங்களில் அபிப்பிராயம் சொல்ல எங்கே தகுதி இருக்கப் போகிறது?’ என்று நினைத்த மோகன், அவளிடம் போகவில்லை. அதற்குப் பதிலாக மறுபடியும் சீட்டியடித்துக் கொண்டே சென்று அவன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தான்; சிவாஜி கணேசனைப் போல் இருப்பதாகத் தோன்றியது. சீட்டியடிப்பதை நிறுத்திவிட்டுப் பார்த்தான்; ஜெமினி கணேசனைப் போல் இருப்பதாகத் தோன்றியது - அப்புறம் என்ன, அது போதாதா?

     ‘தன் கண்ணே தனக்குச் சாட்சி!’ என்ற திருப்தியுடன் அவன் திரும்பிய போது, கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவனைப் பிடித்து இழுத்துப் பலவந்தமாகக் கீழே உட்கார வைத்து அவன் தலையில் எண்ணெய் தேய்க்க ஆரம்பித்து விட்டாள், அவனுடைய அம்மா!

     பாவம், எண்ணெய் தேய்த்துக் குளித்தால் எந்தச் சுருட்டை முடி கலைந்து விடுமென்று அத்தனை நாளும் அவன் பயந்து கொண்டிருந்தானோ, அந்தச் சுருட்டை முடி அன்று அவள் கையில் அகப்பட்டுக் கொண்டு படாத பாடு பட்டது!

     அன்று மாலை, முதல் நாள் அளித்த ஏமாற்றத்தைப் பாமா அவனுக்கு அளிக்கவில்லை; தோளோடு தோள் கூட்டிக் கடற்கரைக்கு வந்தாள்.

     “உலகத்தின் புகழ் பெற்ற கடற்கரைகளில் ஒன்றான இந்த மெரீனாவிலே உன்னையும் என்னையும் தவிர வேறு யாரும் இல்லாமல் இருந்தால்...?”

     மோகன் முடிக்கவில்லை; “இல்லாமல் இருந்தால் என்னவாம்?” என்று இடைமறித்துக் கேட்டாள் பாமா.

     “தோளோடு தோள் மட்டுமா கூடியிருக்கும்?” என்றான் அவன், விஷமத்தனத்துடன்.

     அவள் சளைக்கவில்லை; “வேறு என்ன கூடியிருக்கும்?” என்றாள், அவளும் விஷமத்தனத்துடன்.

     அவ்வளவுதான்; அளவு கடந்த சங்கோசத்துடன் இருகைகளையும் சேர்த்து இரு கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டு, “ஊஹும், நான் சொல்ல மாட்டேன்!” என்றான் அவன், நெளிந்து வளைந்து.

     அவள் சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்:

     “ஓடுகிற நாயைத்தான் நீங்கள் துரத்துவீர்கள் போலிருக்கிறது!”

     அவன் சொன்னான்; நாணிக் கோணிச் சொன்னான்:

     “ஓடாத நாயை நான் ஏன் துரத்த வேண்டுமாம்?”

     “சரி, துரத்த வேண்டாம்; உட்காருங்கள்!” என்று சொல்லி அவள் அவனை உட்கார வைத்துவிட்டு, “உடம்பு பலவீனமாயிருப்பது கூட அவ்வளவு ஆபத்து அல்ல, உள்ளம் பலவீனமாயிருப்பது ரொம்ப ஆபத்து!” என்றாள் தானும் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து.

     “ஏன், என்னுடைய உள்ளம் பலவீனாமாயிருக்கிறதா, என்ன?” என்று திடுக்கிட்டுக் கேட்டான் அவன்.

     “சந்தேகமில்லாமல்! இல்லாவிட்டால் உங்கள் எண்ணம் இவ்வளவு கீழே போயிருக்காதே?” என்றாள் அவள், கொஞ்சம் வேகமாக.

     “எதைச் சொல்கிறாய், நீ?”

     “கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தோளோடு தோள் மட்டும் கூடியிருக்காது என்று சொன்னீர்களே, அதைச் சொல்கிறேன்!”

     இப்போதுதான் அவன் செய்த தவறு அவனுக்குப் புரிந்தது; “என்னை மன்னித்து விடு, பாமா! எண்ணத்தில் என்னை விட நீ உயர்ந்து நிற்கிறாய் என்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன். ஆனால்...” என்று இழுத்தான், அவன்.

     “என்ன, சொல்லுங்கள்?” என்றாள் அவள்.

     “நீ பக்கத்தில் இருக்கும்போது என்ன பேசுகிறேன் என்பது எனக்கேத் தெரியவில்லை!” என்றான் அவன்.

     “அதற்குக் காரணம் நான் அல்ல; ‘நாகரீகம்’ என்னும் பேரால் நான் அணிந்துள்ள ஆடை அலங்காரம்!” என்றாள் அவள்.

     “ஏன், உன்னுடைய ஆடை அலங்காரம் உனக்கே பிடிக்கவில்லையா?”

     “இல்லை!”

     “ஆச்சரியமாயிருக்கிறதே, உனக்குப் பிடிக்காத அலங்காரத்தை நீ ஏன் செய்து கொள்ள வேண்டுமாம்?”

     “அக்காவுக்காக!”

     “உனக்கு அக்கா வேறு இருக்கிறாளா?”

     “இருக்கிறாள், எனக்காக இன்னும் கல்யாணம் கூடச் செய்து கொள்ளாமல்!”

     “என்ன வயதிருக்கும், அவளுக்கு?”

     “வயது முப்பதுதான் இருக்கும். ஆனால், பார்வைக்கு அறுபது வயதைக் கடந்து விட்டவள் போல் இருப்பாள்!”

     “காரணம்?”

     “உழைப்பின் பலன்!”

     “வேடிக்கையாயிருக்கிறதே, நீ சொல்வது?”

     “வேடிக்கையல்ல, வேதனை! அவள் பத்து வயதுச் சிறுமியாக இருக்கும் போதே கணவனை இழந்த என் அம்மா, என்னையும் என் தம்பி பாலுவையும் அவளிடம் ஒப்படைத்து விட்டுக் கண்ணை மூடிவிட்டாளாம் - ‘இல்லை’ என்பவர்களைக் கண்டால் அவர்கள் இருக்கும் பக்கம் கூடத் தலை வைத்துப் படுக்க விரும்பாத ‘புண்ணியாத்மாக்கள்’ நிறைந்த இந்த உலகத்திலே அவள் எங்களை இந்த அளவுக்குக் கொண்டு வர என்ன பாடுபட்டிருக்க வேண்டும்? - அதன் பலன் தான் அவளை அப்படி ஆக்கிவிட்டது!”

     “ஐயோ பாவம், அந்த நிலையில் அவளுக்குப் படிக்கக் கூட நேரம் இருந்திருக்காது போலிருக்கிறதே?”

     “இல்லை; ஐந்தாம் வகுப்புடன் தன்னுடைய படிப்பை நிறுத்திக் கொண்டு, எங்களுடைய படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாள் அவள்!”

     “அப்பாவின் சொத்து ஏதாவது...”

     “இருந்தது, அவருடைய தலை முடி! - திருப்பதி வேங்கடாசலபதிக்குக் காணிக்கை செலுத்துவதற்காக எடுத்து வைத்தது!”

     “அப்படியானால் அவள் தியாக சிகரமாய்த்தான் இருக்க வேண்டும்!” என்றான் அவன்.

     “இல்லாவிட்டால் அவள் சொன்னபடி யெல்லாம் நான் ஏன் ஆடுகிறேன்? அவளுக்காக இந்த வேஷத்தையெல்லாம் நான் ஏன் போடுகிறேன்?” என்றாள் அவள், கண்ணில் நீருடன்.

     அவன் அதைத் துடைத்து, “அந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் உன் அக்காவின் கட்சி!” என்றான் குறுநகையுடன்.

     “எந்த விஷயத்தில்?” என்று தன்னை மறந்து கேட்டாள், அவள்.

     “உன்னுடைய ஆடை அலங்கார விஷயத்தில்!” என்றான் அவன், அவளுடைய ‘கண்ணாடிச் சேலை’யைக் கண்ணால் மட்டும் பார்த்து ரசித்தால் போதாதென்று, கையாலும் தொட்டுப் பார்த்து ரசித்துக் கொண்டே.

     அவள் அவனுடைய கையை எடுத்து அப்பால் வைத்துவிட்டு, “எனக்குத் தெரிந்தவரை இது மனிதனை உயர்த்தவில்லை; தாழ்த்துகிறது!” என்றாள் வெறுப்புடன்.

     அந்தச் சமயத்தில், சாராய வாடை குப்பென்று வீச யாரோ ஒரு முரடன் தட்டுத் தடுமாறிக் கொண்டே அங்கு வந்து, “நானும் ரொம்ப நேரமா பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்! நீயே எம்மாநேரம் இந்தக் குட்டியோட உட்கார்ந்து பேசிக்கிட்டுருப்பே? எழுந்து போடா, நானும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசறேன்!” என்று சொல்லிக் கொண்டே, மோகனின் கையைப் பிடித்து இழுத்து அப்பால் விட்டு விட்டு, பாமாவின் பக்கத்தில் உட்கார்ந்தான்!

     அவ்வளவுதான்; “ஐயோ!” என்று அலறி எழுந்தாள் அவள்!

     “போலீஸ், போலீஸ்!” என்று கத்தினான் மோகன், எதற்கும் ஓடத் தயாராகிக் கொண்டே.

     “கேட்டியா, குட்டி? உன்னைக் காதலிக்கக் கூட அந்தப் பயலுக்குப் போலீஸ் பந்தோபஸ்து வேண்டுமாம்!” என்று சிரித்துக் கொண்டே எழுந்து, பாமாவை நெருங்கினான் அந்தப் பேர்வழி.

     அப்போது மின்னல் வெட்டி மறைந்தது போல் எங்கிருந்தோ ஒரு குத்து வந்து அந்தப் பேர்வழியின் மேல் விழுந்து மறைந்தது; அவன் கீழே விழுந்தான்!

     அந்தக் குத்துக்குரிய ஆபத்பாந்தவன் யார் என்று மோகன் பார்த்த போது, “இருட்டி இவ்வளவு நேரம் ஆன பிறகுமா இங்கேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பீர்கள்? போங்கள், சீக்கிரம் வீட்டுக்குப் போங்கள்!” என்றான் மணி.