13. “அது என்னமோ, எனக்குத் தெரியாது!”

     காதல் வள்ளல் தன் தங்கையிடம் அகப்பட்டுக் கொண்டு தவித்தான் என்றால், காதல் வள்ளியோ தன் தமக்கையிடம் அகப்பட்டுக் கொண்டு தவித்தாள். ஆம், பாமா என்ன சொல்லியும் அவள் கேட்கவில்லை; “அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்தவர், இங்கே வந்ததும் உன்னை விட்டுவிட்டுப் போய் விட்டாரென்றால், நீ ஏதாவது சொல்லித்தான் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் அவர் ஏன் அப்படிப் போயிருக்கப் போகிறார்?” என்றாள் அவள், பிடிவாதமாக.

     “நான் ஒன்றும் சொல்லவேயில்லை, அக்கா! அவர்தான் வந்ததும் வராததுமாக இருக்கும் போதே, ‘இன்று வேண்டாம்; இன்னொரு நாளைக்கு’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்!” என்றாள் இவள், பரிதாபமாக.

     “அதை அவர் அங்கேயே சொல்லியிருக்கலாமே?”

     “நானா வேண்டாமென்றேன், அவர் தான் சொல்லவில்லை!”

     “போடி, போ! இப்போது நான் அவர்களுடைய முகத்தில் எப்படி விழிப்பேன்? என்னுடைய முகத்தில் கரியைப் பூசியது போதாதென்று, அவர்களுடைய முகத்திலுமல்லவா நீ கரியைப் பூசிவிட்டாய்?”

     அப்போது, “யாரும் யாருடைய முகத்திலும் கரியைப் பூசிவிடவில்லை; இப்போது என்னைப் பார்ப்பதற்காக இங்கே வந்திருந்தாளே ஒருத்தி, அவள் அவனுடைய தங்கையாம் - அவளைப் பார்த்ததும் அவன் கம்பி நீட்டி விட்டிருக்கிறான்; நடந்தது அவ்வளவுதான்!” என்றாள், அங்கே வந்த மீனாட்சியம்மாள்.

     “யார் அம்மா, அது? நான் இந்தத் தரை விரிப்பை எடுத்துக் கொண்டு வரும் போது, ‘அம்மா இருக்கிறார்களா?’ என்று கேட்டுக் கொண்டு வந்ததே ஒரு பெண், அதுவா?” என்று கேட்டாள் ராதா.

     “ஆமாம், அவளேதான்!” என்றாள் அவள்.

     “தங்கையிடம் அவ்வளவு பயமா, அவருக்கு?”

     “பயம் தங்கையிடம் இருக்குமென்றுத் தோன்றவில்லை; தன்னைப் பெற்றவர்களிடம் இருக்கும் போலிருக்கிறது, அவனுக்கு!”

     “அதற்காக?”

     “அவள் போய் அவர்களிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து ஓடிப் போயிருப்பான், அவன்! ஏண்டி பாமா, அப்படித்தானே?” என்றாள் மீனாட்சியம்மாள், பாமாவின் பக்கம் திரும்பி.

     “அது என்னமோ, எனக்குத் தெரியாது!” என்றாள் அவள், கையைப் பிசைந்து கொண்டே.

     அதற்குள் எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டபடி ராதா சொன்னாள்:

     “பயம் மற்ற விஷயங்களில் இருப்பது சரி; அது இந்த விஷயத்தில் இருப்பது...”

     “அவனுக்கும் நல்லதில்லை, நமக்கும் நல்லதில்லை என்று தான் அவனை நான் இங்கே அழைத்துக் கொண்டு வரச் சொன்னேன். அதற்குக் குறுக்கே வந்து சேர்ந்தாள், அவள் ஒருத்தி!”

     “அந்தப் பெண்ணை நீங்கள் ஒன்றும் கேட்கவில்லையா?”

     “கேட்டேன்; அவள் தான் சொன்னாள், அவன் என் அண்ணன் என்று, ‘ரொம்ப மிரட்டுவாயோ?’ என்று அவள் வாயைக் கிண்டிப் பார்த்தேன்; ‘பயந்தால் மிரட்ட வேண்டியதுதானே?’ என்றாள் அவள்!”

     “பொல்லாத பெண்ணாயிருக்கும் போலிருக்கிறதே? அப்படியே அது வந்தால் தான் என்ன? எப்படியும் அதற்குத் தெரிந்தது தெரிந்து விட்டது; அவர் பாட்டுக்கு உள்ளே வந்திருக்கலாமோ இல்லையோ?”

     “அந்த அளவுக்கு தைரியம் இந்த நாட்டு இளைஞர்களுக்கு எங்கேடி, இருக்கிறது? நீதிமன்றத்தில் கூட, ‘அவர் என்னை அழைத்துக் கொண்டு போகவில்லை; நான் தான் அவரை அழைத்துக் கொண்டு போனேன்!’ என்று ஓடிப்போன காதலியல்லவா ஓடிப்போன காதலனுக்கு முன்னால் வந்து சொல்லி அவனைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது?”

     “அந்த ரகத்தைச் சேர்ந்த இளைஞராய்த்தான் அவரும் இருப்பார் போலிருக்கிறது! - ஏண்டி, அப்படித்தானே?” என்றாள் ராதா, பாமாவின் பக்கம் திரும்பி.

     “அது என்னமோ, எனக்குத் தெரியாது!” என்று அவளுக்கும் அதே பதிலைச் சொன்னாள் பாமா.

     “செய்வதையெல்லாம் செய்து விட்டு, அதை மறைப்பதாக நினைத்துக் கொண்டு இப்படிச் சொல்வது இந்த நாட்டுப் பெண்களின் வழக்கம். இதனால் தான் இவர்களில் பலர் கடைசி வினாடியில் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!”

     மீனாட்சியம்மாள் இப்படிச் சொன்னாளோ இல்லையோ, ராதாவின் கண்களில் நீர் மல்கிவிட்டது; “அப்படி எதுவும் நடக்கவிடாமல் நீங்கள் தானம்மா, இவளைக் காப்பாற்ற வேண்டும்!” என்றாள், அவளுடைய கால்களைப் பற்றாத குறையாக.

     “அடப் பைத்தியமே, அதற்குள் அழ ஆரம்பித்து விட்டாயா நீ? உண்மையைச் சொல்லப் போனால் யாரையும் யாராலும் காப்பாற்றி விட முடியாது; அவரவர்களை அவரவர்களேதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி வேண்டும்; அது இல்லையென்றால், இவள் அவனைக் காதலிப்பதை விடக் காதலிக்காமலே இருந்து விடலாம்!” என்றாள் அவள்.

     “இனிமேல் அது எப்படி அம்மா, சாத்தியம்?” என்றாள் இவள்.

     “சாத்தியமில்லைதான்! அதற்காக இவள் எடுத்ததற்கெல்லாம் ‘அது என்னமோ எனக்குத் தெரியாது, அது என்னமோ எனக்குத் தெரியாது!’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் எல்லாவற்றையும் நாமே தெரிந்து கொண்டு விட முடியுமா, என்ன?”

     “நீங்கள் சொல்வதும் உண்மைதான்! - ஏண்டி பாமா, உனக்குத் தெரிந்ததைச் சொல்லேண்டி?” என்றாள் ராதா, மறுபடியும் பாமாவின் பக்கம் திரும்பி.

     அவ்வளவு தான்; “அது என்னமோ எனக்குத் தெரியாது, அக்கா!” என்று சொல்லிக் கொண்டே அவள் ‘ஓ’வென்று அழவே ஆரம்பித்து விட்டாள்!

     மீனாட்சியம்மாள் சிரித்தாள்; சிரித்து விட்டு சொன்னாள்:

     “அது என்னமோ எனக்குத் தெரியாது என்பதற்கு அடுத்தபடியாக இந்த நாட்டுப் பெண்களுக்குத் தெரிந்தது இதுதான்! ஒரு காரணமும் இல்லாமலே இவர்கள் சிரிப்பார்கள்! இவர்கள் அழுவதற்கும் அர்த்தம் கிடையாது; சிரிப்பதற்கும் அர்த்தம் கிடையாது. இந்த லட்சணத்தில் இவர்களுடையக் காதல் வாழ்வதற்கா பயன்படும்? சாவதற்குத்தான் பயன்படும்!”

     “ஐயோ, அப்படிச் சொல்லாதீர்கள் அம்மா! அவள் வாழாவிட்டால் நானும் இந்த உலகத்தில் வாழ முடியாது!”

     “இப்போது மட்டும் நீ வாழ்ந்து கொண்டா இருக்கிறாய்? - இல்லை; உன் தம்பி வாழ்வதற்காக, உன் தங்கை வாழ்வதற்காக நீ விநாடிக்கு வினாடி செத்துக் கொண்டிருக்கிறாய்!”

     இதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த சொக்கலிங்கனார், “பாரத நாட்டுப் பெண் குலத்தின் பெருமையே அதுதானே?” என்றார் தம் மனைவியிடம் சிலேடையாக.

     “நன்றாகச் சொன்னீர்கள்; இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் இந்த நாட்டு ஆண்கள், பெண்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!” என்றாள் அவள், அந்தச் சிலேடையைப் புரிந்து கொண்டு.

     “உங்களை ஏமாற்ற இன்னொருவர் வேண்டுமா, என்ன? ஒரு பக்கம் ஏமாந்து கொண்டே, இன்னொரு பக்கம், ‘நாங்கள் ஏமாற மாட்டோம்’ என்று மார்தட்டிக் கொண்டு இருப்பவர்களல்லவா நீங்கள்!”

     “அப்படித்தான் சொல்கிறாள், பாமாவும்!”

     “ஏன், அவள் யாரிடமாவது ஏமாந்து விட்டாளா, என்ன?”

     “இல்லை; ஏமாறப் பார்க்கிறாள்!”

     இந்தச் சமயத்தில் பாமா கொஞ்சம் துணிந்து, “அப்படியொன்றும் நான் ஏமாந்து விட மாட்டேன், அம்மா!” என்றாள், தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.

     “அப்படிச் சொல்லுடி, அப்படிச் சொல்லு! அதுதானே வேண்டும் என்கிறேன், நான்!” என்றாள் மீனாட்சியம்மாள், அவளை உற்சாகத்துடன் தட்டிக் கொடுத்து.

     “ஆம், பாமா! பாரத நாட்டுப் பெண் குலம் பிறருக்காகச் சாவதை மட்டும் பெருமையாகக் கொண்டால் போதாது; வாழ்வதையும் பெருமையாகக் கொள்ள வேண்டும். என்ன, தெரிந்ததா?” என்றார் சொக்கலிங்கனார்.

     அவள் வாயைத் திறக்கவில்லை; ‘தெரிந்தது’ என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டினாள்.

     “இதோ பார், மீனாட்சி! இவள் எடுத்ததற்கெல்லாம் ‘அது என்னமோ எனக்குத் தெரியாது, அது என்னமோ எனக்குத் தெரியாது’ என்று சொல்கிறாளே, அதிலும் அர்த்தமில்லாமற் போகவில்லை. பார்க்கப் போனால், காதலே அர்த்தமில்லாதது தானே? - உதாரணத்துக்கு என்னையும் உன்னையும் தான் எடுத்துக் கொள்ளேன்? - என்னை நீ ஏன் காதலித்தாய், உனக்குத் தெரியாது; உன்னை நான் ஏன் காதலித்தேன், எனக்குத் தெரியாது. அதே மாதிரிதான் இவளும் அவனைக் காதலித்திருப்பாள்; அவனும் இவளைக் காதலித்திருப்பான் - ஏன் பாமா, அப்படித்தானே?”

     அதற்கும் அவள் வாயைத் திறக்கவில்லை; ‘ஆமாம்’ என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டினாள், குனிந்த தலையை நிமிர்த்தாமல்.

     “இருக்கலாம்; காதலுக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கும் உங்களுக்கும் இருந்த தைரியம் இவர்களுக்கு இல்லையே? - எனக்கு இருந்தது போல் பாமாவுக்கு ஒரு தந்தை இருந்து, அந்தத் தந்தையிடம் “உங்கள் பெண்ணை நான் விரும்புகிறேன், அவளும் என்னை விரும்புகிறாள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று உங்களைப் போல் வந்து கேட்க வேண்டியிருந்தால் அவன் என்ன செய்திருப்பான்? இல்லை, இவள் தான் என்ன செய்திருப்பாள்?”

     “ஏன், இவளுடைய தந்தையைப் பார்த்ததும் அவன் மூர்ச்சையாகியிருப்பான். இவள் ஓடோடியும் வந்து அவன் தலையைத் தூக்கித் தன் மடியின் மேல் வைத்துக் கொண்டு, ‘இங்கே பாருங்கள், அப்பா போய்விட்டார்; இனிமேல் நீங்கள் தைரியமாகக் கண்ணைத் திறக்கலாம்’ என்று சொல்லியிருப்பாள்; ‘உண்மைதானே, பொய்யில்லையே?’ என்று ஒரு முறைக்கு இரு முறையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அவன் கண்ணைத் திறந்திருப்பான்! - என்ன பாமா, அப்படித்தானே?”

     அவ்வளவுதான்; ‘களுக்’கென்று சிரித்து விட்டாள் அவள் அவரும் அவளுடன் சேர்ந்து சிரித்தபடி, “குற்றம் இவள் மீதுமில்லை; அவன் மீதுமில்லை. இந்தக் காலத்து நாகரிகம் அப்படி! - பேண்ட்டும் கோட்டும் அணிந்துக் கொண்டு விட்டால் ‘நாகரிகம் முடிந்தது’ என்று ஆண்கள் நினைத்து விடுகிறார்கள்; கலாசாலை வாசலில் கால் வைத்துவிட்டால், ‘நாகரிகத்தின் சிகரத்தையே எட்டிப் பிடித்துவிட்டோம்’ என்று பெண்கள் நினைத்து விடுகிறார்கள். உண்மையில், ‘நாகரிகம் என்றால் என்ன?’ என்பதே இவர்களுக்குத் தெரிவதில்லை. தெரிந்தால் இவர்கள் எதைக் கண்டும் ஓடமாட்டார்கள்; ஒளிய மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு குறிக்கோளுக்காக இவர்கள் எதையுமே நேருக்கு நேராகச் சந்திப்பார்கள். சந்தித்து, தாங்கள் கொண்டக் குறிக்கோளில் வெற்றியும் காண்பார்கள். அத்தகைய வெற்றியைத்தான் நம்முடைய காதலில் நாம் கண்டோம். அதே வெற்றியை இவர்களுடைய காதலில் இவர்களும் காண வேண்டுமானால், இவள் மட்டும் தன் அக்காவுக்குத் தெரிந்து அவனுடன் பழகினால் போதாது; அவனும் தன் அப்பாவுக்குத் தெரிந்து இவளுடன் பழக வேண்டும். அதற்கு முதற்படியாகத் தான் இன்று இவள் அவனுடைய காதைப் பிடித்து இழுத்துக் கொண்டு இங்கே வருவாள் என்று நான் எதிர்பார்த்தேன்; ஏமாற்றி விட்டாளே?” என்றார் இரு கைகளையும் விரித்தபடி.

     “நானா ஏமாற்றினேன், அவர் தானே ஏமாற்றினார்?” என்றாள் பாமா, மேலும் கொஞ்சம் துணிந்து.

     “சபாஷ்! அப்படிப் பேசு; அஞ்சாமல் பேசு!” என்று அவளை ஊக்கினாள் மீனாட்சியம்மாள்.

     “நீ இன்று சொல்வது சரி; ஆனால் இன்னொரு நாள் அவன் எங்களை ஏமாற்றும்படி நீ அவனை விட்டுவிடாதே!” என்றார் சொக்கலிங்கனார்.

     அதுவரை அவர்கள் பேசியதனைத்தையும் அங்கே நின்று கேட்டுக் கொண்டிருந்த பாலு, “அக்கா விட்டாலும் இனிமேல் நான் விடமாட்டேன், மாமா! இன்னொரு முறை அவர் இங்கே வரட்டும்; காது எட்டாவிட்டாலும் கையைப் பிடித்தாவது, இழுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்!” என்றான், எல்லோரையும் தள்ளிக் கொண்டு முன்னால் வந்து நின்று.

     “அப்புறம் என்ன, நீ அவனைக் கொண்டு வந்து வாசலில் நிறுத்த வேண்டியதுதான் பாக்கி!” என்றார் அவர், அவன் முதுகில் தட்டிக் கொடுத்தபடி.

     “சரி, இவர்களுடைய காதல் விவகாரம் முடியும் வரை நீ அவனுக்காகக் கொண்டு வந்து போட்ட நாற்காலி மேஜையெல்லாம் இங்கேயே இருக்கட்டும்; அவற்றைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்காதே!” என்று ராதாவிடம் சொல்லிவிட்டுத் திரும்பினாள் மீனாட்சியம்மாள்.

     “அங்கேதான் எங்களுக்கு வேண்டிய மட்டும் இருக்கிறதே, இங்கே இருப்பது இங்கேயே இருக்கட்டும்!” என்று சொல்லிவிட்டு சொக்கலிங்கனாரும் தம் மனைவியைத் தொடர்ந்தார்.

     “அவருக்காக நான் வீட்டை அலங்காரம் செய்ததோடு நின்றுவிடவில்லை, அம்மா...!” என்று மேலே சொல்ல முடியாமல் நிறுத்தினாள் ராதா.

     “வேறு என்ன செய்து வைத்திருக்கிறாய்?” என்று கேட்டபடி, மீனாட்சியம்மாள் அவளை நோக்கித் திரும்பினாள்.

     “காரத் திரிகோணம் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று பாமா சொன்னாள்; அதற்காக அது கொஞ்சம் செய்து வைத்திருக்கிறேன்!” என்றாள் ராதா.

     “எடுக்கும் போதே காரம் மட்டுமா?” என்று கேட்டார் சொக்கலிங்கனார்.

     “இல்லை, இனிப்பும் செய்து வைத்திருக்கிறேன்!” என்றாள் அவள்.

     “என்ன இனிப்பு?”

     “கேசரி!”

     “சரி, அவற்றைச் சாப்பிட்டு வைக்க இப்போது உனக்கு ஆட்கள் தேவை. அவ்வளவுதானே? கொண்டு வா, ‘வாழ்க பாமா, மோகன்!’ என்று வாழ்த்து கூறிக் கொண்டே சாப்பிடுவோம்” என்று உட்கார்ந்தார் அவர்; அவரைத் தொடர்ந்து மீனாட்சியம்மாளும் உட்கார்ந்தாள்.