17. அறிமுகம்

     மனிதன் குற்றம் செய்யாதவரை, அப்படியே செய்தாலும் அது பிறருக்குத் தெரியாதவரை, யாரைக் கண்டும் அவன் பயப்படுவதில்லை. செய்து விட்டாலோ, செய்த குற்றம் பிறருக்குத் தெரிந்து விட்டாலோ, மற்றவரைக் கண்டு மட்டும் அவன் பயப்படுவதில்லை; தன்னைத் தானே கண்டும் பயப்படுகிறான். ஏன், தன்னுடைய நிழலைக் கண்டும் பயப்படுகிறான்! - அந்த நிலையிலேதான் அன்று இருந்தாள், அருணா.

     ஆகவே, தனக்கு முன்னால் மோகனும், பாமாவும் அங்கே வந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டதும், அவள் முதலில் எழுந்து போய்விடலாமா என்று நினைத்தாள் - ஆனால் எங்கே போவது? - அதுதான் தெரியவில்லை, அவளுக்கு.

     டிக்கெட்டை மாற்றிக் கொண்டு மேல் வகுப்புக்குப் போய் விடலாம் என்றாலோ, அவள் வந்திருந்த மேல் வகுப்புக்கு மேல் அந்தத் தியேட்டரில் வேறு எந்த மேல் வகுப்பும் இல்லை!

     கீழ் வகுப்புக்கு வேண்டுமானால் போய்விடலாம். அதற்காக இப்போதுள்ள டிக்கெட்டை மாற்றிக்கொள்ள முடியாதென்றாலும், வேறு டிக்கெட்டை வேண்டுமானாலும் வாங்கிக் கொண்டு விடலாம். ஆனால், கீழ் வரிசைக்குப் போகும்போது மேல் வரிசையில் உள்ளவர்கள் தன்னைப் பார்த்துவிட்டால்? - அதனாலென்ன, விளக்கை அணைத்த பிறகு போய் உட்கார்ந்து கொண்டு விட்டால் போகிறது!

     இது என்ன பைத்தியக்காரத்தனம்! - அணைக்கப்பட்ட விளக்குகள் எப்போதும் அணைக்கப்பட்ட விளக்குகளாகவே இருந்துவிடுமா, என்ன? மறுபடியும் அவை ஏற்றப் படாதா? - அப்போது நான் எங்கே போவேன்? அப்போது நான் இவர்களுடைய பார்வையிலிருந்து எப்படித் தப்புவேன்?

     நல்ல வேடிக்கை இது! - நேற்று வரை வாழ்க்கையில் வெளிச்சத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவள் நான்; இன்றோ இருட்டை எதிர்பார்க்கிறேன்!

     ஆம்; திருடனுக்குப் பிடிக்காத வெளிச்சம், எனக்கும் பிடிக்கவில்லை இப்போது!

     வேண்டும்; நன்றாக வேண்டும்! - பெற்றோர் செலவில் பெற்ற புத்திசாலித்தனத்தை வைத்துக் கொண்டு, பெற்றோரையே முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு விட்டவள் அல்லவா, நான்? - வேண்டும்; நன்றாக வேண்டும்!

     அந்தச் சண்டாளனுக்காக அவர்களிடம் நான் சொன்னதென்னமோ ஒரே ஒரு பொய்தான்! அந்த ஒரே ஒரு பொய்யை மெய்யாக்குவதற்காக இப்போது நான் எத்தனை பொய்கள் சொல்லவேண்டியிருக்கிறது? என்ன பாடு படவேண்டியிருக்கிறது?

     அந்தச் சண்டாளனுக்காக அவர்களிடம் நான் சொன்னதென்னமோ ஒரே ஒரு பொய்தான்! அந்த ஒரே ஒரு பொய்யை மெய்யாக்குவதற்காக இப்போது நான் எத்தனை பொய்கள் சொல்ல வேண்டியிருக்கிறது? என்ன பாடு படவேண்டியிருக்கிறது?

     அந்தப் பொய்யைக் கூட நானா சொன்னேன், அவர்களிடம்? - இல்லை; அவன் சொன்னதை நான் அப்படியே சொல்லிவிட்டேன் அவர்களிடம்! - உண்மையில் எனக்கும் தெரியாதே, அன்று அவன் சொன்னது பொய் என்று?

     சொன்னது பொய்யாயிருந்தாலும், அதை எவ்வளவு அழகாகச் சொன்னான், அவன்! - ‘கடவுளுக்கு, உருவம் கொடுத்தவன் சிற்பி; காதலுக்கு உருவம் கொடுத்தவன் கவிஞன். இருவர் கொடுத்த உருவங்களும் கற்பனைதான் என்றாலும், இன்று அவை வாழ்க்கையின் இரு பெரும் உண்மைகளாகிவிட்டன. ஒன்று, பரலோக வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது; இன்னொன்றோ இகலோக வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது; இரண்டையும் ஒன்றாகப் பார்த்து அனுபவிக்கக் கூடிய ஒரே இடம், மகாபலிபுரம்; அந்த மகாபலிபுரத்துக்குத்தான் நாளை நாம் போகப் போகிறோம்’ என்றல்லவா அவன் சொன்னான்?

     கடைசியில் நடந்தது என்ன? - கடவுளுக்குச் சிற்பி அங்கே உருவம் கொடுத்திருக்கிறானோ இல்லையோ, காதலுக்கு இங்கே உருவம் கொடுக்க ஆரம்பித்து விட்டான் இவன்! - வெட்கக்கேடுதான், போ!

     இவ்வாறு நினைத்தபடி, அவள் தன் தலையில் தானே தட்டிக் கொண்டபோது, “பாட்டுப் புத்தகம் வேண்டுமா அம்மா, பாட்டுப்புத்தகம்?” என்று கேட்டுக் கொண்டே பையன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். “பாட்டுப் புத்தகம் வேண்டாம்; தலைவலி மருந்து ஏதாவது இருந்தால் கொடு!” என்றாள் அவள். அவன் அவளை ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே மேலே சென்ற போது, “பாட்டுப் புத்தகம், ஏ பாட்டுப் புத்தகம்!” என்று அவனுக்கே ‘பாட்டுப் புத்தகம்’ என்ற பெயரை வைத்து அவனை அழைத்தான் மோகன், அவள் இருந்த பக்கமாகத் திரும்பி.

     அவ்வளவுதான்; “இனி இங்கே இருந்தால் ஆபத்து!” என்று துணிந்து கீழே இறங்கி வந்தபோது, இன்னொரு எதிர்பாராத அதிர்ச்சி அவளுக்கு அங்கே காத்துக் கொண்டு இருந்தது; அந்த அதிர்ச்சி சுந்தர் உருவிலே வந்து அங்கே நின்று கொண்டு இருந்தது!

     இவன் யாருக்காக இங்கே வந்திருக்கிறான்? தனக்காக வந்திருக்கிறானோ? - தனக்காக வந்திருக்கிறான் என்றால், தான் இந்தத் தியேட்டருக்குள் நுழைந்ததைக் கூடப் பார்த்துவிட்டு வந்திருக்கிறானோ?

     பார்த்துவிட்டு வந்திருந்தால் இவன் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு நேராக மேலே அல்லவா வந்திருக்க வேண்டும்? இங்கே நின்று வாசலைப் பார்த்துக் கொண்டு இருக்கக் காரணம்?

     நண்பர்கள் யாரையாவது எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறானோ? அப்படியிருந்தால், இவன் இங்கே எவ்வளவு நேரம் நின்று கொண்டு இருப்பானோ? அதுவரை நான் எங்கே நிற்பது?

     இது என்னத் தொல்லை! - அந்தப் பக்கம் போனால் அண்ணன்; இந்தப் பக்கம் வந்தால் இவன்! - வேறு எந்தப் பக்கம் போவேன், நான்?

     இந்தத் தியேட்டருக்கே ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, வேறு தியேட்டருக்குப் போய்விடலாமென்றாலும் இப்போது முடியாது போலிருக்கிறதே?

     ‘சரி, நடப்பது நடக்கட்டும்!’ என்ற தீர்மானத்துடன் தான் ஏற்கெனவே உட்கார்ந்திருந்த இடத்துக்கே போய் உட்கார்ந்து விடுவது என்று நினைத்து அவள் திரும்பிய போது, மோகனும் பாமாவும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே வெளியே வருவதுத் தெரிந்தது.

     இது என்னக் கூத்து? இவர்கள் ஏன் இப்போது வெளியே வருகிறார்கள்? இவர்களைக் கண்டு நான் தான் பயப்பட்டேன் என்றால், இவர்களும் அல்லவா என்னைக் கண்டு பயப்படுகிறார்கள்போல் இருக்கிறது!

     அதோ, அவன் அவளை அந்த ‘ஐஸ்-கிரீம்’ கடைக்குப் பின்னால் அழைத்துக் கொண்டு போய் ஏதோ சொல்கிறான் போல் இருக்கிறதே! - என்ன சொல்கிறான்?

     “நீ இங்கேயே நின்று கொண்டிரு; நான் போய் வேறுவகுப்புக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன். அவளுடன் உட்கார்ந்து நம்மால் நிம்மதியாகப் படம் பார்க்கவும் முடியாது; பேசவும் முடியாது!”

     “ஏன் முடியாது? அவளுக்குத் தெரிந்து என்னுடன் பழக உங்களுக்குப் பயமாயிருக்கிறதென்றுச் சொல்லுங்கள்!”

     “உனக்குத் தெரியாது, அவள் சமாச்சாரம்! இன்று காலையில் அவள் என்னிடம் என்ன சொல்லிவிட்டு வந்தாள், தெரியுமா? ‘மகாபலிபுரம் போகிறேன்; மாலைதான் வருவேன்’ என்று சொல்லிவிட்டு வந்தாள். இப்போது பார்த்தால் அவள் நம்மைத் தொடர்ந்து இங்கே வந்திருக்கிறாள்!”

     இதைக் கேட்டதும், அந்த நிலையிலும் அருணாவுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது - இப்படியும் ஓர் அண்ணா இருப்பானா, தனக்கு? மகாபலிபுரம் போகிறேன் என்று சொல்லிவிட்டு, இவனைத் தொடர்ந்து நான் இங்கே வந்திருக்கிறேனாமே? - என்ன அபூர்வமான கண்டுபிடிப்பு!

     அசடு! - அந்த அசடையும் காதலிக்க ஒருத்தி கிடைத்திருக்கிறாளே, அதைச் சொல்லு!

     தன்னைப் பொறுத்தவரை அவன் அப்படி இருப்பது ஒரு விதத்தில் நல்லது; அதுவும் இந்தச் சமயத்தில் மிகமிக நல்லது!

     இப்படி எண்ணி அவள் கொஞ்சம் தைரியம் அடைந்த போது, பாமா சொன்னாள்:

     “அப்படியேதான் வந்திருக்கட்டும்; அவளுக்காக இப்படி நாம் எத்தனை நாட்கள் பதுங்கிப் பதுங்கி வாழ்வது?”

     மோகன் சொன்னான்:

     “எல்லாம் கல்யாணம் ஆகும் வரையில் தானே? அதற்குப் பிறகு நம்மை யார் என்ன செய்ய முடியும்?”

     “அதுதான் கூடாது என்கிறார்கள், எங்கள் மீனாட்சியம்மாள்! ‘இந்த மாதிரி காதல் விவகாரங்கள் எல்லாம் கல்யாணம் ஆன பிறகு நாலு பேருக்குத் தெரிவதை விட, கல்யாணம் ஆவதற்கு முன்னாலேயே தெரிவதுதான் நல்லது’ என்று அவர்கள் சொல்கிறார்கள்!”

     “ஆண் வர்க்கத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கைபோல் இருக்கிறது, அவர்களுக்கு! - ஆனாலும் நான் சொல்வதையும் நீ கேட்கத்தான் வேண்டும்; அவர்கள் நினைப்பதுபோல் நமது சமூகம் இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை!”

     “சமூகம், சமூகம் என்கிறீர்களே, சமூகம் என்று ஒன்று தனியாக இருக்கிறதா, என்ன? நீங்களும் நானும் சேர்ந்ததுதானே சமூகம்? அந்தச் சமூகத்தோடு ஒட்டாமல் நாம் எடுத்ததற்கெல்லாம் பிரிந்து நின்று, ‘அது இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை, அது இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை’ என்று சொல்லிக்கொண்டு இருந்தால், அது என்றுதான் அந்த அளவுக்கு முன்னேறுவது? நீங்கள் பேசாமல் இருங்கள்; நானே உங்கள் தங்கையைக் கூப்பிடுகிறேன் - அருணா, அருணா!”

     மோகன் பதறிப் பாய்ந்து அவள் வாயைப் பொத்துவதற்குள், பாமா அவளைக் கூப்பிட்டே விட்டாள்; அவளும் அதுதான் சமயமென்று அமைதியே உருவாய் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றுவிட்டாள்!

     அசட்டு அண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை; ‘அத்தனை அமைதி தன் தங்கையிடம் திடீரென்று எப்படித் தோன்றிற்று?’ என்று எண்ணிக் குழம்பியவனாய், அவன் அவளையே ஒரு கணம் மேலுங் கீழுமாகப் பார்த்தான். மறுகணம் தன்னை மறந்து, “என்ன அருணா, என்ன உடம்புக்கு?” என்று அவளை மெல்ல விசாரித்தான்.

     “ஒன்றுமில்லை; உலகம் இன்றுதான் புரிந்தது, எனக்கு!” என்றாள் அவள், எங்கோ பார்த்து நிலைத்த கண் நிலைத்தபடி.

     “எதைச் சொல்கிறாய்? ‘மணியைப் பார்க்கப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் படம் பார்க்க வந்திருக்கிறேனே, அதைச் சொல்கிறாயா?”

     “இல்லை, ‘மகாபலிபுரம் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு இங்கே வந்து நிற்கிறேனே, அதைச் சொல்கிறேன்!”

     அவன் சொன்னது அவளுக்குப் புரியவில்லை; அவள் சொன்னதும் அவனுக்குப் புரியவில்லை! - ஆயினும், ஏதோ புரிந்துவிட்டது போல அவர்கள் இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டார்கள்!

     “ஆமாம், உள்ளே உட்கார்ந்திருந்த நீ ஏன் திடீரென்று எழுந்து வெளியே வந்தாய்?” என்று அருணாவைக் கேட்டாள் பாமா.

     “உங்களுக்குப் பயந்துதான்!” என்றாள் அவள்.

     “அட, கடவுளே! இவரும் உனக்குப் பயந்துதான் என்னை இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்!”

     “இனிமேல் யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம்; வாருங்கள், உள்ளே போவோம்!” என்று அவர்களை அழைத்துக் கொண்டு அருணா உள்ளே சென்றாள்.

     திரை விலகிற்று - தியேட்டரின் திரை மட்டும் அல்ல; அவர்கள் மூவருடைய மனத்திரையும் தான்!

     காட்சி ஆரம்பமாயிற்று - வாழ்க்கையில் பலரை வஞ்சிப்பதற்கு உதவும் காதல், திரையிலும் அல்லவா லட்சோப லட்சம் மக்களை வஞ்சிப்பதற்கு உதவுகிறது!

     அவர்களில் ஒருத்தியாகத் தானும் அங்கே உட்கார்ந்திருப்பதை உணர்ந்தபோது, அருணாவுக்கு ஏனோ சுந்தரைப் பற்றிய நினைவு வந்தது.

     அவன் இப்போது எங்கே இருப்பான்? வாசலில் நின்று கொண்டிருப்பானா? அல்லது, மேலே வந்திருப்பானா?

     மேலே வந்திருந்தால் தனியாக வந்திருப்பானா? அல்லது, தன் நண்பர்களுடன் வந்திருப்பானா?

     அவன் எப்படி வந்திருந்தால் என்ன? அவனைப் பற்றித் தன் மனம் ஏன் இன்னும் நினைக்க வேண்டும்? - நினைக்கத் தெரிந்த மனத்துக்கு மறக்கத் தெரியாதா?

     இப்படியெல்லாம் எண்ணி அவள் மேலும் மேலும் குழம்பிக் கொண்டு இருந்தபோது, இடைவேளை மணி கிணுகிணுத்தது; அணைக்கப்பட்டு இருந்த விளக்குகள் அத்தனையும் மறுபடியும் குபீரென்று எரிந்தன.

     “ஆளுக்கோர் ‘ஐஸ்-கிரீம்’ சாப்பிடுவோமா?” என்றான் மோகன், அனாவசியமான பயத்தால் ஏற்கெனவே வறண்டு போயிருந்த தன் நெஞ்சை அதைக் கொண்டாவது கொஞ்சம் ஈரமாக்கிக் கொள்ளலாமே என்று!

     ‘கொண்டு வரச் சொல்; அதனாலாவது என் உள்ளம் குளிருகிறதா என்று பார்ப்போம்!’ எனச் சொல்லலாமா என்று தோன்றிற்று அருணாவுக்கு; ஆனால் சொல்லவில்லை.

     அதற்குள் ஐஸ்-கிரீம் பையனே அங்கு வந்து நின்று விடவே, ஆளுக்கோர் ஐஸ்-கிரீமை எடுத்துக் கொடுத்தாள் பாமா.

     அப்போது, “அட, அருணாவா, நான் பார்க்கவேயில்லையே?” என்று யாரோ சொல்வது தன் காதில் விழவே, அருணா திரும்பிப் பார்த்தாள்; அழகன் ஒருவனுடன் நின்று கொண்டு இருந்த அழகி ஒருத்தி, “இதுவரை உனக்கு என்னை மட்டும் தான் தெரியும், இல்லையா? இப்போது இவரையும் தெரிந்துகொள்; இவர் என் காதலர் - நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்; இவள் என் சிநேகிது அருணா!” என்று தன்னுடன் இருந்த தன் காதலனை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள், ஆங்கிலத்தில்!

     அவ்வளவுதான்! - அருணாவின் கையிலிருந்த ஐஸ்-கிரீம் நழுவிக் கீழே விழுந்தது; அவள் மூர்ச்சையானாள்!

     காரணம் வேறொன்றும் இல்லை; அந்த அழகியுடன் இருந்த அழகன் சுந்தராயிருந்ததுதான்!