14. அபாய அறிவிப்பு

     பொழுது விடிவதற்கு முன்னால் எழுந்து ஓரிரு மைல்கள் ஓடிவிட்டு வந்து குளிப்பது மணியின் வழக்கம். உடற்பயிற்சிக்காகக் கைக்கொண்டிருந்த அந்த வழக்கத்தை யொட்டி, அன்றும் ஓடி விட்டு வந்து அவன் குளித்துக் கொண்டு இருந்த போது, “சார், சார், உங்களுக்கு ஓர் அபாய அறிவிப்பு!” என்றான் சங்கர்.

     “என்ன, ஓட்டல் முதலாளி சோற்றில் சுண்ணாம்பைக் கலந்து கொண்டு இருக்கிறாரா? இல்லை, சாம்பாரில் விழுந்த கரப்பானைத் தூக்கி வெளியே போட்டுக் கொண்டு இருக்கிறாரா?” என்று மணி கேட்டான்.

     “இரண்டுமில்லை; உங்களுக்கு அடுத்தாற் போலிருக்கும் அறையில் புது காதல் ஜோடியொன்று குடியேறியிருக்கிறது!” என்றான் தான்.

     அவ்வளவுதான்; “அந்தச் சனியன்களுக்கு வேறு அறையொன்றும் இல்லையா, இங்கே?” என்று இரைந்தான் மணி.

     “இருந்தால் உங்களுக்குப் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்திருப்பேனா, சார்?” என்றான் அவன்.

     “சரி, கல்யாணமான காதல் ஜோடியா? இல்லை, கல்யாணமாகாத காதல் ஜோதியா?”

     “கல்யாணமாகாத காதல் ஜோதி என்றுதான் நினைக்கிறேன்!”

     “அப்படிப்பட்ட ஜோதிகளுக்குக் கூடவா இங்கே இடம் கிடைக்கிறது?”

     “ஏன் சார், கிடைக்காது? அந்த விஷயத்தில்தான் நம்முடைய ஓட்டல் முதலாளி ‘டபிள் எம்.ஏ.’வாயிற்றே?”

     “அது என்னடா அது, டபிள் எம்.ஏ?”

     “உங்களுக்குத் தெரியாதா, சார்? இரண்டு எம்.ஏ.க்களைச் சேர்ந்தாற் போல் ஆங்கிலத்தில் எழுதிப் படித்தால் என்ன வருமோ, அதுதான் சார் அது!”

     “அடப்பாவி! இது எந்த சர்வகலாசாலைப் பட்டம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் மணி.

     “தெரியாது சார், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரைப் பற்றிப் பேசும் போது அப்படித்தான் பேசுகிறார்கள்!”

     “அவ்வளவு கேவலமான மனிதரா, அவர்?”

     “அவர் என்னமோ நல்லவர்தான் சார், பணம் அவரை அந்தப் பாடுபடுத்துகிறது!”

     “அதற்காக?”

     “நாய் விற்றக் காசு குறைக்கவாப் போகிறது என்று அவர் நினைக்கிறார்!”

     “எல்லோரும் அப்படி நினைத்துவிட்டால் இந்த உலகம் என்னடா ஆவது?”

     “அதுதான் உருண்டை என்கிறார்களே சார், அதை யாரால் ஒரு நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்த முடியும்? அது பாட்டுக்கு உருண்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான்!”

     “சரி, அந்தக் காதல் ஜோடி இங்கே எத்தனை நாட்கள் இருக்கப் போகிறதென்றாவது தெரியுமா, உனக்கு?”

     “தெரியாது சார், அநேகமாக இந்த மாதிரி ஜோடியெல்லாம் இங்கே ஒரு நாள் கூட முழுக்க இருப்பது கிடையாது. அதாவது...”

     “வேண்டாம்; அந்தக் கர்மத்தை நீ என் காது கேட்கச் சொல்ல வேண்டாம்!” என்று துண்டை எடுத்துத் துடைத்துக் கொண்டே தன் அறைக்கு வந்தான் மணி.

     சங்கர் அவனைத் தொடர்ந்து வந்து, “காபி, கீபி ஏதாவது வேண்டுமா, சார்?” என்று கேட்டான்.

     “ஒன்றும் வேண்டாம்; இன்று நான் எங்கேயாவது போய் அஞ்ஞாத வாசம் செய்துவிட்டு வரலாமென்று இருக்கிறேன்!”

     “ஏன், ஆபீசுக்குப் போகவில்லையா?”

     “அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறாய்? அவர்கள் போயும் போயும் இன்றல்லவா எனக்கு விடுமுறை விட்டிருக்கிறார்கள்?”

     “அப்படியானால் சோதனைதான் சார், உங்களுக்கு!” என்று சொல்லிக் கொண்டே சங்கர் திரும்பினான்.

     “இது என்ன சோதனை, வாழ்க்கையே எனக்குச் சோதனையாய்த்தான் இருக்கிறது!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே மணி, வெளியே போவதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த போது, “மாட்டேன்; கல்யாணத்துக்கு முன்னால் உங்களுடைய இச்சைக்கு நான் ஒரு நாளும் இணங்க மாட்டேன்!” என்ற பெண்ணின் குரல் அவன் காதில் விழுந்தது.

     யார் இந்தப் பெண்? இவள்தான் அடுத்த அறையில் புதிதாகக் குடியேறியிருப்பவளா யிருக்குமோ? அப்படியிருந்தால் இவளுடைய பேச்சிலிருந்து இவள் வன்முறைக்கு ஆளாகியிருப்பதாக வல்லவாத் தோன்றுகிறது?

     ஐயோ பாவம்! எந்தக் கிராதகனை நம்பி இவள் இங்கே வந்து இப்படித் தவிக்கிறாளோ? இந்த நிலையில் இவளை விட்டு விட்டா அஞ்ஞாத வாசம் செய்யப் போவது?

     மற்ற தர்மங்கள் எப்படியிருந்தாலும், ‘மனித தர்மம்’ என்று ஒன்று இருக்கிறதே? அந்தத் தர்மம் இந்த நாளில் சிலருக்கு இப்படிப்பட்ட காட்சிகளைக் காணும்போது கண்ணை மூடிக்கொள்வதாக இருக்கலாம்; இப்படிப்பட்ட அவலக் குரல்களைக் கேட்கும்போது காதைப் பொத்திக் கொள்வதாக இருக்கலாம் - தனக்கோ? - அந்தப் ‘பக்குவ நிலை’ இன்னும் கிட்டவில்லையே?

     இருக்க வேண்டியதுதான்; இந்தக் ‘காதல் காட்சி’யின் முடிவு என்னவென்று தெரியும் வரை, தான் இங்கேயே இருக்க வேண்டியதுதான்!

     முடியாத உதவியை யாரும் யாருக்கும் செய்ய வேண்டாம்; முடிந்த உதவியைக் கூடவா யாரும் யாருக்கும் செய்யக் கூடாது? அதைக் கூடச் செய்யாத மனம், செய்ய விரும்பாத மனம், எப்படி மனித மனமாயிருக்க முடியும்?

     இது என்னக் கேள்வி? அப்படியும் சிலர் இந்த உலகத்தில் இருக்கத்தானே இருக்கிறார்கள்?

     இருக்கட்டும். இருந்து, அவர்கள் அவர்களுக்காகவே வாழட்டும்; அவர்கள் அவர்களுக்காகவே சாகட்டும். தன்னைப் பொறுத்தவரை, தான் அப்படி வாழவும் வேண்டாம்; அப்படிச் சாகவும் வேண்டாம்!

     மொழி எதுவாயிருந்தாலும் அதில் அர்த்தமில்லாத சொல் என்று ஏதாவது ஒன்று உண்டா? அதே மாதிரி மனித வாழ்க்கையிலும் ஏன் அர்த்தமில்லாத வாழ்க்கை என்று ஒன்று கூட இல்லாமல் இருக்கக்கூடாது?

     அப்படியிருந்தால் இந்த உலகம் எவ்வளவு அழகாயிருக்கும்! - கனவில் காணும் அந்த அழகான உலகத்தை நனவில் காண முடியாதா?

     இப்படி நான் மட்டுமா நினைக்கிறேன்... இப்படி நான் மட்டுமா கேட்கிறேன்? இதற்கு முன் எத்தனையோ பேர் இப்படி நினைத்திருக்கிறார்கள்; இதற்கு முன் எத்தனையோ பேர் இப்படிக் கேட்டிருக்கிறார்கள்!

     அவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்று கேட்டால், ‘மண்ணோடு மண்ணாக மறைந்து விட்டார்கள்’ என்று சொல்பவர்கள் சுலபமாகச் சொல்லலாம். ஆனால், உண்மை அதுவல்ல; அவர்களுடைய உடல் மண்ணில் மறைந்தாலும், உள்ளம் ஒரு சிலருடைய சொல்லிலாவது, ஒரு சிலருடைய செயலிலாவது இன்று வரை இடம் பெற்றுத்தான் வருகிறது. இல்லாவிட்டால் இந்த உலகமாவது, இன்னும் உயிர் வாழ்வதாவது?

     அத்தகையவர்களில் ஒருவனாக வாழ விரும்பும் நான், இப்படி ஒரு பெண் இங்கேத் தவிப்பதை அறிந்த பிறகு, எங்கேப் போவது, எப்படிப் போவது?

     இருக்க வேண்டியதுதான்; இந்தக் ‘காதல் காட்சி’யின் முடிவு என்னவென்று தெரியும் வரை, தான் இங்கேயே இருக்க வேண்டியதுதான்!

     இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும், “சங்கர், சங்கர்!” என்று சர்வரை அழைத்தான் மணி.

     “என்ன சார், அஞ்ஞாத வாசல் கைவிடப்பட்டதா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் அவன்.

     “அது எப்படித் தெரிந்தது, உனக்கு?”

     “உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருப்பதை விட எனக்கு அதிகமாகவே தெரியும், சார்!” என்றான் அவன்.

     “ஆச்சரியமாயிருக்கிறதே?”

     “சரி, இப்போது சூடா ஒரு கப் காபி - அவ்வளவுதானே?”

     “ஆமாம்!”

     அவன் நடந்தான்; மணி கடைசியாகக் காலில் அணிந்த செருப்பைக் கழற்றி விட்ட இடத்திலேயே விட்டு விட்டுக் கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.

     “ஏன், என் மேல் உனக்கு நம்பிக்கையில்லையா?” என்ற ஆணின் குரல் அடுத்தாற் போல் அவன் காதில் விழுந்தது.

     மணி சிரித்தான்; சிரித்துவிட்டுத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்;

     நம்பிக்கை! - வாழ்க்கையின் ஆணி வேரையே அல்லவா அசைத்துப் பார்க்கிறான், அவன்? - எமகாதகப் பயலாயிருப்பான் போலிருக்கிறது!

     இருக்கலாம் - அவன் மேல் அவளுக்கு நம்பிக்கை இருக்கலாம்; அவள் மேல் அவனுக்கும் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் யாரை யார், எதற்கு நம்புவது என்ற விதிமுறை வேண்டாமா, வாழ்க்கைக்கு? நடைமுறை வேண்டாமா, வாழ்க்கைக்கு?

     சாவது நிச்சயமென்றாலும் வாழாமல் இருந்து விடுவதில்லை யாரும்! - அத்தகைய வாழ்வுக்கு அடிப்படை, ஆதாரம் எல்லாம் நம்பிக்கைதானே? - அந்த நம்பிக்கையை ஒருவர் மேல் ஒருவர் வைப்பதென்றால், அதிலும் ஒரு பெண் ஓர் ஆணின் மேல் வைப்பதென்றால், அவ்வளவு எளிதில் வைத்து விட முடியுமா, அதை?

     அவளுடைய சிந்தனை முடியவில்லை; அதற்குள் காதலி சொன்னாள்:

     “நம்பிக்கை வேறு, எச்சரிக்கை வேறு; தயவு செய்து இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பாதீர்கள்!”

     காதலன் கேட்டான்:

     “இப்போது நீ அந்த எச்சரிக்கைக்காத்தான் என்னை விட்டு விலகி நிற்கிறாயா?”

     “ஆம், விலகி மட்டும் நிற்கவில்லை; ‘உண்மையான மனிதனை வெளியே பார்க்காதே; நாலு சுவர்களுக்கு நடுவே பார்!’ என்று யாரோ ஓர் அனுபவசாலி சொல்லியிருக்கிறானே, அவன் சொன்ன மனிதனை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன்!”

     “அவ்வளவு மோசமாகவா நினைக்கிறாய், என்னைப் பற்றி?”

     “இப்படிக் கேட்க வெட்கமாயில்லை. உங்களுக்கு? இந்த ஓட்டல் அறைக்கே நீங்கள் என்னை மோசம் செய்துதானே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?”

     “இதில் என்ன மோசம் இருக்கிறது? எதிர்பாராத விதமாக மகாபலிபுரம் பஸ் தவறிவிட்டது. ‘ஐயோ, இரவு எட்டு மணிக்கல்லவா நான் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறேன்? அதுவரை எங்கே தங்குவது?’ என்று நீ தவித்தாய். ‘தங்குவதற்கா இடமில்லை?’ என்று நான் உன்னை இங்கே அழைத்துக் கொண்டு வந்தேன். அவ்வளவுதானே நடந்தது?”

     “இல்லை; அதற்கு மேலும் ஏதோ நடக்கப் பார்க்கிறதே, அதைத்தான் இப்போது நான் விரும்பவில்லை என்கிறேன்!”

     “இப்போது விரும்பவில்லையென்றால், அதற்கு இந்த மாதிரி ஒரு சந்தரப்பம் வேறு எப்போது வாய்க்கப் போகிறது நமக்கு?”

     “வேண்டாம்; அதற்கு இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வேறு எப்போதுமே நமக்கு வாய்க்க வேண்டாம்!”

     காதலி இப்படிச் சொன்னாளோ இல்லையோ, “சபாஷ்!” என்று தன் தொடையில் தானே தட்டிக் கொண்டான் மணி. அதற்குள் காதலன் சொன்னான்:

     “இப்போதுதான் தெரிகிறது எனக்கு, காதலிப்பதற்கே நாம் லாயக்கில்லை என்று!”

     “நாம் என்று சொல்லாதீர்கள்; நான் என்று சொல்லுங்கள்!”

     “நன்றி, உன் திருத்தத்துக்கு, ஆனால்...”

     “ஆனால் என்ன?”

     “கனி கண்டவன் தோல் உரிக்கக் காத்திருப்பதில்லை என்பது கவிஞன் வாக்கு; கடவுள் வாக்கும், கவிஞன் வாக்கும் பொய்ப்பதில்லை என்பதை நீ உணர வேண்டும்!”

     “நான் கனி அல்ல; கன்னி!”

     “தெரியும்; அதனால் தான் இந்த ஓட்டல் அறைக்கு உன்னை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இல்லாவிட்டால் தெருவிலேயே தோலை உரித்து எறிந்துவிட்டுக் கனியை விழுங்கியிருக்க மாட்டேனா, நான்?”

     அவள் சிரித்தாள்; “ஏன் சிரிக்கிறாய்?” என்று அவன் கேட்டான்.

     “ஒன்றுமில்லை. கனிக்கு மட்டுமென்ன, கன்னிக்குக் கூட உங்களைப் போன்றவர்களுக்குத் தெருவே போதும் என்று நினைத்தேன்; சிரிப்பு வந்துவிட்டது!”

     “சீச்சீ! அவ்வளவு மட்டமாகவா நினைத்துவிட்டாய், என்னை?”

     “உயர்தரமாக நினைப்பதற்குத்தான் ஒன்றுமே இல்லையே, உங்களிடம்?”

     “ஏன் இல்லை, எத்தனையோ இருக்கிறது!”

     “எத்தனை இருந்து என்ன பிரயோசனம்? அந்த ஒன்று இல்லையென்றால் அத்தனையும் வீணே!”

     “எந்த ஒன்று?”

     “புத்தி!”

     அவன் சிரித்தான்; “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று அவள் கேட்டாள்.

     “ஒன்றுமில்லை. உனக்கு இல்லாததை எனக்கு இல்லை என்று சொல்கிறாயே, என்று நினைத்தேன்; சிரிப்பு வந்து விட்டது!”

     காதலன் இப்படிச் சொன்னானோ இல்லையோ, “ரொம்பச் சரி; அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஏனெனில், புத்தி உள்ளவர்கல் காதலிப்பதில்லை!” என்று மணி தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அதற்குள் காபியும் கையுமாக வந்து நின்றான் சங்கர். அதை வாங்கி ஒரு வாய் குடித்ததும் காதலி சொன்னது கேட்டது.

     “நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை; இருந்தால் உங்களை நான் காதலித்திருக்க மாட்டேன்!”

     அவ்வளவுதான்; “அடிச்சக்கை, கொன்று விட்டாளே!” என்று தன்னை மறந்து எழுந்து நின்றான் மணி. “அவசரப்படாதீர்கள்; இப்போது அவன் அவளைக் கொல்லப் போகிறான், பாருங்கள்!” என்றான் சங்கர். மணி உட்கார்ந்தான்; காதலன் சொன்னான்;

     “இப்போது மட்டுமென்ன, என்னை நீ காதலிப்பதாகத் தெரியவில்லையே, எனக்கு?”

     “அதைத் தெரிந்து கொள்ளும் வழி இதுவல்ல; வேறு!”

     “இருக்கலாம்; ஆனால் அவற்றுக்கெல்லாம் அடிப்படை இதுவே!”

     “காதலுக்கு இதுதான் அடிப்படை என்றால், அதை நான் வெறுக்கிறேன்!”

     “வெறுப்பும் விருப்பும் இனி உன் கையில் இல்லை; என் கையில்தான் இருக்கிறது!”

     இதை அந்தக் காதலன் சொன்னதுதான் தாமதும், இருவரும் கட்டிப் புரளும் சத்தம் மணியின் காதில் விழுந்தது. அதற்குமேல் அவன் தாமதிக்கவில்லை; விருட்டென்று எழுந்து வெளியே வந்து கதவைத் தட்டினான்.

     “யார் அது?” என்று உள்ளேயிருந்து ஒரு கேள்வி பிறந்தது.

     “மனிதன்!” என்றான் மணி.

     “உள்ளேயிருப்பவனும் மனிதன்தான்; நீ போய் உன் வேலையைப் பார்!” என்றான் அவன்.

     அவ்வளவுதான்; அடுத்தகணம் உதை ஒன்றாயிருந்தாலும் கதவு இரண்டாயிற்று!

     “நீங்களா!” என்றாள் அருணா, வியப்புடன்.

     “நீயா!” என்றான் மணி, தன் தலையைத் தானே தொங்க விட்டுக்கொண்டு.