32. பெருமைக்கு இழுக்கு!

     காந்தி நகரிலிருந்து ‘பார்வதி பவன’த்தை நெருங்கியதும், “என்னை இங்கேயே விட்டுவிடுங்கள்!” என்றான் சுந்தர்.

     “ஏன், உள்ளேயேக் கொண்டு வந்து விடுகிறேனே?” என்றார் ஆபத்சகாயம்.

     “வேண்டாம்; இந்த நிலையில் நான் இருப்பது அம்மாவுக்கும் தெரிய வேண்டாம், அப்பாவுக்கும் தெரிய வேண்டாம்!”

     “அதற்காக நீ இங்கிருந்து எப்படிப் போவாயாம்?”

     “மெல்ல மெல்ல நடந்தே போய்விடுகிறேன்; நீங்கள் காரைக் கொண்டு போய் அப்பாவிடம் விட்டுவிடுங்கள்!”

     “இப்படிச் சொல்வாய் என்று தெரிந்திருந்தால் உன்னை அடிப்பதற்கு முன்னாலேயே அவனை நான் தடுத்திருப்பேனே! இப்போது நீயே அல்லவா அவனைத் தண்டனையிலிருந்து தப்ப வைக்கப் பார்க்கிறாய்/” என்றார் அவர், மீண்டும் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக.

     “அவன் தண்டனை பெற வேண்டும் என்பதற்காக என்னுடைய மானத்தை நான் காற்றில் பறக்க விட முடியுமா, என்ன? நீங்கள் போய் வாருங்கள்!” என்றான் அவன், அவருடைய பதிலைக் கூட எதிர்பாராமல் இறங்கிக் கொண்டே. ஆபத்சகாயம் அவனைத் தடுக்கவில்லை; ‘எக்கேடாவது கெட்டுப் போகட்டும்!’ என்று வந்த வழியே திரும்பினார், அதற்கு மேல் அவனைச் சமாளிக்க முடியாமல்.

     அவர் போனதை ஒரு முறைக்கு இரு முறையாகப் பார்த்து நிச்சயப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தான் சுந்தர். தன்னால் முடிந்தவரை சமாளித்தும் சமாளிக்க முடியாமல் அவன் ஆடி அசைந்து வருவதைப் பார்த்ததும், ‘ஐயோ, மகனே!’ என்று அலறிவிடவில்லை பார்வதி; “என்னடா, எவன் உதைத்தான் இப்படி?” என்றாள் அனுபவபூர்வமாக.

     “என்னையாவது, எவனாவது உதைப்பதாவது? அதெல்லாம் ஒன்றுமில்லை அம்மா, மாடிப் படியிலிருந்து கீழே உருண்டுவிட்டேன்!”

     “குடித்துவிட்டா?”

     “போம்மா! என்றோ ஒரு நாள் வாழைப்பழம் தின்று விட்டு வந்தாலும் வந்தேன், அன்றிலிருந்து நீ என்னைக் குடிகாரன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாயே? நீ வேண்டுமானால் வாழைப்பழம் தின்பவர்களின் வாயை முகர்ந்து பார்; அவர்களுடைய வாயெல்லாம் சாராய வாடை அடிப்பது தெரியும்!”

     “அட, என் கண்ணே! உன் அப்பாவுக்கு வெறும் சோடாப் பிடிக்காத போது, உனக்கு மட்டும் வெறும் வாழைப்பழமா பிடித்துவிடப் போகிறது? போ போ! போய்ப் படு, போ!” என்றாள் அவள். தன் தலையில் லேசாகத் தட்டிக்கொண்டே.

     இரவல் காரின் சுகத்தை இலவசமாக அனுபவித்துக் கொண்டே சென்ற ஆபத்சகாயத்துக்கு எத்தனையோ சிந்தனைகள்! - எல்லாம் எதிர்காலத்தைப் பற்றியவைதான். சுகானந்தத்தைத் தான் சந்தித்து இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை; அதற்குள் அவர் தன்னை மறுபடியும் அழைக்கிறார் என்றால், அது எதற்காக இருக்கும்? அருணாவின் கல்யாண விஷயமாக இருக்குமா, அல்லது...

     அப்படியிருந்தால் அதில் அவர் இவ்வளவு அவசரம் காட்டலாமா? அதிலும், தலைக்கு மேல் உயர்ந்த தறுதலைப் பிள்ளை ஒன்றைப் பெற்றுத் தன் கையில் வைத்துக் கொண்டு?

     அனுப்பவே அனுப்பினார் அவனை! - சினிமா நடிகைகள் சொல்லிக் கொள்கிறார்களே, தாங்கள் பெற்ற பிள்ளையைத் தங்கள் தம்பி என்று, அந்த மாதிரி அவனையும் தன் தம்பி என்றாவது சொல்லிக் கொள்ளச் சொன்னாரா? - அதுவும் இல்லை; ‘யாரப்பா நீ?’ என்று கேட்டால், அவன் கொஞ்சங் கூடக் கூசாமல் ‘நான் தான் சுகானந்தத்தின் மகன்!’ என்கிறான்!

     நல்ல வேளை, அருணா அப்போது வீட்டில் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பாள்?

     அவள் நினைப்பதென்ன, தனக்கே இவ்வளவு பெரிய பிள்ளையைப் பெற்று வைத்திருக்கும் ஒரு தந்தைக்காத் தன் மகளை இரண்டாந்தாரமாகக் கொடுப்பது என்று தோன்றவில்லையா? அதிலும், முதல் மனைவி வேறு உயிருடன் இருக்கும்போது?

     இன்று சொல்கிறார், அருணாவுக்காக அவளை விவாகரத்து செய்துவிடுவதாக; நாளை இன்னொருத்திக்காக அவர் அருணாவையும் விவாகரத்து செய்துவிடுவதாகச் சொன்னால்?

     சொன்னால்தான் என்ன, அதனால் அவளுடைய வாழ்க்கையே பாழாகிவிடுமா?

     அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள்; ஆனால் அதில் ஏனோ தனக்கு மட்டும் அவ்வளவு நம்பிக்கை இல்லை!

     வயதானவராச்சே, சீக்கிரம் கண்ணை மூடிவிடுவாரே என்று சிலர் சொல்லலாம். அப்படியே மூடிவிட்டால்தான் என்ன? - விட்டது சனியன், ராஜாவின் ராஜ்யம் ராணியின் ராஜ்யமாகிவிடுகிறது!

     இது போன்ற ‘இனிய எண்ணங்க’ளில் மிதந்து கொண்டே ஆபத்சகாயம் கீதாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, அங்கே கீதா இல்லை; அவளுக்குப் பதிலாக சுகானந்தமே அவரை எதிர்கொண்டழைத்து, “உங்களிடம் காரைக் கொடுத்து விட்டு எங்கே போய்விட்டார் துரை, சினிமாவுக்கா?” என்றார் கேலியும் கிண்டலுமாக.

     “தெரியவில்லை; அதைப்பற்றி நானும் கேட்கவில்லை!” என்றார் ஆபத்சகாயம், அடக்கமே உருவாக.

     “கேட்காவிட்டால் போகிறது; ஆளையாவது நன்றாகப் பார்த்துக் கொண்டீர்களோ, இல்லையோ?”

     “பார்த்துக் கொண்டேன், பார்த்துக் கொண்டேன்!”

     “நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனை நான் அங்கே அனுப்பி வைத்தேன். வாருங்கள், போவோம்!” என்று ஆபத்சகாயத்தை மேலே அழைத்துக் கொண்டு போனார் அவர்.

     “எதற்கு?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டார் ஆபத்சகாயம்.

     “அதைச் சொல்லத்தானே உங்களை நான் இங்கே வரச் சொன்னேன்? உட்காருங்கள்!” என்று சுகானந்தம் அவரைத் தன் அறையில் உட்கார வைத்துவிட்டுத் தானும் உட்கார்ந்தார்.

     அப்போது கிட்டன் வந்து, “ஏதாவது கொண்டு வர வேண்டுமா?” என்று வழக்கத்தையொட்டிக் கேட்டான்.

     “ஒன்றும் வேண்டாம்; நான் கூப்பிடும் வரை நீ இங்கே வரவும் வேண்டாம்!” என்று சொல்லி அவனைக் கீழே அனுப்பிவிட்டு, “அந்தப் பயல் சுந்தர் இருக்கிறானே, அவன் இன்று என்னைச் சுட்டுவிடப் பார்த்தான்!” என்று ஆரம்பித்தார் அவர்.

     “என்ன!” என்று வாயைப் பிளந்தார் இவர்.

     “ஆமாம் ஐயா, ஆமாம். ‘பணம் பத்தும் செய்யும்’ என்கிறார்களே, அவற்றில் இதுவும் ஒன்று போலிருக்கிறது!” என்றார் சுகானந்தம்.

     “என்னால் நம்ப முடியவில்லையே, இதை!” என்றார் ஆபத்சகாயம்.

     “நானும்தான் இந்த நிமிஷம் வரை அதை நம்பவில்லை; ஆனாலும் அவனைப் பற்றிய சந்தேகம் மட்டும் இன்னும் தீரவில்லை!”

     “என்ன நடந்ததென்று கொஞ்சம் விவரமாய்த்தான் சொல்லுங்களேன்?”

     “இன்று காலை அவன் என் கைத்துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு தோட்டத்திலிருந்து ஒரு மரத்தைக் குறி பார்த்துச் சுட்டுக் கொண்டிருந்தான். அப்போது நான் அந்தப் பக்கமாகப் போனேன். ஒரு குண்டு என் தலைக்கு மேல் சென்றது. ‘என்னடா?’ என்றால், ‘குறி தவறிவிட்டது!’ என்று கொஞ்சம் கூடப் பயமில்லாமல் இளிக்கிறான்!”

     “சிறு பிள்ளைதானே, விளையாட்டுத்தனமாயிருக்கும்!”

     “சரி, இது விளையாட்டுத்தனமாகவே இருக்கட்டும். இதற்கு முன் ஒரு நாள் எங்கள் வீட்டில் என்ன நடந்ததென்று தெரியுமா, உங்களுக்கு? என் கோட்டுப் பையில் ஒரு பாம்புக்குட்டி இருந்தது! - என்ன பாம்புக்குட்டி என்கிறீர்கள்? - நல்ல பாம்புக்குட்டி ஐயா, நல்ல பாம்புக்குட்டி!”

     “அது எப்படி வந்தது, அங்கே?”

     “அதையும் அவன்தான் கொண்டு வந்து போட்டிருப்பானோ என்று எனக்கு ஒரு சந்தேகம்!”

     “சீச்சீ, அப்படியிருக்காது!”

     “உங்களுக்குப் பணத்தின் அருமையைப் பற்றித்தான் தெரியுமே தவிர, அதன் குணத்தின் அருமையைப் பற்றித் தெரியாது; அதனால்தான் அப்படிச் சொல்கிறீர்கள்! - சரி, அது இருக்கட்டும். நீங்கள் எனக்காக ஓர் உதவி செய்கிறீர்களா?”

     “என்ன உதவி?”

     “நீங்கள்தான் துப்பறியும் இலாக்காவில் வேலை பார்த்திருக்கிறீர்களே, எதற்கும் அந்தப் பயல்மேல் ஒரு கண் வைத்துப் பாருங்களேன்?”

     “அதற்கென்ன, பார்க்கிறேன்! அவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்?”

     “அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள்! எந்தத் தொழிலைச் செய்தாலும் அந்தத் தொழிலை நேர் வழியில் செய்தால் பணம் பண்ண முடியாது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே? அதற்காக எதுவாயிருந்தாலும் நாளை அவனுக்குத் திருடவும் தெரியவேண்டும், பதுங்கவும் தெரிய வேண்டுமே என்று சட்டம் படிக்கச் சொன்னேன்! எங்கே படிக்கிறான்; எத்தனையோ பொழுது போக்குகளில் அதையும் ஒரு பொழுது போக்காக வைத்துக் கொண்டிருக்கிறான்!”

     “யோசனை நல்ல யோசனைதான்! ஆனால் பணம் அவனைப் படிக்க விடவில்லை போலிருக்கிறது?” என்றார் ஆபத்சகாயம் சிரித்துக் கொண்டே!

     “படிக்க விடாததோடு நின்றால் தேவலையே? வேறு என்னவெல்லாமோ செய்யச் சொல்கிறதே! அதுதானே எனக்குக் கவலையாயிருக்கிறது?” என்றார் அவர், உண்மையான கவலையுடன்!

     “அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம், நான் கவனித்துக் கொள்கிறேன் அவனை!” என்றார் ஆபத்சகாயம், தனக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவருக்காவது அந்த நம்பிக்கை இருந்துவிட்டுப் போகட்டுமே என்று!

     இந்தச் சமயத்தில் ‘டெலிபோன்’ மணி கிணுகிணுக்கவே, ‘ரிசீவ’ரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு, “சுகானந்தம் பேசுகிறேன்; யார் வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்டார் அவர்.

     அதற்குமேல் அவர் ஒன்றும் பேசாமல், ‘ம், ம்’ என்று ‘ம்’ கொட்டிக் கொண்டிருக்கவே, ‘யார் அது?’ என்று பொறுமையிழந்து கேட்டார் ஆபத்சகாயம்.

     “இன்ஸ்பெக்டர் இருதயசாமிப் பேசுகிறார்; கொஞ்சம் பொறுங்கள், இதோ வந்துவிட்டேன்!” என்று அந்த இருதயசாமி சொல்லவேண்டியதைச் சொல்லி முடித்ததும் அவர் ஆபத்சகாயத்தின் பக்கம் திரும்பி, “சுந்தரை யாரோ மணி என்பவன் அடித்துவிட்டானாம்! இதில் வேடிக்கை என்னவென்றால் சுந்தர் வந்து புகார் செய்வதற்குப் பதிலாக மணி வந்துப் புகார் செய்து இருக்கிறானாம், அவனைத் தான் அடித்து விட்டதாக! ‘இது உண்மையா?’ என்று சுந்தருக்குப் ‘போன்’ செய்து கேட்டால், ‘சுத்தப் பொய்; என்னை எவனும் அடிக்கவில்லை, அடிக்கவும் முடியாது!’ என்கிறானாம். இதற்கு நான் என்ன செய்யட்டும் என்று அவர் என்னைக் கேட்கிறார்! நீங்கள் தான் சொல்லுங்களேன், என்ன செய்யச் சொல்லலாம் என்று?” என்றார் ரிசீவரைக் கையிலேயே வைத்துக் கொண்டு.

     இதைக் கேட்டதும் ஆபத்சகாயத்துக்குத் திருடனைத் தேள் கொட்டியது போலிருந்தாலும் அதை அவர் வெளியே காட்டிக் கொள்ளாமல், “சுந்தரே தன்னை யாரும் அடிக்கவில்லை என்று சொல்லும்போது, அந்த மணியை நாம் என்ன செய்யச் சொல்வது? பேசாமல் விட்டுவிடச் சொல்லுங்கள்!” என்றார் அந்த அறையின் முகட்டைப் பார்த்தபடி.

     அப்படியே சொல்லி, ரிசீவரை ‘ரெஸ்’டின் மேல் வைத்து விட்டுப், “பார்த்தீர்களா, பணக்காரர்களுக்குள்ள அருங்குணங்களில் இதுவும் ஒன்று! - அதாவது, உதை பட்டால் கூட அதை அவன் வெளியே சொல்லமாட்டான், தன்னுடைய பெருமைக்கு அது இழுக்கு என்று!” என்றார் அவர்.