31. எங்கே சர்மாஜி?

     “ஏய் மணி, ஏய் மணி!”

     அதட்டினார் ஆபத்சகாயம் - அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவும் இல்லை; அவரை நோக்கித் திரும்பவும் இல்லை. பசி வேளையில் பருந்துக்குக் கிடைத்த கோழிக் குஞ்சு போல் தனக்குக் கிடைத்த சுந்தரை அவன் தன் ஆத்திரம் தீரும் வரை அடித்து நொறுக்கி விட்டு, “இப்போது கூப்பிடு உன் போலீசை; சந்தோஷமாகக் கையை நீட்டுகிறேன், என்னைக் கைது செய்து கொள்ள!” என்று கத்தினான்!

     சுந்தரோ, உருண்டு புரண்டு எழுந்த நிலையில், ஓர் அடி கூட ஆடாமல் அசையாமல் எடுத்து வைக்க முடியாமல் தட்டுத் தடுமாறி வந்து அவன் காலடியில் விழுந்தான். வழியில் அடிபட்டு விழுந்த நாயை ஒரு பக்கமாக இழுத்து விடுவது போல் அவனை இழுத்து அப்பால் விட்டுவிட்டு, “நான் வருகிறேன், எனக்காகப் போலீசார் மட்டும் அங்கே காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; சர்மாஜியும் காத்துக் கொண்டிருப்பார்!” என்று விரைந்தான் மணி.

     அவன் சென்ற திசையையே ஒரு கணம் பார்த்துக் கொண்டிருந்த ஆபத்சகாயம், “இந்த மாதிரிப் பயல்களுடனெல்லாம் நீ சேரவே கூடாது, மோகன்! இவனால் எந்தச் சமயத்திலும் உனக்கு ஆபத்து நேரலாம்!” என்றார் மறுகணம் தன் மகனின் பக்கம் திரும்பி.

     “ஆபத்து அவனால் நேரவில்லை; இதோ இருக்கிறானே, இவனால்தான் நேர்ந்தது!” என்றான் அவன், கீழே விழுந்துக் கிடந்த சுந்தரை சுட்டிக் காட்டி.

     “அப்படி என்ன ஆபத்து நேர்ந்துவிட்டது, இவனால். யாரோ ஒருத்தியைத்தானே இவன் ஓட்டல் அறைக்கு அழைத்துக் கொண்டு வந்தான், உங்கள் வீட்டுப் பெண்ணை இல்லையே?” என்றார் அவர், கொஞ்சம் காரசாரமாக.

     “இங்கேதான் மணிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் காண்கிறேன். ஏனெனில், உங்களைப் போல் அவன் நினைப்பதில்லை; இந்த உலகத்திலுள்ள அத்தனைப் பெண்களையுமே அவன் தன் வீட்டுப் பெண்களாக நினைக்கிறான்!” என்றான் அவன், அப்போதும் அமைதியாக.

     “நினைப்பான், நினைப்பான்; உடம்பில் திமிர் உள்ளவரை அப்படித்தான் நினைப்பான். இன்னொரு முறை அவன் இங்கே வரட்ட்டும்; அவனை நான் பார்த்துக்கொள்ள வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்கிறேன்!”

     “இவனும் அப்படித்தான் சொன்னான், அவனைப் பார்த்துக் கொள்ளவேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்று; அதன் பலனைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறான்!”

     “என்னடா! நீயே மிரட்டுகிறாயா, என்னை?”

     “இல்லை; எச்சரிக்கிறேன்!”

     “எதற்கு?”

     “எப்போதும் நல்லவர்களின் பக்கத்தில் நில்லுங்கள்; அது உங்களுக்கும் நல்லது, உலகத்துக்கும் நல்லது. கெட்டவர்களின் பக்கத்தில் நிற்காதீர்கள்; அது உங்களுக்கும் கெட்டது, உலகத்துக்கும் கெட்டது!”

     தன் மகனா தன்னைப் பார்த்து இப்படிப் பேசுகிறான்? - ஆபத்சகாயத்தால் நம்ப முடியவில்லை; அவனை மேலும் கீழுமாகப் பார்த்தார்.

     அதற்குள் ஒரு வாடகைக்காரில் மீண்டும் அங்கே வந்து இறங்கிய மணி, “அவசரத்தில் எதை முதலில் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய மறந்துவிட்டேன்; இவனைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, அப்படியே போலீசுக்கும் தகவல் கொடுக்க வேண்டாமா, நான்?” என்று சொல்லிக்கொண்டே வந்து, கீழே விழுந்து கிடந்த சுந்தரைத் தூக்கப் போனான்.

     “நில்! அவனைத் தொடாதே!” என்று கத்தினார் ஆபத்சகாயம்.

     “ஏன் தடுக்கிறீர்கள், என் கடமையை நான் செய்யவொட்டாமல்?” என்றான் மணி.

     “அந்தக் கடமையைச் செய்ய எனக்குத் தெரியும்; நீ போய் உன் வேலையைப் பார்!”

     “மிக்க மகிழ்ச்சி; உங்கள் உதவிக்கு நன்றி!”

     கொஞ்சம் குத்தலாகவே இதைச் சொல்லிவிட்டு, எந்த வாடகைக் காரில் வந்தானோ அதே வாடகைக் காரில் அவன் திரும்பிப் போய்விட்டான். அவனுடைய தலை மறைந்ததும், “கடமையாம் கடமை! ஆஸ்பத்திரியில் சேர்ப்பது இவருடைய கடமையென்றால், அடிப்பது கூட இவருடைய கடமைகளில் ஒன்றாய்தான் இருக்கும் போலிருக்கிறது? அயோக்கியப் பயல்” என்று அவனைத் திட்டிக் கொண்டே சுந்தரைத் தூக்கி நிறுத்தப் போனார் ஆபத்சகாயம்.

     அவனோ அவர் தூக்கி நிறுத்த நிறுத்த, தொப் தொப்பென்று கீழே விழுந்து கொண்டே இருந்தான். “இந்த அடிக்கே இப்படித் துவண்டு போய்விட்டானே, இவன்!” என்று சொல்லிக்கொண்டே அவனைத் தன் இரு கைகளாலும் ஏந்திக் கொண்டு போய்க் காருக்குள் கிடத்திவிட்டு, “அன்னபூரணி! ஏ, அன்னபூரணி!” என்று குரல் கொடுத்தார் அவர்.

     ஒன்றும் புரியாத நிலையில் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த அவள், மௌனமே உருவாய் அவருக்கு முன்னால் வந்து நின்றாள்.

     “இன்னொரு முறை அந்தப் பயல் இங்கே வந்தால் அவனை உள்ளே விடாதே!” என்றார் அவர்.

     “சரி!” என்பதற்கு அடையாளமாக அவள் தன் தலையை மட்டும் ஆட்டினாள்.

     “நான் வருகிறேன், இவனைக் கொண்டு போய் அவன் அப்பாவிடம் ஒப்படைத்துவிட்டு!”

     இதைச் சொன்னதும் அவர் போய்க் காரில் உட்கார்ந்து, அவரே அதை ஓட்டவும் ஆரம்பித்தார்.

     அப்போது, “தண்ணீர், தண்ணீர்!” என்று முனகினான், சற்றே மூர்ச்சை தெளிந்த சுந்தர்.

     “நீ கேட்பதற்கு முன்னாலேயே அதை நான் உனக்குக் கொடுத்திருக்க வேண்டும்; மறந்துவிட்டேன், ஆத்திரத்தில்!” என்று தானே இறங்கிப் போய்த் தண்ணீர் கொண்டு வந்தார் அவர்.

     அதை நடுங்கும் கைகளால் வாங்கிப் படுத்தபடியே குடித்துவிட்டு, “இப்போது நீங்கள் என்னை எங்கே அழைத்துக் கொண்டு போகப் போகிறீர்கள்?” என்றான் சுந்தர்.

     “ஏன், உன் அப்பாவிடம்தான்!”

     “ஐயோ, வேண்டாம்! அவர் இப்போதுள்ள இடத்தில் நான் போய் அவரைப் பார்த்தால் அது அவருக்குப் பிடிக்காது!”

     “ஏன், அவர் இப்போது எங்கே இருக்கிறார்?”

     “தயவுசெய்து அதைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள்; அவர் இப்போது கீழ்ப்பாக்கத்தில் இருக்கிறார்; அங்கேதான் தன்னை வந்து பார்க்கும்படி அவர் உங்களிடம் சொல்லச் சொன்னார்!”

     “அப்படியானால் நான் உன்னை ஏதாவது ஆஸ்பத்திரியில் சேர்த்து விடட்டுமா?”

     “எதற்கு, இங்கே போன மானம் போதாதா? என்னைப் பேசாமல் கொண்டு போய் என் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள்; அவர்களுக்குத் தெரிந்த வைத்தியமே இதற்குப் போதும்!”

     “அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?”

     “அடையாறில்!”

     “சரி, அப்படியே செய்கிறேன்!” என்று அவர் காரைக் கிளப்பினார்; அவன் கையை ஊன்றி மெல்ல எழுந்து, சாய்ந்தாற் போல் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டான்.

     “உனக்கு வருத்தமாயிருக்கும், உங்களுடைய சண்டையில் நான் குறுக்கிடவில்லை என்று; இல்லையா?” என்றார் ஆபத்சகாயம், தன் மனச்சாட்சி தன்னை உறுத்த.

     “அப்படியொன்றுமில்லை!” என்றான் அவனும் தன் மனத்தைத் தானே ஏமாற்ற.

     “நான் குறுக்கிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? உங்களுடைய சண்டையின் முடிவு அவனுக்குச் சாதகமாகியிருக்கும்; தனக்குக் கிடைக்க வேண்டிய தண்டனையிலிருந்து தப்பிவிட அது அவனுக்கு ஏதுவாகியிருக்கும். அதனால்தான் நான் குறுக்கிடவில்லை!” என்றார் அவர், தன் ‘சட்ட ஞான’த்தைச் சற்றே வெளிப்படுத்தி.

     அவன் சிரித்தான்; “ஏன் சிரிக்கிறாய்?” என்று அவர் கேட்டார்.

     “ஒன்றுமில்லை; எனக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் நேருவதை நான் விரும்பவில்லை!” என்றான் அவன்.

     அவர் சிரித்தார்; “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று அவன் கேட்டான்.

     “ஒன்றுமில்லை; அனுபவபூர்வமாக நீ அதைச் சொல்லும்போது என்னால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்?” என்றார் அவர்!

     அவன் மௌனமானான்; அவரும் மௌனமானார். இருவரும் ஒருவரையொருவர் எப்படியோ சமாளித்துக் கொண்டு விட்ட திருப்தியில்தான்!

     மணி எதிர்பார்த்தபடி, அவன் தங்கியிருந்த ஓட்டலில் அவனுக்காகப் போலீசாரும் காத்துக் கொண்டிருக்கவில்லை; சர்மாஜியும் காத்துக் கொண்டிருக்கவில்லை. வழக்கம் போல் சர்வர் சங்கர்தான் அவனுக்காக அங்கே காத்துக் கொண்டிருந்தான்.

     “என்ன சங்கர், எங்கே சர்மாஜி?”

     “அவருக்கென்னப் பைத்தியமா பிடித்திருக்கிறது, சுந்தரைப்போல் உங்களைத் தேடி வந்து உங்களிடம் அகப்பட்டுக் கொள்ள?”

     “அது எப்படித் தெரிந்தது, உனக்கு?”

     “சர்மாஜி அதைப் பார்த்துவிட்டு வந்துதானே அவசர அவசரமாக என்னைப் பெங்களூருக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்?”

     “அப்படியானால்...”

     “இன்னும் ஒரு வார காலத்துக்கு நீங்கள் அவரை இங்கே நிச்சயம் பார்க்க முடியாது!”

     “சரி, போலீசார் என்ன ஆனார்கள்?”

     “ஆபத்சகாயத்தின் அருளால் அவர்கள் வந்த வழியே திரும்பிப் போய்விட்டார்கள். அதில் நம் சர்மாஜிக்கு அளவு கடந்த ஏமாற்றம்; அந்த ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொள்ளத் தான் அவர் ஆபத்சகாயத்தைத் தேடிக் கொண்டு வந்தார். அங்கே நீங்கள் சுந்தரைக் கவனித்துக் கொண்டிருக்கவே, அவர் வந்த வழியே திரும்பிவிட்டார்!”

     “வருத்தமாயிருக்கிறது சங்கர், இதைக் கேட்க எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கிறது! யாராயிருந்தாலும் அவர்கள் என்னைக் கண்டதும் அன்பு செலுத்த வேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேனே தவிர, அஞ்ச வேண்டுமென்று ஒரு நாளும் விரும்பியதில்லை; விரும்பப்போவதும் இல்லை. அப்படியிருந்தும் சந்தர்ப்பம் சில சமயம் இப்படிச் சதி செய்து விடுகிறது; இதற்கு நான் என்ன செய்யலாம்?”

     இப்படிக் கேட்டு அவன் தன் முகவாய்க்கட்டையைத் தேய்த்து விட்டுக் கொண்டதுதான் தாமது, “இறங்கி விட்டீர்களா, தத்துவ விசாரத்தில்? சரி, இறங்குங்கள்; நான் போய் ஒரு கப் காபி கொண்டு வருகிறேன், உங்களுக்கு?” என்று சங்கர் கீழே இறங்கினான்; மணி அதே விசாரத்துடன் தன் அறைக்குள் நுழைந்து, சட்டையைக் கூடக் கழற்றாமல் கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.

     என்ன செய்வது, இந்த ஓட்டலை விட்டே ஓடிப் போய் விடுவதா? இல்லை, இந்த உலகத்தை விட்டே மறைந்து போய் விடுவதா?

     அந்த சுந்தர்! அவனைக் கூட அன்று நான் அடிக்கவில்லை; அருணாவின் மேல் கொண்ட சபலத்தால் அப்படி நடந்து கொண்டு விட்டான் என்று எண்ணி, அவன் நழுவுவதைப் பார்த்தும் பார்க்காதவன் போல் இருந்து விட்டேன். அந்த அருணாவுக்குப் பிறகு அவன் இன்னொரு ரூபாவுடன் வளைய வந்த போது கூட, அவனை நான் விரட்டவில்லை; வெகுண்டு அடிக்கவும் இல்லை. ஆனால் இன்று? - அவன் ஏன் அந்தத் துரோகத்தை எனக்குச் செய்ய வேண்டும்? அதற்கு ஏன் இந்த சர்மாஜி துணையாயிருக்க வேண்டும்?

     ஒருவனுக்கு வேண்டியது பெண்; இன்னொருவனுக்கு வேண்டியது பணம்! - அவற்றுக்காக அவர்கள் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்; அதற்கு என்னைப் போன்றவர்கள் பலியாகிக் கொண்டே இருக்க வேண்டியதுதானா? ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பதற்காக ‘நல்லான்’களெல்லாம் அதில் விழுந்து செத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதானா?

     என்ன மோசமான மனிதர்கள், என்ன மோசமான மனிதர்கள் - இவர்களிடம் அனுதாபம் கொள்ள நான் என்ன புத்தரா, ஏசுவா? அப்படியே இருந்தாலும் அவர்களை ஒருப் பொருட்டாக நினைக்காத இவர்கள், என்னையா ஒருப் பொருட்டாக நினைக்கப் போகிறார்கள்?

     விடு கழுதைகளை! - அவர்கள் பின்னால் உதைத்தால், நான் முன்னால் உதைக்கிறேன் - இதுதானே அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்?

     இதற்காக நான் ஏன் வருந்த வேண்டும், இதற்காக நான் ஏன் கலங்க வேண்டும்?

     அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் அன்பு காட்டினாலும் திருந்தப் போவதில்லை; அனுதாபம் காட்டினாலும் திருந்தப் போவதில்லை - அப்படிப்பட்டவர்களை நான் என்ன செய்ய முடியும், ஆத்திரம் தீர அடித்து நொறுக்குவதைத் தவிர?

     அதற்காக, ‘அடித்தால் மட்டும் அவர்கள் திருந்தி விடவாப் போகிறார்கள்?’ என்று என்னை யாராவது கேட்கலாம் - திருந்த மாட்டார்கள்தான்! - அவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதற்காக உயிர் இருந்தும் உயிர் இல்லாத மனிதனாக, உணர்ச்சி இருந்து உணர்ச்சி இல்லாத மனிதனாக நான் ஏன் நடமாட வேண்டும்?

     அது என்னால் முடியாதய்யா, அது என்னால் முடியவே முடியாது!

     இந்தக் கடைசி வார்த்தையை மட்டும் கேட்டுக் கொண்டே வந்த சங்கர், “எது முடிந்தாலும் முடியாவிட்டாலும் இந்த அறையைக் காலி செய்ய உங்களால் முடியுமென்று நான் நினைக்கிறேன்; அதை முதலில் செய்யுங்கள்!” என்றான் தன் கையிலிருந்தக் காபியை அவனுக்கு முன்னால் வைத்து.

     “சர்மாஜிக்குப் பயந்தா?” என்றான் மணி, சிரித்துக் கொண்டே.

     “அவர் உங்களுக்குப் பயப்படுவதைத்தான் நீங்கள் விரும்பவில்லையே?” என்று அவன் சொல்லைக் கொண்டே அவனை மடக்கினான் சங்கர்.

     “ஆம்; அவர் மட்டும் என்ன, இந்த உலகத்திலுள்ள யாருமே என்னைக் கண்டு பயப்படுவதை நான் விரும்பவில்லைதான்!” என்றான் அவன்.