27. அன்பின் துன்பம்

     பாமா கேவலம் ஒரு சமையற்காரியின் தங்கை! - இது தன் அப்பாவுக்குத் தெரியக்கூடாது என்று மோகன் மட்டும் நினைக்கவில்லை; ராதாவும் நினைத்தாள்!

     இந்த நினைப்பு மோகனைப் பார்த்த பிறகு அவளுக்கு ஏற்படவில்லை; பார்ப்பதற்கு முன்னாலேயே ஏற்பட்டிருந்தது - ஆம், ‘பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றாயிருந்தாலும், சிறப்பு எல்லா உயிர்க்கும் ஒன்றாயிருக்க முடியாது, செய்யும் தொழிலால்!’ என்பது, குறளைப் பற்றியும் குறள் ஆசிரியரைப் பற்றியும் தெரியாமலே அவளுக்குத் தெரிந்திருந்தது. அத்துடன், பாம்புக்கு விஷத்தை ஏற்றத்தான் தெரியும்; இறக்கத் தெரியாது - அதே மாதிரி சமூகத்துக்கும் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கத்தான் தெரியும்; குறைக்கத் தெரியாது, குறைக்க விரும்பாது என்பதையும் அவள் அறிந்திருந்தாள். ஆகவே, தனக்குத் தெரிந்த தொழிலைச் செய்து வாழ அவள் தயங்கவில்லை; அந்தத் தொழிலில் இழிவு ஏதும் இருப்பதாகவும் அவளுக்குத் தோன்றவில்லை. மாறாக, அதில் ஒரு கௌரவம் இருப்பதாகக் கூட அவள் அப்போது நினைத்தாள். அதற்குக் காரணம் அவளுக்குத் தெரிந்த சில பெண்கள், தாங்கள் உயிர் வாழ்வதற்காகத் தங்கள் உடலையே விலை கூறிக் கொண்டிருந்ததுதான்!

     உழைப்பின்றி ஊதியம் தரும் அந்தத் தொழிலை அவள் இழிவென்று கருதினாலும் சம்பந்தப்பட்டவர்கள் அதை இழிவென்று கருதாதது அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. அதையே பின்னால் ‘நாடகம்’ என்ற பேராலும், ‘சினிமா’ என்ற பேராலும், அவர்கள் ‘கலை’யாக்கி, சமூகத்தின் பாராட்டுதலைப் பெற்ற போது, அவளுடைய ஆச்சரியம் இரு மடங்கு ஆகியது. ஆயினும் சமூகத்தைப் பிடித்த பைத்தியம் அவளைப் பிடிக்கவில்லை. அதாவது, அவர்கள் யார் பாராட்டினாலும் அவள் பாராட்டத் தயாராயில்லை.

     இத்தனைக்கும் அந்தக் கலையையும், கலைச் செல்வங்களையும் கட்டிக் காத்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பல பிரமுகர்கள் அவ்வப்போது பேசியதை அவளும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். எனினும், அதைக் கேட்கும் போதெல்லாம் ‘எந்தக் கலையை இவர்கள் வளர்க்கச் சொல்கிறார்கள்?’ என்று அவளுக்குச் சிரிக்கத்தான் தோன்றுமே தவிர, மற்றவர்களைப் போல் கை தட்டத் தோன்றாது!

     செந்தாமரை வேண்டுமானால் சேற்றிலிருந்து முளைக்கட்டும்; சிவனாரும் அதைச் சிரமேற் கொள்ளட்டும். அதற்காகக் கலை, விபசாரத்திலிருந்தா கிளைப்பது? சமூகம் அதைத் தலை மேற்கொண்டா கூத்தாடுவது? இப்படி நினைத்தாள் அவள்!

     இந்த நினைப்பே அந்தக் கலையில் இல்லாத ஒரு கௌரவம் - அதாவது, அந்தத் தொழிலில் இல்லாத ஒரு கௌரவம் தன்னுடைய தொழிலில் இருப்பதாக அவளை அப்போது நினைக்க வைத்தது. ஆனால் சமூகம் அப்படி நினைக்காதபோது அவள் மட்டும் அப்படி நினைத்து என்ன பிரயோசனம்? - அதனால் தான் அது யாருக்கும் தெரியக் கூடாது, முக்கியமாகப் பாமாவின் காதலனுக்கு அது தெரியக் கூடாது என்று அவள் இப்போது நினைத்தாள். அவள் நினைத்ததற்கு நேர் விரோதமாக மோகன் வந்து சேர்ந்தான் - ஆம், அவனுக்குத் தெரியும் அவள் சமையற்காரி என்று! - பாமா சொல்லி அல்ல; சொல்லாமலே தெரியும் அவள் சமையற்காரி என்று அவனுக்கு! அதை மறைப்பதற்காக ஒரு இரண்டு நாள் வேண்டுமானால் அவள் அவனைக் கண்டதும் ஒளிந்துக் கொண்டு விடலாம்; கடைசி வரை அப்படியே ஒளிந்து கொண்டிருக்க முடியுமா? - அதுதான் யோசனையாயிருந்தது அவளுக்கு.

     அந்த யோசனையிலேயே அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் அவள் அப்படியும் இப்படியுமாகப் புரண்டு படுத்துக் கொண்டிருந்தபோது, “அக்கா, அக்கா! அப்புறம் சொல்கிறேன் என்றாயே?” என்று ஆரம்பித்தாள் அவளுக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த பாமா. அவளுக்கும் தூக்கம் பிடிக்காமல்தான் இருந்தது அப்போது!

     “நீயும் அந்த மோகனும் இந்த நாளில்தான் காதலிக்கிறீர்கள் என்பதில்லை; அந்த நாளிலும் காதலித்தீர்கள்!”

     “எந்த நாளில், அக்கா?”

     “அதாவது நீ நாலைந்து வயது சிறுமியாயிருந்த அந்த நாளில்! அப்போது அவனுக்கும் வயது ஏழெட்டுத்தான் இருக்கும். எப்போது பார்த்தாலும் அவன் உன்னுடன் விளையாட வந்துவிடுவான்!”

     “நம்முடைய வீட்டுக்கா?”

     “இல்லை; அவன் ஏன் நம்முடைய வீட்டுக்கு வரப் போகிறான்? நாம்தான் அவனுடைய வீட்டுக்குப் போவோம்!”

     “அங்கேயும் நீ வேலையாயிருந்தாயா, என்ன?”

     “ஆமாம்; ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல, நாலு வருடங்கள் வேலையாயிருந்தேன்!”

     “ஏன்? அவருடைய அம்மாவுக்கு சமைக்கத் தெரியாதா?”

     “அப்படி ஒன்றுமில்லை; அந்த அம்மாள் இடையில் கொஞ்ச நாட்கள் அவருடன் வாழவில்லை!”

     “ஏன் அக்கா?”

     “இல்லாத சுகத்தை நினைத்து இருக்கும் சுகத்தைக்கூடச் சிலர் இழந்து விடுவதில்லையா, அந்த ரகத்தைச் சேர்ந்தவர் அந்த அம்மாள் கணவன். அதனால் அவர் மேற்கொண்ட சில பழக்க வழக்கங்கள் அந்த அம்மாளுக்குப் பிடிக்காமற் போய்விட்டன!”

     “அதற்காக?”

     “தன் மனைவி தன்னை விட்டுப் பிரிந்தாலும் தன் மகன் தன்னை விட்டுப் பிரிவதை அவர் விரும்பவில்லை; அவனைத் தாயிடமிருந்து பிரித்துத் தன்னுடன் வைத்துக் கொண்டார். அப்படி வைத்துக் கொண்ட பிறகுதான் ஓட்டல் சாப்பாட்டைக் கொண்டு மட்டும் அவனைப் பராமரித்து விட முடியாது, அவனைப் பராமரிக்க ஒரு பெண்ணின் உதவியும் தேவை என்பது அவருக்குத் தெரிந்தது. அதற்காக என்னைத் தேடிப் பிடித்து வேலைக்கு வைத்துக் கொண்டார்!”

     “அப்படியானால் நீயும் ஒரு விதத்தில் அவருக்குத் தாயாய்த்தான் இருந்திருக்கிறாய் என்று சொல்லு?”

     “நான் தாயாயிருந்தாலும் அவனுடைய தாயார் அவனைப் பார்க்காமல் இருப்பாளா? - வருவாள், அவர் இல்லாத சமயம் பார்த்து, தன் மகனைப் பார்ப்பாள்; அவர் வருவதற்குள் சுவடு தெரியாமல் போய்விடுவாள்!”

     “அதற்கு நீ உடந்தையாயிருந்தாயாக்கும்?”

     “ஆமாம், அதுதான் நான் செய்த குற்றம்; அந்தக் குற்றத்துக்காகத்தான் அவர் என்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்! அதற்காக நான் அன்றும் வருந்தவில்லை; இன்றும் வருந்தவில்லை. ஏனெனில், அதற்கு உடைந்தையாயிருந்தபோது அடைந்த மகிழ்ச்சியை வேறு எப்போதும் நான் அடைந்ததில்லை; அடையப் போவதுமில்லை!”

     இதைச் சொல்லி அவள் நிறுத்தியதும், “அப்படிப்பட்டவருடன் நீ எனக்காகச் சம்பந்தம் செய்து கொள்ள முடியுமா, இப்போது?” என்றாள் பத்மா.

     “நான் அவருடன் சம்பந்தம் செய்து கொள்ள தயாராயிருந்தாலும், அவர் என்னுடன் சம்பந்தம் செய்து கொள்ளத் தயாராயிருக்க மாட்டாரே? அதனால்தான் அந்தப் பிள்ளையாண்டானைக் கண்டதும் நான் ஒளிந்து கொண்டு விட்டேன். அதனாலென்ன, நீ அவனிடம் ‘என் அக்கா சமையற்காரி’ என்று இதுவரை சொல்லவில்லையே?” என்றாள் ராதா, ஏதோ ஓர் அசட்டு நம்பிக்கையுடன்.

     “சொல்லாவிட்டால்?”

     “ஐயா, அம்மாவைக் கொண்டே உன்னுடைய கல்யாணத்தை முடித்து விடலாம் என்று நினைக்கிறேன், நான்!”

     “நீ இல்லாமலா எனக்குக் கல்யாணம்?”

     “நான் இல்லாமலென்ன, நாலு பேரில் ஒருத்தியாக நானும் இருந்துவிட்டுப் போகிறேன்!”

     “அப்படி நடக்கும் கல்யாணம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று நீ நினைக்கிறாயா?”

     “நான் அப்படி நினைக்கவில்லை; ஓரிரு நாட்களுக்கு ஏதோ ஒரு மாதிரியாய்த்தான் இருக்கும். அதற்காக என்னுடைய அந்தஸ்துக்கு ஏற்றாற்போல் நான் ஒரு சமையற்காரனைப் பார்த்தா உனக்குக் கல்யாணம் செய்து வைப்பது?”

     “வேண்டாமே! கல்யாணம் இல்லாமல் என்ன குறைந்து போய்விட்டாய் நீ? அதே மாதிரி நானும் இருந்துவிட்டுப் போகிறேன்!”

     “ரொம்ப அழகுதான்! அப்படி நீ இருந்துவிட்டால் இதுவரை நான் வாழ்ந்ததற்கே அர்த்தமில்லாமல் அல்லவா போய்விடும்?”

     “அதற்காக உன்னை நான் உயிரோடு மறந்துவிட வேண்டுமா, என்ன? அது என்னால் முடியாது!”

     “அபசகுனம் மாதிரிப் பேசாதே! அந்தப் பையனைப் போல் இன்னொரு பையன் உனக்குக் கிடைக்க மாட்டான்!”

     “இருக்கலாம்; ஆனால் உன்னைப் போல் இன்னொரு அக்காவும் எனக்குக் கிடைக்க மாட்டாளே?”

     “கிடைக்காமல் எங்கே போய்விடப் போகிறாள்? நீ போய்த் தூங்கு!”

     ‘தூங்கவாவது! - எவ்வளவு பெரிய துரோகத்தை எவ்வளவு சாதாரணமாகச் செய்யச் சொல்லிவிட்டு இவள் என்னைத் தூங்கச் சொல்கிறாள்! - நடக்கிற காரியமா, இது?

     இவளுக்காக அவரை நான் மறந்தாலும் மறப்பேனே தவிர, அவருக்காக இவளை நான் மறப்பதாவது?

     அதிலும், இவள் நினைப்பதுபோல இதுவரை நான் இவளைப்பற்றி அவரிடம் சொல்லாமலும் இல்லையே? - ஒளிவு மறைவில்லாமல் சொல்லியிருக்கிறேன், ‘என் அக்கா சமையற்காரிதான்’ என்று! - அதற்கு ஒப்பி அவர் என்னை மணந்தால் மணக்கட்டும்; மணக்காவிட்டால் போகட்டும்!

     அதற்காக எந்த ஏணியைக் கொண்டு இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறேனோ, அந்த ஏணியையா, இப்போது நான் காலால் உதைத்துத் தள்ளுவது? - சீ, நினைப்பதற்கே நெஞ்சம் கூசுகிறதே!

     காதலுக்காகப் பெற்ற தாயையும், பேணிக் காத்த தந்தையையும் கூடச் சிலர் துறந்து விடுகிறார்கள் என்பது என்னமோ உண்மைதான்! - ஆனால் அந்தக் காதலில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லையே, எனக்கு! இருந்தால் அத்தனைத் தன்னலம் அதில் இடம் பெற்றிருக்குமா?

     உண்மையில், காதல் என்பதுதான் என்ன? - தன்னலம் பேணி, பிறர் நலம் துறப்பதா காதல்? - இல்லை, பிறர் நலம் பேணித் தன்னலம் துறப்பதே காதல்!

     அந்தக் காதல்தான் எனக்கும் தேவை, இந்த உலகத்துக்கும் தேவை. மற்ற காதல்களெல்லாம் யாரை வாழ வைக்க வேண்டுமோ, அவர்களை வாழ வைக்கட்டும்; என்னை வாழ வைக்க வேண்டாம். ஏனெனில் பெற்ற தாயை விட, பேணிக் காத்த தந்தையை விட என் அக்காவே எனக்குப் பெரியவள்! - ஆம், அவள் எனக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்திருந்தால் கூட நான் அவளை அவ்வளவு பெரியவளாக மதித்திருக்க மாட்டேன்; அவள் தியாகம் செய்தது, செய்து கொண்டிருப்பது தன் உணர்ச்சியை! யாருக்காக, எனக்காக! அந்த மகா தியாகத்தை மறந்து நான் வாழ்வதை விட, சாவதே மேல்!...

     இந்த ‘ஆத்ம சோதனை’யில் அன்றிரவை எப்படியோ கழித்து விட்டு, மறுநாள் காலை அவள் ஆபீசுக்குப் போன போது, அங்கே மோகன் இடம் காலியாயிருந்தது. ‘எங்கே போயிருப்பார்?’ என்று அவள் சுற்றுமுற்றும் பார்த்தபோது, “இதை மோகன் உங்களிடம் கொடுக்கச் சொன்னான்!” என்று ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான் மணி.

     அந்தக் கடிதத்தில்:

     “அன்புள்ள பாமா,

     இன்று நீ என்னை ஆபீசில் காணாமல் ஏமாற்றம் அடைந்திருக்கலாம்; அந்த ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்காகவே இந்தக் கடிதம் - அத்துடன், எங்கே நீ என் வீட்டைத் தேடி வந்துவிடுவாயோ என்ற அச்சமும் கூட!

     நேற்றிரவு உன்னை உன் வீட்டில் வைத்துப் பார்த்து விட்டு வந்ததிலிருந்து என் வீட்டில் எனக்கு அமைதியில்லை. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் இப்போது நான் இங்கே சொல்ல விரும்பவில்லை. மொத்தத்தில் தற்போது சாந்தி இழந்து தவிக்கும் நான் ஓரளவாவது சாந்தி பெற வேண்டும் என்பதற்காக மணியின் அறையைத் தேடி வந்தேன். அவனும் தன் அறையிலேயே என்னை இருக்கச் சொல்லிவிட்டு ஆபீசுக்கு வந்து விட்டான். அதுவும் ஒரு விதத்தில் நல்லதாய்த்தான் போயிற்று; கதவை உள்ளேத் தாளிட்டுக் கொண்டு கண்ணை மூடிப் படுத்துக் கொண்டு விட்டேன்!

     தனிமை! - அதிலும் ஓர் இனிமை இருக்கத்தான் இருக்கிறது. ஒரு வேளை அதற்காகத்தான் அவன் என்னை இங்கே விட்டுவிட்டு அங்கே வந்துவிட்டானோ என்னமோ? - இருந்தாலும் இருக்கும்; நீண்ட நாட்களாகவே தனிமையில் இனிமை கண்டு கொண்டிருப்பவன் அல்லவா அவன்?

     நீ விரும்பினால் சாயந்திரம் அவனுடன் ஓட்டல் அறைக்கு வரலாம்; விரும்பாவிட்டால் வேண்டாம். நாளை நானே வந்து உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்; மற்றவை நேரில்.

     என்றும் உன்னுடைய

     மோகன்.”

     குறிப்பு : படித்து முடித்ததும் இந்தக் கடிதத்தைக் கிழித்து எறிந்து விடு; பத்திரப்படுத்தி வைக்காதே. அதனால் உனக்கும் எனக்கும் பின்னால் ஏதாவது தொல்லைகள் நேர்ந்தாலும் நேரலாம்!

     அவனுடைய குறிப்புப்படி அவள் அந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் கிழித்து எறிந்துவிடவில்லை; அதற்கு எந்தவிதமான அவசியமும் இருப்பதாகவும் அவளுக்குத் தோன்றவில்லை. எனவே, அவனுடைய வேண்டுகோளுக்கு விரோதமாக அவள் அதைப் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு, ‘அசடு, அசடு! அந்தரங்கமாகக் காதலிப்பவர்களுக்குத் தானே அந்தத் தொல்லையெல்லாம்? நாம்தான் பகிரங்கமாகக் காதலிக்கிறோமே, நமக்கு ஏன் அந்தத் தொல்லையெல்லாம் நேருகிறது?’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, தனக்குரிய இடத்தில் உட்கார்ந்தாள்.

     அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ரமா, “என்ன, காதல் கடிதமா?” என்றாள் அவளை ஒரு தினுசாகப் பார்த்தபடி.

     “ஆமாம், காதல் கடிதம்தான்! மோகன் எழுதியிருக்கிறார்; அதற்கு மேல் ஏதாவது தெரிய வேண்டுமா, உனக்கு?” என்றாள் பாமா, அவள் முகத்தில் அடித்தாற் போல்.

     ‘ஓடாத நாயைத் துரத்தி என்ன பிரயோசனம்?’ என்று எண்ணியோ என்னமோ, ரமா அதற்கு மேல் அவளை ஒன்றும் கேட்கவில்லை; முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டாள்!

     பாமா விடவில்லை; “ஏன், அது மணியின் காதல் கடிதமாயிருக்கும் என்று நீ நினைத்தாயா?” என்றாள், அவளை வம்புக்கு இழுக்கும் நோக்கத்துடன்.

     “நான் ஏண்டியம்மா, அப்படியெல்லாம் நினைக்கிறேன்?” என்றாள் அவள்.

     “நீ அப்படி நினைத்ததால்தான்டியம்மா, நான் கேட்கிறேன்!” என்றாள் அவள்.

     அதற்குள் அந்த வழியாக வந்த பரந்தாமன், “என்ன து?” என்று கேட்கவே, “ஒன்றுமில்லை!” என்று இருவரும் ஏககாலத்தில் சொல்லிக்கொண்டே, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழித்தார்கள்!

     தனக்குத் தெரிய வேண்டாம் என்பதற்காக அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட பரந்தாமன்,அ தற்கு மேல் அவர்களைச் சோதனைக்கு உள்ளாக்க விரும்பாமல் தன் அறைக்குள் நுழைந்தார். அவருடையத் தலை மறைந்ததும், “என்னை மன்னித்துவிடு, பாமா! நான் கேட்டது தப்புத்தான்!” என்றாள் ரமா, தன் தலையைத் தாழ்த்தி.

     “நீ என்னிடம் மன்னிப்புக் கேட்கவும் வேண்டாம்; நான் உனக்கு மன்னிப்பு அளிக்கவும் வேண்டாம். அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தவர் மணி. ஆகவே, அது அவர் எனக்கு எழுதிய காதல் கடிதமாயிருக்கும் என்று நீ நினைத்துவிட்டாய்! அதுதானே உண்மை?” என்றாள் பாமா.

     ‘ஆம்’ என்பதற்கு அடையாளமாகத் தன் தலையை ஆட்டினாள் அவள்!

     பாமா சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்:

     “இத்தனைக்கும் அந்தக் கடிதத்தை அவர் என்னிடம் ரகசியமாகக் கூடக் கொடுக்கவில்லை; பகிரங்கமாகத்தான் கொடுத்தார். அதுவும், ‘மோகன் இந்தக் கடிதத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னான்!’ என்று வேறு சொல்லிக் கொடுத்தார். அப்படியும் நீ இப்படி நினைக்கிறாய் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? - நீ அவரைக் காதலிக்கிறாய் என்று அர்த்தமா? இல்லை, இந்த உலகத்தில் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் காதலிப்பதே குற்றம் என்று நீ நினைக்கிறாய் என்று அர்த்தமா?”

     ரமா பெருமூச்சு விட்டாள்; பெருமூச்சு விட்டுவிட்டுச் சொன்னாள்:

     “அவரை நான் காதலித்து என்ன பிரயோசனம்? அவர் என்னைக் காதலிக்க வேண்டுமே?”

     “அப்படிச் சொல்லு! உனக்காக நான் வேண்டுமானால் அவரிடம் தூது செல்லட்டுமா?”

     “ஐயோ, வேண்டாம்! அதற்காக அவர் இந்த ஆபீசை விட்டே போனாலும் போய்விடுவார்!”

     “போனால் என்னவாம், உனக்கு?”

     “போகிறபோதும் வருகிறபோதும் அவரை நான் பார்த்துக் கொண்டாவது இருக்கிறேனே, அது கூட அல்லவா இல்லாமற் போய்விடும் எனக்கு!” என்றாள் அவள், பெருமூச்சுடன்.

     “அப்படி வா, வழிக்கு! இப்போது நீ அகப்பட்டுக் கொண்டாயா, என்னிடம்?” என்றாள் இவள், வெற்றிச் சிரிப்புடன்.

     “அகப்பட்டுக் கொண்டே, அகப்பட்டுக் கொண்டேன், அகப்பட்டுக் கொண்டேன்! - போதுமா? இனியாவது அதை விட்டு விட்டுப் பேசாமல் உன் வேலையைப் பாரேன்?” என்றாள் ரமா, கெஞ்சாக் குறையாக.

     அப்பொழுதும் அவளை விடாமல், “இவ்வளவு ரகசியமாகக் காதலிப்பதை விட, நீ அவரைப் பகிரங்கமாகவே காதலிக்கலாமே?” என்றாள் பாமா.

     “அதற்கு உன்னுடைய மோகன் இல்லையே, அவர்!” என்றாள் அவள்.

     “ஆம், அவர் என்னுடைய மோகன் இல்லைதான்!” என்றாள் பாமா.

     வலியவன்; ஆனால் எளியவன்! - மோகனின் கடிதத்தைக் கொண்டுவந்து கொடுக்கும்போது மணி அப்படித்தான் தோன்றினான், பாமாவுக்கு.

     இல்லாவிட்டால் நண்பர் கொடுக்கச் சொன்னார் என்பதற்காக அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து அவர் என்னிடம் அவ்வளவு பவ்வியமாகக் கொடுத்திருப்பாரா? ‘போடா, போ! யார் என்று நினைத்துக் கொண்டாய், என்னை?’ என்று வெகுண்டெழுந்து அவர்மேல் பாய்ந்திருக்க மாட்டாரா?

     அவருக்குத்தான் என்ன துணிச்சல். அந்தக் கடிதத்தை எழுதி அவரிடம் கொடுக்க. அப்படியா, நான் அவரைத் தேடிக் கொண்டு போய்விடுவேன், அவருடைய வீட்டுக்கு? அதுவும் ஒரே ஒரு நாள் அவர் ஆபீசுக்கு வரவில்லை என்பதற்காக!

     அந்த நிலைக்கு அவராலும் என்னைக் கொண்டு வந்து விட முடியாது; நானும் அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்க மாட்டேன் - அப்படியிருக்கும் போது அவருக்கு ஏன் இந்த அச்சம்?

     அன்று நான் சொன்னேனே, ‘நீங்கள் விரும்பினால் உங்களுடைய வீட்டுக்கு நானும் உங்களுடன் வரத் தயார்!’ என்று - அதை எண்ணிப் பயந்துவிட்டார் போலிருக்கிறது!

     பாவம், அவரைப் பற்றி எனக்குத் தெரியாதா? அவருக்குத் தெரியாமல் நான் அவரை அந்தத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி விடுவேனா? - அதிலும், அக்கா வேறு அவரைப் பார்த்ததும் ஒரு புதுப் பிரச்னையைக் கிளப்பியிருக்கும் போது?

     முக்கியமாக, அதைச் சொல்ல வேண்டும் என்றுதான் இன்று நான் அவரை இங்கே எதிர்பார்த்தேன்; அவர் என்னடா என்றால்...

     ஆமாம், ‘நீ விரும்பினால் ஓட்டல் அறைக்கு வரலாம்’ என்று அவர் எழுதியிருக்கிறாரே, அங்கே நான் போகலாமா? போவது அவ்வளவு நன்றாயிருக்குமா? அதுவும் அவருடைய நண்பருடன்...

     ஏன் போகக் கூடாது? - என் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கும்போது எங்கேதான் போகக் கூடாது? எவருடன் தான் போகக் கூடாது?

     இந்த எண்ணச் சுழலில் அன்றைய வேலையை எப்படியோ முடித்துவிட்டு அவள் வெளியே வந்தபோது, “உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்; நான் வரட்டுமா?” என்றான் மணி, அவள் தன்னுடன் வருகிறாளா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக.

     “நீங்கள் கேட்பதைப் பார்த்தால் எனக்கு எழுதிய கடிதத்தில் அவர் என்ன எழுதியிருந்தார் என்பது ஏற்கெனவே உங்களுக்குத் தெரியும் போலிருக்கிறதே?” என்றாள் பாமா.

     “ஆமாம், அவன் இப்போதெல்லாம் எனக்குத் தெரியாமல் எதையும் மறைப்பதில்லை!” என்றான் அவன்.

     “அப்படியானால் நேற்றிரவு அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்ததைக் கூட...”

     “ஆமாம், சொன்னான்!”

     “அதனால்தான் அவருடைய வீட்டில் அவருக்கு நிம்மதியில்லாமல் போய்விட்டதோ?”

     “அப்படியொன்றுமில்லை; அவனுடைய அப்பா இன்னும் கொஞ்சம் பெரிய மனிதராகப் பார்க்கிறார். அதனால்தான் சிக்கல்!”

     “அந்தச் சிக்கலில் அவருடைய கல்யாண விஷயமும் சம்பந்தப்பட்டிருக்கிறதா, என்ன?”

     “அதுதானேம்மா, எல்லாச் சிக்கலுக்கும் அடிப்படையாயிருக்கிறது உலகத்தில்!”

     “அப்படியென்றால்?”

     “சுயநலம் எங்கே ஆரம்பமாகிறதென்று தெரியுமா, உங்களுக்கு? கல்யாணத்தில்தான் ஆரம்பமாகிறது; பேராசை எப்போது பிறக்கிறதென்று தெரியுமா, உங்களுக்கு? பிள்ளை பிறக்கும்போதுதான் அதுவும் பிறக்கிறது!”

     “அதனால்தான் நீங்கள் கல்யாணமே வேண்டாம் என்று இருக்கிறீர்களோ?”

     “என்னுடையக் கதைக் கிடக்கட்டும்; உங்களுடைய கதைக்கு வாருங்கள். இப்போது நீங்கள் அவனைப் பார்க்க வரப் போகிறீர்களா, இல்லையா?”

     “அவசியமானால் சொல்லுங்கள்; வருகிறேன்!”

     “அது எப்படி எனக்குத் தெரியும்? உங்களுக்கு அவசியமென்று தோன்றினால் வாருங்கள்; இல்லாவிட்டால் வேண்டாம்!”

     “அவரும் ‘விரும்பினால் வா’ என்றுதான் எழுதியிருக்கிறார்; அதனால்தான் கொஞ்சம் யோசிக்கிறேன்!”

     “சரி, யோசித்துக் கொண்டே ‘பஸ் ஸ்டாப்’ வரை வாருங்கள்; அங்கே நீங்கள் எந்த முடிவுக்கு வருகிறீர்களோ, அதே முடிவுக்கு நானும் வந்து விடுகிறேன்!” என்று சொல்லிக் கொண்டே அவன் நடந்தான்; அவள் அவனைத் தொடர்ந்தாள்.

     அப்போது, “சார்!” என்று கத்திக்கொண்டே தனக்குப் பின்னால் யாரோ ஓடி வருவது போலிருக்கவே, மணி திரும்பிப் பார்த்தான். சங்கர் இரைக்க இரைக்க வந்து அவனுக்கு முன்னால் நின்று, “உங்களைக் கைது செய்ய வந்த போலீசார் மோகன் சாரைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போகிறார்கள், சார்!” என்றான் பரபரப்புடன்.

     “எதற்கு?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் மணி.

     “எல்லாம் அந்தச் சுந்தரின் வேலை, சார்! எங்கிருந்தோ கள்ளத்தனமாகக் கடத்திக்கொண்டு வந்த அபினை அவன் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அறையில் போட்டுவிட்டுப் போலீசாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறான்!”

     அவ்வளவுதான்; விஷயம் புரிந்துவிட்டது அவனுக்கு. “அந்தச் சண்டாளனின் வீடு எங்கே இருக்கிறதென்று தெரியுமா, உனக்கு?” என்று சங்கரைக் கேட்டான்.

     “தெரியாதே, சார்!” என்றான் அவன்.

     “இவ்வளவுதானா நீ? சரி, போ! அதை நானே தெரிந்து கொள்கிறேன்!” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு, சைக்கிள் பெடலின்மேல் காலை எடுத்து வைத்த மணி, “உங்களை மறந்துவிட்டேனே!” என்று பாமாவின் பக்கம் திரும்பி, “நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்; நான் பார்த்துக் கொள்கிறேன் அவனை!” என்று சொல்லிவிட்டுக் காற்றாய்ப் பறந்தான்!

     எங்கே - போலீஸ் நிலையத்துக்கு அல்ல; அருணாவின் வீட்டுக்கு! - அவனுடைய முகவரி ஒருவேளை அவளுக்குத் தெரிந்திருந்தாலும் தெரிந்திருக்கலாமல்லவா?