5. மணி என்றொரு மானிடன்

     “மணி என்று ஒரு மானிடன் மட்டும்தானா இருக்கிறான், இந்த உலகத்தில்? எத்தனையோ மானிடர்கள் இருக்கிறார்களே?” என்பார்கள் சிலர். ஆம், இருக்கிறார்கள். ஆனால் எதற்காக? தங்களுக்காக மட்டுமே வாழ்வதற்காக! அல்லது, சாவதற்காக!

     இந்தத் தன்மைக்கு முற்றிலும் மாறுபட்ட தன்மையுள்ளவன், மணி. தனக்குப் புத்தி தெரிந்த நாளிலிருந்தே அவன் தனக்காக மட்டும் வாழ்வில்லை; பிறருக்காகவும் வாழ்ந்து வந்தான்.

     இதன் காரணமாக இதுவரை எத்தனையோ தொல்லைகளுக்கு உள்ளாகியிருந்தும், அந்தத் தொல்லைகளின் அவன் துன்பத்தைக் காணவில்லை; இன்பத்தையே கண்டு வந்தான் - இது அவனுடைய மனத்தின் இயல்பு!

     இந்த இயல்பை விரும்பாத சிலர் அவனைப் பேதை என்றும், பிழைக்கத் தெரியாதவன் என்றும் பழிப்பதுண்டு. அந்தப் பழி அவனுக்குச் சிறுமையைத் தேடித் தரவில்லை; பெருமையையே தேடித் தந்தது.

     ஆனால் அந்தப் பெருமையால் அவன் தலை கனக்கவில்லை. மாறாக, அவன் மனம் மேலும் கொஞ்சம் துணிவு பெற்றது; கைகள் மேலும் கொஞ்சம் உரம் பெற்றன.

     தனக்கு முன்னால் யாருக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் சரி, அதை அவனால் தாங்க முடியாது; அதற்குரிய தண்டனையை அரசாங்கமோ, ஆண்டவனோ அளிக்கும் வரை அவனால் பொறுத்துக் கொண்டிருக்கவும் முடியாது!

     “கொலை வாளினை எட்டா,
     கொடியோர் செயல் அறவே!”

     என்று பாவேந்தர் பாரதிதாசனார் பாடியிருக்கிறார் அல்லவா? - அந்த வாளை அவசியமான போது எடுப்பதற்காக அவன் தேடிக் கொண்டிருப்பதில்லை; அதை எப்போதும் தன் கையிலேயே வைத்துக் கொண்டிருந்தான் அவன். ஆம், அவனுடைய கையே அந்த வாளாக இருந்து வந்தது.

     அன்றும் வழக்கம் போல் தன் வாளைப் பயன்படுத்தும் வரை, கடற்கரையில் தனக்கு முன்னால் அநீதிக்கு உள்ளானவர்கள் மோகன் என்றோ, பாமா என்றோ அவனுக்குத் தெரியாது; பயன்படுத்திய பின்னரே தெரியும். இருந்தாலும், தன்னுடைய வியப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் தாக்குண்டவனைத் தானே தூக்கி நிறுத்தி, “உன் மனைவியிடம், உன்னுடைய மைத்துனியிடம் - அல்லது, உன் தாயிடம், உன்னுடைய தங்கையிடம் உன்னைப் போல் ஒருவன் நடந்து கொண்டிருந்தால் உனக்கு எப்படி இருக்கும்?” என்று கேட்டான் மணி.

     அவன் நிலைகுலைந்து, “என்னை மன்னிச்சுடுங்க; இனிமே நான் இப்படிச் செய்ய மாட்டேன்!” என்று மணியின் காலைப் பிடிப்பதற்காகக் கீழே குனிந்தான்.

     “சீ, இவ்வளவு கோழையா நீ? உன்னையா நான் அடித்தேன்? வெட்கப்படுகிறேன், உன்னை அடித்ததற்காக! வேதனைப்படுகிறேன், வாழ்க்கையில் உனக்கு நேரும் துன்பங்களையும் துயரங்களையும் வேறு வகையில் மறந்திருக்க முடியாத நீ, கள்ளச் சாராயத்தைக் குடித்தாவது அவற்றைக் கொஞ்ச நேரம் மறந்திருக்க முயலும் நிலையிலே இந்த நாடு உன்னை வைத்திருப்பதற்காக! ஓடிப்போ! உன்னை ஆண்டவன் மன்னிக்கலாம்; ஆளுவோர் மன்னிக்கலாம். ஆனால் நான் மன்னிக்க மாட்டேன்; ஆம், உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்! போ, ஓடிப் போ!” என்று அவனை ஓர் உந்து உந்தித் தள்ளி விட்டுத் தன் வழியே நடந்தான், மணி.

     ஆண்மைக்குரிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய அவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் பாமா, அவள் எங்கே தன்னுடைய கையை விட்டுப் போய்விடுவாளோ என்று பயந்த மோகன், “கிடக்கிறான், காலிப் பயல்! நீ வா!” என்று அவள் கையைப் பற்றி இழுத்தான்.

     பாமா திடுக்கிட்டு, “யாரைக் காலிப்பயல் என்கிறீர்கள்?” என்று கேட்டாள், அவனுடன் நடந்து கொண்டே.

     “ஏன், மணியைத்தான்! இப்போது நடந்ததெல்லாம் அவனுடைய சூழ்ச்சிதான் என்பது இன்னுமா தெரியவில்லை, உனக்கு?” என்றான் மோகன், அந்த நிலையிலும் அவளைத் தன் வயப்படுத்த.

     “உண்மையாகவா?” என்றாள் அவள், வியப்புடன்.

     “சந்தேகமில்லாமல்! அவன் தான் அந்தக் குடிகாரனை நம்மேல் ஏவி விட்டுவிட்டு, அவனுக்குப் பின்னால் ஒரு பாவமும் அறியாதவன் போல் வந்திருக்கிறான்!”

     “காரணம்?”

     “உன் மேல் அவனுக்கு ஒரு கண்!”

     “என் மேல் ஒரு கண்ணா! என்னால் நம்ப முடியவில்லையே, இதை?”

     “ஏன் நம்பமுடியவில்லை?”

     “ஆபீசில் அவரைப் பற்றிச் சொல்லப்படும் கதைகள். இதை நான் நம்பக் கூடியதாயில்லை!”

     “அது என்ன கதைகள், அவனுடைய நண்பனான எனக்குத் தெரியாத கதைகள்?”

     “யாரோ ஒருத்தி வருடக்கணக்கில் அவரை வளைய வந்து கொண்டிருந்து விட்டுக் கடைசியாக ஒரு நாள் தன் காதலை வெளியிட்டாளாம்; அவரோ ‘தூ!’ என்று அவளுக்கு முன்னாலேயே காரித் துப்பிவிட்டு அப்பால் போய் விட்டாரம்!”

     “இவ்வளவுதானே, அவளை அவனுக்குப் பிடித்திருக்காது!”

     “என்னை மட்டும் பிடிக்க நான் என்ன ரம்பையா, ஊர்வசியா?”

     “நமக்குத் தெரியாதவர்களையும் நம்மால் பார்க்க முடியாதவர்களையும் நாம் ஏன் உவமைக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்? நீ அழகு காட்டினால் சரோஜாதேவி; காட்டாவிட்டால் தேவிகா!” என்றான் அவன், எல்லோருக்கும் தெரிந்த உவமையுடன்!

     அவ்வளவுதான்; “நல்ல சினிமாப் பைத்தியந்தான்!” என்று சொல்லிக் கொண்டே அவள் கொஞ்சம் நெளிந்தாள். அதுதான் சமயமென்று அவள் இடுப்பில் கையைப் போட்டு வளைத்து, “நான் பெருமை கொள்கிறேன் பாமா, நான் பெருமை கொள்கிரேன்!” என்றான் மோகன், பரவசத்துடன்.

     பாமா அவனுடைய கையை எடுத்து அப்பால் விட்டு, “ஏனாம்?” என்று கேட்டாள், அவனை விட்டுக் கொஞ்சம் விலகி நடந்து.

     “என்னை இழுத்து அப்பால் விட்டுவிட்டு அந்தக் குடிகாரன் உனக்குப் பக்கத்தில் உட்கார்ந்ததற்காக; அவனை முன்னால் அனுப்பிவிட்டு, அவனுக்குப் பின்னால் அந்த மணிப்பயல் வந்ததற்காக!”

     “அட, கர்மமே! அதற்காக நீங்கள் பெருமை கொள்வதாவது, கோபமல்லவா கொண்டிருக்க வேண்டும்?”

     “சுத்த அநாகரிகமா யிருக்கிறாயே, நீ! கோபம் யாருக்கு வரும், அநாகரிகமானவர்களுக்குத் தான் வரும்! என் காதலியிடம் ஒருவன், நான் பக்கத்தில் இருக்கும் போதே தவறாக நடந்து கொள்ளத் துணிகிறான் என்றால், அவளுடைய அழகு, அந்த அழகை அவள் வெளிப்படுத்தும் முறை, எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும்? அதற்காக நாகரிக புருஷனான நான் பெருமை கொள்வதா, கோபம் கொள்வதா? - நீயே சொல்லு?”

     “அது என்ன இழவோ! எனக்குத் தெரிந்தவரை எந்தப் பெண்ணின் அழகும், அந்த அழகை அவள் வெளிப்படுத்தும் முறையும் ஆண்களுக்கு வெறியூட்டுவதாயிருக்கக் கூடாது; சாந்தி அளிப்பதாயிருக்க வேண்டும். அதனால் தான் என்னை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி, ‘அலங்காரம்’ என்னும் பேரால் ‘அலங்கோல’மாக்கிவிடும் என் அக்காவைக் கூட நான் சில சமயம் வெறுக்கிறேன்!”

     இப்படி அவள் சொன்னாளோ இல்லையோ, “அபத்தம், அபத்தம்! என் கனவுக் கன்னியின் புத்தி இப்படியாப் போகவேண்டும்? அடக் கடவுளே! - இதனால் தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் உன் இடுப்பை வளைக்க என் கை முயன்ற போது கூட நீ அதை எடுத்து அப்பால் விட்டு விட்டாயா? - மோசம், மோசம்! ரொம்ப ரொம்ப மோசம்! உன்னைப் போன்ற பெண்கள் நிறைந்த இந்த நாட்டிலே பிறக்க நான் என்ன பாவம் செய்தேனோ? ரோமாபுரியில், அல்லது பிரான்சில் நான் பிறந்திருக்கக் கூடாதா? அங்குள்ள காதலர்கள் மக்கள் நடமாட்டம் மிக்க வீதிகளிலேயே என்னவெல்லாமோ செய்கிறார்களாமே? அதைப் பார்த்தும் பார்க்காததுபோல் மற்றவர்கள் போய் விடுவார்களாமே? அவையல்லவா நாகரிகம் மிக்க நாடுகள்? அங்குள்ள மக்களல்லவா நாகரிகம் மிக்க மக்கள்?” என்று பிரலாபிக்க ஆரம்பித்து விட்டான், அவன்.

     அவள் அவனுடைய வாயைப் பொத்தி, “என்னை மன்னியுங்கள், இன்னும் இந்த அளவுக்கு நான் முன்னேறவில்லை!” என்றாள் மெல்ல.

     அதற்குள் சாலைக்கு வந்து விட்ட மோகன் “முன்னேறாவிட்டால் என்ன, முன்னேற்றத்தான் நான் இருக்கிறேனே? ஏறு, எனக்குப் பின்னால்!” என்று தன் ஸ்கூட்டருக்குப் பின்னாலிருந்த ஸீட்டை உற்சாகத்தோடு ஒரு தட்டுத் தட்டிக் காட்டினான்!

     “வேண்டாம்; நான் பஸ்ஸிலேயே போய்விடுகிறேன்!” என்றாள் அவள்.

     அவன் ‘ஓ’வென்று சிரித்து விட்டு, “நீ இப்படிச் சொல்வாய் என்று தெரிந்துதானே எல்லா பஸ்களும் போகட்டுமென்று நான் இவ்வளவு நேரம் உன்னுடன் பேசிக் கொண்டிருந்தேன்?” என்றான், அவளை ஏற இறங்கப் பார்த்தபடி.

     அவள் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவனுக்குப் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்; அவனும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவளுக்கு முன்னால் ஏறி உட்கார்ந்தான் - பரிபூரணமாக அவளை ஏமாற்றிவிட்ட பரம திருப்தியுடன்!

     தன்னந் தனியனான மணி, அன்றிரவு தான் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பும்போது மணி பத்துக்கு மேல் இருக்கும். “ஏன் சார், இன்று இவ்வளவு நேரம்?” என்று கேட்டான் வாசலில் நின்று கொண்டிருந்த சர்வர் சங்கர், தன் கையில் புகைந்து கொண்டிருந்த பீடியை அவனைக் கண்டதும் தனக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு.

     “இவ்வளவு பெரிய உலகத்தில் இப்படிக் கேட்க நமக்கு யாருமில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; நீ ஒருவன் இருக்கிறாயா? - மகிழ்ச்சி!” என்று சொல்லிக் கொண்டே மாடிக்குச் சென்றான் மணி.

     ‘இந்த வேடிக்கையான உலகத்திலே இவர் ஒரு வேடிக்கையான சார்!’ என்று முணுமுணுத்துக் கொண்டே, தன் கையிலிருந்த பீடியை அவசரம் அவசரமாக இரண்டு இழுப்பு இழுத்து வீசி எறிந்துவிட்டு, “என்ன சார், ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டுக் கொண்டே அவனைத் தொடர்ந்தான் சங்கர்.

     “ஒன்றும் வேண்டாம்; ‘இந்த நேரத்தில் உனக்குத் தொல்லை கொடுப்பானேன்?’ என்று வழியிலேயே நான் வயிற்றைக் கவனித்துக் கொண்டு வந்துவிட்டேன். நீ போய்ப் படுத்துக் கொள்!” என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டுத் தன் அறையைத் திறந்து விளக்கைப் போட்டான் மணி.

     அந்த அறையின் வாயிலைப் பார்த்தாற்போல் மாட்டி வைக்கப்பட்டிருந்த மோகனின் படம், ‘ஏண்டா, மணி! என்ன தான் இருந்தாலும் ஒரு பெண்ணின் முன்னால் - அதிலும் நான் காதலிக்கும் ஒரு பெண்ணின் முன்னால் என்னை நீ அப்படி அவமானப்படுத்தலாமா? நாளைக்கு நான் அவளுடைய முகத்தில் எப்படி விழிப்பேன்? - இல்லை, உன்னுடைய முகத்தில் தான் எப்படி விழிப்பேன்?’ என்று அவனைக் கேட்பது போலிருந்தது.

     ‘உண்மைதானடா! அது நடந்த பிறகு எனக்கும் அப்படித்தான் தோன்றிற்று; ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அது என்னால் தவிர்க்க முடியாததென்று தோன்றவில்லையா, உனக்கு? - தோன்றித்தான் இருக்கும்; ஆனால் உணர்ச்சி அந்தப் பெண்ணைப் பார்க்க மட்டும் என்ன, என்னைப் பார்க்கக் கூட உன்னை ஓரிரண்டு நாட்களாவது யோசிக்க வைத்துக் கொண்டு தான் இருக்கும் - அதனாலென்ன, நான் கொஞ்சம் தாராளமாகவே லீவு போட்டு விடுகிறேனே. நாலைந்து நாளைக்கு! அதற்குள் நீ எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு விடமாட்டாயா? - என்ன, நான் சொல்வது?’ என்று அந்தப் படத்தைப் பார்த்து அவன் சமாதானம் சொல்லிக் கொண்டே படுக்கையை எடுத்து விரித்துவிட்டு, விளைக்கை அணைத்தான் படுக்க!

     பாவம், பிறருடைய உணர்ச்சியை மதிக்கத் தெரிந்த அவனுக்குத் தன்னுடைய உணர்ச்சியையே மதிக்கத் தெரியாத மோகனா நண்பனாக வந்து வாய்க்க வேண்டும்?