9. ஒரு விண்ணப்பம்

     மோகனுக்காகத் தான் எடுத்துக் கொண்ட லீவைப் பெரும்பாலும் ஓட்டல் அறையிலேயே கழித்து விட்ட மணி, வேலைக்குப் போவதற்கு முன்னால் அவனை ஒரு நாள் வீட்டில் பார்த்துத் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தான். அதற்காக அவன் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த போது மோகனே வந்து எதிர்த்தாற் போல் நின்றால், அவனுக்கு எப்படி இருக்கு? - “ஏண்டா மோகன், நிஜமாக நீதானா?” என்றான், அவனை மேலுங் கீழுமாகப் பார்த்துக் கொண்டே.

     “நானே தான்! அதில் என்ன ஆச்சரியம் உனக்கு?” என்றான் அவன், குனிந்த தலை குனிந்தபடி.

     “கீழே பார்க்காதே, மேலே பார்!” என்று அவன் தலையைத் தூக்கி நிறுத்திவிட்டு, “இப்போது நான் எங்கே புறப்பட்டுக் கொண்டிருந்தேன் தெரியுமா? உன்னைப் பார்க்கத்தான்! அதற்குள் நீயே வந்து இங்கே நின்றால் எனக்கு ஆச்சரியமாயிருக்காதா?”

     “அதை விட ஆச்சரியமாயிருக்கிறது, அன்று நான் உன்னிடம் அவ்வளவு மோசமாக நடந்து கொண்டும் ஏதுமே நடக்காதது போல் நீ என்னிடம் பேசுவதும், பழகுவதும்!”

     “அப்படி என்ன நடந்துவிட்டது, நமக்குள்ளே? ஒன்றுமில்லையே, உட்கார். காபி கொண்டு வரச் சொல்கிறேன்!” என்று அவனை உட்கார வைத்து விட்டு, “சங்கர், சங்கர்!” என்று குரல் கொடுத்தான் மணி.

     அதுவரை படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே மூடி எடுத்துக் கொண்டு வந்த சங்கர், “என்ன சார்! என்ன வேண்டும், உங்களுக்கு?” என்று கேட்டான்.

     “இரண்டு கப் காபி!”

     “காதல் காபியா? காதல் இல்லாத காபியா?” என்று கேட்டான் சங்கர், சிரித்துக் கொண்டே.

     “அது ஒன்று; இது ஒன்று!” என்றான் மணியும் சிரித்துக் கொண்டே.

     “சரி!” என்று அவன் கையிலிருந்து புத்தகத்தை அங்கிருந்த கட்டிலின் மேல் வைத்துவிட்டுச் செல்ல, “ஏண்டா, சங்கர்! என்ன புத்தகம், இது?” என்று கேட்டான் மணி, அதைக் கையால் தொட்டுப் பார்க்கக் கூட விரும்பாதவன் போல.

     “காதல் இல்லாத புத்தகம் தான், சார்! அது இருந்தால் அதை நான் உங்களுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்திருப்பேனா? சுட்டு விட மாட்டீர்களா, சுட்டு!” என்றான் அவன், கீழே இறங்கிக் கொண்டே.

     அவன் இறங்குவதைப் பார்த்துக் கொண்டே இருந்த மோகனுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, “எங்கே போனாலும் உனக்கென்று ஓர் உதவியாளன் ஊதியம் இல்லாமலே வந்து சேர்ந்து விடுகிறான், இல்லையா?” என்றான், ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவனாக.

     “ஆம்; அந்த விஷயத்தில் மட்டும் எனக்கு எப்போதுமே சிரமம் ஏற்பட்டதில்லை!” என்றான் மணி.

     “உன்னிடம் ஏதோ ஒரு வசீகர சக்தி இருக்கிறது; அதுதான் யாரையாவது இழுத்துக் கொண்டு வந்து உன்னிடம் விட்டு விடுகிறது!”

     “இருக்கலாம்; ஆனால் சில சமயம் அது பெண்களையும் இழுத்துக் கொண்டு வந்து என்னிடம் விட்டு விடும் போது தான் எனக்குத் தர்மசங்கடமாகப் போய்விடுகிறது!”

     மோகன் சிரித்தான்; சிரித்து விட்டுக் கேட்டான்:

     “இவன் ஒரு மாஜி கேடி என்பது தெரியுமா, உனக்கு?”

     மணி சொன்னான்; சிரிக்காமலே சொன்னான்:

     “தெரியும்; தெரிந்தே இவனுக்கு நான் இங்கே வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்!”

     “இவனால் உனக்கு எந்தவிதமான தொல்லையும் இல்லையா?”

     “இல்லை; என்னால் தான் இவனுக்குத் தொல்லை!”

     “உன்னால் இவனுக்குத் தொல்லையா! - இருக்காதே? அறையைக் கூட்டுவது முதல், கூஜாவில் தண்ணீர் கொண்டு வந்து வைத்துக் கொள்வது வரை உன்னுடைய வேலைகளை யெல்லாம் நீயே செய்து கொள்வதல்லவா உன் வழக்கம்?”

     “அந்த வழக்கத்தை இன்னும் நான் கைவிடவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக இன்னொரு வேலை வைத்திருக்கிறேன் நான், இவனுக்கு!”

     “அது என்ன வேலை?”

     “எனக்குக் கிடைக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றையெல்லாம் படித்து வடி கட்டும் வேலை!”

     “அதாவது, ‘இது காதல் இல்லாத புத்தகம், இது காதல் இல்லாத பத்திரிகை’ என்று இவன் தான் உனக்கு வடிகட்டிக் கொடுக்கிறானா?”

     “ஆம், அதனால் இவனுடைய நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறது; என்னுடைய நேரம் மிச்சமாகிக் கொண்டு இருக்கிறது!”

     “இது உனக்குச் சுயநலமாகத் தோன்றவில்லையா?”

     “தோன்றுகிறது; ஆனால், அதே சமயத்தில் அது அவனைப் பழைய நினைவுகளுக்கு ஆளாக்காமல் தடுக்கிறதே?”

     “எதுவாயிருந்தாலும் அதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு என்பதை இப்போதாவது ஒப்புக் கொள்கிறாயா, நீ?”

     “இல்லை! உனக்கு நன்மையாகத் தோன்றுவது எனக்குத் தீமையாகத் தோன்றலாம்; எனக்குத் தீமையாகத் தோன்றுவது உனக்கு நன்மையாகத் தோன்றலாம்!”

     “வேடிக்கையான மனிதன், நீ!”

     “சங்கர் கூட அப்படித்தான் சொல்கிறான்! - ஒரு வேளை அதனால் தான் என்னுடைய நடத்தை சில சமயம் விபரீதமாகக் கூடப் போய்விடுகிறதோ, என்னமோ? - உதாரணமாக, உன் காதலிக்கு முன்னால் அன்று நான் அவனை அடித்திருக்கக் கூடாது, இல்லையா?”

     மோகன் சிரித்தான்; “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டான் மணி.

     “ஒன்றுமில்லை; அன்று நீ எனக்காக அவனை அடித்து வீழ்த்தியிருக்கா விட்டால் என்ன நடந்திருக்கும், தெரியுமா? நான் அவளை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஓடிப் போயிருப்பேன்; அன்றிலிருந்து அவளும் என்னைத் திரும்பிப் பார்க்காமல் போயிருப்பாள்!”

     “இன்று?”

     “வெட்கப்படுகிறேன் மணி, அதை நான் உன்னிடம் சொல்ல வெட்கப்படுகிறேன்!”

     “அதற்குத்தான் பெண்கள் இருக்கிறார்களே, நீ ஏன் வெட்கப்படுகிறாய்? - சும்மா சொல்லு?”

     “சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டாயே?”

     “மாட்டேன்! ஏனெனில், நான் எப்போதுமே காதலர்களை என்னுடைய கோபத்துக்கு உரியவர்களாகக் கருதுவதில்லை; அனுதாபத்துக்கு உரியவர்களாகவே கருதுகிறேன்!”

     “அந்த நம்பிக்கையில் தான் நானும் உன்மேல் இல்லாததும் பொல்லாததும் சொல்லி, என்னுடைய காதலைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன்!”

     “அடி சக்கை! புதுப்பித்துக் கொள்ளக் கூட முடியுமா, அதை?”

     “முடியும், உன்னைப் போன்றவர்கள் உதவினால்!”

     “சரி, யாருக்காவது ஏதாவது ஒரு வகையில் நான் உதவினால் சரி! அப்புறம்?”

     “அதற்காக முதலில் நீ என்னை மன்னிக்க வேண்டும்!”

     “உனக்குத்தான் தெரியுமே - நான் யாரையும் மன்னிப்பதுமில்லை, யாரிடமும் மன்னிப்புக் கேட்பதும் இல்லை என்று!”

     “மன்னிக்காவிட்டால் என்னுடைய நன்றியையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும்!”

     “அதற்குதான் நாய் இருக்கிறதே, நாம் வேறு என்னத்துக்கு? - இதோ பார் மோகன், இவையெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்காக நமக்கு நாமே செய்து கொள்ளும் வார்த்தை ஜாலங்கள்! மன்னிப்பு எதற்கு, மறுபடியும் தவறு செய்வதற்கு; நன்றி எதற்கு, மறுபடியும் உதவி கோருவதற்கு! இவற்றைத் தவிர அவற்றால் வேறு ஏதாவது பயனுண்டா, மனிதனுக்கு?”

     “பயன் இருக்கிறதோ, இல்லையோ? இந்த நாகரிக யுகத்தில் அவற்றில்தானே பண்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்?”

     “எது நாகரிக யுகம், இதுவா நாகரிக யுகம்? ஒரு நாளும் இல்லை! இது நாகரிக யுகமாயிருந்தால் போலீஸ் ஸ்டேஷன் என்னத்துக்கு இருக்கிறது? போலீஸ்காரர்கள் ஏன் இருக்கிறார்கள்? சிறைச்சாலை என்னத்துக்கு இருக்கிறது. சிறைக் காவலர்கள் ஏன் இருக்கிறார்கள்? - ‘நாங்கள் அப்படியொன்றும் நாகரிகமானவர்களல்ல, அநாகரிகமானவர்கள் தான்!’ என்பதைச் சொல்லாமல் சொல்லத்தானே?”

     “ஆமாம் சார்! ஆனால் ஒன்று; அவையும் இல்லாவிட்டால் என்னைப் போன்றவர்களின் கதி என்ன ஆகும், தெரியுமா? திருடினால் கூட வேலை கிடைக்காது!” என்றான் சங்கர், அப்போது இரண்டு கப் காபியுடன் அங்கே வந்து.

     “பார்த்தாயா, மோகன்? திருடினால் வேலை நிச்சயம்; கூலி நிச்சயம் கிடையாது. திருடாவிட்டால் வேலை நிச்சயம் கிடையாது; கூலியும் நிச்சயம் கிடையாது. இதுதான் நாம் வாழும் நாகரிக யுகம்! - இந்த நாகரிக யுகத்தில் நன்றியாவது, மன்னிப்பாவது? அதெல்லாம் ஒன்றுமில்லை; நீ காபி சாப்பிடு!” என்று ஒரு கப் காபியை எடுத்து அவனுக்கு முன்னால் வைத்தான் மணி.

     “இது காதல் காபியா, காதல் இல்லாத காபியா?” என்றான் மோகன், சிரித்துக் கொண்டே.

     “சுவைத்துப் பார்! சர்க்கரை இருந்தால் காதல் காபி; இல்லாவிட்டால் காதல் இல்லாத காபி!” என்றான் மணி.

     “நீரழவி நோயால் பீடிக்கப்பட்டவர்கள் தான் சர்க்கரை இல்லாத காபி சாப்பிடுவார்கள்; நீயுமா அந்த நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறாய்?”

     “இல்லை; நமது சமூகம் அந்த நோயால் பீடிக்கப் பட்டிருக்கிறது - அதற்காக நான் இருக்கும் பத்தியம், இது!”

     “நீ ஒருவன் பத்தியம் இருந்தா அந்த நோய் தீர்ந்து விடப் போகிறது?”

     “ராமபிரான் சேதுபந்தனம் கட்டும் போது ஆஞ்சநேயரின் பரிவாரங்கள் மட்டுமா உதவின? அணிலும் உதவித்தானே இருக்கிறது?”

     “நீ அணில் அல்ல; ஆஞ்சநேயன்!”

     “ஆம்; ஆஞ்சநேயனாக இருக்கத்தான் விரும்புகிறேன், நான்!” என்றான் மணி கம்பீரமாக.

     “அப்பா ஆஞ்சநேயா, அடியேன் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளலாமா?” என்றான் மோகன், அதுதான் சமயமென்று.

     “தாராளமாக! என்ன விண்ணப்பம் பக்தா?”

     “என்னுடைய நன்றியை நீ ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி - எனக்கு நீ மேலும் ஓர் உதவி செய்ய வேண்டும்!”

     “என்ன உதவி?”

     “என்னுடைய வீட்டில் எனக்கு நீ நண்பனாயிரு; உன்னுடைய ஓட்டல் அறையில் உனக்கு நான் நண்பனாயிருக்கிறேன். ஆனால், ஆபீசில் மட்டும் எனக்கு நீ விரோதியாயிருக்க வேண்டும்; உனக்கு நான் விரோதியாயிருக்க வேண்டும் - இதுவே என் விண்ணப்பம்!”

     “எதற்கு? ஏதும் அறியாத அந்தப் பேதைப் பெண்ணை ஏமாற்றுவதற்கா?”

     “இல்லை; ஏமாறாமல் இருப்பதற்கு!”

     “அதில் நீ தவறினால்?”

     “தண்டனை அளிக்கத்தான் நீ இருக்கிறாயே?”

     “ஞாபகமிருக்கட்டும்; அப்போது நீ வீட்டிலும் சரி, வெளியிலும் சரி - என்னுடைய நண்பனாயிருக்க முடியாது!”

     இதைச் சொல்லிக் கொண்டே மணி காபியை எடுத்துக் குடிக்க, மோகனும் அந்த ஒரு விஷயத்திலாவது அவனைப் பின்பற்ற முடிகிறதே என்ற திருப்தியில் தானும் தன் காபியை எடுத்துக் குடித்தான்!