20. காணாமற்போன காதலன்!

     தான் நினைத்தது தவறு என்பதைத் தெரிந்துக்கொள்ள அருணாவுக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை; வெளியே வந்ததுமே அது அவளுக்குத் தெரிந்துபோயிற்று - ஆம், அவள் அவ்வாறு நினைக்கக்கூடும் என்பதை உணர்ந்த மணி, “என்ன அருணா, சமய சந்தர்ப்பம் தெரியாமல் நீ உன் அண்ணாவை வளைய வந்துக் கொண்டிருக்கிறாயே? பாமா உன்னை வெளிப்படையாகத் திட்டாவிட்டாலும் உள்ளுக்குள்ளாவது திட்டிக் கொண்டிருக்காதா?” என்றான் சிரித்துக்கொண்டே.

     “நானும் அதை நினைத்துத்தான் அவர்களை விட்டு ஒதுங்கி ஒதுங்கி நடந்துக் கொண்டிருக்கிறேன்; இருந்தாலும் இந்தத் தியேட்டருக்கு நான் வந்திருக்கக்கூடாது என்பதை இப்போதுதான் உணர்கிறேன்!” என்றாள் அவள்.

     அதற்குள் பாமா குறுக்கிட்டு, “நான் ஒன்றும் உன்னைத் திட்டிக் கொண்டிருக்கவில்லை; நீ இந்தத் தியேட்டருக்கு வந்ததிலும் எனக்கு ஒன்றும் வருத்தம் கிடையாது!” என்றாள் பொய்யானக் கோபத்துடன்.

     “அதெல்லாம் சும்மா; நீ நம்பாதே, அருணா! எதிர்பாராமல் ஏதோ நடந்தது நடந்துவிட்டது; இப்போதாவது நீ அவர்களை விட்டுப் பிரிந்து, வீட்டுக்குப் போய்ச் சேருவதைப் பார்!” என்றான் மணி.

     “அப்போது மட்டும் எங்களால் நிம்மதியாக இருந்துவிட முடியுமா, என்ன? வீட்டுக்குப் போய் இவள் எங்களைப் பற்றி என்ன சொல்வாளோ, என்னமோ?” என்றான் மோகன்.

     “சொன்னால் சொல்லட்டுமே, அதனாலென்ன? நாளைக்கு நீ யாருக்கும் தெரியாமலா பாமாவைக் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறாய்?” என்றான் மணி.

     இந்தச் சமயத்தில் பாமா ஏதோ முணுமுணுத்தது மணியின் காதில் விழுந்தது; “என்ன பாமா, என்ன சொல்கிறாய் நீ?” என்று அவன் அவளைக் கேட்டான்.

     “ஒன்றும் சொல்லவில்லை; நீங்கள் சொல்வதைத்தான் நானும் இவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் என்றேன்!” என்றாள் அவள்.

     “நீயும் சொன்னாயா, அதுதான் சரி! வேறு எந்த விஷயத்தில் ரகசியம் இருந்தாலும் இருக்கலாம்; இந்தக் காதல் விஷயத்தில் மட்டும் ரகசியம் இருக்கவேக் கூடாது, பாமா! இருந்தால் இவனுக்கு ஒன்றும் ஆபத்தில்லை; உனக்குத்தான் ஆபத்து!” என்றான் மணி, மோகனை அவளுக்குச் சுட்டிக் காட்டி.

     இதை அவன் சொல்லக் கேட்டபோது, பாமாவின் நெஞ்சம் ஏனோ நெகிழ்ந்தது - இப்படிப்பட்ட ஓர் உத்தமனைப் பற்றி இவர் தன்னிடம் என்னவெல்லாம் சொன்னார்? ஒரு வேளை தங்களுக்கு இயற்கையாகவே வாய்க்கப்பெற்ற கற்பனா சக்தியால், குழந்தைகள் தாங்கள் சொல்வது பொய் என்று தெரியாமல் எதையும் மிகைப்படுத்திச் சொல்கின்றனவே, அந்தக் குழந்தைகளில் இந்தக் குழந்தையும் ஒன்றாயிருக்குமோ? - ஐயோ, என் குழந்தையே! உன்னை நான் எப்படித் திருத்தப் போகிறேனோ, தெரியவில்லையே?

     இப்படி அவள் எண்ணிக்கொண்டு இருந்தபோது, “என்ன பாமா, என்ன யோசிக்கிறாய்? அண்ணனுக்குத்தான் தன் தங்கையிடம் நம்பிக்கை இல்லையென்றால், உனக்குமா அதனிடம் நம்பிக்கையில்லை?” என்று மணி கேட்டான்.

     “என்னைப் பொறுத்தவரை எனக்கு அந்தக் கவலையே இல்லை; இவர் விரும்பினால் இப்போதே வேண்டுமானாலும் நான் இவருடன் இவருடைய வீட்டுக்கு வரத் தயார்!” என்றாள் பாமா, மேலும் கொஞ்சம் துணிந்து.

     “ஐயோ, வேண்டாம்! சினிமாக்களில் வரும் அப்பாக்களைப் போல் என் அப்பாவும் துப்பாக்கியை எடுத்து என்னிடம் கொடுத்து, ‘முதலில் என்னைச் சுடு; அப்புறம் பாமாவைக் கல்யாணம் செய்துக்கொள்!’ என்று சொன்னாலும் சொல்வார்!” என்று அலறினான் மோகன்.

     அருணா சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்:

     “பயப்படாதே அண்ணா, அப்பாவிடம் இப்போது துப்பாக்கி இல்லை!”

     “இல்லாவிட்டால் என்ன, வேண்டுமென்று தோன்றும்போது அது அவருக்குக் கிடைக்கும்!”

     “அதற்காக?”

     “என்னைப்பற்றி நீ என்ன வேண்டுமானாலும் அவரிடம் சொல்லு; பாமாவைப்பற்றி மட்டும் ஒன்றும் சொல்லிவிடாதே என்கிறேன்!”

     “இவ்வளவுதானே? நிச்சயமாகச் சொல்லமாட்டேன்; நீ தைரியமாகப் போய் வா!”

     அருணா திரும்பினாள்; மோகன் கால்சட்டைப் பைக்குள் கையை விட்டுக்கொண்டே கேட்டான்:

     “அதற்காக ஏதாவது...”

     மணிக்கு ஒன்றும் புரியவில்லை; “என்ன ஏதாவது?” என்று குறுக்கிட்டான்.

     “லஞ்சம்!” என்றான் மோகன், சிரித்துக் கொண்டே.

     “அதுகூடக் கொடுப்பதுண்டா, நீ?”

     “ஏற்கெனவே ஐந்து ரூபாய் வாங்கியிருக்கிறாளே, என்னிடம்!”

     “அந்த அருணா இப்போது இல்லை அண்ணா, இவள் வேறு அருணா! எனக்கு ஒன்றும் வேண்டாம்; நீ போய் வா!”

     அருணா மறுபடியும் திரும்பினாள்; அதற்குள் ரூபா அவளைத் தேடிக்கொண்டு வந்து, “ஏண்டி அருணா, நீ அவரைப் பார்த்தாயா?” என்று கேட்டாள்.

     “எவரை?”

     “அவரைத் தாண்டி, என்னுடன் வந்திருக்காரே ஒருவர்... அவரை!”

     “இல்லையே, உன்னோடு பார்த்ததுதான்; அதற்குப் பிறகு நான் அவரைப் பார்க்கவேயில்லையே!”

     “தியேட்டரை விட்டு இருவரும் ஒன்றாய்த்தான் வெளியே வந்தோம்; ‘பஸ் ஸ்டாப்’பில் வந்து நின்று திரும்பிப் பார்த்தால் ஆளைக் காணோம்!”

     “ஒருவேளை கூட்டத்தோடு கூட்டமாக...”

     “அப்படி ஏதாவது இருக்குமோ என்றுதான் நான் கூட்டம் கலையும் வரை அங்குமிங்குமாக அலைந்து அலைந்து, அவரைத் ‘தேடு, தேடு’ என்று தேடிப் பார்த்தேன்; கால் வலித்ததுதான் மிச்சம்!”

     இந்தச் சமயத்தில், “அவன் வரமாட்டான்; இனி அவன் உங்களைத் தேடி வரவே மாட்டான்!” என்று யாரோ சொல்வது அவர்கள் காதில் விழுந்தது; இருவரும் திரும்பிப் பார்த்தார்கள் - மணி அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

     “ஏன், உங்களுக்கும் தெரியுமா அவரை?” என்று ரூபா கேட்டாள்.

     “தெரியும், அவனுக்கு வாழ்க்கை ஒரு விளையாட்டு என்று!”

     “அப்படியென்றால்?”

     “அவன் உங்களை மட்டும் காதலிக்கத் தயாராயில்லை, ஏமாந்தால் இந்த உலகத்திலுள்ள அத்தனைப் பெண்களையுமே காதலிக்கத் தயாராயிருக்கிறான் என்று அர்த்தம்!”

     அவ்வளவுதான்; ரூபா அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. விடுவிடுவென்று தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள்!

     அவள் சென்ற திசையையே ஒரு கணம் பார்த்துக் கொண்டு நின்ற அருணா, “என்னிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் போகிறாளே?” என்றாள், மணியின் பக்கம் திரும்பி.

     “காதலன் சொல்லிக்கொண்டு போனால்தானே காதலி சொல்லிக் கொண்டு போக?” என்றான் அவன்!

     தன்னுடன் மணி வரவில்லையென்றாலும், தான் வீடு போய்ச் சேரும் வரை அவன் தனக்குத் ‘தோன்றாத் துணை’யாயிருப்பான் என்ற உறுதி அருணாவுக்கு இருந்தது. ஆனால், அந்த உறுதி அவளுடைய நடையில் பிரதிபலித்த அளவுக்கு உள்ளத்தில் பிரதிபலிக்கவில்லை. தான் செய்த தவறு அந்தத் ‘தோன்றாத் துணை’யால் தன் அண்ணாவுக்குத் தெரியாமல் இருக்கலாம்; அப்பாவுக்குத் தெரியாமல் இருக்கலாம்; அம்மாவுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது தனக்குத் தெரியாமல் இருக்க முடியாது அல்லவா? - அந்த தவற்றை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்தாலும் தனக்குத் தெரியாமல் மறைக்க முடியாது அல்லவா? - தன்னைப் பொறுத்தவரை அது என்றும் தன் இதயத்தில் விழுந்தக் கீறலாகத்தானே இருக்கும்? அதை என்னதான் ஆற்றினாலும் அதன் வடு என்றும் தன் இதயத்தில் மறையாமல்தானே இருக்கும்?

     பாமா சொல்வதைப் போல், மணி அண்ணன் சொல்வதைப் போல், அவன் தன்னைப் பகிரங்கமாகக் காதலித்திருந்தால் இந்த அவலத்துக்கு, இந்த அவமானத்துக்குத் தான் உள்ளாகியிருக்க முடியாது; தனக்கு அஞ்சாவிட்டாலும் பிறருக்கு அஞ்சியாவது அவன் தன்னை இந்தப் பழிக்கு, இந்தப் பாவத்துக்கு ஆளாக்கியிருக்க முடியாது.

     இந்த உலகத்தில் பிறருக்கு அஞ்சி வாழ்வதைவிட தனக்குத் தானே அஞ்சி வாழ்வதுதான் எவ்வளவு கொடுமையானது! எவ்வளவு குரூரமானது!

     அத்தகைய கொடுமைக்கும் குரூரத்துக்கும் தன்னை ஆளாக்கிய அதே நாளில், இன்னொருத்தியையும் அதே கொடுமைக்கு, அதே குரூரத்துக்கு அந்தப் பாவி ஆளாக்கத் துணிகிறான்? - மணி அண்ணன் சொல்வதுபோல அவனுக்கு வாழ்க்கை ஒரு விளையாட்டாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது!

     அவன் விளையாடலாம்; அவனை நம்பி ஒரு பெண் விளையாட முடியுமா? அப்படி விளையாடினால் கடைசியில் அவள் தன் விதியுடன் அல்லவா விளையாட வேண்டியிருக்கும்? - நல்லவேளை, நான் பிழைத்தேன்!

     அன்றொரு நாள் தன்னுடன் சேர்ந்து ‘போட்டோ’ எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக அவன் தன்னைப் படுத்திய பாடு! - கடவுள்தான் காப்பாற்றினார், தனக்கு அந்தச் சமயத்தில் அந்த நல்ல புத்தியைக் கொடுத்து! - இல்லாவிட்டால் அதை வேறு வைத்துக்கொண்டு அவன் தன்னை என்ன பாடு படுத்தியிருப்பானோ?

     காதல் கடிதம் மட்டும்தான் அவனுக்கு நாலோ, ஐந்தோ எழுதியிருப்பதாக ஞாபகம். அவற்றைக் கூடத் தவிர்க்க முடியாமல்தான் எழுத நேர்ந்தது. அவன் பாட்டுக்கு நூற்றுக்கணக்கில் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தால்? நான் நாலோ, ஐந்தோகூட எழுதாமல் இருக்க முடியுமா?

     அந்தக் கடிதங்களைப் பற்றிக்கூட இப்போது தான் கவலைப் படவேண்டிய அவசியமில்லை - அவன் தான் கண்ணறாவிக் காதலனாயிருக்கிறானே, அவற்றைத் தன்னைப் போல் அவனும் கண்ணில் ஒற்றிக்கொண்டா பத்திரப்படுத்தி வைத்திருக்கப் போகிறான்?

     இருக்காது; வந்த அன்றைக்கே படித்துப் பார்த்துவிட்டு அவன் அவற்றைக் கிழித்து எறிந்துவிட்டிருப்பான்!

     தான் மட்டும் அவற்றை இனிப் பத்திரப்படுத்தி வைத்து என்ன பிரயோசனம்? - வீட்டுக்குப் போனதும் அம்மாவுக்குத் தெரியாமல் அவற்றை எடுத்து அக்கினி பகவானுக்கு இரையாக்கிவிட வேண்டும். ‘சுந்தரி’ என்ற பெயருடன் அவன் வாங்கிக் கொடுத்த பேனா ஒன்று வீட்டில் இருக்கிறது; அதையும் தூக்கித் தூர எறிந்துவிட வேண்டும்!

     ஆனால் அவனுடைய நினைவுகள் பல தன் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கின்றனவே, அவற்றைத் தூக்கித் தூர எறிந்தால்தான் உண்டு; இல்லாவிட்டால் அது தன்னை உறுத்திக்கொண்டேதான் இருக்கும்! - இருக்கட்டுமே, தான் செய்தத் தவற்றுக்கு அந்தத் தண்டனையைக் கூடவா அனுபவிக்கக் கூடாது?

     எல்லா மடத்தனங்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் தான் செய்த இன்னொரு மடத்தனம், கவிஞர் தாகூர் எழுதிய ‘காதலர் பரிசு’ என்ற புத்தகத்தை வாங்கி அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது! - அப்படித்தான் கொடுத்தேனே, சும்மாவாவது கொடுத்தேனா? அதுவும் இல்லை; அப்போதிருந்த நிலையில் ஏதோ ‘கன்னாபின்னா’ என்று எழுதிக் கையெழுத்து வேறு போட்டுக் கொடுத்திருக்கிறேன்!

     அவன் அதைப் படித்தா இருக்கப் போகிறான்! ரசித்தா இருக்கப் போகிறான்? - ஊஹூம்; அந்த மாதிரி ரசனையெல்லாம் அவனுக்கு இருந்தால், இந்த மாதிரி ஈனத்தனங்களில் எல்லாம் அவன் ஏன் ஈடுபடப் போகிறான்?

     ஆனால் ஒன்று - படித்தாலும் படிக்காவிட்டாலும், ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும், அந்தப் புத்தகத்தை மட்டும் அவன் பத்திரப்படுத்தி வைத்திருப்பான் - எதற்கு, தன்னுடைய நினைவுக்காகவா? அப்படியொன்றும் இருக்காது; தன்னைப் போன்ற சிலர் தன்னை மதிக்க வேண்டுமென்றால், மதித்துத் தன்னிடம், மயங்கவேண்டுமென்றால், அப்படிச் சிலப் புத்தகங்களும் தன்னுடையப் புத்தக அலமாரியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக அவன் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பான்!

     அந்தப் புத்தகத்தை மட்டும் அவனிடம் இருந்து எப்படியாவது கிளப்பிவிட்டால்? - யாரால் முடியும் அது? - ரூபா அவனுடன் கொண்டிருந்த தொடர்பு நீடித்திருந்தாலும்...

     நீடித்திருந்தால் மட்டும் என்ன? அவளிடம் அதை எப்படிச் சொல்லியிருக்க முடியும்? சொல்லியிருந்தால், அவள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்? இல்லை, அவனைப் பற்றித்தான் என்ன நினைத்திருப்பாள்? - வெட்கக்கேடுதான்!

     மணி அண்ணனிடம் சொன்னால் அது ஒரு வேளை நடக்கலாம்; ஆனால் அதை இப்போதா சொல்வது? - கூடாது, கூடவே கூடாது.

     இன்று காலை மீனாட்சியம்மாள் சொன்னார்களே, ‘இந்த உலகத்தில் நீ சிரிக்கும்போது உன்னுடன் சேர்ந்து சிரிக்க எத்தனை பேர் வேண்டுமானாலும் தயாராயிருப்பார்கள்; அழும்போது உன்னுடன் சேர்ந்து அழ ஒருவரும் தயாராயிருக்க மாட்டார்கள்!” என்று. அது என்னமோ உண்மைதான். ஆனால் அந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் பாக்கியசாலி! தான் அழுதால் தன்னுடன் சேர்ந்து அழத் தனக்கு ஓர் அண்ணா இருக்கிறார்; அவர்தான் மணி அண்ணா!

     கால்கள் தங்கள் விருப்பம்போல் நடக்க, மனம் தன் விருப்பம்போல் எண்ணிக் குமைய, அவள் பஸ்ஸை மறந்து - ஏன், தன்னையே மறந்து போய்க் கொண்டிருந்த போது, ‘விர்’ரென்று வந்த ‘டாக்சி’ ஒன்று அவளுக்கு அருகே ‘டக்’கென்று நின்றது; அந்த டாக்சியிலிருந்து வெளியே வந்த ஒரு கை ‘லபக்’கென்று அவள் கையைப் பிடித்தது!