16. சிரிப்பும் கண்ணீரும்

     திட்டமிட்டுத் தன்னைக் கற்பழிக்கத் துணிந்தவன் ஒரு சட்டக் கல்லூரி மாணவன்! - இதை நினைக்க நினைக்க அருணாவுக்கு வியப்பாக மட்டுமில்லை; வேதனையாகவும் இருந்தது.

     படிக்காதவர்கள் எதையும் திட்டமிடாமல் செய்தால், படித்தவர்கள் எதையும் திட்டமிட்டுத்தான் செய்வார்கள் போலிருக்கிறது! இல்லாவிட்டால் அவர்கள் அகப்பட்டுக் கொள்வதைப் போல இவர்களும் அல்லவா அகப்பட்டுக் கொள்வார்கள்?

     அதிலும், இவன் சட்டம் படிப்பவன்; நாளைக்கு யோக்கியனை அயோக்கியன் என்றும், அயோக்கியனை யோக்கியன் என்றும் நிரூபிக்க வேண்டி என்னைப் போன்ற அபலைகளை ஏமாற்றுவதன் மூலம் இப்போதே தன்னைத் தயார் செய்து கொள்கிறான் போலிருக்கிறது!

     இவன் மனிதனாம்! - தவறு செய்பவர்கள் எல்லாம் மனிதர்கள் என்று ஆகிவிட்டால், தவறு செய்யாதவர்கள் எல்லாம் தெய்வமா, என்ன?

     இவர்களை சொல்வதைப் பார்த்தால், யாரோ ஒரு ஞானி பட்டப்பகலில் விளக்கை ஏற்றிக் கொண்டு தேடினானாமே மனிதனை, அந்த ஞானி இப்போது இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு மனிதனைக் கண்டுபிடித்து விடலாம் போலிருக்கிறதே?

     ‘சுந்தரம்’ என்ற பெயரைச் ‘சுந்தரி’ என்று மாற்றி வைத்துக்கொண்டு இவன் அடிக்கடிக் கல்லூரிக்குப் ‘போன்’ பண்ணும்போதே எனக்குச் சந்தேகந்தான். முன் அனுபவம் இல்லாமல் இந்த முன் யோசனை இவனுக்கு எப்படி உதித்தது என்று? ‘அதில் சந்தேகம் ஒன்றுமில்லை’ என்று இப்போதல்லவா தெரிகிறது எனக்கு?

     இல்லாவிட்டால் மகாபலிபுரம் பஸ்ஸைத் தவற விடுவதற்கு அந்த முன் யோசனை இவனுக்கு உதவியிருக்குமா? இல்லை, பொழுது போக்குக்கென்று ஓட்டலில் அறை எடுக்கத்தான் அந்த முன் யோசனை இவனுக்கு உதவியிருக்குமா?

     நல்லவேளை, மணி அண்ணன் மட்டும் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், என் கதி என்னவாகியிருக்கும்?

     எனக்குத் தெரியாமல் என் கதி ஒன்றூம் ஆகியிருக்காதென்றாலும், ஊர் சிரிக்கும் அளவுக்கல்லவா அந்தக் கிராதகனுடன் நான் போராட வேண்டியிருந்திருக்கும்?

     இப்போது மட்டுமென்ன, ஊர் சிரிக்காவிட்டாலும் என் உள்ளமே என்னைப் பார்க்கச் சிரிக்கிறதே! இனி நான் அந்த மணி அண்ணன் முகத்தில் எப்படி விழிப்பேன்? என்னுடன் இருந்த ‘புண்ணியாத்மா யார்’ என்று கேட்டால், என்னவென்று சொல்வேன்?

     இனி அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்னுடன் இருந்தவனைப் பற்றித்தான் என்ன நினைப்பார்?

     இது ஒரு வேளை அவரால் அப்பாவுக்குத் தெரிந்தால், அம்மாவுக்கும் தெரிந்தால், அண்ணாவுக்குத் தெரிந்தால், அவர்கள்தான் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?

     அவர்கள் என்ன நினைப்பார்களோ என்னமோ, அந்த நினைப்பே எனக்கு வேதனையாயிருக்கிறதே!

     இனி என் விளையாட்டு, வேடிக்கையெல்லாம் அந்த வேதனையோடு வேதனையாக வேண்டியதுதானா? - அடப்பாவி, இதற்கா உன்னை நான் காதலித்தேன்?

     ‘காதலிப்பவர்கள் சிரிப்பதற்கு மட்டும் தயாராயிருந்தால் போதாது; கண்ணீர் விடுவதற்கும் தயாராயிருக்க வேண்டும்’ என்பது என்னமோ எனக்கும் தெரிந்ததுதான்; ஆனால் அந்தக் கண்ணீரை இந்த நிலையிலா விடுவது, நான்?

     கொடுமை, கொடுமை! இனம் தெரிந்து கொள்ள முடியாத இந்த இளம் பிராயத்தில் நான் இந்த மனிதனைக் காதலித்ததும் கொடுமை; அந்தக் காதலின் விளைவாக இன்று நான் கண்ணீர் விடுவதும் கொடுமை!

     போதும்; ஏழேழு பிறவிக்கும் இந்த அனுபவமே போதும்!

     இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் மணியிடம் ஓடோடியும் சென்று, “அண்ணா! என்னை மன்னித்து விடுங்கள், அண்ணா! இனிமேல் நான் இந்த மாதிரி வேலைக்கே போக மாட்டேன்; என்னைப் பற்றி யாரிடமும் சொல்லி விடாதீர்கள், அண்ணா!” என்று கேட்டுக் கொள்ள வேண்டும் போல் தோன்றிற்று அவளுக்கு; திரும்பினால் - அந்தப் பாவி இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தால்?...

     நின்று கொண்டிருந்தால் என்ன, அவன் முகத்தில் காறித் துப்பிவிட்டு மேலேப் போவது!

     நினைப்பதற்கு எல்லாம் சுலபமாய்த்தான் இருக்கிறது; ஆனால் நினைத்தபடி நடப்பதென்பது அவ்வளவு சுலபமாகவா இருக்கிறது?

     அவனால் நான் கெடவில்லை என்பதும், என்னால் அவன் கெடவில்லை என்பதும் என் மனதுக்கும் தெரியும்; அவன் மனதுக்கும் தெரியும். ஆனால் உலகத்தின் மனதுக்கு அதுத் தெரியுமா? - ஆத்திரத்தில் அவன் ஏதாவது தப்பும் தவறுமாகச் சொல்லி வைக்க, அதையும் நாலு பேர் நம்பி வைக்க, அதனால் போவது என் மானமாகவல்லவா இருக்கும்? - வேண்டாம்; இப்போது போய் மணி அண்ணனைப் பார்க்க வேண்டாம்!...

     இந்த எண்ணத்துடன் அவள் முன்னால் வைத்த காலைப் பின்னால் வைத்தபோது, “ஏண்டி, இங்கே நின்று அழுது கொண்டிருக்கிறாய்?” என்று யாரோ கேட்பது அவள் காதில் விழுந்தது. திடுக்கிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தாள்; பக்கத்தில் இருந்து புத்தகக் கடையில் ஏதோ ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டிருந்த மீனாட்சியம்மாள் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

     அவளைக் கண்டதும் அவசர அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “நானா, அழுகிறேனா? இல்லையே!” என்று சிரித்தாள் அருணா.

     “தேவலையே? இந்த வயதிலேயே அழுவதற்கும், அதே சமயத்தில் சிரிப்பதற்கும் கற்றுக்கொண்டு இருக்கிறாயே, நீ!”

     “ஆமாம், நேற்று வரை எனக்குச் சிரிப்பதற்கு மட்டுந்தான் தெரிந்திருந்தது; இன்று அழவும் தெரிந்துவிட்டது!”

     “யாரால் தெரிந்தது, அது?”

     “யாராலா, யாராலா? என் அம்மாவால்தான் தெரிந்தது, அது!”

     அவள் சொன்ன தோரணையிலிருந்தே அது பொய் என்று ஊகித்துக் கொண்ட மீனாட்சியம்மாள், அதற்கு மேல் அவளைச் சோதனைக்கு உள்ளாக்க விரும்பாமல், “போகட்டும்; ஆனால் ஒன்றை மட்டும் நீ எப்போதும் உன்னுடைய நினைவில் வைத்துக் கொள் - ‘இந்த உலத்தில் நீ சிரிக்கும்போது உன்னுடன் சேர்ந்து சிரிக்க எத்தனை பேர் வேண்டுமானாலும் தயாராயிருப்பார்கள்; அழும்போது உன்னுடன் சேர்ந்து அழ ஒருவரும் தயாராயிருக்க மாட்டார்கள்’ என்பதுதான் அது!” என்று சொல்லி, அவளை லேசாகத் தட்டிக் கொடுத்துவிட்டு மேலே சென்றாள்.

     “எவ்வளவு பெரிய உண்மை! அதை எப்பேர்ப்பட்ட சமயத்தில் அவர்கள் எனக்கு நினைவூட்டிவிட்டுச் செல்கிறார்கள்!” என்று வியந்த அருணா, வைத்த விழி வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றாள்!

     அப்போது, ‘அன்று மாலை வரை எங்கேயாவது பொழுதை ஓட்டவேண்டுமே’ என்ற கவலை அருணாவின் உள்ளத்தில் எழுந்தது - அதற்கும் மீனாட்சி அம்மாளின் வீட்டையே தஞ்சமடைந்தால் என்ன?

     “அம்மா, அம்மா! நானும் வருகிறேன், அம்மா!” என்று கத்திக் கொண்டே இரண்டடி எடுத்து வைத்தாள் அவள். அதற்குள், ‘ஏன் வருகிறாய், எங்கே வருகிறாய் என்று அவர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வது?’ என்ற எண்ணம் குறுக்கிட்டது - ஏதோ காரியமாகப் போனோம், வந்தோம் என்றால் பரவாயில்லை; ஒரு காரியமும் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் ஒரு வீட்டில் உட்கார்ந்திருப்பது என்றால்? - பார்ப்பவர்களின் உள்ளத்தில் எத்தனையோ விதமான சந்தேகங்களை எழுப்புமே, அது!

     அதற்கெல்லாம் என்ன சமாதானம் சொல்லிக் கொண்டு இருப்பது? அப்படியே சொன்னாலும் அதை எத்தனை பேர் நம்புவார்கள்?

     வேண்டாம்; அனாவசியாக அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம்!

     இந்த முடிவுக்கு வந்ததும் அவள் மறுபடியும் முன்னால் எடுத்து வைத்தக் காலைப் பின்னால் எடுத்து வைத்தாள்.

     ஒரு வேளை நாம் அழைத்தது அவர்களுடைய காதில் விழுந்திருக்குமோ? - பார்த்தாள்; கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள் - இல்லை; விழவில்லை.

     விழுந்திருந்தால் இந்நேரம் திரும்பி வந்து, “ஏன்?” என்று கேட்டிருக்க மாட்டார்களா, அவர்கள்? - இல்லை, விழவில்லை.

     நல்ல வேளை, பிழைத்தேன்! - நீண்ட பெருமூச்சுடன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் அவள்; மணி ஒன்று!

     எப்படியோ அரை நாளைக் கழித்துவிட்டோம்; இன்னும் அரை நாள்தான் பாக்கி - எங்கேயாவது போய், எதையாவது சாப்பிட்டுவிட்டு...

     எங்கே போவதாம், எதைச் சாப்பிடுவதாம்? - ஒன்றும் இறங்காது; இப்போதுள்ள நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு ஒன்றுமே இறங்காது!

     பேசாமல் ஏதாவது ஒரு பகல் காட்சிக்குப் போய்...

     ...அங்கே படமாத் தெரியப் போகிறது, தனக்கு? வேறு என்னென்னவோ அல்லவா தெரியும்? - எது தெரிந்தால் என்ன? - தனக்குப் படமா முக்கியம், பொழுது போவதல்லவா முக்கியம்?

     பையில் சில்லறை இருக்கிறதா என்று பார்த்தாள்; இருந்தது - “சரி!” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அவள் பஸ் ஏறப் போனபோது “நில்” என்று யாரோ தன்னை அதட்டும் குரல் கேட்டுத் திரும்பினாள் - மணி. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அவள் எந்த மணியைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினாளோ, அந்த மணி!

     “என்ன அண்ணா?” - அவள் குரல் தழுதழுத்தது.

     “இன்னொரு முறை கூப்பிடாதே, என்னை அண்ணா என்று!” - அவன் குரலில் இடி இடித்தது.

     “இல்லை, கூப்பிடவில்லை!”

     “உன்னுடன் பேசக்கூட எனக்கு விருப்பமில்லைதான்; ஆனாலும் பேசுகிறேன் - என்னைக் கண்டு நீ வீணாக மிரண்டுக் கொண்டு இருக்கக் கூடாதே என்பதற்காக!”

     “இப்படிப் பேசி என்னை வதைப்பதைக் காட்டிலும் நீங்கள் என்னை அடித்தே வதைக்கலாமே, அண்ணா!”

     “மூடு வாயை; உன்னை அடிக்கும் அளவுக்கு நான் இன்னும் மிருகமாகி விடவில்லை - போ, தைரியமாகப் போ! உன் அண்ணன் உன்னைப் பற்றி, உன்னுடைய நடத்தையைப் பற்றி, யாரிடமும் எதுவும் மறந்துக் கூடச் சொல்லமாட்டான் என்ற நம்பிக்கையுடன் போ, போ! தைரியமாகப் போ!”

     “இதைச் சொல்லத்தான் நீங்கள் இவ்வளவு தூரம் வந்தீர்களா, அண்ணா?”

     “ஆமாம்; உன்னுடைய பயத்தைக் கொண்டே உன்னைச் சித்திரவதை செய்ய நான் விரும்பவில்லை - அதற்காகத்தான் வந்தேன்; நீ போகலாம்!”

     அவன் திரும்பினான்; அவனுக்குத் தெரியாமல் அவன் பாதம் பட்ட இடத்தைத் தொட்டுத் தன் கண்ணில் ஒற்றிக் கொண்டு அவள் கிளம்பினாள்!

     அன்று என்னமோ, தெரியவில்லை - சினிமாக் கொட்டகையிலாவது அருணாவுக்குச் சோதனையில்லாமலிருந்ததா என்றால், அதுவும் இல்லை. காரணம், அவளுக்கு முன்னாலேயே மோகனும், பாமாவும் அங்கே உட்கார்ந்திருந்ததுதான்!