6. கல்கத்தா ரசகுல்லா

     கடைசி நாள் பரீட்சையை எழுதி முடித்ததும், “போர், போர்!” என்று கத்திக் கொண்டே கலாசாலையை விட்டு வெளியே வந்தாள் அருணா.

     “எதைச் சொல்கிறாய்? பரீட்சையைச் சொல்கிறாயா, பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விகளைச் சொல்கிறாயா?” என்று கேட்டாள், அவளைத் தொடர்ந்து வந்த அவள் தோழிகளில் ஒருத்தியான எழிலி.

     “இரண்டையுந்தான்! பத்துப் பதினைந்து நாட்களாகப் படித்துப் படித்து, எழுதி, எழுதி, போதும் போதும் என்று ஆகிவிடவில்லையா, நமக்கு? ஒரே போர்!” என்றாள் அருணா.

     “போருக்கு என்னடி, தமிழ்?” என்று கேட்டாள் பொற்கொடி.

     “சுவர்ணலதா என்ற பெயரைப் பொற்கொடி என்று மாற்றி வைத்துக் கொண்டுவிட்ட உனக்கே அதற்குத் தமிழ் என்னவென்று தெரியாத போது, எனக்கு எங்கே தெரியப் போகிறது?” என்றாள் அருணா.

     அப்போது, “உன்னை யாரோ ‘போ’னில் கூப்பிடுகிறார்களாம்!” என்று சொல்லிக் கொண்டே, உள்ளேயிருந்து வந்தாள் உமா.

     “என்னையா?” என்று கேட்டுக் கொண்டே அருணா சென்றதும், “அது யாரடி, அது? அவளை எப்போது பார்த்தாலும் போனில் கூப்பிட்டுக் கொண்டிருப்பது?” என்று கேட்டாள் பொற்கொடி, தன் குரலைத் தாழ்த்தி.

     “அவன் தான், ‘சுந்தரி, சுந்தரி’ என்று சொல்லி, இங்கே உள்ளவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறானே, அந்த சுந்தர்!” என்றாள் உமா, தானும் தன் குரலைத் தாழ்த்தி.

     “அந்த ரகசியம் உனக்கு எப்படித் தெரிந்தது?”

     “எனக்குத் தெரியாத ரகசியமா, இங்கே? போடி!” என்றாள் அவள், பெருமிதத்துடன்.

     “ம், சரியான சமயத்தில்தான் அவன் அவளைக் கூப்பிட்டிருக்கிறான்; இனி போர் ஜாலியாகிவிடும், அவளுக்கு!” என்றாள், இவள் பெருமூச்சுடன்.

     அந்தச் சமயத்தில் அருணா திரும்பி வர, “என்னடி, சுந்தரிதானே?” என்றாள் உமா, ஏதும் அறியாதவள் போல.

     “ஆமாம், அவளைப் பார்க்க இன்று யாரோ ஒரு மாப்பிள்ளை பம்பாயிலிருந்து வருகிறானாம்; அவனை நீயும் வந்து பார் என்கிறாள் அவள், நான் எங்கே போவது? எனக்கோ இங்கேயே படுத்துக் கொண்டு விட்டால் தேவலை என்று தோன்றுகிறது!” என்றாள் அவள், அப்படியே துவண்டு தொப்பென்று கீழே விழுந்து விடுபவளைப் போல.

     “சீச்சீ, அப்படியெல்லாம் செய்து விடாதேயடி! போ, போ! அவள் உனக்காக அங்கே காத்துக் கொண்டிருக்கப் போகிறாள்? போடி, போ!” என்றாள் பொற்கொடி.

     “சரி, நான் வருகிறேன்!” என்று அருணா புறப்பட்டாள். அவள் தலை மறைந்ததுதான் தாமதம், அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை அடக்க முடியாமல், அவர்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்!

     அருணாவைப் பற்றிய அந்த வம்பில் தான் அவர்களுக்கு என்ன ஈடுபாடு, என்ன ஈடுபாடு!

     உமா சொன்னது உண்மைதான்; பரீட்சை எப்போது முடியும், எப்போது முடியும் என்று காத்துக் கொண்டிருந்த சுந்தர் தான் அன்று மாலை ‘மியூஸிய’த்துக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அருணாவைப் ‘போ’னில் அழைத்திருந்தான். அவனுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டு அங்கே சென்ற அருணாவைக் கண்டதும், “உனக்கு நான் தொந்தரவு கொடுத்து விட்டேனோ?” என்றான் சுந்தர், படுபவ்வியமாக.

     “அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கும் கொஞ்ச நேரம் உங்களுடன் இருந்து பொழுது போக்கினால் தேவலை என்று தோன்றிற்று; அந்தச் சமயம் பார்த்துத்தான் நீங்களும் ‘போன்’ செய்திருந்தீர்கள்!” என்ற அருணா, “ஆமாம், போயும் போயும் என்னை ‘மியூஸிய’த்தில் வைத்துத்தானா பார்க்கத் தோன்றிற்று, உங்களுக்கு?” என்று கேட்டாள் சிரித்துக் கொண்டே.

     “வேறு எப்படித் தோன்றும் எனக்கு? அத்தகைய அபூர்வ பொருளாய்த்தானே இருக்கிறாய், நீ? - அடேயப்பா, உன்னைப் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன? அங்கே உனக்கு பட்டப் பரீட்சையென்றால், இங்கே எனக்கு நீ காதல் பரீட்சையல்லவா வைத்து விடுகிறாய்?”

     “அதில் பரிபூரண வெற்றியடைந்த உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! எங்கே நீங்கள் பொறுமை இழந்து கலாசாலை வாசலில் வந்து நின்று விடுவீர்களோ என்று நான் ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டிருந்தேன்!”

     “அந்தக் கவலை உனக்கு வேண்டாம்; அப்படிப்பட்ட தர்மசங்கடத்துக்கு என்றுமே உன்னை நான் உள்ளாக்க மாட்டேன்!”

     “யார் கண்டது? தனக்கிருந்த அத்தனை தடைகளையும் மீறி ஜூலியட்டைத் தேடிக் கொண்டு ரோமியோ வந்து விட்டதைப் போல நீங்களும் வந்துவிட்டால்?”

     “காதலில் தோல்வியடைந்த அவர்களை ஏன் நீ இப்போது நினைக்கிறாய்? - இப்படி உட்கார்!” என்று அங்கிருந்த ஒரு மரத்தின் அடியைக் காட்டினான் சுந்தர்.

     “அவர்கள்தானே மக்கள் மனத்தில் நிற்கிறார்கள்?” என்று சொல்லிக் கொண்டே, அவன் காட்டிய இடத்தில் உட்கார்ந்தாள் அருணா.

     “உண்மைதான்; காதலைப் பொறுத்தவரை வெற்றியடைந்தவர்கள் ஏனோ மக்கள் மனத்தை விட்டு மறைந்து விடுகிறார்கள்!” என்று சொல்லிக் கொண்டே, சுந்தரும் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, அதுவரை தன் தோளில் தொங்கியவாறு பாடிக் கொண்டிருந்த ‘டிரான்சிஸ்டர் ரேடியோ’வை அடுத்து அவளுக்குப் பக்கத்தில் வைத்தான்.

     “இதை எப்போது வாங்கினீர்கள்?” என்று கேட்டாள் அவள்.

     “வாங்குவதாவது! அப்பா இதை எங்கிருந்தோ கடத்திக் கொண்டு வந்தார்; நான் அவரிடமிருந்து கடத்திக் கொண்டு வந்துவிட்டேன்!”

     “உங்கள் வியாபாரமே கடத்தல் வியாபாரம் தான் போலிருக்கிறது?”

     “அதற்காக உன்னையும் நான் கடத்தி விடுவேன் என்று நீ பயந்து விடாதே!”

     அவள் சிரித்தாள்; அவனும் சிரித்தான்.

     அவ்வளவுதான்; அதுவரை அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த யாரோ இருவர், அவசரம் அவசரமாக எழுந்து வந்து அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார்கள்!

     “என்ன அவசரமோ?” என்றாள் அருணா, சுந்தரை ஒரு கண்ணாலும், அவர்களை இன்னொரு கண்ணாலும் பார்த்துக் கொண்டே.

     “ஒன்றுமில்லை; ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்தாற் போல் எங்கேயாவது இருந்துவிட்டால் போதும், அதுவே ‘மியூஸிய’மாகி விடுகிறது அவர்களுக்கு!” என்றான் சுந்தர்.

     “நான் அப்படி நினைக்கவில்லை; ஒரு வேளை இந்த ரேடியோ அதற்குக் காரணமாயிருக்கலாம்!” என்றாள் அவள்.

     “உனக்கு ஏன் சந்தேகம்? இதோ நிறுத்திப் பார்த்தால் போச்சு!” என்று ரேடியோவை நிறுத்தினான் அவன்.

     ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒன்பது நிமிடங்களுக்கு மேல் ஆயிற்று; அவர்கள் இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை.

     “சரி, நாம் எழுந்து போய்விடுவோமா?” என்று எழுந்தாள் அவள்.

     “அதுதான் தவறு; ஓடுபவர்களைக் கண்டால் அவர்கள் துரத்துவதை விடமாட்டார்கள் - நீ இங்கேயே உட்கார்!” என்று அவன் அவளை உட்கார வைத்துவிட்டு, மீண்டும் ரேடியோவைத் திருப்பி வைத்தான்.

     “உங்களுக்குக் கூட இலங்கை வானொலி நிலையத்தாரைத் தான் ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது?” என்றாள் அவள்.

     “ஆம்; அதற்காக என்னுடைய தரத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடாதே, நீ!” என்றான் அவன்.

     அருணா சிரித்தாள்; சுந்தரும் சிரித்துக் கொண்டே, “இப்போது நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டுமே?” என்றான்.

     “என்ன உதவி?” என்று கேட்டாள் அவள்.

     “ஒன்றுமில்லை; கல்கத்தாவிலிருக்கும் என் நண்பன் ஒருவன் எனக்காக ரசகுல்லா வாங்கி அனுப்பியிருக்கிறான் - அதைத் தின்பதில் தான் நீயும் எனக்கு உதவ வேண்டும் என்கிறேன், நான்!” என்று சொல்லிக் கொண்டே, கையோடு கொண்டு வந்திருந்த டப்பியைத் திறந்து அவளுக்கு எதிர்த்தாற் போல் வைத்தான் அவன்.

     அதில் ஒன்றை எடுத்துச் சுவைத்துக் கொண்டே, “இந்த ரசகுல்லாவுக்காகக் கல்கத்தாவுக்கே குடியேறி விடலாம் போலிருக்கிறதே?” என்றாள் அவள்.

     “அதற்கென்ன? அப்படியே போய்விட்டால் போச்சு, கல்யாணமானதும்!” என்றான் அவன்.

     “அவ்வளவு சுலபமாக நடந்து விடுமா, நம் கல்யாணம்?”

     “ஏன், நடக்காதா?”

     “எப்படி நடக்கும்? ‘பெரியோர்கள் பார்த்து நிச்சயித்த கல்யாண’மாயிருந்தால் சுலபமாக நடக்கும்; இதுதான் ‘சிறியோர்கள் பார்த்து நிச்சயித்த கல்யாண’மாயிருக்கிறதே?”

     “அந்தக் கல்யாணத்துக்கு நீ ‘வில்லி’யாயிருந்தால், இந்தக் கல்யாணத்துக்கு உன் அப்பா ‘வில்லனா’யிருப்பார் போலிருக்கிறது?” என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

     “அப்படித்தான் நினைக்கிறேன் நான்!” என்றாள் அவள், ஆழ்ந்த சிந்தனையுடன்.

     “அதனாலென்ன, பதினெட்டாவது வயதை நீ தாண்டிவிட்டால் போதும் - நம்முடைய கல்யாணத்தை நாமே நடத்திக் கொண்டு விடலாம்!” என்றான் அவன், தான் ஒரு சட்டக் கல்லூரி மாணவன் என்பதைச் சற்றே அவளுக்கு நினைவுபடுத்தி!

     “அந்தத் தைரியம் உங்களுக்கு இருந்தால் எனக்கும் இருக்கும்!” என்றாள் அவள், தரையைக் கீறிக்கொண்டே.

     “அப்புறம் என்ன? நாம் ரோமியோ - ஜூலியட்டாக வேண்டாம்; லைலா மஜ்னுவாக வேண்டாம்; அம்பிகாபதி அமராவதியாக வேண்டாம்; பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தம்பதிகள் ஆகிவிடலாம்!” என்றான் அவன், அவள் கீறிய கோட்டை அழித்துக் கொண்டே!