41. சுந்தரின் கடிதம்

     “அருணா இறந்திருப்பாள் என்று எனக்குத் தோன்றவில்லை; தனக்குப் பழக்கமான யாரோ ஒருவனுடன் அவள் ஓடித்தான் போயிருக்க வேண்டும்!”

     ஆபத்சகாயம் இப்படிச் சொல்லித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள நினைத்தாலும், அதற்குக் காரணம் அவர் தான் என்பதை அவருடைய மனம் மட்டும் அடிக்கடி அவருக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தது. அதன் காரணமாக அவள் மேல் அவர் கொண்ட ஆத்திரம் வெகு சீக்கிரத்திலேயே அனுதாபமாக மாறிற்று. அந்த அனுதாபத்துடன் அவள் தனக்கு அனுப்பி வைத்த நகைகளையும், எழுதி வைத்தக் கடிதத்தையும் எழுபத்தோராவது தடவையாக அவர் ஏறெடுத்துப் பார்த்தபோது, அவரையும் அறியாமல் அவருடையக் கண்கள் குளமாயின. அத்துடன், முதல் நாள் மாலை தன் மகனே தன்னைக் கொல்ல நினைக்கிறான் என்று சுகானந்தம் சொன்னது வேறு அவருடைய நினைவுக்கு வந்து, அவரை என்னவெல்லாமோ எண்ண வைத்தது.

     அங்கே பணத்துக்காக மகன் தந்தையைக் கொல்ல நினைக்கிறான்; இங்கே பணத்துக்காகத் தந்தை மகளைக் கொன்று விட்டார்!

     இப்படி நினைத்ததும் அவர் தன்னைத்தானே கண்டு வெட்கியதோடு நிற்கவில்லை; சிரிக்கவும் செய்தார்!

     கண்ணீருடன் சிரிப்பும் கலந்த அந்த வேளையிலே, “சார், சார்!” என்ற குரல் வாசலிலிருந்து வந்தது.

     “யார் அது?” என்று கேட்டபடி, மாடி வராந்தாவில் இருந்தவாறே வாசலை எட்டிப் பார்த்தார் அவர்; அபேஸ் அய்யாசாமி வழக்கம்போல் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே அவருடைய அழைப்பை எதிர்பார்த்து அங்கே நின்று கொண்டிருந்தான்!

     ஆனால் அவரோ இன்று அவனை வழக்கம் போல் வரவேற்கவில்லை; அதற்கு பதிலாக அவனைப் பார்த்ததும் பார்க்காதவர் போல் திரும்பி, ‘பகலில் பெரிய மனிதர்களுக்குத் துணை; இரவில் திருடர்களுக்குத் துணை! ஏண்டா ஆபத்சகாயம், பாழும் பணத்துக்காக இப்படி ஒரு வேடம் நீ போடத்தான் வேண்டுமா? பதவி வகித்த காலத்தில் நீ பெற்ற அனுபவம் அதற்குத்தான் பயன்பட வேண்டுமா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு, ‘வேண்டாம்; அந்தப் பாவத்தை இனி நீ செய்ய வேண்டாம்!’ என்று தனக்குத் தானே பதிலும் சொல்லிக் கொண்டார்.

     அப்போது, “யாரப்பா, அது?” என்று கேட்டுக் கொண்டே மோகன் உள்ளே நுழைய, “நான் தான் அபேஸ் அய்யாசாமிங்க; அப்பாவைப் பார்க்கணுங்க!” என்றான் அவன், வழக்கம்போல்.

     “அதைச் சொல்லிக் கொண்டு வாசலிலேயே நிற்பானேன்? நீங்கள் தான் இந்த வீட்டுக் ‘கௌரவ விருந்தின’ராச்சே, நேராக மேலே போகலாமே!” என்றான் அவன், எரிச்சலுடன்.

     அவ்வளவுதான்; “அனுப்பாதே, அவனை மேலே அனுப்பாதே!” என்று அங்கிருந்தபடியே கத்தினார், ஆபத்சகாயம்.

     மோகனுக்கு ஒன்றும் புரியவில்லை; ‘கௌரவ விருந்தினர்களின் காப்பாளரா இப்படிச் சொல்கிறார்!’ என்ற வியப்புடன் அவன் அவரை அண்ணாந்துப் பார்த்தான்.

     “போகச் சொல்; அவனை உடனே அங்கிருந்துப் போகச் சொல்!” என்றார் அவர், மீண்டும்.

     இப்போதுதான் அபேஸ் அய்யாசாமியும் ஒன்றும் புரியாமல், “என்ன, என்னையாப் போகச் சொல்கிறார்!” என்றான் மோகனிடம்.

     “ஆமாம், உன்னைத்தான்!” என்றான் மோகன், அதுதான் சமயமென்று அவன் முகத்தில் அடித்தாற்போல் கதவைச் சாத்தி.

     அப்பாடா! நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தான் மோகன்; இல்லாவிட்டால் அவனை விரட்டுவது அவ்வளவு எளிதாயிருந்திருக்காது தனக்கு. இப்போது மட்டுமென்ன, அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லையே தன்னால்?

     இப்படி ஒரு பெருமூச்சுடன் அவர் கீழே இறங்கி வந்து, “ஏண்டா மோகன், இப்போது நீ கடற்கரையிலிருந்துதானே வருகிறாய்?” என்றார் பரிவும் பாசமும் ஒன்றையொன்று முந்த.

     “ஆமாம், ஏன், என்ன வேண்டும் உங்களுக்கு?” என்றான் அவன், அப்போதும் அவரைப் புரிந்து கொள்ளாதவன் போல.

     “ஒன்றுமில்லை; அருணாவைப் பற்றி ஏதாவது...”

     அவர் முடிக்கவில்லை; அதற்குள் அவன், “தெரியவில்லை!” என்று ஒரு கைக்கு இரு கையாக விரித்துவிட்டு நழுவினான்.

     “சரி, நான் போய்ப் பார்க்கிறேன்!” என்று அவன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவர் கிளம்பினார்.

     அது என்னவோ போலிருந்தது அவனுக்கு; நின்று, “இந்த இருட்டிலா?” என்றான், அப்போதும் உண்மையை அவரிடம் சொல்லாமல்.

     “வெளியே இருட்டாயிருந்தால் என்ன, உள்ளேதான் இப்போது வெளிச்சம் அடிக்க ஆரம்பித்து விட்டதே!” என்று சொல்லிக் கொண்டே அவர் நடந்தார்.

     அதற்குமேல் அவன் அவரைத் தடுக்கவில்லை; ‘அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான்!’ என்று தன் அம்மாவைத் தேடினான், அந்தரங்கமாக விஷயத்தைச் சொல்ல. அவள் கிடைக்கவில்லை!

     எங்கே போயிருப்பாள்? இந்தக் கேள்வியுடன் அவன் அந்த வீட்டை ஒரு முறைக்கு இரு முறையாக வலம் வந்து கொண்டிருந்தபோது, வாசலில் வாடகைக் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது; திரும்பிப் பார்த்தான் - அன்னபூரணியம்மாள் ஆனந்தப் பரவசத்துடன் அதிலிருந்து இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தாள்!

     “எங்கேம்மா போய் வருகிறாய், நீ?” என்றான் மோகன் வியப்புடன்.

     “ஏன், அருணாவின் வீட்டுக்குத்தான்!” என்றாள் அவள்.

     “அருணாவின் வீட்டுக்கா! அது எங்கே இருக்கிறது?” என்றான் அவன் மேலும் வியப்புடன்.

     “போடா, போ! எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? எல்லாம் தெரியும்; கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீ அந்தக் குட்டி பாமாவுடன் வந்து அவளைப் பார்த்தாயே, அது கூட எனக்குத் தெரியும்!”

     “அட கடவுளே! அப்போது நீ எங்கே இருந்தாய்? எப்படி அங்கே வந்தாய்?”

     “எல்லாம் பார்வதியின் கிருபை!”

     “பார்வதியின் கிருபையா? அது யார், அந்தப் பார்வதி?”

     “அப்படிக் கேள், சொல்கிறேன்; அவள் அங்கே எங்கள் ஊர்க்காரி; இங்கே அருணாவின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரி!”

     “இது என்ன வம்பு! ‘அருணாவின் வீடு, அருணாவின் வீடு’ என்று அடிக்கொரு தரம் சொல்கிறாயே, அது எங்கள் ஆபீசரின் வீடு, அம்மா!”

     “அதுவும் தெரியும், எனக்கு! அதனால் என்ன, நாளைக்கு அவர்தானே அவள் கழுத்தில் மாலையிடப் போகிறார்?”

     “அதுவும் பார்வதியின் கிருபையால்தான் நடக்கப் போகிறதாக்கும்?”

     “ஆமாம்; இத்தனைக்கும் முதல் நால் இரவு வரை அருணா என்னுடைய மகள் என்பதே பார்வதிக்குத் தெரியாதாம். மறுநாள் காலை அவளைப் பற்றி அவளிடமே விசாரித்த போதுதான், அவள் என்னுடைய மகள் என்பது பார்வதிக்குத் தெரிந்ததாம். அதற்குப் பிறகு அவள் அருணாவிடமே அதைப் பற்றி பேசியிருக்கிறாள். அப்படிப் பேசும்போது அவளுடைய மனமும் அதைத்தான் விரும்புகிறதென்று பார்வதிக்குத் தெரிந்திருக்கிறது. உடனே இங்கே ஓடி வந்தாள் அது சம்பந்தமாக என்னுடன் பேச. நான் தான் அதைப் பற்றி இங்கே பேச வேண்டாமென்று அவளை அங்கே அழைத்துக் கொண்டு போனேன்!”

     “அப்படிச் சொல்லு; இல்லாவிட்டால் அவள் இருக்கும் இடம் உனக்கு எப்படித் தெரிந்திருக்கப் போகிறது? ஆமாம், உன்னைப் பார்த்ததைப் பற்றி அவள் என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லையே?”

     “நான் தான் சொல்ல வேண்டாம் என்றேன், நீ அவசரப்பட்டு அப்பாவிடம் சொல்லிவிடப் போகிறாய் என்று!”

     “உனக்குத் தெரியாதா, அவர் இப்போது அடியோடு மாறிவிட்டார்!”

     “அதை நீ நம்பாதே; புலி பாய்வதற்குக் கூடப் பதுங்கும்!” என்றாள் அவள்.

     “அதைத்தான் நானும் சொல்ல வேண்டுமென்று இருந்தேன்!” என்றான் அவன்.

     மறுநாள் காலை ஆபீசுக்கு வந்ததும் வராததுமாக இருக்கும்போதே மணியை அழைத்து, “இன்று மாலை நீங்கள் என்னுடன் வரவேண்டுமென்ற அவசியமில்லை; வேறு ஏதாவது வேலை இருந்தால் பார்க்கலாம். அதைச் சொல்லத்தான் உங்களை அழைத்தேன்; நீங்கள் போகலாம்!” என்றார் பரந்தாமன்.

     “மகிழ்ச்சி! உங்களால் காப்பாற்றப்பட்டிருக்கும் அருணா மோகனின் தங்கை மட்டுமல்ல; என்னுடையத் தங்கையும் கூட!” என்றான் மணி.

     “அது எப்படித் தெரியும், உங்களுக்கு?” என்றார் அவர்.

     “மோகன் சொன்னான். அப்போதே நானும் நினைத்தேன், அதற்காகத்தான் நேற்று நீங்கள் என்னை அழைத்திருப்பீர்களென்று” என்றான் அவன்.

     “ஓ, அப்படியா? அவள் இப்போதும் எங்கள் வீட்டில்தான் இருக்கிறாள்; நீங்கள் விரும்பினால் அவளை எப்போது வேண்டுமானாலும் அங்கே வந்து பார்க்கலாம்!” என்றார் அவர்.

     “வருகிறேன், அவசியம் என்று தோன்றும்போது!” என்றான் அவன்.

     “சரி, வாருங்கள்!” என்றார் அவர்.

     அவன் அறையை விட்டு வெளியேறியதும் பிச்சையாவை அழைத்து, “மோகனைக் கூப்பிடு!” என்றார் அவர்.

     அடுத்த நிமிடம் மோகன் வந்து அவருக்கு முன்னால் நின்றான். “உங்களிடம் நான் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டியிருக்கிறது; இன்று மாலை கடற்கரையிலுள்ள காந்தி சிலைக்குக் கீழே என்னை வந்து பார்க்க முடியுமா உங்களால்?” என்றார் பரந்தாமன்.

     “அதற்கென்ன, அவசியம் வந்து பார்க்கிறேன்!” என்றான் அவன், அதுவும் அருணாவின் கல்யாணத்தைப் பற்றிய பேச்சாய்த்தான் இருக்குமென்று எண்ணி!

     ஆனால் அன்று மாலை அவன் அவரை அவர் சொன்ன இடத்தில் சந்தித்த போது...

     அவர் அவனிடம் ஒன்றும் பேசவில்லை; அதற்குப் பதிலாக தன் பெயருக்கு வந்திருந்த பிரித்த கவர் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டிவிட்டுத் தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டார்.

     அவன் அதற்குள் இருந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தபோது...

     அவன் தலையில் இடி விழவில்லை; இந்த உலகமே கீழே இறங்கி, அவனைக் கீழே கீழே இழுத்துக் கொண்டே செல்வது போலிருந்தது.

     காரணம் வேறொன்றுமில்லை; அவன் கையிலிருந்த கடிதம் சுந்தரின் கடிதமாயிருந்ததுதான்!

     “எனது முன்னாள் காதலியான அருணாவுக்கும், இந்நாள் காதலரான திரு. பரந்தாமனார்க்கும்,

     என் இதயப்பூர்வமான அனுதாபங்கள்!

     கடலால் கூடக் கைவிடப்பட்டுவிட்ட அருணாவுக்கும் உங்களுக்கும் கல்யாணம் என்று அறிய மகிழ்ச்சி. அந்தக் கல்யாணத்துக்கு இத்துடன் இருக்கும் கடிதங்கள் எந்த வகையிலாவது உதவுமா என்று பாருங்கள்.

இங்ஙனம்,
சுந்தர்.”

     இதைப் படித்ததும் அத்துடன் இருந்த கடிதங்களையும் புரட்டிப் பார்த்தான் அவன் - அத்தனையும் காதல் கடிதங்கள்; அருணா, சுந்தருக்கு எழுதிய காதல் கடிதங்கள்! - அடிப்பாவி, இவ்வளவு மோசமானவளா நீ?

     அவன் வெகுண்டான்! - அவனுடைய முகபாவத்திலிருந்தே அதை ஒருவாறு புரிந்து கொண்ட பரந்தாமன் சொன்னார், அழுத்தந் திருத்தமாகச் சொன்னார்:

     “காதலிப்பது பெண்களின் குற்றமல்ல, இயற்கையின் குற்றம். அந்தக் குற்றத்துக்கு அவர்களை மட்டும் ஆளாக்கிவிட்டு, ஆண்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. அதைச் சமூகம் அனுமதித்தாலும் நான் அனுமதிக்க முடியாது!”

     “அப்படியானால்...”

     அவன் முடிக்கவில்லை; அதற்குள் அவர் தொடர்ந்தார்:

     “இந்தக் கடிதங்கள் ஒரு விதத்தில் உங்களுக்கு நன்மையே செய்திருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இவற்றைப் பார்த்த பிறகு தான் நான் அருணாவை உடனே கல்யாணம் செய்து கொண்டு விடுவது என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன்!”

     கொஞ்சங்கூடச் சலனம் இல்லாமல் அவர் இதைச் சொன்னதும், “உண்மையாகவா?” என்றான் அவன், வியப்புடன்.

     “உண்மைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும் போது கூட உண்மைப் பேசாமல் இருக்க முடியுமா?” என்றார் அவர், காந்தியின் சிலையைச் சுட்டிக் காட்டி.

     அதற்குமேல் அவன் அவரை ஒன்றும் கேட்காமல் காந்தியின் சிலையைத் தன் முகத்தில் சாந்தி நிலவப் பார்த்தான்; “வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்கு மறுபடியும் வாழ்வளிக்க வேண்டும்; அதற்உ வாலிபர்கள் தயங்காமல் முன் வர வேண்டும்” என்று அன்றொரு நாள் அவர் சொன்னது அவனுடைய நினைவுக்கு அப்போது வந்தது!