39. இந்தப் பெண்கள்!

     சாட்சாத் விநாயக்ப் பெருமான் இதுவரை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம், எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவருக்குத் தன் தாயாரைப் போல் தோன்றுவதுதான் என்று சிலர் சொல்கிறார்கள்.

     பரந்தாமனுக்கு அப்படியொன்றும் தோன்றவில்லை யென்றாலும், அவருடைய கல்யாணத்துக்கும் அவருடைய தாயார்தான் தடையாயிருந்து வந்தாள்!

     ‘தாய்க்குப் பின் தாரம்’ என்பது உலக வழக்காயிருந்தாலும், ‘தாரத்துக்குப் பின் தாய்!’ என்பதுதானே ‘உலக வாழ்க்கை’யாயிருந்து வருகிறது? அந்த உலக வாழ்க்கைக்கு அஞ்சித்தான் அவர் தன் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். அதாவது தன் தாயின்மேல் தான் கொண்டுள்ள அன்புக்கு எந்த விதமான பங்கமும் நேராமல் இருக்க வேண்டுமானால், அவர் உயிரோடிருக்கும் வரை தான் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும். இதுவே அவருடைய முடிவாயிருந்தது. அந்த முடிவை மாற்ற இன்று வரை அவருடைய தாயாராலும் முடியவில்லை; தங்கையாலும் முடியவில்லை.

     இந்த நிலையில்தான் அவர் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவருடைய உள்ளத்திலே இடம் பிடிக்க முயன்றாள் அருணா. அவள் அப்போதிருந்த நிலையில் அவளைப் பொறுத்தவரை அது தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. ஏனெனில், தெரிந்தோ தெரியாமலோ அவள் அவரால் காப்பாற்றப்பட்டு விட்டாள். இனி தன் தந்தையின் எதிர்காலக் கனவுகளிலிருந்தும், எல்லையற்ற ஆசைகளிலிருந்தும் அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அவளுக்குத் தெரிந்தவரை இரண்டே வழிகள் தான் இருந்தன. ஒன்று, அவள் தற்கொலை முயற்சியை மறுபடியும் மேற்கொள்ள வேண்டும்; அல்லது அவள் தன் அப்பாவுக்குத் தெரியாமல் யாரையாவது மணந்து, அதற்குப் பின்னால் அவருடைய ஆசீர்வாதத்தைக் கோரிப் பெறவேண்டும்.

     இந்தத் தீர்மானத்துடன் தான் முதல் நாள் காலை அவள் தன் வீட்டை விட்டுக் கிளம்பினாள். ஆனால், அப்பாவுக்குத் தெரியாமல் திருமணம் என்பது நினைப்பதற்குத்தான் சுலபமாயிருந்ததே தவிர, நடப்பதற்கு அது அவ்வளவு சுலபமாயிருக்குமென்று தோன்றவில்லை அவளுக்கு. அதிலும், சுந்தரைப் போன்ற ‘வேட்டை நாய்கள்’ மலிந்து கிடக்கும் இந்தக் காலத்தில் காதலாவது, அப்பாவுக்குத் தெரியாமல் கல்யாணமாவது? அந்தக் கானல் நீரைத் தேடி ஓடுவதை விடக் கடல் நீரைத் தேடி ஓடுவதே மேல் என்று நினைத்தாள் அவள். அந்த நினைப்பைச் செயலாக்க அவள் ஓடவும் ஓடினாள்; விழவும் விழுந்தாள்! ஆனால் அதுவும் அவளை வேண்டாமென்று ஒதுக்கிவிட்ட பிறகு? ஒதுக்கியதோடு நில்லாமல், ‘இந்த உலகத்தில் சுந்தரைப் போன்றவர்கள் மட்டும் இல்லை; பரந்தாமனைப் போன்றவர்களும் இருக்கிறார்கள்’ என்று அவரைக் காட்டாமல் காட்டி விட்டப் பிறகு?...

     சாவு கசந்து, வாழ்வு இனித்தது அவளுக்கு; ஆனால் அவருக்கு? அதைத்தான் தெரிந்து கொள்ள முடியவில்லை அவளால்!

     அதை எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் தெரிந்துக் கொள்ள முடியும்? நாளடைவில் வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம். அதற்கு வேண்டிய பொறுமை அவளுக்கு என்னமோ இருக்கத்தான் இருந்தது. ஆனால் அவள் அப்பாவுக்கு?

     இருக்குமா? இருக்க முடியுமா? செத்தாலாவது அவர் தன் மகளோடு தன்னுடைய ஆசைகளையும் சேர்த்து எரித்து விடுவார்! உயிராயிருந்தால்?...

     வம்புக்கு நிற்காமல் விடுவாரா? அதுதான் யோசனையாயிருந்தது அவளுக்கு. அதற்காகவே அவள் ஓரளவு அவசர உணர்ச்சிக் கூடக் காட்டினாள், அந்த விஷயத்தில்! அவரும் அதைப் புரிந்து கொள்ளக் கூடியவர்தான். ஆனால் தன்னைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் அவரால் அதை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

     தன் உணர்வுப் பெற்ற பிறகாவது அவர் தன்னைப் பற்றி ஏதாவது கேட்பார், அதற்குப் பிறகுத் தான் நடந்தவற்றைச் சொல்லி, அவருடைய பரிபூரணப் பாதுகாப்பைக் கோரலாம் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவரோ பொழுது விடிந்த பிறகு கூட அவளுடைய உடல் நலனில் தான் கவனம் செலுத்தினாரே தவிர, உள நலனில் கவனம் செலுத்தவில்லை!

     முதல் நாள் இரவு அவளாகவே தன் உள்ளத்தை அவரிடம் ஓரளவு திறந்து காட்டிய போது கூட, அவருடைய உதடுகள் தான் அசைந்தனவே தவிர, உள்ளம் அசையவில்லை!

     இதனாலெல்லாம் அவர் மேல் அவள் கொண்ட மதிப்பு உயர்ந்தாலும், அந்த மதிப்புக்கு முன்னால் தன்மானம் இறங்குவது போல் தோன்றிற்று அவளுக்கு. ஆகவே, அன்று மாலை வரையிலாவது அவரைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த போது, “இந்த உலகத்தில் சாகத் தூண்டுபவர்கள் மட்டும் இல்லை, வாழத் தூண்டுபவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை இப்போதுதான் தெரிந்தது எனக்கு என்று சொன்னாயே, அந்த உண்மை யாரால் தெரிந்தது உனக்கு?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் பரந்தாமன்.

     அதுதான் சமயமென்று, “உங்களால்தான்!” என்றாள் அருணா, கொஞ்சம் கூடத் தயங்காமல்.

     “அப்படியானால் உன்னை நம்பி நான் உன்னை இங்கேயே விட்டுவிட்டு ஆபீசுக்குப் போகலாமா?” என்றார் அவர்.

     “தாராளமாக!” என்றாள் அவள்.

     “மிக்க மகிழ்ச்சி; நான் வருகிறேன். சாயந்திரம் நீ விரும்பினால் உன்னைக் கொண்டு போய் உன்னுடைய வீட்டில் விட்டு விடுகிறேன்!” என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.

     ‘அந்தக் கடைசி வார்த்தையைச் சொல்லாமல் போகக் கூடாதோ?’ என்று நினைத்தாள் அவள்!

     இந்தப் பெண்கள்! - நினைத்தவுடன் தங்கள் உயிரை மட்டுமல்ல; உள்ளத்தைக் கூட எவ்வளவு எளிதில் இழக்கத் தயாராகி விடுகிறார்கள்!

     ‘இந்த அருணா! - இவள் என்னைச் சந்தித்து இன்னும் இருபத்து நாலு மணி நேரம் கூடச் சரியாக ஆகவில்லை; அதற்குள் இவள் என்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்!

     அந்தக் காதலுக்கு இவள் படித்த கதைகள் மட்டுமா துணையாக நிற்கின்றன, பார்த்த சினிமாக்களும் துணையாக நிற்கின்றன! இல்லாவிட்டால் நேற்றிரவு அவள் பேசிய அந்த வசனம், அவள் செய்த அந்தச் சேட்டை இரண்டுமே அவ்வளவு செயற்கையாகவா இருக்கும்?

     என்னமோ, போகட்டும்! - காட்டில் வளர்ந்த கொடியாயிருந்தாலும் கிடைத்தக் கொம்பைப் பற்றிப் படரத் துடிக்கிறது என்று நினைக்கலாம்; இந்த வீட்டில் வளர்ந்த கொடி ஏன் இப்படித் துடிக்கிறது?

     ஏற்கெனவே காதலில் ஏற்பட்ட தோல்வியாயிருக்குமோ? அப்படியிருந்தால், சாகத் துடிப்பது வேண்டுமானால் நியாயமாயிருக்கலாம்; வாழத் துடிப்பது எப்படி நியாயமாயிருக்க முடியும்?

     ஒன்று மட்டும் சர்வ நிச்சயமாகத் தெரிகிறது - அதாவது, இவள் தன் வீட்டுக்கு இன்னொரு முறை உயிரோடு போக விரும்பவில்லை!

     ஏன், என்ன காரணம்? மோகனுக்குத் தெரியலாம்; ஆனால் அதை அவரிடம் எப்படிக் கேட்பது?

     கேட்காவிட்டாலும் விஷயத்தை அவரிடம் சொல்லிவிட வேண்டியது தன் கடமை. அதற்கு மேல் அவர் தன் தங்கையை எந்த வழியில் அழைத்துச் செல்கிறாரோ, அந்த வழியில் அழைத்துச் செல்லட்டும்!

     இந்தத் தீர்மானத்துடன் தான் அன்று அவர் ஆபீசுக்குள் நுழைந்தார்; நுழைந்ததும் மோகன் வழக்கம்போல் உட்காரும் இடத்தைப் பார்த்தார் - காலியாயிருந்தது; ‘இது என்ன முட்டாள்தனம்? இன்று அவர் எப்படி வேலைக்கு வர முடியும்?’ என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு தன் அறைக்குள் நுழைந்தார்.

     அவர் தன் ஆசனத்தில் அமர்ந்ததும், மின் விசிறியைச் சுழல விட்டுவிட்டுப் போவதற்காகப் பிச்சையா வந்தான் உள்ளே. அவனிடம், “மணி சார் வந்துவிட்டாரா?” என்று விசாரித்தார் அவர்.

     “வந்து விட்டார்; கூப்பிடட்டுமா?” என்றான் அவன்.

     “இப்பொழுது வேண்டாம்; அப்புறம் சொல்கிறேன்!” என்றார் அவர்; அவன் போய்விட்டான்.

     அதற்குப் பிறகு அவர் யோசித்தார், யோசித்தார், அப்படி யோசித்தார். அந்த யோசனையின் முடிவில்தான் அவனை அழைத்து, “இன்று மாலை என்னுடன் வர முடியுமா?” என்று கேட்டார்; அவனோ பாமாவை அழைத்துக் கொண்டு போக வேண்டுமே என்பதற்காக மறுநாள் வருவதாகச் சொல்லி விட்டான்.

     ‘அதற்கு மேல் என்ன செய்வது?’ என்ற யோசனையுடன் அன்று மாலை அவர் கடற்கரைக்குச் சென்ற போது...

     ஆழம் காண முடியாத கடலுக்கு அருகே, ஆழம் காண முடியாத சோகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்த மோகன் அவரைக் கண்டதும் தன்னையறியாமல் எழுந்து நின்றான். அவனைத் தொடர்ந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாமாவும் எழுந்து நின்றாள்.

     “இன்னும் நீ வீட்டுக்குப் போகவில்லையா?” என்றார் அவர், அவளை நோக்கி.

     “இல்லை. இவர் இங்கே... இவர் இங்கே...”

     “அது எனக்குத் தெரியும்; அதற்காக நீ இவருடன் இருந்து என்ன செய்யப் போகிறாய், இங்கே? கல்யாணமாகியிருந்தாலும் யாரையாவது கட்டிக்கொண்டு அழலாம்; அதுவுந்தான் ஆகவில்லையே, இன்னும்?” என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

     அவருடைய சிரிப்பு என்னவோ போலிருந்தது மோகனுக்கு. ‘எல்லாம் தெரிந்த இவரா இப்படிச் சிரிக்கிறார்!’ என்று தனக்குள் நினைத்தான்.

     அதற்குள், “இவருடைய நிலைமை தெரிந்துமா நீங்கள் இப்படிச் சிரிக்கிறீர்கள்? என்னால் நம்பவே முடியவில்லையே?” என்றாள் பாமா, வியப்புடன்.

     “எப்படி நம்ப முடியும், என்னுடைய நிலைமை உங்களுக்குத் தெரிந்தால்தானே? வாருங்கள், போவோம்!” என்றார் அவர்.

     “எங்கே?” என்று கேட்டாள் அவள்.

     “என் வீட்டுக்கு!”

     “உங்கள் வீட்டுக்கா, எதற்கு?”

     “விருந்து வைக்க!”

     “நல்ல சமயம் பார்த்தீர்கள், விருந்து வைக்க! ஏனாம்?”

     “பொதுவாகக் காதல் என்றால் - ஒன்று, காதல் செத்து விடும்; அல்லது, காதலர்கள் செத்து விடுவார்கள். இரண்டுமே நடக்காமல் இன்று வரை உங்கள் காதலும் நீடித்து, நீங்களும் நீடிப்பதற்காக!” என்றார் அவர், மேலும் சிரித்துக் கொண்டே.

     மோகனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; “மன்னிக்க வேண்டும், சார்! உங்கள் விளையாட்டு வெந்த புண்ணில் வேல் கொண்டு குத்துவது போலிருக்கிறது!” என்றான் அவன், குறுக்கிட்டு.

     “குத்தாமல் என்ன செய்யும், உங்கள் அருணா என் வீட்டில் இருக்கும் போது நீங்கள் வந்து இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால்?” என்றார் அவர், அப்போதும் அமைதியாக.

     “என்ன! எங்கள் அருணா உங்கள் வீட்டில் இருக்கிறாளா!”

     வியப்பினால் தன்னை மறந்து கத்தினான் மோகன்; “ஆமாம் சார், ஆமாம்; நீங்கள் வாருங்கள், என்னுடன்!” என்று சொல்லிக் கொண்டே அவர் காரை நோக்கி நடந்தார்.

     இருவரும் அவரைத் தொடர்ந்தனர்.