29. அணையப் போகும் விளக்குகள்

     “சிறிது நேரத்துக்கெல்லாம் மேலே வந்த ஆபத்சகாயம் திடுக்கிட்டு, “என்ன மணி, என்ன உடம்புக்கு?” என்று கேட்டுக் கொண்டே அவன் தோளைப் பிடித்துக் குலுக்கினார்.

     “ஒன்றுமில்லையே!” என்று கண் விழித்த மணி, தனக்கு எதிர்த்தாற்போல் பலகாரமும் கையுமாக நின்ற அன்னபூரணியம்மாளைக் கண்டதும், “உங்களுக்குச் சேதி தெரியாதா?” என்றான், தன்னுடைய நிலைக்குத் திரும்பி.

     “தெரியுமே! மோகன் அகப்பட்டுக் கொண்டு விட்டானே, அதைத்தானே சொல்கிறாய் நீ?” என்றார் ஆபத்சகாயம் குறுக்கிட்டு.

     “ஆமாம்; அவனை நாம் அங்கிருந்து அழைத்துக் கொண்டு வரவேண்டுமே, அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கத்தான் உங்களைத் தேடி வந்தேன் நான்!” என்றான் மணி.

     “அந்தக் கவலை இனி உனக்கு வேண்டாம்! அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் நான் செய்துவிட்டேன்; இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவன் இங்கே வந்து விடுவான்!” என்றார் ஆபத்சகாயம்.

     “அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி; நான் வரட்டுமா?” என்று எழுந்தான் மணி.

     “அதற்குள் என்ன அவசரம், உட்கார் அப்பா!” என்று அவனை மறுபடியும் உட்கார வைத்துவிட்டு, தன் மனைவி அன்னபூரணியம்மாளைக் கீழேப் போகுமாறு அவனுக்குத் தெரியாமல் சாடை காட்டினார் ஆபத்சகாயம்.

     தனக்கு முன்னால் பலகாரத் தட்டை வைத்துவிட்டு அந்த அம்மாள் கீழே சென்றதும், “என்னிடம் நீங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றி! இப்போது நான் எதையும் சாப்பிடக்கூடிய நிலையில் இல்லை; வருகிறேன்!” என்று மறுபடியும் எழுந்தான் மணி.

     “வந்ததே வந்தாய்; மோகன் வந்த பிறகு அவனையும் பார்த்துவிட்டுத்தான் போயேன்!” என்றார் ஆபத்சகாயம், அவனை எப்படியாவது அங்கே சிறிது நேரம் தங்க வைக்க வேண்டுமே என்பதற்காக.

     “எனக்கும் அவனைப் பார்க்க வேண்டும்போல்தான் இருக்கிறது; ஆனால் அதற்கு முன்னால் வேறொருவரை நான் உடனே பார்க்க வேண்டியிருக்கிறது!”

     “யாரை, சர்மாஜியையா?”

     “ஆமாம்; அவரையும் உங்களுக்குத் தெரியுமா?”

     “ஏன் தெரியாது? என்னைப் போன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு அவரைப் போன்றவர்கள்தானேப்பா, பொன் முட்டை இடும் வாத்துக்கள்!”

     “அப்படியா? அந்த வாத்து இனி எந்த முட்டை இட்டாலும் அது உங்களுக்குப் பயன்படப் போவதில்லை; ஏனெனில் அதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய பதவியில் தற்போது நீங்கள் இல்லை. ஆகவே...”

     “ஆகவே என்ன?”

     “யாரோ ஒரு பேராசை பிடித்தக் குடியானவன் செய்தது போல நானும்...”

     “அதன் வயிற்றை அறுத்துப் பார்க்கப் போகிறாயா?”

     “இல்லை; அதன் கழுத்தைக் கிள்ளி எறியப் போகிறேன்!”

     “அடப் பாவி! அப்படியானால் அந்தப் பேராசை பிடித்த குடியானவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? ஒரு வித்தியாசமும் இருக்கப் போவதில்லை! - பேசாமல் நான் சொல்வதைக் கேள்; நீயும் மோகனும் எனக்குத் தெரியாமல் இதுவரை செய்து வந்த அந்தத் தொழிலுக்கு...”

     “எந்தத் தொழிலுக்கு?”

     “அதுதான் கள்ளத்தனமாக அபினைக் கடத்தும் தொழிலுக்கு!”

     “நீங்களுமா அதை நம்புகிறீர்கள்?”

     ஆபத்சகாயம் சிரித்தார்; சிரித்துவிட்டுக் கேட்டார்:

     “இன்னுமா நீங்கள் அதை எனக்குத் தெரியாமல் மறைக்கப் பார்க்கிறீர்கள்?”

     இதைக் கேட்டவுடன் மணியும் சிரித்தான்; சிரித்து விட்டுச் சொன்னான்:

     “நாய் விற்ற காசு சிலருக்குக் குரைக்காமல் இருக்கலாம்; அந்தச் சிலரில் ஒருவனாக என்னையும் தயவு செய்து நினைத்து விடாதீர்கள்!”

     “உன்னை மட்டுமா நினைக்கிறேன், என்னுடைய மகன் மோகனையும் சேர்த்துத்தானே நினைக்கிறேன்? - சும்மா சொல்லு, அபின் மட்டும்தான் கடத்துகிறீர்களா? இல்லை, தங்கம், வைரம் ஏதாவது...”

     “அடக் கடவுளே, இது என்ன சோதனை! எங்களுக்கு அதைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாதே?”

     “இப்படிச் சொன்னால் அதை நான் நம்பிவிடுவேன் என்று நினைக்கிறாயா? பயப்படாதேப்பா, பணம் பத்தும் செய்யும் என்றால், அந்தப் பணத்தைச் செய்யப் பதினொன்றும் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்! என்னிடம் ஏன் உங்களுக்குப் பயம்? உண்மையில், நீங்கள் இருவரும் அந்தத் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறீர்கள் என்று தெரிந்ததும் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாயிருந்தது, தெரியுமா?”

     “என்ன! மகிழ்ச்சியாகவா இருந்தது, உங்களுக்கு?”

     “இல்லாமல் என்னவாம்? சில முட்டாள் தகப்பனார்களைப் போல என்னையும் கோபம் கொள்ளச் சொல்கிறாயா, நீ?”

     “அப்படியானால் நாங்கள் எங்கேயாவது போய், எதையாவது திருடிக் கொண்டு வந்தால் கூட...”

     “அகப்படாமல் திருடிக் கொண்டு வருவதாயிருந்தால் அதையும் நான் வரவேற்கத் தயாராய்த்தான் இருப்பேன்! ஏனெனில், எதைச் செய்தாலும் நம்முடைய அந்தஸ்து குறைந்துவிடக் கூடாது, பார்!”

     “அதாவது, பக்தன் தாசி வீட்டுக்குப் போனாலும் அவனுடைய மனம் பகவானிடத்தில் இருந்தால் சரி என்கிறீர்கள்; அப்படித்தானே?”

     “ஆமாம், ஆமாம். பக்தனுக்குப் பகவான் எப்படியோ, அப்படித்தான் நமக்கு அந்தஸ்தும். எதைச் செய்தாலும் அதற்குப் பங்கமில்லாமல் செய்ய வேண்டும். இப்போது கூடப் பார், ஏற்கெனவே நீங்கள் அந்தத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிந்திருந்தால் இந்தச் சங்கடம் உங்களுக்கு வந்திருக்கவே வந்திருக்காது. அதைத்தானே சர்மாஜியும் சொல்கிறார், ‘எனக்குத் தெரிந்திருந்தால் கூட வெள்ளம் வருவதற்கு முன்னால் அணை போட்டிருப்பேன்’ என்று!”

     “போடுவார், போடுவார்! ஏன் போடமாட்டார்? எல்லாம் அந்த அயோக்கியரால் வந்த வினைதானே?”

     ஆபத்சகாயம் மறுபடியும் சிரித்தார்; சிரித்துவிட்டுச் சொன்னார்:

     “யோக்கியராவது, அயோக்கியராவது! பணமிருந்தால் இந்த உலகத்தில் யாரும் யோக்கியராயிருக்க மாட்டார்கள்; அயோக்கியராய்த்தான் இருப்பார்கள். ஏனெனில் ‘சுகம்’ என்று ஒன்று இருக்கிறதே, அது ‘யோக்கிய’ருக்குக் கிட்டுவது இல்லை. எட்டுவதுமில்லை; அயோக்கியருக்குத்தான் அது கிட்டவும் கிட்டுகிறது, எட்டவும் எட்டுகிறது!”

     “இருக்கலாம்; ஆனால் நீங்கள் சுகம் என்று நினைப்பது எனக்குத் துக்கமாகவும், நான் சுகம் என்று நினைப்பது உங்களுக்குத் துக்கமாகவும் இருந்தாலும் இருக்கலாம் அல்லவா?”

     என்ன காரணத்தாலோ இதற்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், “ஓ, நீ அந்தக் கட்சியைச் சேர்ந்தவனா?” என்று இழுத்தார் ஆபத்சகாயம்.

     “எந்தக் கட்சியைச் சேர்ந்தவன் என்கிறீர்கள்?” என்று அவர் கேட்டதையே அவரிடம் திருப்பிக் கேட்டான் மணி.

     “அதுதான் சோற்றுக்கில்லாத பயல்களெல்லாம் ஒன்று சேர்ந்து ‘சோசலிசம், சோசலிசம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அந்தக் கட்சியைச் சேர்ந்தவனா நீ என்று கேட்கிறேன்!”

     “ஆமாம்; ஆனால் சோற்றுக்கு இருக்கும் பயல்கள் கூட இப்போது அதைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதுபோல் இருக்கிறது! ஏனெனில் அவர்களும் புரிந்து கொண்டு விட்டார்கள், இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் அது யார் தடுத்தாலும் நிற்காமல் இந்த உலகம் முழுவதும் வந்தே தீரும் என்பதை!”

     “உனக்குத் தெரியாது, தம்பி! சோற்றுக்கு இல்லாதவன் சோசலிசம் பேசுவதற்கும், சோற்றுக்கு இருப்பவன் சோசலிசம் பேசுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக, சோற்றுக்கு இல்லாதவன் சோசலிசம் பேசுவதோடு நிற்கமாட்டான்; தன்னிடம் இரண்டு சட்டைகள் இருந்தால் கூட, அவற்றில் ஒன்றை எடுத்து இல்லாதவனுக்குக் கொடுத்து விடுவான். சோற்றுக்கு இருப்பவனோ அப்படிக் கொடுக்க மாட்டான்; கொடுக்காததோடு, அப்படிக் கொடுப்பதால் சோசலிசம் வந்துவிடாதென்றும், ஏனெனில் தனிப்பட்ட ஒருவன் முயற்சியால் அது கொண்டு வந்துவிடக் கூடியதல்ல வென்றும் காரண காரியங்களெல்லாம் காட்டிச் சாங்கோ பாங்கமாகப் பேசுவான்; அந்தப் பேச்சைக் கொண்டே அதனால் தான் அடையக் கூடிய ஆதாயங்களையெல்லாம் அடைந்து கொண்டே வருவான். நீயும் மோகனும் கூட இந்த இரண்டாவது வகை சோசலிஸ்ட்டுகளாய்த்தான் இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் அந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள் அல்லவா? என்ன, நான் நினைப்பது சரிதானே?” என்று கேட்டுவிட்டுத் தன் கண்களைச் சிமிட்டினார் ஆபத்சகாயம்.

     எப்படி இருக்கும் மணிக்கு? - அவன் மறுபடியும் சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

     “என்ன சொன்னாலும் நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள் போலிருக்கிறது!”

     “கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்ட பிறகுமா என்னை நம்பச் சொல்கிறீர்கள், உங்களை? சும்மா சொல்லப்பா? உன்னை எதற்காக இவ்வளவு தூரம் நான் வற்புறுத்திக் கேட்கிறேன், தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்குப் பெரிய ஏற்றுமதி இறக்குமதி வியாபாரி என்று பெயர்; ஆனால் அவர் செய்வதெல்லாம் கள்ளக் கடத்தல் வியாபாரம் தான்! அதையும் அவர் சிறிய அளவில் செய்யவில்லை; பெரிய அளவில் செய்கிறார். அதனால் பணம் அவரிடம் என்ன பாடு படுகிறது தெரியுமா? தண்ணீர் படும்பாடு படுகிறது; அந்தப் பணத்தைக் கொண்டு கடவுள் ஒருவரைத்தான் அவரால் விலைக்கு வாங்க முடியவில்லை; மற்றவர்களையெல்லாம் வாங்கிவிட முடிகிறது! எப்படி வாழ்கிறார் மன்னன்? மன்னன் என்றால் மன்னன் தான்; அசல் மன்னன் கூட அந்தப் போலி மன்னனைப் போல் வாழ முடியாது போல் இருக்கிறது!”

     இதைக் கேட்டதும் பற்களை ‘நறநற’வென்று கடித்தபடி “வாழட்டும், வாழட்டும்; அணையப் போகும் விளக்கு சுடர் விட்டு எரிவது இயற்கைதானே? எரியட்டும், எரியட்டும்!” என்று குமுறினான் மணி.

     “இப்படியெல்லாம் பேசி நீங்கள் வேறு, நான் வேறு என்று ஆக்கிவிடாதீர்கள்; என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்!” என்றார் ஆபத்சகாயம், அப்பொழுதும் அவனை விடாமல்!

     “என்னைப் போன்ற இளைஞர்கள் தவறானக் காரியத்தில் ஈடுபடும்போது அதைத் தடுக்க வேண்டியவர் நீங்கள்; அப்படிப்பட்ட நீங்களே இப்படியெல்லாம் பேசுவது எனக்கு எவ்வளவு வருத்தமாயிருக்கிறது, தெரியுமா?” என்றான் அவன், உண்மையான வருத்தத்துடன்.

     ஆனால் அவரோ அதையும் போலியாக எண்ணி, “எதைத் தடுக்கச் சொல்கிறாய் என்னை? மூதேவி வாசம் செய்யும் இந்த வீட்டில் சீதேவி வாசம் செய்ய வருகிறாளே, அவளையா தடுக்கச் சொல்கிறாய் என்னை? அது என்னால் முடியவே முடியாது!” என்று தன் தலையை ‘நயம்பட’ ஆட்டினார்!

     மணியால் பொறுக்க முடியவில்லை; “முடியாவிட்டால் போங்கள், நான் வருகிறேன்!” என்று அவர் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு எழுந்தான்.

     இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ஆபத்சகாயத்துக்குக் காரியம் தான் பெரிதாகத் தோன்றுமே தவிர, வீரியம் பெரிதாகத் தோன்றாது. எனவே அப்போதும் அவர் அடக்கத்துடன், “உட்கார், அப்பா! பலகாரம் சாப்பிடா விட்டாலும் காபியாவது சாப்பிட்டுவிட்டுப் போயேன்!” என்று சொல்லி, அவனை மீண்டும் உட்கார வைக்கப் பார்த்தார். அவன் உட்காரவில்லை; அதற்குள் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக நின்றது நின்றபடியே இருந்தான்.

     “சரி, காபிதானே? எப்படிச் சாப்பிட்டால் என்ன, நின்று கொண்டேதான் சாப்பிடேன்!” என்று சொல்லி அதையும் சமாளித்துவிட்டு, “அன்னபூரணி! ஏ, அன்னபூரணி!” என்று மேலே இருந்தபடியே குரல் கொடுத்தார் அவர்.

     “என்ன, வரலாமா?” என்றாள் அவள், கீழே இருந்தபடி.

     “வா, வா! காபியை எடுத்துக்கொண்டு மேலே வா, சீக்கிரம்!” என்றார் அவர்.