உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
10. உண்மை சிரித்தது! சோதனைகள் மிகுந்த தன் வாழ்க்கைப் பிரயாணத்தில் முப்பதாவது மைல் கல்லைக் கடந்து கொண்டிருந்த ராதாவுக்குக் கல்யாண அனுபவம் இல்லையென்றாலும், காதல் அனுபவம் வேண்டிய மட்டும் இருந்தது. அந்த அனுபவத்தின் காரணமாகவோ என்னவோ, அவளிடம் யாராவது வந்து ‘காதல் புனிதமானது!’ என்று சொன்னால் போதும்; அவள் உடனே மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓடிப் போய்விடுவாள் - ஆம், அவளைப் பொறுத்தவரை அது அத்தனை நாற்றமெடுத்துப் போயிருந்தது! தங்கை பாமாவுக்காக, தம்பி பாலுவுக்காக அவள் என்னமோ கல்யாணம் செய்து கொள்ள விரும்பவில்லைதான் - அதற்காக இந்தக் ‘காதல் யுக’த்தில் அவளை யாரும் காதலிக்காமல் இருந்து விடுவார்களா, என்ன? காதலித்தார்கள், வாலிபர், வயோதிகர் என்ற பேதம் கூட இல்லாமல்! ஆனால் அவர்களில் யாராவது ஒரு புண்ணியாத்மா அவளைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயாராயிருந்தாரா வென்றால், அதுதான் கிடையாது. காரணம், காதல் அவர்களுக்குப் பொழுது போக்காயிருந்தது போலக் கல்யாணம் பொழுது போக்காயிருக்கவில்லை - எப்படி இருக்க முடியும்? அதில் தான் ‘கடமை’ என்று ஒன்று வந்து குறுக்கே நின்று தொலைக்கிறதே? அந்தக் ‘கடமை’ என்னும் ‘மடமை’க்குத் தன்னைப் பொறுத்த வரை யாரும் அவ்வளவு எளிதில் தங்களை ஆளாக்கிக் கொண்டு விட மாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் ஒரு சபலம், தனக்கென்று ஓர் ஆண் துணை - அது சிங்கமாயிருந்தாலும் சரி, சிறு நரியாயிருந்தாலும் சரி - இருந்தால் தேவலை என்று எப்போதாவது தோன்றும் அவளுக்கு. அப்படித் தோன்றும் போதெல்லாம் அவள் தன் பார்வையை யார் மேலாவது சற்றே செலுத்திப் பார்ப்பாள். அந்தப் பேதையின் பார்வைக்குரியவனோ அவளை மட்டும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருப்பானே தவிர, அவளுக்காக அவள் தஞ்கையையும், தம்பியையும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்க மாட்டான்! அதற்காக அவனைக் குற்றம் சொல்லியும் பிரயோசனமில்லை. நம் நாட்டுப் பொருளாதாரம் தான், ‘கல்யாணம் செய்து கொள்கிறாயா, தாராளமாகச் செய்து கொள்! ஆனால் ஒன்று, அளவோடு பிள்ளை பெற்றுக் கொள்! - மீறினால் உன் மனைவியின் வயிற்றை அறு; இல்லாவிட்டால் உன்னுடைய இடுப்புக்குக் கீழே கத்திரிக்கோலைப் போடு!’ என்று ஓயாமல் ஒழியாமல் பிரசாரம் செய்யும் அளவுக்கு இப்போது முன்னேறி விட்டதே? - அவன் என்ன செய்வான், பாவம்! அவனுக்கும் அவனுடைய மனைவிக்குமே அந்தக் கதியென்றால், அவனைச் சேர்ந்தவர்களின் கதியைப் பற்றியும், அவனுடைய மனைவியைச் சேர்ந்தவர்களின் கதியைப் பற்றியும் அவனால் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? இந்த அவல நிலையைப் புரிந்து கொள்ளும் சக்தி ராதாவுக்கு இருந்தது. எனவே, தன் பார்வைக்கு உள்ளானவன் தனக்காகத் தன் தங்கையையும் தம்பியையும் ஏற்றுக் கொள்ளத் தயங்கியபோது, அவள் ஆத்திரம் கொள்ளவில்லை; அனுதாபமே கொண்டாள்! வேதனை நிறைந்த இந்த வாழ்க்கையை அவள் ‘தியாக வாழ்க்கை’ என்று நினைக்கா விட்டாலும், உலகம் நினைத்தது. நினைப்பதோடு நின்று விடுபவர்கள் எது வேண்டுமானாலும் நினைக்கலாம் தானே? - நினைத்தார்கள், ‘எதுவாயிருந்தாலும் அது தங்கள் கையைக் கடிக்காமல், மனத்தைக் கடிப்பதோடு நின்றால் சரி!’ என்ற மனப்பான்மையிலே. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அவள் யாருக்கு வேலைக்காரியா யிருந்தாலும், தன்னை அவ்வப்போது சற்றே அசைத்துப் பார்த்த இயற்கைக்கு மட்டும் வேலைக்காரியா யிருக்கவில்லை! எஜமானியாகவே இருந்து வந்தாள். இதனால் அவளுடைய உணர்ச்சி எந்த நிலையிலும் எல்லையை கடக்கவில்லை! ஆயினும், அவளுடைய வாழ்க்கை அமைதி நிறைந்த வாழ்க்கை என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவளை ஏமாற்றியவர்கள் மட்டுமல்ல; அவளால் ஏமாற்றப் பட்டவர்களும் அவளைச் சுற்றி இருந்தார்கள்! இதனால் அன்றாட உணவோடு மட்டுமல்ல; உடையோடு மட்டுமல்ல; உறைவிடத்தோடு மட்டுமல்ல; உணர்ச்சிகளோடும் அவள் போராடினாள்! - அந்தப் போராட்டங்களிலே அவள் அடைந்த வெற்றிகளை விடத் தோல்விகள் தான் அதிகம் என்றாலும், வாழ்வின் சுவையே அவற்றில் தான் இருப்பதாகத் தோன்றிற்று, அவளுக்கு! ஆம், வெற்றியில் மட்டுமல்ல; தோல்வியிலும் சுவை கண்டு வந்தவள், அவள். ஆகவே, தன் தங்கை தனக்கென்று ஒருவனைத் தேடிக் கொண்டாள் என்ற அறிந்த போது, அவள் அதிர்ச்சியடையவில்லை; மகிழ்ச்சியே அடைந்தாள். அந்த மகிழ்ச்சியில் தன்னை மறந்து, தன் தூக்கத்தை மறந்து, தன்னுடைய தங்கையின் ‘எதிர்காலக் கணவ’னைப் பற்றி என்னவெல்லாமோ கேட்டுக் கொண்டிருந்தாள், அவள். விடிய, விடிய அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்த பாமாவுக்கு தன்னை விட்டால் தேவலை என்று தோன்றிவிட்டது. “இனிமேல் அவரைப் பற்றி என்னை ஒன்றும் கேட்காதே, அக்கா! இன்று மாலையே வேண்டுமானாலும் அவரை நான் இங்கே வரச் சொல்லி விடுகிறேன்; நீயே அவரை என்ன கேட்க வேண்டுமோ, கேட்டுக் கொள்!” என்றாள் அலுப்புடன். “சரி, நீ போய்க் குளி; நான் காபி போட்டுக் கொடுத்து விட்டு வருகிறேன்!” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு, அடுக்களைக்குச் சென்றாள் ராதா. அங்கேயும் அவனை மறக்க முடியவில்லை, அவளால். அவன் எப்படி இருப்பான்? - கறுப்பாயிருப்பானா. சிவப்பா யிருப்பானா? உயரமாயிருப்பானா, குள்ளமாயிருப்பானா? சிரித்தால் அவன் முகம் எப்படி இருக்கும்? - அழகாயிருக்குமா, அவலட்சணமாயிருக்குமா? பேசினால் அவன் குரல் எப்படி இருக்கும்? - கனிவாயிருக்குமா, கரகரப்பாயிருக்குமா? அவன் எப்படியிருந்தால் என்ன, எப்படிப்பட்டவனா யிருப்பான் என்பதல்லவா முக்கியம்? - காதல் அவனுக்குப் பொழுது போக்காயிருக்குமா? அல்லது, கல்யாணத்துக்கு முன்னால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் கடமை உணர்வுகளில் ஒன்றாயிருக்குமா? அவன் தன் பொறுப்பை உணர்ந்து அவளைக் காதலிக்கிறானா? இல்லை, பொறுப்பை உணராமலே காதலிக்கிறானா? அவர்களுடைய காதலுக்கு வித்திட்டது எதுவாயிருக்கும்? - இனக் கவர்ச்சியாயிருக்குமா? அல்லது, இதயக் கவர்ச்சியாயிருக்குமா? ஒரு வேளை இனக் கவர்ச்சியாயிருந்து, அந்தக் கவர்ச்சி குறைந்ததும் அவன் அவளைக் கைவிட்டுவிட்டால்? - தன்னுடைய நிலையை விட மோசமாகவல்லவா போய்விடும் அவளுடைய நிலை? - இருக்காது. அவர்களுடைய காதலுக்கு வித்திட்டது இனக் கவர்ச்சியா யிருக்காது; இதயக் கவர்ச்சியாய்த் தான் இருக்கும்... அப்படிப்பட்ட அழகியா என்ன, தன் தங்கை? இனக் கவர்ச்சி அவர்களுடைய காதலுக்கு வித்திட? - கதைகளில் காணும் ஏழைப் பெண்கள் வேண்டுமானால் அழகாயிருக்கலாம்; வாழ்க்கையில் காணும் ஏழைப் பெண்கள் அழகாகவா இருக்கிறார்கள்? - ஊஹும், அவர்களுடைய வயிறு வாடும்போது முகமும் வாடித்தானே விடுகிறது? ஆனால், இதயக் கவர்ச்சி மட்டும் அவர்களுடைய காதலுக்கு எப்படி வித்திட்டிருக்குமாம்? ஒரு வேளை சேர்ந்தாற் போல் சில நாட்களாவது பழகும் வாய்ப்பு... நினைத்ததை முடிக்கவில்லை, அவள். அதற்குள் அடுப்பின் மேலிருந்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து விடவே, காபித்தூளை எடுத்து அதில் போட்டுக் கீழே இறக்கி வைத்துவிட்டு, அடுத்தாற் போல் பால் சட்டியை எடுத்து அடுப்பின் மேல் ஏற்றிவிட்டு, அவசரம் அவசரமாகக் குளிக்கும் அறைக்குச் சென்றாள். “எங்கே வந்தாய், அக்கா? உன்னை நான் கூப்பிடவில்லையே?” என்றாள் பாமா, ஒன்றும் புரியாமல். “கூப்பிட்டால்தான் வர வேண்டுமா என்ன, போடி!” என்று அவள் முதுகைத் தேய்த்து விட்டுவிட்டு, “ஆமாம், முதலில் நீ அவரை எங்கே சந்தித்தாய்?” என்று கேட்டாள், ராதா. “நான் எங்கே அவரைச் சந்தித்தேன், அவர் தான் என்னைச் சந்தித்தார்!” என்றாள் பாமா. “அதைக் கேட்கவில்லை நான்; எந்த இடத்தில் எப்படிச் சந்தித்தீர்கள் என்று கேட்கிறேன்!” “ஏன், ஆபீசில் தான்!” “ஆபீசில்தான் என்றால் இருவரும் ஒரே இலாகாவிலா வேலை பார்க்கிறீர்கள்?” “ஆமாம்!” ‘அப்படியானால் சந்தேகமே இல்லை; இவர்களுடைய காதலுக்கு இதயக் கவர்ச்சிதான் வித்திட்டிருக்க வேண்டும்!’ என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டுத் திரும்பிய ராதாவுக்கு, அதற்குள் என்ன தோன்றிற்றோ என்னமோ, “ஏண்டி, பாமா?” என்று மறுபடியும் குரல் கொடுத்துக் கொண்டே குளிக்கும் அறைக்குள் நுழைந்தாள். “என்ன, அக்கா?” என்றாள் பாமா. “அவர் உன்னைக் காதலிப்பது அவருடைய பெற்றோருக்குத் தெரியுமா?” “தெரியாது!” “ஏன், சொல்லச் சொல்கிறதுதானே?” “ஆகட்டும், சொல்கிறேன்!” “இங்கே சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, அங்கே போய் மறந்துவிடாதே!” “இல்லை, மறக்கவில்லை!” ராதா திரும்பினாள்; வழியில், ‘இன்று மாலை தான் அவரை இங்கே அழைத்துக் கொண்டு வரப் போகிறோமே, அதையும் அக்காவே அவரிடம் சொல்லிக் கொள்ளட்டுமே!’ என்று நினைத்துப் பாமா எங்கே சொல்லாமல் இருந்து விடுவாளோ என்ற சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு; மறுபடியும் குளிக்கும் அறைக்குள் நுழைந்தாள். “என்ன அக்கா?” என்றாள் பாமா. “ஒன்றுமில்லை. அதை நானே அவரிடம் சொன்னால் அவ்வளவு நன்றாயிராது; நீயே சொல்லவேண்டும். என்ன, தெரிந்ததா?” “தெரிந்தது!” “அதற்காக நீ அவரை இங்கே அழைத்துக் கொண்டு வராமல் இருந்து விடாதே!” “இல்லை!” ராதா திரும்பினாள்; “அக்கா!” என்றாள் பாமா. “என்ன?” “இனிமேல் ஏதாவது சொல்வதாயிருந்தால் குளித்து விட்டு வந்த பிறகு சொல்கிறாயா?” அவ்வளவுதான்; “போடி, போ! நான் அடுப்பில் பாலைப் போட்டுவிட்டு வந்திருக்கிறேனாக்கும்?” என்று அவள் முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டு, அவசரம் அவசரமாக நடையைக் கட்டினாள் ராதா. அதற்குள் விழித்தெழுந்து விட்ட தன் கணவருக்காகத் தானே காபியைக் கலந்து எடுத்துக் கொண்டு வந்த மீனாட்சி, “நான் ஒரு வார்த்தை சொன்னாலும் சொன்னேன், இப்படியா அவள் உயிரை வாங்கிக் கொண்டிருப்பாய்?” என்றாள் சிரித்துக் கொண்டே. அப்போது, “எங்கே காபி?” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்து சொக்கலிங்கனார், “என்ன, அது?” என்று தம் மனைவியை மெல்ல விசாரித்தார். “அன்றொரு நாள் இரவு நாம் பாமாவை யாரோ ஒரு பையனுடன் பார்க்கவில்லையா? அதை நான் இவளிடம் சொன்னேன். அவ்வளவுதான்; அவள் உயிரை வாங்க ஆரம்பித்துவிட்டாள், இவள்!” “சரி; அவன் எப்போது வருகிறானாம், இங்கே?” “வரும்போது வருகிறான்; அதைப் பற்றி இப்போது என்ன?” “ஒன்றுமில்லை; பேரன், பேத்தி எடுக்க வேண்டிய இந்தக் காலத்தில் கூட நீ வெறும் பொம்மைக் கல்யாணமாகவே செய்து பார்த்துக் கொண்டிருக்கிறாயே, நிஜக் கல்யாணம் ஒன்றாவது செய்து பார்க்க மாட்டாயா என்று தான் கேட்கிறேன்!” என்றார் அவர். இவற்றையெல்லாம் கேட்டும் கேட்காதவள் போல் நடந்து கொண்ட பாமாவுக்கு, ‘இவர்கள் காட்டும் இத்தனை அன்புக்கும் உரியவர் தானா, அவர்?’ என்ற சந்தேகம் ஏனோ வந்து விட்டது. அந்தச் சந்தேகத்துடனேயே அவள் அன்று ஆபீசுக்குச் சென்ற போது, மோகனும், மணியும் ஒருவர் தோள் மேல் ஒருவர் கையைப் போட்ட வண்ணம் ஏதோ பேசிக் கொண்டே அவளுக்கு எதிர்த்தாற் போல் வந்தார்கள். ‘இதென்ன கூத்து?’ என்று அவள் திடுக்கிட்டு நின்ற போது, மோகன் அவளைப் பார்த்துவிட்டான். அவ்வளவுதான்; தன்னை அறியாமல் மணியின் தோளின் மேல் கிடந்த தன்னுடைய கையை அவன் சட்டென்று எடுத்த போது, மணி சிரித்த அந்தச் சிரிப்பு, அவன் சிரித்த சிரிப்பாகத் தோன்றவில்லை அவளுக்கு; உண்மை சிரித்த சிரிப்பாகவே தோன்றிற்று! காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|