உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
12. கருணை வள்ளலும் காதல் வள்ளலும் அன்றிரவு அருணா வீட்டுக்கு வந்தாளோ இல்லையோ, “அப்பா, அப்பா! உங்களுக்கு ஒரு சந்தோஷச் சேதி, அப்பா!” என்று கத்திக் கொண்டே மாடிப்படிகளில் காலை எடுத்து வைத்தாள். இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மோகன் ‘விருட்’டென்று தன் அறையை விட்டு வெளியே வந்து, “அருணா, அருணா! சொல்லாதே அருணா!” என்று கெஞ்சாத குறையாகக் கெஞ்சி, அவள் கையைப் பற்றி இழுத்தான். “சும்மா சொன்னால் கேட்டுக் கொண்டு விடுவேனா, நான்? எடு, ஏதாவது!” என்று கையை நீட்டினாள் அவள். அவள் நீட்டிய கையில் ஒரு ரூபாயை எடுத்து வைத்து, “இப்போதைக்கு இதை வைத்துக் கொள்; சம்பளம் வந்ததும் உன்னை நான் கவனித்துக் கொள்கிறேன்!” என்றான் அவன். “யாருக்கு வேண்டும், ஒரு ரூபாய்? நீயே வைத்துக் கொள்!” என்று அதை அவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டு, “அப்பா, அப்பா!” என்றாள் அவள், மறுபடியும். ‘சனியன், பீடை!’ என்று தன் மனத்துக்குள்ளேயே கருவிக் கொண்டு, ஐந்து ரூபாயை எடுத்து அவள் கையில் வைத்தான் அவன். “இது பரவாயில்லை, ஒரு ’பகல் காட்சி’க்காவது போய்விட்டு வரலாம்!” என்று அவள் அதை எடுத்து வைத்துக் கொண்டு, “ஏமாந்தாயா, இப்போது அப்பா இங்கே இல்லையாக்கும்?” என்றாள் சிரித்துக் கொண்டே. “எனக்கும் தெரியும், அது! இன்றில்லாவிட்டாலும் நாளைக்காவது அழுதுதானே தீரவேண்டும் என்று அழுதேனாக்கும்?” என்றான் அவன். “ஐயோ பாவம், அழாதே அண்ணா!” என்று தன் இடையில் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து அவனிடம் நீட்டினாள் அவள். “நான் ஒன்றும் அழவில்லை; நீயே வைத்துக் கொள், உன் கைக்குட்டையை!” என்று அவன் அதை அவளிடமே விட்டெறிந்துவிட்டுத் திரும்பிய போது, கையில் பிரசாதத்துடன் கோயிலிலிருந்து வந்து கொண்டிருந்த அவனுடைய அம்மா, “என்ன சங்கதி?” என்று விசாரித்தாள். அவன் அதற்கு என்ன சொல்வது என்று யோசிப்பதற்குள், “ஒன்றுமில்லை அம்மா! அண்ணா இல்லே, அண்ணா...” என்று ஆரம்பித்தாள் அவள். “என்ன அண்ணாவுக்கு?” என்று அம்மா கேட்டாள். “உத்தியோகத்தில் உயர்வு கிடைத்திருக்கிறது, அம்மா!” என்றான் அவன், அதற்குள் அவளை முந்திக் கொண்டு. அப்பொழுதும் அம்மா அவனை நம்பாமல், “உண்மையாகவா?” என்று கேட்டாள், அருணாவின் பக்கம் திரும்பி. “ஆமாம், அம்மா!” என்றாள் அவள், தன் அண்ணாவைக் கடைக்கண்ணால் கவனித்துக் கொண்டே. “எல்லாம் அம்பாளின் கிருபை!” என்று தன் கையிலிருந்த பிரசாதத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவள் உள்ளே சென்றாள்; மோகன் பெருமூச்சு விட்டான். அத்துடன் அவனை விட்டுவிடவில்லை, அருணா; கூடத்தில் போட்டிருந்த சோபாவில் ‘ஜம்’மென்று அமர்ந்து, “எங்கே, இங்கே இருந்த பத்திரிகையைக் காணோம்?” என்றாள் அதிகாரத் தொனியில். “அப்பாவின் அறையில் இருக்கும்!” என்றான் அவன் அடக்கமே உருவாக. “அதைச் சொல்லவா உன்னை நான் கேட்டேன்? போய் எடுத்துக் கொண்டு வா!” என்றாள் அவள், அதட்டும் குரலில். ‘ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்ட பிறகுமா இந்த அநீதி!’ என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் மாடிக்குப் போய் அதை எடுத்துக் கொண்டு வந்தான். அவள் அதை எடுத்துப் பிரித்துக் கொண்டே, “அந்த மின்விசிறியைப் போடு!” என்றாள். அவன் போட்டான். “அம்மாவிடம் போய்ச் சமையல் ஆகிவிட்டதா என்று கேள்!” என்றாள் அவள். அவன் போய்க் கேட்டுவிட்டு வந்து, “இன்னும் கொஞ்சம் நேரமாகுமாம்!” என்றான். “சரி! உட்கார்!” என்றாள் அவள். அவன் உட்கார்ந்தான். “எழுந்திரு!” என்றாள் அவள். அவன் எழுந்தான். “பத்திரிகையில் ஒன்றையும் காணோம்; ரேடியோவைத் திருப்பி வை!” என்றாள் அவள். அவன் திருப்பி வைத்தான். “தேவலையே? நான் சொன்னபடி யெல்லாம் கேட்கிறாயே, நீ!” என்றாள் அவள். “வேறு வழி? போயும் போயும் உன்னிடமல்லவா அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன், நான்?” என்றான் அவன். அதற்குமேல் அவனைச் சோதிக்க விரும்பாமல், “ஆமாம், நீ அந்த அண்ணியை எப்போது தேடிப் பிடித்தாய்?” என்று கேட்டாள் அவள். “இப்போதுதான்!” என்றான் அவன். “அந்த அண்ணியின் அக்கா எங்கள் பேராசிரியை வீட்டுச் சமையற்காரி என்பது தெரியுமா, உனக்கு?” “தெரியும்!” “தெரிந்துதான் நீ அந்த அண்ணியைக் காதலித்தாயா?” “ஆமாம்!” “அப்படியானால் உன்னைக் ‘காதல் மன்னன்’ என்று மட்டும் சொன்னால் போதாது; ‘காதல் வள்ளல்’ என்றும் சொல்லத்தான் வேண்டும்!” “சொல்லு! உன்னைப் பொறுத்தவரை நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு! ஆனால் அப்பா, அம்மாவிடம் மட்டும் அந்த அண்ணியைப் பற்றிச் சொல்லிவிடாதே!” “அதிகச் செலவாகுமே, அதற்கு! சமாளிப்பாயா, நீ?” “முடிந்தவரை சமாளிக்கிறேன்!” “அப்படியானால் நானும் முடிந்தவரை சொல்லாமலிருக்கிறேன்!” இருவரும் சேர்ந்தாற் போல் இந்த முடிவுக்கு வந்த போது “சார், சார்!” என்று ஒரு குரல் வாசலிலிருந்து வந்தது; அருணா வெளியே வந்து பார்த்தாள் - பார்ப்பதற்குப் ‘பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை’ போலிருந்த ‘பிக்-பாக்கெட் பீதாம்பரம்’ சுற்றுமுற்றும் பார்த்தபடி அங்கே நின்று கொண்டிருந்தான். “என்னைத் தெரியவில்லையா? அடிக்கடி இங்கே வந்து கொண்டிருப்பவன் தானேம்மா, நான்?” என்றான் அவன். “எத்தனையோ பேர் வருகிறார்கள்; எத்தனையோ பேர் போகிறார்கள். அவர்களில் உன்னை யார் என்று தெரியும், எனக்கு?” “நான் தான் பீதாம்பரம்; ஐயா ஆபத்சகாயத்தைப் பார்க்க வந்திருக்கிறேன்!” “அவர் வீட்டில் இல்லை; வெளியே போயிருக்கிறார்!” “எப்போது வருவார் என்று தெரியுமா?” “தெரியாது!” “அட, கடவுளே! அவர் வரும் வரை நான் இங்கேயா நின்று கொண்டிருப்பது? அவ்வளவு நன்றாயிராதே, அது!” “அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய், நீ?” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே வந்தாள். “அவன் சொல்வது உண்மைதான், அருணா! அவனை உள்ளே வந்து மேலே போய் உட்காரச் சொல்!” என்றான் மோகன். “ஏனாம்?” “கிட்ட வா, சொல்கிறேன்!” என்று அவள் காதோடு காதாக, “அவன் ஒரு பிக்-பாக்கெட்!” என்றான் அவன். “பிக்-பாக்கெட் அப்பாவைத் தேடிக் கொண்டு வருவானேன்?” என்றாள் அவளும் அவன் காதோடு காதாக. “மாஜி போலீஸ் அதிகாரி இல்லையா, நம் அப்பா? அவரைத் தேடிக் கொண்டு வேறு யார் வரப் போகிறார்கள்?” என்றான் அவன், தன் குரலைத் தாழ்த்தி. “அப்படியானால் அந்தக் காரியத்தை நீயே செய்!” என்று அவளும் தன் குரலைத் தாழ்த்திச் சொல்லிவிட்டு அடுக்களைக்குச் செல்ல, “வணக்கம், சின்ன ஐயா!” என்று கை கூப்பிக் கொண்டே, மோகனுக்கு எதிர்த்தாற் போல் வந்து நின்றான் பீதாம்பரம். “போ போ, மாடிக்குப் போ!” என்று அவனை மாடிக்கு அனுப்பிவிட்டுக் கீழே உட்கார்ந்தான் மோகன். “சார், சார்!” என்று இன்னொரு குரல் வந்தது வாசலிலிருந்து. ‘பொழுது போனால் இது ஒரு தொல்லை!’ என்று முணுமுணுத்துக் கொண்டே, “யாரப்பா, அது?” என்றான் அவன், இருந்த இடத்திலேயே இருந்தபடி. “நான் தான் அபேஸ் அய்யாக்கண்ணுங்க!” என்றான் அந்தக் குரலுக்கு உரியவன் அங்கேயே நின்றது நின்றபடி. “வா வா, உள்ளே வா!” என்று அவனையும் வரவேற்று மாடிக்கு அனுப்பிவிட்டு, “கட்சிக்காரர்கள் வக்கீலைத் தேடிக் கொண்டு வருவது போல அல்லவா வருகிறார்கள்!” என்றான் மோகன், அலுப்புடன். “அதில் என்னடா சந்தேகம், நான் காப்பாற்றுவது போல வக்கீலால் கூட அவர்களைக் காப்பாற்ற முடியாதே!” என்றார் அவன் அப்பா, அப்போது உள்ளே வந்து. அவர் சொன்னது உண்மைதான்! - பதவியில் இருந்த போதும் சரி, இல்லாத போதும் சரி; அவரால் நல்லவர்கள் காப்பாற்றப் பட்டார்களோ இல்லையோ, கெட்டவர்கள் தவறாமல் காப்பாற்றப்பட்டு வந்தார்கள்! - அதற்குத் துணையாயிருந்தது, அவர் செய்த உத்தியோகம் மட்டுமல்ல; அந்த உத்தியோகத்தால் அவர் அடைந்திருந்த அனுபவமும் கூட. இதனால் எவன், எங்கே, எதைத் திருடினாலும் சரி, அதை அப்படியே கொண்டு வந்து அவரிடம் சேர்த்து விடுவான்; அதை வெளியே தெரியாமல் எப்படி அமுக்க வேண்டுமோ, அப்படி அமுக்கி விடுவார், அவர்! இந்த அமுக்கலில் திருடன் அடைந்த லாபத்தை விட அவர் அடைந்த லாபம் தான் அதிகம் என்றாலும், பல திருடர்கள் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. காரணம், அவர்கள் செய்து வந்த திருட்டுத் தொழில் முதல் இல்லாத தொழில் என்பது மட்டுமல்ல; திருடுவதை விடப் பதுக்குவது அவர்களுக்குக் கடினமாயிருந்ததும் கூடத்தான்! அந்தக் கடினமான வித்தையை வெகு சுலபமாகச் செய்து வந்தார் அவர். என்ன இருந்தாலும் சமூகத்தில் ‘பெரிய மனிதர்’ என்ற அந்தஸ்தை அடைந்து விட்டவர் பாருங்கள்; திருட்டுப் போன பொருட்கள் அவர் வீட்டிலிருந்து கண்டெடுக்கப் பட்டால் கூட, ‘யாரோ கொண்டு வந்து போட்டுவிட்டான்?’ என்று தானே உலகம் சொல்லும்? - அந்த உலகம் அவருக்குப் பாதுகாப்பு; அவர் திருடர்களுக்குப் பாதுகாப்பு! இந்தப் பாதுகாப்பைத் தவிர வேறு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வளர்ந்து வந்த அந்தத் தொழிலுக்குப் போட்டியும் ஓரளவுக்கு இருக்கத்தான் இருந்தது. ஆனால், அந்தப் போட்டி அவரைப் பாதிக்கவில்லை - எப்படி பாதிக்கும்? ஒரு பக்கம் போட்டி இருந்தாலும், இன்னொரு பக்கம் அந்தப் போட்டியால் திருடர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பல்கிப் பெருகி வரும்போது? இதனால் சமூகத்துக்குத் தீமையென்றாலும், சமூகம் யாருக்கு, எப்படி பணம் வருகிறது என்பதையா கவனிக்கிறது? எவனுக்காவது, எப்படியாவது பணம் வந்துவிட்டால் சரி, அவன் அதற்குப் பெரிய மனிதன் தானே? - அத்தகைய பெரிய மனிதர்களில் ஒருவராகத்தான் ஆபத்சகாயமும் திகழ்ந்து வந்தார் - இது வழிப் பிரயாணத்தில் மட்டுமல்ல; வாழ்க்கைப் பிரயாணத்திலும் அவர் கண்ட குறுக்கு வழி! ஆனால், அந்த வழிக்காகத் தாம் பெரிய மனிதர் என்ற அந்தஸ்தையும் அவர் அடியோடு இழந்து விடுவதில்லை; அப்படியே இழந்தாலும் இரவில் மட்டுமே ஒரளவு இழப்பார் - அதாவது, திருடனோடு திருடனாக அமர்ந்து, தொழிலைக் கண்ணுங் கருத்துமாகக் கவனிக்கும் போது - பகலிலோ - பேசக்கூடாது; பெரிய மனிதர் பெரிய மனிதர் தான், திருடன் திருடன் தான்! இதெல்லாம் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாதா என்றால் தெரியும்; ஆனால் எப்படி? - ‘ஏழை படும் பாடு’ என்ற கதையில் வரும் திருடனிடம் கருணை காட்டிய பாதிரியார் நமக்கு எப்படித் தெரிகிறாரோ, அப்படி; ‘புத்தர் வரலா’ற்றில் வரும் வேசியிடம் கருணை காட்டிய கவுதமர் நமக்கு எப்படித் தெரிகிறாரோ, அப்படி! அன்று கூட அப்படித்தான் நடந்தது - அவரைச் சாப்பாட்டுக்கு அழைப்பதற்காக மேலே வந்த அவருடைய மனைவி அன்னபூரணியம்மாள், “இந்த இழவெல்லாம் உங்களுக்கு என்னத்துக்கு? எந்தத் திருடனாவது, எப்படியாவது போகிறான்!” என்று வழக்கம் போல் கடிந்து கொண்டதற்கு அவர் என்ன சொன்னார், தெரியுமா? - “மனசு கேட்கவில்லையேடி! இல்லாத கொடுமை திருடுகிறான்; அவனைப் போலீசாருக்குக் காட்டிக் கொடுப்பதில் எனக்கு என்ன லாபம்?” என்று தான் சொன்னார் - உண்மைதானே, லாபம் அவருக்கு இல்லைதானே? ஆயினும் ஏதோ ஒரு சந்தேகம் நீண்ட நாட்களாகவே அந்த ‘நல்ல உள்ள’த்தை அரித்துக் கொண்டு இருந்தது; அந்தச் சந்தேகத்தை மனத்தில் வைத்துக் கொண்டு சொன்னாள் - அதையும் சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டே சொன்னாள்: “இன்று ஒரு நல்ல சேதி என் காதில் விழுந்தது - பையனுக்கு உத்தியோகம் உயரப் போகிறதாம்; உத்தியோகம் உயர்ந்தால் ஊதியமும் உயரத்தானே உயரும்? இனிமேலாவது, அந்தத் திருட்டுப் பயல்கள் இங்கே வராமல் இருக்கட்டுமே?” அவர் சொன்னார்; அதற்கும் அசைந்து கொடுக்காமல் சொன்னார்: “போடி பைத்தியமே! நானா வரச் சொல்கிறேன் அவர்களை? அவர்கள் அல்லவா என்னைத் தேடி வருகிறார்கள்?” இந்தச் சமயத்தில், “திருடனுக்குக் காட்டும் கருணையை வேறு யாருக்காவது காட்டினால் என்ன, அப்பா?” என்றாள் அருணா, குறுக்கிட்டு. “படித்த பெண்ணான நீ கூடவா அப்படிக் கேட்கிறாய்? வருந்துகிறேன் அம்மா வருந்துகிறேன்! மற்றவர்களுக்குக் கருணை காட்ட இந்தப் பாழும் உலகத்தில் எத்தனையோ பேர் முன் வருவார்கள்; திருடனுக்குக் கருணை காட்டத்தான் ஒருவரும் முன் வரமாட்டார்கள் அம்மா, ஒருவரும் முன் வர மாட்டார்கள்!” என்றார் அவர், அதற்கும் அசைந்து கொடுக்காமல். “அந்த ஒருவர் நீங்களாயிருப்பது என்னைப் புல்லரிக்கச் செய்கிறது, அப்பா!” என்றான் மோகன் - ‘காதல் வள்ள’ அல்லவா, ‘கருணை வள்ள’லின் அருமை அவனுக்குத்தானே தெரியும்? காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|