36. அன்புக்கொரு ஜீவன்

     பாமாவின் சிரிப்பை மட்டும் என்ன - நெருங்கடலை, நீலவானை, உதயசூரியனை, பூரணசந்திரனை, தாரகையை, தென்றலை, வண்ண மலரை, பாடும் குயிலை, ஆடும் மயிலைக் கூட மணி வெறுக்கக்கூடிய நிலையில்தான் இருந்தான் அப்போது!

     ஆம், அருணாவின் மரண சாசனம் அந்த அளவுக்கு வெறுப்பு மூட்டியிருந்தது, அவனுக்கு. வெறுப்பு அவளுடைய மரண சாசனத்தின் மேல் மட்டுமல்ல; அவள் மேலும்தான்!

     என்னப் பெண்கள் இந்தக் காலத்துப் பெண்கள்? எடுத்ததற்கெல்லாம் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டு! எது தங்களை மாய்க்க வருகிறதோ, அதையல்லவா மாய்க்க வேண்டும், இவர்கள்!

     அடிக்கடி தனக்குத் தொல்லை கொடுத்து வந்த காளை ஒருவனை, கன்னி ஒருத்தி செருப்பால் அடித்தாளாமே, அந்தத் தைரியம் வேண்டுமானால் இவர்களுக்கு வரவேண்டாம்; அடிக்கடித் தன்னுடன் வம்புக்கு நின்றப் பதி ஒருவனை, பத்தினி ஒருத்திப் பல்லால் கடித்தே கொன்று விட்டாளாமே, அந்தத் துணிவு வேண்டுமானால் இவர்களுக்குப் பிறக்க வேண்டாம் - சட்டம் இருக்கிறதே, பதினெட்டு வயது நிரம்பிவிட்டால் எந்தப் பெண்ணும் தனக்கு விருப்பமானவனை எந்தவிதமானத் தடைக்கும் அஞ்சாமல் திருமணம் செய்து கொண்டு விடலாம் என்று. உரிமை இருக்கிறதே, அந்தத் திருமணத்துக்குப் பிறகும் அவன் தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவனிடமிருந்து சட்ட ரீதியாக அவள் விலகிக் கொண்டு விடலாமென்று. அவற்றையாவது பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா, இவர்கள்?

     வாழ்க்கையில் இவர்களுக்கு உதவக் கடலை விட்டால் வேறு கதி கிடையாதா? மூட்டைப் பூச்சி மருந்தை விட்டால் வேறு வழி கிடையாதா? - கொடுமை, கொடுமை!

     இந்தக் கொடுமைக்குப் படிக்காத பெண்கள்தான் பலியாகிறார்கள் என்றால், படித்த பெண்களும் அல்லவா பலியாகிவிடுகிறார்கள்?

     இந்த லட்சணத்தில்தான் இவர்களில் பலருக்கு வாழ்க்கையில் உள்ள ஒரே பிரச்னைக் காதல் பிரச்னையாகப் படுகிறது! அந்தக் காதல் பிரச்னையை மையமாக வைத்து எழுதப்படும் கதைகளையும், எடுக்கப்படும் படங்களையும் விழுந்து விழுந்துப் படிக்கிறார்கள்; விழுந்து விழுந்துப் பார்க்கிறார்கள், பலன்? அதற்காக இவர்கள் வாழ்வதை விடச் சாவதுதான் அதிகமாயிருக்கிறது!

     சாகட்டும், சாகட்டும்; காதலுக்காக இன்னும் எத்தனை பேர் வேண்டுமானாலும் இந்த உலகத்தில் சாகட்டும் - அதை நான் வரவேற்கிறேன், அத்துடன் சுயநலமும் சேர்ந்து சாவதால்!

     ஆனால் இந்த அருணாக் காதலுக்காகச் சாகவில்லையே, காசுக்காகவல்லவாச் செத்திருக்கிறாள்?

     பாழும் பணம் அவளுடைய அப்பாவையே அல்லவா அவளுக்கு எமனாக்கியிருக்கிறது!

     அவர்தான் என்ன செய்வார், பாவம்! தனக்கு மேலுள்ள வர்க்கத்தார் தன்னைவிடக் குறைவாக உழைத்து, தன்னைவிட மேலான நிலையில் வாழ்வதை அவர் ஒவ்வொருக் கணமும் பார்க்கிறார்; அவர்களைப் போலவே தானும் வாழவேண்டுமென்று நினைக்கிறார்; அதற்காகத் திருடப் பயந்தாலும் திருடர்களுக்குத் துணையாயிருக்கப் பயப்படவில்லை; சுகானந்தத்தை வெறுத்தாலும் அவருடைய பணத்தை வெறுக்கவில்லை!

     அந்தப் பணத்துக்காக அவர் தன்னை மட்டுமல்ல, தன் மகளையும் இழக்கச் சித்தமாயிருந்திருக்கிறார். ஆனால் அந்த இழப்பு அவர் எதிர்பார்த்ததற்கு நேர் விரோதமாகவல்லவா நேர்ந்திருக்கிறது, இப்போது?

     அனுதாபத்துக்குரியவர்கள், அனுதாபத்துக்குரியவர்கள்! காதலில் பெண்ணுக்கு ஏமாற்றம்; கல்யாணத்தில் அப்பாவுக்கு ஏமாற்றம்! அனுதாபத்துக்குரியவர்கள், அனுதாபத்துக்குரியவர்கள்!

     யார் அனுதாபத்துக்குரியவர்கள், அவர்களா நானா? அதுகூட யோசிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், யாரை நாம் அனுதாபத்துக்குரியவர்களாக நினைக்கிறோமோ, அவர்கள் நம்மை அனுதாபத்துக்குரியவர்களாக நினைக்கிறார்கள் இப்போது! நினைக்கட்டும் நினைக்கட்டும், யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும்!

     இவ்வாறு எண்ணிப் பொருமியபடி அவன் தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தபோது, “சார், கிடைத்துவிட்டது சார்” என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்தான் பியூன் பிச்சையா.

     அவ்வளவுதான்; “எங்கே கிடைத்தது, எப்போது கிடைத்தது? யார் வந்து சொன்னது, இதை?” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே துள்ளி எழுந்தான் மணி.

     பிச்சையாவுக்கு ஒன்றும் புரியவில்லை; “எதைக் கேட்கிறீர்கள், நீங்கள்?” என்று தலையைச் சொறிந்தான்.

     “எதைச் சொல்கிறாய் நீ?” என்று மணி அவனைத் திருப்பிக் கேட்டான்.

     “காலையில் சைக்கிள் சாவியைக் காணோமென்று தேடிக் கொண்டிருந்தீர்களே, அது கிடைத்துவிட்டது சார்!”

     “ஓ அதுவா? சரி சரி, கொடு இப்படி!” என்று அதை வாங்கித் தன் கால்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு “போ, போ, போய் உன் வேலையைப் பார்!” என்றான் மணி.

     அவன் போய்விட்டான்; ‘இது என்ன தொல்லை! நான் விட்டாலும் அந்த நினைப்பு என்னை விடாது போலிருக்கிறதே? அவன் ஏதோ சொல்ல வந்தா, நான் ஏதோ கேட்டுத் தொலைக்கிறேனே?’ என்று எண்ணி மருகியவனாய், மறுபடியும் தன் வேலையில் முனைந்தான் மணி.

     அப்போது சக குமாஸ்தா ஒருவன் அவனை மெல்ல அணுகி, “ஏன் சார், அந்த மோகன் பதை பதைக்கும் வெய்யிலில் கடற்கரையில் திரிந்து கொண்டிருக்கிறானே, அதைப் பற்றி ஏதாவது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டான்.

     “தெரியாதே!” என்றான் மணி, ரத்தினச் சுருக்கமாக.

     “போங்கள் சார்! அவனைப் பற்றி உங்களுக்குத் தெரியாதென்றால் வேறு யாருக்குத் தெரியப் போகிறது?” என்றான் அவன்.

     “என்ன தான் நண்பனாயிருந்தாலும், ஒருவனைப் பற்றி இன்னொருவனுக்கு எல்லாமே தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை; தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமும் கிடையாது!” என்றான் மணி, மேலும் பேச்சை வளர்த்த விரும்பாமல்.

     அவன் போய்விட்டான்; ‘இந்த ஆபீஸ் வேறு எங்கேயாவது இருந்து தொலைத்திருக்கக் கூடாதா? அவனும் கடற்கரையிலேயேத் திரிந்து கொண்டிருக்கிறான்; இதுவும் கடற்கரையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. இவனைத் தொடர்ந்து இன்னும் எத்தனை பேர் வந்து அவனைப் பற்றி என்னிடம் கேட்கப் போகிறார்களோ? அவர்களுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்லப் போகிறேனோ?’ என்று முணுமுணுத்தவனாய் எடுத்த ‘பைலை’ எடுத்த இடத்திலேயே விட்டெறிந்துவிட்டு எழுந்து நின்றான் மணி.

     “ஐயா உங்களைக் கூப்பிடுகிறார்!” என்ற ‘அழைப்பு’டன் அவனுக்கு எதிர்த்தாற் போல் வந்து நின்றான் பிச்சையா.

     “நல்ல சமயத்தில்தான் நீயும் வந்து கூப்பிடுகிறாய்; இதோ வந்துவிட்டேன் என்று சொல்!” என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டு, அருகிலிருந்த தண்ணீர்க் கூஜாவை எடுத்து அதே மூச்சில் ஒரு நெட்டு நெட்டிவிட்டுப் பரந்தாமன் அறைக்குள் நுழைந்தான் மணி.

     “வாருங்கள்; உட்காருங்கள்!” என்றார் அவர்.

     “உட்காரச் சொல்வது உங்கள் கடமை: நிற்பது என் கடமை. நீங்கள் விஷயத்தைச் சொல்லுங்கள்” என்றான் அவன்.

     “காலையிலிருந்து நான் உங்களிடம் கொஞ்ச நேரம் தனியாகப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்; பேசலாமா, வேண்டாமா என்று தயங்கித் தயங்கி நிற்கிறேன்!”

     “பேச வேண்டுமானால் பேசிங்கள்; பேச வேண்டாமென்றால் பேச வேண்டாம்!”

     “நானும் அப்படிச் சொல்லி, நீங்களும் இப்படிச் சொன்னால் என்ன செய்வதென்று தெரியவில்லையே எனக்கு! எதற்கும் இன்னும் கொஞ்சம் நேரம் நான் யோசித்துப் பார்க்கிறேன்; நீங்கள் போய் வருகிறீர்களா?” என்றார் அவர்.

     ‘இதற்குத்தானா என்னைக் கூப்பிட்டீர்கள்!’ என்பது போல் முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு அவன் திரும்பினான்.

     “ஒரு நிமிஷம்!” என்றார் அவர் மீண்டும்.

     “என்ன, சொல்லுங்கள்?” என்றான் அவன், மறுபடியும் திரும்பி.

     “இன்று மாலை என்னுடன் எங்கள் வீட்டுக்கு வர முடியுமா, உங்களால்?”

     “மன்னிக்க வேண்டும்; இன்று வேறொருவரிடம் நான் போக வேண்டியிருக்கிறது!”

     “நாளை?”

     “அவசியம் வருகிறேன்!”

     அவன் போய்விட்டான்; ‘இவனைத் தவிர வேறு யாரிடமும் அதைச் சொல்ல முடியாது; ஆனால், எப்படிச் சொல்வது என்றுதான் தெரியவில்லை!’ என்று தனக்குத்தானே எண்ணிப் பெருமூச்சு விட்டார், அவர்!

     அருணாவின் சடலம் கடற்கரையில் ஒதுங்கும், ஒதுங்கும் என்று அன்று முழுவதும் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்த மோகன், கடைசியாக அலுத்துப் போய் அங்கிருந்த ஒரு கட்டுமரத்தின் மேல் உட்கார்ந்தான்.

     இப்போது அவன் கண்கள் அழுது புலம்பவில்லை. மனம்தான் அழுது புலம்பிக் கொண்டிருந்தது.

     ஐயோ, அருணா! என்னை விட உன்னை நான் தைரியசாலி என்று நினைத்தேனே? கடைசியில், எனக்குள்ள தைரியம் கூட உனக்கு இல்லாமற் போய்விட்டதே?

     அப்படி என்ன நடந்துவிட்டது, இவ்வளவு அவசரப்பட்டு நீ இந்த முடிவுக்கு வந்துவிட? - அப்பா சொன்ன ஒரு வார்த்தை, அப்பா அடித்த ஓர் அடி - அதற்கா இவ்வளவு பெரிய தண்டனை எங்களுக்கு?

     ஒரே ஒரு முடி உதிர்ந்தால் கூட கவரிமான் உயிர் வாழாது என்கிறார்களே, அந்த இனத்தைச் சேர்ந்தவளாகவல்லவா ஆகிவிட்டாய், நீ? - அந்த அளவுக்கு அப்பா என்ன செய்தார், உன்னை? யாரோ ஒரு கயவனுடன் அவர் உன்னை விளையாடவிட்டு வேடிக்கை பார்த்தவர் என்று எழுதியிருக்கிறாயே, அந்த விளையாட்டா உன்னை இந்த வினைக்கு உள்ளாக்கிவிட்டது?

     தாங்க முடியாத துக்கம் அருணா, இது தாங்க முடியாத துக்கம்! - மானம் பெரிதென்று நினைக்கும் நீ, வாழ்வு பெரிதென்று நினைக்கும் அப்பாவுக்கா பெண்ணாய் வந்து பிறக்க வேண்டும்? அதற்காக வாழ்வைக் காதலிக்க வேண்டிய இந்த வயதிலே, நீ சாவையா காதலிக்க வேண்டும்?

     அப்பாவுக்காகச் சாகத் துணிந்த நீ, அம்மாவுக்காக வாழத் துணிந்திருக்கக் கூடாதா? - அவர்கள் என்ன செய்தார்கள் உன்னை? சேதி கேட்டு அலறி விழுந்தவர்கள் இன்னும் எழுந்திருக்கவேயில்லையே, அருணா!

     அவர்களுக்கு அடுத்தபடியாக அந்த வீட்டில் என் அன்புக்கு ஆதாரமாயிருந்த ஒரே ஜீவன் நீ! - உன்னுடைய பிரிவை நான் எப்படிச் சகிப்பேன்? உன்னுடைய மறைவை நான் எப்படி மறப்பேன்?

     உலகமெல்லாம் சமாதானத்தில்தானே சந்தோஷம் கிடைக்கும் என்கிறார்கள்; ஆனால் எனக்கோ உன்னுடன் சண்டையிடுவதில்தான் சந்தோஷம் இருந்தது! - அந்தச் சந்தோஷத்துக்காக இனி நான் யாருடன் சண்டையிடுவேன், யாருடன் சச்சரவிடுவேன்?

     நீ இல்லாத அந்த வீட்டில் இனி என்ன இருக்கப் போகிறது, எனக்கு? - அப்பாவின் உருட்டலும் மிரட்டலும் இருக்கும்; அம்மாவின் கண்ணீரும் கம்பலையும் இருக்கும்! - அதைத் தவிர அன்புக்கென்று ஒரு ஜீவன், ஆசைக்கென்று ஒரு ஜீவன் அங்கே ஏது அருணா, ஏது?

     இந்த ஆறாத் துயருடன் அவன் ஆழ்கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, ‘ஏன், நான் இல்லையா?’ என்பது போல் பாமா வந்து நின்றாள், அவனுக்கு எதிரே!

     அவளைக் கண்டதும், “நீ எப்படி வந்தாய், இங்கே?” என்றான் அவன், அந்த நிலையிலும் வியப்புடன்.

     “உன்னைப் பார்க்க வேண்டுமென்று சொன்னார்கள்; அழைத்துக் கொண்டு வந்தேன்!” என்றான் மணி, அவளை முந்திக்கொண்டு.