33. நீதியும் மனிதனும்

     தெய்வம் தவறு செய்கிறதோ இல்லையோ, மனிதன் தவறு செய்கிறான். தவறு செய்யாவிட்டால் அவன் மனிதன் அல்ல; தெய்வம்!

     இப்படி ஒரு நியதி இந்த உலகத்தில் தொன்றுத் தொட்டு இருந்து வருகிறது. இதற்கு யார் காரணமோ, எது காரணமோ அது யாருக்கும் தெரியாஹ்டு.

     ஆனால் இந்தத் தவறு செய்யும் மனிதன் இருக்கிறானே, இவன் ‘மனிதன் தவறு செய்வது இயற்கை’ என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிடுவதில்லை. அந்தத் தவற்றை விசாரிக்க இன்னொரு மனிதனின் உதவியை நாடுகிறான்; அதற்குரிய தண்டனையை வழங்குமாறு வேறொரு மனிதனின் தயவை வேண்டுகிறான்!

     இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே தவறு செய்யக் கூடிய மனிதர்கள்தான் என்றாலும், நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதாக அவன் மனப்பால் குடிக்கிறான்!

     வேடிக்கையாயில்லையா, இது?

     இந்த வேடிக்கைக்குத் தன்னையும் உள்ளாக்கிக் கொள்ள, நினைத்துத் தோல்வியுற்ற மணி, மேற்கண்டவாறு எண்ணிக் கொண்டே போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்து மோகனின் வீட்டை அடைந்த போது மணி எட்டுக்கு மேலிருக்கும். அருணாவை எதிர்பார்த்து வாசலில் நின்று கொண்டிருந்த அன்னபூரணியம்மாள், அவனைக் கண்டதும் வழி மறிக்காதவள் போல் வழி மறித்து நின்று, “ஏண்டா மணி, இன்று நடந்ததெல்லாம் உண்மைதானா? மோகனைக் கேட்டால் ஒன்றுமே சொல்லமாட்டேன் என்கிறான்; அதனால்தான் உன்னைக் கேட்கிறேன்!” என்றாள் அவனை வாசலில் நிற்க வைத்து!

     “உண்மைதான்! ஆனால், வீட்டுக்கு உரியவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரே, எங்களையும் கள்ளக் கடத்தல் பேர்வழிகள் என்று. அதுதான் உண்மையில்லை!” என்றான் மணி.

     “அது எனக்குத் தெரியும்; இங்கே ஒருவன் அவரைத் தேடிக் கொண்டு வந்தானே, அவன் தானே அந்தப் பேர்வழி?”

     “ஆமாம்; அவனுக்கு உடந்தையாயிருந்திருக்கிறான் அந்த ஓட்டல்காரன்!”

     “என்ன இருந்தாலும் நீ அவனை அப்படி அடித்திருக்கக் கூடாது!”

     “நான் என்னம்மா, செய்வேன்? அந்த வகையிலாவது எனக்குக் கிடைக்க வேண்டிய நீதியை என்னால் தேடிக் கொள்ள முடிகிறதே என்பதில் எனக்கு ஒரு திருப்தி. அந்தத் திருப்தி கூட இல்லாமல் எத்தனை பேர் இந்த உலகத்தில் அவனைப் போன்றவர்களுக்கு நித்த நித்தம் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்!”

     இதைச் சொல்லும்போது உணர்ச்சி வசப்பட்ட அவன், தன்னை மீறி வந்தத் துக்கத்தை அடக்க முயன்றான். அதற்குள், “என்னமோ, போ! கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்!” என்று ‘முத்தாய்ப்பு’ வைத்துக் கொண்டே கதவைச் சாத்திவிட்டு, உள்ளே போவதற்குத் தயாரானாள் அவள், எங்கே அவன் தன்னைத் தொடர்ந்து உள்ளே வந்து விடுவானோ, என்னமோ என்று பயந்து!

     அது தெரிந்தும், “மோகன் இல்லையா வீட்டில்?” என்று கேட்டுக் கொண்டே அவளைத் தொடர்ந்து உள்ளே ஓர் அடி எடுத்து வைத்தான் மணி, தெரியாதவன் போல.

     அவனைத் தடுத்து நிறுத்த அவளுக்கு வாயும் வரவில்லை; மனமும் வரவில்லை. அதற்காகத் தன் கணவர் தனக்கு இட்டக் கட்டளையை அவனிடம் தெரிவிக்கவும் அவள் விரும்பவில்லை. இருந்தாலும், நிலைமையை எப்படியாவது சமாளிக்க வேண்டுமே என்று எண்ணி, அவன் கேட்டதற்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், “அவன் வந்ததும் ஓட்டலுக்கு வந்து உன்னைப் பார்க்கச் சொல்கிறேன்; நீ போ!” என்றாள் சுற்றி வளைத்து!

     அதற்கு மேல் அவளைச் சோதிக்க விரும்பாமல், “வேண்டாம்; இனிமேல் அவன் அந்த ஓட்டலுக்கு வர வேண்டாம். அதைச் சொல்லத்தான் வந்தேன், நான்!” என்று சொல்லிவிட்டு, மணி திரும்பினான்.

     அவன் தலை மறைந்ததும் உள்ளேயிருந்து மோகன் வெளியே வந்து சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

     “நீ எதைச் சொல்லப் பயந்தாயோ, அதை அவன் எவ்வளவு தைரியமாகச் சொன்னான் பார்த்தாயா, அம்மா?”

     “சொல்வது எதுவாயிருந்தாலும் அதைச் சொல்லத் தைரியம் மட்டும் இருந்தால் போதாது; நோக்கம் வேறு நல்ல நோக்கமாயிருக்க வேண்டும். அது அவன் சொல்வதில் இருக்கிறது; நாம் சொல்வதில் இல்லை. அதனால்தான் நாம் பயப்படுகிறோம்; அவன் தைரியமாயிருக்கிறான்!” என்றாள் அன்னபூரணி.

     “அதை நீயாவது புரிந்து கொண்டிருக்கிறாய்? அதுவே போதுமம்மா எனக்கு, அதுவே போதும்!” என்றான் அவன்.

     “அதற்காக நீ உன் அப்பாவை எதிர்த்து நிற்காதே! அதுவும் பிடிக்கவில்லை எனக்கு. என்ன இருந்தாலும் அவர் உன் தகப்பனார்; அவருக்கு நீ அடங்கித்தான் நடக்க வேண்டும்!” என்றாள் அவள், பேச்சோடு பேச்சாக.

     “எந்த வகையில் அடங்கி நடக்கச் சொல்கிறாய், என்னை? அவர் திருடர்களுக்குத் துணையிருக்க வேண்டும் என்கிறார்; நானும் துணையாயிருக்க வேண்டுமா? அவர் கள்ளக்கடத்தல் பேர்வழிகளுக்கு உடந்தையாயிருக்க வேண்டும் என்கிறார்; நானும் உடந்தையாயிருக்க வேண்டுமா? அவர் பணத்துக்காக ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையையே பலி கொடுக்க வேண்டும் என்கிறார்; நானும் பலி கொடுக்க வேண்டுமா? எத்தனையோ அயோக்கியர்களுக்கு மத்தியில் இந்த வீடு தேடி வந்த ஒரே ஒரு யோக்கியனை அவர் இனி உள்ளே வர வேண்டாம் என்கிறார்; நானும் உள்ளே வரவேண்டாம் என்று சொல்ல வேண்டுமா...?”

     அவன் அடுக்கினான்; அவள் திணறிப் போய், “போதுமடா, போதும்! வயதுக்கு வந்த பிள்ளையையும் பெண்ணையும் எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று அவருக்கும் தெரியவில்லை; அவருடைய விருப்பப்படியே நடப்பதுபோல நடந்து, அவரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று உங்களுக்கும் தெரியவில்லை. நான் என்ன செய்வேன்? அவரைப் பார்ப்பேனா, உங்களைப் பார்ப்பேனா?” என்றாள் வாடிய முகத்துடன்.

     “அவரையே பார்த்துக்கொள் அம்மா, எங்களை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!”

     இதைச் சொல்லிவிட்டு அவன் அங்கே நிற்கவில்லை; ‘விர்’ரென்று வெளியே போய்விட்டான் - மணியைப் பிடிக்கத்தான்!

     அவன் போன திசையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்ற அன்னபூரணி, “நேற்றுவரை அசடாயிருந்த இவன், இன்று எப்படித்தான் இப்படி மாறிவிட்டானோ தெரியவில்லை?” என்றாள் பெருமூச்சுடன்.

     ஆம், மோகன் மாறித்தான் போயிருந்தான்! அதற்கு முக்கியமானக் காரணங்கள் இரண்டு. ஒன்று, எதற்கும் மாறாத பாமாவின் காதல்; இரண்டு எதற்கும் அஞ்சாத மணியின் வீரம்!

     இந்த இரண்டும் சேர்ந்து அசடாயிருந்த அவனைச் சமர்த்தாக மட்டும் ஆக்கவில்லை; ‘அரை மனித’னாயிருந்த அவனை ‘முழு மனித’னாகவும் ஆக்கிவிட்டிருந்தன.

     அந்த முழு மனிதனைக் கண்டுதான் இப்போது அப்பாவும் மிரள்கிறார்; அம்மாவும் மிரள்கிறாள்!

     இந்த நிலையிலே தன் தந்தையின் எதிர்காலக் கனவுகளிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்வது கூட அவ்வளவு பெரிதாகப் படவில்லை அவனுக்கு; அருணாவை விடுவிப்பதுதான் பெரிதாகப் பட்டது.

     அவளுக்குத் தன்னால் என்ன செய்யமுடியும், எந்த வகையில் உதவ முடியும்?

     இந்த யோசனையுடன்தான் அன்று காலை அவன் மணியின் அறையை அடைந்தான். அவன், இவன் சொன்னதையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, “இது கூட்டுறவு யுகம். இந்த யுகத்தில் ‘காதல் கல்யாணம்’ கூட்டுறவு வியாபாரமாயிருக்கிறது. கட்டாயக் கல்யாணம் தனியார் வியாபாரமாயிருக்கிறது. முதல் கல்யாணத்தில் லாபத்துக்கு அவ்வளவாக இடமில்லை; இரண்டாவது கல்யாணத்தில் லாபத்துக்கு நிறைய இடமிருக்கிறது. இவற்றில் உண் அப்பாவுக்கு எது பிடிக்குமோ, உனக்கு எது பிடிக்குமோ, என்ற வினாக்களுக்குத் தான் விடை காண வேண்டும். இதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை எனக்கு; நீ வேண்டுமானால் பாமாவுடன் கலந்து யோசித்துப் பாரேன்?” என்று சொல்லிவிட்டான்.

     இது குத்தலாகப் பட்டது மோகனுக்கு; மணியுடன் வம்புக்கு நின்றான். அந்த வம்பு சண்டையாயிற்று; அந்தச் சண்டை பிறகு சமாதானமாயிற்று. கடைசியில், “இப்போது நீ வேலைக்கு வரப்போகிறாயா, இல்லையா?” என்றான் அவன் பொய்யான கோபத்துடன்; “வர முடியாது!” என்றான் இவனும் பொய்யான கோபத்துடன். “சரி!” என்று அவன் கீழே இறங்கினான்; “நில்!” என்று அவனை அங்கேயே நிற்க வைத்துவிட்டு, இவன் இரண்டு கடிதங்களை எழுதி அவனிடம் கொடுத்தனுப்பினான். ஒன்று, விடுமுறைக்காகப் பரந்தாமனுக்கு; இன்னொன்று, முடிந்தால் அன்று மாலை தன்னை வந்து பார்ப்பதற்காகப் பாமாவுக்கு.

     எது எப்படி ஆனாலும் அன்று மோகன் வீடு திரும்புவதாக இல்லை. அன்று மட்டும் என்ன, முடிந்தால் இன்னும் இரண்டு நாட்கள் கூட அவன் தன் அப்பாவுக்காக, ‘அஞ்ஞாத வாசம்’ செய்யத் தயாராயிருந்தான். அதனால் அவருடைய மனம் ஏதாவது மாறுதலை அடைகிறதா, இல்லையா என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்துகொள்வதற்காக. ஆனால் நடந்தது? அதற்கு நேர் விரோதமானது!

     யாரோ ஒருத்திக்காக இந்த மணி அந்த சுந்தருடன் வம்புக்கு நிற்க, அவன் இவனைப் பழி வாங்க நினைக்க, அதில் நான் சிக்கிக்கொள்ள, அதற்காகத் தன் அப்பாவின் உதவியை நாடுவதற்காக அங்கே இவன் போக, அன்று மாலையே அல்லவா தான் வீடு திரும்ப வேண்டியதாகி விட்டது?

     அப்படித்தான் திரும்பினேனே, இவனைத் தடுத்து நிறுத்தவாவது முடிந்ததா, என்னால்? அதுவும் இல்லை!

     எங்கிருந்தோ வந்தான் அந்த சுந்தர்! அவனை ஒரு பிடி பிடித்துவிட்டு, இவன் போய்விட்டான் சர்மாஜியைக் கவனிக்க!

     அவர் என்ன, அவ்வளவு சாதாரணமானவரா - ‘பயல் தொலைந்தான்; இவனுக்காக இனி அப்பாவின் உதவியைக் கூட நாடமுடியாது நம்மால்’ என்று நினைத்துக் கொண்டிருந்தால், மறுபடியும் வந்து நிற்கிறான் இவன் அவருக்கு முன்னால்! - எதற்காக? அடிபட்ட சுந்தரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக; ‘அவனை நான் அடித்து விட்டேன்!’ என்று இவனே போய்ப் போலீசாரிடம் புகார் செய்வதற்காக!

     இப்படியும் ஒரு வேடிக்கையான மனிதன் இருப்பானா, இந்த உலகத்தில்? - ‘சரி, ஏதோ கெட்ட காலம்; இனி இவனை யாராலும் காப்பாற்ற முடியாது!’ என்று இவனைப் பொறுத்தவரை எல்லா நம்பிக்கைகளையும் இழந்து விட்டு நிற்கும் போது மீண்டும் வருகிறான், என்னை ஓட்டல் அறைக்கு வரவேண்டாம் என்று எச்சரிக்க!

     இவன் சொன்னால் இவனுடைய அறைக்கு நான் வராமல் இருந்து விடுவேனா? - நான் சொல்வதை இவன் கேட்காத போது, இவன் சொல்வதை மட்டும் நான் ஏன் கேட்க வேண்டுமாம்? - பார்த்துக் கொண்டே இருங்களேன், என்னதான் நடக்கப் போகிறதென்று?

     இவன் இப்போது வழியிலேயே கிடைத்தால் ஆச்சு, கிடைக்காவிட்டால் இவனுடைய அறைக்கு நான் போகத்தான் போகிறேன் - என்ன செய்து விடுவானாம், இவன் என்னை?

     யாரோ ஒருத்திக்காக இவன் மட்டும் என்னப் பாடு வேண்டுமானாலும் படலாம், இவனுக்காக நான் எந்த பாடும் படக் கூடாதா?

     இருடா பயலே, இரு! - அருணாவுக்கும் மற்றும் எனக்கும் முதலில் கல்யாணமாகட்டும்; அதற்குப் பிறகு பார், நீ வேண்டாமென்றாலும் உன்னுடைய தலையிலே ஒரு பெண்ணைப் பிடித்துப் பலவந்தமாகக் கட்டி, நீ வீண் விவகாரத்துக்குப் போகும் போதெல்லாம் அவளைக் கொண்டு உன்னை நான் மத்தால் மொத்தச் சொல்லா விட்டால் என் பெயர் மோகன் அல்ல!

     இந்தச் சூளுரையுடன் வழியெல்லாம் மணியைப் பார்த்துக் கொண்டே சென்ற மோகன், அவனைக் காணாமல் கடைசியாக அவன் அறையையே அடைந்து விட்டான்!

     ஆனால் என்ன ஏமாற்றம்! அங்கே அவன் கதவைத் தட்டியதும் அவன் எதிர்பார்த்தபடி மணி வந்து கதவைத் திறக்கவில்லை; சங்கர்தான் வந்து கதவைத் திறந்தான்.

     “என்னடா சங்கர், எங்கே மணி?”

     “பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறார், சார்!”

     “என்ன, பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலா?”

     “ஆமாம் சார், அங்கேதான் அவர் இருக்க வேண்டும்!”

     “என்ன உளறுகிறாய்? இருக்கிறார் என்கிறாய், இருக்க வேண்டும் என்கிறாய்...!”

     “நிலைமை அப்படி சார்! இருந்தால் அவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் போலீஸ் ‘லாக்-அப்’பில் இருக்கவேண்டும்...”

     “அப்போதே நினைத்தேன்; அவனையும் பிடித்துவிட்டார்களா, இங்கே?”

     “இல்லை; இவர்தான் ‘என்னைப் பித்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வதற்காக அவர்களைத் தேடிக் கொண்டு போனார்!”

     “எதற்கு?”

     “நான்தான் உங்களிடம் சொன்னேனே, அந்த சுந்தரைப் பற்றி - அவனை இவர் அடித்துவிட்டாராம்!”

     “ஓ, அதுவா? அது எனக்கும் தெரியும்; அதற்குப் பின் என்ன ஆயிற்று? அதுதானே தெரிய வேண்டும், எனக்கு!”

     “எனக்கும் அதுதான் தெரியவில்லை, சார்! ஏழு மணி இருக்கும்; அறையின் சாவியை என்னிடம் கொடுத்து, ‘நான் திரும்பி வரும்வரை இதை நீயே வைத்துக்கொள்’ என்றார். ‘எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டேன்; ‘சுந்தரை அடித்து விட்டேன் என்று போலீசாரிடம் சொல்லிவிட்டு வருவதற்காக!’ என்றார். நான் சிரித்தேன். ‘என்னடா சிரிக்கிறாய்?’ என்றார். ‘உங்களைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பினாலும் அனுப்பிவிடுவார்கள், சார்!’ என்றேன். ‘அனுப்பினால் அனுப்பட்டும்!’ என்று அவர் போய்விட்டார்!”

     “இதெல்லாம் ஏழு மணிக்குத்தானே நடந்தது?”

     “ஆமாம், சார்!”

     “அவன் இப்போது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தானேடா! என் அம்மாவால் அவனை நான் அங்கே பார்த்துப் பேச முடியாமற் போய்விட்டது!”

     “அப்படியானால் போலீசார் அவரைப் ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரி’க்கும் அனுப்பவில்லை, ‘லாக்-அப்’பிலும் தள்ளவில்லை என்று அர்த்தம்!”

     “அர்த்தம் சரி; இப்போது எங்கே போயிருப்பான் அவன்?”

     “வேறு எங்கே போயிருக்கப் போகிறார், கடற்கரைக்குப் போயிருப்பார்!”

     “நீ சொல்வது சரி, எனக்கும் இப்போது கடற்கரைக்குப் போனால் தேவலை என்று தோன்றுகிறது. நான் வருகிறேன். முடிந்தால் அவனை நான் அங்கேயே பார்த்துக் கொள்கிறேன்; இல்லாவிட்டால் அவன் வந்ததும் நீ சொல், இன்றிரவு நானும் இங்கே வந்து படுத்துக் கொள்ளப் போகிறேன் என்று!”

     மோகன் போய்விட்டான். “தாராளமாகப் படுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இருக்கவே இருக்கிறது, வராந்தா!” என்று சொல்லிக் கொண்டே சங்கர் கதவைச் சாத்திக் கொண்டான்.