உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
18. யார் இந்தச் சுந்தர்? வாழ்க்கை எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமாகத் தோன்றுகிறது. ஆனால் சுந்தருக்கோ அது ஒரு விளையாட்டாகத் தோன்றிற்று. காரணம், அவன் அப்பா சுகானந்தத்துக்கே அது இன்னும் ஒரு விளையாட்டாக இருந்து வந்ததுதான்! வாழ்க்கையென்றால் பொறுப்புணர்ச்சி மிக்கதாயிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது அல்லவா? அந்தப் பொறுப்புணர்ச்சியெல்லாம் அவரிடம் கிடையாது - கண்டதேக் காட்சி; கொண்டதேக் கோலம். அதுதான் அவருடைய வாழ்க்கை! - அத்தகைய வாழ்க்கைக்கு அடிப்படையாயிருந்தது சர்வ வல்லமையுள்ள பணம்! ஆம், ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரிகளில் குறிப்பிடத்தக்க ஒருவராயிருந்து வந்த அவருக்குச் சென்னை மாநகரில் மட்டும் நாலைந்து குடும்பங்கள் இருந்தன - நாலைந்து குடும்பங்கள் என்றால் நாலைந்து ‘துணைவிமார்’கள் என்று அர்த்தம். இந்தத் துணைவிமார்களைத் தவிர, ‘மனைவி’ என்று ஒருத்தியும் அவருக்கு உண்டு. சாத்திரத்துக்காகவும், சம்பிரதாயத்துக்காகவும்! - இவர்களைத் தவிர கல்கத்தா, பம்பாய், டெல்லி போன்ற நகரங்களிலும் அவருக்கு ஆசை நாயகிகள் பலர் இருப்பதாகக் கேள்வி! போதும் போதாததற்கு அவற்றிலும் ஒரு மாறுதல் வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம், அவர் அதற்கென்றே அயல்நாடுகளுக்கும் போய்விடுவாராம்; அங்கெல்லாம் அவருக்கு வியாபாரத் தொடர்பு உண்டோ இல்லையோ; ‘அந்தத் தொடர்பு’ மட்டும் உண்டு என்று அவருடன் நெருங்கிப் பழகும் ‘அவரைப் போன்ற பெரிய மனிதர்கள்’ சொல்கிறார்கள்! சொல்கிறார்கள் என்றால், அவருடைய பெருமைக்கு அதை ஓர் இழுக்காகக் கருதிச் சொல்லவில்லை; சிறப்பாகக் கருதியே சொல்கிறார்கள்! அத்தகைய பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகளில் ஒருவனாகப் பிறந்துவிட்ட சுந்தருக்குத் தன் அப்பாவைப் போலவே தானும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்காதா? - இருந்தது; ஆனால் அதற்கு வேண்டிய பணம் தான் அவன் பொறுப்பில் இல்லை! அதை நினைக்கும் போதெல்லாம் ஆத்திரம் ஆத்திரமாக வரும் அவனுக்கு. அப்பா நினைத்தால் ஒரு பெண்ணைப் பிடிக்கிறார்; உடனே அவளுக்கு நகை, நட்டு, துணிமணி, வீடு வாசல் எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார். அவள் மேல் கொண்ட ஆசை தீரும் வரை அவளுடன் குடித்தனம்; அதற்குப் பிறகு தடித்தனம் - அதாவது ‘தன்னை விட்டால் போதும்!’ என்ற நிலைக்கு அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுத் தான் தப்பிவிடுவது! இந்த முறையில் வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு என்றாலும், அதை ‘நிரவல்’ செய்ய அவரிடம் எல்லாம் வல்ல பணம் இருக்கிறது. அந்தப் பணத்தின் பக்கபலத்தைக் கொண்டு, ‘அடுத்தது, அடுத்தது?’ என்று அவர் பாட்டுக்குத் தாவிக் கொண்டே இருக்கிறார்! தனக்கோ? - ஏதோ கேட்கும்போது ஏதாவது கொடுத்து விட வேண்டியது - அதோடு சரி! அப்படித்தான் என்ன கேட்க முடிகிறது, அவரை? - மைனர் சங்கிலி கேட்க முடிகிறது; டெர்லின் சட்டை கேட்க முடிகிறது. ‘ரோலெக்ஸ்’ கடிகாரம் கேட்க முடிகிறது; வைர மோதிரம் கேட்க முடிகிறது; செலவுக்கு ஐம்பதும் நூறும் வேண்டுமென்றால் கேட்க முடிகிறது - அவற்றைத் தவிர? அருணாவைப் போன்ற ஆரணங்களுக்கு நகை நட்டு வேண்டுமென்றால் கேட்க முடிகிறதா? துணிமணி வேண்டுமென்றால் கேட்க முடிகிறதா? வீடு வாசல் வேண்டுமென்றால் கேட்க முடிகிறதா? அதெல்லாம் கேட்க முடியாமல்தானே அவளைப் போன்றவர்களைத் தன் காரியம் முடியும் வரை ‘கல்யாணம் செய்து கொள்கிறேன், கல்யாணம் செய்துகொள்கிறேன்!’ என்று சொல்லிக் காதலித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது? அதனால்தானே பல சிக்கல்களுக்கு உள்ளாகித்தான் அவ்வப்போது தவிக்க வேண்டியிருக்கிறது? என்னத் தொல்லை, போங்கள்! - ஏழையாய்ப் பிறந்தாலும் தொல்லையாயிருக்கிறது; பணக்காரனாய்ப் பிறந்தாலும் தொல்லையாயிருக்கிறது! என்ன வேதனை, என்ன வேதனை! - நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறதே? இப்போதுப் பார், இந்த அருணா இங்கே வந்திருப்பாள் என்று நினைத்தேனா? - இல்லை, ஓட்டல் வாசலோடு என்னை விட்டிருப்பாள் என்று நினைத்தேன்! - ‘இவள் போனால் இன்னொருத்தி’ என்று ரூபாவை இங்கே வரச் சொல்லிவிட்டு வந்தேன்; அவளும் வந்தாள் - ஆனந்தமாக சினிமாப் பார்த்துவிட்டு அடுத்தாற்போல் வேறு ஏதாவது ஓர் ஓட்டல் அறையை நாடலாமென்று இருந்தேன்! - அதற்குள் என்ன நடக்கிறது? - இவள் எனக்கு அவளை அறிமுகம் செய்து வைக்கிறாளாம், அறிமுகம்! இனிமேல் நான் இங்கே நிற்க முடியுமா? நழுவ வேண்டியதுதான்! - இப்படி எத்தனை நாட்கள் நழுவிக் கொண்டு இருப்பேன், நான்? இந்த இடம் மட்டும் பொது இடமாயில்லாமல் தனி இடமாயிருந்திருந்தால்? - அருணாவும் என்னிடமிருந்து தப்பியிருக்க முடியாது; ரூபாவும் என்னிடமிருந்து தப்பியிருக்க முடியாதே! இதற்குத்தான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அப்பா சாகவேண்டுமென்று நான் நினைக்கிறேன். எங்கே சாகிறார்? சில பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கென்றே உண்டான இந்த வருத்தத்துடன் அவன் அங்கிருந்து நழுவியபோது, வலிமை மிக்க கை ஒன்று அவனுடைய கையை அழுத்திப் பிடித்தது. திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது அந்தக் கை மணியின் கையாயிருந்தது! காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|