7. “ஐயா கூப்பிடுகிறார்!”

     விஷயம் எதுவாயிருந்தாலும் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் எப்பொழுதுமே வல்லவன், மோகன். எனவே, மணி லீவு எடுத்துக் கொண்டதும் அவனுக்கு ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. அந்த லீவைக் காரணமாக வைத்துக் கொண்டு, “பார்த்தாயா, பாமா? அவனுக்கே நம்முடைய முகத்தில் விழிக்க அவ்வளவு சீக்கிரம் அவன் மனம் இடம் கொடுக்கவில்லை போலிருக்கிறது; அதனால் தான் லீவு எடுத்துக் கொண்டு விட்டான்!” என்று அவன் அவளிடம் கரடி விட்டான்; அந்தக் கரடியை அவளும் நம்பினாள் - நம்பாமல் என்ன செய்ய முடியும், தன்னுடைய அழகில் தனக்கே இருந்த ஒரு நம்பிக்கையை அது மேலும் கொஞ்சம் உறுதிப்படுத்திக் கொள்ள உதவும் போது?

     இந்த நிலையில் ஒரு நாள் அவளிடம் வந்து, “ஐயா, கூப்பிடுகிறார்!” என்றான் பியூன் பிச்சையா.

     “என்னையா?” என்று திடுக்கிட்டுக் கேட்டாள் பாமா.

     “ஆமாம், உங்களைத்தான்!” என்றான் அவன்.

     வந்ததும் வராததுமாக ஐயா தன்னை ஏன் கூப்பிட வேண்டும்? - தனக்குத் தெரிந்து வேலையில் தான் எந்தவிதமான தவறும் செய்யவில்லை - அப்படியிருக்க அவர் தன்னை அழைக்கக் காரணம்?

     “ஏன் பிச்சையா, எதற்காகக் கூப்பிடுகிறார்?”

     “அதெல்லாம் எனக்கு எப்படி அம்மா, தெரியும்? - கூப்பிடச் சொன்னார், கூப்பிடுகிறேன் - அவ்வளவுதான் தெரியும், எனக்கு!”

     “சரி, இதோ வந்துவிட்டேன் என்று சொல்!” என்று அதுவரைதான் பார்த்துக் கொண்டிருந்த ‘பைலை’த் தூக்கித் தொப்பென்று கீழே போட்டுவிட்டு அவள் எழுந்தாள்; பியூன் பிச்சையா அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

     ‘அடுத்தாற்போல் அவன் மோகனிடம் போவானோ?’ என்று நினைத்த பாமா, அங்கேயே நின்றாள்; அவள் நினைத்தது நினைத்தபடியே நடந்தது - பிச்சையா மோகனை நோக்கித்தான் போய்க் கொண்டிருந்தான்.

     “சரி, நடப்பது நடக்கட்டும்!” என்று துணிந்து, பரந்தாமனின் அறைக்குள் நுழைந்தாள் அவள்.

     “வாருங்கள்; உட்காருங்கள்!” என்று தனக்கு எதிர்த்தாற் போல் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றைக் காட்டினார் பரந்தாமன்.

     அவள் உட்காரவில்லை; “சொல்லுங்கள்?” என்றாள் நின்று கொண்டே.

     “மனிதாபிமானத்துக்குப் புறம்பான இந்த மரியாதைகள் யாரிடமிருந்து கிடைத்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்வதில்லை; முதலில் நீங்கள் உட்காருங்கள்!” என்றார் அவர்.

     அவள் உட்கார்ந்தாள்; அவர் சொன்னார்:

     “பொதுவாக இங்கே வேலை பார்ப்பவர்களின் சொந்த வாழ்க்கையில் நான் குறுக்கிடுவதேயில்லை; அதற்கு விரோதமாக என்னை நீங்கள் குறுக்கிட வைத்திருப்பது குறித்து நான் வருந்துகிறேன்!”

     ‘வருந்துகிறேன்!’ - இந்த வார்த்தையை அடிக்கடி அர்த்தமில்லாமல் பயன்படுத்தக் கூடியவர் அல்ல, அவர். எப்பொழுதாவது ஒரு சமயம் தான் உபயோகிப்பார்; அப்படி உபயோகிக்கும் போது, அதில் அர்த்தமில்லாமலும் போகாது. அத்தகையவர் இன்று தன்னிடம் ‘வருந்துகிறேன்!’ என்று சொல்கிறார் என்றால், அவர் வருந்தக்கூடிய வகையில் தான் ஏதாவது தவறு செய்திருக்கத்தானே வேண்டும்! - அந்தத் தவறு ஒரு வேளை ‘அது’வாயிருக்குமோ?

     இப்படி நினைத்த பாமா, தலை குனிந்துச் சொன்னாள்:

     “அப்படியொன்றும் இல்லையே?”

     “இருக்கலாம்; அப்படியொன்றும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மிஸ்டர் மோகனிடம் நீங்கள் கொண்டுள்ள தொடர்பு...”

     அவ்வளவுதான்; “யார் சொன்னது, உங்களிடம்? அந்த மணி சொன்னாரா?” என்று தன்னையும் அறியாமல் இரைந்தாள் பாமா.

     “இரையாதீர்கள்; அதனால் உங்களுக்குத்தான் தீமை! அதிலும் மிஸ்டர் மணி இருக்கிறாரே, அவர் எதையும் யாரிடமும் வாயால் சொல்லிக் கொண்டிருப்பவர் அல்ல; தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை யென்றால், அதற்காக உடனே கையை நீட்டி விடுவதுதான் அவருடைய வழக்கம்!”

     அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை, அவளுக்கு - “அவர் இல்லையென்றால் அந்தப் பிச்சையா ஏதாவது உளறியிருக்க வேண்டும்!” என்றாள், கண்களில் தீப்பொரி பறக்க.

     “அவர்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் உங்களைப் பற்றித் தெரியாதென்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தவறு பாமா, தவறு! இம்மாதிரி விஷயங்கள் காற்றை விட வேகமாகப் பரவக்கூடியவை; அதிலும் நம்மவர்களுக்கு அவற்றைப் பரப்புவதில் எப்போதுமே ஒரு தனிச் சுவை உண்டு! - அதிருக்கட்டும், நான் சொல்ல வந்தது என்னவென்றால், மிஸ்டர் மோகனிடம் நீங்கள் கொண்டுள்ள தொடர்பு இயற்கையானது; வரவேற்கக் கூடியது; வாழ்த்தக் கூடியது. அதை யார் வெறுத்தாலும் நான் வெறுக்க மாட்டேன். ஆனால், வளரவேண்டிய இடம் இதுவல்ல; அதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும் - நீங்கள் போகலாம்!” என்று சொல்லி அவளை அனுப்பி விட்டுத் தம் மேஜையின் மேல் இருந்த மணியை ‘டங்’கென்று அடித்தார்; மோகன் வந்து நின்றான். பரந்தாமனும் சட்டென்று எழுந்து நின்று, “மனப்பூர்வமான வாழ்த்துக்கள், உங்களுக்கும் புதிதாகக் கிடைத்திருக்கும் உங்கள் காதலிக்கும்!” என்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

     “நன்றி; ஆனால் பழைய காதலி யாரும் இல்லையே சார், எனக்கு!” என்றான் அவன், அசட்டுச் சிரிப்புடன்.

     “மகிழ்ச்சி! ஆனால் உங்கள் காதல் வளர வேண்டிய இடம் இதுவல்ல; அதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும் - நீங்கள் போகலாம்!” என்றார் அவர்.

     ஆம், இருவருக்கும் ஒரே வார்த்தைதான்! - அதற்கு மேல் எதற்கு என்று அவர் நினைத்தாரோ என்னமோ, தான் ‘நல்லவ’ரா யிருந்ததால்!

     அன்று முழுவதும் அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை தன்னைப் படாத பாடு படுத்தி வைக்க, எப்படியோ காலத்தைக் கழித்துவிட்டு வெளியே வந்தாள் பாமா; மோகன் அவளுக்குப் பின்னால் வந்து, “என்மேல் கோபமா?” என்றான் மெல்ல.

     “ஆமாம், போங்கள்! உங்களால் தான் எனக்கு இந்த வம்பெல்லாம்!” என்றாள் அவள், வெடுக்கென்று.

     “இந்த ஒரு சோதனைக்கா இப்படி அரண்டு விட்டாய்? இன்னும் எத்தனையோ சோதனைகள் இருக்குமே, நமக்கு?”

     “இருக்கலாம்; ஆனால் அது மானத்தை வாங்கக் கூடியதாயிருக்கக் கூடாது, பாருங்கள்!” என்றாள் அவள்.

     “யார் இப்போது மானத்தை வாங்கி விட்டார்கள்? மிஸ்டர் பரந்தாமன் நம்மைக் கூப்பிட்டுத் தம்முடைய வாழ்த்துக்களையல்லவா தெரிவித்திருக்கிறார்?” என்றான் அவன்.

     “என்ன வாழ்த்தோ? எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை, போங்கள்!”

     இப்படிச் சொல்லிவிட்டு அவள் நடந்தாள்; அவன் தொடர்ந்து, “என்னையாவது பிடிக்கிறதா, அதுவும் இல்லையா?” என்றான் சிரித்துக் கொண்டே.

     அவ்வளவுதான்; அவளும் சிரித்து விட்டாள்! - அது போதாதா, அவனுக்கு? - அவளுடன் ‘வெற்றிநடை’ போட ஆரம்பித்து விட்டான்.