உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
30. உண்மை ஓர் அனாதை! மனிதன் விசித்திரமானவன்; அவனை விட விசித்திரமானது அவனுடைய உள்ளம். இந்த இயற்கை நியதியை ஒட்டியோ என்னமோ, ஆபத்சகாயத்தின்மேல் கொண்ட ஆத்திரம் சிறிது நேரத்துக்கெல்லாம் அனுதாபமாக மாற்றிற்று மணிக்கு. அந்த அனுதாபத்தின் காரணமாக அவர் கொடுத்த காபியை வேண்டா வெறுப்பாகக் குடித்துவிட்டு அவன் கீழே இறங்குவதற்கும், மோகன் மேலே வருவதற்கும் சரியாயிருந்தது. “வா, மோகன்! எனக்காக விரித்த வலையில் நீ விழுந்து விட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்; எதிர்பாராமல் நடந்துவிட்ட இந்த விபரீதத்துக்காக என்மேல் நீ கோபம் கொண்டிருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன். என்ன, நான் நினைப்பது சரிதானா?” என்றான் மணி, அவனையே இமை கொட்டாமல் கவனித்தபடி. “நடந்தது நடந்துவிட்டது; அதற்கென்ன இப்போது?” என்றான் அவன் சோர்வுடன். அவன் அளித்த பதில் மணிக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆகவே, “சரி, வருகிறேன்!” என்றான் அவனும் சோர்வுடன். “எங்கே வந்தாய், எங்கே போகிறாய்?” “உனக்காகத்தான் உன் அப்பாவைப் பார்க்க வேண்டுமென்று வந்தேன். நான் வருவதற்குள் அவர் உனக்காகச் செய்ய வேண்டிய ஏற்பாட்டையெல்லாம் செய்து விட்டிருந்தார்; நீயும் வந்து சேர்ந்துவிட்டாய். இனி எனக்கு என்ன வேலை இங்கே? நான் வருகிறேன்!” என்று நடையைக் கட்டினான் மணி. “நில்; நானும் வருகிறேன்!” என்றான் மோகன். “நீ வருவதாயிருந்தால் இங்கிருந்து நான் போக மாட்டேன்!” “ஏன்?” “இப்போது நான் தனியாகப் போக வேண்டும்!” “அப்படிப் போக வேண்டாம் என்பதற்காகத்தான் நானும் வருகிறேன் என்கிறேன்!” “ஏன், என்ன நடந்தது அங்கே?” “அங்கே நடந்தது ஒரு பக்கம் இருக்கட்டும்; இப்போது நீ ஓட்டலுக்குத்தானே போகப் போகிறாய்?” “ஆமாம்!” “அங்கே போவதில் பிரயோசனமில்லை; ஏனெனில் சர்மாஜி அங்கே இருக்கமாட்டார்!” “வேறு எங்கே போயிருப்பார்?” “யாருக்குத் தெரியும், அங்கே உனக்காகப் போலீசார் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும்!” “எதற்கு, என்னைக் கைது செய்வதற்குத்தானே? அதனாலென்ன, நீதி என் பக்கம் இருக்கும்போது எனக்கு என்ன பயம்?” “அதனால்தான் பயப்பட வேண்டும் என்கிறேன் நான்! இன்று எந்த நீதி என்னைக் கைது செய்தது, எந்த நீதி என்னை விடுதலை செய்தது? அதெல்லாம் சும்மா; நீ வா, இப்படி!” “உண்மைதான்! இன்று எந்த நீதி உன்னைக் கைது செய்தது, எந்த நீதி உன்னை விடுதலை செய்தது?” அவன் சொன்னதைத் திருப்பிச் சொல்லிக் கொண்டே அவனை நோக்கி வந்தான் மணி. மோகன் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து, “உனக்காக விரித்த வலையில் நான் விழுந்துவிட்டதற்காக நீ வருத்தப்பட்டாயல்லவா? நான் வருத்தப்படவில்லை; மகிழ்ச்சியடைகிறேன்!” என்றான் தன் சோர்வை உதறித் தள்ளி. மணி அவனை ஏற இறங்கப் பார்த்தான். சிறிது நேரத்துக்கு முன்னால், ‘நடந்தது நடந்துவிட்டது; அதற்கென்ன இப்போது?’ என்று சொன்னவனா இவன்? - ஒன்றும் புரியவில்லை அவனுக்கு; மோகனைப் பார்த்தது பார்த்தபடி நின்றான். மோகன் தொடர்ந்து சொன்னான்: “ஆம், மணி! அது மட்டுமல்ல; நீ வாழ்வதற்காக நான் சாவதற்குக் கூடத் தயாராகிவிட்டேன், இப்போது!” மணி சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்: “நான் வாழ்வதற்காகப் பிறர் சாவதைவிட, பிறர் வாழ்வதற்காக நான் சாவதைத்தான் என் உள்ளம் விரும்புகிறது!” இந்தச் சமயத்தில், “வாழ்வதில் விருப்பம் காட்டாதீர்கள்; சாவதிலேயே விருப்பம் காட்டுங்கள்!” என்று யாரோ முணுமுணுப்பது அவர்கள் காதில் விழுந்தது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்; ஆபத்சகாயம் அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார். “வாருங்கள் அப்பா! இன்று காலை இந்த வீட்டை விட்டுப் போகும் போது இவ்வளவு சீக்கிரம் நான் இங்கே திரும்பி வருவேன் என்று நினைக்கவில்லை!” என்றான் மோகன், அவரைக் கண்டதும். “வேறு எங்கே போவதாக இருந்தாய்?” என்று அவர் கேட்டார். “அதைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வருவதற்குள்தான் இவன் என்னை இங்கே வரும்படி செய்துவிட்டானே?” என்றான் அவன், மணியைச் சுட்டிக் காட்டி. “என்னடா கதைக்கிறீர்கள்? என்னிடம் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்ற உத்தேசமே உங்களுக்கு இல்லை போலிருக்கிறது!” “எந்த உண்மையை?” “அதுதான், அந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் உண்மையை!” “எந்தத் தொழிலில்?” மணி குறுக்கிட்டான்; குறுக்கிட்டுச் சொன்னான்: “சாட்சிக்கு போலீசார் வேறு யாரையும் பிடிக்க வேண்டியதில்லை; இவரைப் பிடித்தால் போதும்!” இப்போதுதான் மோகனுக்கு விஷயம் புரிந்தது; “ஏன், இவரே அந்தத் தொழிலில் நாம் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறாரா?” என்று கேட்டான். “ஆமாம். அத்துடன் நிற்கவில்லை; அந்தத் தொழிலில் தானும் கலந்து கொள்வதாகச் சொல்லி, இவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்; ஊக்கப்படுத்துகிறார். பாழும் பணம் இன்னும் கொஞ்ச நாட்களில் இவரைப் பைத்தியமாகவே ஆக்கிவிடும் போலிருக்கிறது!” என்றான் மணி, அவர் தன்னைப்பற்றி என்ன நினைத்தாலும் நினைக்கட்டும் என்று துணிந்து. ஆபத்சகாயம் வாய் விட்டுச் சிரித்தார்; மனம் விட்டுச் சொன்னார்: “உங்கள் வயதில் நானும் உங்களைப் போல் பேசிக் கொண்டிருந்தவன் தான்! வயது ஆக ஆகத்தான் அந்த நாளில் அப்படிப் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் அபத்தம் என்று தோன்றுகிறது எனக்கு. ஏனெனில் இந்த உலகத்தில் பணம் இல்லாமல் எதையுமே அடைய முடிவதில்லை; அப்படியே அடைந்தாலும் அதை நிரந்தரமாக அனுபவிக்க முடிவதில்லை. இதற்கு உதாரணம் ஒன்றல்ல, இரண்டல்ல; எத்தனையோ காட்ட முடியும் என்னால். அதனால்தான் சொல்கிறேன். உங்கள் பெற்றோர் உங்களை நேசிக்க வேண்டுமா? முதலில் பணத்தைத் திரட்டுங்கள்; உங்கள் சகோதரர்கள் உங்கள் மேல் பாசம் கொள்ள வேண்டுமா? முதலில் பணத்தைத் திரட்டுங்கள்; உங்கள் சமூகம் உங்களை மதிக்க வேண்டுமா? முதலில் பணத்தைத் திரட்டுங்கள்; உங்கள் அரசாங்கம் உங்களை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டுமா? முதலில் பணத்தைத் திரட்டுங்கள்! அதை இன்று நீங்கள் பொருட்படுத்தாவிட்டால், அதை இன்று நீங்கள் போற்றிப் புகழாவிட்டால், நாளை அது உங்களைப் பொருட்படுத்தாது; நாளை அது உங்களைப் போற்றிப் புகழாது!” “இருக்கட்டுமே, அதனாலென்ன? அந்தப் பணத்தைத் திரட்ட எத்தனையோ நேர் வழிகள் இருக்கும்போது, குறுக்கு வழிகளில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?” “பணம் ஒருநாளும் நேர் வழியில் வருவதில்லை; குறுக்கு வழியில்தான் வருகிறது. அதற்கேற்றாற்போல் சமூகமும் உங்களிடம் பணம் இருக்கிறதா என்றுதான் கவனிக்குமே தவிர, அந்தப் பணம் எப்படி வந்தது என்று கவனிக்காது, வேறு யாராவது கவனித்து ‘அது அப்படி வந்தது, இது இப்படி வந்தது’ என்று சொன்னாலும் அப்படிச் சொல்பவர்கள் பொறாமையால் சொல்கிறார்கள் என்றுதான் அதுசொல்லுமே தவிர, அதற்காக அது உங்களைப் போற்றிப் புகழ்வதை விட்டு விடாது!” “என்ன இருந்தாலும் ‘உண்மை’ என்று ஒன்று இருக்கிறது, பாருங்கள்! அதை யாராலும் அழிக்க முடியாதல்லாவா?” “அழிக்க முடியாதுதான்; ஆனால் அதற்காக அதை யாராலும் வளர்க்க முடியாது!” “ஏன்?” “வீண் செலவு! அதனால்தான் அந்த உண்மை ஆதரிப்பார் யாரும் இல்லாமல் அனாதைக் குழந்தைபோல அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இந்த உலகத்தில் அலைந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது தோன்றும் மகான்களில் சிலர், அதனிடம் அனுதாபம் கொண்டு அதை எடுத்துப் பொதுப் பணத்தில் வளர்க்கிறார்கள்! அவர்கள் உள்ளவரை அது நம் கவனத்தைக் கவருகிறது; அவர்கள் மறைந்ததும் அதுவும் நம் கவனத்தை விட்டு மறைந்துவிடுகிறது!” “அழகாகப் பேசுகிறீர்கள்! ஆனாலும் உழைப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள்; உழைப்பே செல்வம் என்று நினைப்பவர்கள் நாங்கள். எங்களிடம் உங்களுடைய உபதேசம் எடுபடாது!” “யார் இல்லை என்கிறார்கள்? உழைப்பு நல்லதுதான் உங்கள் உடம்புக்கு; உழைப்பே செல்வம்தான், உங்கள் உழைப்பின் பலனை அனுபவிப்பவர்களுக்கு! நான் அதைப் பற்றியும், அவர்களைப் பற்றியும் பேசவில்லையே? உங்களைப் பற்றியும் உங்களுடைய செல்வத்தைப் பற்றியுமல்லவா பேசுகிறேன்?” “பேசுங்கள், பேசுங்கள்; என்னப் பேசினாலும் நீங்கள் சொல்லும் குறுக்கு வழியில் நாங்கள் இறங்கப் போவதேயில்லை!” “இறங்கிய பிறகு இறங்கப் போவதேயில்லை என்று என்னிடம் ஏன் சாதிக்கிறீர்கள்? இவனுக்குத்தான் நான் அப்பாவேத் தவிர, உனக்கு நான் அப்பா இல்லையே? இவன் அதை என்னிடம் சொல்லப் பயந்தாலும், நீ அதை என்னிடம் தைரியமாகச் சொல்லாமே?” “ஏற்கெனவே நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன்; அதற்குமேல் என்ன சொல்வதென்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை!” என்றான் மணி, அலுப்புடன். “போடா, போ! எதைச் சொல்ல வேண்டுமோ, அதை நீ இதுவரை அவரிடம் சொல்லியிருக்க மாட்டாய்; அதைச் சொல்வது உன்னைப்பற்றி நீயே பெருமையடித்துக் கொள்வதாயிருக்கும் என்று நீ நினைத்திருப்பாய்! - விஷயம் இதுதான் அப்பா! கள்ளக்கடத்தல் கூட்டத்தைச் சேர்ந்த யாரோ ஒருவன், ஒரு நாள் ஒரு பெண்ணை ஏமாற்றி ஓட்டல் அறைக்கு அழைத்துக் கொண்டு வந்து அவளுடைய சம்மதமில்லாமல் அவளைக் கெடுக்கப் பார்த்திருக்கிறான்; இவன் அதில் தலையிட்டு அந்தப் பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றியிருக்கிறான்; அது பிடிக்கவில்லை அவனுக்கு; அதற்காக இவனை நேருக்கு நேராக எதிர்த்து நிற்கவும் முடியவில்லை அவனால்; ஆகவே சர்மாஜியின் உதவியுடன் அவன் இவனுக்காக அங்கே கண்ணி வைத்திருக்கிறான்; அந்தக் கண்ணியில் அவன் சிக்குவதற்குப் பதிலாக நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன்; அவ்வளவுதான் விஷயம்! - இப்பொழுதாவது புரிந்ததா, உங்களுக்கு?” என்றான் மோகன், மணியைப் பின்னால் தள்ளிவிட்டு அவனுக்கு முன்னால் தான் வந்து நின்று. அவன் சொன்னதையும் அவர் நம்பவில்லை; “என்ன கதை இதெல்லாம்?” என்றார் நகைப்புடன். அப்போது அந்த வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. அந்தக் காரிலிருந்து இறங்கி வந்த வாலிபன் ஒருவன், “ஆபத்சகாயத்தின் வீடு இதுதானே?” என்றான், ஆபத்சகாயத்தை நோக்கி. “என் பெயர் சுந்தர்; சுகானந்தத்தின் மகன்...” அவன் முடிக்கவில்லை; அதற்குள் அவன் மேல் பாய்ந்து விட்டான் மணி! அவ்வளவுதான்; வேங்கையின் வாயில் சிக்கிய ஆட்டுக்குட்டிப் போல் அலறினான், அவன்! காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|