உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
23. “அப்புறம் சொல்கிறேன்!” ஆடி வரும் காற்று தன்னைத் தேடி வந்து, தன் மேலாக்கை இழுத்து விளையாட, மோகனுக்குப் பின்னால் அமர்ந்து, பாமா ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த போது, “என்ன இருந்தாலும் நீ இவ்வளவு சீக்கிரம் அருணாவைத் தெரிந்து கொண்டிருக்கக் கூடாது!” என்றான் அவன். “தெரிந்து கொள்ளாமல் இருந்ததால்தானே அன்று நீங்கள் அவளைக் கண்டதும் ஓட்டம் பிடித்தீர்கள்?” என்றாள் அவள். “உனக்குத் தெரியாது, பாமா! நாலு பேருக்குத் தெரிந்து காதலிப்பதை விடத் தெரியாமல் காதலிப்பதில்தான் சுவை இருக்கிறது!” “இருக்கலாம்; ஆனால் உங்களை நான் காதலிப்பதோடு நின்று விடுவதாயில்லையே, கல்யாணமும் அல்லவா செய்து கொள்ள வேண்டுமென்று இருக்கிறேன்!” என்றாள் அவள், குத்தலாக. “அதனாலென்ன, இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்தால் அவளை நானே உனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருப்பேனே?” என்றான் அவன். “எங்கே அறிமுகப்படுத்தி வைக்கிறீர்கள்? நீங்கள்தான் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் நழுவிக் கொண்டு இருக்கிறீர்களே?” “எல்லாம் உன்னுடைய நன்மைக்காகத்தான்! - அதிருக்கட்டும், வழக்கம் போல் இன்றும் உன்னை நான் ரேடியோ நிலையத்துக்கு அருகே இறக்கி விட்டுவிட்டால் போதுமல்லவா?” “அதுதான் முடியாது; இன்று நீங்கள் எங்களுடைய வீட்டுக்குக் கட்டாயம் வரவேண்டுமாக்கும்?” “இன்று வேண்டாம் பாமா, இன்னொரு நாளைக்கு வருகிறேன்!” என்றான் அவன், கெஞ்சாத குறையாக. “இன்னொரு நாளைக்கு, இன்னொரு நாளைக்கு என்று நீங்கள் இன்னும் எத்தனை நாட்கள்தான் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? உங்களால் என் மானம் போகிறது, அங்கே!” “அப்படியானால் சரி!” என்றான் அவன், பெருமூச்சுடன். அதுதான் சமயமென்று, “ஆமாம், மணி அண்ணனைப் பற்றி நீங்கள் என்னிடம் சொன்னதெல்லாம் பொய்தானே?” என்றாள் அவள், அவனுடையத் தோள்களை மெல்லப் பற்றி. “சொன்னது பொய்தான்; ஆனால் அதைச் சொல்ல வைத்தது நீ!” என்றான் அவன். “நான் என்றால்?” “உன் அழகு என்று அர்த்தம்!” இதைக் கேட்டுப் பெருமையால் பூரித்துப் போய்விடவில்லை பாமா; ‘அட அசடே!’ என்று தன் தலையில் தானே அடித்துக் கொண்டாள். அதைக் கவனிக்காத மோகன், “அதற்காக என்னை நீ வெறுக்கிறாயா, என்ன?” என்றான், அவள் பக்கம் திரும்பி. அவள் சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்: “வெறுப்பதாயிருந்தால், இனி நீங்கள்தான் என்னை வெறுக்க வேண்டும்!” அவன் சொன்னான்; சிரிக்காமலே சொன்னான்: “அழகில் மட்டுமல்ல; குணத்திலும் சிறந்தவளாயிருக்கிறாய், நீ!” இதைக் கேட்டதும் பூரித்துப் போய்விடவில்லை பாமா. “ஐஸ் வைத்ததெல்லாம் போதும்; அக்கம் பக்கம் பார்த்து வண்டியை ஓட்டுங்கள்!” என்றாள். “ஏன், பயமாயிருக்கிறதா?” என்று மோகன் கேட்டான். அவள் சிரித்தாள்; “ஏன் சிரிக்கிறாய்?” என்றான் அவன். “ஒன்றுமில்லை; உங்களைப் பார்த்து நான் கேட்க வேண்டியக் கேள்வியை என்னைப் பார்த்து நீங்கள் கேட்கிறீர்களே என்று சிரித்தேன்!” என்றாள் அவள். அன்று மாலை ராதா வழக்கம்போல் விளக்கைப் பொருத்தி வணங்கிவிட்டுத் திரும்புவதற்கும், ஸ்கூட்டர் வந்து வாசலில் நிற்பதற்கும் சரியாயிருந்தது. “வந்து விட்டாள், சொன்னது சொன்னபடி அவரை அழைத்துக் கொண்டு வந்தே விட்டாள்!” என்று சொல்லிக்கொண்டே அவள் விரைந்து வந்தபோது, பாமாவுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த மோகனைக் கண்டதும் திடுக்கிட்டாள்! அட, கடவுளே! கடைசியில் இப்படியா வழி காட்டியிருக்கிறாய், என் தங்கைக்கு? இப்போது நான் என்ன செய்வேன், எப்படி இவரைப் பார்க்காமல் இருப்பேன்? எனக்கு இவரைத் தெரியும்; இவருக்கும் என்னைத் தெரியும். இதனால் ஒருவேளை இந்தக் கல்யாணம் நின்றுவிட்டால்? இப்படி நினைத்தாளோ இல்லையோ, சட்டென்று பின்வாங்கி மீனாட்சி அம்மாளின் அறைக்குள் நுழைந்து, “அம்மா, அவள் அவரை அழைத்துக்கொண்டு வந்து விட்டாள், அம்மா! ஆனால் ஒரு சங்கட்ம; நான் ஒருத்தி இருப்பது அவருக்குத் தெரியக்கூடாது!” என்றாள் அவள் படபடப்புடன். “ஏன் தெரியக்கூடாதாம்?” என்றாள் மீனாட்சியம்மாள், ஒன்றும் புரியாமல். “அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன், இப்போது நீங்கள் போய் அவர்களைக் கொஞ்சம் கவனியுங்களேன்?” என்று அந்த அம்மாளை எழுப்பி அனுப்பிவிட்டுத் தன் தலையை மறைத்துக்கொண்டு விட்டாள் அவள்! “வாருங்கள், வாருங்கள்!” என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்த மீனாட்சியம்மாளைக் கண்டதும், “கல்யாணத்துக்கு முன்னால் என்னை நீங்கள் இவ்வளவு துணிவுடன் வரவேற்பீர்களென்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை!” என்றான் மோகன், என்றுமில்லாத தைரியத்தை எங்கிருந்தோ வரவழைத்துக்கொண்டு. “உட்காருங்கள்! இந்தக் காலத்து ஆண்பிள்ளைகளுக்குத்தான் துணிவில்லையே, பெண் பிள்ளைகளுக்காவது அது இருக்க வேண்டாமா?” என்றாள் மீனாட்சியம்மாள், தானும் உட்கார்ந்து. “அப்படியா சமாச்சாரம்? இப்போதுதான் எனக்குத் தெரிகிறது, பாமா யாரால் இவ்வளவு தூரம் துணிந்திருக்கிறாள் என்று!” “பாமா என்னால் துணிந்திருக்கிறாள் என்றால், நீங்கள் பாமாவால் துணிந்திருக்கிறீர்கள்! இல்லாவிட்டால் ஒரு பெண் அழைத்தாள் என்பதற்காக நீங்கள் அவளுக்குப் பின்னால் இவ்வளவு தூரம் வந்திருப்பீர்களா?” “அதைச் சொல்லுங்கள் முதலில்; இப்போதும் அவர் எனக்குப் பின்னால்தான் வந்தாரே தவிர முன்னால் வரவில்லைப் பாருங்கள்!” என்றாள் பாமா. எல்லோரும் சிரித்தார்கள்; அந்தச் சிரிப்பொலி காதில் விழுந்ததும், கொல்லைப் புறத்திலிருந்த ராதாவும் சிரித்தாள். ஆனால், ஏன் சிரித்தாள் என்று அவளுக்குத் தெரியாது; அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பமும் அவளுக்கு அப்போது எழவில்லை - தங்கை சிரித்தாள்; தானும் சிரித்தாள்! - அந்த மகிழ்ச்சியே போதாதா, அவளுக்கு? ஆனால்... அன்று என்னென்னவோ செய்து வைத்திருந்தேன்; அப்போது இந்தப் பிள்ளையாண்டான் வந்திருக்கக் கூடாதா? ஒன்றுமில்லாத இப்போது வந்து... தனக்குத்தான் தோன்றும் இப்படியெல்லாம்; அவர்களுக்கு அப்படியொன்றும் தோன்றாது இப்போது. அவள் இருக்குமிடத்தில் அவருக்கு எல்லாம் இருப்பதாகத் தோன்றும்; அவர் இருக்குமிடத்தில் அவளுக்கும் எல்லாம் இருப்பதாகத் தோன்றும். இது இயற்கை!... ஆனால் ஒரு குறை! தான் மட்டும் இல்லாமலிருந்தால் இந்தக் கல்யாணம் நிச்சயம் நடந்துவிடும்; இருப்பதால் தான் கொஞ்சம் சந்தேகமாயிருக்கிறது. அதற்குத் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதா? என்ன செய்ய முடியும், செத்துப் போவதைத் தவிர? சீச்சீ, முதல் தடவையாக அந்தப் பிள்ளையாண்டான் இங்கே வந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படியா நினைப்பது? - மோசம், ரொம்ப மோசம்!... ஆமாம், ஐயாவை இன்னம் காணோமே? அவரும் வந்து இந்தப் பிள்ளையாண்டானைப் பார்த்துவிட்டால் நல்லது; அதற்குப் பிறகு பேச வேண்டியதைப் பேசி... என்ன அவசரம், தனக்கு? கல்யாணம் என்றால் அவ்வளவு சீக்கிரம் முடிந்து விடுமா, என்ன? - ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று சொல்லி, குறைந்த பட்சம் ‘ஆறு மாத கால’த்துக்காவது இழுத்துப் பறித்துக் கொண்டு நிற்கமாட்டார்களா?... நிற்கட்டும், நிற்கட்டும் - கடைசியில் எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரி! இந்தத் தீர்மானத்துக்கு ராதா வந்த போது, “அக்கா, அக்கா!” என்று அவளை அழைத்துக் கொண்டே, அங்கு வந்தாள் பாமா. “ஸ், கத்தாதே! நான் இருப்பது அவருக்குத் தெரியக் கூடாது!” என்றாள் ராதா, தன் வாயைத் தானே பொத்திக் காட்டி. “ஏனாம்?” என்று கேட்டாள் பாமா. “அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன்; இப்போது நீ போ, அங்கே!” என்றாள் அவள். “வெறும் காபி கூட இல்லாமல் என்னை அங்கே போகச் சொல்கிறாய், நீ?” என்றாள் இவள். “அதை மறந்துவிட்டேனே நான்! நீ இங்கேயே இரு; இதோ கலந்து எடுத்துக் கொண்டு வருகிறேன்!” என்று ராதா ஓடினாள். “நானும் வருகிறேனே!” என்று பாமா அவளைத் தொடர்ந்தாள். மோகனைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் கேட்டுத் தெரிந்துக் கொண்டப் பிறகு, “அடுத்த முறை வரும் போது உங்கள் அப்பாவையும் அம்மாவையும் இங்கே அழைத்துக் கொண்டு வர முடியுமா?” என்றாள் மீனாட்சியம்மாள். “அவ்வளவு சீக்கிரம் அது முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை!” என்றான் மோகன். அப்போது, “உங்களால் முடியாவிட்டால் சொல்லுங்கள், நானே வந்து அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன்!” என்று யாரோ சொல்வது அவர்கள் காதில் விழுந்தது; இருவரும் திரும்பிப் பார்த்தனர் - சொக்கலிங்கனார் காரைக் கொண்டு போய் ‘ஷெட்’க்குள் நிறுத்திவிட்டு உள்ளே வந்துக் கொண்டிருந்தார். “அதற்குள் நீங்கள் எப்படித் தெரிந்து கொண்டீர்கள், இவரை?” என்றாள் வியப்புடன். “அசடு வழிவதிலிருந்தே தெரியவில்லையா, அது?” என்றார் அவர் சிரித்துக்கொண்டே. “அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்; அவர் கோபித்துக் கொண்டுவிடப் போகிறார்!” என்றாள் அவள். அப்போது கையில் காபித் தட்டுடன் பாமா அங்கே வர, “கோபித்துக் கொண்டால் பாமாதான் இருக்கிறாளே, சமாதானம் செய்ய!” என்றார் சொக்கலிங்கனார். “இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் இன்னொரு முறை நான் இங்கே வரமாட்டேன்!” என்றாள் பாமா வெட்கத்துடன். “ஏன், கதவுக்குப் பின்னால் நின்று நாங்கள் பேசுவதையெல்லாம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கலாமென்று நினைக்கிறாயா?” என்றார் அவர், அப்போதும் அவளை விடாமல். “இதற்கெல்லாம் அவசியம் ஏது, இந்தக் கல்யாணத்தில்? நீயும் இப்படி உட்கார், பாமா!” என்று தனக்குப் பக்கத்தில் அவளை உட்கார வைத்துக் கொண்டாள் மீனாட்சியம்மாள். எல்லோரும் காபி சாப்பிட்டு முடிந்த பிறகு, “பாமாவின் அக்காவை நான் இன்னும் பார்க்கவேயில்லையே?” என்றான் மோகன். “அவளுக்கு உங்களைப் பார்க்க வெட்கமாயிருக்கிறதாம்; அதனால் ஒளிந்து கொண்டிருக்கிறாள்!” என்றாள் மீனாட்சியம்மாள் சிரித்துக் கொண்டே. “சரி, இருக்கட்டும்; நான் வருகிறேன்!” என்று மோகன் எழுந்தான். அவனுக்குத் தன் கண்ணால் விடை கொடுத்து அனுப்பினாள் பாமா! காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|