உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
28. எதிர்பாராத வரவேற்பு! சுந்தர்! - அவன் தான் அந்த வலையை விரித்தான் என்பது சங்கருக்கு எப்படித் தெரிந்தது? அவசரத்தில் அதைக் கேட்காமல் வந்துவிட்டோமே! சட்டென்று சைக்கிளை நிறுத்தி, “சங்கர், சங்கர்!” என்றான் மணி. “என்ன சார்?” என்றான் அவன், விரைந்து வந்து. “உன்னை ஒன்று கேட்க மறந்துவிட்டேனே, அவன் தான் அந்தத் துரோக வலையை விரித்தான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” “அவனுடைய அப்பா சுகானந்தம் ஒரு கள்ளக்கடத்தல் பேர்வழி என்பது ஏற்கெனவே தெரியும் எனக்கு. அதற்கேற்றாற் போல் சர்மாஜி வேறு உங்கள்மேல் திடீரென்று அன்பு செலுத்த ஆரம்பித்திருக்கிறார். யார் மேலாவது அவர் அப்படி அன்பு செலுத்துகிறார் என்றால், அந்த அன்புக்குரியவருக்குப் பின்னால் அவர் குழி வெட்டுகிறார் என்று அர்த்தம். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை; இவற்றையெல்லாம் வைத்துத்தான்...” “அப்படியானால் இந்தச் சதியில் அவரும் ஈடுபட்டிருப்பார் என்றா நீ நினைக்கிறாய்?” “சந்தேகமில்லாமல்; இல்லாவிட்டால் அவரே என்னைக் கூப்பிட்டு இங்கே அனுப்பியிருக்கமாட்டாரே!” “என்ன? அவரா உன்னை இங்கே அனுப்பி வைத்தார்?” “ஆமாம் சார், ஆமாம். ‘ஓடு, ஓடு, உடனே போய் அவரிடம் விஷயத்தைச் சொல்லு; அப்படியே போலீசாரிடமிருந்து தப்புவதற்காக அவர் கொஞ்ச நாட்கள் தலைமறைவாயிருந்தால் தேவலை என்று சொல்லு; அவருடைய அறையை உடனே வேறு எங்காவது மாற்றிக் கொண்டு விட்டால் அதைவிடத் தேவலை என்றுநான் சொன்னதாக, அவரிடம் சொல்லு! பாவம், இந்த மாதிரிக் காரியங்களிலும் தனக்கு ஈடுபாடு உண்டு என்று அவர் ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தால் எத்தனையோ வகையில் அவருக்கு நான் உதவியாயிருந்திருப்பேன்; சொல்லாமல் இருந்துவிட்டார்!’ என்று கூட சர்மாஜி என்னிடம் சொன்னார். நான்தான் நீங்களா அவர் சொல்வதை யெல்லாம் செய்கிறீர்கள் என்று அவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லவில்லை!” “இதிலிருந்து அவர் என்னைக் கள்ளக்கடத்தல் பேர்வழியாகவே ஆக்கிவிட்டார் என்றல்லவாத் தோன்றுகிறது?” “ஆக்கியதோடு நிற்கவில்லையே! அதற்காக உங்களிடம் அனுதாபம் வேறு காட்டுகிறார் பாருங்கள், அதில்தான் இருக்கிறது அவருக்கே உரித்தான அந்த நரித்தனத்தின் அழகு!” “என்ன கேவலமான மனிதர்கள், என்ன கேவலமான மனிதர்கள்! இவ்வளவும் எதற்காக? சுலபமாகப் பணம் பண்ணுவதற்காக! இத்தகையவர்களிடம் போய், ‘உலகில் அதர்மம் மறைந்து தர்மம் தலை தூக்க வேண்டுமானால் நீங்களும் ஏழைகளைப் போல் மாட மாளிகைகளை மறந்து மண்குடிசை கட்டிக் கொண்டு வாழுங்கள்; நன்செய் தானியங்களை மறந்து புன்செய் தானியங்களைச் சாப்பிடுங்கள்; பட்டாடை நீக்கி பருத்தி ஆடை உடுத்துங்கள்!’ என்று சொன்னால் கேட்கவாப் போகிறார்கள்? சட்டத்தைக் கொண்டே இவர்களை வழிக்குக் கொண்டு வர முடியவில்லையென்றால், சன்மார்க்கத்தைக் கொண்டா இவர்களையெல்லாம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியப் போகிறது? எனக்குத் தோன்றவில்லை சங்கர், எனக்குத் தோன்றவில்லை!” “அந்தப் பாவிகளுக்காக நீங்கள் வழக்கம்போல அழ ஆரம்பித்துவிடாதீர்கள், சார்! அதற்கு இது சமயமும் அல்ல. பேசாமல் மோகன் சார் அப்பாவிடம் போய் விஷயத்தைச் சொல்லுங்கள்; அவர் இந்த எத்தன்களுக்கெல்லாம் எத்தன்; அப்பன்களுக்கெல்லாம் அப்பன்! போலீசாருக்கு அவர் ஒரு வார்த்தை ‘போனி’ல் சொன்னால் கூடப் போதும்; பயபக்தியுடன் அவருடைய மகனைக் கொண்டு வந்து அவர்கள் அவரிடம் ஒப்படைத்து விடுவார்கள்! அது தெரியாது அந்தப் பயல்களுக்கு; நீங்கள் போங்கள் சார், போங்கள்!” என்று துரிதப்படுத்தினான் சங்கர். அதற்குள் அந்த நிலையைக் கடந்துவிட்ட மணியோ, “இதுவும் கேவலமாகத்தான் தோன்றுகிறது எனக்கு! ஒரு தனி மனிதன் நினைத்தால் சட்டம் அவனுக்குத் தகுந்தாற்போல் வளைந்து கொடுக்கும் என்ற நிலை இந்த நாட்டில் உள்ளவரை நீதிக்கும் நேர்மைக்கும் இங்கே எப்படி இடம் இருக்க முடியும்?” என்றான் பெருமூச்சுடன். “இதெல்லாம் பொழுது போகாதபோது பேச வேண்டிய பேச்சு; இப்பொழுது வேண்டாம், சார்! நீங்கள் போங்கள்; போய் அவரைப் பாருங்கள்!” “போகிறேன்! போகாமல் வேறு என்னதான் செய்யப் போகிறேன், வேறு என்னதான் செய்ய முடியப் போகிறது என்னால்? - சரி, இருக்கட்டும் சங்கர்! அந்த மோகன் போலீசாருடன் போனபோது என்னிடம் ஏதாவது சொல்லச் சொன்னானா, உன்னிடம்?” “இல்லை சார், அவர்களைப் பார்த்ததும் அவர் பேயறைந்தவர் போல் ஆகிவிட்டார்! சர்மாஜி வந்து, ‘கவலைப்படாதீர்கள் சார், சந்தேகத்தின் பேரில்தான் உங்களைக் கைது செய்கிறார்கள்; சந்தேகம் தீர்ந்ததும் விடுதலை செய்துவிடுவார்கள்!’ என்று ‘சமாதான வலை’ விரித்தபோது கூட அவர் முகத்தில் எந்தவிதமான மாறுதலும் இல்லை!” “அடப் பாவி! அதுவா அவனுடைய பிரச்னையாக இருந்திருக்கும் அப்போது? ஒரு காரணமும் இல்லாமல் தனக்கு நேர்ந்துவிட்ட இந்த அவமானத்தை எப்படித் துடைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதல்லவா அப்போதைய பிரச்னையாக இருந்திருக்கும், அவனுக்கு?” “அதையெல்லாம் அவர் ஏன் சார், கவனிக்கிறார்? அவருக்கு வேண்டியது சுந்தரைப் போன்ற சுகவாசிகள் நட்பு; அந்த நட்பின் மூலம் சுலபமாகப் பணம்; அந்தப் பணத்தை எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் குவிக்க வேண்டுமானால் உங்களைப் போன்றவர்களை அவர் ஒழித்துக் கட்ட வேண்டும்; அப்படி ஒழித்துக் கட்டும்போது, அவரை இன்னார் என்று நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமே என்பது அவருடைய கவலை! - அதைத்தான் அவர் கவனிக்க முடியுமே தவிர, மற்றவற்றையெல்லாம் அவர் கவனிக்க முடியுமா?” “கவனிக்க முடியாதுதான்! நீ போ, நான் வருகிறேன் அவரைக் கவனிக்க!” மணி கருவிக் கொண்டே, மறுபடியும் சைக்கிளின் மேல் ஏறினான். ‘வேடிக்கையான உலகத்திலே இவர் ஒரு வேடிக்கையான சார்!’ என்று வழக்கம்போல் சிரித்துக் கொண்டே சங்கர் அவனைத் தொடர்ந்தான் - ஆம், அவர்கள் இருவரும் வெவ்வேறு இடத்தை நோக்கிச் சென்றாலும், அவற்றை அடைவதற்காக அவர்கள் சென்ற திசை ஒரே திசையாயிருந்தது! ‘சங்கர்! - எவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டான், மோகனின் அப்பாவைப் போய்ப் பார்க்கும்படி! என்னைப் போன்றவர்கள் அவரைப் போய்ப் பார்ப்பதென்பதுதான் அவ்வளவு சுலபமா? அவருடன் பேசுவதென்பதுதான் அவ்வளவு சுலபமா? அவருடைய மகன் எனக்கு நண்பனாயிருக்கலாம்; அதற்காக அவரும் எனக்கு நண்பராயிருக்க முடியுமா? இருந்தால், அவர் தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்தஸ்து, அவரைப் பொறுத்தவரையில் கூட இல்லாமலல்லவா போய்விடும்? அதிலும், ஏழைகளைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது; அதுதான் போகட்டுமென்றால் யோக்கியர்களைக் கண்டாலும் அவருக்குப் பிடிக்காது! ஒரு விதத்தில் அயோக்கியர்களை வேண்டுமானால் அவருக்குப் பிடிக்கும்; பணக்காரர்களை வேண்டுமானால் அவருக்குப் பிடிக்கும்! இந்த வேடிக்கையான மனிதரை விட்டுவிட்டு, என்னைப் போய் வேடிக்கையான மனிதர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறானே, இந்த சங்கர்? இதிலுள்ள இன்னொரு சங்கடத்தை வேறு அவன் மறந்து விட்டான்! - விஷயம் அவருடைய மகனைப் பற்றியதாயிருந்தாலும், அதில் நானுமல்லவா சம்பந்தப்பட்டிருக்கிறேன்; என்னை விட்டுத் தள்ளினாலும் அவருடைய மகள் அருணாவும் அல்லவா அதில் சம்பந்தப்பட்டு இருக்கிறாள்? அதை எப்படி அவரிடம் சொல்வது? சொன்னால் அவளுக்கு நான் தந்த வாக்குறுதி என்ன ஆவது? சொல்லாவிட்டால், சுந்தர் அந்த வலையை ஏன் விரித்தான் என்பதை நான் அவருக்கு எப்படி விளக்குவது? கடவுளே, அவனைப் பிடித்துக் கொண்டு போன பாவிகள் என்னைப் பிடித்துக் கொண்டு போயிருக்கக் கூடாதா? எத்தனையோ தொல்லைகள் எனக்கு மிச்சமாகியிருக்குமே! அதைப்பற்றி இப்போது யோசித்து என்ன பிரயோசனம்? உள்ளே போன மோகன் எப்படியாவது வெளியே வர வேண்டும்; அதற்கு அவரை விட்டால் வேறு யாரும் கிடையாதா? ஆபீசர் பரந்தாமனைப் போய்ப் பார்த்தால் என்ன? அவர் ஜாமீன் கொடுத்தால் அவனை விட்டுவிடுவார்கள். ஆனால், அதற்குப் பிறகு வழக்கு என்று ஒன்று நடப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களெல்லாம் நடக்குமே, அதைத் தடுக்க முடியுமா அவரால்? அப்படியே தடுப்பதாயிருந்தாலும் அவருக்கு இதெல்லாம் தெரிவதை அவன் விரும்புவானா? ஒரு நாளும் விரும்பமாட்டான்! ஓட்டலிலேயே பாதி உயிர் போயிருக்கும் அவனுக்கு; அடுத்த பாதி ஆபீசில் போவதை அவன் விரும்புவானா, என்ன? எதற்கு இதெல்லாம்? - சுந்தருக்கும் எனக்கும் சண்டை; அதற்காக என்னைப் பழி வாங்க எண்ணி அவன் அந்தச் சூழ்ச்சியைச் செய்திருக்கிறான்; அதற்கு நான் இரையாவதற்குப் பதிலாக அவன் இரையாகிவிட்டான் என்று சொல்லிவிட்டால் போகிறது! ‘என்ன சண்டை?’ என்று கேட்டால்தான் கொஞ்சம் சங்கடமாயிருக்கும் - அதனாலென்ன, அந்தச் சண்டையில் அருணாவைச் சம்பந்தப்படுத்தாமல் யாரோ ஒருத்தி, அல்லது யாரோ ஒருவன் என்று சொல்லிவிட்டால் போகிறது! இந்தத் திர்மானத்துக்கு வந்ததும் இன்னொரு சங்கடத்துக்கு உள்ளானான் அவன்! - அந்த வீட்டில் மோகனின் நண்பன் என்ற முறையில் அவனால் அருணாவுடன் பேச முடியும்; அன்னபூரணியம்மாளுடன் பேச முடியும்; ஆபத்சகாயத்துடன் பேச முடியாதே! - அவர் இவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு விடுவார்; அல்லது, மடமடவென்று மாடி அறைக்குப் போய்விடுவார்! காரணம் வேறொன்றுமில்லை; அவன் யோக்கியன், அத்துடன் ஏழை என்பதுதான்! அத்தகையவருடன் இன்று தான் எப்படிப் பேச முடியும்? அன்னபூரணியம்மாளிடமோ, அருணாவிடமோ சொல்லி அவரிடம் விஷயத்தைச் சொல்லிவிடச் சொல்வோமா? அதுதான் சரி! - ஆனால், அந்தப் பயல் ஆபீசுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு என் அறையில் வந்து படுத்துக் கொண்டு விட்டானே, அதற்கு அவர் என்ன சொல்வாரோ என்னமோ? அதை அவரிடம் சொன்னால் அவன் என்ன நினைப்பானோ, என்னமோ? அந்தச் சங்கடத்திலிருந்தும் தப்ப வேண்டுமானால் இன்னும் ஏதாவது ஒரு பொய்யின் உதவியைத்தான் நாடவேண்டும் போலிருக்கிறது! - வேறு வழி, நாய் வேடம் போட்டால் குரைத்துத்தானே தீரவேண்டும்? இந்த முடிவுடன் அவன் துணிந்து ஆபத்சகாயத்தின் வீட்டுக்குள் நுழைந்த போது, அவர் இவனைக் கண்டதும் வழக்கம் போல் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை; அவனுடன் கீழே இருக்கப் பிடிக்காமல் மேலே போய் விடவும் இல்லை. அகமும் முகமும் ஒருங்கே மலர, “வா, தம்பி, வா!” என்று அவனை அன்புடன் வரவேற்று, மாடி அறைக்கு அழைத்துக் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டு, “அன்னபூரணி, அன்னபூரணி! தம்பிக்கு ஏதாவது பலகாரம் இருந்தால் கொண்உ வாயேன்?” என்றார் கனிவுடன், கீழே இறங்கி. இதைக் கேட்ட மணிக்கு எப்படியிருந்ததோ என்னமோ அவன் தலை கிறுகிறுவென்று சுழல, அப்படியே சோபாவில் சாய்ந்துவிட்டான்! காதலும் கல்யாணமும் : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
|