15. கலாச்சாரத்தில் ஓர் அனாச்சாரம்!

     கதவு உடைந்த சத்தம் கேட்டதும், “என்னடா, அது?” என்று கீழே இருந்தபடியே, தம்முடைய குரலை உச்சகட்டத்துக்கு உயர்த்தினார் ஓட்டல் முதலாளி.

     “என்ன சர்மாஜி?” என்று பதிலுக்குக் குரல் கொடுத்துக் கொண்டே, ‘மடமட’வென்று கீழே இறங்கி வந்தான் மணி.

     அவனைக் கண்டதும் அவருடைய சுருதி ஏனோ குறைந்தது; “ஒன்றுமில்லை. மேலே ஏதோ சத்தம் கேட்டதே என்று கேட்டேன் - ஏன், கேட்கலாமோ இல்லையோ?” என்றார் அவர், நெளிவு குழைவுடன்.

     “கேளுங்கள் கேளுங்கள், தாராளமாகக் கேளுங்கள்; காலையில் ஒரு காதல் ஜோடிக்கு நீங்கள் இங்கே இடம் கொடுத்தீர்கள் அல்லவா? அந்தக் காதல் ஜோடி முறை தவறி நடக்க முயன்றது; நான் அதைத் தடுக்க முயன்றேன். அதன் பலன் கதவு உடைந்தது - ஏன், உடையலாமோ இல்லையோ?” என்றான் மணி, பேசுவதில் தானும் அவருடைய பாணியையே பின்பற்றி.

     “என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்! தர்மத்துக்காக எதையும் செய்யலாம் என்று சாஸ்திரமே சொல்கிறதே? - அப்புறம் என்ன, நான் சொல்வது சரியோ இல்லையோ?”

     “சரி ரொம்பச் சரி; ஆனால் அந்தத் தர்மம் கல்யாணமாகாத காதல் ஜோடிகளுக்குக் கூட இங்கே இடம் கொடுக்கலாம் என்று சொல்கிறதா? இல்லை, தெரியாமல் தான் கேட்கிறேன் - ஏன், கேட்கலாமோ இல்லையோ?”

     “நன்றாகக் கேட்டீர்கள்! புண்ணியத்திலும் புண்ணியம் மகா புண்ணியமல்லவா, அது? தாகத்துக்குத் தண்ணீர் கொடுப்பதில் எத்தனை புண்ணியம் இருக்கிறதோ, அத்தனை புண்ணியம் அதிலும் இருக்கிறது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இல்லையென்றால் அவர்களுக்கு நான் இங்கே இடம் கொடுத்திருப்பேனா? - ஏன், கொடுக்கலாமோ இல்லையோ?”

     “கொடுங்கள் கொடுங்கள், தாராளமாகக் கொடுங்கள். ஆனால் தாகத்துக்குத் தண்ணீர் கொடுப்பதில் புண்ணியம் இருக்கலாம்; ஒரு பெண் தன் கற்பை இழப்பதற்கு வசதி செய்துக் கொடுப்பதில் கூடவாப் புண்ணியம் இருக்கிறது? - இதைப் பற்றிப் பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள், அதை நானும் தெரிந்துக் கொள்ளலாமோ இல்லையோ?”

     அவ்வளவு தான்; தர்மத்தையும் புண்ணியத்தையும் விட்டுச் சற்றே நழுவி, “யார் எதை இழந்தால் என்ன, சுவாமி? அதற்காக எனக்குக் கிடைக்கும் காசை நான் இழந்து விட முடியுமா? உங்களைப் போன்றவர்களுக்கு ஓர் அறையை வாடகைக்கு விட்டால் நாளொன்றுக்கு ஒரு ரூபாய் எனக்குக் கிடைக்கிறது. அதே அறையை அவர்களைப் போன்றவர்களுக்கு விட்டால் நாளொன்றுக்குப் பத்து ரூபாய் எனக்குக் கிடைக்கிறது. இதில் எதை விரும்புவான் ஒரு வியாபாரி? அவனுக்குத்தான் கொள்கை, குறிக்கோள் என்று ஒன்றுமே கிடையாதே! - என்ன, நான் சொல்வது உண்மையோ இல்லையோ?” என்றார் அவர், வியாபாரத் தோரணையில்.

     “இது இல்லாவிட்டால் அது; அது இல்லாவிட்டால் இது. எது இருந்தாலும், எது இல்லாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது, எந்த அக்கிரமத்தைச் செய்தாலும் அந்த அக்கிரமத்தைத் தர்மம், புண்ணியம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்று ஏதாவது ஒன்றின் மேல் செய்ய வேண்டியது. இதுதான் உங்கள் கொள்கை, குறிக்கோள் எல்லாம் - இல்லையா?”

     “அதுவேதான், அதுவேதான்”

     இதைச் சொல்லிவிட்டு அவர் சிரித்தார்; அந்தச் சிரிப்போ அவனுக்கு நெருப்பாயிருந்தது. இருந்தாலும் அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு, “இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. தன்னுடைய லட்சிய சித்திக்காகப் போரைத் துவங்கிய ஹிட்லர், முதலில் அங்கிருந்த வியாபாரிகளையெல்லாம் ஏன் சுட்டுக் கொல்லச் சொன்னான் என்று?” எனக் கருவிக் கொண்டே அவன் மேலே போனான்.

     “தப்பிவிட்டார்கள் சார், அவர்கள் உங்களிடமிருந்து தப்பிவிட்டார்கள்!” என்றான் சங்கர்.

     “தொலையட்டும் சனியன்கள்! அந்தச் சனியன்களை அதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும்? என் கண்ணுக்கு முன்னால் படுகுழியில் விழுவதற்கு இருந்தனர். அதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. தடுத்தேன்; அவ்வளவுதான் என்னால் முடிந்தது!” என்று சொல்லிக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்த மணி, கழற்றி விட்ட செருப்பை மறுபடியும் தன்னுடையக் காலில் மாட்டிக் கொண்டு, “ஏண்டா சங்கர், இந்த ஓட்டல் முதலாளியை இழுத்துக் கொண்டு போய்ப் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு வந்தால் என்ன?” என்றான் ஏதோ யோசனையுடன் அப்படியும் இப்படியுமாக நடை போட்டுக் கொண்டே.

     “வீண் வேலை, சார்!” என்றான் அவன் உதட்டைப் பிதுக்கி.

     “என்னடா, இப்படிச் சொல்கிறாய்?”

     “வேறு எப்படிச் சார் சொல்ல முடியும்? அவர்களுக்குத் தெரியாமல் இவர் இங்கே ஒன்றுமே செய்வதில்லையே, சார்!”

     “என்ன?”

     “ஆமாம் சார், மாதந்தோறும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ‘மாமூ’லை ஒழுங்காகக் கொடுத்து விட்டுத்தான் இவர் சட்டத்துக்கு விரோதமாக இங்கே என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார்!”

     “அட, பாவிகளா! இதில் ஒழுங்கு வேறு வாழுகிறதா, ஒழுங்கு?”

     “சட்டத்துக்கு அடுத்தாற்போல் அதிகமாகப் பேசப்படுவது அதுதானே சார்?”

     “ஆமாம், இங்கே எல்லாமே பேசத்தான் படுகிறது!”

     “ஏன், எழுதக் கூட எழுதுகிறார்கள், சார்!”

     “என்ன இழவோ! நின்று சாதிக்கும் தெய்வமோ இங்கே நின்று கொண்டே இருக்கிறது; அன்றே சாதிக்கும் அரசோ இங்கே அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு இருக்கிறது. இரண்டும் இப்படியிருந்தால் இந்த உலகத்துக்கு என்று தாண்டா விமோசனம்?”

     “இது வேண்டாத கவலை சார், உங்களுக்கு? ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்!’ என்று நம் வள்ளுவர் பெருமான் கூடச் சொல்லியிருக்கிறார், பாருங்கள்! அதுதான் சார், நல்ல வழி!”

     “அவர் கூட எதையும் ஒரு நிலையில் வைத்து, எதையும் ஒரு நிலையில் பார்த்து, ஒன்றையும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லையேடா, எனக்கு? கொஞ்சம் நிதானமாகப் பார்க்கப் போனால், கல்யாண வீட்டுக்கும் அவர் பூசணிக்காயாயிருந்திருக்கிறார், கருமாந்திர வீட்டுக்கும் அவர் பூசணிக்காயாயிருந்திருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, எனக்கு!”

     “அவர் என்ன செய்வார், பாவம்! அதுதான் சார், அந்தக் காலத்திலேயே அவருக்கும், பிழைக்கும் வழியாயிருந்திருக்கிறது; அதுவேதான் சார், இன்றும் நாளையும் கூட நமக்கெல்லாம் பிழைக்கும் வழியாயிருக்கிறது, இருக்கப் போகிறது!”

     “வேண்டாம்; அப்படிப்பட்ட உலகத்தில் இன்று வேண்டுமானால் நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்; நாளை நான் வாழவே வேண்டாம்!”

     இதைச் சொன்னதும் அவன் நிற்கவில்லை; காலில் இருந்த செருப்பைக் கழற்றி மறுபடியும் விட்ட இடத்திலேயே விட்டு விட்டுக் கட்டிலின் மேல் தொப்பென்று விழுந்தான். விழுந்தவன், தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதான்.

     அந்த அழுகையினூடே ஒரு பாடல் - பாரதியாரின் பாடல்தான் அது - ஆனால் அவன் வழக்கமாகப் பாடும் பாடல் - அவனுடைய இதயத்தின் அடிவாரத்தில் இருந்து மெல்ல எழுந்து ஒலித்தது;

     “மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்
     மூச்சை நிறுத்திவிடு!”

     ஏதாவது ஒரு விஷயம் தன் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று தோன்றிவிட்டால், அவன் இப்படித்தான் புலம்ப ஆரம்பித்துவிடுவது வழக்கம்; அவன் புலம்பும் போது அவனுடைய இதயமும் மேற்கண்ட பாடலைப் பாடி, அவனுடன் சேர்ந்து புலம்பும். இது அவனையும் அறியாமல் அவனுக்கென்றே அமைந்துவிட்ட வழி; அந்த வழிக்குக் குறுக்கே சங்கர் என்றும் நிற்பதில்லையாதலால் அன்றும் நிற்கவில்லை!

     இப்போதெல்லாம் யார் எங்கே, எந்தத் தவறு செய்தாலும் ஒரு புதிய சமாதானம் சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்; அதுதான் ‘அவனும் மனிதன்தானே, இவனும் மனிதன்தானே?’ என்பது. அதாவது, ‘மனிதன் என்றால் தவறு செய்யாமல் இருக்க முடியாது’ என்பது அதன் உட்பொருள்!

     இருக்கலாம்; சில விஷயங்களில் அது உண்மையாயிருக்கலாம். ஆனால், எல்லா விஷயங்களிலும் அதுதான் உண்மை என்று ஆகிவிடக் கூடாதல்லவா?

     அதைத்தான் அருணாவும் சொன்னாள் - ‘தப்பினோம், பிழைத்தோம்’ என்று ஓட்டலை விட்டு வெளியே வந்த சுந்தர், “நானும் மனிதன் தானே?” என்று சொல்லி, மறுபடியும் தன்னை ஏமாற்ற முயன்ற போது,

     “இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை, உங்களுக்கு? நீங்களும் மனிதர்தான் என்றால், இந்த உலகத்தில் நாகரிகம், கலாச்சாரம் என்றெல்லாம் பேசப்படுகிறதே, அதெல்லாம் அனாச்சாரமாக அல்லவா ஆகிவிடும்?” என்றாள் அவள், ஆத்திரத்துடன்.

     “எது அனாச்சாரம், எது கலாச்சாரம் என்று தெரியாமல் பேசுகிறாய், நீ! அன்று தன் மேல் காதல் கொண்ட துஷ்யந்தன் தன்னை நெருங்கும் போது, எந்த விதமானத் தடையும் சொல்லாமல் தன்னை அப்படியே அவனிடம் ஒப்படைத்து விட்டாளே ஒரு பெண். அதுதான் கலாச்சாரம்; இன்று உன் மேல் காதல் கொண்ட சுந்தர் உன்னை நெருங்கிய போது, மூன்றாவது மனிதன் ஒருவன் முண்டியடித்துக் கொண்டு வரும் வரை நீ அவனைப் படாத பாடுபடுத்தி வைத்தாயே, அதுதான் அனாச்சாரம்!” என்றான் அவன், அமைதியுடன்.

     “அட, என் துஷ்யந்த ராஜாவே! இன்று நான் எந்த விதமான தடையும் சொல்லாமல் என்னை அப்படியே உன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும்; நாளை நான் கையில் குழந்தையுடன் வந்து உனக்கு முன்னால் நிற்க வேண்டும். நீ என்னைப் பார்த்து, ‘யார் நீ?’ என்று கேட்க வேண்டும். நான் உன்னைப் பார்த்து, ‘அடப் பாவி, என்னையா தெரியவில்லை உனக்கு?’ என்றுக் கதற வேண்டும். இதுதானே நீங்கள் சொல்லும் கலாச்சாரம்? - வேண்டாம், ஐயா! என்னுடைய அனாச்சாரம் என்னோடு இருக்கட்டு; உன்னுடைய கலாச்சாரம் உன்னோடு இருக்கட்டும். நான் வருகிறேன்!” என்று கடைசியாக அவனைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அவள் நடந்தாள்.

     அவள் சென்ற திசையையே ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற அவனை நெருங்கி, “மன்னிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக ஏதோ நடந்து விட்டது; அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எப்போதும் போல உங்கள் ஆதரவை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்!” என்றார் சர்மாஜி.

     “சரிதான் போங்காணும்! என்னைப் போன்ற ‘பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகள்’ வந்து தங்கும் இடத்தில் அவனைப் போன்ற ‘பொறுக்கிப் பயல்க’ளுக்கு நீர் எப்படி இடம் கொடுக்கலாம்? உம்மால் வந்த வினைதானே இவ்வளவும்?” என்றான் அவன், எரிந்து விழுந்து.

     “கோபித்துக் கொள்ளக் கூடாது! மாதம் பிறந்தால் முப்பது ரூபா முழுசாகக் கிடைக்கிறதே என்று விட்டேன்; அவன் என்னடாவென்றால் வம்புக்காரப் பயலாயிருக்கிறான். நீங்களும் இதுவரை எத்தனையோப் பெண்களை அழைத்துக் கொண்டு இங்கே வந்திருக்கிறீர்களே, இப்படி ஒரு நாளாவது நடந்ததுண்டா?”

     “அப்போதெல்லாம் அவனைப் போன்ற தற்குறிகள் இங்கே இல்லை; அதனால் நடக்கவில்லை!”

     “தற்குறியாவது, அவன் எம்.ஏ. பட்டதாரி, சார்! சர்க்கார் வேலையில் இருக்கிறான்; நல்ல சம்பளம். தனக்குப் போக மிஞ்சியதையெல்லாம் ஊருக்கு அழுதுவிட்டு, எப்பொழுது பார்த்தாலும் ‘உலகம், உலகம்’ என்று உளறிக் கொண்டிருக்கிறான்! தனக்கென்று ஒரு கல்யாணமில்லை; தனக்கென்று ஒரு வீடு வாசல் இல்லை. கேட்டால், ‘எத்தனையோ பேர் இந்த உலகத்தில் கல்யாணம் செய்து கொள்ள வசதியில்லாமல் இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் கல்யாணம்?’ என்கிறான்; ‘எத்தனையோ பேர் இந்த உலகத்தில் வீடு வாசல் இல்லாமலிருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் வீடு வாசல்?’ என்கிறான்!”

     “அப்படிப்பட்டவன் நடைபாதையில் இருக்க வேண்டும்; இங்கே வந்து நம்முடைய கழுத்தை அறுப்பானேன்?”

     “அதை எப்படி அவனிடம் சொல்வது என்றுதானே எனக்குத் தெரியவில்லை; சொன்னால் அடித்துவிடுவானோ என்று பயமாயிருக்கிறது!”

     “போலீசாரின் உதவியை நாடுவதுதானே?”

     “அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறார்களே, அவர்கள்?”

     “சம்பந்தப்படுத்த வேண்டும், நாம்!”

     “அந்தக் காரியத்தை நீங்களே செய்துவிட்டால் எனக்கும் நல்லது; உங்களுக்கும் நல்லது!”

     “ஆகட்டும், செய்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, அவன் ஏதோ எண்ணித் துணிந்தவனாக அங்கிருந்து நகர்ந்தான்; “மறந்துவிடாதீர்கள்!” என்று மறுபடியும் அதை அவனுக்கு நினைவூட்டிவிட்டுத் திரும்பினார் சர்மாஜி.