![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
15. ஆடக அரங்கில் அழகு மயில்...
“ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் திருந்து சாத்து விகமேயாக இந்து வாழ்சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின் பத்து வெள்ளத்தில் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். - சேக்கிழாரின் பெரிய புராணம் தூர நின்று பார்த்தபடியே இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள் இளையராணி அகல்யாபாய். சிவாஜியும், சுலக்ஷணாவும் அப்படி அவர்களுடன் நெருங்கிப் பழகியதோ பேசியதோ அவளுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அப்போது சுலக்ஷணா அந்தப் பெண்ணை கலெக்டர் துரையிடம் அழைத்துச் செல்வதையும், மன்னர் அவரிடம் ஏதோ கேட்பதையும் கொஞ்சம் கலவரத்துடன் பார்த்தாள். அகல்யாபாய். என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலையுடன் அவள் மன்னரை நோக்கி நடந்து ஏதோ சொல்ல வரும்போதே, சரபோஜி மன்னர் சிரித்தபடி தலையை அசைப்பதும், அந்தப் பெண் சற்று கலங்கிய பார்வையுடன் மேடையில் ஏறியதும் தெரிந்தது. இளைய ராணி மேலே செல்லவோ, ஏதும் சொல்லவோ விரும்பாமல் மன்னரின் அருகே இருந்த ஆசனத்தில் போய் அமர்ந்து கொண்டாள். மன்னர் கையை உயர்த்தவே கூட்டத்தின் சலசலப்பு ஒரு நொடியில் படிந்து அமைதி கண்டது. இசைக்கருவிகள் மேடைக்கு வந்தன. புவன மோகினி அவற்றுக்கு நடுவே நின்றாள். சுற்றிலும் இருந்த விளக்குகளின் ஒளியில் அந்தச் சிறு பெண்ணின் கள்ளமறியாத முகம் ஒரு வான் சுடரைப் போலப் பிரகாசித்தது. இளவரசன் சிவாஜி தன்னருகில் வந்து அமருவான் என்று எதிர்பார்த்தாள் அகல்யாபாய். ஆனால் அவன் வரவில்லை. அந்த கேரளத்து மங்கையின் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்படி அங்கே அவன் இருப்பதை விரும்பாதவளாக உடனே வந்து தன்னருகில் அமருமாறு செய்தி சொல்லி அனுப்பினாள் அகல்யாபாய். சிவாஜியும் மனமில்லாதவனாக, தயங்கியபடி வந்து தாயின் அருகே உட்கார்ந்தான். புவன மோகினி பாடத் தொடங்கினாள்... ஒரு கணம் பேசாமல் இருந்து விட்டு மெல்லிய குரலில் எழுத்தச்சனின் இராமாயணப் பாடல் ஒன்றைக் கடவுள் வாழ்த்தாகப் பாடினாள். பிறகு தொடர்ந்து நாட்டுப் பாடல்கள் இரண்டைப் பாடினாள். கேரளத்தில் ஓணம் திருவிழாவை ஒட்டிப் பாடும் ‘கைகொட்டிக்களி’ பாடல் ஒன்றுடன் அவள் பாடுவதை முடித்த போது கூட்டத்திலிருந்து பாராட்டு கைத்தட்டலாக உதிர்ந்தது. அவளுடைய குரலில் தனியானதோர் கவர்ச்சி இருந்தது. முற்றிலும் மென்மையாக - கனியாத அந்தக் குரலில் ஓர் இனிமை படிந்திருந்தது. முழுப் பக்குவம் அடையாத அவளுடைய இளமையைப் போன்று, அந்தக் குரலிலும் குழந்தை உள்ளம் தலைகாட்டிற்று. ஒரு பாட்டை முடித்த பிறகு தைரியம் பெற்றவளாகக் கணீர் என்ற குரலில் பாடினாள் புவன மோகினி. முடிக்கும் போது அது தொடரக் கூடாதா என்ற ஏக்கத்தையும் தூண்டிற்று. “நாட்டியத்தை முன்னணியில் வைத்த குடும்பத்தில் பிறந்திராவிட்டால், இந்தப் பெண் ஒரு நல்ல பாடகியாகவே வந்திருப்பாள்” என்று பாராட்டும் குரலில் சொன்னார் மன்னர். அதை ஆமோதிப்பது போல ஒரு புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டார் மக்லோட் துரை. அந்த நிகழ்ச்சியின் முடிவில் மகளை அழைத்துக் கொண்டு வந்து, மன்னரை வணங்கச் செய்தாள் சித்ரசேனா. தனது கழுத்தில் இருந்த முத்துமாலை ஒன்றைக் கழற்றி அவளுடைய கையில் கொடுத்தார் சரபோஜி மன்னர். “கலைமகள் ஆட்சிபுரியும் தமிழக நகரத்துக்கு உனது மகள் வந்திருக்கிறாள். அந்தக் கலைத் தேவியின் ஆசிகள் அவளுக்கும் பூரணமாகக் கிடைக்கட்டும்” என்று ஆசீர்வதித்தார் மன்னர். சித்ரசேனா இளைய ராணியைத் திரும்பிப் பார்த்தாள். அதில் சிறிது மாறுதல் கூட இல்லை. “சித்ரசேனா தங்களிடம் ஒரு வேண்டுகோளை சமர்ப்பிக்க விரும்புகிறாள்” என்றார் மக்லோட் துரை. “என்னிடமா? என்ன வேண்டுகோள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மன்னர். “நான் இங்கு புறப்பட்டு வந்த போதே மகாராஜா சுவாதித் திருநாள் என்னிடம் சொல்லி அனுப்பினார். சிறந்த கலா ரசிகரான தங்களுடைய முன்னிலையில், சித்ரசேனா சில கேரள நாட்டுக்கே உரிய நாட்டிய வகைகளை ஆடிக் காட்டிப் பாராட்டுப் பெற்று வர வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்லி அனுப்பினார். தாங்கள் காசி யாத்திரை புறப்பட மும்முரமாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பது எனக்குத் தெரியும். இருப்பினும், ஒரு தடவை அனுமதித்தால் அரங்கத்தில் ராஜ சந்நிதியில் சித்ரசேனா ஆட ஏற்பாடு செய்யலாம். ரெசிடெண்ட் பிளாக்பர்ன் துரையும் இதைத் தங்களிடம் கேட்கச் சொன்னார்!” என்றார் மக்லோட். சரபோஜி மன்னர் தமது குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தார். இருவருமே அதை ஆவலுடன் வரவேற்பது புரிந்தது. இளையராணியின் சம்மதத்தையும் அறியத் திரும்பிக் கவனித்தார். ஆனால், அகல்யாபாய் அதை முற்றிலும் விரும்பவில்லை என்பதும் தெரிந்தது. தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு புறப்படத் தயாரான ராணியைக் கையமர்த்தி இருக்கச் செய்து, “ஆகட்டும், வரும் பௌர்ணமியில் வசந்த மண்டபத்தை அடுத்த திறந்தவெளியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம்!” என்றார் மன்னர். தாயும் மகளும் வணங்கி விடை பெற்றார்கள். விழா தொடர்ந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. கொஞ்ச நேரம் அவர்களிடையே இருந்து விட்டு மன்னர் தமது மனைவியுடனும் குழந்தைகளுடனும் புறப்பட்டார். சாரட்டில் வந்து ஏறி அமர்ந்ததும் அகல்யாபாய் மன்னரிடம், “அரசே! இதெல்லாம் என்ன விளையாட்டு? தங்களுடைய குழந்தைகளின் மனத்தில் இது போன்ற ஆவலைத் தூண்டிவிடலாமா?” என்று கேட்டாள். மன்னர் பதில் கூறாமல் வெளியே பார்க்கத் தொடங்கினார். ராணியின் மனக்கலக்கம் அவருக்குப் புரிந்தது. அவர் மறுபடி திரும்பிப் பார்த்த போது அக்ல்யாவின் கண்களில் நீர் ததும்பியது கண்டு திடுக்கிட்டார். “அகல்யா! என்ன இது? உன் கண்களில் நீர் படியக் காரணம் என்ன?” என்று கேட்டார். சிவாஜியும் தாயைச் சமாதானப்படுத்த முற்பட்டான். அகல்யாவோ மகள் சுலக்ஷணாவை அணைத்துக் கொண்டு விசித்து விசித்து அழத் தொடங்கினாள். “அகல்யா! குழந்தையின் பிறந்த நாளன்று நடந்த கேளிக்கையான நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டுத் திரும்பும் வேளையில், நீ இப்படிக் கண்ணீர் சிந்தலாமா? இது கொஞ்சம் கூடச் சரி இல்லை! என்னைப் பார்!” என்று கூறி இளைய ராணியின் தோளைத் தட்டினார் மன்னர். திகைத்தவளாகத் தனது தாயைத் திரும்பிப் பார்த்தாள். கலவரம் அடைந்த குழந்தை சுலக்ஷணா. அவளுக்கு ஏதும் புரியவில்லை. அன்று சுலக்ஷணாவுக்காகப் *பசுபந்தம் செய்வதாக இருந்தது. நாகம் பட்பட்கோ சுவாமி அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வந்திருந்தார். அதை ஒட்டி அகல்யாபாயுடன் பேச யமுனாபாய் வந்திருந்தாள். இருவரும் தனியே அமர்ந்திருந்த போது யமுனாபாய், “அரசர் இரண்டு நாட்களுக்கு முன் என்னுடன் வந்து இரவு தங்கிப் போனார். அப்போது உன்னைப் பற்றிக் குறிப்பிட்டார்” என்று சொன்னாள். (*பசுபந்தம் - இது 18 வகை யாகங்களில் ஒன்று. குடும்ப நலனுக்காக ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படுவது.) “என்னைப் பற்றிச் சொன்னாரா? என்ன சொன்னார்? சொல்லுங்கள் அக்கா!” என்று கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டாள் அகல்யா. குறும்புக்காகவும், அவளுடைய கற்பனையை வளர விடுவதைப் போலவும், யமுனாபாய் தன் கைகளை முகத்தின் மேல் குவித்துக் கொண்டு, கண்ணைச் சிமிட்டிப் புன்னகை செய்தாள். அதைக் கண்டதும் பொல்லாத ரசனையிலும் கற்பனையிலும் அகல்யாபாயின் முகம் சிவந்தது. அதைத் தன்னுள்ளே ரசித்து மகிழ்ந்தபடி மௌனமாக இருந்தாள் யமுனாபாய். “குறும்பெல்லாம் வேண்டாம் அக்கா! மன்னர் அழகை எப்படி ரசிப்பார் என்பது எனக்கும் தெரியும். என்னைப் பற்றிய பேச்சு எப்படி வந்தது? அதை மட்டும் சொல்லுங்கள் போதும்” என்றாள் அவள். “அன்று சுலக்ஷணாவின் பிறந்தநாள் விழாவுக்காகப் போய்விட்டுத் திரும்பினீர்கள் அல்லவா? அப்போது அழத் தொடங்கி விட்டாயாமே? மன்னர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சமாதானம் அடையவில்லையாமே; அங்கே அப்படி என்ன நடந்தது?” என்று கேட்டாள் யமுனாபாய். அந்த நிகழ்ச்சியை மீண்டும் எண்ணிப் பார்த்தபோது அகல்யாபாயின் கண்கள் கலங்கின. ஆதூரத்துடன் மூத்த ராணியின் தோளைத் தொட்டு அணைத்துக் கொண்டாள். கலங்கிய குரலில், “அக்கா! நீங்கள் அறியாதது இல்லை. நீங்கள் என்னுடன் பிறந்தவரைப் போல! ஆயினும் மன்னர் எனக்குத் தெரிந்து உங்களுடைய அணைப்பில் சுகம் கண்டாலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ஏன் தெரியுமா? உங்கள் மீது எனக்குப் பொறாமை இல்லை. ஆனால் இது பெண்களுக்கே உரிய சுபாவம். அவர்கள் எதையும் விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால் கணவனின் அன்பை மட்டும் பகிர்ந்து கொள்ள மனம் ஒப்பமாட்டார்கள்!” என்றாள் அகல்யாபாய். “அன்று நான் உங்களுடன் வரக்கூட இல்லையே அகல்யா?” “உங்களைச் சொல்லவில்லை! அன்றைய விழாவுக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் போனேன். இளையராணி என்ற பெருமையுடன் போனேன். ஆனால் அரசரின் கவனத்தைத் திருப்ப அங்கே கேரளத்திலிருந்து ஒரு அழகுராணி வந்து காத்திருந்தாள்!” “வந்து விட்டுப் போகட்டுமே? உனக்கு என்ன மனக்குறை?” “அவள் வெறும் அழகி மட்டும் அல்ல; சித்ரசேனா என்ற அந்தப் பெண்மணி கேரளத்தில் ராஜநர்த்தகி. அந்த அரசரின் சிபாரிசுடன் இங்கே வந்திருக்கிறாள். ஒரு முறையேனும் தனது நாட்டியத்தை, நமது மன்னர் பார்த்து ரசிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள்...” “மன்னர் அனுமதி கொடுத்தாராக்கும்? அதை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே? நீ கலங்கிப் போவானேன்?” “அக்கா! மன்னரைப் பற்றித் தாங்கள் அறியாத உண்மையையா நான் சொல்லப் போகிறேன்? கலை என்றாலும், அழகு என்றாலும், நல்ல பண்பு என்றாலும் மனம் மயங்கும் சுபாவம் அவருக்கு உண்டல்லவா? நம் இருவரைத் தவிர வேறு பெண்களையே அறியாதவரா அவர்? மூன்று ராணிகள் உண்டல்லவா அவருக்கு? நாம் மூவரும் தவிர முத்தாம்பாள் என்ற பெண்மணி அவருடைய வாழ்க்கையில் இடம் பெற்றிருக்கவில்லையா? அவளுடைய மறைவுக்குப் பின் அவளுடைய நினைவாக ஒரத்த நாட்டில் ஒரு சத்திரத்தையே கட்டி வைத்திருக்கிறாரே மன்னர்! வெறும் சத்திரமா அது? எவ்வளவு விதமான கல்வி போதனைகள்! பயிற்சிகள்! ஒரு கலைக்கூடமாக அல்லவா அது திகழ்கிறது? அவள் மீது மன்னருக்கு எத்தனை அன்பு இருந்திருந்தால் அவ்வளவையும் செய்திருப்பார்?” என்று குரல் நடுங்கக் கேட்டு நிறுத்தினாள் அகல்யாபாய். அவள் விழிகளிலிருந்து சிந்திய நீர் யமுனாபாயின் புறங்கையில் தெறித்தது. “அகல்யா! இதற்காக மனம் கலங்கலாமா? அரசரை நாம் அவருடைய உயர்ந்த பண்புகளுக்காகத்தானே மணந்து கொண்டோம்? அரசர்களுக்கு இது போன்ற பலவீனங்களும் இருப்பது நமக்குத் தெரியாதா? காளிதாசன் சாகுந்தலத்தில் கண்வர் தமது மகள் சகுந்தலைக்குச் சொல்லும் புத்திமதிகளை நீ படித்ததில்லையா? ‘அரசனுக்குப் பிரியமானவர்கள் பலர் இருப்பார்கள்... அவர்கள் உனக்கு முன்பே அவருடைய வாழ்க்கையில் இடம் பெற்றவர்கள். அதனால் அவர்களிடம் சகோதரியைப் போல நடந்து கொள். எல்லோருடைய பிரியத்தையும் நீ சம்பாதித்துக் கொள்ள வேண்டும்!’ என்று கண்வர் சொல்கிறார் அல்லவா?” என்று கேட்டு இளையராணியின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள் யமுனாபாய். “அக்கா! அது நான் அறியாததா? தங்களிடமோ, மூன்றாவது அரசியாரிடமோ நான் தவறாக நடந்து கொண்டதுண்டா? ஆனால் நமது வாழ்க்கையில் கல்யாண மகாலில் உள்ள அக்காமார்களும் வந்து குறுக்கிடுவானேன்? அது அவசியம் தானா? அந்த அழகி சித்ரசேனாவைத் தாங்கள் பார்க்கவில்லை. பார்த்தால் அசந்து போவீர்கள்! தந்தத்தால் கடைந்ததைப் போன்ற வடிவமும், பொன்னும் மஞ்சளும் கலந்த நிறமும், சந்தனக் குழம்பு தடவியது போன்ற நறுவாசமும், கயல் மீனெனச் சுழலும் கண்களும், கனிரசம் ததும்பும் இதழ்களும், எந்த ஆணையும் மயங்கி நிற்க வைக்கும். ஆனால் அதைப் பற்றி கூட நான் பெரிதும் கவலைப்படவில்லை. அப்படி என்ன நடந்துவிட முடியும்? இந்த வயதில் மன்னருடைய மனநிலை கலங்கி விட முடியுமா? ஆனால் அவளுடைய மகளும் கூடவே வந்திருக்கிறாள்...” “மகளா? எதற்கு இளையராணியாரே?” என்று முகத்தை நிமிர்த்திக் கேட்டாள் யமுனாபாய், செல்லம் ததும்பும் குரலில். “குறும்பு வேண்டாம், மூத்த ராணியாரே! அதுதான் என்னைப் பெரிதும் நிலைகுலைய வைத்தது. மலரப்போகும் அந்த அழகு என் மகனையும் மயக்கிவிடுமோ என்று அஞ்சுகிறேன். இளமையை இன்னும் எட்டாத அந்த மொட்டின் கட்டுறுதியான உடலும், கால்நுனிவரை அலையும் கூந்தலும், பொன்னிற மேனியும், நடையிலும் இடையிலும் எடுப்பிலும் துடிப்பிலும் பளீரிடும் கொள்ளையழகும் என்னைக் கதி கலங்கச் செய்கின்றன. இந்த தஞ்சைத் தரணியின் வருங்கால அரசன் நேர்மை தவறாத ஒழுக்க சீலனாக விளங்குவானா? அல்லது அவனுடைய ஒளிமயமான வாழ்க்கையை இந்த சுந்தரியின் ஆசை குறுக்கிட்டு மங்கச் செய்துவிடுமா? அல்லது அந்த ஆடல்வல்லான் இந்த ஆடலழகியின் திட்டங்கள் நிறைவேறாமல் தடுத்து நம் எல்லோரையும் காப்பாற்றுவாரா? என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை! மராட்டிய மன்னரின் வீரவம்சம் சரித்திரம் புகழும் விதமாக அமைய வேண்டும். மங்கையர்வசம் சிக்கி மங்கிப் போன வாழ்க்கையாக ஆகிவிடக்கூடாது. ஆயினும், இதை நான் எவ்வாறு எடுத்துச் சொல்லுவது? இன்னும் வாலிபத்தை முழுமையாக எட்டாத சிவாஜியின் உள்ளத்திலே நானே கள்ளம் புக வழி செய்து விடலாமா? அது நியாயமாகுமா? ஆயினும், இந்தக் கவலையை எப்படி நான் எனது மனச்சிறையில் வைத்துப் பூட்டுவேன்? முடியவில்லையே அக்கா!” சொல்லும் போதே அகல்யாபாயின் நாவு தழுதழுத்தது. உணர்ச்சி மிகுதியினால் பேச முடியாமல் தொண்டையை அடைத்துக் கொண்டு விட்டது. கைகள் இரண்டும் பரிதாபமாக யமுனாபாயின் மடியில் புரண்டு அலைந்தன. யமுனாபாய் அவளை அணைத்துத் தேற்றினாள். ஆயினும் அவளால் அந்த வேதனைக்காளான மனத்துக்கு முழு ஆறுதலை அளிக்க முடியவில்லை. புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|