![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 11 |
16. மன்னர் அளித்த உறுதிமொழி
பாணர் முல்லை பாடச்சுடர் இழை வாள்நுதல் அரிவை முல்லைமலைய இனிது இருந்தனனே நெடுந்தகை நுனிதீர் கொள்கைத் தன் புதல்வனோடு பொலிந்தே. - ஐங்குறுநூற்றில் செவிலி கூற்றுப் பத்து பௌர்ணமி நிலாவொளி வசந்த மண்டபத்தின் திறந்த வெளி அரங்கை வெள்ளியால் குளிப்பாட்டி இருந்தது. அழகான மேடையின் பக்கப் பகுதிகளைப் பலவித ஓவியங்கள் கொண்ட திரைச்சீலைகள் மறைத்திருந்தன. பின்புலமாக அமைந்திருந்த சுவரில் தில்லையம்பலப் பெருமானின் ஆனந்தக் கூத்து சிற்ப வடிவமாக அமைந்து நின்றது. மேடையைச் சுற்றிலும் இருந்த அலங்காரத் தூண்களில் கட்டிய முல்லையும், மருவும், கதம்பமும், இனிய நறுமணத்தை எழுப்பின. திறந்தவெளிக்கு ஒளியூட்ட மர ஸ்தூபிகளின் மேல் வைத்த எண்ணெய் விளக்குகள், குழந்தை முகத்தின் புன்சிரிப்பைப் போல மௌன ஒளி சிந்தி அழகூட்டின. முக்கியமான தஞ்சை நகர மக்கள் அங்கே கூடி இருந்தார்கள். நாட்டியத்தில் வல்ல கணிகையர்கள் ஒருபுறம் அமர்ந்திருந்தனர். தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய பல பகுதிகளிலிருந்தும் வந்து பிரபுக்கள் கூடி இருந்தார்கள். கேரளத்திலிருந்து வந்த மக்லோட் துரையும், ரெசிடெண்ட் துரையின் நண்பர்களும், ஆங்கிலேய மாதர் சிலரும் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். தனியாகப் போடப்பட்ட அலங்கார ஆசனங்களில் அரச குடும்பத்தினர் உட்கார்ந்திருந்தனர். கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. முகத்தைப் பட்டுத் திரையால் மூடியபடி சித்திரசேனா மெல்ல நடந்து வந்து முன் வரிசையில் அமர்ந்தாள். சில நிமிடங்களில் அதைத் தொடர்ந்து இளவரசரும், இளவரசி சுலக்ஷணாவும், அரசர் பெருமானும் வந்தனர். அரச குடும்பத்தினரின் இருக்கைகளுக்கு நடுவே நாயகமாக அமைந்திருந்த அலங்கார ஆசனத்தில் சரபோஜி மன்னர் அமர, அதுவரை எழுந்து நின்ற பிரமுகர்களும் தத்தம் இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டார்கள். மேடை மீது வாத்தியங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை இயக்கும் கலைஞர்கள் மேடை மீது ஏறினார்கள். நடைபெற இருக்கும் கேரள நடனத்தைப் பற்றி விளக்கிச் சொல்ல, சரசுவதி மகாலிலிருந்து வந்திருந்த அறிஞர் சேரமான் பெருமாள் மேடையில் ஏறினார். அவர் ஏறியபின் சில நொடிகளில் சித்திரசேனாவும், முகத்திரையை எடுக்காமலேயே, மன்னரின் இருப்பிடம் நோக்கி வணங்கிவிட்டு, மெல்ல மேடை மீது ஏறினாள். சேரமான் பெருமாள் நடன நிகழ்ச்சியை அறிமுகம் செய்யத் தொடங்கினார். கதகளி நாடக நாட்டியம் குறித்தும் சரக்கியர் கூத்து பற்றியும் விவரித்தார். ஒருவராக ஆண் மட்டும் நின்று ஆடும் ஆட்டம், ஓட்டம், துள்ளல் பற்றிக் கூறிவிட்டு, மோகினி ஆட்டத்தைப் பற்றி வருணித்தார். வாயினால் பாடி, பாட்டின் பொருளை முத்திரைகளினாலும், பாவங்களைக் கண்களினாலும், தாளத்தினைப் பாதங்களால் தட்டியும் ஆடும் விதத்தை வர்ணனை செய்தார். அழகும் மதுரமும் கொண்ட கலை என்றும், கண்களும், முகமும், கூந்தலும், கைகளும், இடையும், பாதங்களும், கவிதை பேசும் கட்டழகு கொண்ட பெண்கள் ஆடுவது என்றும், காளிதாசனால் வருணிக்கப்பட்ட கேரள நடனத்தையும், அதன் நடன மாதரையும் சம்ஸ்கிருதக் கோட்பாடுகளுடன் எடுத்துக் காட்டினார். கூடி இருந்த மக்கள் கரவொலி எழுப்ப, விளக்குகள் மேடையில் ஒளிமழை பொழிய, அவர் மேடையிலிருந்து இறங்கியதும் சித்திரசேனா வந்து மேடையின் நடுவே நின்றாள். ஜிலுஜிலுவென்ற பட்டு முகத்திரை நழுவிக் கீழே விழுந்ததும், அழகுப் பதுமையாகக் கண்கவர் ஜொலிப்புடன் கரம் குவித்து நின்றாள் சித்திரசேனா. வாத்தியங்கள் முழங்கின. அரங்கத்தில் இருந்த அம்பலத்தரசனுக்கு வணக்கம் கூறி, அரசரை நோக்கி இடையை வளைத்து கரம் குவித்து, வணக்கம் சொல்லி, பம்பரமாகச் சுழன்று நடுமேடையில் வந்து நின்றாள் அவள். தூய வெண்ணிற உடுப்பில் அன்னப்பட்சியைப் போலத் தோன்றினாள் சித்திரசேனா. கருங்குழலை வளைத்து பின்னால் கட்டிய பிறை வடிவில் முல்லைச்சரம் பதிந்து நின்றது. நேர்த்தியாகத் தீட்டிய கரிய புருவத்தின் நடுவில் செந்நிறக் கொழுந்தெனத் திலகம் மின்னிற்று. முத்து அலங்காரப் பட்டை இடையில் மின்ன, கால்கள் கவிதை பாட, அந்த அழகி ஆடத் தொடங்கினாள். மேடையில் அழகு மயில் தோகை விரித்தது. அன்னப் பட்சி நளினமாக நடந்தது. கழுத்தசைவிலும், கண்களின் ஓட்டத்திலும், பாதங்களின் துள்ளலிலும், எழில் மின்னல் பளீரிட்டு மறைந்தது. மலரம்பு எய்யும் மன்மதனாகவும், மன்மத பாணத்துக்கு இலக்கான நாயகியாகவும் அவள் ஒருத்தியே ஆடிக் காட்டினாள். விரகதாபத்தைக் காட்டும் பாவனையிலும், கண்ணீர் சிந்துவதை மோதிர விரலால் கண்ணிமையிலிருந்து வழித்து விரலைச் சுண்டி விடுவதாலும், நாயகனை இறைஞ்சுவதைக் குவிந்த மலர்க்கரங்களாலும், கூடி மகிழும் ஆனந்தத்தை விரல்களின் பிணைப்பிலும் காட்டி, அனைவரையும் மகிழச் செய்தாள். ‘கைவழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்ல’ என்று சாஸ்திரத்தில் கூறிய வருணனையை ஆடலாலும், அடவுகளாலும் காட்டினாள். மேகத் திரையை நீக்கி எழுந்த பூரண நிலவைப் போலவும், பூத்த வஞ்சிக் கொடி போலவும், கார்மேகம் கிழித்து மின்னல் வெளிப்பட்டது போலவும், அந்த மலர்க்கொடி மின்னல் ஒளி தெறிக்க ஆடினாள். அந்த மேடையே பூக்கள் மலர்ந்த நந்தவனமாகத் தெரிந்தது. அங்கே மயிலென ஒளிர்ந்தாள் சித்திரசேனா. முகம் பார்க்கும் கண்ணாடியில் அழகு பார்க்கும் நங்கையாகவும், மெல்ல நடந்து சரசமாடும் காதலியாகவும், கூடி மகிழ்ந்து இன்பம் ததும்ப நிற்கும் நாயகியாகவும், பிரிந்து சென்ற தலைவனை நாடி வாடும் பூவையாகவும் நவரசங்களைக் காட்டி ஆடினாள் அந்த ஆனந்தவல்லி. மோகினி ஆட்டம் நடந்த பொழுது, கண்ட அனைவரும் அந்த அழகியின் உணர்ச்சிகளுக்கு அடிமை ஆனார்கள். அவள் கண்ணீர் சிந்திய போது கலங்கினார்கள். அவள் மகிழ்ந்த போது களிப்பெய்தினார்கள். அவள் மயங்கி இன்புற்ற வேளையில் அவர்களும் மனம் தடுமாறினார்கள். இசைக்கும் தாளத்துக்கும் ஏற்ப அவள் சுழன்றாடியபோது அவர்களும் கருத்தும் கவனமும் சுழலத் தம்மை மறந்து நின்றார்கள். ஆடல் முடிந்தது. மேடையிலிருந்து மெல்ல இறங்கினாள் சித்திரசேனா. அரசரின் அருகே வந்து அடிபணிந்தாள். கண்கள் வெதுவெதுப்பாய் மேலே ஏறின. மலர்கள் உலைவது போல உடல் நிமிர்ந்தது. பொன்னொளி பொலியும் மெல்லுடல் அசைய, கச்சையில் இறுகிய சந்தன நிறத்தனங்கள் வார்ப்படமாக மின்னின. விழிகளை உயர்த்தி ஒய்யாரமே வடிவாய், எதையோ வேண்டுவது போல நின்றாள் சித்திரசேனா. விரல்கள் தாமரை மொட்டாகக் குவிந்தன. அருகில் வந்து நின்ற மக்லோட் துரை, “அரசே! தங்களிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறாள் சித்திரசேனா. அதைச் சொல்ல அனுமதிக்க வேண்டும்” என்றார். மன்னர் அந்த நடனத்தின் பிரமை எழுப்பிய இனிய உணர்விலிருந்து இன்னும் மீள முடியாதவராய் இருப்பது தெரிந்தது... உறுதியான குரலில், “எதுவாயினும் கேள். கொடுக்கிறேன் சித்திரசேனா!” என்றார் அரசர். அதைக் கேட்ட அகல்யாபாய் திடுக்கிட்டுக் குலுங்கி நிமிர்ந்தாள். அவளுடைய கண்கள் பயத்தால் மிரண்டன. சித்திரசேனாவின் சற்றே திறந்த வாய்க் கிண்ணத்தில் செவ்வொளி பரவிற்று. பின்னால் வந்து நின்ற மகள் புவன மோகினியைத் தன்னருகில் இழுத்து மெல்ல அணைத்தபடி, மென்மையான குரலில் பேசத் தொடங்கினாள் சித்திரசேனா... “அரசே! தமிழகத்தின் அரும்பெரும் கலைச் செல்வமாக விளங்குவது பரத நாட்டியம். அதற்கு நிகரானது இன்று இந்தியாவில் வேறெங்கும் இல்லை. மன்னர் சுவாதித் திருநாள் அவர்களின் சபையில் நான் கதக், கதகளி, குச்சிப்புடி, யக்ஷகானம், பாகவத நாடகம், மணிப்புரி, ஜாவா நாடகம், பர்மா ‘புவே’ போன்ற எத்தனையோ விதமான நாட்டியங்களையும், நாட்டிய நாடகங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் பரதநாட்டியத்தைப் போல வேறெதுவுமே என்னுடைய மனத்தைக் கவர்ந்ததில்லை. அந்த அருங்கலையின் இதயமாக விளங்குவது தஞ்சைத் தரணிதான். ஆகையால் அந்த அரிய கலையின் சிறப்பை, இங்கே தங்களுடைய சந்நிதியில் காண வேண்டும் என்று நான் ஆவலுடன் புறப்பட்டு வந்தேன்...” சித்திரசேனா தயங்கி நிறுத்தினாள். ஒருமுறை தனது அருமை மகளைத் தடவிக் கொடுத்தாள். ஏதோ சொல்ல விரும்புவதைக் காட்டும் பார்வையுடன் அரசரை நோக்கினாள். புருவங்கள் வினாவெழ உயர்ந்தன. “உன்னைப் போன்ற ஒரு கலையரசியை வரவேற்பதில் நாங்களும் பெருமை அடைகிறோம். சித்திரசேனா! இப்போது நீ கேட்க விரும்புவதென்ன? தாராளமாகச் சொல்!” என்றார் மன்னர். சித்திரசேனாவின் கருவண்டு விழிகள், ஒரு முறை சுழன்று அடங்கின. கன்னங்கள் வெட்கத்தில் சிவப்பு மொட்டாக அரும்பின. ஒரு பெருமூச்சில் மார்பகம் விம்மி அடங்கிற்று. “சுவாமி! தங்களைப் போன்ற கலைகளைப் போற்றும் ரசிகரை எந்த நாடும் இதுவரை மன்னராகப் பெற்றதில்லை. இதை நான் சொல்லவில்லை; கலை உலகில் தொடர்புள்ள அனைவருமே கூறுகிறார்கள். அதனால் தான் துணிந்து நான் இந்த வேண்டுகோளைத் தங்களிடம் வைக்கிறேன். பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நிறைய இருந்ததுண்டு...” “இன்னும் இருக்கிறதா சித்திரசேனா? இருப்பின், இங்கேயே தங்கி நீ கற்றுக் கொள்ளத் தடையேதும் இல்லை...” என்றார் அரசர் புன்முறுவலுடன். சித்திரசேனா தலையைக் குனிந்து கொண்டாள். “இல்லை அரசே! அந்த ஆசை அகாலத்திலேயே மலர்ந்து மூடிக் கொண்டு விட்டது. மேலும் நான் இப்போது கேரள ராஜ்யத்தின் சொத்து. அதனின்று வெளியே வர அந்த அரசரின் அனுமதி பெற வேண்டும். ஆகையால் இந்தப் பிறவியில் எனக்கு அந்த ஆசை இல்லை. ‘பரதம் பத்தாண்டே’ என்று சொல்லுவார்கள். பருவம் எய்துவதற்குள் கற்கத் தொடங்கிப் பருவமணம் பொங்கிச் செழித்த நிலையை அடைவதற்குள் அதைக் கற்று முடிக்க வேண்டும். அந்த வகையில் இப்போது பரத நாட்டியக் கலையைப் பயிலக் கூடிய தகுதியுடையவள், எனது மகள் புவனமோகினிதான்!” என்று சொல்லித் தனது மகளை அரசன் முன் நிறுத்தி வணங்கச் செய்தாள் சித்திரசேனா. அந்தப் பயமறியாத இளங்கன்றின் விழிகளில் ஒருகணம் நாணமும் அச்சமும் கலந்து குழம்பின. அரசரை நிமிர்ந்து பார்க்கவும் அஞ்சிக் குனிந்த முகத்தில் கலவரம் குடிகொண்டது. “உனது மகள் புவனமோகினி இங்கே தங்கி பரத நாட்டியத்தில் பயிற்சி பெற வேண்டும். அவ்வளவுதானே? உன் விருப்பம் நிறைவேறும். நிம்மதியாகப் போய் வா!” என்றார் மன்னர் சரபோஜி. “இன்னும் ஒரு வேண்டுகோள் அரசே! அவள் இதுவரை என்னைப் பிரிந்து இருந்ததில்லை. ஓரளவு வசதியாக வாழ்க்கையை அனுபவித்தே பழகியவள் அவள். இங்கே தங்குவதற்கு வசதியாகவும், பயிற்சிக்குப் பாதுகாப்பாகவும் ஒரு ஏற்பாடு தங்கள் அருளால் அமைய வேண்டும் சுவாமி!” “கவலைப்படாமல் போய் வா சித்திரசேனா! அவள் தகுந்த பாதுகாப்புடன் நல்ல முறையில் வளர்க்கப்படுவாள். நடனம் ஒன்றே அவளுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கும். கலையார்வம் கொண்டவர்களைக் கை நீட்டி வரவேற்க எங்கள் தஞ்சை என்றுமே தயங்கியதில்லை. அவள் நல்லமுறையில் பயிற்சி பெற்றுத் திரும்ப நான் ஏற்பாடு செய்வேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அரசர். அதைக் கேட்டு சித்திரசேனாவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. நிம்மதியுடன் பெருமூச்சு விட்டபடி வணங்கி எழுந்து நின்றாள். குவிந்த கரமலர்கள் தொழுத வண்ணம் இருந்தன. நன்றிப் பெருக்கினால் கண்களில் அரும்பிய நீர், கன்னங்களில் ஓடித் தெறித்தது. கூட்டம் கலையத் தொடங்கிற்று. அரசர் எழுந்து விட்டார். அதைக் கூடக் கவனியாமல் கற்சிலையாகி அமர்ந்திருந்தாள் ராணி அகல்யாபாய். எதையோ எண்ணிக் குழம்பிய மனம் அமைதியற்றுத் தவித்தது. புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|