1 சொக்கத் தங்கம் உருகிப் பரந்து ஓடிய இளம் பெருக்குப் போல் மஞ்சள் நிறம் மாறி இன்னும் கரும்பசுமை படியாத நெற்பயிர் நாற்றங்கால்கள் காற்றில் சிலிர்ப்பதும் தணிவதுமாயிருந்தன. அதிகாலையின் மழலைக் காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. வேப்ப மரத்தடி மேட்டில் உட்கார்ந்து பேப்பரும் கையுமாக ஏதோ எழுத முயன்று கொண்டிருந்த முத்துராமலிங்கத்தைத் தந்தையின் வருகை நிமிர வைத்தது. எழுத முயன்றதன் கவனமும் கலைந்தது. பக்கத்து நகரமான தேனியில் இன்னும் இரண்டு நாளில் நடக்க இருந்த முத்தமிழ் மன்றக் கவியரங்கத்துக்காக அவனையும் பாடக் கூப்பிட்டிருந்தார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு வெளிவந்த பரீட்சை முடிவுகளின்படி கிடைத்திருந்த எம்.ஏ. என்ற இரண்டு எழுத்துக்களையும் கூடப் பின்னால் சேர்த்து அழைப்பிதழில் அச்சிட்டு அவனை மகிழ்வித்திருந்தார்கள். 'பயிர்கள்' என்று அவன் பாட வேண்டிய கவிதைப் பொருளுக்கு நேரே கவிஞர் ப. முத்துராமலிங்கம் எம்.ஏ. என்றிருப்பதைப் பார்க்கும் போதே ஏதோ புதிதாக வாங்கிச் சேர்த்த ஒரு தீப்பெட்டிப் படத்துக்காகச் சந்தோஷப்படுகிற சிறுவனின் குதூகலம் உள்ளே சுரந்து ஊறியது. "என்னடா? நீ பாட்டுக்கு வாய்க்கால் வரப்பைச் சுற்றிக்கிட்டிருந்தா எப்படீன்னேன்? ஏதாச்சும் வேலைக்கு வழியைப் பாரு! பசுங்கிளித் தேவர் மகன் வேலை கிடைக்காமச் சோம்பேறியாத் தெருச் சுத்திட்டிருக்கானாம்னு ஊரிலே நாலு பேர் பேசறத்துக்கு முந்தியாவது ஒரு வேலையைத் தேடிக்கப்பா!" அவர் வேப்பங்குச்சியால் பல் தேய்த்தபடி நின்று கொண்டே பேசியதால் அவனும் மரியாதைக்காக எழுந்து நின்று கொள்ள வேண்டியதாயிற்று. பிசிறு தட்டிய நூல் ஊசித் துவாரத்தில் நுழையாமல் விலகி, விலகி மடங்குவதைப் போல் அவனது கவியரங்கக் கவிதைக்கான சிந்தனைகள் விலகி மடங்கின. மனத்தை எதிர்காலக் கவலைகள் என்ற கனமான இருள் வந்து மூடிக் கவ்வியது. "எதுக்கும் ஒரு வாட்டி மெட்ராஸ் போய் வரணும் ஐயா! அதுக்குக் கொறஞ்சது நூறு ரூவாயாச்சும் செலவழியுமேன்னுதான் பார்க்கிறேன்." "மெட்ராஸ்லே என்னப்பா கொட்டிக் கிடக்குது? இங்ஙன மதுரையிலே தான் போய்த் தேடிப் பாரேன். ஏதாச்சும் வேலை கிடைக்காமலா போயிடப் போவுது?"
"ரிஸல்ட் வந்தண்ணைக்கி மதுரை போனப்பவே விசாரிச்சுப் பார்த்தேன் ஐயா! கம்பெனி வேலைக எதுவும் கெடைக்காதுன்னு தோணுது. அவங்க நாம அங்கே போய் நின்னதுமே தமிழ் எம்.ஏ.யானா வேண்டாம்கிறாங்க."
"அப்ப தமிழ் எம்.ஏ.க்கு வேற என்னதான் கெடைக்கும்? எங்ஙன கெடைக்கும்?" "ஏதாச்சும் ஹையர் செகண்டரி ஸ்கூல்லே தமிழ் வாத்தியாராப் போகலாம்!" "போறது போறப்பா காலேஜாப் பார்த்துப் போகலாமில்லே?" "இப்ப அது முடியாதையா! காலேஜுங்கள்ளே வேலைக்குச் சேர்த்துக்க எம்.ஃபில். வேணுங்கறாங்க. இல்லாட்டி பி.எச்.டி. வேணுங்கறாங்க." "அதெப்படிப்பா? நம்ம செக்கானூரணிக் குருநாதத் தேவர் மகன் வெறும் எம்.ஏ. தானே? அவன் காலேஜிலே தானே லெக்சரராவோ, என்னமோ இருக்கான்?" "அது ஏழெட்டு வருசத்துக்கு முந்தின சமாசாரம் ஐயா! இப்பல்லாம் அப்பிடி முடியாது." "ஏன்கறேன்?" "காலேஜுங்கள்ளேருந்து பி.யூ.சி.யை எடுத்துப் போட்டு ஹைஸ்கூலுங்கள்ளேயே பிளஸ் டூன்னு ஒரு கிளாஸைச் சேர்த்தப் பெறவு இப்போ இப்படி மாத்திப்பிட்டாங்க. எம்.ஏ. மட்டும் படிச்சவங்க இந்த மாதிரி பிளஸ் டூ ஸ்கூல்லே தான் வேலைக்குச் சேர முடியும்." "அது ஏன் அப்பிடியாம்? பொழுதண்ணைக்கும் யாராச்சும் ரெண்டு மந்திரிங்க தமிழைக் கட்டிக் காப்போம். தமிழ் படிச்சவங்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்குவோம்னு எங்கேயாவது பேசிக்கிட்டிருக்காங்களே? கட்டிக் காக்கிற லட்சணம் இதுதானா?" "அதெல்லாம் ரொம்பத் தாராளமாகவே பேசுவாங்க ஐயா! பேசறதுக்கென்ன பஞ்சம் வந்திச்சு?" அவ்வளவில் அவர் பல் விளக்கக் கிணற்றை நோக்கி நடக்கவே முத்துராமலிங்கம் மறுபடி வேப்ப மரத்தடியில் வந்து கவிதை எழுத உட்கார்ந்தான். ஆனால் முதலில் எழுத உட்கார்ந்த போது இருந்த மாதிரி மனம் இப்போது இலகுவாக இல்லை. அப்போது பூக்குடலையைச் சுமப்பது போலக் கனமற்றும் இதமாகவும் மென்மையாகவும் இருந்த மனம் இப்போது பாறாங்கல்லாகக் கனத்தது. எதுவும் எழுத வரவில்லை. காகிதக் கற்றைகளை எதுவும் எழுதாமல் அப்படியே மடித்துச் சட்டைப்பையில் சொருகிக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான் அவன். "ஆத்தா! ஒரு பத்து ரூபா பணம் குடு. மதுரைக்கிப் போயி யுனிவர்ஸிடியிலே கொஞ்சம் சர்டிபிகேட் எல்லாம் வாங்கணும்." கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்துப் பழக்கங்கள் வந்த பின் ஒவ்வொரு தடவை தாயை விளிக்கும் போதும் இந்த 'ஆத்தா' வை விட்டு விட்டு 'அம்மா' என்பதாக மாற்ற வேண்டும் என்று எண்ணி அந்த மாற்றமும் புதுப் பெயரால் திடீரென்று விளிப்பதும் தன் தாயை அந்நியமாகவும் வித்தியாசமாகவும் உணரச் செய்து விடுமோ என்ற அச்சமும் தயக்கமும் மனத்தளவிலேயே தடுக்க நேர்ந்து, அதைச் செய்யாமல் தவிர்த்துக் கொண்டு பழையபடியே கூப்பிட்டிருக்கிறான் அவன். கேழ்வரகுப் பானையில் கையை விட்டுத் துழாவிப் பார்த்த பின், "இந்தாடா முத்துராமு! நல்லவேளையா இருந்திச்சு... நேத்தே தீர்ந்து போயிரிச்சோன்னு நெனைச்சேன்" என்று ஓர் அழுக்கடைந்த பத்து ரூபாய் நோட்டை நீட்டினாள் அவனுடைய தாய். அவளுடைய சேமிப்பின் கடைசிப் பகுதியாக இருக்க வேண்டும் அது. ரூபாயை வாங்கிக் கொண்டு மதுரைக்குப் புறப்பட பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான் முத்துராமலிங்கம். பக்கத்திலே வைகை அணைக்கட்டு வந்தாலும் வந்தது, ஆண்டிப்பட்டியிலிருந்து மேற்கே போகவும் சரி, கிழக்கே மதுரை போகவும் சரி, பஸ் கிடைப்பது மிக மிகச் சிரமமானதாகிவிட்டது. சமயங்களில் சைக்கிளில் தேனி வரை போய் அப்புறம் அங்கிருந்து மதுரைக்குப் பஸ் பிடிக்க வேண்டி வந்தது. நல்லவேளை, அன்று அப்படி நேரவில்லை. உடனே பஸ் பிடித்து மதுரை ஊருக்குள் இறங்காமல் செக்கானூரணி தாண்டியதும் ஞாபகமாக யுனிவர்ஸிடி ஸ்டாப்பிலேயே இறங்கிக் கொண்டு புரொவிஷனல் சர்டிபிகேட்டையும், வேறு சில நன்னடத்தைச் சான்றிதழ்களையும் வாங்கி முடிக்கப் பகல் ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதை முடித்துக் கொண்டு அவன் மதுரை ஊருக்குள் போய்ச் சில கல்லூரி நண்பர்களைச் சந்தித்தான். அவனைப் போலவே தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. தேறிய பலர் எந்த வேலைக்குப் போவதென்று புரியாமல் திகைத்துக் குழம்பிக் கொண்டு தான் இருந்தார்கள். சிலர் எம்.ஃபில். சேருவதற்கு அப்ளிகேஷன் போடத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். முத்துராமலிங்கம் எம்.ஃபில்லுக்காக மேலும் ஓராண்டு வீணாக்க விரும்பவில்லை. அவனுடைய குடும்பநிலை மட்டுமின்றி மனநிலையும் அதற்கு ஏற்றதாக இல்லை அப்போது. நன்றாக சிந்திக்க வேண்டிய வளரும் பருவத்தில் அஸைன்மெண்டுகளையும், டெஸ்டுகளையும் எழுதிக் கொண்டு வகுப்பறைக்குள் அடங்கிக் கிடந்து தவிப்பதை அவன் வெறுத்தான். இன்டேர்னல் அசெஸ்மெண்ட் மார்க்குகளுக்காகப் பேராசிரியர்களின் அசட்டு ஜோக்குகளுக்கும் விளக்கெண்ணெய் ஹாஸ்யங்களுக்கும் அவர்கள் பார்வையில் படுகிற விதத்தில் சிரித்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு மேலும் ஆட்பட விரும்பவில்லை அவன். படிப்பும் வகுப்பறைகளும் அவனுக்கு அலுப்பூட்டின; சலிப்பு அடையச் செய்தன. சமீபத்தில் நடந்த அசெம்பிளி தேர்தலில் எம்.எல்.ஏ. ஆக வெற்றி பெற்ற சிதம்பரநாதனின் மகளும் தன்னுடன் படித்த கல்லூரித் தோழியுமான மங்கையர்க்கரசியைப் பார்க்கப் போனான் அவன். அப்போதே சிதம்பரநாதன் மந்திரியாக வ்ரலாமென்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. பண வசதியும் செல்வாக்கும் இருந்ததாலும் - ஒவ்வொரு ஜாதிக்கு ஒரு மந்திரி பதவி தந்தாக வேண்டிய அவசியமும் நிர்ப்பந்தமும் ஜாதி பேதமற்ற சோஷலிஸ சமுதாயத்தை அமைக்க முயலும் ஒவ்வோர் இந்திய அரசியல் கட்சிக்கும் இருந்ததனாலும் - அவர் மந்திரியாக வருவது நிச்சயம் என்று பேசிக் கொள்ளப்பட்டது. அது எப்படி இருந்தாலும் அவருடைய மகள் அவனுடைய கிளாஸ்மேட், சிநேகிதி. சிதம்பரநாதனின் பங்களா சொக்கிகுளத்தில் இருந்தது. அவருடைய வீட்டில் காம்பவுண்டுப் புல்தரை, மரத்தடி, வராந்தா, வரவேற்பறை எல்லாவற்றிலும் ஆட்கள் நிறைந்து பிதுங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே மாலை ரோஜாப்பூக்களின் இதழ்கள் சிந்தி மிதிப்பட்டுக் கொண்டிருந்தன. பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே அவனும், வேறு நண்பர்களும் அந்த பங்களாவுக்குப் பல நாள் போயிருப்பதால், கூர்க்கா அவனை அடையாளம் புரிந்து கொண்டு புன்சிரிப்போடு உள்ளே போய்ப் பக்கவாட்டிலிருந்த வேறொரு வாசல் வழியே மங்கையர்க்கரசியை வெளியே அழைத்து வந்தான். மிஸ் மங்கா - படிக்கும் போது சக மாணவர்கள் அப்படித் தான் அவளை அழைப்பது வழக்கம் - அன்று ஷாம்பூ போட்டு நீராடியிருந்தாள் போலிருந்தது. கரும்புயலாய் அலைபாய்ந்து சுழன்று குண்டலம் குண்டலமாகத் திரிந்த கூந்தலுக்கிடையே மறக்க முடியாத அவளது சிறப்பு முத்திரையான அந்தப் புன்னகையோடு அவனை எதிர்கொண்டு வரவேற்றாள் அவள். "நீங்க என்ன டிஸ்டிங்ஷன் வாங்கினீங்க மிஸ்டர் முத்துராம்? எனக்கு 'ரேங்க்' கிடைச்சிருக்கு... யுனிவர்ஸிடியிலேயே ஸெகண்ட் 'ரேங்க்'லே வந்திருக்கேன்..." "கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ் மங்கா! நான் ரேங்க் ஒண்ணும் வாங்கலே... வெறும் ஹைஸெகண்ட் கிளாஸ் தான்..." "மேலே என்ன பண்ணப் போறீங்க...?" "நான் எம்.ஃபில்லோ பி.எச்.டி.யோ பண்ணப் போறதில்லை... வேலைதான் ஏதாச்சும் பார்க்கணும். வீட்டிலேயே வேலைக்குப் போகச் சொல்லித்தான் வற்புறுத்தறாங்க." "என்னோட எல்டர் பிரதர் பர்மிங்ஹாம்லே இருக்காரு... சுபாஷ்சந்திரன்னு... முன்னேயே உங்ககிட்டச் சொல்லியிருக்கேனில்லே... அவர் என்னை லண்டன் யூனிவர்ஸிடியிலே வந்து பி.எச்.டி. பண்ணச் சொல்றாரு... யோசிச்சிக்கிட்டிருக்கேன். அப்பா போகச் சொல்றாரு..." "உங்கப்பா மினிஸ்டரா வரப் போறாருன்னு பேப்பர்ல எல்லாம் பார்த்தேனே...?" "வரலாம்... இன்னும் நிச்சயமாகத் தெரியலே... இருங்க காபி கொண்டாரச் சொல்கிறேன்" என்று கூறிவிட்டு உள்ளே போய்க் காப்பிக்குச் சொல்லிவிட்டு மறுபடி அவனருகே வந்தாள் மங்கையர்க்கரசி. "காலேஜ் லைப் இவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிருக்கப் படாதுன்னு எனக்குத் தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க மிஸ்டர் முத்துராம்?" "எனக்கு அப்படித் தோணலை. இந்த மட்டிலயாவது அந்த நாலு சுவருக்கு நடுவிலேருந்து விடுதலை கிடைச்சுதேன்னு ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு..." "இந்த நாட்டிலே சாதாரண சிடிசனா இருக்கிறதை விட ஸ்டூண்ட்ஸா இருக்கிறது இன்னிக்கு எத்தினியோ நிம்மதியான காரியம் மிஸ்டர் முத்துராம்! இல்லியா? நீங்க என்ன சொல்றீங்க...?" "நீங்க பேசறதைப் பார்த்தா ஸ்டூடண்ஸா இருக்கிறவங்க இந்த நாட்டு சிடிஸன்ஷிப்பைப் பத்திக் கவலைப்பட வேண்டியதில்லைங்கிறீங்களா? அல்லது அவங்க இந்த நாட்டுக் குடிமக்களே இல்லீங்கறீங்களா? என்னாலே அதை ஒத்துக் கொள்ள முடியலியே?" "அப்படியெல்லாம் டீப்பா எந்த அர்த்தத்திலேயும் நான் அதைச் சொல்லலே மிஸ்டர் முத்துராம்... ஸ்டூடண்ட் லைப் ஜாலி லைப்ன்னு மட்டும் தான் சொல்லவந்தேன்." "நீங்க சொல்றதப் பார்த்தாக் கசப்பானதும், சீரியஸ்ஸானதுமாகிற பல அனுபவங்கள் அப்புறம் அந்த ஸ்டூடண்ட்ஸ் லைப் முடிஞ்சதும் மொத்தமா ஒண்ணொண்ணா அடுக்கடுக்கா வந்து வதைக்கும்னு இல்லே ஆகுது?" அவள் பதில் சொல்வதற்குள் காபி வந்தது. டிரேயில் வைத்துக் கொண்டு வந்த தவசிப்பிள்ளை முத்துராமலிங்கத்தைப் பார்த்து முகம் மலர்ந்தான். "இன்னிக்கு இந்தத் தேசத்திலுள்ள மிகப் பெரிய குறை என்ன தெரியுமா மிஸ் மங்கா? நம்மைப் போல இளைஞர்கள் பொறுப்பு என்பது என்னன்னே தெரியாத அளவு கனவுகளிலே மிதக்க ஆசைப்பட்டுக்கிட்டிருக்கோம். முதியவர்கள் பலர் அளவற்ற பொறுப்பைப் பற்றி எந்நேரமுமே கசப்பான எல்லைவரை வெறும் பேச்சில் வற்புறுத்துகிறவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்." "அடடே! நீங்க நிஜமாவே சீரியஸ்ஸா ஒரு விவாதத்திலே இறங்கிட்டீங்க போலிருக்கே... அதெல்லாம் யூனிவர்சிடி 'டிபேட்டிங் சொஸைடி'யோட போகட்டும்... இப்ப வேணாம்..." "வேணாம்னா வேணாம்... நீங்க தான் ஆரம்பிச்சீங்க... இல்லாட்டி நான் பேசாமலே விட்டிருப்பேன்." "ஆமா... நீங்க கதை, கட்டுரை, பொயட்ரி அது இதுன்னு நிறைய எழுதுவீங்களே, வர்ர வருஷம் யூனிவர்ஸிடியிலே டிப்ளமா இன் ஜர்னலிஸம் கோர்ஸ் இண்ட்ரொட்யூஸ் பண்றாங்க. பேசாம அதுலே சேர்ந்து பார்க்கிறதுதானே மிஸ்டர் முத்துராம்?" "இல்லே... நான் மேலே எதுவும் படிக்கப் போறதில்லே. எங்க குடும்ப நெலைமை அதுக்கு ஒத்துவராது. மாசம் ஐநூறு ரூபாய்க்குக் குறையாத வருமானமுள்ள ஒரு வேலையை எத்தினி சீக்கிரமா நான் தேடிக்கிறேனோ அத்தினி சீக்கிரம் எங்க வீட்டுக்கு நல்லது..." "நான் வேணா எங்கப்பா மூலமா ஏதாச்சும் டிரை பண்ணிப் பார்க்கட்டுமா?" "அவசியமானா நானே வந்து மறுபடி உங்கப்பாவைப் பார்க்கிறேனே; இப்போ இன்னிக்கி ஒண்ணும் அவசரமில்லே... ஏகப்பட்ட கூட்டம் இங்கே காத்துக்கிட்டிருக்கே... எப்பவும் உங்க வீடே ஒரு பொதுக் கூட்டம் நடத்தப் போதுமான 'ஆடியன்ஸோடே' தயாரா இருக்கிற மாதிரியில்லே தோணுது?" சொல்லிவிட்டு அவன் சிரித்த போது தேங்காய்ச் சில்லு போலப் பளீரென்ற வெண்மை மின்ன அவன் சிரித்த சிரிப்பு மங்காவின் கவனத்தைச் சிறைப்பிடித்து ஆண்டது; கவர்ந்தது. ஆண்மையின் காம்பீர்யம் நிறைந்த அந்த அழகான சிரிப்பின் பிறப்பிடமான அவன் முகத்தை ஒருகணமாவது முழுமையாக நேருக்கு நேர் சந்தித்தே தீருவதென்று புறப்பட்ட அவளது பார்வை கை சுளுக்கிக் கொண்டவன் எறிந்த கல் மாதிரி அடைய வேண்டிய இலக்கை அடையுமுன்பே நடுவிலேயே துணிவிழந்து விழுந்துவிட்டது. "மறுபடி பார்க்கிறேன். புரொவிஷனல் சர்ட்டிபிகேட் வாங்க யூனிவர்சிடி வரை புறப்பட்டு வந்தேன். அப்பிடியே உங்களை எல்லாம் பார்த்திட்டுப் போகணும்னு தோணிச்சு. அதான் வந்தேன்..." என்று அங்கிருந்து விடை பெற்றான் முத்துராமலிங்கம். அவன் புறப்படுவதற்குள் அந்தக் காம்பவுண்டில் கூட்டமும், மாலையேந்திய கைகளும், கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. திடீரென்று 'அமைச்சர் சிதம்பரனார் வாழ்க!' - என்ற வாழ்த்தொலியுடன் ஒரு பெரிய ஊர்வலம் மாதிரிக் கட்சிக் கொடிகளுடன் கூடிய கூட்டம் ஒன்று காம்பவுண்டுக்குள் மிகவும் ஆரவாரமாக நுழைந்தது. "உங்கப்பா மினிஸ்டராயிட்டாரு. இந்தா சாக்லேட்... ஒண்ணுக்கு ரெண்டா எடுத்துக்க..." என்று ஒருத்தர் தட்டு நிறைய சாக்லேட் குவித்துக் கொண்டு வந்து நீட்டினார். மங்கா தட்டை வாங்கி முத்துராமலிங்கத்திடம் புன்முறுவலோடு முதலில் நீட்டினாள். "மறுபடியும் பாராட்டுக்கள்" என்று ஒரே ஒரு சாக்லேட்டை எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான் முத்துராமலிங்கம். "என்ன பையிலே போட்டுக்கிட்டீங்க...? சாக்லேட் சாப்பிடறதில்லையா?" "இல்லே. நாம சாப்பிடற் ஒவ்வொரு சாக்லேட்டும் நம்ம பல்லைச் சாப்பிட்டுப்போடும்னு பயப்படறவன் நான்! பொதுவா எனக்கு இனிப்புன்னாலே பிடிக்காது மிஸ் மங்கா!" "பின்ன என்ன தான் பிடிக்கும்?" "கசப்பு! காலையிலே எந்திரிச்சதும் பல்வெளக்கிப் போட்டு ஒரு கைநெறைய தளதளன்னு வேப்பங்கொழுந்தைப் பறிச்சுத் திம்பேன். பொழுது சாயறப்பவும் மறுபடி அதேமாதிரி..." "ஐயையோ... கசந்து வழியும்... குமட்டிக்கிட்டு வருமே?" "பழகிட்டா கசப்பைப் போலச் சுவையானதும் ஆரோக்கியமானதும் வேறே இருக்க முடியாது... மிஸ் மங்கா..." அவன் பேசி முடிப்பதற்குள், "என்ன மங்கா! ஸ்வீட்டை வெச்சுக்கிட்டு இங்கேயே பேசிக்கிட்டு நின்னா எப்படி...? அப்பா மந்திரியாயிட்டாரு, கட்சிக்காரங்கள்ளாம் காத்துக்கிட்டிருக்காங்க... உங்கையாலே அவங்களுக்கெல்லாம் நீயே ஸ்வீட்ஸ் குடும்மா..." என்று ஒருத்தர் வந்து அவளை அழைத்துச் சென்றார். அவனுக்கு விடை கொடுத்துவிட்டு அவசர அவசரமாக அவரோடு உள்ளே விரைந்தாள் அவள். அன்று அந்தப் பங்களா காம்பவுண்டைக் கடந்து தெருவுக்கு வருவதற்கு முத்துராமலிங்கம் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. மக்கள் வெள்ளத்தில் நீந்தி மிதந்து சட்டை கசங்கித் தலைமயிர் கலைந்து கூட்டத்தில் தன்னைச் சொருகிக் கொண்டு நுழைந்துதான் அவன் வெளியே வர முடிந்தது. ஆறடிக்கு மேல் உயரமாகவும், கட்டுமஸ்தாகவும் இருந்தானோ, பிழைத்தான். இல்லையென்றால் கூட்டத்தில் நசுங்கி மிதிபட்டு இறந்து போய் அடுத்த நாள் காலைப் பத்திரிகையிலும், மாலைத் தினசரியிலும் பரபரப்பான வெறும் செய்தியாகியிருப்பான் அவன். மூன்றரை மணிக்கு மேல் காத்திருந்து மதுரை மத்திய பஸ் நிலையத்தில் கம்பம் போகிற எக்ஸ்பிரஸ் பஸ் ஏறி விளக்கு வைக்கிற நேரத்துக்கு அவன் ஆண்டிப்பட்டிக்குத் திரும்பி வந்த போது ஏதோ காரியமாக பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருந்த பசுங்கிளித் தேவர் அங்கேயே மகனை எதிர்கொண்டார். "இந்தா முத்துராமு! உனக்கு ஒரு ஏற்பாடு பண்ணிப் போட்டேன். நீ சொன்னபடி நாளைக்கே மெட்ராஸ் போயி அங்கே நம்ம சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி சேர்வையைப் பாரு. நான் கடுதாசி தர்றேன். அவரு ஒரு வழி பண்ணிக் கொடுப்பாரு. நமக்கு ரொம்பவும் வேணுங்கப் பட்டவரு. தட்டிச் சொல்லமாட்டாருன்னு நினைக்கிலேன். நாளன்னிக்கிக் காலையிலே ஏதோ புது மினிஸ்டரி பதவி ஏற்குதாம். அதுக்காவத் தேனியிலிருந்து அந்தக் கட்சி ஆளுங்க லாரிங்கள்ளே கூட்டம் கூட்டமா மெட்ராஸ் போறாங்க. லாரிக்காரங்களுக்குக் கட்சி ஆபீஸே பணம் குடுத்துடுது செலவு மிச்சம். நீயும் அதுலேயே போயிட்டுக் குருசாமி சேர்வையைப் பார்த்தேன் வந்தேன்னு திரும்பி வந்து சேருவியாம்." "சரி ஐயா!" என்று இசைவதைத் தவிர அப்போது அவனுக்கு வேறு வழி இல்லை. சிதம்பரநாதன் வீட்டுக் கூட்டத்திலேயே முத்துராமலிங்கத்தின் கதர் அரைக்கைச் சட்டையைப் பார்த்து அங்கு கூடியிருந்த கூட்டம் வெறித்தது. இப்போது அதே கூட்டத்தில் ஒருவனாக லாரியில் விடிய விடியப் போக வேண்டும் என்று நினைத்த போது தயக்கமாயிருந்தது; ஆனால் பயமாயில்லை. வாழ்க்கையில் அவனுக்கு அறவே தெரியாத விஷயங்களில் ஒன்று பயம். அப்போது தன் தந்தைக்கு வீண் செலவைத் தவிர்க்க விரும்பி அவருடைய இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொண்டான் அவன். தேனியில் கூப்பிட்டிருந்த கவியரங்கத்துக்குப் போக முடியாது. 'பரவாயில்லை, கவியரங்கங்களை விட வாழ்க்கை மிகவும் முக்கியமானது. சென்னைக்குப் போய் ஐயாவுக்கு வேண்டிய பெரிய உத்தியோகஸ்தரான குருசாமி சேர்வையைப் பார்த்துவிட்டு வரலாம். ஏதாவது வழி பிறந்தால் சரிதான்' என்று தீர்மானம் செய்தான் அவன். சென்னைக்குப் போக வேண்டும். எப்படிப் போனால் என்ன? யாரோடு போனால் என்ன? எதில் போனால் என்ன? நூறு ரூபாய்க்கு மேல் செலவாக வேண்டிய பயணம் இலவசமாகிறது. கைச்செலவுக்கு ஐயாவிடம் ஏதாவது கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டான் அவன். தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு இதுதான் அவனது முதற் பயணம். இதுவ்ரை வடக்கே திண்டுக்கல்லைக் கடந்து அதற்கப்பால் அவன் போக நேர்ந்ததே இல்லை. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|