11 நண்பனைச் சந்தித்த பின்பும், முத்துராமலிங்கத்தின் மனம் நடந்து முடிந்த நிகழ்ச்சியிலேயே இருந்தது. நண்பன் தன்னுடைய விடுதி அறைக்குப் போகலாம் என்று கூறி அழைத்துச் சென்றான். சென்னைக்குப் புறப்பட்ட சூழ்நிலையையும், வந்து சேர்ந்த பின் நடந்தவற்றையும் அவனிடம் விவரித்த பின் அவனைத் தேடி வந்து காணமுடியாமல் போய் விடுதி அறை பூட்டப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டான். நண்பன் அதிகமாகப் பதில் பேசவில்லை. தொடர்ந்து முத்துராமலிங்கம் தான் பேசிக் கொண்டிருந்தான். நண்பன் மட்டும் படாமலும் ஒப்புக்கு ஏதோ மறுமொழி கூறிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. ‘வந்திருப்பவன் எங்கே தன்னோடு உடன் தங்கித் தனக்குச் செலவு வைத்து விடுவானோ?’ என்ற பயத்தோடும், அதிகச் சுயநலமான தற்காப்பு உணர்வோடும் அவன் பழகுவது தெரிந்தது. பொதுவில் வாழ்க்கைப் போராட்டமும் போட்டிகளும், வசதிக் குறைவுகளும் உள்ள நகரங்களில் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த அனைவரின் அறிவும் தற்காப்புக்கும், சுயநலத்துக்குமே செலவிடப்படுவது முத்துராமலிங்கத்துக்குப் புரிந்தது. நண்பன் தான் அப்போது புரிய வைத்திருந்தான். தன் நண்பன் மேல் அவனுக்குக் கோபம் வரவில்லை. அநுதாபம் தான் ஏற்பட்டது. நண்பனைப் புரிந்து கொண்ட பின் அவனிடம் மேலும் மனம் விட்டுப் பேச வரவில்லை. மனம் விட்டுக் கேட்க முடியாதவர்களிடம் மனம் விட்டுப் பேச முடியாது. அது பாறாங்கல்லில் தலையை மோதிக் கொள்வது போல் தான் முடியும். தண்ணீரை உறிஞ்ச வேண்டுமானால் அது பாயும் நிலம் ஈரத்தை உறிஞ்சக் கூடியதாக இருக்க வேண்டும். கருங்கல் பாறையில் பாயும் தண்ணீரை அது உறிஞ்சாது. சென்னைக்கு வந்த பின் நண்பன் கருங்கல் பாறையாகி இருப்பது புரிந்தது. பிற்பகலுக்கு மேல் நண்பனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு மீண்டும் கிருஷ்ணாம்பேட்டைக்குச் சென்றான் அவன். கிருஷ்ணாம்பேட்டையில் இப்போது நிலைமையின் வேகம் குறைந்து தணிந்திருந்தது. சுடுகாட்டு வாட்ச்மேன் முத்துராமலிங்கத்தின் கைப் பெட்டியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சொன்னான்: “எதிர்த்தரப்பு ஆளுங்க காமிச்சுக் கொடுத்துட்டாங்க. இங்கே போலீஸ் ரெய்டு... ஒரே ரகளையாப் போச்சு... சின்னி இதை உங்கிட்டக் கொடுக்கச் சொல்லிச்சு... அது வெளியே வர ரெண்டு மூணு நாளாவும்... அதுங்காட்டியும் உன்னை அந்தக் கொலைகாரன்பேட்டை வூட்லே தங்கிக்கச் சொல்லிச்சு... எங்ககூட வந்தீன்னா இட்டுக்கினு போய் வுட்டுடுவேன், கிளம்பு...” “அங்கே எனக்கு யாரையும் தெரியாதே...” “அதுக்குத் தான் நா கூட வரேனில்ல...?” முத்துராமலிங்கம் அந்த ஆளோடு புறப்பட்டுச் சென்றான். கலகம் மூண்டு போலீசில் பிடிபடும் அந்தப் பதற்றமானதும் பரபரப்பானதுமாகிய சூழ்நிலையிலும் கூடச் சின்னி தான் தெருவில் நின்றுவிடக் கூடாதே என்று அக்கறையோடு தனக்குத் தகுந்த ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருப்பதை எண்ணி முத்துராமலிங்கத்துக்கு மனம் சிலிர்த்தது.
தன் தந்தையோடு நெருங்கிப் பழகியவருக்கு இல்லாத அந்த அக்கறை - தன்னோடு நெருங்கிப் பழகிய நண்பனுக்குக் கூட இல்லாத அந்த அக்கறை - எங்கோ தெருவில் சந்தித்த ஒரு கீழ் மட்டத்தைச் சேர்ந்த மனிதனுக்கு இருப்பதை எண்ணி எண்ணி வியந்தது அவன் மனம். சின்னி பணம் கொடுத்துவிட்டுப் போயிருப்பதாகச் சொல்லி முத்துராமலிங்கத்தை அப்போது ரிக்ஷாவிலேயே கூட்டிச் சென்றான் அந்த ஆள். ‘சின்ன் என்றைக்கு விடுதலையாகி வெளியே வருவான்’ என்று கேட்ட போது, ‘அவனுக்கு வேண்டிய மேலிடத்து அரசியல் ஆட்கள் தலையிட்டு விரைவிலேயே அவன் விடுதலைக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள்’ - என்று பதில் கிடைத்தது.
யாரோ மேல் மட்டத்து மனிதர்களின் கொள்ளை லாப ஆசையைப் பூர்த்திச் செய்வதற்காகச் சாராயப் பானையை அது என்ன என்றே தெரியாமல் வண்டியில் வைத்து இழுத்துச் செல்லும் மாடு போலக் கர்மயோகிகளை ஒப்ப அவர்கள் உழைத்துக் கொண்டிருப்பதாகவே அப்போது முத்துராமலிங்கத்துக்குத் தோன்றியது. தென் மாநிலங்களின் பல இனங்களைச் சேர்ந்த அழகிய உடல்வாகு மிக்க பெண்களின் காட்சிப்பட்டறையான அந்த வீட்டில் வாசலில் இருந்த காவற்காரனிடமும், நம்பகமான நாயிடமும் தான் எல்லாப் பொறுப்புக்களும் விடப்பட்டிருந்தன. அந்த முரட்டுக் காவற்காரன் முத்துராமலிங்கத்திடம் மிக மரியாதையாகப் பழகினான். சின்னியோடு சேர்த்து முந்திய இரவு அவனைப் பார்த்திருந்தது ஒரு காரணம். “சின்னிக்கு மிகவும் வேண்டியவர் இவர். சின்னி விடுதலையாகி வருகிறவரை இங்கே இவரைத் தங்க வைத்துக் கவனித்துக் கொள்ள வேண்டும்” - என்று உடன் வந்திருந்த கிருஷ்ணாம்பேட்டை ஆள் காவற்காரனிடம் வற்புறுத்தித் தெரிவித்தது மற்றொரு காரணமாயிருக்க வேண்டும். அவனை அங்கே ஒப்படைத்து விட்டு உடன் வந்த சுடுகாட்டு வாட்ச்மேன் திரும்பிப் போய்விட்டான். உற்சாகமும், கலகலப்பும் நிறைந்த இரவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது அந்த விடுதி. முகப்பவுடர், ஸ்நோ, வாசனைத் தைலங்கள், காலமைன் எல்லாம் கலந்த கூட்டான நறுமணம் கூடத்திலிருந்து கிளர்ந்து கொண்டிருந்தது. வளையல் ஒலிகள், இனிய பெண்களின் குரல்கள், கலீர் கலீர் என்று சிரிப்பு ஊற்றுக்கள் - எல்லாம் காதில் விழுந்தன. “ஐயோ என்னை விட்டுவிடு! கொன்னுடாதே” - என்று கதறியபடி தெருவில் பைத்தியமாக ஓடிய அந்தப் பெண்ணின் நினைவும் முத்துராமலிங்கத்தின் மனத்தில் வந்தது. மனத்தை விற்றுவிட்டவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் விடுதியில் உடலை விற்றுக் கொண்டிருக்கும் அவர்களை எண்ணியபோது அவன் மனம் இருண்டது. பொழுது சாய்ந்து ஒளி மங்கிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அந்த வீட்டின் கீழ்ப்பகுதியில் தங்க விரும்பாமல் மொட்டை மாடிக்குச் செல்ல விரும்பினான் அவன். உள்ளே தங்கியிருந்த பெண்களுக்கு எல்லாம் தேநீர் கொடுத்துக் கொண்டிருந்த ஓர் ஆளை அவனருகே கூப்பிட்டுக் கொண்டு வந்து அவனுக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்தான் சின்னியின் காவற்காரன். தேநீரைப் பருகிவிட்டு முத்துராமலிங்கம் மொட்டை மாடிக்குப் போனான். அவனது கையில் பாரதியார் கவிதைத் தொகுதி இருந்தது. பெட்டியில் இருந்ததை எடுத்துக் கொண்டிருந்தான். அந்த வீட்டில் தங்குவதற்கு அவன் அருவருப்பு அடையவில்லை. அழுக்கு மயமான குப்பைமேட்டில் கூச்சப்படாமல் அமர்ந்து எதிரே தேடி வந்து நின்ற அரசனிடம், “யாம் இருக்க நீர் நிற்க” - என்று சொல்லிய ஞானியைப் போல் அருவருப்பின்றி இருந்தான் அவன். எங்கே இருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று எண்ணினான் அவன். அதற்குத் தலைவனான சின்னியின் மரியாதைக்குரிய நண்பன் என்பதால் அங்கே எல்லோரும் அவனுக்குத் தலை வணங்கினார்கள். அவனுக்கு மரியாதை செய்தார்கள். மொட்டை மாடியிலிருந்து கொண்டு அவன் பாரதியார் கவிதையை இரசித்துப் படித்துக் கொண்டிருந்த போது - வெளிச்சத்துக்காக மாடியிலிருந்து கீழே கம்பிப் பலகணி வைத்திருந்த ஓரிடத்தின் வழியே, “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?” என்ற பாரதி பாடலின் இனிய அடியைக் கீழேயிருந்து யாரோ பெண்குரல் ஒன்று மிக நளினமாகப் பாடுவது கேட்டது. அந்த இனிய குரலாலும், அதில் கூப்பியிருந்த சோகச் சாயலாலும் முத்துராமலிங்கம் மிகமிகக் கவரப்பட்டான். வெறுங்குரலால் மட்டும் அவள் பாடுவதாகத் தோன்றவில்லை. மனத்தாலும் சேர்ந்து இசைப்பது போல் இருந்தது. கீழே இறங்கிச் சென்று அத்தனை அழகாகப் பாடுவது யார் என்று பார்க்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அந்த ஆவலை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பாரதியார் கவிதைப் புத்தகத்தைத் தான் படிப்பதற்குப் பிரித்தவுடன் உடனிகச்சியாக அந்தக் குரல் கேட்கவே அவன் பெருமகிழ்ச்சி அடைந்தான். அந்தக் கவிதைகளை அவன் ஊக்கத்துக்காகவும், மன உயர்வுக்காகவும் அடிக்கடி படிப்பது உண்டு. அக்கவிதைகள் அவனுடைய வாழ்வின் வழிகாட்டியாகவும், வேதபுத்தகமாகவும் அமைந்திருந்தன. அவன் அந்தப் புத்தகத்துடன் அப்படியே கீழே படியிறங்கி வந்தான். கூடத்துக்குள் நுழைகிற கதவருகே ஆயாக் கிழவி பிரம்பு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்தாள். அவள் வாய் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தது. முத்துராமலிங்கத்தைப் பார்த்ததும் கிழவி மரியாதையாக எழுந்து நின்றாள். “இப்பப் பாடினது யாரு?” “அதுவா அந்தச் சேலத்துப் பொண்ணு... புதுசா வந்திருக்குது... எப்பப் பார்த்தாலும் புஸ்தகமும் கையுமாத் திரியும். கஸ்டமருங்க வந்தாக் கூடப் புஸ்தகத்தைப் பிடுங்கி வச்சுப் போட்டு நாமதான் அதை உள்ளாரத் துரத்தணும்.” “நல்லாப் பாடுது...” “உள்ளாரப் போயி மறுபடி பாடச் சொல்லிக் கேளு தம்பீ! உனக்கில்லாததா!” என்று கூறியபடி கண்களைச் சிமிட்டினாள் கிழவி. அவள் கண்களைச் சிமிட்டிய விதம் முத்துராமலிங்கத்துக்குப் பிடிக்கவில்லையானாலும் அவன் அந்தப் பாடலைக் கேட்க விரும்பினான். கிழவியைப் பொருட்படுத்தாமல் மேலே நடந்து உள்ளே சென்றான் முத்துராமலிங்கம். அவன் அருகில் சென்றதும் தலை சீவிக் கொண்டிருந்த அந்தப் பெண் பயத்தினாலோ கூச்சத்தினாலோ பாடுவதை நிறுத்திவிட்டாள். அவளுடைய கண்களும் முகமும் பார்வையும் துறுதுறு என்று இருந்தன. கொஞ்சம் சுட்டித் தனமும் குறும்பும் கூடத் தெரிந்தன. அவன் அருகே சென்று கேட்டான்: “யார் பாடினது?” “ஏன்? நான் தான்! பாடக்கூடாதா? அல்லது பாடறதுக்கு இங்கே சுதந்திரம் கிடையாதா?” “பாடியது நன்றாயிருந்தது என்று தான் தேடி வந்தேன்.” “இங்கே இனிய குரலையோ இசையையோ பாராட்டவும் கேட்கவும் பொறுமையுள்ள மனிதர்கள் வருவது வழக்கமில்லை.” “நான் குரலையும் இசையையுமே பாராட்ட மட்டும் தான் வந்திருக்கிறேன்.” அவன் இப்படி அவளிடம் கூறிக் கொண்டிருந்த போதே இவர்களுக்குள் வாக்குவாதம் நடப்பதாகப் புரிந்து கொண்ட ஆயாக்கிழவி அருகே வந்து சேர்ந்தாள். “அடியே பைத்தியக்காரி! எதிர்த்துப் பேசி வாயாலே சீரழியாதே... ஐயாவுக்கு ரொம்ப வேண்டியவருடி?... பார்த்துப் பதனமா நடந்துக்கோ” என்று அந்த இளம் பெண்ணை எச்சரித்துவிட்டுப் போனாள் கிழவி. கிழவி தொலைவுக்குப் போனது உறுதியானதும், முத்துராமலிங்கத்தைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்ட அவள், “என் உடம்பை எத்தனை மணி நேரத்துக்கு வாடகை பேசி வந்திருக்கிறீர்கள்?” - என்று கடுகடுப்பாக அவனிடம் கேட்டாள். முதலில் முத்துராமலிங்கம் திகைத்தான். தன்னைப் பற்றி அவளுக்கு எப்படி விளக்குவது என்று அவனுக்குப் புரியவில்லை. ஒருவாறு தட்டுத் தடுமாறி அவளுக்குத் தன்னைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்லி விவரித்தான். முதலில் குறுக்கிட்டுக் குறுக்கிட்டுப் பேசிய அவள் அப்புறம் மெல்ல மெல்ல அவன் கூறத் தொடங்கியவற்றில் நம்பிக்கை ஏற்பட்டுப் பொறுமையோடு கேட்கலானாள். அவன் தன்னை முற்றிலும் அறிமுகப்படுத்திக் கூறியதும் அவள் கேட்டாள்: “யோக்கியர்கள் இந்தக் கட்டிடத்திற்குள் வரமாட்டார்களே?” “நான் வந்திருக்கிறேன். இன்னும் யோக்கியனாகத்தான் இருக்கிறேன்.” “தொடர்ந்து யோக்கியனாக இருக்க விரும்பினால் தயவு செய்து உடனே இங்கிருந்து போய்விடுங்கள்.” அவள் நிர்த்தாட்சண்யமாகவும், கடுமையாகவும் பேசுவதைப் பார்த்து அவனுக்கு வியப்பாயிருந்தது. அந்தப் பாடலை மறுபடி ஒரு தடவை பாடுமாறு அவளை வேண்டினான் அவன். “இப்போ முடியாது! இது இங்கே சங்கீதமே புரியாத மனிதர்கள் கூட்டம் வந்து போகிற வாடிக்கை நேரம். வேண்டுமானால் நாளைக் காலையில் பாடுகிறேன். வந்து கேளுங்கள்” என்றாள் அவள். அவளது பெயரை விசாரித்தான். நளினி என்றாள். பூர்வோத்திரங்களைச் சொல்ல மறுத்து விட்டாள். அவனும் வற்புறுத்தவில்லை. மாடிக்குப் போய்விட்டான். மறுநாள் காலை சொன்னபடியே, ‘நல்லதோர் வீணை’ பாட்டை முழுவதும் அவனுக்காகவே அமுத மழையாகப் பாடிக் காட்டினாள் நளினி. அவனிடம் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசவும் செய்தாள். பேச்சில் விரக்தி தான் தொனித்தது. முத்துராமலிங்கத்தைத் தொடர்ந்து அங்கே தங்க வேண்டாம் என்றும் எச்சரித்தாள் அவள். பதிலுக்கு அவன் சிரித்தான். சின்னி அன்று மாலை வரை விடுதலையாகி வரவே இல்லை. ஆனால் முத்துராமலிங்கத்தின் உணவு உறையுள் தேவைகள் கவனித்துக் கொள்ளப்பட்டன. இரண்டாம் நாள் நள்ளிரவு கூச்சலும், கூப்பாடுமாகச் சத்தம் கேட்டு அவன் கண் விழித்த போது வாசலில் நான் குரைத்தது. ஒரு பெரிய போலீஸ் வேன் வந்து நின்று கொண்டிருந்தது. கீழ் வீட்டில் போலீஸ் ரெய்டு நடப்பதாகவும், அவன் மாடியிலேயே பதுங்கிக் கொள்ள வேண்டும், என்றும் ஒரு சிறுவன் அவசர அவசரமாக மூச்சிரைக்க மாடிக்கு ஓடி வந்து அவனை எச்சரித்து விட்டுப் போனான். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|