36 சிவகாமிநாதனின் கடன் பளுவை குறைப்பதற்காக அவர்கள் ஏற்பாடு செய்த நேரம் அவரது மணிவிழாச் சமயமாகவும் இருந்தது. பண்பட்ட அறிவாளிகளும் பெரியோர்களும் தங்கள் சொந்தக் கஷ்டங்களைப் புன்னகை மாறாத மலர்ந்த முகத்தாலும் பெருந்தன்மையாலும் உலகுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு விடுகிறார்கள் என்பதற்கு அவர் சரியான உதாரணமாயிருந்தார். முத்துராமலிங்கமும், சண்முகமும், மங்காவும் பிற தொண்டர்களும் இராப்பகல் பாராமல் ஓடியாடி மிகவும் உழைத்தார்கள், உதவி நிதிக்கான நாடகங்களுக்கு டிக்கெட் விற்றார்கள். வசூல் செய்தார்கள். விழா ஏற்பாடுகளை கவனித்தார்கள். பம்பரம் போல் சுழன்று உழைக்கும் சேவகர் பட்டாளம் ஒன்று சிவகாமிநாதனுக்காகக் காத்திருந்தது. அவர்களுடைய ஒத்துழைப்பு இப்போது முத்துராமலிங்கத்துக்குப் பயன்பட்டது. பொதுவான சமூக அரசியல் பிரச்னைகளில் எதிர்நீச்சலிட்டாவது நியாயம் காண வேண்டும் என்ற துடிதுடிப்போடு பல ஆண்டுகளாக வாழ்ந்து சிரமப்பட்டுக் கொண்டிருந்த அந்த தியாகியிடம் முத்துராமலிங்கத்தைப் போல் அதே எதிர் நீச்சல் குணமுள்ள பல இளைஞர்கள் ஈடுபட்டிருந்தார்கள். ஒவ்வோர் ஆரோக்கியமான ஜனநாயக நாட்டிற்கும் இப்படிச் சில எதிர்நீச்சல்காரர்கள் வேண்டுமென்று முத்துராமலிங்கம் முதலிய இளைஞர்கள் உறுதியாக நம்பினார்கள். இந்த எதிர்நீச்சல்காரர்களுக்கு உதவி இவர்களைக் கட்டிக் காக்க வேண்டும் என்று நினைத்தார்கள். நிதி உதவிக்கான நாடகங்கள் மூலமாகவும், பிற வசூல்கள் மூலமாகவும் சேர்ந்த தொகையை ஓர் எளிய விழாவில் தியாகி சிவகாமிநாதனிடம் அளித்தார்கள். அவர்கள் பாராட்டுவிழா, புகழுரை, மாலை, முகஸ்துதி இதெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் அவற்றை அவர்கள் தவிர்த்திருந்தார்கள். “இன்றைய உலகில் மூன்று விதமான லஞ்சங்கள் அதிகக் கவர்ச்சியோடு வழங்கவும் விரும்பவும் படுகின்றன. பணம், பெண், புகழ் மூன்றையுமே இடமறிந்து பாத்திரமறிந்து லஞ்சமாகப் பயன்படுத்துகிறார்கள். நியாயங்களும், உண்மைகளும் இந்த லஞ்சங்களுக்குப் பலியிடப்படுகின்றன. நவீன உலகில் முகஸ்துதி என்பது, பாதி விபசாரமாகப் பயன்படுகிறது” என்று அடிக்கடி சிவகாமிநாதனே மனம் கசந்து கூறுவதுண்டு. அதனால் அவருக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த மணிவிழாவை அவர்கள் மிக எளிமையாக நடத்தி முடித்தார்கள். வீடு அச்சகம் ஆகியவற்றை உடனே கடனிலிருந்து விடுவிடுத்து ஜப்தியாகாமல் காப்பாற்றினார்கள். பத்திரிகைக்காக ஓர் அச்சியந்திரம் வாங்கப்பட்டது.
மறுமாதமே தம் மகள் கஸ்தூரிக்கு எளிய முறையில் திருமணம் முடித்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம், மங்கா திருமணத்தைப் போலவே அதுவும் மாங்காடு கோவிலில் தான் நிகழ்ந்தது. பெங்களூரில் ஏதோ ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாணயமான நல்ல தொழிலாளி ஒருவனுக்குத்தான் தன்னுடைய மகளை மணமுடித்துக் கொடுத்திருந்தார் அவர். மகளைக் கணவன் வீட்டுக்கு அனுப்பிய பின்பு பத்திரிகை வேலைகளிலும், பொதுப்பணிகளிலும், போராட்டங்களிலும் தீவிரமாக இறங்கினார் அவர். இப்போது வீட்டில் அவருக்கு உதவியாக மகன் பாண்டித்துரையும், மங்காவும், முத்துராமலிங்கமுமே இருந்தார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மங்கா ஏற்றுக் கொண்டிருந்தாள். அரசாங்கத்தையும், ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் பத்திரிகையாக இருந்ததனால் ‘தியாகியின் குரல்’ பத்திரிகை பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. மங்கா தன் தந்தையாகிய மந்திரியின் ஊழல்களை விமர்சித்து எழுதுகிறாள் என்பது அந்தப் பத்திரிகையின் மேல் மக்களின் கவனம் திரும்புவதற்கான மற்றொரு புதிய காரணமாயிருந்தது.
நாடு முழுவதுமே பொது நலனுக்காக உழைப்பவர்களின் தொகை குன்றிக் கட்சிகளின் நலனுக்காகவும் சுயநலனுக்காகவுமே உழைப்பவர்கள் பெருகியிருந்தார்கள். மக்கள் நலனை விடப் பதவி நலன் தான் எங்கும் எல்லாருக்கும் பெரிதாயிருந்தது. கட்சிகள் என்பவை கொள்ளைக் கூட்டங்களை போல் செயலாற்றிக் கொண்டிருந்தன. தன் கட்சிக்காரன் என்ன தவறு செய்தாலும் கொண்டாடின, எதிர்க்கட்சிக்காரனின் தவறுகளைப் பெரிதுபடுத்தின. தவறு செய்த தன்னவர்களைப் பாதுகாக்கும் நிரந்தர ஏற்பாடுகளாகவே சில கட்சிகள் இருந்தன. தவறு செய்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், ஊழல் புரிகிறவர்கள் எந்தக் கட்சியிலிருந்தாலும் கெட்டவர்களே என்ற முனைப்போடு செயல்பட்டது சிவகாமிநாதனின் இயக்கம், “நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே” - என்று அந்த நெற்றிக்கண் பார்வையின் சூட்டில் வெதும்பிக் கொண்டே நிமிர்ந்து நின்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார்கள் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் அதனால் இவர்களுடைய குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட அத்தனை தலைவர்களும் கட்சிகளும் இவர்களைச் சபிக்கவும் வெதுப்பவும், துன்புறுத்தவும் தீவிரமாக முனைந்தனர். சிவகாமிநாதனின் மணிவிழாவை அவர்கள் கொண்டாடிய ஐந்தாறு மாதங்கள் கழித்து முன்பே எப்போதோ அரசாங்கம் அவர் மேல் போட்டிருந்த ஒரு பொய் வழக்கு விசாரணைக்கு வந்தது. பத்திரிகைகள் அது பற்றி அன்றாடம் பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன. அரசாங்கமும், ஆளும் கட்சியும் பயமுறுத்திப் பலரைப் பொய்ச்சாட்சி சொல்லச் செய்திருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக வழக்கு அவருக்கு எதிராகத் தீர்ப்பாகி அவர் இரண்டாண்டுகள் சிறைச்சாலைக்குச் செல்லவேண்டும் என்று முடிந்திருந்தது. சிறைக்குள் போகுமுன் முத்துராமலிங்கம் முதலியவர்களிடம் சிரித்தபடியே கூறினார் அவர்: “மகாத்மா காந்தி தலைமையில் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் பிரிட்டீஷ்காரர்களை நான் எதிர்த்துப் போராடின போதும் சிறைவாசம் தான் எனக்குப் பரிசாகக் கிடைத்தது. என் போன்றவர்கள் போராடிப் பெற்ற சுதந்திர நாட்டிலும் இப்போது சிறைவாசம் தான் எனக்குப் பரிசாகக் கிடைக்கிறது.” பத்திரிகையையும் இயக்கத்தையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை முத்துராமலிங்கம், மங்கா, சண்முகம், மகன் பாண்டித்துரை ஆகியவர்களிடம் ஒப்படைத்து விட்டு சிறிதும் கலங்காமல் சிறைக்குச் சென்றார் அவர். நீதிமன்றத்திலிருந்து அவரைச் சிறைச்சாலைக்கு வழியனுப்பிவிட்டு முத்துராமலிங்கமும், மங்காவும், சண்முகமும், பாண்டித்துரையும் மற்றத் தொண்டர்களும் வீடு திரும்பிய போது நகரமே நிசப்தமாகி விட்டதுபோல் ஒரு பிரமை நிலவியது... வேலை தேடிச் சென்னை நகருக்குள் நுழைந்த முதல் தினத்தன்று இருந்த அதே உணர்ச்சி தான் இன்றும் முத்துராமலிங்கத்துக்குள்ளே இருந்தது. ஆயிரம் கைகள் முளைத்து அந்த ஆயிரம் கைகளாலும் அநீதியை எதிர்த்துப் போரிட வேண்டும். ஓயக் கூடாது. ஒழியக் கூடாது! வீழக் கூடாது. தாழக் கூடாது, தயங்கவும் கூடாது! தளரவும் கூடாது. சிவகாமிநாதனின் வழக்கு விசாரணைத் தீர்ப்பும் சிறைவாச விவரமும் வெளியாகி இருந்த அன்றைய மாலைத் தினசரியில் மற்றொரு பத்தியில், ‘இராயப்பேட்டை விபசார விடுதியில் நளினி என்னும் இளம்பெண் மண்ணெண்ணையை ஊற்றித் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை’ - என்ற செய்தியையும் முத்துராமலிங்கம் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. “நல்லதோர் வீணை செய்தே அதை நலங் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?” என்ற அந்த இனிய குயிற் குரல் அவன் நினைவில் மீண்டும் ஒலித்தது. அவளுடைய முகம், புன்னகை, சோகம் கலந்த பார்வை எல்லாமே அவனுக்கு நினைவு வந்தன. அதே விபசார விடுதி வாசலில் தலைவிரி கோலமாகக் கிழிந்த உடைகளோடு, “ஐயோ! என்னை விட்டுடு விட்டுடு கொன்னுப்புடாதே” - என்று அபலைகள், அநாதைகள், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், வேலைகள் கிடைக்காமல் தவிப்பவர்கள் அனைவருமே அந்தப் பெருநகரம் என்கிற கலாசாரச் சுடுகாட்டில் மௌனமாகவோ அல்லது வாய்விட்டுக் கதறியோ, எதனிடமிருந்தோ, எதற்காகவோ, அஞ்சிப் போய் நிலை குலைந்து அந்தப் பைத்தியக்காரியைப் போல நிரந்தரமாக ஓடிக் கொண்டிருப்பதாக அன்று தன் மனத்தில் தோன்றியதையும் இப்போது இந்தக் கணத்தில் திரும்பவும் நினைத்துப் பார்த்தான் அவன். பின்பு வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி ஒரு ஸ்டூடியோவுக்குள் நுழைந்த போது அங்கு ‘ரேப் சீனுக்காக’ நடந்து கொண்டிருந்த ஓர் ஒத்திகையைக் கண்டுவிட்டு, “இந்தப் பெருநகரத்தில் அரசியல், கலை, இலக்கியம் முதலிய சகல துறைகளிலும் அந்தந்தத் துறைகளின் நியாயங்களையும், உன்னதங்களையும் கற்பழிப்பதற்காக ஒரு திட்டமிட்ட ஒத்திகை இப்படித்தான் பல்வேறு மட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறதோ” - என்று தான் மனம் கொதித்து நினைத்ததையும் இப்போது எண்ணிப் பார்த்தான். என்ன காரணத்தாலோ முன்பு தான் தங்கியிருந்த அந்த இராயப்பேட்டை விடுதிக்குப் போய்விட்டு வரவேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. யாரிடமும் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லாமலே அவன் புறப்பட்டான். இராயப்பேட்டை விடுதி வாசலில் சின்னி தென்பட்டான். “என்ன? ‘உங்க ஆளை’ மறுபடி உள்ரத் தள்ளிட்டாங்க போல்ருக்கே?” என்று சிவகாமிநாதனின் சிரை வாசத்தைப் பற்றி விசாரித்தான் சின்னி. “ஆமாம்! உங்க ஆளுங்க சாம்ராஜ்யத்திலே நல்லவனை வெளியிலே வுட்டா வைப்பீங்க?” என்று கேட்டுவிட்டு, “அதிருக்கட்டும் சின்னி! நான் பேப்பரிலே படிச்சது நெசந்தானா...?” என்றான். “எதைக் கேட்கிறே?...” “அதான்ப்பா... அந்தச் சேலத்துப் பொண்ணு நளினி... விஷயம்...?” “ஆமாம்பா...! முதல்லேருந்தே அது இந்த ‘லயன்லே’ ஸெட் ஆகலே... ரொம்பத் தகராறுதான்! கடைசியிலே இப்படி ஆயிப்போச்சு...” “கொஞ்சம் கூட வருத்தப்படாமச் சர்வசாதாரணமாச் சொல்றியே அதை? உனக்கு அக்கா, தங்கச்சி இருந்து அது இப்படி மண்ணெண்ணையெ ஊத்தி உடம்புல நெருப்பு வச்சுக்கிட்டுப் போயிருந்தா இப்படிச் சொல்வியா...?” “அதானோ என்னவோ... எனக்கு உடம் பெறப்பே இல்லேப்பா” - இதையும் மிகவும் சகஜமாகத்தான் சொன்னான் சின்னி. அவனையும் உடனழைத்துக் கொண்டு உள்ளே சென்று தீப்பெட்டி தீப்பெட்டியாகத் தடுக்கப்பட்டிருந்த அந்த விடுதி அறைகளில் அவளுடைய அந்த அறைமுன் அடையாளம் கண்டு தயங்கி நின்றான் முத்துராமலிங்கம். அங்கே அன்று அந்த அறையும், அதே வரிசையிலிருந்த மற்ற அறைகளும் சகலமும் சாவு வீடு போல் நிசப்தமாயிருந்தன. ஒரு குரூரமான சோக அமைதி நிலவியது. ஆளரவமே இல்லை. “இன்னும் பத்து நாளைக்கு இங்கே பேச்சு மூச்சு இருக்காது...” இது சின்னி. அந்த நிசப்தத்திலிருந்து தான் முன்பு ஒருமுறை ஒரு சிறிய சங்கீதம் பிறந்தது - ஒலித்தது - தன்னைச் சில விநாடிகள் மகிழ்வித்தது என்பதை நினைத்த போது முத்துராமலிங்கத்தின் கண்கள் நெகிழ்ந்தன. எங்கோ எப்போதோ, ஏதோ ஓர் அவசரத்தில் சந்தித்த கேட்ட ஒருத்தியின் குரலாக அதை அவன் மறந்துவிட முடியவில்லை. கவியுள்ளம் படைத்தவனாகிய அவன் மனம் குமுறியது. சின்னி தன்னிடம் ஏதோ விசாரித்ததை - வினாவியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே அங்கிருந்து வெளியேறித் தெருவுக்கு வந்தான் அவன். “ஐயோ என்னை விட்டுடு, என்னை விட்டுடு... கொன்னுப்புடாதே” - என்ற குரல் தெருவின் எதிர்ச்சிறகிலிருந்து கேட்டது. இப்போது அந்தப் பைத்தியம் தலைவிரிகோலமாக ஓடிக்கொண்டிருந்தாள். ஏற்கெனவே மயானமான அந்த நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தும் இப்போது ஓசை ஓலியற்று அடங்கி நிஜம் மயானமாகவே ஆகிவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது. எல்லாவிதமான ஓசைகளிலிருந்தும் சப்தங்களிலிருந்தும் உடனடியாக விடுபட விரும்பிய அவனுக்கு அந்தச் சோக நிசப்தம் கற்பனையே ஆனாலும் அப்போது இதமாக இருந்தது. ஓசைகளைக் கொன்றபின் எஞ்சும் இதமான மௌனத்தையும் சப்தங்களை அழித்த பின் எஞ்சும் இலகுவான நிசப்தத்தையும் அந்தப் பலவீனமான வேளையில் ஒருகணம் அவன் மனம் தற்காலிகமாக நாடியது. ஓசையில் கரைந்து போவதை விட, இந்த மௌனத்தில் கரைந்து போவதை அந்த நொடியில் விரும்பினான் அவன். சப்தத்தில் கரைந்து உருத்தெரியாமல் போவதை விட நிசப்தத்தில் உருத் தெரியாமல் கரைந்து போவது நல்லதென்று அவன் எண்ணினான். ஆனால் எல்லாம் ஒரே ஒரு கணம் தான்! அடுத்த கணமே அவன் மனம் விசுவரூபம் எடுத்தது. அவன் நினைவுகள் உயர்ந்து நின்றன. ஆயிரம் கைகளை அடைத்து அவை அத்தனையாலும் நல்லவற்றுக்காகப் போராட தர்மயுத்தம் நடத்தத் தயாராக வேண்டுமென்று தன் ஞானத்தந்தையாகிய சிவகாமிநாதனுக்கு வாக்களித்திருப்பது அவனுடைய நினைவில் வந்து உறுத்தியது. ‘ஒவ்வொரு சோக நிசப்தமும் ஒரு கவிதையைக் கருக்கொண்டிருக்கிறது. ஒவ்வோர் அமைதியும் ஒரு சலனத்தைக் கருக்கொண்டிருக்கிறது. அதைத் துணிந்து கலைக்கிறவரை காத்திருக்க வேண்டும்’ என்ற மன எழுச்சியோடு அவன் வீடு திரும்பினான். அவன் சிந்தாதிரிப்பேட்டையை அடைந்து விட்டுப் படியேறிய போது உள்ளே வானொலியிலிருந்து ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா... உறுதி கொண்ட நெஞ்சினாய் வா...” என்று பாரதியாரின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. வீட்டின் நிசப்தத்தை ஏற்கெனவே கலைத்திருந்த அந்த நம்பிக்கைச் சங்கீதம் இப்போது அவன் மனத்தின் நிசப்தத்தையும் முழுமையாகக் கலைத்தது. அவன், மங்கா, சண்முகம் முதலிய அனைவருமே அடுத்துச் செய்ய வேண்டிய செயல்களுக்காகத் தயாரானார்கள். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|