27 சிறையில் சிவகாமிநாதனைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பின், “இனிமேல் நீங்கள் நர்ஸிங்ஹோமில் படுக்கையில் தான் இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கட்டுப் பிரிக்கிற போது மட்டும் இங்கே நர்ஸிங்ஹோமுக்கு வந்தால் போதுமானது” என்று டாக்டர் முத்துராமலிங்கத்திடம் சொன்னார். அறை நண்பர் சண்முகம் அவனைத் தம்மோடு கோடம்பாக்கத்துக்கே வந்து விடச் சொன்னார். சிவகாமிநாதனின் மகன் பாண்டித்துரையும், மகள் கஸ்தூரியும் முத்துராமலிங்கத்தை நர்ஸிங்ஹோம் பக்கத்திலிருந்த காரணத்தால் சிந்தாதிரிப்பேட்டையிலேயே தொடர்ந்து தங்கச் சொன்னார்கள். “அப்பா ஜெயில்லே இருக்கிறதாலே அது பத்திரிகையைப் பாதிக்கக் கூடாது. நீங்களும் மங்கா அக்காவும் இங்கேயே கூட இருந்தீங்கன்னாப் பத்திரிகை வேலைக்கு எங்களுக்கு ரொம்ப உதவியாயிருக்கும்” என்றார்கள் சிவகாமிநாதனின் மக்கள். அப்போ அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், பத்திரிகைக்குப் பாதுகாப்பாகவும் உடனிருக்க வேண்டியது அவசியம் என்று முத்துராமலிங்கத்துக்கே தோன்றியது. சிவகாமிநாதனுக்கு வாக்குக் கொடுத்திருப்பது நினைவு வந்தது. அவன் சிந்தாதிரிப்பேட்டையிலேயே தங்க முடிவு செய்தான். உதவி காமிராமேன் சண்முகம் இரண்டு மூன்று நாட்களுக்கு ஷூட்டிங் வேலைகள் எதுவுமில்லை என்று சொன்னதால், அவரையும் ‘தன்னோடு தற்காலிகமாகத் தங்க முடியுமா?’ என்று கேட்டான் முத்துராமலிங்கம். சண்முகம் அதற்குச் சம்மதித்தார். மங்கா தங்களோடு அந்த வீட்டில் தங்குகிற வரை தங்களுக்கு அவள் தந்தையான மந்திரியிடமிருந்து ஆபத்துக்களும், எதிர்ப்புக்களும் நிறைய இருக்குமென்று முத்துராமலிங்கத்துக்கும் மற்றவர்களுக்கும் நன்றாகப் புரிந்துதான் இருந்தது. ஆபத்துக்கோ, அபாயத்துக்கோ பயந்து, அடைக்கலம் புகுந்து வந்தவளைக் கைவிடுவதற்கும் அவர்கள் தயாராயில்லை. தான் தந்தைக்கு எதிராகப் புறப்பட்டு வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டதால் தான் அவர்களுக்கு இத்தனை தொல்லைகள் என்பதை மங்காவே மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருந்தாள். முதலிலேயே இதை எதிர்பார்த்து அநுமானித்த சிவகாமிநாதனின் தீர்க்கதரிசனத்தை இப்போது அவள் வியந்தாள். சண்முகம் இரண்டு மூன்று நாட்கள் சிந்தாதிரிப்பேட்டையில் முத்துராமலிங்கத்தோடு தங்கினாராயினும் வெளியிலே ஹோட்டலிலே போய்த்தான் சாப்பிட்டுவிட்டு வந்தார். வீட்டிலேயே சாப்பிட அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை. முத்துராமலிங்கத்துக்கு அவர் ஆறுதல் சொன்னார். “சினிமாவிலே வேலை போயிரிச்சேன்னு வருத்தப்பட வேண்டாம். என்னைப் போலொத்தவன் ஏதோ தாமரை எலைத் தண்ணி மாதிரி அங்கே இருந்துக்கிட்டிருக்கேன். உனக்கு இந்த ஃபீல்டு ஒத்துக்காதுன்னு நீ சேர்ந்தப்பவே நான் நினைச்சேன். தேனா இனிக்கிற சொளை உள்ளே இருந்தாலும் பலாப் பழத்தைப் பிரிச்சதும் சாக்கடைக்கு அடியிலேருந்து வர்ற மாதிரி அடிக்குமே ஒரு துர்வாடை, அதுபோல இந்த ஃபீல்டோட கவர்ச்சியிலிருந்து பிரித்து எடுக்க முடியாதபடி பொய், வஞ்சகம், ஏமாற்று, வேஷம், ஒழுக்கக் குறைவு, நாணயமின்மை, குழி பறிக்கிறது எல்லாம் சேர்ந்து நாத்தமடிக்கும். உன்னாலே இந்த நாத்தத்துலே காலந்தள்ள முடியாது.”
“பாபுராஜ் எனக்குச் சீட்டுக் கிழிச்சதுக்காக நான் கொஞ்சங்கூட வருத்தப்படலே. ஊருக்குக் கொஞ்சம் பணம் அனுப்பிக்கிட்டிருந்தேன். இனிமே அதை அனுப்ப வழியில்லே! வேற வேலை கெடச்சுக் கையிலே மிஞ்சினாத் தான் அனுப்பலாம்.”
“வேற வேலை கெடைக்கிற வரை நான் வேணும்னாப் பணம் தரேன். ஊருக்கு அனுப்பு, கெடைச்சதும் திருப்பிக் குடு. போறும். அனுப்பிக்கிட்டிருந்ததைத் திடீர்னு நிறுத்துவானேன்?” ‘நான் செய்கிறேன். நான் இருக்கிறேன். என்னால் தான் முடியும்’ என்பது போலெல்லாம் முனைப்போ செருக்கோ தெரியாமல் சகஜமாகவும், இயல்பாகவும் சண்முகம் தனக்கு உதவிகள் செய்ய முன்வருவதை நினைத்து முத்துராமலிங்கம் உள்ளூர வியந்தான். அப்படி உதவ முன் வருகிறவர்கள் இன்றைய சமூக அமைப்பில் மிக மிகக் குறைவாகவே தென்பட்டதுதான் காரணம். மறுநாளே டாக்டரின் முயற்சியால் சிவகாமிநாதன் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்துவிட்டார். ஏற்கெனவே மங்காவும், முத்துராமலிங்கமும் மற்றவர்களும் நிறைவேற்றி வைத்திருந்ததால் ‘தியாகியின் குரல்’ தாமதமின்றி வெளிவந்தது. சிறையில் அதிக நாட்கள் வைத்தால் அது அவருக்குப் புகழ் தேடித் தரும் என்று கருதியோ என்னவோ தான் இரண்டொரு நாட்களில் சிவகாமிநாதனையும் அவர்கள் விடுதலை செய்துவிட்டிருந்தார்கள். சிந்தாதிரிப்பேட்டையில் அவர்கள் எந்த இடத்தில் கூட்டம் நடத்தினார்களோ, அதே இடத்தில் மந்திரி எஸ்.கே.சி.நாதனின் கட்சியும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. மந்திரிக்கு அடுத்தபடி இருந்த பேச்சாளர்கள் பட்டியலில் கலையரசி கண்மணியின் பெயரும் காணப்பட்டது. அரசியல் எதிரிகளோடு போய்த் தங்கித் தனது குட்டுக்களை உடைத்துக் கொண்டிருக்கும் தன் மகள் மங்காவை அவர்கள் ‘கிட்நாப்’ செய்து கொண்டு போய்ப் பலவந்தமாகத் தன்னை எதிர்த்து மேடையில் பேசவைப்பதாகக் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் செய்து அவள் மேஜரான பெண் என்பதால் அதைக் கைவிட்டு விட்டு இப்படி எதிர்ப்பு முயற்சிகளில் தந்தை இறங்கியிருக்கிறார் என்பது நம்பகமான உள்மனிதர்கள் மூலம் மங்காவுக்குத் தெரிந்தது. அவள் உறுதியாயிருந்தாள். தந்தை அழுக்கடைந்து நாறிக் கொண்டிருக்கிற முடை நாற்ற அரசியலை அவள் மனப்பூர்வமாகவே வெறுக்கத் தொடங்கியிருந்தாள். அவரையும் அவரது முறைகேடுகளையும், ஊழல்களையும் நினைத்தாலே அவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. பொதுக் கூட்டத்தில் கலவரம் காரணமாகப் பேச இயலாமற் போன கருத்துக்களைத் தியாகியின் குரலில் தொடர்ந்து எழுதத் தொடங்கியிருந்தாள் மங்கா. “ஊழலின் உதாரண புருஷர்கள்” என்று அந்தக் கட்டுரைத் தொடருக்குத் தலைப்பு இடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரைத் தொடர் ஆரம்பமான அந்த இதழ் ‘தியாகியின் குரல்’ பிரதிகள் எல்லாவற்றையும் ஆட்களையும் போலீஸையும் விட்டே விலைக்கு வாங்கிவிட்டார் எஸ்.கே.சி.நாதன். மந்திரியின் கூட்டம் நடைபெற இருந்த தினத்தன்று காலை யாரும் எதிர்பாராத விதமாகக் கண்மணி முத்துராமலிங்கத்தைத் தேடி வந்து சேர்ந்தாள். அவளோடு ஒரு பெரிய கும்பலே கூட வந்தது. சின்னி கூட அதில் இருந்தான். கசாப்புக் கடைக்காரர்கள் இராமலிங்க வள்ளலார் மன்றத்தைத் தேடி வந்த மாதிரி அந்தக் கூட்டம் சிவகாமிநாதனின் வீட்டைத் தேடி வந்திருப்பதைக் கண்டு சுற்றுப்புறம் ஆச்சரியத்தில் மூழ்கியது. தாக்க வந்திருக்கிறார்களோ என்று கூடச் சிலருக்குச் சந்தேகமாக இருந்தது. “அண்ணே, பத்திரிகையிலே சங்கதி பாத்ததிலேருந்து மனசு பதறிப் போச்சு! எந்தப் பாவி இப்பிடிப் பண்ணினான்” - என்று ஆறுதல் வினாவோடு அவனை அணுகினாள் கண்மணி. “வேற யாரு? எல்லாம் உங்க கட்சிக்காரங்கதான்! அடி, உதை, கலாட்டா, கல்லெறி, சோடா புட்டி வீச்சு, எல்லாத்தையுமே தேசிய நாகரிங்களாக்கினதே உங்க கட்சி தானே?” “அப்பிடியா சொல்றீங்க? நான் வேற மாதிரியில்லே கேள்விப்பட்டேன்? உங்க மேடையிலே எங்க கட்சி மந்திரியோட பொண்ணு பேசறேன்னு முன் வந்ததாலே உங்க தொண்டருங்களே கொதிப்படைஞ்சு ஆத்திரத்திலே எதிர்த்துக் கலாட்டாப் பண்ணிட்டாங்கன்னிலே சொன்னாங்க...?” இதைக் கேட்டு இன்னும் யாரென்று அறிமுகமாகாமல் அருகே நின்று கொண்டிருந்த மங்கா கண்மணையை முறைத்துப் பார்த்தாள். கண்மணியின் சிரிப்பும், கண்ணசைப்பும், விட்டுத் தெரிந்த கவர்ச்சிகளும், முத்துராமலிங்கத்திடம் அவள் காட்டிய அந்நியோந்நியமும் ஏற்கெனவே மங்காவுக்கு எரிச்சலூட்டியிருந்தன. பரஸ்பரம் ஏற்பட்டுவிடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கடுமைகளைத் தவிர்ப்பதற்காக உடனே இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் முத்துராமலிங்கம். “உங்க பேரு தான் கண்மணீங்கறதா? நீங்க இன்னிக்கு சாயங்காலம் எங்களை எதிர்த்துக் கூட்டத்திலே பேசப் போறீங்கன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்களே?” “ஆமா தங்கச்சீ! நானேதான். அரசியல் ரீதியாதான் அண்ணனுக்கு எதிர்ப்பக்கத்திலே இருக்கேன்... ஆனாலும் தனிப்பட்ட முறையில் அண்ணன் நம்ம ஏரியா ஆளுங்கறதாலே ஒரு ‘இது’ உண்டு.” அந்த ‘இது’வுக்கு என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்ள மங்கா மனதிற்குள் தீவிரமாக முயன்று கொண்டிருந்தாள். “அண்ணனைப் பார்க்க இங்கே தேடி வந்திருக்கேன்னு என்னோட கட்சி விசுவாசத்தைப் பத்தித் தப்புக் கணக்குப் போடாதீங்க... சாயங்காலம் கூட்டத்திலே வந்து கேட்டீங்கன்னா அண்ணனையும், தியாகி சாரையும் பிச்சுக் குதறிக்கிட்டிருப்பேன்.” பொறுமை மீறிச் சண்முகம் குறுக்கிட்டார். “எதுக்குக் கட்சி விசுவாசன், அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் பேசறீங்க... ரெண்டு பெரிய கள்ளச் சாராய கோஷ்டிகளுக்கு நடுவிலே சிக்கிக் கிட்டுத் திணறது நம்ப ஊரு! எதுக்கு உண்மையை மறைச்சிக்கிட்டு ரெண்டு பேரும் அநாவசியமா புத்தர் வேஷம் போட்டு ஊரை ஏமாத்தணும்?” “ஏதேது? தியாகி சார் மாதிரியே பேசறீங்களே!” “தியாகி சார் கட்சி நடத்தலே. தேர்தலுக்கு நிக்கலே... ஊரை ஏமாத்தலே... லஞ்சம் வாங்கலே. அதுனாலே தைரியமா மனசிலே பட்டதைச் சொல்றாரு.” “எங்க தலைவர் அப்படி இல்லே! நாங்க கொள்கைக்காகத் தீக்குளிக்கவும் தயார்.” “அதான் கொள்கைகள் எல்லாத்தையும் தீக்குளிக்க வச்சுச் சாம்பலாக்கிப் பத்துப் பதினாலு வருசம் ஆச்சே? இன்னும் என்ன மிச்சமிருக்கு இங்கே...?” “இதுக்கெல்லாம் பதில் சாயங்காலக் கூட்டத்திலே சொல்றேன்... கேட்டுக்குங்க...” கண்மணி உடம்பைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி முத்துராமலிங்கத்தை வேண்டி விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தாள். சண்முகம் அவள் போவதைப் பார்த்து மங்காவையும் முத்துராமலிங்கத்தையும் நோக்கி அர்த்த புஷ்டியுள்ளதாகச் சிரித்தார். சாயங்காலக் கூட்டத்தில் அமைச்சரும், கலையரசி கண்மணியும் வந்து முதலிலேயே மேடையில் அமர்ந்து விட்டார்கள். முதலில் கட்சியைச் சேர்ந்து நாலைந்து பேட்டை ரவுடிகள் பேசினார்கள். உபயோகப்படுத்தும் சொற்கள், மொழி நடை ஆகியவற்றின் தராதரம் முற்றிலும் மரத்துப் போகிற அளவிற்கு அவர்கள் பேசு முன் சாராயத்தில் மூழ்கி முக்குளித்து எழுந்து வந்திருந்தார்கள் போலிருக்கிறது. முத்துராமலிங்கத்தையும், தியாகியின் மகளையும் சம்பந்தப்படுத்தித் தாறுமாறாகப் பேசினார்கள். வீட்டிலிருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் எரிச்சலாயிருந்தது. தியாகி சிவகாமிநாதனின் குடும்ப விஷயங்களைக் கொச்சைப்படுத்திப் பேச்சுக்கள் தொடர்ந்தன. “அண்ணே, வாங்க போய் எலும்பை நொறுக்கிப் போட்டு வரலாம்” என்று கொதித்துச் சண்முகத்தையும் அழைத்தபடி எழுந்தான் முத்துராமலிங்கம். “பொறு தம்பீ, பதறாதே! தெரு நாய்களும், சொற் நாய்களும் குறைப்பதற்கு அஞ்சிச் சூரியன் அஸ்தமித்து விடுவதில்லை” என்று அப்போது அவனைத் தடுத்து உட்கார வைத்தார் சிவகாமிநாதன். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|