32 அறிவும், இலட்சியமும், கொள்கை உன்னதமும் கொடுத்துத் தன்னை உயர்த்திய ஞானத் தந்தை சிவகாமிநாதனைச் சார்ந்து நிற்பதா. பணம், உத்தியோகம், பிழைப்பு என்று இவற்றைப் பற்றி மட்டுமே சதா கவலைப் பட்டுப் பேசும் சொந்தத் தந்தையைச் சார்ந்து நிற்பதா என்று முத்துராமலிங்கம் ஒரு விநாடி கூட மனம் குழம்பவில்லை. எதைச் சார்ந்து யாரருகே நிற்க வேண்டும். எதை எதிர்த்து யாரை விரோதித்துக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் அவன் ஏற்கெனவே தீர்மானமாகவும், திடமாகவும் முடிவு செய்திருந்தான். இயல்பாகவே குழம்பிப் போயிருந்த தந்தையின் மனத்தை சர்க்கிள் குருசாமி சேர்வை மேலும் குழப்பிவிட்டிருக்கிறார் என்று புரிந்தது. சிவகாமிநாதனின் சேவாசிரமம் போன்ற புனிதமான வீடு தன்னால் சண்டைக்களமாக மாறுவதை முத்துராமலிங்கம் விரும்பவில்லை. அப்போது அவன் தன் பெற்றோரிடம் கறாராகப் பேசினான். “இதோ பாருங்க இங்கே வந்து நின்னுக்கிட்டு அநாவசியமாகக் கத்தக்கூடாது. எனக்கும் இவளுக்கும் இது தெய்வ சந்நிதானம் மாதிரி. இங்கே இருக்கிறது வெறும் மனுஷன் இல்லே, களையையும், காளான்களையுமே பயிர் செய்து பிழைக்கிற இன்றைய உலகில் ஒரு சத்திய விவசாயியை இங்கே நாங்க அபூர்வமா வச்சுக் கும்புட்டுக்கிட்டிருக்கோம். என்னைப் பெத்து வளர்த்த முறைக்கு நான் உங்களுக்கு என்ன செய்யணுமோ அதை மாசந் தவறாமச் செஞ்சிடத் தயாராயிருக்கேன். மூட்டை தூக்கியோ, கை வண்டி இழுத்தோ கூட உங்களுக்குப் பணம் அனுப்ப என்னாலே முடியும்...” “உன் பணத்துக்காக ஒண்ணும் நாங்க காத்துக்கிடக்கலேடா! இப்பிடி உருப்படாமப் போறியேன்னுதான் சொல்ல வந்தேன்.” இதற்கு அவனும் ஏதோ கடுமையாகப் பதில் சொல்ல முற்பட்டபோது அவனுடைய தாய் அருகே வந்து வாயைப் பொத்தினாள். தந்தையும் மகனும் இன்னொருவருடைய விட்டில் அடித்துக்கொண்டு நிற்பது அந்த அம்மாளுக்குப் பிடிக்கவில்லை. பசுங்கிளித்தேவரோ அப்போது அவன் மேல் கடுங்கோபத்தோடு இருந்தார். அன்று மாலை வரை வாய்ப்பேச்சும், மனஸ்தாபமுமாக சண்டை நீடித்தது. மாலையில் அவர்களை எழும்பூர் சென்று இரயிலேற்றிவிட்டு வந்தான் முத்துராமலிங்கம். தந்தை அவனோடு பேசுவதையே நிறுத்தியிருந்தார். முகத்தைத் திருப்பிக்கொண்டார். தாய்க்காகத்தான் அவன் வழியனுப்பப் போயிருந்தான். பெற்றோரது கோபத்துக்கும் எரிச்சலுக்கும் அஞ்சி அவன் இரயில் நிலையத்துக்கு மங்காவை உடனழைத்துச் செல்லவில்லை. இரயில் நிலையத்திலிருந்து விடு திரும்பியதும், முத்துராமலிங்கம் தானே சிவகாமிநாதனிடம் சென்று, “ஐயா உங்களிடம் தனியாக ஐந்து நிமிஷம் பேசவேண்டும்” என்று வேண்டினான்.
“அதற்கென்ன தாராளமாகப் பேசலாம்” என்று அவர் அவனோடு எழுந்திருந்து வாசல் பக்கமாக வந்தார்.
“ஐயா! நானும் மங்காவும் உங்களோட இருக்கிறதால உங்களுக்குப் பல சிரமங்களும், தர்ம சங்கடங்களும் வருது. ஏதோ உங்களாலேதான் நான் கெட்டுக் குட்டிச்சுவராய்ப் போய்விட்ட மாதிரி நெனைச்சுகிட்டு எங்கப்பா இங்கேயே வந்து கூப்பாடு போடறாரு. இதெல்லாம் பார்த்து எனக்கு மனசு சங்கடப்படும். கஷ்டமோ, நஷ்டமோ தயவு செய்ஞ்சு எங்க ரெண்டு பேரையும் தனியா இருக்க அனுமதியுங்க. குடிசையோ, ஒண்டுக்குடித்தனமோ ஏதோ ஒரு சின்ன இடமா பார்த்துக்கிட்டுப் போயிடறோம்.” இதைக் கேட்டுவிட்டு அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தார் அவர். அப்புறம் சிரித்தபடியே பதில் சொல்லலானார். “அது நீ சொல்றமாதிரி அத்தனை சுலபமில்லே முத்துராமலிங்கம்! மந்திரியும் எதிர்தரப்பு ஆட்களும் உன்னையும் மங்காவையும் தொல்லைப்படுத்தணும்னே நாலா பக்கமும் வேட்டை நாய்களை ஏவி விடற மாதிரி அபாயங்களை ஏவி விட்டிருக்காங்க. அவங்களுக்கு இருக்கிற கோபத்திலே கொலை பண்ணக் கூடத் துணிஞ்சிருப்பாங்க! இந்த சமயத்திலே உங்களைத் தனியா இருங்கன்னு அனுப்ப நான் சம்மதிச்சேன்னா என்னைப் போலப் பொறுப்பில்லாதவன் வேறொருத்தன் இருக்க முடியாது. உன்னாலே எனக்குக் கஷ்டம் வரும்னா அதுவே எனக்குச் சந்தோஷம்னு ஏத்துக்க நான் தயார். உங்களுக்கு சுகமும் சௌக்கியமும் வரப்போ வேணுமானா நீங்க தனியாப் போய்க்குங்க கஷ்ட காலத்திலே மட்டும் கண்டிப்பா எங்கூடத்தான் நீங்க இருந்தாகணும். கஷ்டம் வரப்போ விட்டுடறதும், வசதி வர்றப்போ அரவணைச்சுக்கறதும்தான் இந்தக் காலத்து நடை முறையாயிருக்கு. ஆனா நான் இந்தக் காலத்து மனுசன் இல்லே. உங்க கஷ்டத்திலே எனக்குப் பங்கு கொடுங்க. என் கஷ்ட நஷ்டங்களில் நீங்களும் பங்கெடுத்துக்குங்க... வீணா மனசு குழம்பாதிங்க...” “ஐயா! நீங்க ரொம்பப் பாரத்தைச் சுமக்கணுமேன்னு தான்...?” “சத்திய விவசாயத்தில் பாரம் சுமந்துதானப்பா ஆகணும். முடிகிறவரை சுமப்போமே...?” அவனுக்கும் அவருக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் மங்காவுக்குத் தெரியாது. அவருடைய எல்லையற்ற பெருந்தன்மையை அவன் வியந்தான். இப்படி ஆலமரம் போல் பலரை நிழலில் அமர்த்திக் குளிர்விக்கும் பண்புள்ள மனிதர்கள்தான் தலைவர்களாக இருக்கவேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தங்கள் நிழலில் புதிதாக யாருமே அமரக்கூடாது என்று நினைக்கிற சுயநலமிகளே இந்தத் தலைமுறையில் தலைவர்களாக வந்திருக்கிறார்களே என்று ஒப்பிட்டு எண்ணினான் முத்துராமலிங்கம். அன்றிலிருந்து அவருடைய இயக்க வேலைகள், தியாகியின் குரல் பத்திரிகைப் பணிகள், அச்சக அலுவல்கள் அனைத்திலும் ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்தார்கள் மங்காவும் அவனும். மந்திரி எஸ். கே. சி. நாதனுக்கு வேண்டிய தரப்பு மஞ்சள் பத்திரிகைகள் சில அவர்கள் திருமணத்தைப் பற்றியும் அதற்குத் தியாகி சிவகாமிநாதன் முன் நின்று உதவியதைப் பற்றியும் தாறுமாறாக எழுதியிருந்தன. ‘கடத்தல் கல்யாணத்துக்குத் தலைமை வகித்த தியாகி’ என்றும் ‘தியாகிக்கு புதிய உத்தியோகம்’ என்றும் தலைப்புக்கள் போட்டு அவரைக் கிண்டல் செய்திருந்தன. மங்காவின் தந்தையோ இந்தத் திருமணத்தை எதிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் குமுறிக் கொண்டிருந்தார். அவருடைய ஆத்திரமெல்லாம் சிவகாமிநாதன் மேலும் முத்துராமலிங்கத்தின் மேலும் தான். எங்காவது வகையாகச் சிக்கினால் ஆள் ஏற்பாடு பண்ணி முத்துராமலிங்கத்தின் கையைக் காலை முறித்து விடக்கூட அவர் தயாராயிருந்தார். வகித்துக் கொண்டிருந்த மந்திரி பதவி மட்டும் தடுத்திராவிட்டால் நேரடியாகவே வன்முறையில் இறங்கியிருப்பார் அவர். ‘ஊராருக்கெல்லாம் பெண்ணுரிமையைப் பற்றியும் பெண் விடுதலையைப் பற்றியும் வாய் கிழியப் பேசிய இவருடைய மகளுக்கு மட்டும் விரும்பிய கணவனை அடைய உரிமை இல்லையா?’ என்பதாக யாரும் கேட்டு விடக் கூடாதே என்ற பயம் தான் இப்போது மந்திரியைத் தடுத்தது. ஆனால் அதற்காக அவர் முழுமையாக வாளா இருந்து விடவும் இல்லை. தன் பெயரோடும், தன்னோடும் நேரடியாகத் தொடர்பு படுத்தி விட முடியாத மறைமுகமான கெடுதல்களைச் சிவகாமிநாதனுக்கும், முத்துராமலிங்கத்துக்கும் செய்து கொண்டுதான் இருந்தார். அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை மவுண்ட்ரோடு எல்.எல்.ஏ. பில்டிங் மாடி ஹாலில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்தின் தலைப்பு ‘எங்கள் இந்தியா’ என்பது. தேசபக்தியும், முற்போக்கு எண்ணமும் கொண்ட பல கவிஞர்கள் பாடினார்கள். முத்துராமலிங்கமும் பாடினான்.
“எங்கள் இந்தியா ஆம்! இது எங்கள் இந்தியா! மியூஸியங்களும் மிருகக் காட்சி சாலைகளும் மிகுந்த இந்தியா! சீர்த்திருத்தவாதிகள் சிலரும் செப்பிடு வித்தைக்காரர் பலரும் செறிந்த இந்தியா! தியாகிகள் சிலரும் திருடர்கள் பலரும் நிறைந்த இந்தியா! சத்தியம் என்றொரு பொருளினை அலங்கரித்தே வெறும் சாட்சியாய்க் கூண்டில் பூட்டி வைத்தோம் காந்தி என்றொரு மகாத்மாவைக் காட்சிப் பொருளாய்க் காட்டி வைத்தோம் சுவர்களில் மாட்டி வைத்தோம் நேரு என்றொரு மனிதர் தம்மை நித்தம் பேசியே அலுத்து விட்டோம் மாநில வாரியாய்க் கட்சிகள் தாவும் மாபெரும் இந்திய சர்க்கஸ் புதியதோர் அற்புதம் நல்லவை எல்லாம் வெறும் காட்சிப் பொருளாய் தடையிழந்திருக்கத் தீயவை எல்லாம் சேர்ந்தே எழுந்தே தெருவில் இயங்கும் பகடைகளாய் வளர்கிற பாரத தேசம் பதவியே சுகமெனப் பரமானந்தத்திளைப்புடனிருக்கும் பஞ்சணை வாசிகள் கொஞ்சி மகிழும் பாரத தேசம் முப்பது வருடம் சுதந்திரமாக வாழ்ந்த பின்னும் தண்ணீர் குடிக்கத் தவிக்கும் ஏழைகள் கண்ணீர் வடிக்கும் கவலைகொள் தேசம் உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் கண்ணியமாகப் பார்த்திட வேலையென்றொன்றும் கனவில் கூடப் பெற முடியாத காவிய பூமி இந்தியா எங்கள் இந்தியா ஆம் இது எங்கள் இந்தியா மனிதர்களைக் காட்டிலும் மனிதர்களைப் பார்க்கிலும் மியூஸியங்களும், மிருகக் காட்சிசாலைகளும் மிகுந்த இந்தியா.” கவிதை பலத்த கைதட்டலுடன் வரவேற்கப்பட்டது. கூட்டத்திற்கு இந்தக் கவிதை மிகவும் பிடித்திருந்தது. பாடி முடித்தவுடன் கல்லூரி மாணவர்களைப் போல் தோன்றிய இளம் பெண்கள் சிலரும் இளைஞர்கள் சிலரும் கும்பலாக வந்து முத்துராமலிங்கத்தைச் சூழ்ந்து நின்று கையெழுத்து வாங்கிக்கொண்டு பாராட்டினர். கூட்டத்தில் சில இரகசியப் போலீஸாரும் வந்திருந்தது முத்துராமலிங்கத்துக்குத் தெரியாது. அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அங்கு அனுப்பப்பட்டிருப்பதும் அவனுக்குத் தெரியாது. அன்று அந்தக் கூட்டத்திற்கு மங்காவும் அவனுடன் வந்திருந்தாள். கல்லூரி நாட்களில் அவனுடைய விவாதங்கள், பேச்சுக்கள், கவிதைகளை அவள் நிறையக் கேட்டு இரசித்திருந்தாலும் கணவனின் கவிதை என்ற புதிய உரிமையோடு அந்தக் கவிதைக்காக அன்று அவனைப் பலர் பாராட்டிய போது அவளுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இரண்டு மூன்று மணி நேரத்துக்குப் பின் கவியரங்கம் முடிந்து முத்துராமலிங்கமும் மங்காவும் படியிறங்கி எல்.எல்.ஏ. கட்டிட முகப்புக்கு வந்த போது யூனிஃபாரம் அணியாத ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கத்தின் அருகே வந்து தமது அடையாள அட்டையைக் காண்பித்து, “சார்! களம்பூர் மிராசுதார் கொலை சம்பந்தமாகச் சந்தேகத்தின் பேரில் உங்களைக் கைது செய்கிறோம்” என்றார். முத்துராமலிங்கம் அவர்களைப் பதிலுக்குக் கேட்பதற்கு முன் மங்காவே முந்திக் கொண்டு “நான்ஸென்ஸ்! அதற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?” என்று விசாரித்தாள். “களம்பூர் மிராசுதாரைக் கொன்ற நக்ஸலைட்டுகள் அவரது சடலத்தைச் சுற்றித் தூவியிருந்த பிரசுரங்களில் ஒன்றில் காணப்பட்ட ஒரு வாக்கியமும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்கிறது மிஸ்டர் முத்துராமலிங்கம்!” “எந்த வாக்கியம்?” “அதெல்லாம் இப்போது இங்கே உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. யூ ஆர் அண்டர் அரெஸ்ட்! விசாரணையின் போது எல்லாம் தானே தெரியும்.” மங்கா அந்தப் போலிஸ் அதிகாரியை நோக்கி, “இந்தத் தவறான காரியத்துக்காகப் பின்னால் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும்” என்று கூறியதைப் பொருட்படுத்தாமல் முத்துராமலிங்கத்தினருகே போலீஸ் ஜீப்பைக் கொண்டு வந்து நிறுத்தினார் அவர். கூட்டம் தடுத்தும் பொருட்படுத்தாமல் பலவந்தமாக முத்துராமலிங்கத்தைப் போலீஸ் ஜீப்பிலும் ஏற்றிவிட்டார் அவர். மங்காவும் கூட்டத்தினரும், “போலீஸ் கெடுபிடி ஒழிக! முத்துராமலிங்கத்தை விடுதலை செய்!” என்ற கோஷங்களை எழுப்பினாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஜீப் மெல்ல நகரத் தொடங்கியது. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|