30 “யாருக்கோ பயந்துக்கிட்டு எங்கேயோ ஓடறது எனக்குப் பிடிக்காது! இப்ப இருக்கற நெலைமையிலே எங்களுக்குத் தேனிலவு ஒண்ணுதான் கொறைச்சல். ஐயாவையும் மத்தவங்களையும் தனியே விட்டுட்டு நாங்க போக மாட்டோம்” - என்றான் முத்துராமலிங்கம். தினப் பத்திரிகையில் படித்துத் தகவல் தெரிந்தோ அல்லது கலையரசி கண்மணி போன்ற யாராவது நேரில் போய்ச் சொல்லியோ முத்துராமலிங்கத்தின் பெற்றோருக்கு அவன் கூட்டத்தில் அடி உதைபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தது பற்றிய தகவல் எட்டிவிட்டது. திடுதிடுப்பென்று அவர்கள் சென்னைக்குப் புறப்பட்டு வந்து விட்டார்கள். முத்துராமலிங்கம் தியாகி சிவகாமிநாதனோடுதான் தங்கியிருக்கிறான் என்று பசுங்கிளித்தேவர் கேள்விப்பட்டிருந்ததால் அவர்களெல்லாரும் கல்யாணத்துக்காக மாங்காடு போயிருந்த தினத்தன்று அவர் சிந்தாதிரிப்பேட்டைக்குத் தேடிக் கொண்டு வந்திருந்தார். அங்கே அன்று தியாகி சிவகாமிநாதனின் வீடும் அச்சுக் கூடமும் பூட்டியிருந்தன. அக்கம்பக்கத்தாருக்கும் அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள் என்ற விவரம் தெரிந்திருக்கவில்லை. குடும்பத்தோடு ஏதோ ஒரு மகாநாட்டுக்கோ பொதுக்கூட்டத்துக்கோ போயிருக்கிறார்கள் என்று தான் அவர்கள் கூறினார்கள். அந்த அளவுக்கு மங்கா-முத்துராமலிங்கம் திருமணத்தை மிகவும் இரகசியமாக வைத்திருந்தார் சிவகாமிநாதன். அதனால் தேடிவந்திருந்த முத்துராமலிங்கத்தின் பெற்றோருக்குக் குழப்பமாயிருந்தது. மறுநாள் வந்து மீண்டும் தேடலாம் என்று அம்பத்தூரிலிருந்த உறவினர் ஒருவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள் அவர்கள். திருமணத்துக்காக மாங்காட்டுக்கும் பூந்தமல்லிக்கும் போயிருந்த முத்துராமலிங்கம் முதலியவர்கள் பொழுது சாய்ந்த பின்பே சென்னைக்குத் திரும்பியிருந்தார்கள். பெற்றோர்கள் சென்னைக்கு வந்திருப்பதோ, தன்னைத் தேடி விட்டுப் போயிருப்பதோ அவனுக்குத் தெரியாமல் போயிற்று. சிவகாமிநாதனும் சண்முகமும் எவ்வளவோ வற்புறுத்தியும் முத்துராமலிங்கமும் மங்காவும் வெளியூர் செல்ல மறுத்து விட்டார்கள். அவர்களிருவரும் உள்ளூரிலேயே எங்காவது ஒரு பெரிய ஹோட்டலில் இரண்டு மூன்று நாள் தங்கி மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வரலாம் என்று சண்முகம் அடுத்த யோசனையைக் கூறினார். அதையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். சிவகாமிநாதனும் சண்முகமும் முத்துராமலிங்கத்தைத் தனியே அழைத்தனர். இதமாக எடுத்துச் சொல்லி அறிவுரை கூறிப் பார்த்தனர். சிவகாமிநாதனே கூட வற்புறுத்திச் சொல்லிப் பார்த்தார்.
“உன்னைப்பத்திக் கவலை இல்லேப்பா! உன்னை மணந்துக்கிட்டிருக்கிற பொண்ணோட நெலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப்பாரு. பரம்பரையாகவே வசதியுள்ளவங்க வீட்டிலே வளர்ந்த பொண்ணு. வாழ்க்கையைப் பத்தி என்னென்ன கற்பனைகள் பண்ணி வச்சிருந்திருச்சோ? இங்கே என்னோட இந்த வீட்டிலே தனி அறையோ, கட்டிலோ, மெத்தையோ எதுவும் கிடையாது. இருபத்தஞ்சு வருஷமா ஆசிரம வாழ்க்கை மாதிரி ஆயிரிச்சு இங்கே. நாலஞ்சு கோரைப்பாயி, கிழிஞ்ச சமுக்காளம் தவிர வேறு எதுவும் இங்கே கிடையாது. சுதந்திரம் வர்றதுக்கு முந்தி ஜெயில்லே கஷ்டப்பட்டேன். இப்ப வீட்டிலேயே கஷ்டப்படறேன். பிரஸ், பத்திரிகைன்னு பலதும் வீட்டிலேயே சேர்ந்து போயிட்டதாலே தனி அறைன்னு கூட எதுவும் இங்கே இல்லை. எங்கே பார்த்தாலும் காகிதம், புத்தகம் அச்சடித்த ஃபாரம்னு வீடு பூராக் குவிஞ்சு கெடக்கு.”
“அறிவாளியின் வீடு புஸ்தகங்களாலேதான் நெறைஞ்சிருக்கும். முட்டாள்களோட வீடுகள் பணம், பாத்திரம், பண்டம், நாற்காலின்னு எதுனாலே வேணுமானாலும் நெறைஞ்சிருக்கும்.” “நீ சொல்றதைக் கேக்கறப்பப் பெருமையா இருக்குப்பா! ஆனா மத்தவங்க சௌகரியத்தையும் யோசிக்கணும் இல்லியா? எதிரிகளோட அபாயங்களிலேயிருந்து உங்களைப் பாதுகாக்கணும் இல்லியா? அதனாலேதான் சண்முகம் சொல்றாப்பிலே ஒரு ரெண்டு நாள் எங்கேயாவது தனியாப் போயித் தங்கிட்டு அப்புறம் வாங்கன்னு நானும் சொல்றேன்...” “அபாயங்களைப் பத்தி நான் கவலைப்படலே ஐயா! பயம் தான் சாவு. கோழையாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவதை விட வீரனாகச் செத்து விடுவது எத்தனையோ மேல்.” “இப்போது வாழ்வதும் சாவதும் உன்னைப் பொறுத்த விஷயம் மட்டுமில்லை. புதிதாக இன்னொருத்தியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் உன்னிடம் இருக்கிறது.” “அந்தப் பொறுப்பை நான் ஏத்துக்கிட்டதுக்குக் காரணமே வாழ்க்கையின் இத்தகைய பிரச்னைகளில் எனக்கும் அவளுக்கும் இருக்கிற கருத்து ஒற்றுமைதான் ஐயா!” “சரி! இதற்கு மேல் நான் உங்களை வற்புறுத்த விரும்பவில்லை. நீங்கள் இரண்டு பேரும் விவரம் தெரிந்தவர்கள், நான் ஏன் சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டாலே போதுமானது! இரண்டு மூன்று நாட்களாக உங்கள் திருமண வேலையில் கழிந்துவிட்டதால் அச்சாகி வந்திருக்கிற ‘தியாகியின் குரல்’ அப்படியே ஃபாரம் ஃபாரமாகக் கிடக்கிறது. இன்று இரவுக்குள் ஃபாரங்களை மடித்துப் பின் பண்ணி அனுப்பியாகணும்” - என்று கூறிவிட்டு, மகன், மகள் சண்முகம் ஆகியோருடன் அச்சகப் பகுதிக்குப் புறப்பட்டார் சிவகாமிநாதன். “நாங்களும் வருகிறோம் ஐயா!” என்று மங்காவும் முத்துராமலிங்கமும் கூட, அவர்களோடு கிளம்பத் தயாரானார்கள். சிவகாமிநாதன் அவர்களைத் தடுத்தார். “நாங்க எல்லாருமே அச்சகப் பகுதிக்குப் போறோம். நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருக்கலாம். கல்யாணங் கழிஞ்ச இரவு. இன்னிக்கே ‘பிரஸ்’ வேலையில தள்ளி உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாதுங்கறது என் விருப்பம்.” தங்களைத் தனியே விட்டுவிட வாய்ப்பாகவே அவர்கள் எல்லோரும் வேலையைச் சாக்கிட்டு அச்சகப் பகுதிக்குப் போகிறார்களோ என்று சந்தேகமாயிருந்தது முத்துராமலிங்கத்துக்கு. “ஐயா வாழ்க்கையிலே தான் சுகம் இருக்கணும். சுகத்துக்காகவே வாழ்க்கை இருக்கணும்கிற சொகுசு மனப்பான்மை எனக்கும் இல்லை. இவளுக்கும் இல்லை. நீங்கள்ளாம் கஷ்டப்பட்டுத் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு வேலை செய்யப் போறப்போ... நாங்க மட்டும் எதுக்குச் சும்மா இருக்கணும்?” என்று கூறியபடியே அவர்கள் எல்லாருமே தடுத்தும் கேளாமல் அச்சகத்துக்குள் நுழைந்து வேலை செய்யச் சேர்ந்து கொண்டார்கள் மங்காவும் முத்துராமலிங்கமும். பில் போடுதல், சந்தாப் பிரதிகளை உறையில் போடுதல் ஆகியப் பணிகளை அவர்கள் முதலில் செய்தனர். பெண்களான கஸ்தூரியும், மங்காவும் அச்சிட்ட ஃபாரங்களை மடித்தார்கள். முத்துராமலிங்கம் பின் அடித்துத் தள்ளினான். சண்முகம் ‘கட்டிங்’ மிஷின் வேலையைப் பாண்டித்துரையின் உதவியோடு கவனித்துக் கொண்டார். சிவகாமிநாதன் விலாசங்கள் ஒட்டிய மேலுறையில் இட்டுப் பிரதிகளைத் தயாரித்து அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். தியாகியின் குரலுக்கு நாடு முழுவதுமாக ஓர் இரண்டாயிரம் சந்தாதாரர்கள் இருந்தார்கள். கடைகள், ஏஜண்டுகள் மூலமாக மேலும் ஒரு மூவாயிரம் பிரதிகள் விற்பனை ஆயின. ஆனால் பத்திரிகைக்கு நாடு முழுவதும் ஒரு நன்மதிப்பும், மரியாதையும் இருந்தன. அதற்குக் காரணம் தியாகி சிவகாமிநாதனிடம் இருந்த தார்மீக லட்சியங்களும், சத்திய ஆவேசமுமே. அரசியல் இலக்கிய உலகின் சில உன்னதக் கோட்பாடுகளுக்காக வாதிடும் குரலாக அது இருந்தது. எதையாவது எப்படியாவது எழுதிப் பணம் பண்ணும் வியாபார மாய்மாலம் அதில் இல்லை. அதனால் சிவகாமிநாதன் தம்முடைய பல வசதிக் குறைவுகளுடன் அந்தப் பத்திரிகை என்ற சிரம ஜீவனத்தையும் சேர்த்து நடத்தி வர வேண்டியிருந்தது. ஒரு முழு ‘நைட் ஷிப்ட்’ வேலை செய்வது போல் அன்றிரவு எல்லாருமே பத்திரிகை வேலைகளில் மூழ்கிவிட நேர்ந்திருந்தது. பதினொன்றரை மணி சுமாருக்குச் சண்முகம் மீண்டும் முத்துராமலிங்கத்திடம் வந்து கெஞ்சினார். “தயவு பண்ணி நீங்க ரெண்டு பேரும் தூங்கப் போங்க... மத்ததை எல்லாம் நாங்க பார்த்துக்கறோம். இனிமே இங்கே வேலை ஒண்ணும் அதிகமா இல்லே...” “எல்லோரும் தூங்கப் போகலாம்னா நாங்களும் போறோம்... எங்களுக்கு மட்டும் தனிச் சலுகை காட்டாதீங்க...” - என்று பிடிவாதமாக மறுத்தான் முத்துராமலிங்கம். அதற்கு மேல் யாராலும் அவர்களை வறுபுறுத்திப் பணிய வைக்க முடியவில்லை. தந்தையின் அரசியல் - அதிகாரப் பதவி ஊழல்களைப் பற்றி மங்கா எழுதியிருந்த இரண்டாவது பகுதிக் கட்டுரை அந்த இதழ் தியாகியின் குரலில் வெளி வந்திருந்தது. இந்தக் கட்டுரைகள் எதிர்த்தரப்புக் கட்சிகள், மனிதர்களிடம் உண்டாக்கியிருந்த பரபரப்பை விட மந்திரி எஸ்.கே.சி.நாதன் சார்ந்திருந்த ஆளுங்கட்சித் தரப்பிலேயே அதிகப் பரபரப்பை உண்டாக்கியிருந்தன. ஆளுங்கட்சியிலிருந்த பிரமுகர்கள், தலைவர்கள், எஸ்.கே.சி.நாதனின் சக மந்திரிகள் ஆகியோருக்குத் ‘தியாகியின் குரல்’ பத்திரிகையைப் பார்ப்பதிலும் படிப்பதிலும் இப்போது ஒரு தனி அக்கறை ஏற்பட்டிருந்தது. ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவர் தியாகியின் குரல் பத்திரிகையை இரகசியமாக வாங்கிப் படிக்கத் தலைப்பட்டார்கள். இவை போன்ற விளைவுகளுக்காகத்தான் மந்திரி எஸ்.கே.சி.நாதன் பயப்பட்டுப் பதறினார். சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிரிகள் இருந்தனர். ஒவ்வோர் இந்திய அரசியல் கட்சியின் பிரமுகருக்கும் இந்தியாவில் இரண்டு வித எதிரிகள் உண்டு. ஒருவகை எதிர்ப்பு - எதிர்க் கட்சிகளிலிருந்து வருவது. மற்றொரு வகை எதிர்ப்பு - சொந்தக் கட்சியிலேயே உள்ள எதிரிகளிடமிருந்து வருவது. இதில் அபாயகரமான எதிர்ப்பு உட்கட்சிப் பூசல்காரர்களிடமிருந்து வருவதுதான். தியாகியின் குரல் கட்டுரைகள் மந்திரி எஸ்.கே.சி.நாதனுக்கு எதிராக உட்கட்சிப் பூசல்காரர்களைப் பயங்கரமாகக் கிளப்பி விட்டன. அவரது வளர்ச்சியைத் தடுத்து ஒடுக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த அவரது அரசியல் எதிரிகள் இந்தக் கட்டுரைகளால் உற்சாகமடைந்து செயல்பட்டனர். குதிரை கீழே தள்ளியதோடு விட்டுவிடாமல் குழியையும் பறித்ததாம் என்கிற கதையாக மகள் தன்னைப் பிரிந்து தன் எதிரியிடம் சரணடைந்ததோடு போகாமல் இப்படித் தாக்குதல் கட்டுரைகளை வேறு எழுதத் தொடங்கியது அவரைப் பெரிதும் பாதித்தது. அன்றிரவு சிவகாமிநாதன் முதலியவர்கள் தூங்கச் செல்லும் போது இரவு மூன்று மணி - அதனால் மறுநாள் காலை எல்லோருமே தாமதமாக எழுந்தனர். வாசல் கதவை யாரோ தட்டுகிற சத்தம் கேட்டு முதலில் எழுந்தவர் சிவகாமிநாதன் தான். முதல் நாள் தேடி வந்து அம்பத்தூரில் உறவினர் வீட்டுக்குப் போயிருந்த முத்துராமலிங்கத்தின் பெற்றோர் தான் அப்போது தேடி வந்திருந்தனர். முதலில் சிவகாமிநாதன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அவர்கள் அங்கே வந்த போது மங்காவும் முத்துராமலிங்கமும் மற்றவர்களும் எழுந்திருக்கவில்லை. பசுங்கிளித் தேவர் சிவகாமிநாதனை விசாரித்து மகனின் க்ஷேம லாபத்தை அறிந்து கொண்டார். யாரையும் எழுப்பாமல் தானே போய்ப் பால் வாங்கி வந்து அவர்களுக்குக் காபி போட்டுக் கொடுத்தார் சிவகாமிநாதன். பசுங்கிளித்தேவர் தம்பதிகள் - முத்துராமலிங்கத்தின் இரகசியத் திருமணம் பற்றி அறிந்தால் என்ன சொல்லுவார்களோ என்ற தயக்கம் சிவகாமிநாதனுக்கு ஏற்பட்டது. முத்துராமலிங்கம் எழுந்திருக்கட்டும் என்று காத்திருந்தார் அவர். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|