9 “எப்ப வந்தீங்க? என்ன காரியமா வந்தீங்க... வாட் எ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ்? நான் உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்லே.” மங்காவுக்கு முத்துராமலிங்கம் பதில் சொல்லும் போது தான் சற்றே விலகி நிற்கலாம் என்றெண்ணியோ என்னவோ சின்னி பின்னுக்கு நகர்ந்து தெரு ஓரமாக ஒதுங்கிக் கொண்டான். “நீங்க இங்கே வந்திருப்பீங்கன்னு நான் எதிர்பார்த்தேன். உங்கப்பா மினிஸ்டராயிருக்காரில்லே?” “அதுக்காக வந்தேன்கிறதை விட என்னோட லண்டன் ‘ட்யுப்’புக்காக ஏற்பாடெல்லாம் பண்ண வந்தேன்கிறது தான் சரியாயிருக்கும் மிஸ்டர் முத்டுராம்!” தன்னுடைய பேச்சில் அவள் தானாகவே வார்த்தைக்கு வார்த்தை விநாடிக்கு விநாடி ஆச்சர்யத்தைப் படைத்துக் கொண்டு பேசுவது போன்ற மழலைத் தன்மையோடு பேசினாள். அது அவளுக்கு மேலும் அதிக அழகு ஊட்டியது. “நான் பிழைப்பைத் தேடி வந்திருக்கேன். இன்னும் தேடி முடிக்கல்லே.” “வாங்களேன் டிரைவ் - இன்னில் காபி குடிக்கலாம்.” அவள் வேண்டுகோலை ஏற்பதா நிராகரிப்பதா என்று அப்போது யோசித்துத் தயங்கியபடியே சின்னியைப் பார்த்தான் முத்துராமலிங்கம். சின்னிப் பச்சைக்கொடி காட்டினான். “போய்ட்டு வாப்பா... கூப்பிடுறாங்க... நான் கிருஷ்ணாம்பேட்டையிலே கீறேன். சுளுவா வந்துடு” - என்று கூறிப் பெட்டையைக் கூட முத்துராமலிங்கத்திடம் கேட்டு வாங்கிக் கொண்டான் சின்னி. காரில் ஏறி உட்கார்ந்ததும் அவள் அவனிடம் கேட்ட முதல் கேள்வி: “வேலைக்கு எங்கப்பா மூலமா நான் ஏதாச்சும் பண்ணட்டுமா?” “தயவு செய்து வேண்டாம்.” இதற்கு மேல் அவள் அவனை வற்புறுத்தவில்லை. அவளுடைய காரில் பிரயாணம் செய்வது மிதப்பது போல் சுகமான அநுபவமாயிருந்தது. இங்கிதமான நறுமணம் நிறைந்த உயிருள்ள பெரிய பூ ஒன்றைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு பேசுவது போன்ற அநுபவமாயிருந்தது அது. ஓர் அழகிய பெண் உடனிருக்கும் போது ஒவ்வோர் ஆணுக்குள்ளும் கிளுகிளுக்கும் பெயர் தெரியாத நளின சொப்பனங்கள் பல உண்டாகின்றன. அவற்றுக்குத்தான் காதல் என்பதாகத் தங்களுக்குத் தெரிந்த மொழியில் அவர்கள் பெயர் சூட்டிக் கொள்கிறார்கள் போலிருக்கிறது.
படித்த இளைஞர்கள் யதார்த்த நிலையைக் காண மறுத்துக் கற்பிதங்களில் திளைக்கக் கூடாது என்று எண்ணுகிறவன் முத்துராமலிங்கம். அவனுக்குத் தெரியாமல் அவனையே கற்பிதங்களில் திளைக்க வைத்திருந்தாள் அவள்.
‘இவள் சொக்கி மயங்க வைக்கும் ஒரு நறுமணக் கனவு. யதார்த்தங்களிலிருந்து நம்மை வெகு உயரத்துக்கு, அடிப்படையில்லாத பொய்யான ஓர் உயரத்துக்குத் தூக்கிச் செல்லும் ஒரு சுகந்த சொப்பனம்’ என்றெல்லாம் நினைத்திருந்தும் அவளைக் காண்கிற போதுகளில் அவற்றைத் தானே மறந்து கொண்டிருந்தான் முத்துராமலிங்கம். ஒரு விநாடி சாலையில் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிய அந்தப் பைத்தியத்தின் நினைவு கண் முன் ஓடியது. அவளையும், மங்காவையும் ஒப்பிட்டான் முத்துராமலிங்கம். தந்தையின் பரம்பரையான பொருளாதார வசதியோடு கூடிய பெரிய மனித தன்மை, அரசியலில் செல்வாக்குள்ள பெரிய பதவி, இங்கிலாந்தில் வசதியான உத்தியோகத்திலிருக்கும் மூத்த சகோதரன் எல்லாரும் எல்லாமுமாகச் சேர்ந்து இந்த மங்காவுக்கு அளித்திருக்கும் வாழ்க்கைப் பாதுகாப்பையும் உற்சாகத்தையும், ஏழ்மையால் விபசார விடுதிக்கு வந்து பின்பு தெருவுக்கும் வந்துவிட்ட அவள் அடைய வழியின்றித் தான் அப்படிச் சீரழிந்து விட்டாள் என்று தோன்றியது. அவளது மிரண்ட பார்வையும் ‘என்னை விட்டுடு’ என்ற புலம்பலும் மீண்டும் அவனுக்கு நினைவு வந்தன. பண வசதியும், செல்வாக்கும் இல்லாதவர்களின் வாழ்க்கைகளும் நியாயவாதங்களும் எவ்வளவிற்குப் பாதுகாப்பற்றவையாக இருக்கின்றன என்பதை நினைத்த போது அவனுக்கு இனம்புரியாத - விலாசம் புரியாத - யார் மேல், எதன் மேல், ஏன் என்றெல்லாம் பிரித்து விளக்க முடியாததோர் ஆத்திரம் தாறுமாறாக மூண்டது. அந்த ஆத்திரத்தின் செலுத்தப்பட வேண்டிய இலக்குப் புரியாவிட்டாலும் அப்போது அதைத் தவிர்க்க முடியவில்லை. டிரைவ் இன்னில் காரில் இருந்தபடியே சிற்றுண்டிக்கு ஆர்டர் செய்தாள் மங்கா. அவள் இழுத்த இழுப்புக்கு இழுபட்டுச் சொன்னபடியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறோமோ என்ற உறுத்தல் முத்துராமலிங்கத்தின் மனத்தில் இருந்தது. அதனால் துணிந்து, “காரில் உட்கார்ந்து சாப்பிட வேண்டாம்! எனக்குப் பிடிக்கல்லே! கீழே இறங்கி நாற்காலி மேஜைக்குப் போகலாம்!” என்றான் அவன். “...ஓ.எஸ். தாராளமாக அப்படியே செய்யலாம்” என்று வெயிட்டரைக் கூப்பிட்டு ஆர்டரைக் கேன்ஸல் செய்த பின் அவனோடு இறங்கி நடந்தாள் மங்கா. “இந்த ஊர்ல ரொம்பப் பேர் கீழே இறங்கித் தெருவிலே வாழ்க்கை எப்படி இருக்கும்னு பார்க்காமலேயே சோஷலிஸம் அடித்தளத்து மக்களின் வாழ்க்கையை உயர்த்தறது. வறுமையை ஒழிக்கறது - அத்தனையும் பத்திப் பேசிடறாங்க. எனக்கு அது பிடிக்கலை.” பதில் சொல்லாமல் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தாள் மங்கா. தான் சுதந்திரமாகவும், நிர்த்தாட்சண்யமாகவும் இயங்குகிறோம் என்பதைக் காட்ட அவளிடம் - கருத்து வேறுபடும் உரிமையும் தனக்கு உண்டு என்பதை உணர்த்த - அவன் தயாராயிருந்தான். ஆனால் அவள் அதற்கு அப்படித் தயாராயில்லை. சிரித்து சிரித்து மயக்கினாள். அவன் சொன்னபடி எல்லாம் கேட்டாள். மனம் விட்டுப் பேசுவதற்குப் பதிலாகச் சிரித்து மழுப்புகிறவர்களும், சிரிப்பதற்குப் பதில் பேசி மழுப்புகிறவர்களும் யோசிக்கப்பட வேண்டியவர்கள் என்பது முத்துராமலிங்கத்தின் கணிப்பு. சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவளிடமே அதைக் கேட்டு விட்டான் அவன். “...தெருவில் இறங்கி நடக்காமலே இந்த ஊர்லே அதிகம் பேர் அடித்தளம் அது இதுன்னு பேசறாங்கன்னேனே, அப்ப நீ சிரிச்சதுக்கு என்ன அர்த்தம்?” “சும்மா சிரிச்சேன் அவ்வளவுதான் - இதுக்கெல்லாம் அர்த்தம் பார்த்துக்கிட்டிருந்தா எப்படி?” “அர்த்தமில்லாமேயோ சும்மாவோ எதையும் செய்யறது எனக்குப் பிடிக்காது. உங்கப்பா அரசியல் நடத்தற மாதிரி தான் உன்னோட சிரிப்பும் இருக்கு...” இப்போது இதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. சும்மா சிரித்தாள். தன் தந்தையைப் பற்றிய அவனது தீவிரமான விமரிசனத்தை அவள் கண்டிக்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை. “நீங்க என்னிக்கி மதுரை திரும்பப் போறீங்க?” “முதல்லே வந்த லாரியிலேயே திரும்பணும்னு தான் இருந்தேன். இப்ப அப்படிச் செய்யப்போறதில்லே...” “என்னது? லாரியிலியா மெட்ராஸ் வந்தீங்க?” “ஆமாம். உங்கப்பாவும் மத்த மந்திரிகளும் பதவியேத்துக்கிட்டதைக் கொண்டாட லாரி லாரியாக் கிராமத்து அப்பாவி மக்கள் வேடிக்கை பார்க்க வந்தாங்களே அதுலே ஒருத்தனாத்தான் நானும் வந்தேன்.” “லாரியிலே முந்நூறு மைல் பிரயாணம் பண்றது ரொம்பக் கஷ்டமா இருக்குமே?” “சாதாரண மக்களுக்கு ரொம்பக் கஷ்டமா இல்லாததுன்னு இன்னிக்கு இந்த நாட்டுலே என்ன தான் மீதமிருக்கு?” “...” “நாளைக்கோ உடனேயோ நான் மெட்ராஸை விட்டுத் திரும்பப் போறதில்லே! இங்கே நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கு...” “நாளைக்கு எங்க கார் மதுரை போகுது. டிரைவரைத் தவிர நான் மட்டுந்தான் தனியாப் போறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லாட்டி நீங்களும் வரலாம்.” தனக்கு அப்போது ஊர் திரும்புகிற உத்தேசம் இல்லையென்று முத்துராமலிங்கம் திட்டவட்டமாக அவளிடம் கூறிவிட்டான். அவள் பர்மிங்ஹாம் யூனிவர்ஸிடியில் தான் பி.எச்.டி. பண்ணப் போவதைப் பற்றி, விவரிக்கத் தொடங்கினாள். இன்னும் இரண்டு மூன்று மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் தன் வெளிநாட்டுப் பிரயாணம் நேரலாம் என்றும் சொன்னாள். அவள் அப்பாவுக்கு அமைச்சர் என்ற முறையில் தலைநகரில் கிரீன்வேய்ஸ் ரோடில் ஒதுக்கப்பட்டிருக்கும் பங்களாவின் முகவரியையும் டெலிபோன் நம்பரையும் அவனுக்குக் கொடுத்தாள். அவனுடைய முகவரியைக் கேட்டாள். காபியைப் பருகிக் கொண்டிருந்த அவன் கப்பை மேஜை மேல் வைத்துவிட்டு நிதானமாக அவளைப் பார்த்தபடி சொன்னான்: “இதுவரை விலாசம் என்று எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ நிலைமைதான். கிடைத்ததும் உங்களுக்கு எழுதுகிறேன்.” “எங்கப்பா மூலமாச் சொல்லி ஏதாவது யூத் ஹாஸ்டல் அல்லது ரிஸர்ச் ஸ்டூடண்ட்ஸ் ஹாஸ்டல்லே தங்க எடம் வாங்கித் தரட்டுமா?” “வேண்டாம்! நான் பார்த்துக்கிறேன்.” “நான்... முதல்லே பார்க்கறப்பக் கூட இருந்தாரே அவரு யாரு...?” “அவனா? அவனோட முழுப் பேரு சின்னராஜ். செல்லப் பேரு சின்னி... புதுசா இங்கே சிநேகிதமானவன்! ரொம்ப நல்ல மாதிரி...” கார் புறப்படும் போது அவனை எங்கே விட வேண்டுமென்று சிரித்தபடியே கேட்டாள் மங்கா. அவன் கிருஷ்ணாம்பேட்டைக்கு அருகே அடையாளமாக ‘வெங்கடேஸ்வரா ஹாஸ்டல் பக்கத்தில்’ என்றான். அவளுக்கு அந்த இடம் தெரியவில்லை. ஆனால் காரை ஓட்டி வந்த டிரைவர் சென்னைக்காரனாக இருந்ததால் அவனுக்குத் தெரிந்திருந்தது. டாக்டர் நடேசன் சாலையும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையும் சந்திக்கிற இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகே முத்துராமலிங்கத்தை இறக்கி விட்டாள் மங்கா. அவன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு கிழக்கே கடற்கரை போகும் சாலையை நோக்கி நடந்து நேஷனல் கேர்ள்ஸ் ஹைஸ்கூல் முனையில் இருசப்ப கிராமணி தெருவுக்காகத் திரும்பிய போது அங்கு ஒரே கலவரமாக இருந்தது. நடுத்தெருவில் சோடா புட்டிகள் உடைந்து கண்ணாடிச் சில் சிதறியிருந்தது. கடைகண்ணிகள் அடைக்கப் பட்டிருந்தன. ஜன நடமாட்டம் குறைந்து ஆளரவமற்றிருந்தது. வீடுகளில் ஜன்னல்களில் ஆட்கள் பயந்தபடி எட்டிப் பார்ப்பது தெரிந்தது. பொழுது விடிந்து சில நாழிகைக்குள்ளேயே இப்படி ஒரு கலவரமா என்று வியந்தபடி பிளாட்பாரத்தில் நின்றான் முத்துராமலிங்கம். அருட்பிரகாச வள்ளலார் ‘தருமமிகு சென்னை’ என்று தெரியாத்தனமாக ஏமாந்து போய்ப் பாராட்டி விட்டாரோ என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. இன்றைய சென்னையில் ‘இறந்த காலங்களையும்’ இறந்த காலத்துப் பண்டங்களை விற்கிற மூர் மார்க்கெட்டில் கூட தர்மம் கிடைக்காது போல் இருந்தது. ஒன்றும் புரியாமல் திகைத்துப் போய் நின்றான் அவன். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|