26 காலைப் பத்திரிகையைப் படித்துவிட்டு - விசாரித்து விவரம் தெரிந்து கொண்டு அறை நண்பர் சண்முகம் அவனைப் பார்ப்பதற்குத் தேடி வந்திருந்தார். அவரை மற்றவர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தினான் முத்துராமலிங்கம். தியாகி சிவகாமிநாதன் அநியாயமாகக் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தைத் தடுத்து நிறுத்தி அமைதியும் நிதானமும் அடையச் செய்ததே சண்முகம்தான். இல்லாவிட்டால் மங்காவோ சிவகாமிநாதனின் மகளோ அப்போது அவனைத் தடுத்து நிறுத்தியிருக்க இயலாமற் போயிருக்கும். “அவரைக் கவனிச்சுக்க ஆளுங்க இருக்காங்க! தொண்டருங்க கொஞ்சமா, நஞ்சமா? நீ மண்டையை உடைச்சுக்கிட்டுப் படுக்கையிலே கிடக்கிறவன் போயி என்னப்பா பண்ண முடியும்? அவரை ஜெயில்லே போயி விசாரிச்சுக்கிறதுக்கோ, ஜாமீன்ல எடுக்கிறதுக்கோ ஏற்பாடு பண்ணுவாங்க - நீ கவலைப்படாதே.” “நடக்கிற அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பார்த்து என் நெஞ்சு கொதிக்குதுப்பா? கேள்வி முறை இல்லாமப் போச்சே. இதென்ன மனுஷங்க வாழற நாடா இல்லே காடா...?” “சிரங்கு கூட நல்லாப் பழுத்து முத்தினப் பெறவு தாம்ப்பா ஒடையும்! நம்ம சமூகமும் ஆட்சியும் அரசியலும், எல்லாம் இப்ப சிரங்கு மாதிரியும் புண்ணு மாதிரியும் உள்ளே சீழ் வச்சுப் பழுத்திருக்கு. உடையணும். உடைய வேண்டியதுதான் மீதம். எப்ப உடையும்னு தான் தெரியலே முத்துராமலிங்கம்!” “புரையோடிப் போய் அழுகாமல் அது உடையணும். இன்று முதல் தரமான மனிதனுக்கும், முதல் தரமான எதிரிக்கும் போட்டி இல்லை இங்கே! பொது வாழ்க்கையிலே சகல துறைகளிலேயும் முதல் தரமான மனிதர்களுடனும் நான்காந்தரமான எண்ணங்களுடனும் மோதிச் சமாளிக்க வேண்டிய துரதிர்ஷ்டமான நிலையிலே இருக்கிறோம். அப்பழுக்கில்லாத சிவகாமிநாதன் போன்ற உத்தமர்கள், தியாகிகள் அறிவாளிகள் எல்லாம் ரௌடிகளிடமும் பிம்ப்களிடமும் பணத்துக்காகவும், சுய நலத்துக்காகவும், எதையும் செய்யத் தயாராயிருக்கும் மட்டமான மனிதர்களிடத்தில் எதிர்த்துப் போரிட வேண்டியிருக்கிறது.” “செய்யறதையும் செஞ்சுப்புட்டு அமைதியை நாடும் அவதார புருஷர் மாதிரிக் காலம்பரப் பேப்பர்லே அறிக்கை வேற விட்டுப் புட்டாரு...” “யாரைச் சொல்றீங்க...?” “மந்திரியைத்தான்! கருத்து வேறுபாட்டைத் தெரிவிக்க கூட்டங்களில் வன்முறையை மேற்கொள்ளக் கூடாது. நேற்று இரவு தியாகி சிவகாமிநாதனின் பொதுக் கூட்டத்தில் புகுந்து கலவரம் நிகழ்த்திய காலிகளை வன்மையாகக் கண்டிக்கிறே’ன்னு அவரே ஒரு அறிக்கையும் விட்டிருக்காரே.” “பார்க்கலியே...?” அந்த மாதிரி மந்திரி நாதனின் அறிக்கை வெளியாகியிருந்த அவர் சார்புக் கட்சிப் பத்திரிகை ஒன்றை ஆள் அனுப்பி வாங்கி வரச் செய்து முத்துராமலிங்கத்திடம் காண்பித்தார் சண்முகம்.
“குழியைப் பறிச்சதுமில்லாமே குப்புறத் தள்ளியும் விட்ட கதையாவில்லே இருக்கு? இப்படிப் புத்தர் வேஷம் வேற போடணுமா?”
“வேஷம் போடறதுங்கறது இன்னிக்கு அரசியல்லே அன்றாடத் தொழிலாவே போயிரிச்சுப்பா! மிகத் திறமையா வேஷம் போடறவங்க நடிக்கிறவங்க எல்லாருமே இன்னிக்கு அரசியலுக்குள்ளே வந்திருக்காங்க. இத்தனை வேஷதாரிங்களுக்கு நடுவே உன் குருநாதர் திணறத்துக்குக் காரணம் இப்பப் புரியுதில்லே?” சண்முகம் இப்படிக் கேட்டது நியாயமென்றே பட்டது முத்துராமலிங்கத்துக்கு. பொதுமக்களுக்கும் சமூகத்துக்கும் காண்பித்துப் புகழ் பெற ஒரு கருணை வடிவான புத்தர் முகமும் அந்தரங்க வாழ்வுக்கும், நடைமுறைக்கும் கடைவாய்ப் பற்கள் முளைத்த, கோர ராட்சஸ முகமுமாக வாழ்வது என்பது இன்றைக்கு மிகவும் சகஜமாகப் போயிருக்கும் ஒன்று என்பது புரிந்தது. சண்முகம் நடுநடுவே மந்திரி எஸ்.கே.சி.நாதனின் சொந்த மகளான மங்காவைப் பார்த்து, “நான் சொல்றேனேன்னு நீங்க தப்பா நெனைச்சுக்காதீங்க! உள்ளதைத் தான் சொல்றேன்” என்று தயங்கிய தொனியில் கூறியது அவளுக்கே பிடிக்கவில்லை. “இதிலே எனக்கு வருத்தம் இல்லீங்க! எங்கப்பாவைப் பத்தி எனக்குத் தெரியாத எதையும் நீங்க சொல்லிடலே! எல்லாம் உள்ளதை உள்ளபடியே தான் சொல்றீங்க... கசப்பா இருக்குங்கிறதாலே உண்மை பொய்யாயிடாது. இந்த உண்மையை எல்லாம் நானே பகிரங்கமாகப் பேசி அவரைக் குற்றம் சாட்டத் தயார்னு தானே நேத்து மேடையேறினேன். அதுக்காகத்தானே இத்தினி கலாட்டாவும் நடந்திச்சு?” “உங்க தைரியத்தைப் பாராட்டறேன்! ஒவ்வொரு சமூக விரோதியோட குடும்பத்திலேருந்தும் இப்பிடி ஒருத்தர் துணிஞ்சு கிளம்பி முன் வந்தா நாட்டை மாத்திப்பிடலாம்.” அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த நர்ஸிங் ஹோமின் டாக்டர் வந்தார். முத்துராமலிங்கத்தைப் பார்த்தார். பரிசோதித்தார். மனந்திறந்து பேசினார். “பப்ளிக் செர்விஸ், பொதுப்பணி அது இதெல்லாம் எத்தினி அபாயகரமானதா ஆயிடிச்சுப் பாருங்க... நீங்க யாருக்கும் கெடுதல் செய்யவே வேணாம். சும்மா நல்லவங்களா இருந்து நல்ல காரியம் பண்ணணும்னு முயற்சி பண்ணினீங்கன்னாலே போதும், ‘உங்களுக்குக் கெடுதல் பண்ண ஆள் வரும். உங்களாலே யாருக்கும் கெடுதல் பண்ண முடியாதுன்னாலே போதும், உங்களுக்குக் கெடுதல் பண்ண ஓடி வந்துடுவாங்க. அதுதான் இன்னிக்கு நடை முறை. இந்த நடைமுறை புரியாம நம்ப சிவகாமிநாதன் சார் எதிர் நீச்சல் போடறார். அதனாலதான் இத்தினி கஷ்டமும்.” “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்னு பாரதியார் பாடியிருக்காரு.” “அந்த மகாகவியோட வார்த்தைகள் சரியான தீர்க்க தரிசனம். அதுக்கு அட்சர லட்சம் குடுக்கணும்” என்ற டாக்டரை இடைமறித்து, முத்துராமலிங்கம் வினவினான். “நான் வெளியிலே மூவ் பண்ணலாமா டாக்டர்? விடிகாலையிலே தியாகி சாரை அரெஸ்ட் பண்ணிக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க... ஜெயில்லே போயி அவரைப் பார்க்கணும் முடியுமா? ப்ளீஸ்...” “நானும் கேள்விப்பட்டேன். மந்திரிங்க வார்த்தையைக் கேட்டுப் போலீஸ் ரொம்பத்தான் அக்ரமம் பண்றாங்க... நானும் கூட அவரைப் பார்க்க வரணும்... ரவுண்ட்ஸ் போயிட்டு வந்தப்புறம் சேர்ந்தே போகலாம். எல்லாரும் பதினோரு மணிக்கு ரெடியா இருங்க! நானே ஜெயில் சூப்ரண்டுக்குப் போன் பண்ணி ஏற்பாடு செய்யறேன்.” டாக்டரே இப்படிக் கூறியதும் எல்லாரும் சம்மதித்தார்கள். கூட்டத்தில் நடந்த வன்முறைகளுக்கு வருத்தம் தெரிவிப்பது போல் மிகவும் பெருந்தன்மையாக அறிக்கை விட்டுவிட்டு உள் ஏற்பாடாக சிவகாமிநாதன் மேல் பொய்க்குற்றம் சுமத்தி அவரை அரெஸ்ட் செய்து ஜெயிலிலே வைத்திருக்கும் கொடுமையை எண்ணி வியந்தார்கள் அவர்கள். பெருந்தன்மை, நேர்மை ஒழுக்கம் முதலிய நற்பண்புகளை எதற்கோ ‘அலிபி’யாகவே வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் இலக்கணத்திற்கு ஏற்பத்தான் மங்காவின் தந்தையும் நடந்து கொண்டிருந்தார். இரட்டை வேஷம் போட்டிருந்தார். அவரது நேர்மை, ஒழுக்கம், மதச்சார்பின்மை, பிறர் நலம் பேணல் எல்லாமே ஓர் ‘அலிபி’ ஏற்பாடாக அவ்வப்போது தெரிந்தனவே ஒழிய இயல்பாயில்லை. உதவிக் காமிராமேன் சண்முகமும் முத்துராமலிங்கமும் நிலைமையைப் பற்றித் தங்களுக்குள் விரிவாக விவாதித்தனர்; இளைஞர்களைச் சிவகாமிநாதன் தலைமையில் ஒன்று திரட்டி லஞ்சம், ஊழல், சந்தர்ப்பவாதம் ஆகியவற்றைத் தீவிரமாக எதிர்த்துப் போரிட வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள் அவர்கள். இத்தனை கொடுமைகளையும், எதிர்ப்புக்களையும் இடையூறுகளையும் தாங்கிக் கொண்டு கால் நூற்றாண்டுக் காலமாகப் போராடி வரும் தியாகி சிவகாமிநாதன் முள்முடி தாங்கி முழு வேதனையோடு அங்கமெல்லாம் ஆணியால் குத்தப்பட்டுப் புண்ணாகி நின்ற ஏசுபிரானைப் போல் பொறுமையாகத் தன் வேதனைகளைச் சகித்தபடி எதிர் நீச்சலிடுவதாக அவர்களுக்குத் தோன்றியது. “தங்களை ஏமாற்றுகிறவர்களையே தலைவர்களாக நினைக்கும் மௌட்டீக மனப்பான்மை தீர்ந்து மக்கள் விழிப்படையாதவரை இங்கே எதையும் சாதிக்க முடியாது! சாத்வீகப் போராட்டத்துக்கு வேண்டிய ஆன்ம பலமும் இல்லாமல் வன்முறைப் புரட்சிக்கு வேண்டிய வைரமும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாக இருக்கும் மக்கள் சமுதாயத்தில் இப்படித்தான் நடக்கும். இதுதான் நடக்கும்” என்றார் சண்முகம். பதினொரு மணிக்கு டாக்டர் வந்தார். அவர் காரிலேயே எல்லாரையும் அழைத்துக் கொண்டு மத்திய சிறைச்சாலைக்குச் சென்றார். முத்துராமலிங்கம், சண்முகம், மங்கா, சிவகாமிநாதனின் மகள் மகன் ஆகியோருடன் டாக்டர் சென்றிருந்தார். சிறையில் அவருக்கு உரிய வகுப்புக் கொடுக்கப்படவில்லை. அரசியல் காரணமாகக் கைதானவர்களுக்குக் கொடுக்கப்படும் - வசதிகளும் செய்து தரப்படவில்லை. கேடிகள், திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் ஆகிய ரகத்தினரோடு சிவகாமிநாதனும் அடைக்கப்பட்டிருந்தார். முத்துராமலிங்கத்தைக் கனிவாக விசாரித்தார் அவர். “இந்த மண்டைக் கட்டோட நீ ஏன்ப்பா வந்தே? ரெஸ்ட் எடுத்துக் கொள்ளக் கூடாதா?” “உங்களைப் பார்க்காம இருக்க முடியாதுன்னு தோணிச்சு, வந்தேன்.” “நான் எங்கே போறேன்?... நீ உடம்பைக் கவனிச்சுக்கப்பா... டாக்டரிட்ட எல்லாம் சொல்லியிருக்கேன். பார்த்துக்குவாரு! ‘தியாகியின் குரல்’ ஒரு இஷ்யூ கூட நிக்கப்பிடாது! பயந்து நிறுத்திட்டோம்னு ஆயிடும்...” “அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்... நீங்க கவலையில்லாம இருக்கலாம்” ... என்று மங்காவும், அவருடைய மகனும், மகளும் முந்திக் கொண்டு உறுதி கூறினார்கள். சண்முகம் வந்ததற்காக அவரிடம் நன்றி சொல்லிப் பாராட்டினார் சிவகாமிநாதன். டாக்டர் அவரை ஜாமீனில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கப் புறப்பட்ட போது, “எனக்கு அவசரம் ஒன்றுமில்லை! என்னைக் கைது செய்தது பச்சை அயோக்கியத்தனம். பழி வாங்கும் செயல் தவிர இது வேறு ஒன்றும் இல்லை என்று பொதுமக்களுக்குப் புரிய வைப்பதற்காகவாவது நான் இன்னும் கொஞ்ச நாள் ஜெயிலேயே இருந்துடலாம்னு நெனைக்கிறேன்” என்றார் சிவகாமிநாதன். “உங்களுக்குக் குடுக்க வேண்டிய கிளாஸைக் குடுக்காம இப்படிக் கொலைகாரங்களோடவும் கொள்ளைக்காரங்களோடவும் போட்டிருக்காங்களே!” “வெளியிலே இல்லாத கொலைகாரங்களும் கொள்ளைக்காரங்களுமா உள்ளே இருந்துடப் போறாங்க? அவங்களோடவே சேர்ந்து வாழறதைத் தவிர்க்க முடியாதப்போ, இவங்களோட சேர்ந்து வாழறது மட்டும் எந்த விதத்தில் கேவலம்?” சிரித்துக் கொண்டே தான் இப்படிக் கேட்டார் சிவகாமிநாதன். கண்கலங்க நின்று கொண்டிருந்த மங்காவைப் பார்த்துத் தனியாக அவளுக்கென்றே அவர் பேசினார். “தைரியமா இரும்மா! தர்மயுத்தத்திலே இறங்கியாச்சு... ஜெயிக்கிற வரை இனிமேல் போராட்டம் தான்... இதில் புறப் போராட்டத்தை விட மனப்போராட்டம் தான் அதிகமாயிருக்கும்...” “என்னாலே உங்களுக்குப் புதுப் புதுச் சங்கடங்களும், கஷ்டங்களும் வர்றதைப் பார்த்துத்தான் மனசுக்கு வேதனையாயிருக்கு.” “மனசை உறுதியா வச்சுக்கப் பழக்கு அம்மா! எல்லாம் சரியாகும். நமக்கு வேண்டாதவர்களிலுள்ள அயோக்கியர்களை எதிர்க்கிறது எல்லாராலேயும் எங்கேயும் முடியற காரியம் தான். நமக்கு ரொம்ப வேண்டியவர்களிலுள்ள அயோக்கியர்களை எதிர்க்கத்தான் அபாரமான மனோ தைரியம் வேண்டும். கீதையின் சாரமே அப்படி எதிர்ப்புத்தான்.” நேரமாகி விட்டது என்று சிறை அதிகாரி வந்து அவசரப்படுத்தினார். அவர்கள் அவரிடம் சொல்லிப் பிரிய மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டு பிரிந்து வெளியே வந்தார்கள். வெளியே சென்ட்ரல் ஸ்டேஷன் என்ற முகத்துவாரத்தில் ஜன ஊற்றுப் பெருகிப் பிரவாகமாகப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|