28 மேலும் அந்தப் பேச்சுக்களைக் கேட்டபடியே அங்கேயே தொடர்ந்து இருந்தால் முத்துராமலிங்கம் பொறுமை இழக்கக்கூடும் என்று அநுமானித்த சிவகாமிநாதன் அவனையும் மங்காவையும், சண்முகத்தையும் கடற்கரைக்குப் போய்க் காற்றாட உட்கார்ந்து பேசிவிட்டு வரலாம் என்று அழைத்துச் சென்றார். அவர்கள் ஒரு டாக்ஸியில் கடற்கரைக்குச் சென்றார்கள். “அரசியல்லேயும், பொது வாழ்விலேயும் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு அந்தரங்க சுத்தி இல்லே. பத்துப் பேரைக் கூட்டி வச்சுக்கிட்டு நடுத்தெருவிலே வித்தை காட்டற பாம்பாட்டிங்க மாதிரிதான் கட்சித் தலைவருங்களும் கட்சிக் கூட்டங்களும் ஆயிடிச்சுப்பா. இந்த அரசியல் பாம்பாட்டிங்க பேசறது, செய்யிறது எல்லாத்தையும் பார்க்கறப்ப நமக்கு அருவருப்பா இருக்கு - கோபம் வருது- ஆனாலும் பொறுத்துக்கத்தான் வேண்டியிருக்கு” என்று வருந்தினார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம் அதற்கு மறுமொழி கூறினான்: “அதுக்காக நாக்கிலே நரம்பில்லாமே எதை வேணுமானாலும் பேசறதா? கேள்வி முறையே இல்லியா?” “நாக்கிலே நரம்பில்லாமே - வாக்கிலே வரம்பில்லாமே - எதை வேணாலும் எப்படி வேணாலும் பேசறதே ஒரு கலையா வளர்ந்துக்கிட்டிருக்கே இன்னிக்கி” என்று சண்முகம் முத்துராமலிங்கத்தை நோக்கி எதிர்க் கேள்வி போட்டார். மங்கா சுடச்சுடச் சொன்னாள்: “மந்திரீன்னு பேரையும் வச்சுக்கிட்டு வெக்கமில்லாமே மேடையிலே உட்கார்ந்து இதையெல்லாம் ரசிச்சுக்கிட்டிருக்காங்களே, அதைச் சொல்லணும்?” “யாரை? உங்கப்பாவைத்தானே சொல்றே?” “அவரைத்தான்! வேற யாரை?” என்று சிரித்தபடியே முத்துராமலிங்கத்துக்கு மறுமொழி கூறினாள் மங்கா. அவனும் பதிலுக்கு நகைத்தான். அவர்கள் கடற்கரையில் உழைப்பாளிகள் சிலை அருகே கீழிறங்கி மணற்பரப்பில் நடந்தனர். சண்முகம் அலையருகே போய் நிற்பதற்கு எண்ணிக் கடலை நோக்கி நடந்தார். மங்காவும் முத்துராமலிங்கமும் சிவகாமிநாதனும் மணற்பரப்பில் அமர்ந்தார்கள். சிவகாமிநாதன் தான் முதலில் தொடங்கினார். “அந்தக் கூட்டம் முடிஞ்சப்புறம் நாம வீடு திரும்பினாப் போதும்! அதுவரை அங்கே இருக்கறது நல்லதில்லே. உங்கப்பா உன் மேலேயும் எங்க மேலேயும் ரொம்ப ஆத்திரத்தோட இருக்காரு. நீ மேஜரான பொண்ணுங்கறதாலே சட்டப்படி உன்னை ஒண்ணும் செய்ய முடியலே. அதுனாலே கும்பலா வந்து தாக்கலாம். உன்னைக் காரிலே தூக்கிப் போட்டுக்கிட்டுப் போக முயற்சி பண்ணலாம்... என்ன வேணும்னாலும் நடக்கும்.”
“நான் அதுக்குச் சம்மதிச்சாத்தானே?”
“பலவந்தமா வீடு புகுந்து தூக்கிக்கிட்டுப் போகலாம்னு நெனைக்கிறப்ப உன் சம்மதத்தை யாரும்மா கேட்டுக்கிட்டு வரப்போறாங்க. இப்போ என்னையும் என் மகளையும் பத்திக் கன்னா பின்னான்னு மேடையிலே பேசிக்கிட்டிருக்காங்களே, அதுக்கு என்ன நோக்கம் தெரியுமா? எனக்கும் முத்துராமலிங்கத்துக்கும் ஆத்திரமூட்டணும், அந்த ஆத்திரத்திலே நாங்க உன் மேலே வெறுப்படைஞ்சு, ‘எல்லாத்துக்கும் உங்கப்பாவை விட்டு நீ இங்கே வந்ததுதாம்மா காரணம். பேசாமே நீ திரும்ப வீட்டுக்குப் போயி உங்கப்பாறோட இரு’ன்னு சொல்லி உன்னை அங்கே அனுப்பிடுவோம்னு எதிர்பார்க்கிறாரு.” “உயிர் போனாலும் நான் அப்படிச் செய்யப் போறதில்லே.” “அடடே... விஷயத்தைப் புரிஞ்சுக்காமப் பேசறியேம்மா. நீ போயிடுவேன்னு நான் சொல்ல வரலே... உன்னை எப்பிடியாவது எங்க தரப்பிலேருந்து பிரிச்சுக் கொண்டு போயிட அவங்க முயற்சி பண்ணுவாங்கன்னு தான் சொன்னேன்.” “நீங்க சொல்றது சரிதான். இப்பிடி ஏதாவது செய்துடலாம்னு அவங்க புத்தி குறுக்கு வழியிலே தான் வேலை பண்ணும். உங்களுக்கோ எனக்கோ முதல்லே மறைமுகமாகவும் அப்புறம் நேரடியாகவும் தொந்தரவு கொடுத்தா நாம ரெண்டு பேருமே இவளைக் கைவிட்டுடுவோம்னு அவங்களுக்குத் தோணும்” என்றான் முத்துராமலிங்கம். “அப்பாவோட அரசியல் தகிடுதத்தங்களும் ஊழலும் பிடிக்காமேதான் எங்கண்ணன் வெளிநாட்டிலேயே தங்கிடிச்சு. நா வேணா பர்மிங்ஹாம் அண்ணனுக்கு ஒரு கேபிள் குடுத்து இப்ப வரவழைக்கட்டா?” “செய்யலாம் அம்மா! ஆனா அதுக்கு எப்பிடியும் பத்துப் பதினைஞ்சு நாள் ஆகும். இப்ப உடனடியாக நாம ஒரு ஏற்பாடு பண்ணிப் பாதுகாப்புத் தேடியாகணும்.” “நீங்க என்ன சொன்னாலும் அதுக்கு நான் கட்டுப்படுவேன் ஐயா” என்றாள் மங்கா. முத்துராமலிங்கமும் அதையே சொன்னான். அவர் தொடர்ந்தார். “தயவு செய்து உங்களுக்காக ஒரு நியாயமான பாதுகாப்புக்காக நான் கவலைப்படறேன்னு மட்டும் புரிஞ்சுக்குங்க. பயப்படறேன்னு நெனைக்காதீங்க. தைரியம், வீரம், துணிவு எல்லாத்துக்கும் ஏதோ ஒரு விதத்திலே சரியான அடிப்படை நியாயம் இருக்கணும்னு நெனைக்கிறவன் நான். இப்ப நான் சொல்லப் போறதை அந்த அடிப்படையிலே தான் நீங்க எடுத்துக்கணும்.” “அடிப்படையில் நியாயமில்லாத தைரியமும், துணிவும், வீரமும் யாருக்கு இருந்தாலும் அது சரியில்லை! இந்தத் தர்ம யுத்தத்தை நாம் தொடர்ந்து நடத்தியாகணும்னா அதுக்கு முதல்லே நம்மைத் தயார் செய்து கொள்ள வேணும். இப்பிடி உதிரி உதிரியாத் தணிச்சு நின்னு போராடறப்ப வீண் பழிகளும், அபவாதமும் வரத்தான் வரும். நான் சொல்றதை நீங்க ரெண்டு பேரும் தப்பா நினைக்கலேன்னு நம்பித்தான் இதைச் சொல்றேன். உங்க சிநேகிதத்தை அல்லது நெருக்கத்தை நீங்க ஏன் சட்டப்பூர்வமானதாக்கிக் கொள்ளக்கூடாது? அப்படிப் பண்ணிக்கிட்டா நாம் இன்னும் நிமிர்ந்து நின்னு போராடலாம். உங்களுக்குச் சம்மதமானா நானே தலைமை வகிச்சு உங்க திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.” இதைக் கேட்டு மங்கா நாணித் தலைகுனிந்தாள். முத்துராமலிங்கம் அவளை மௌனமாகப் பார்த்தான். அவன் அவளுடைய மறுமொழியை எதிர்பார்க்கிறான் என்று தெரிந்தது. “நீ சொல்லும்மா முதல்லே. இதிலே உன் பதில்தான் எனக்கு முக்கியம்!” “நீங்க சொல்றதிலே எனக்கு முழுச்சம்மதம் ஐயா!” என்று அவள் பதில் சொல்லிய போது வார்த்தைகள் மகிழ்ச்சி நிறைவில் தடுமாறின. “எங்கேயாவது ஆடம்பரமில்லாமே ஒரு கோவில்லே தாலியைக் கட்ட ஏற்பாடு பண்ணுவோம். அப்புறம் திருமணத்தைச் சட்டப்படி பதிவும் பண்ணிடலாம்! அவங்க இதைக் கொச்சைப்படுத்தியோ, கேவலப்படுத்தியோ பேசறத்துக்குள்ள நாம இப்படி நியாயப்படுத்திக்கலாம். மங்கா மேஜரான பொண்ணு! நீயும் மேஜரான பையன்! இந்த ஏற்பாட்டுக்கு அப்புறம் உங்களைப் பிரிக்கவோ, அவதூறு பேசவோ அவங்க முயற்சி பண்ணினாச் சட்டமும், முறைகளும் உங்களுக்கு ஆதரவா இருக்குமே ஒழிய அவங்களுக்கு ஆதரவா இருக்காது!” ஒரு போராட்டத்துக்கு முன் தம்மைத் திட்டமிட்டுத் தயாரித்துக் கொள்ளும் முன்னேற்பாடும் ஒழுங்குமே அவர் பேச்சில் தொனிப்பதை முத்துராமலிங்கம் கவனித்தான். ஆளும் கட்சி, போலீஸ், பணபலம், பதவிச் செல்வாக்கு எல்லாம் உள்ள ஒரு வலுவான முரட்டு எதிரியுடன் போரிடத் தொடங்குமுன் இந்த ஆயத்தம் அவசியம் தான் என்று அவனுக்கும் தோன்றியது. அவரே அவனை மேலும் கேட்டார்: “தம்பீ! இது விஷயமா நீ உன் பெற்றோரிடம் கலந்து பேச வேண்டிய அவசியம் உண்டா?” “இல்லே! அவங்களுக்கு இதைப் புரியவைக்கறதே கஷ்டம்! அதுனாலே என் தந்தை ஸ்தானத்திலே இருந்து இதைச் செய்யிற பொறுப்பை உங்ககிட்டயே விட்டுடறேன் ஐயா!” முத்துராமலிங்கம் இதை மனப்பூர்வமாகவே கூறினான். அவர் எடுத்துக்காட்டிய சூழ்நிலையின் அவசரமும் அபாயமும் அவனுக்குப் புரிந்தன. அதிலுள்ள நியாயமான ராஜதந்திரமும் புரிந்தது. பக்கா சந்தர்ப்பவாதியான மந்திரி எஸ்.கே.சி.நாதன் அப்போதிருந்த கட்சியின் கொள்கைக்கு ஏற்பக் கலப்பு மணம், சீர்திருத்த மணம், காதல் மணம், பெண்ணுரிமை எல்லாவற்றையும் ஆதரித்து மிகவும் தாராளமாகவே பல மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்தார். அதனால் மங்கா - முத்துராமலிங்கம் திருமணத்தை இடையூறு செய்து நிகழவிடாமல் தடுக்க முயன்றால் அவரே ‘எக்ஸ்போஸ்’ ஆகிவிடுவார். அவரே கலப்பு மணத்தை எதிர்க்கின்றார் என்று பத்திரிகைகளும் எதிரிகளும் அவரைச் சாடும்படி ஆகிவிடும். அதனால் அவர் இந்த மணத்தைத் தடுக்க முயலவே மாட்டார். திருமணம் ஆனபிறகோ தலையிடுவதும், கெடுதல்கள் புரிவதும் சட்டப்படியே சாத்தியமில்லாதவை. இவற்றை எல்லாம் நன்கு யோசித்தே தியாகி சிவகாமிநாதன் இந்த யோசனையைக் கூறுகிறார் என்று இருவருக்குமே புரிந்தது. இருவருமே அந்த ஏற்பாட்டினால் தங்களுக்குக் கிடைக்கிற விருப்பத்துக்கிசைந்த வாழ்வையும் இயல்பான சமூகப் பாதுகாப்பையும் உணர்ந்தார்கள். கடல் அலைகளை வேடிக்கை பார்க்கக் கரையருகே நெருங்கிச் சென்றிருந்த சண்முகம் திரும்பி வந்தார். சிவகாமிநாதனே இந்த யோசனையைச் சண்முகத்திடம் விவரித்தார். கேட்ட பின் சண்முகமே மங்காவையும், முத்துராமலிங்கத்தையும், “இப்ப இருக்கிற சூழ்நிலையிலே இதை விடப் பிரத்யட்சமானதும், பாதுகாப்பானதுமாக வேறொரு யோசனை இருக்க முடியாது. இதனாலே நீங்க மகிழ்ச்சியை மட்டும் அடையலே... பத்திரமான வாழ்க்கையையும் அடையறீங்க...” என்றார். காதும் காதும் வைத்தாற்போல ஏற்பாடுகள் நடக்க வேண்டும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். சண்முகம் தனது முழு ஒத்துழைப்பையும் அவர்களுக்குத் தருவதாகக் கூறினார். மங்கா முத்துராமலிங்கம் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், தியாகியின் குரல் பத்திரிகையின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இரவு பதினோரு மணி வரை கடற்கரையில் பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் வீடு திரும்பினார்கள் அவர்கள். பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வடபுறம் கூவத்தின் கரையை ஒட்டி மவுண்ட்ரோடு செல்லும் சாலை வழியே நடந்தே போய் ஜிம்கானா கிளப் அருகே தெருவைக் கடந்து நேப்பியர் பூங்கா வழியே அவர்கள் சிந்தாதிரிப்பேட்டைக்குள் புகுந்த போது சிவகாமிநாதனின் இயக்கத் தொண்டர்கள் கூட்டமாக ஓடி வந்து அவர்களை எதிர்கொண்டார்கள். மந்திரி எஸ்.கே.சி. நாதனின் பேச்சுக்குப் பின் அந்தப் பொதுக்கூட்டம் முடிந்த போது திரும்பிய ரௌடிக் கும்பல் ஒன்று வன்முறையில் இறங்கித் தியாகியின் குரல் அச்சகத்தைச் சூறையாடி அச்சகப் பகுதியில் நெருப்பு வைத்து விட்டதாகவும், பலத்த சேதம் ஏற்பட்டும், போலீஸோ, தீயணைக்கும் படையோ உதவிக்கு வரவில்லை என்றும் தொண்டர்களாகிய தாங்களே தீயை அணைத்ததாகவும் எதிர்கொண்டவர்கள் தெரிவித்தார்கள். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|